
“வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே!
மாண்புகள் நீயே என் தமிழ்த்தாயே! வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும் வெற்றியும் நீயே!” – தாய்மொழியை உயிருக்கு நிகராக நேசிக்கும் தமிழினத்தின் வீரத்திற்கும், வெற்றிக்கும் தமிழ்த்தாய் துணையிருப்பாள் என்கிறார் பாரதிதாசன். தமிழ்த்தேசிய இனம் மட்டுமல்ல, ஒவ்வொரு தேசிய இனத்தின் தாய்மொழிக்கும் பொருந்தக்கூடிய வரிகளாகவே இவை இருக்கின்றன.
உலகத் தாய் மொழி நாளாக பிப்ரவரி 21-ம் நாள் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தானில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற போராட்டத்தில் மடிந்த நான்கு இளைஞர்களின் நினைவாக இந்நாளை ‘பன்னாட்டு உலகத் தாய்மொழி நாள்’ என ஐ.நா அறிவித்தது. ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி உரிமையை காக்க உறுதியேற்கும் நாளாக, தாய்மொழிக்காக தன்னுயிரையும் ஈகையாய் தந்த ஈகியர்களை நினைவு கூறும் நாளாக தாய்மொழி நாள் அமைகிறது.
நம் தாய்மொழியான தமிழ் இயற்கையின் ஒலிக்கு இணைந்த மொழியாக தோன்றியதாகும்.
திராவிட மொழிக் குடும்பத்தில் இருந்த மொழிகளே, ஆரிய வருகைக்கு முன்பு வரை, இந்தியாவிற்குள் இருந்த இனக்குழுக்களின் பேச்சு மொழியாக இருந்துள்ளது. அதில் தமிழே மூத்த மொழியாகும். மனிதர்களை நெறிப்படுத்தும் நன்னெறி நூல்களில், வாழ்வியல் நூல்களில் இறைந்துக் கிடக்கும் அறம், வீரம், காதல் என அனைத்திலும் உலகத்தவர் வியக்கும் பண்புகளைக் கொண்டு விளங்குகிறது தமிழ்.

தமிழின் தொன்மை, அகழ்வாய்வுகள் மூலம் 3000 ஆண்டுகளைக் கடந்தது என நிரூபணமாகி விட்டது. இலக்கிய இலக்கண வளம் கொண்ட 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கிய சான்றுகளும் இதனை உறுதி செய்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் நமக்கு கிடைத்துள்ள முக்கிய தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம். ஆனால் தொல்காப்பியருக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் தோன்றியிருக்கலாம் என்பதற்கு, அந்த நூலில் அவர் கையாண்டிருப்பவையே எடுத்துக் காட்டுகின்றன. ‘என்ப’, ’என்மனார் புலவர்’, ‘யாப்பென மொழிப யாப்பறி புலவர்’, தோலென மொழிப தென்மொழிப் புலவர்’ போன்ற சொற்கள் அவர் காலத்திற்கு முன்பே பல புலவர்கள் இருந்துள்ளதை எடுத்துரைக்கிறது.
தொல்காப்பியர் கையாண்டிருக்கும் சொற்களை வைத்து தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்கிற போலியான கட்டமைப்பை பார்ப்பனர்கள் நிறுவப் பார்த்ததும் காலம் காலமாகத் தொடர்கிறது. இந்த மோசடிக்கு தக்க பதிலடியாக பாரதிதாசன்
“அகத்தியம் சொன்னதும் இல்லை தமிழ்
அகத்தியமே முதல் நூலெனல் பொய்யாம்.
மிகுதமிழ் நூற்கொள்கை மாற்றிப் – பிறர்
மேல் வைத்த நூலே அகத்தியமாகும்!” – என அகத்திய பிம்பத்தை உடைக்கிறார்.
இந்த அகத்தியரை இந்திய ஒன்றிய அரசின் ‘செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்’ உயர்த்திப் பிடிக்க மாணவர்களிடையே அகத்தியர் பற்றியான பல வகைப் போட்டி நிகழ்வுகளை உருவாக்குகிறார்கள்.
பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எடுபிடியாக இந்திய ஒன்றிய அரசே இருக்கும் நிலையில், ‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடிகளான’ தமிழர்களின் தாய்மொழியான தமிழை, பார்ப்பனர்களின் மொழியான சமஸ்கிருதத்திலிருந்து உருவான மொழி என்று, பக்தியின் ஊடாக நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள்.
இந்த சூழலில் தமிழின் தொன்மையை நிரூபிப்பதற்கும், ஆரியத்தின் திரிபுகளை உடைப்பதற்கும் முன்பை விட கூடுதலான வலிமை தேவைப்படுகிறது. தமிழின உணர்வாளர்கள் தமிழ் துறை சார்ந்த பல முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. தமிழர்களுக்காக இயங்கும் அரசியல் இயக்கங்கள், தமிழ், தமிழர் குறித்தான ஆய்வுகளை செய்யும் தமிழறிஞர்களுடன் கைக்கோர்க்கும் தளங்கள் அதிகமாக ஏற்பட வேண்டும். அதை மக்களிடம் சேர்ப்பிக்கும் வழிகள் எளிமையாக்கப்பட வேண்டும். இதற்கான முதல் முயற்சியாக கடந்த ஆண்டு 2024-ல் மே 17 இயக்கம் ‘தமிழ்த்தேசியப் பெருவிழா’ என்கிற அறிஞர்களின் அவையத்தை நடத்தியது. கல்விக் கூடங்கள், ஆய்வுத் தளங்களுக்குள் இயங்கும் அறிஞர்களின் கருத்துக்களை சாமானிய மக்களும் அறியும் தளமாக அந்நிகழ்வு அமைந்தது.

தமிழ் தேசியத்தின் பிடிமானங்களாக அந்நிகழ்வில் பேசிய அறிஞர்களின் கருத்துச் செறிவுகள் அமைந்தன. குறிப்பாக, தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் பேசும் போது, தமிழர்களின் தொன்மை காலமான சங்க காலம் என்பது கிமு 300 – கிபி 300 என 600 ஆண்டு காலமாக சுருக்கி சொல்கிறார்கள். ஆனால் சங்ககாலம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வந்திருக்கின்ற காலம் என்பதுதான் தொல்லியல் ஆய்வு மூலமாக அறிய முடிகிறது என்று கூறினார். தமிழர்களிடத்தில் தமிழின் தொன்மை குறித்து கீழடி ஆய்வுகள் சென்று சேர்ந்த அளவிற்கு, ஏனைய ஆய்வுகள் சென்று சேராததற்கு காரணம், அதைப் பற்றி வெகுமக்கள் தளத்தில் பேசப்படவில்லை, விவாதமாக்கப்படவில்லையென்று பேசினார். கீழடியில் பார்வையாளர்களை அனுமதித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதால் தான் கீழடி ஆய்வு சாமானிய மக்களிடத்திலும் சேர்ந்ததாகக் குறிப்பிட்டார்.
மேலும் அந்த அவையத்தில், தமிழர்களின் கலை, இலக்கியம், நாடகம், மெய்யியல், இறையியல், நடுகல் மரபு, திணைவெளி, வேளாண்மை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், வைதீக எதிர்ப்பு, திராவிடம் வளர்த்த தமிழ்த் தேசிய எழுச்சி போன்ற பல பிரிவுகளில் ஆளுமைகள் தங்கள் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர். தமிழர் மரபு, தமிழின் தொன்மை சார்ந்த வேர்களையும், அது கிளை விரித்த வாழ்வியலையும் பண்பாட்டையும் வரலாற்றையும் பதிவு செய்தனர். தமிழர்களின் பண்பாட்டில் பார்ப்பனியம் செய்த திரிபுகளை எல்லாம் வீழ்த்திய திராவிட இயக்கப் பங்களிப்பை தெளிவாக எடுத்துக் கூறினர்.
தமிழரின் தொன்மையையும், மேன்மையையும் மறைப்பதற்கு பல வழிகளில் பார்ப்பனர்கள் மேற்கொண்ட முயற்சியின் ஒன்றே, இப்போது தமிழ்நாட்டிற்கு உரிமையான கல்வி நிதியை மறுக்கும் இந்திய ஒன்றிய அரசின் செயலாக இருக்கிறது. மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று சர்வாதிகாரமாக ஒன்றிய அரசின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார்.

மும்மொழிக் கொள்கை மூலமாக இந்தி மறைமுகமாகத் திணிக்கப்படும் என்று தேசிய கல்விக் கொள்கையை தமிழர்கள் மறுக்கிறார்கள். வட மாநிலங்களில் பல தேசிய இனங்களின் மொழிகளை அழித்த வரலாறு கொண்டது இந்தி. போஜ்பூரி, ஒடியா, பஞ்சாபி, குஜராத்தி, மைதிலி, மஹதி போன்ற பல மொழிகளை செரித்த மொழியாக இந்தி இருக்கிறது. இதனை அறிந்த காரணத்தாலேயே 1938-ல் தொடங்கிய மொழிப்போர் இன்னும் ஓயாமல் கனன்று கொண்டிருக்கிறது. தமிழுக்காக தன்னை கொடுத்த மொழிப்போர் ஈகியர்களின் ஈகம் அதனை அணையாமல் காத்துக் கொண்டிருக்கிறது. இன்னமும் பிற தேசிய இனங்களை விழிப்பூட்டி எச்சரிக்கை செய்யும் இனமாக தமிழினம் இருக்கிறது. இதனால் தான் ஒரு தேசிய இனமாக இல்லாமல், நாடோடி இனமாக வந்து இங்கு ஒட்டிக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பனீயத்திற்கு எரிச்சல் தருவதாக இருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கையில் திணிக்கப்படும் இந்தியை முற்றிலும் எதிர்க்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையினால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வளர்ச்சி பலனையும், தமிழுக்கு ஏற்பட்ட விளைவுகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதும் கட்டாயமும் உள்ளது. ஆங்கில அறிவே வளர்ச்சிக்குரிய அறிவு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் தமிழை விட ஆங்கிலத்தை முன்னிறுத்தும் கல்வி தவிர்க்கப்படவும் வேண்டும். தமிழ் உணர்வை வளர்க்காத கல்வி, மாணவர்களை எந்திரமயமாக்கும் சூழலுக்கே தள்ளி விடும் என்பது கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்திரவயமான கல்வி சமூக அக்கறையற்று சுயநலத்திற்கே இட்டுச் செல்லும் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.
ஆங்கில வழிக் கல்வியால் தமிழின் மேன்மையை புறந்தள்ளுவதும், மும்மொழி என்கிற முகமூடியில் வரும் இந்தியை ஏற்றுக் கொள்வதும் தமிழர்களுக்கு உரியதல்ல.
தாய்மொழி வழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சங்ககாலம் தொட்டு வாழும் தமிழர்களின் பண்புகள் தலைமுறைகளுக்கு கடத்தப்படும் வழியாக இருக்க முடியும். மனித பன்மைத்துவத்தை மதிக்கும் அறம் பெருக வைக்கும் பாதையாகவும் அமையும். ‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே அறமென்ற’ திருவள்ளுவரின் அறம் தமிழர் குணங்களில் நீடிக்கச் செய்ய தாய்மொழி வழிக் கல்வி முக்கியமானது. நம் உரிமைக்கு குரல் கொடுக்கும் ஊக்கமாகவும், சுயமரியாதைக்கு ஊட்டத்தை தரும் உணர்வாகவும் தாய்மொழி வழிக் கல்வியே இருக்க முடியும்.

தமிழில் கொட்டிக் கிடக்கும் அறிவுப் புதையல்களை கல்வி மூலமாக மாணவர்களை சென்று சேர்க்கும் வழிகளை விரிவுபடுத்திட வேண்டும். தமிழ்துறை சார்ந்த அறிஞர்கள் விவரித்திரும் தமிழரின் மேன்மை, தமிழின் தொன்மைகள் தமிழ் சமூகத்திடம் சென்றடைய வேண்டும். அதற்கெனவே இரண்டாவது ஆண்டாக மார்ச் 15, 16 நாட்களில், மே 17 இயக்கம் அறிஞர் அவையம் நிகழ்வினை நடத்தவிருக்கிறது. தாய்மொழிப் பற்று கொண்டோர் அனைவரும் திரளுங்கள் என அழைப்பு விடுக்கிறது.