கொரோனா வைரஸ் என்று சொல்லக்கூடிய கோவிட்-19 வைரஸ் இன்று உலகம் முழுக்க பரவி பெருமளவு உயிர் சேதத்தையும், நாம் நினைத்து பார்க்கவே முடியாத அளவிற்க்கான பொருளாதார அழிவையும் ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகான உலக ஒழுங்கையே மாற்றியமைக்க கூடியதாக கொரோனாவின் தாக்கமும் பாதிப்பும் இன்று விரிவடைந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் இந்தியா இசுலாமியர்களுடன் போரிட்டு கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லியில் மார்ச் இரண்டாவது வாரம் (13 – 15) நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாட்டை முன்வைத்து இந்த மாநாடு திட்டமிட்டு இந்தியா முழுவதும் கொரோனாவை பரப்புவதற்காக முஸ்லிம்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டது போலவும், இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்கள் மூலம் கொரோனாவை இந்தியாவில் திட்டமிட்டு பரப்பியதாக ஒரு பொய்யினை RSS, BJP கும்பல் இந்தியா முழுவதும் பெரும்பாலான ஊடகங்கள், சமூக வளைதளங்கள் மூலமாகவும், BJP தொழில்நுட்ப பிரிவு மூலமாகவும் (BJP IT WING) திட்டமிட்டு பரப்பிE0. இதற்கு உதாரனமாக ஏப்ரல் 1 ஆம் தேதி 22ஜிகாத் வைரஸ் (CORONA JIHAD) ” என்பதே இந்தியா முழுவதும் ஊடகங்களில் டிரென்டிங்கில் இருந்தது மற்றும் ஏப்ரல் 2 தேதி “MUSLIMS MEANS TERRORITS” என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனதை குறிப்பிடலாம். இந்தியாவில் வைரஸை விட இஸ்லாமியர்கள் மீதான இந்த வெறுப்பே வேகமாக பரவியது.
தலைநகர் டெல்லியில் இந்த தப்ளிக் ஜமாத் மாநாடு நடைபெற்ற வேளையில் இந்தியா முழுவதும் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை பார்க்கும் போது தான் BJP RSS கும்பலின் இஸ்லாமிய வெறுப்பு அரசியலுக்கு நாம் எவ்வளவு பலியாகியிருக்கிறோம் என்பதை உணர முடியும்.
மார்ச் 11-13 ல் பஞ்சாபில் சீக்கிய மத குரு ஒருவர் இத்தாலியில் இருந்து இந்தியா திரும்பியபின் சுய ஊரடங்கை கடைபிடிக்காமல் பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட ” ஹோலா மொஹல்லா (HOLA MOHALLA)” என்ற சீக்கிய திருவிழாவில் கலந்து கொண்டார். பின்பு அவர் கொரானா தாக்கத்தினால் உயிரிழந்தது மட்டுமில்லாமல் அவருடைய உறவினர்கள் 19 பேருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்களுடன் தொடர்புடைய 40,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்து சீக்கிய சமூகம் தான் திட்டமிட்டு கொரோனாவை பரப்பியதாக இங்கு யாரும் கூறவில்லை.
சீரடி சாய்பாபா கோவில் மார்ச் 20 வரை திறந்தே இருந்தது; காசி விஸ்வநாதர் கோவில் மார்ச் 21 வரையும் திருப்பதி தேவஸ்தானம் மார்ச் 20 வரையும் திறந்தே இருந்தன. இக்கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வழிபாட்டுக்கு வந்து சென்றுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக பி.ஜே.பி முதல்வர் எடியூரப்பா தன்னுடைய சொந்த அறிவிப்பையும் மீறி 3000 பேருக்கு மேல் கலந்து கொண்ட திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.
மார்ச் 18 ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத்தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் காலை உணவு விருந்தினை அளித்தார். இந்நிகழ்வில் எந்த ஒரு சமூக விலகலும் கடைபிடிக்கப்படவில்லை.
மார்ச் 23 வரை இந்தியாவின் பாராளுமன்ற கூட்டத்தொடர் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்க நடக்கவே செய்தது.
மார்ச் 23 ஆம் தேதி தான் BJP யின் சிவராஜ் சிங் சுவகான் பல்லாயிரம் பேர் பங்கேற்க அவர் மத்திய பிரதேச முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
இவ்வளவு ஏன் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24 ஆம் தேதி தான் கிட்டதட்ட 12 இலட்சம் மாணவர்கள் பங்கேற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழக அரசே முன்னின்று நடத்தியது.
மார்ச் 25 ஆம் தேதி உத்திர பிரதேசத்தில் இராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஊர்வலமாக சென்றனர்.
ஏப்ரல் 2 ஆம் தேதி தெலுங்கான மாநில அமைச்சர்கள் பங்குபெற்ற இராமநவமி பூஜை வெகு சிறப்பாகவே நடைபெற்றது.
இந்தியா முழுவதும் உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க பிஜேபியினரும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் ஊடகங்களும் தப்ளிக் ஜமாத் மாநாட்டை முன்வைத்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லி நிஜாமுதீனில் மார்ச்சு மாதம் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் மாநாடு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வெளிநாட்டவர் பங்கேற்கும் இந்நிகழ்விற்கு முன்கூட்டியே முறையாக விசா பெற்ப்பட்டே அவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களின் பயணத்திட்டமும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றே ஆகும். மாநாடு நடைபெற்ற இடம் தப்ளிக் ஜமாதீதின் தலைமைச்செயலகம் ஆகும் எனவே அங்கு விடுதி வசதியும் இருந்ததால் மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்ற இந்தியர்களைப்போலவே கொரோனா குறித்த அவசர நிலையினை அறியாது மார்ச் 19 வரை தங்கியிருந்திருக்கின்றனர். மார்ச் 19 ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிறகு தான் நிலமையின் அவசரம் உணர்ந்து அவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர் அதற்குள் போக்குவரத்து வசதிகள் எல்லாம் துன்டிக்கப்பட்டுவிட்டதால் கிட்டதட்ட 1000 பேருக்கு மேல் வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டனர். அவர்களை முறையாக வெளியேற்ற டெல்லி காவல்துறையிடம் உதவி கேட்ட போது அவர்கள் அதை அலட்சியப்படுத்தியதுடன் மார்ச் 16 ஆம் தேதி டெல்லி அரசு வெளியிட்ட 50 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது என்ற ஆணையை மீறியதாக தப்ளிக் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கும் தொடுத்தது.
இவ்வாறு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தினை ஏதோ சதிச்செயலைப்போலான விசமத்தனமான மதவெறியை திட்டமிட்டு பரப்பவேண்டிய அவசியம் ஏன்??
கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தி வந்த வேளையில் இந்திய அரசு நிர்வாகம் மெத்தனப்போக்குடனே செயல்பட்டது. டிசம்பர் 31 2019 அன்றே உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரசினை உலகம் முழுவதிற்க்கும் பரவக்கூடிய நோய்த்தொற்றாக அறிவித்தது அப்பொழுதும் மோடி அரசிடம் இருந்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மார்ச் 11 தேதி உலக சுகாதார நிறுவனம் கொரோனாவை உலகம் முழுவதும் பரவியுள்ள தொற்று நோய் (PANDEMIC) என அறிவித்தது. ஆனால் இதற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா நோய்த்தொற்று ஒரு மருத்துவ அவசர நிலை இல்லை என அறிவித்தது.
இந்தியாவில் முதல் கொரானோ தொற்று சனவரி மாதம் 30 ஆம் தேதி கண்டறியப்பட்டது. இது நடந்த 52 நாட்களுக்குப் பிறகே மோடி ஊரடங்கு உத்தரவினை அறிவிக்கிறார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனாவை எதிர்கொள்வதற்கான எந்த வித ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளோ, நடவடிக்கைகளோ மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை.
முறையான முன்திட்டமிடல் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளானது வெளி மாநிலங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நடந்தே தங்களது சொந்த மாநிலங்களுக்கு கூட்டம் கூட்டமாக பயணப்பட்டது. பெரும் எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக மக்கள் மேற்கொண்ட பயணம் போன்றவை இயல்பாகவே அரசு நிர்வாகத்தின் செயலற்ற தன்மையையே படம் பிடித்து காட்டின. ஊரங்கு அறிவிக்கப்பட்ட பின் அதனால் பாதிப்புக்கள்ளாகும் மக்களுக்கு எந்தவித நலத்திட்ட உதவிகளையோ பொருளாதார உதவிகளையோ வழங்காமல் வெறும் வெற்றுகூச்சலாகவே பிரதமரின் உரைகள் அமைந்திருந்தின. மாநில அரசுகள் தங்களது சொந்த முயற்சியால் தனது மக்களை காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சிகளும் மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கததாலும் ஒத்துழைப்பு இல்லாததாலும் தடைப்பட்டன. இதனால் இந்திய அரசின் மீது சாதரண மக்களுக்கு ஏற்ப்பட்ட நியாயமான கோபத்தினை திசை திருப்பவே இந்த தப்ளிக் ஜமாத் பிரச்சனை திட்டமிட்டு பெரிதாக்கப்பட்டு இந்திய எதிர்ப்புணர்வானது இஸ்லாமிய வெறுப்பணர்வாக மடைமாற்றப்பட்டது.
மார்ச் 18 ஆம் தேதியே தெலுங்கான மாநில அமைச்சகம் அம்மாநிலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் பயண விபரங்களை ஆராயும் போது அவர்களுக்கும் டெல்லி தப்ளிக் ஜமாத் மாநாட்டிற்க்கும் தொடர்பு இருப்பதான உறுதிபடுத்தப்பட்ட தகவலை இந்திய சுகாதார துறைக்கு வழங்கியுள்ளது. தமிழக அரசும் இதே மாதிரியான எச்சரிக்கையை மார்ச் 21 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வழங்கியது. ஆனால் அப்போதொல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசு சரியாக மார்ச் 31 ஆம் தேதி பத்திரிக்கையாளர்களை சந்தித்து தப்ளிக் ஜமாத் குறித்த தகவல்களை வெளியிட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இநீதியா முழுவதும் ” ஜிகாத் வைரஸ்” என்று பொய்யான தகவல் ஊடகங்களாலும் சமூக வலைதளங்கலாளும் பி.ஜே.பி தொழில்நுட்ப பிரிவாலும் திட்டமிட்டு பரப்பப்பட்டது. மோடி அரசின் செயலற்ற தன்மையை மறைக்கவே இப்படி ஒரு திட்டமிட்ட மத வெறுப்புணர்வை பி.ஜே.பி ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு பரப்பியது.
அடுத்தாக உலகம் முழுக்க பாசிஸ்டுகள் தங்களை இவ்வாறே அடையாளப்படுத்தி கொள்கின்றனர். அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பை சிறிதும் தடுப்பதற்கு திரானியற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய பேட்டிகளிலும் டிவீட்டுகளிலும் கொரோனா வைரைஸை ” சீனா வைரஸ்” என்று கூறி சாதாரண அமெரிக்க மக்களிடம் சீன வெறுப்புணர்வை விதைத்து தன்னுடைய அரசின் செயலற்ற தன்மையை மறைக்க முயலுவது போலவே இந்திய மோடி அரசு ” ஜிகாத் வைரஸ்” என்று இஸ்லாமிய வெறுப்புணர்வை விதைத்து தப்பிக்க முயலுகிறது. உலகம் முழுவதும் பாசிஸ்டுகள் போலியான ஒரு எதிரியை உருவகப்படுத்தி தாம் தப்பிப்பது என்ற உத்தியையே அப்பாவி இஸ்லாமியர்களை எதிரியாக காட்டுவதன் மூலம் பாசிச மோடி அரசு செய்து வருகிறது.
கொரோனாவிற்கு முன் இந்திய குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA) -2019 இந்திய அளவில் பெரும் எதிர்ப்பு ஏற்ப்பட்டது. இச்சட்டம் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் எதிரானது எனினும் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகும் . எனவே ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் ஒன்று திரண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இச்சட்டத்திற்கு எதிரான மூர்க்கமான தொடர் போராட்டத்தினை நடத்தியது. இதனைத்தொடர்ந்து தான் டெல்லி ஷாகின் பாக்கில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறை வெறியாட்டத்தை நடத்தி முடித்தது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் மீதான ஒரு அனுதாப அலையும் குடியுரிமை திருத்தச்சட்திற்கு எதிரான மனநிலையும் மக்கள் மனதில் ஏற்ப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மறுபடியும் இந்த போராட்டம் தொடரும் போது இந்த நியாயமான கோரிக்கைக்கு இருக்கும் பொதுச்சமூக ஆதரவை குறைத்து இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை விதைப்பதற்கே இந்தக் கொரோனா நோய்த்தொற்றை மோடி அரசு பயன்படுத்திக்கொண்டது.
தற்போது பல்வேறு ஆய்வுகளும் சோதனை முடிவுகளும் மோடி அரசு திட்டமிட்டு பரப்பிய இந்த தப்ளிக் ஜமாத் குறித்தான பொய்களை கட்டுடைத்து காட்டுகின்றன.
குறிப்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) அறிவியலாளர்கள் சமர்பித்த ஆய்வறிக்கையொன்று தீவிர சுவாசப் பிரச்சனை (SECERE RESPIRATORY ILLNESS) உள்ள 40% நோயாளிகள் டெல்லி தொடர்பான பயண வரலாறு எதுவும் இல்லாதவர்கள் என்று கூறியுள்ளது.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச்செயலர் லாவ் அகர்வால் (lav Agarwal) அவர்கள் இந்தியாவின் கொரோனா தொற்று எண்ணிக்கையானது ஒவ்வொரு 4.1 நாட்களுக்கும் இரண்டு மடங்காக உயர்கிறது என்றும் இதில் தப்ளிக் ஜமாத் நிகழ்வால் ஏற்ப்பட்ட பாதிப்பு மட்டும் இல்லையென்றால் அந்த இரட்டிப்பு மடங்காக 7.4 நாட்கள் ஆகும் என்றும் ஒரு தகவலை சொல்லியிருக்கிறார். ஆனால் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளி விபரங்களை எடுத்துப்பார்த்தால் உண்மை வேறு மாதிரியாக உள்ளது. இதன்படி மார்ச் 10 இல் 62 ஆக இருந்த கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஏப்ரல் 6 வரை 4067 ஆக உயர்ந்துள்ளது. இதன்படி வைரஸ் பாதிப்பு இரட்டிப்பாக 4.14 நாட்கள் ஆகியுள்ளது. இந்த மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4067 ல் அரசு வெளியிட்ட விபரங்களின் படி தப்ளிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் 1445, எனவே தப்ளிக் ஜமாத் மாநாட்டின் தாக்கம் இல்லையெனில் பாதிப்பு 2622 (4067-1445=2622) ஆகும். இதன்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாக தேவையான நாட்கள் 4.63 நாட்கள் ஆகும். இதிலிருந்து தற்போதைய நிலவரத்திற்கும் தப்ளிக் ஜமாத்தின் தாக்கத்திற்கும் பெரிய அளது தொடர்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தமட்டிலும் தமிழ்நாட்டல் இருந்து தப்ளிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1131 ஆகும். இதில் அரசு கேட்டுக்கொண்ட அடுத்த நாளே தங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொண்டவர்கள் 1103 பேர். இவர்களில் 961 பேருக்கு கொரோனா தொற்று இல்லையென தமிழக சுகாதாரத்துறை செயலர் திருமதி. பீலா இராஜேஷ் அவர்கள் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆக உண்மை நிலவரங்களும், புள்ளி விபரங்களும் , ஆய்வறிக்கைகளும் இவ்வாறு இருக்க திட்டமிட்ட இந்த பி.ஜே.பி மோடி அரசு இவ்வாறு இஸ்லாமிய வெறுப்பினை கட்டமைத்து வருகிறது.
கொரியாவில் சர்ச்சுக்கு சென்ற ஒரு பெண்ணின் மூலம் 5000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்ட போது அங்கு யாரும் அதை மதமாக பார்க்கவில்லை;
இங்கிலாந்தில் ஊரடங்கையும் மீறி இந்து சாமியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 1000 பேரில் பலர் கொரோனா பாதிப்புக்குள்ளான போது அங்கும் யாரும் இதனை மதமாகப் பார்க்கவில்லை.
இங்க பிரதான பிரச்சனை நோய் தானே ஒழிய நோயாளி அல்ல; ஒரு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் பாதிக்கப்பட்டவர்களாக அணுகி அவர்களுக்கு உதவ வேண்டுமே ஒழிய அவர்களையே குற்றவாளிகளாக்கி புறக்கணிக்கூடாது. இத்தகைய இக்கட்டான ஒரு காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து அரசின் கையாலாகதனத்தை அம்பலப்படுத்தி அதனை செயல்பட வைப்பதே முக்கியமானதாகும். அதை விடுத்து பாசிச பிரிவினைவாதிகள் பரப்பும் பொய்யான மத வெறிக்கு ஆளானால் நமக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதையும் , நமக்கு சேர வேண்டிய அவசர உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசு சேரவிடாமல் தடுத்து வைத்திருப்பதையும் நோக்கி இறுதிவரை கேள்வி எழுப்ப முடியாமலே போய்விடும். பாசிஸ்டுகள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான்; இத்தகைய மத வெறிக்கு பலியாகாமல் ஒற்றுமையுடன் பாதிக்கப்பட்டவர்கள் உடன் இருந்து கொரோனா பெருந்தொற்றை எதிர் கொள்வோம்.