தலையங்கம் – ஆகஸ்ட் 02, 2022
5G அலைக்கற்றை விற்பனை எதிர்பார்த்ததைவிட குறைவாக விற்றது எதிர்பாராத நிகழ்வல்ல. பொதுவாக அரசின் கையில் தொலைத்தொடர்பு துறை இருந்தால் அனைவருக்கும் சேவைகிட்டாது என்று சொன்னார்கள். பின்னர் அனைத்தையும் தனியார்மயப்படுத்தினால் போட்டி அதிகரிக்கும். இதன்மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு சேவை கிடைக்கும் என்றனர் தனியார்மய ஆதரவாளர்கள். பாஜக கும்பலோ, இந்த சேவைகளை செய்வது அரசின் வேலையல்ல, இந்த துறைகளை விற்று அரசின் கஜானாவிற்கு நிதி சேகரிக்க வேண்டுமென்றனர். இப்படியாக நியோலிபரல் கூட்டம் தனியார்மயத்திற்கு வக்காலத்து வாங்கினர். இந்நிலையிலேயே தொலைத்தொடர்பு துறையில் தனியார்கள் குவிந்தனர். இந்தியா முழுவதும் பல சிறிய தனியார் நிறுவனங்கள் செல்பேசி சேவையை லாபத்திற்கு நடத்தினர். இந்த நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக வட இந்திய பனியா மார்வாடி நிறுவனங்களாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் விழுங்கப்பட்டன. இந்த போட்டியானது வெகு சில கைவிட்டு எண்ணக்கூடிய நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியாக மாறியது. வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய நிறைய போட்டியாளர்கள் இருப்பார்கள், அதனால் சலுகைகளை அனுவிக்கலாம் என்று தேனொழுகப் பேசியவர்கள், இந்த ஆக்கிரமிப்புகளைப் பற்றி பேசவில்லை.
2ஜி அலைக்கற்றை விற்பனையில் பங்கெடுத்த நிறுவனங்களின் எண்ணிக்கைக்கும், இன்றைய 5ஜி விற்பனையில் பங்கெடுக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசமே இதைச் சொல்லும். போட்டியாளர்கள் அதிகமாக இருந்த சமயத்தில் நடந்த போட்டி தற்போது கொல்லப்பட்டுவிட்டது. வாடிக்கையாளர்களும், அரசும் ஒரிரண்டு தனியார் நிறுவனங்களைச் சார்ந்த நிலை இன்று உருவாகி நிற்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், பனியா மார்வாடி-பன்னாட்டு நிறுவனங்கள் தமக்கு போட்டியாக இருந்த சிறு நிறுவனங்களை போட்டியிலிருந்து விலக்கி மொத்த சந்தையை தமதாக்கிக் கொண்டுவிட்டன. ’மார்க்கெட் எகானாமி வழியாக போட்டி உருவாகி வாடிக்கையாளர் லாபமடைவார்கள்’ என்று சொல்லும் தனியார்மய சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படை வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டாயிற்று. இந்த சந்தையில் போட்டியில் இன்றளவும் நிலைத்து நிற்கும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் போட்டியை தகர்க்கும் விதமாக மோடி அரசு அந்நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்குவதை தடுத்து நிறுத்தியது. தனியார் லாபமடைந்து சந்தையை கைப்பற்றும் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தையிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டது. அடித்தட்டு மக்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் சலுகை விலையிலும், நியாயமான விலையிலும் பி.எஸ்.என்.எல்.இல் பெற்று வந்த சேவைகள் இவ்வாறு திட்டமிடப்பட்டு முடக்கப்பட்டது. பாஜக இந்துத்துவ அரசு இவ்வாறு அரசு நிறுவனத்தினை முடக்கி பனியா-பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபகரமாக சந்தையை மாற்றியது.
90-களின் இறுதியில் ஆட்சிக்கு வந்த பாஜக, அரசு நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் பணிக்கு முன்னிலை கொடுக்கும் அரசு கொள்கைகளை வகுத்தது. பின்னர் தனியார்மயப்படுத்தலுக்கென்று தனியாக அமைச்சரை உருவாக்கி சாதனை செய்தது. அருண்ஷோரி, மகாஜன் போன்ற பார்ப்பன-பனியா சார்பு அமைச்சர்களைக் கொண்டு அரசு நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு தாரை வார்க்கப்பட்டதே வாஜ்பாய் அரசின் சாதனை. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ‘லிபரலைசேசன்’ எனும் தனியார்-தாராளமயக் கொள்கையை தீவிரமாக நடைமுறை செய்யும் பணியை பாஜக செய்ததே ஏகாதிபத்திய நாடுகள் பாஜகவிற்கு சாதகமான நிலைப்பாடுகளை எடுக்கக்காரணமாக அமைந்தது. இதனாலேயே குஜராத் படுகொலைகள் சர்வதேச அளவில் உரிய கவனத்தைப் பெறாமல் பெயரளவிலான எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன. விதேஷ் சஞ்சார் நிகாம் லிமிட்டெட் எனும் அரசின் இணைய சேவை நிறுவனத்தையும், அதன் சொத்துக்களையும் மிகக்குறைந்த விலையில் இவ்வாறே தாரைவார்க்கப்பட்டு, அரசிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித்தரும் நிலையில் இருந்த நிறுவனம் மூடப்பட்டது. இணைய சேவை பெருமளவில் இந்திய பொருளாதாரத்திற்கு ஆதரமான சேவையாக அமையும் என்று தெரிந்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டது. டாடாவிற்கு கொடுக்கப்பட்ட இந்நிறுவனம் செயல்பட்டிருக்குமெனில் இந்திய அரசின் மிக லாபம் கொழிக்கும் அரச நிறுவனமாக மாறியிருக்கும். ஆனால் இவ்வாறு தொலைத்தொடர்பு, இணையத் தொடர்பு நிறுவனங்கள் திட்டமிடப்பட்டு அரசிடமிருந்து குஜராத்தி மார்வாடி தனியார் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு கொடுக்கப்பட்டன. காங்கிரஸும், பாஜகவும் போட்டிபோட்டு இப்பணிகளை செய்து முடித்தன.
இப்படியான வரலாறு கொண்ட இந்தியாவின் தனியார்மயத்தின் விளைவுகளையே இன்றைய 5ஜி அலைக்கற்றை ஏலத்திலும் பார்க்கிறோம். 4.5 லட்சம் கோடி மதிப்புள்ள 5ஜி அலைக்கற்றை 1.5 லட்சம் கோடியில் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் என்று அனைவரும் பங்கேற்கும் வாய்ப்புடைய சந்தை என்று தேன் தடவி சொல்லப்பட்ட வாசகங்களை காற்றில் பறக்கவிட்டு ஒரிரு தனியார் கார்ப்பரேட்டுகளிடம் ஒட்டுமொத்த சந்தையும் தாரை வார்க்கப்பட்டது. தற்போது இந்த தனியார் நிறுவனங்கள் அரசிடம் எடுக்கும் ஏலத்தொகை தமக்கு சாதகமாக அமையும் வகையில் இந்த ஏலங்களில் குறைவான விலைக்கு தள்ளி இருக்கின்றன. 3ஜி, 4ஜி, 5ஜி அலைக்கற்றை விற்பனை என்பது அரசின் எதிர்பார்ப்பை விட மிகக்குறைந்த அளவில் விற்பனையாவதற்கான காரணமென்பது, இந்நிறுவனங்கள் தமக்குள்ளாக மொத்த சந்தையையும் பகிர்ந்துகொண்டு திட்டமிட்டு அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதையே இன்று காண்கிறோம். இந்த பகிர்வும் குஜராத்தி பனியா-மார்வாடி நிறுவனங்களான அம்பானியின் ஜியோ நிறுவனமும் அதற்கு அடுத்தப்படியாக அகர்வாலின் ஏர்டெல்லும் பெற்றிருக்கின்றன. இதே போல இங்கிலாந்து-பிர்லா நிறுவனமான வோடோபோன் நிறுவனமும் பெற்றிருக்கின்றது. இச்சந்தையில் புதிய போட்டியாளராக அதானியும் இணைந்திருக்கிறார். ஆகமொத்தம் இந்திய அரசும் அதன் நிறுவனங்களும் குஜராத்தி மார்வாடிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதே நரசிம்மராவ்-மன்மோகன்சிங் ஆரம்பித்த தனியார்மய பயணத்தின் இறுதி முடிவாக அமைந்திருக்கிறது. இப்பணியை செய்வதற்காகவே பாஜகவின் மோடியை தேர்ந்தெடுத்தனர் குஜராத்தி மார்வாடி பெருநிறுவனங்கள். கடந்த வாரம் பாஜகவின் மராத்திய ஆளுநர் சொன்னது போல, ‘குஜராத்தி மார்வாடிகள் வெளியேறினால் மும்பையும், மகாராட்டிரமும் ஆண்டியாகிவிடும்’ எனும் நிலையை இந்திய அளவில் உருவாக்கியதே பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சாதனை.
ஒன்றிய அரசும் கார்பரேட் முதலாளிகளும் ஒன்றிணைந்து சாதாரண அடித்தட்டு மக்களை மாத மாதம் சந்தா கட்டும் வாடிக்கையாளர்களாக இந்திய மக்களை மாற்றி வைத்திருக்கிறார்கள்
(எடுத்துக்காட்டாக) செல்போன் ரீசார்ஜ், டிவி ரீசார்ஜ்