தமிழினத்தின் இருபெரும் ஆளுமைகளான தந்தை பெரியாரையும் தேசியத்தலைவர் பிரபாகரனையும் தொடர்ந்து இழிவு செய்யும் வகையில் அவதூறு பரப்பும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடைபெறவிருக்கும் ஈரோடு இடைத்தேர்தலில் மே17 இயக்கம் பரப்புரையை தொடங்கி இருக்கிறது. இந்த பரப்புரை பயணத்தின் துவக்கமாக ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மரியாதை செய்து, ஊடகத்தை சந்தித்து தொடங்கியது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன் உள்ளிட்ட தோழர்கள் இந்த பரப்புரை தொடங்கினர்.
சனவரி 27, 2025 அன்று ஈரோட்டில் தந்தை பெரியார் சிலைக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஊடகவியலாளர்களிடையே உரையாற்றினார். பின் ராஜாஜிபுரம், சூரம்பட்டி நால் ரோடு ஜங்ஷன், அண்ணா குப்பம் (பெரிய நகர் பகுதி), அக்ரஹாரம் (பவானி ரோடு), கிருஷ்ணா தியேட்டர் பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் வெண்ணிலா அவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சனவரி 28, 2025 செவ்வாய்க்கிழமை அன்று மாலை மரப்பாலம் ஜங்ஷன், கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் மற்றும் வீரப்பன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. சீமானின் துரோக அரசியலை எதிர்கொண்டு வீழ்த்தி, தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நேர்மையான தமிழ்த்தேசியத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க, பெரியார் மண்ணில் பரப்புரை மேற்கொண்டார் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்.
பரப்புரையில் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்:
அன்பான ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காள பெருமக்களே! இந்த தேர்தலிலே நமக்கு ஆபத்து எந்த வடிவத்தில் வருகிறது என்பதை கண்டுபிடிப்பது தான் மிகவும் முக்கியமான பணி. ஒவ்வொரு முறையும் புது புது ஆபத்து நமது ஊருக்கு வருகிறது. மோடி அரசாங்கம், பாரதிய ஜனதா கட்சி போன்ற பெரிய ஆபத்துக்கள் இந்த தேர்தலிலே போட்டியிடவில்லை என்று நினைத்து நிம்மதி அடைந்திருப்பீர்கள். அண்ணாமலையினுடைய பிரச்சாரம் இந்த தொகுதியில் இல்லை என்பதற்காக நிம்மதி அடைந்திருப்பீர்கள். ஆனால் பிஜேபி வர முடியாத இடத்தில் தன் அடியாளை அனுப்பும். அந்த வகையிலே பாரதிய ஜனதா கட்சியினுடைய அடியாளாக திரு சீமான் அவர்கள் இங்கே தேர்தலிலே தனது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார். நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை ஈரோடு கிழக்கு மன்ற கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலே வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி, அண்ணா திமுக போன்ற கட்சிகள் திமுகவை எதிர்த்து போட்டியிடாதபோது சீமான் தேர்தலுக்கு வந்திருக்கார் என்றால், அது சீமானுடைய துணிச்சல் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள். இதற்கு சீமான் எங்கோ விலை போயிருக்கிறார் என்று அர்த்தம்.
அண்ணாமலை தனது வேட்பாளரை இறக்குவதற்கு பதிலாக சீமானை இறக்கியிருக்கிறார். சீமானை இங்கே வேட்பாளராக களமிறக்குவதன் மூலமாக இந்த அரசியலிலே தன்னுடைய கருத்துக்களை பரப்புவதற்கான ஒரு வேலையை பாரதிய ஜனதா கட்சி செய்து கொண்டிருக்கிறது. திமுகவை எதிர்ப்பதாலேயே எங்களை நீங்க பிஜேபின்னு சொல்லிடலாமான்னு சீமான் பல இடத்தில் கேட்கிறார். திமுகவை எதிர்ப்பதால் நாம் சீமானை பிஜேபி என்று சொல்லவில்லை, தந்தை பெரியாரை எதிர்க்கின்ற காரணத்தினால்தான் சீமானினுடைய அரசியலை நாம் பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் என்று சொல்லுகிறோம். பாரதிய ஜனதா கட்சி தனது கொள்கை எதிரியாக தந்தை பெரியாரை சொல்லுகிறது. பாஜகவிற்கு தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தான் கொள்கை எதிரி.
“தேர்தலில் கூட்டணி வைப்பதும் தேர்தலில் எதிரெதிராக நிற்பதும் வேறு, கொள்கை ரீதியாக எதிரியாக அடையாளப்படுத்துவது வேறு. அப்போது பாஜாகவிற்கு தமிழ்நாட்டில் யார் கொள்கை எதிரி என்றால் தந்தை பெரியார். அவரை (தந்தை பெரியாரை) யார் கொள்கை எதிரியாக வச்சிருக்காங்களோ, அவர்களோடு கைகோர்ப்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் வேலை.”
சீமான் என்ன செய்தால் பிஜேபியோடு கைகோர்க்கலாம் என்று கணக்கு போட்டு பார்த்தார். உடனே ரஜினியை போய் பார்த்தார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அது பாரதிய ஜனதா கட்சியின் அரசியலாக இருக்கும் என்று நாம் கேள்வி எழுப்பினோம். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று சொன்ன ரஜினிகாந்தை எதற்கு சீமான் சென்று சந்தித்தார்? குருமூர்த்திக்கு தூது விடுவதற்காக ரஜினியை சந்தித்தார் சீமான்.
நான் சீமானை பார்த்து கேட்கிறேன். “பெரியாரை தமிழரா இல்லையான்னு உன் கட்சிக்காரன் எல்லாம் ஊர் முழுக்க திட்டுறானே, ரஜினி யாருன்னு சொல்லுயா, நீ ரஜினி காலில் எதுக்கு போய் விழுந்த? நீதான் மானத்தமிழ் பிள்ளை என்று ஊருக்கு ஊரு பேசுறியே, வரிக்கு வரி புலம்புறியே, நான்(திருமுருகன்) கேட்கிறேன், உனக்கு அப்போது வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் எதுவும் கிடையாதா?”
குருமூர்த்தி ரஜினியினுடைய நெருங்கிய நண்பர், குருமூர்த்தி சொல்லுவதை ரஜினி பேசுவார், ரஜினி எல்லா கட்சிக்கும் புரோக்கராக மாறிட்டார், அது அவருடைய விருப்பம். அதை பற்றி நமக்கு பிரச்சனை இல்லை.
இங்கு ‘தமிழ் தேசிய அரசியல் பேசுகின்றேன், மேதகு பிரபாகரனுடைய வழியில் வந்திருக்கின்றேன், மேதகு பிரபாகரனுக்கே நான்தான் பயிற்சி கொடுத்தேன்’ என்று பேசுகின்ற சீமானுக்கு ரஜினியிடம் என்ன வேலை என்று கேட்டோம், பதில் இல்லை. ரஜினியை சந்தித்தவுடன் ‘சங்கி என்றால் நல்ல நண்பன்’ என்று வியாக்கியானம் கொடுக்கிறார் சீமான். சீமான் எப்போது இந்தி/சம்ஸ்கிருதம் கற்றுக் கொண்டார்? சீமானுக்கு எப்படி இந்த அர்த்தம் தெரிகிறது?
பாரதிய ஜனதா கட்சியிடம் ஈரோட்டு இடைத்தேர்தலில் “நான் வேட்பாளரை நிறுத்துகிறேன், நீங்கள் வேட்பாளரை நிறுத்த வேண்டாம், நான் தனியாக நிற்கிறேன், என்னை ஆதரிப்பதற்கு பாஜகவிடம் நீங்கள் ஒப்புதல் வாங்கித் தாருங்கள்” என்று சொல்லித்தான் ரஜினியை இவர் சந்தித்திருக்கின்றார். சீமானுடன் சென்ற ரவீந்திர துரைசாமி ஒரு ஆர்எஸ்எஸ் காரர்.
இந்த சந்திப்பு முடிந்ததற்குப் பிறகு, சீமான் திடீரென்று தந்தை பெரியார் பெண்களை இழிவாக பேசிவிட்டார் என்று கூறினார். இதற்கு ஆதாரம் கேட்டால் ஆர்எஸ்எஸ்/ பாஜக வெளியிட்ட ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டுகிறார்.
அந்த புத்தகத்தைப் பார்த்தல் தந்தை பெரியார் அவ்வாறு பேசவில்லை. தந்தை பெரியார் உலகத்தில் நடக்கும் பல வகை திருமண முறைகள் குறித்து பேசுகிறார். நமது ஊரில் அத்தை மகனை திருமணம் செய்வது, அக்கா மகளை திருமணம் செய்வது போல் சில இடங்களில் (இசுலாமிய சமூகங்களில்) சித்தப்பா மகளை கல்யாணம் செய்யும் வழக்கம் இருக்கிறது. பர்மாவில் ஆரிய வழக்கப்படி திருமண முறை இருக்கிறது. இந்து மத சாஸ்திரத்தில் பிரம்மா தன் மகளையே திருமணம் செய்து கொண்டார் என்று எழுதி இருப்பதாய் எடுத்துக்காட்டுகிறார்.
ஆனால் சீமான் பாஜக சொல்வதை அப்படியே வாந்தி எடுத்து தந்தை பெரியார் பெண்கள் இழிவாக பேசியதாகக் கூறினார். இதற்கு ஆதாரத்தைக் கேட்டால், இன்றுவரை தரவில்லை. ஒரே மேடையில விவாதிப்போம் என்றால் சீமான் பதில் சொல்லவில்லை. அவர் வீட்டை முற்றுகையிட்டால் அவர் வெளியே வரவில்லை. அன்று அவர் வீட்டை 3000 பேர் முற்றுகையிட்டோம். 1000 பேர் கைது செய்யப்பட்டு ஐந்து மண்டபங்களில் அடைக்கப்பட்டோம். இப்போதும் விவாதம் நடத்தாமல் ஈரோடு தேர்தலுக்கு கிளம்பி வந்துவிட்டார். நாங்கள் இப்போது ஈரோட்டில் இருக்கிறோம். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் ஒரே மேடையில் பேசுவோம். நாங்கள் சீமானுடன் விவாதிக்கத் தயாராக இருக்கின்றோம். சீமான் விவாதிக்கத் தயாரா? சீமான் போன்ற பித்தலாட்டக்காரனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.
சீமான் போன்ற கோழையை, தொடை நெடுங்கியை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காக இங்கே வந்திருக்கிறோம். மேடையில், பத்திரிக்கையாளர் மன்றத்திலே மட்டும் வீர வசனம் பேசி, நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துணிச்சல் இல்லாத சீமானோடு நாங்கள் மல்லு கட்ட வேண்டி இருக்கிறது. இதைத்தான் தந்தை பெரியார் “மானமுள்ள ஆயிரம் பேரிடத்தில் போராடலாம், மானம் கெட்டவனிடம் போராட முடியாது” என்று கூறினார்.
ஏனெனில் அன்றைக்கே தந்தை பெரியாருக்கு சீமான் என்ற மானம் கெட்ட ஒருவன் வருவான் என்ற தெரிந்திருக்கிறது. இது தந்தை பெரியார் மண். தந்தை பெரியார் இந்த சமூகத்திலே அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் கல்வி அறிவு பெறுவதற்கும், சுயமரியாதையோடு தங்கள் வாழ்க்கை நடத்துவதற்கும், அரசாங்க உத்தியோகத்திலே வேலைவாய்ப்பு பெறுவதற்கும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சீமான் ஆசைப்படும் முதலமைச்சர் பதவி, எம்எல்ஏ பதவி என பதவிகளனைத்தும் சாமானிய தமிழனுக்கும் வரவேண்டும் என்பதற்காக காலமெல்லாம் போராடி, தன்னுடைய இறுதி நாள் வரைக்கும் போராட்ட களத்தில் நின்ற ஒரு மாபெரும் தலைவர்தான் தந்தை பெரியார்.
சீமானுக்கு தெரியுமா இந்த மண்ணினுடைய வரலாறு? அன்று திருவிதாங்கூர் ராஜா ஈரோட்டுக்கு வந்தால் அவரை வரவேற்கக்கூடிய குடும்பம் தந்தை பெரியாரின் குடும்பம். சிவப்பு கம்பளம் விரித்து அந்த ராஜாவை வரவேற்கக்கூடிய அளவிற்கு பணக்கார குடும்பமாக இருந்தவர்கள் தந்தை பெரியாரின் குடும்பத்தை சார்ந்தவர்கள். ஈரோட்டிலே மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சார்ந்த தந்தை பெரியார் அதையெல்லாம் விட்டு வீதியிலே மக்களுக்காக இறங்கி போராடியவர்.
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டுக்குள் வர முடியாமல் தடுக்க, தமிழினம் தன்னை தற்காத்துக் கொள்ள ஒரு வேலியாக நிற்கக்கூடியவர் தந்தை பெரியார். ஆணும் பெண்ணும் சமம், மனிதனில் ஏற்றத்தாழ்வு இல்லை, சாதியை வைத்து மக்களை பிரிக்கக்கூடாது என்று சொன்னார் தந்தை பெரியார். பள்ளிக்கூடத்துக்கு போ, கல்வி கற்று வேலைக்கு போ என்று சொன்னார். சுயமரியாதையோடு தலை நிமிர்ந்து நில் என்று சொன்னார். இது தவறா? எல்லா மனிதரைப் போல நீங்களும் சமத்துவமாக சமமாக தலை நிமிர்ந்து வாழுங்கள் என்று சொன்னார். “நீங்கள் ஏழைகளாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் கோழைகளாக இருக்க வேண்டாம்” என்று சொன்னார். சுயமரியாதை உணர்வு என்பது அனைத்து மனிதனுக்கும் இருக்க வேண்டிய உணர்வு என்று சொன்னார். இது தவறா? கடவுள் இல்லை என்று ஏன் தந்தை பெரியார் சொன்னார்? “இங்கே மனிதனுக்கு மனிதன் சமம் இல்லை, ஒருவன் உயர்ந்த ஜாதி, மற்றவன் தாழ்ந்த ஜாதி. ஆண் உயர்ந்தவன்- பெண் தாழ்ந்தவள் என்று சொல்லுகிறார்களே! இதற்கு காரணம் என்ன?” என்று தந்தை பெரியார் கேட்கிறார்.
கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு மனிதனுக்குள் ஏற்றத்தாழ்வை கொண்டு வரும் சாஸ்திர சம்பிரதாயத்தை கேள்வி கேட்டவர் தந்தை பெரியார். அந்த காலத்திலே, (நூறு ஆண்டுகளுக்கு முன்பு) பெண் குழந்தைகளுக்கு ஆறு வயது / எட்டு வயதிலே திருமணம் செய்வித்து விடுவார்கள். அப்படி தந்தை பெரியாரினுடைய சகோதரி மகளுக்கு எட்டு வயதில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 60 வது நாளில் அந்த மணமகன் (சின்ன பையன்) விஷக்காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விடுகிறான். அந்த பெண் பிள்ளை ஓடி வந்து பெரியாரை பார்த்து “என்னை கல்யாணம் பண்ணி கொடுங்கன்னா நான் கேட்டேன், என் வாழ்க்கை இப்படி நாசமா போச்சே” என்ற கூறுகிறார்.
அந்த குழந்தை கேட்ட உடனே தந்தை பெரியாரால் தாங்க முடியவில்லை. இது தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் காணுவதற்கு முன்பாக நடந்தது. பெரியார் ஏன் பெண்ணுரிமை பேசினார் என்பதற்கான காரணத்தை நான் சொல்லுகின்றேன். அந்த காலத்தில் கணவன் இறந்துவிட்டால் அந்த பெண் குழந்தையை வாழ்நாள் முழுவதும் விதவை என்று முத்திரை குத்தி வீட்டினுடைய மூலையிலே உட்கார வைத்து விடுவார்கள். அந்தப் பெண் ராசி இல்லாதவள் என்று வீட்டினுடைய நடுப்பகுதிக்கு/முன்பகுதிக்கு வர இயலாமல், நல்ல காரியங்களுக்கு போக முடியாமல், திருமண காரியங்களுக்கோ கோவிலுக்கோ செல்ல முடியாமல், வீதியில் நடமாட இயலாத கட்டுப்பாடுகள் இருக்கும்.
இப்படிப்பட்ட ஒரு சூழல் அன்றைக்கு இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து முயற்சி செய்கின்றார் தந்தை பெரியார். இந்த கொடுமைகளை எல்லாம் கண்ட பெரியார், இந்த கொடுமைகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய சாஸ்திர சம்பிரதாயங்களை ஒழித்துக் கட்டினால் இந்த பெண் குழந்தைகளுக்கு எதிர்காலம் சிறப்பானதாக அமையும், அதுமட்டுமல்ல இந்த பெண் பிள்ளைகள் படித்தால்தான் சொந்த காலில் யாரையும் எதிர்பார்க்காமல் தன்னுடைய எதிர்காலத்தை வளப்படுத்திக்க முடியும் என்று அதற்காகத்தான் தந்தை பெரியார் பெண்உரிமைக்காக போராட ஆரம்பிக்கின்றார்.
பெண் விடுதலைக்காக தன் சொந்த குடும்பத்திற்குள் சண்டை போட்டவர் தந்தை பெரியார். அந்த அனுபவத்திலிருந்து தான் பெண் விடுதலையை அவர் பேச ஆரம்பிக்கின்றார். அந்த அனுபவத்திலிருந்து தான் பெண் பிள்ளைகளை அந்த காலத்தில் என்னவாக நடத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். குழந்தை திருமண தடை சட்டம் குறித்து 1940களில் விவாதம் நடந்தது. அன்று பார்ப்பனர்கள் குழந்தை திருமண தடை சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்ற சண்டையிட்டார்கள். குழந்தைகளுக்கு திருமணம் செய்விப்பதுதான் இந்து சாஸ்திரம் என்று பேசினார்கள். இன்றைக்கு பெரியாரை பலர் வெறுக்கலாம். ஆனால் பெண் குழந்தைகளை குழந்தை பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து, அந்த குழந்தைகள் எதிர்காலம் நாசமாகக்கூடிய அந்த கேடுகெட்ட பழக்கத்தை தடுத்து நிறுத்துவதற்காக போராடி இதற்கான சட்டங்கள் வருவதற்கு காரணமாக அமைந்தது தந்தை பெரியார்.
இந்த மண்ணின் மைந்தர், தமிழ்நாட்டின் விடுவெள்ளி, இந்தியாவினுடைய வழிகாட்டியாக எழுந்து நின்ற பெருமகன், அவரை கொச்சைப்படுத்தி ஒருவர் இங்கே இந்த மண்ணிலே தந்தை பெரியாருக்கு எதிராகப் பேசுகிறார் என்றால் மானமுள்ள ஈரோட்டு தமிழர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கக்கூடாது.
எல்லாருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்று பேசியவர் தந்தை பெரியார். அன்றைக்கு ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது நீதிக்கட்சி கொண்டுவந்த 6000 பள்ளிக்கூடத்தையும் மூடுகின்ற வேலையை செய்கிறார். அதோடு குலக்கல்வி திட்டம் என்று ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். தந்தை செய்யும் தொழிலைத்தான் மகனும் செய்ய வேண்டும், தந்தை செருப்பு தைத்தால் மகனும் செருப்பு தைக்க வேண்டும் என்பதை ஒத்த கொள்கையை கொண்டு வந்தவர் ராஜாஜி. இன்று பிஜேபி கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை இதே போன்றதுதான். இத்தகைய குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தபோது, “ஏன்டா உங்க பிள்ளைங்க (அய்யர்) பிள்ளைங்க எல்லாம் படிக்க போயிருவீங்க, எங்க பிள்ளைங்க எல்லாம் மாடு மேய்க்க போகக்கூடிய நிலைமைக்கு தான் வரும். எப்படிடா அந்த பிள்ளை படிச்சு முன்னேறும்? அதனால இந்த குலக்கல்வி திட்டத்தை ஒழிச்சு கட்டு” என்று தந்தை பெரியார் கூறினார். இதுகுறித்து விரிவாக பரப்புரையும் செய்தார். உடனே ராஜாஜி பயந்து, “நான் இனிமேல் முதலமைச்சராக இருக்க முடியாது. எனக்கு உடம்பு சரியில்லை” என்று கூறி முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜாஜி பதவியை விட்டு விலகின உடனே காமராஜரை முதலமைச்சர் ஆக்குகிறார் தந்தை பெரியார் அவர்கள்.
காமராஜர் முதலமைச்சர் ஆனவுடன் ராஜாஜி மூடின 6000 பள்ளிக்கூடத்தை திறக்கிறார், அதோடு இன்னும் அதிகமாக 12000 பள்ளிக்கூடத்தை திறந்தார். 2000 வருஷத்துக்கு முன் இருந்த கல்வி எப்பொழுது தமிழனுக்கு மறுக்கப்பட்டதுன்னு கேட்டா நீ அறிவாளி. காலம் காலமாக கல்வி கற்றுக் கொண்டிருந்த தமிழனை கல்வி கற்க விடாமல் செய்தது பார்ப்பனியம்.
ஆனால் சீமான் அன்று அவ்வையார், திருவள்ளுவர் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தார்கள் என்று கேட்கிறார். ஏன் சீமானுடைய அம்மா படிக்கவில்லை? அப்பத்தா ஏன் படிக்கவில்லை? இந்த நிலை மாறி, சீமானுடைய மனைவி படித்திருக்கின்றார். சீமானுக்கு அடுத்து வருகின்ற சந்ததிகள் படிக்கும். இந்த சிந்தனை முறையை யார் கொண்டு வந்தார்கள்? தந்தை பெரியார் கொண்டு வந்தார்.
பள்ளிக்கூடத்தில் நம்ம பிள்ளைகள் எல்லாம் படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தவர் தந்தை பெரியார். அப்படிப்பட்ட பெரியாரை தமிழின துரோகி சீமான் அவமதிக்கிறார். பெரியார் சிலையை உடைப்போம் என்று பேசுகிறார்.
மக்களிடத்தில் வெறும் சட்டத்தை கொண்டு வந்தால் மட்டும் மக்கள் மாறிவிடமாட்டார்கள். மக்கள் மனம் மாறுவதற்கு நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மக்களிடத்தில் பேச வேண்டும். போராடி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதை செய்தவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் அதை செய்த காரணத்தினால் தான் இன்றைக்கு பெண் பிள்ளைகள் வெளியில் வருகிறார்கள், கல்வி கேட்கிறார்கள், வேலைக்கு செல்கிறார்கள், சுயமரியாதையோடு ஆணுக்கு சமமாக நிற்கிறார்கள்.
தந்தை பெரியார் தமிழை இழிவு படுத்தியதாக பொய்ப்பரப்புரை செய்கிறார் சீமான். தந்தை பெரியாருடைய வார்த்தைகளை முழுவதும் கேட்காமல், இரண்டு வார்த்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு, இதற்கான அடிப்படை காரணம் எதுவும் தெரியாமல், ஒரு விசியத்தை திரித்து பேசக்கூடிய வேலையை சீமான் செய்கிறார். பெரியாரின் ஒட்டுமொத்த பேச்சை கேட்டால், இரண்டு வருடம் ஓடக்கூடிய அளவுக்கு அவர் பேசியிருக்கிறார்.
என்றுமே விமர்சனம் இருந்தால் பதில் சொல்லலாம். ஆனால் அவதூறு செய்தால், அதுவும் பாஜகவிடம் கைகூலியாக வேலை செய்த ஒருத்தன் அவதூறு செய்தால், அவனை அங்கேயே நிற்க வைத்து, கேள்வி கேட்டு திருப்பி அனுப்ப வேண்டும். நாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தோன்றிய மொழி, பழம் பெருமை வாய்ந்த மொழி, அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதில் அறிவியல் கருத்துக்களை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டால் அதற்கு எவரும் பதில் சொல்வதில்லை.
பெரியார் காலத்திலே கம்ப்யூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை பார்க்க பெரியாரை அழைத்துச் சென்றார்கள். அதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து “இதுக்கு என்ன பேரு” என்ற கேட்டார் பெரியார். கம்ப்யூட்டர் என்ற சொன்னதும் “தமிழ்ல பேரு வைக்கலையா, தமிழ்ல என்ன பேரு” என்ற கேட்டார்.தமிழில் பேர் இல்லை என்றதும், சிரித்துக் கொண்டே “நீ கண்டுபிடிச்சிருந்தா தானே அதுக்கு உன் மொழியில பேர் வச்சிருப்ப, அதை வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சிருக்கான், அதனால அவன் மொழியில பேர் வச்சிருக்கிறான்” என்ற கூறினார் பெரியார்.
உன் மொழியில் அறிவியலை சேர்த்தால்தான் உன் மொழி உயரம் அடையும் என்ற சொன்னவர் தந்தை பெரியார். “உன் மொழியை நீ அறிவியல் படுத்து, உன் மொழியை நவீனப்படுத்து” என்று சொன்னவர் தந்தை பெரியார். இதில் என்ன தவறு இருக்கிறது? அந்த காலத்து மக்களுக்கு எப்படி சொன்னால் புரியுமோ அந்த மொழியில் தந்தை பெரியார் பேசினார். அப்படி தமிழ் மொழி அறிவியல் மொழியாக வேண்டும் என்று சொன்ன பெரியார்தான் மொழியில் சீர்திருத்தம் கொண்டு வருகிறார். மொழியில் வார்த்தைகளை எளிமையாக்குகிறார். பெரியாரினுடைய முயற்சியினால் திராவிட இயக்கம் கொண்டு வந்த மொழி வடிவம் மாற்றம்தான் இன்று கம்ப்யூட்டரில் வரும் தமிழ் வார்த்தை.
நான் (திருமுருகன்) நாம் தமிழர் கட்சிக்காரர்களிடம் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். பெரியார் சிலை மீது கை வைப்பேன்னு சொல்லிட்டு ரோட்ல இறங்கி வந்துறாதீங்க. திருமுருகன் காந்தி சொல்கிறேன், “சீமான் முடிந்தால் நீ வெளியே வா. இதே ஈரோட்டிலே, தந்தை பெரியார் பிறந்த மண்ணிலே, ஒரே மேடையிலே விவாதித்து பார்ப்போம், வா”. வழக்கிற்கு பயந்து மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்கும் உங்கள் காட்சியைப் போல் நாங்கள் கிடையாது. மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி சிறைக்கு சென்றவர்கள் நாங்கள். இன்றும் என்மீது அதிமுக போட்ட 47 வழக்குகள் , திமுக போட்ட ஆறு வழக்குகள் இருக்கின்றன. இதற்கு பயந்து ஓடுபவர்கள் நாங்கள் கிடையாது.
சீமான் தந்தை பெரியாரை மட்டுமல்ல, மேதகு பிரபாகரன் அவர்களை, அவருடைய மிகப்பெரும் தளபதியாக மொசாத் உளவுத்துறை அஞ்சுகின்ற வகையில் இருந்த பொட்டம்மானை கொச்சையாக பேசியவர் சீமான். திமுகவை இழிவாகப் பேசினார். ஜெயலலிதா அம்மையாரை குறித்து இரண்டு ஆண்களுக்கு நடுவிலே ஒரு பெண் படுத்திருக்கிறாள் என்ற இழிவாகப் பேசியவர் சீமான்.
இத்தகைய கீழ்த்தரமான நபரான சீமானுக்கு சவால் விடுகின்றோம். அன்பானவர்களே, நாங்கள் இந்த தொகுதியிலே சீமான் என்கின்ற கேடுகெட்ட சீரழிவு அரசியலை முன்வைக்கக்கூடிய நபரை அம்பலப்படுத்துவதற்காக வந்திருக்கின்றோம்.
நாங்கள் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் வெண்ணிலா அவர்கள் விடுதலை தமிழ் புலிகள் கட்சியிலே கவுன்சிலராக இருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் சாதியை பாதுகாக்கக்கூடிய சட்டப்பிரிவை எரிக்க வேண்டும் என்று 1956லே போராட்டத்தை அறிவிக்கிறார். அந்த காலகட்டத்திலே சட்டத்தை எரித்தால் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று அதற்கான சட்டத்தை நேரு இயற்றுகிறார். இதற்கெல்லாம் பயந்து பின்வாங்காமல் துணிந்து சட்டத்தை எரித்து சிறைக்குச் சென்ற ’சோழபுரம் முருகேசன்’ என்கின்ற பெரியாரிய பெருந்தொண்டரினுடைய பேத்திதான் வெண்ணிலா அவர்கள். அவர்தான் இங்கே தேர்தலில் நிற்கிறார். உங்களுக்கு சீமானுக்கு ஓட்டு போட வேண்டும் என்று தோன்றினால், அந்த சீரழிவு அரசியலை வளர்த்து விடாதீர்கள். அப்படி வாக்களிக்க வேண்டும் என்று விரும்பினால் வெண்ணிலா அவர்களுக்கு வாக்களித்து ஒரு சுயமரியாதை உணர்வை வெளிப்படுத்துங்கள் என்றுதான் நாங்கள் சொல்ல வந்திருக்கின்றோம். எங்களுக்கு வாக்கு எண்ணிக்கை முக்கியமல்ல, சுயமரியாதை உணர்வுதான் முக்கியம்.
உங்களுக்கு விருப்பம் இருக்கும் என்றால், நீங்கள் தந்தை பெரியாருக்கு எதிரான அரசியலை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருந்தால், நீங்கள் இவரை ஆதரிக்கலாம். ’கால்குலேட்ட’ர் சின்னத்தில் நிற்கும் அவருக்கு உங்கள் ஆதரவை தெரிவிப்பது என்பது உங்களது கொள்கை முடிவு.
ஆனால் எந்த காலத்திலும், இந்த மண்ணில் பிறந்த, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் தலைவணங்கி தலைவன் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கை தலைவன் தந்தை பெரியாரை இழிவு செய்த சீமானுக்கு மட்டும் உங்கள் வாக்கு ஒரு காலத்திலும் விழக்கூடாது என்பதை சொல்வதற்காக வந்திருக்கின்றேன்.
எங்களுக்கு திமுக மேல் கடுமையான வருத்தம் இருக்கிறது. திராவிட அரசியலில் நாங்கள் வந்திருக்கிறோம் சொல்லும் நீங்கள், தந்தை பெரியாரின் வழியில் வந்திருக்கிறோம் என்று சொல்லும் நீங்கள், ஒருவன் தந்தை பெரியாரை இழிவுபடுத்தி தந்தை பெரியார் பிறந்த மண்ணிலே பரப்புரை செய்து கொண்டிருக்கிறான், கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். கைது செய்ய வேண்டாமா? பெரியார் என்கின்ற ஆளுமையை சிதைத்து விட்டால், பிஜேபிக்காரன் கொடிகட்டுவான்.
பெரியார் என்பவர் கொள்கைக்காரர், பெரியார் எந்த கட்சியிலும் சேர்ந்து எனக்கு எம்.எல்.ஏ ஆகணும் எம்.பி ஆகணும் முதலமைச்சர் ஆகணும் என்று வாக்கு கேட்டவர் அல்ல. தந்தை பெரியார் மக்களுக்காக பேசியவர், மக்களுக்காக போராடியவர். இந்த அரசியலை உங்கள் நண்பர்களிடத்தில், உங்க உறவினர்களிடத்தில் பேசுங்கள்.
ஈரோட்டில் அடிப்படை பிரச்சனை ஜிஎஸ்டி தான். ஜிஎஸ்டியை மோடி சர்க்கார் கொண்டு வந்ததற்குப் பிறகு, இங்கே தொழில் நசிந்து விட்டது. மூலதனம் இல்லாமல் போய் விட்டது. ஈரோட்டில் நூல் விலை ஏறுவதற்கு காரணம் பருத்தியையும் நூலையும் கட்டுப்படுத்துகிற சந்தை குஜராத்தில் இருப்பதால் தான். அங்கு ஆட்சியில் இருக்கும் பாஜக தான் நூல் விலையும் பருத்து விலையும் கட்டுப்படுத்துகிறது.
பாரத் மாதாகி ஜெய்ன்னு சொல்லும் பாஜக, அந்த பாரதத்திற்கு பருத்தியை அனுப்பவில்லை, பங்களாதேஷுக்கு அனுப்புகிறது. தோல் பதனிடுவதற்கான வசதிகளை முடக்குவது, அதற்கான வரியை ஏற்றுவது, போன்ற நடவடிக்கைகளால் அந்த தொழிலை நசிவடையச் செய்தவர் நரேந்திர மோடி. காரணம் இந்த தோல் தொழிலே இருக்கிறவர்கள் இசுலாமியர்கள். இந்தியாவிலேயே சிறந்த நிலையில் முன்னணி நிலையில் உலகத்தரம் வாய்ந்த தோல் பொருட்களை செய்பவர்கள் யார்? தமிழ்நாட்டு இசுலாமியர்கள். அவர்கள் எங்கள் தமிழ் சொந்தம். ஆனால் ஒரு வடநாட்டான் சட்டம் போட்டு நம்ம ஊர் தொழில் அனைத்தையும் நாசம் செய்கிறான். அதை கேக்குறதுக்கு சீமானுக்கு துப்பு இல்லை.
இன்று நமக்கு வந்திருக்கிற அத்தனை பிரச்சனைக்கும் காரணம், டெல்லியிலிருந்து வந்தது. டெல்லிக்காரன் போட்ட வரிதான் காரணம். நீங்க சாப்பிட இட்லிக்கு வரி போட்டிருக்கான். சட்னிக்கு வரி போட்டிருக்கான். சோத்துக்கு வரி போட்டுருக்கான். இந்த டெல்லி சர்க்காரை கேள்வி கேட்க வக்கில்லாத சீமானை புறக்கணியுங்கள். இந்த மண்ணினுடைய பிரச்சனை முன்னுக்கு வரக்கூடாது என்பதற்காக, இந்த மண்ணின் பிரச்சனைக்கு காரணமான பாரதிய ஜனதா கட்சியினுடைய சதிகள் அம்பலமாகி விடக்கூடாது என்பதற்காக, தந்தை பெரியாரை இழிவுபடுத்துகிறார் சீமான். சீமானுக்கு சின்னம் மைக் தான், ஆனால் அதற்கு கரண்ட் பாஜக கொடுக்கிறது.
2009, 2011, 2014 – மூன்று தேர்தல்களிலும் ஜெயலலிதா அம்மையாருக்காக ஓட்டு கேட்டது சீமான். ஆனால் அவர் இறந்த உடன், “மெரினாவில் ரெண்டு ஆம்பளைங்க நடுவுல பொம்பளை படுத்துருக்கு” என்று இழிவாகப் பேசியவர் சீமான். அதிமுககாரர்களுக்கு சுய மரியாதை இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஜெயலலிதா அம்மையாரிடம் பணம் வாங்கிய சீமான், அதிமுகவுக்கு ஓட்டு கேட்ட சீமான் ஜெயலலிதா அம்மையார் குறித்து இவ்வாறு இழிவாகப் பேசினார். மோடி, அமித்ஷா குறித்து இவ்வாறு இழிவாகப் பேச சீமானுக்கு வாய் வருமா? சீமானுக்கு ₹10 கொடுத்து உன்னை நீயே திட்டிக்கோன்னு சொன்னால் அந்த பத்து ரூபாய்க்கு தன்னைத்தானே கேவலமாக திட்டிக்கொள்ளக்கூடிய ஒரு நபர்தான் சீமான்.
சீமான் ஏதோ 8% ஓட்டு, 10% ஓட்டு வாங்கிட்டாருன்னு கதை விடுகிறார்கள். 8% -10% ஓட்டு வாங்கின பல கட்சிகள் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கடந்து தான் தமிழ்நாட்டு மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.
பெரியாரை கடுமையாக எதிர்த்தவர்கள் கூட பெரியாரை அநாகரீகமாக பேசியதில்லை. தமிழ்நாட்டிலே பாஜக பேசுவதற்கு அச்சப்படுகின்ற ஒரு விசியத்தை அசட்டு துணிச்சலில் சீமான் பேசுகிறார். காரணம் டெல்லியிலிருந்து தனக்கு பாதுகாப்பு வரும் என்று நம்புகிறார் சீமான். நீங்கள் (சீமான்) என்றைக்கு பெரியாருக்கு எதிராக பேச ஆரம்பித்தீர்களோ, என்றைக்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசியலை செய்ய ஆரம்பித்தீர்களோ, என்றைக்கு சிங்களவனுக்கு நீங்கள் கொடி பிடிக்க ஆரம்பித்தீர்களோ, என்றைக்கு இங்கே தமிழ்நாட்டிலே பொய்யைச் சொல்லி ஆட்சியை பிடித்து விடலாம் என்று நம்பினீர்களோ அன்றைக்கே உங்களது அரசியல் வீழ்ச்சியை கண்டுவிட்டது.
தந்தை பெரியார் என்பவர் ஒரு சாதாரண ஆளுமை இல்லை. கிட்டத்தட்ட 60- 80 வருடத்துக்கு முன்னாடி தந்தை பெரியார் சாதி ஒழிப்புக்காக ஒரு மாநாடு அறிவிக்கிறார். சாதியை ஒழிக்கக் கூடியவர்களே, சாதி ஒழிய வேண்டும் என்று விரும்புகிறவர்களே, மாநாட்டுக்கு வாருங்கள் என்று அழைப்பு கொடுத்தார். அந்த மாநாட்டில் அன்று கலந்து கொண்டவர்கள் இரண்டு லட்சம் பேர். தந்தை பெரியாருக்கு மக்களிடத்தில் மரியாதை இருந்தால்தான், சாதியை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் குரல் கொடுத்த உடனே இரண்டு லட்சம் பேர் வந்து நின்றார்கள். அப்பேற்பட்ட ஒரு சொல்லுக்கு சொந்தக்காரர் தான் பெரியார். தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்று போராடிய ஒரு தலைவனை எதிரிகள் கூட கொச்சையாக பேசியதில்லை, ஆனால் சீமான் பேசுகிறார். அந்த சீமானை அப்புறப்படுத்த வேண்டிய தேவை, அரசியலில் இருந்து விரட்டி அடிக்க வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.
இன்று பாஜக கொண்டுவந்திருக்கும் யுஜிசி சட்ட திருத்தத்தின்படி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தங்கள் மாணவர்களுக்கு பட்டம் கொடுக்க முடியாது, டிகிரி தர முடியாது. மோடி கொண்டு வந்திருக்கிற சட்டத்தின்படி பார்த்தால் உங்கள் பிள்ளைகளுக்கு டிகிரி கொடுக்க முடியாது. அப்படி கொடுக்கக்கூடிய டிகிரிக்கு எந்தவிதமான அங்கீகாரமும் கிடையாது என்று மோடி சர்க்கார் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. இதை மடைமாற்றம் செய்ய வேண்டுமென்றுதான் சீமான் பெரியாரை இழிவாக பேசிக் கொண்டிருக்கிறார்.
இன்று சீமான் ஆதரிக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது? எச். ராஜா என்கின்ற ஒரு கீழ்த்தரமான நபரை பேரறிஞர் என்று பேசுகிறார் சீமான். “எச் ராஜா உனக்கு பேரறிஞரா? அப்புறம் அந்த பாண்டே உனக்கு ஒரு பெரிய அறிஞரா?”
எதையும் படித்த அறிவுத் தெளிவுள்ள நபராக சீமான் இல்லை. ஆகவே பாரதிய ஜனதா கட்சி, சீமான் முகமூடியில் வருகிறது. பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவது என்பது சீமானை வீழ்த்துவதற்கு சமம். சீமானை வீழ்த்தினால் பாரதிய ஜனதா கட்சி வீழ்ந்து போகும். அண்ணாமலையின் அரசியல் அடிபட்டு போகும்.
பிஜேபிக்காக கூலி வேலை சீமானின் அரசியலை அம்பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். கொடுந்தமிழை பேசிக் கொண்டிருக்கக்கூடிய சீமானின் இழிவான வார்த்தைகளை நம்மால் காது கொடுத்து கேட்க முடியவில்லை.
பிஜேபி உடன் கைகோர்த்ததுக்கு பின்னாடி சீமானுக்கு கோமியத்தை தான் பரிசளிக்க முடியும். ரஜினி வீட்டிலே அவர் குடித்தது கோமியமாகத்தான் இருக்க வேண்டும். அந்த கோமியத்தை குடித்துவிட்டு சீமான் இந்த அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கின்றேன்.
இதே இடத்திலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீரன் சின்னமலையினுடைய வரலாற்றை நான் பேசி இருக்கின்றேன். தீரன் சின்னமலையும் திப்பு சுல்தானும் சேர்ந்து எவ்வாறு இந்த மண்ணுக்காக போராடினார்கள் என்பதை பேசியிருக்கின்றேன். சாதி கடந்து, மதம் கடந்து, இரண்டு பேரும் இணைந்து போர் நடத்தினார்களே! திப்பு சுல்தான் மீது வெள்ளைக்காரன் போர் கொடுத்த பொழுதெல்லாம் இங்கிருந்து தீரன் சின்னமலை படையெடுத்து போனாரே! அப்படி தீரன் சின்னமலை, திப்பு சுல்தான், மருதுபாண்டியர், ஒண்டி வீரன் அனைவரும் இந்த மண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சேர்ந்து நின்றார்களே!
அருந்ததி சமூகத்தைச் சேர்ந்த பொள்ளானை எதற்காக கொன்றார்கள்? தீரன் சின்னமலையைக் காப்பாற்றுவதற்காக நின்ற பொள்ளானை வெள்ளையன் கொன்றான். ஆனால் சீமான் பொள்ளான் தமிழன் இல்லை என்று சொல்லுகிறார். போர் களத்தில் போரிட்டு தனது உயிரை கொடுத்து, தன் பிள்ளைகளை போராட்டத்திற்கு கொடுத்தவர் திப்பு சுல்தான். தனது போர்க்களத்திலே தென்னாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்று திரட்டியவர் திப்பு சுல்தான். மருதுபாண்டியருக்கு துணையாக இருந்தார் திப்பு சுல்தானுடைய தந்தை ஹைதர் அலி. சிவகங்கை சீமைக்கு படை அனுப்பி அந்த சிவகங்கை சீமையை வெள்ளையரிடமிருந்து மீட்டுக்கொடுத்தார். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு யார் உதவி செய்தது? ஹைதர் அலி உதவி செய்தார். இதுதான் நம் வரலாறு. இப்படி சாதி மதம் பார்க்காத நம் ஊரிலே சீமான் என்னும் ஓநாயை அண்ணாமலை என்கின்ற நரி அனுப்பி இருக்கிறது. இந்த நரியையும் ஓநாயையும் ஓட ஓட விரட்டுவது உங்களது வேலை.
ஆக தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே! நாங்கள் வீடு வீடாக வரவிருக்கிறோம். சீமானுடைய அரசியலை அம்பலப்படுத்தினால் தான் தமிழினத்தில் நேர்மையான அரசியல் கோரிக்கைகள் முன்னுக்கு வரும். சீமான் போடுகின்ற கணக்கை பொய் கணக்காக மாற்றுவதற்கு இங்கே கால்குலேட்டர் சின்னத்திலே வேட்பாளராக வெண்ணிலா வந்திருக்கிறார். திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் தனக்கு வரும் என்று நினைக்கிறார் சீமான். அந்த வாக்குகள் வெண்ணிலா அவர்களுக்கு வரவேண்டும். தமிழ் தேசியத்தை நம்புகின்றவர்கள் வெண்ணிலாவிற்கு வாக்களிக்க வேண்டும். உண்மையான மாற்று அரசியல் வரவேண்டும் என்று யார் விரும்புகிறார்களோ அவர்கள் வாக்களிக்க வேண்டும்.
போலிகளை அப்புறப்படுத்தினால் தானே, சகதிகளை அப்புறப்படுத்தினால் தானே, குப்பைகளை தூரம் நீக்கினால் தானே நன்னீர் நமது தோட்டத்திற்குள்ளே பாயும். அப்படியாகத்தான் நாங்கள் இங்கே இந்த அரசியலை முன்வைக்கின்றோம். இந்த அரசியல் தமிழ் தேசிய அரசியல், அது தமிழ் மக்கள் உரிமைக்காக பேசுகின்ற அரசியல். அது ஒரு காலத்தும் சீமானின் அரசியல் அல்ல. சீமான் பேசுவது தமிழ் தேசியமும் அல்ல. சீமான் பேசுவது சங்கிகளின் மதவெறி அரசியல், அதை மறந்து விடாதீர்கள். பெரியார் சிலையை எவன் உடைக்கிறான் என்று சொல்லுகிறானோ அவன் பாரதிய ஜனதா கட்சியின் கைக்கூலி என்பதை நீங்கள் மனதிலே குறித்து வைத்து இந்த அரசியலில் இருந்து அவரையும் அவரது கட்சியையும் அவரது வேட்பாளரையும் அப்புறப்படுத்துங்கள் என்ற கோரிக்கையை உங்களிடத்திலே முன்வைத்து விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்.