தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பாக அதன் துணை பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் பதிலடி:
தமிழ்த்தேசிய பேரியக்கத்துடனான விவாதம் சீமானின் ரசிகர்களிடத்தில் நடப்பதைப் போல அல்லாமல் கோட்பாடு சார்ந்ததாக இருக்குமென நம்பினோம். மாறாக, சீமான், பாஜக, திமுக ஆகிய தேர்தல் கட்சிகளின் வழிமுறையான அவதூறுகளை த.தே.பேரியக்கம் கையில் எடுத்திருக்கிறது. தோழர்.அருணபாரதியின் அவதூறு கட்டுரைகள் இரண்டிற்கு பதிலளித்தோடு மட்டுமல்லாமல் அவர் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி இருந்தோம். அவற்றைக் குறித்து பதில் எழுதாமல் திட்டமிட்டு நழுவிச் சென்றிருக்கிறார்.
தோழர் அருணபாரதியின் அவதூறு கட்டுரைகளில் வடமாநிலத் தொழிலாளர் குறித்து மே 17 இயக்கம் தமிழின துரோகம் செய்கிறது என அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, தொழிலாளர் இடப்பெயர்வு என்பது மூலதனத்தின் இடப்பெயர்வின் அங்கமாக நடக்கிறது. வட இந்திய பெருமுதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு செயல்பாடுகள், தமிழ்நாட்டு முதலாளிகளின் லாப நோக்கங்கள் ஆகியவற்றின் விளைவுகளாகவே வடநாட்டு தொழிலாளர்கள் வருகை என்பது சாத்தியமாகிறது. மே 17 இயக்கம் இந்த மூலதனத்தின் மீது கேள்வி எழுப்புகிறது. இந்த முதலீடுகள், நிறுவனங்களை நோக்கி போராட்டம் நடத்தியதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். மேலும் மூலதனங்கள் குறித்து எவ்வித நிலைப்பாடுமில்லாமல், வட இந்திய தொழிலாளர்களை மட்டுமே குற்றவாளிகளாக காட்டுவது எவ்வகையில் பொதுவுடமை கொள்கை வகையாகும் எனும் கேள்வியை எழுப்பியதற்கும், இதேபோல வடநாடு, வெளிநாடு சென்றிருக்கும் தமிழ் தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகள் ஏற்படுமெனில் த.தே.பே என்ன செய்யப்போகிறதென கேட்டதற்கு பதிலை தோழர் அருணபாரதி அளிக்கவில்லை. காரணம் இச்சிக்கல் குறித்து எவ்வித ஆய்வுமில்லாமல் உணர்வு நிலையிலும், முதலாளிகள் ஆதரவு நிலையிலும், தொழிலாளர் விரோத மனநிலையிலும் த.தே.பே இயங்கியிருக்கிறது என்பது அம்பலமாகி உள்ளது.
இதைப்போன்றே காவிரி உரிமைச் சிக்கல் போராட்டம் தமிழ்நாடு தழுவியப் போராட்டமாக விரிவடைய மே 17 இயக்கம் முயற்சி எடுத்து பல போராட்டங்களை தமிழ்நாட்டின் பலவேறு பகுதிகளில் நடத்தியபோது, காவிரி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பில் இருந்து மே 17 இயக்கத்தை எவ்வித தகவலும் தெரிவிக்காமல் ஒதுக்கி வைத்தார் அக்கூட்டமைப்பின் தலைவரான ஐயா மணியரசன். காவிரிப் போராட்டத்தை தஞ்சைப் பகுதிக்கானதாகவும், நில உடமையாளர்களாக இருக்கும் விவசாயிகளின் போராட்டமாகவும் மட்டுமே தக்கவைத்து தமிழ்த்தேசிய உணர்வை மாற்றச் செய்தது குறித்து பதில் இல்லை. மாறாக சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் போராட்டமாக முன்னெடுக்கப்பட்ட ஐ.பி.எல் போராட்டத்தில் த.தே.பே பங்கெடுத்ததை மட்டும் குறிப்பிட்டு நழுவிச் சென்றிருக்கிறார்.
கோட்பாடு ரீதியாகவோ. தமிழ்த்தேசிய ஐக்கியத்திற்கான கள செயல்பாடு ரீதியாகவோ எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு த.தே.பேரியக்கத்திடம் பதில் இல்லை என்பது தான் இதன் மூலமாக நிரூபணமாகிறது. தமிழ்த்தேசிய கொள்கைத் தெளிவோ, களத்தினை உருவாக்கும் செயல்பாட்டு வழிமுறையோ இல்லாமல் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின்பால் அரசியல் முடிவுகளை எடுக்கக்கூடிய நிலையையே இது அம்பலப்படுத்துகிறது. எவ்வித வேலைத்திட்டங்களின்றி மேலோட்டமான கோரிக்கைகள், உணர்வு வகைப்பட்ட கோரிக்கைகள், பிராந்திய அளவிலான செயல்பாடுகளின் வழியில் த.தே.பேரியக்கம் சுருங்கிப்போய் இருக்கிறது. அதேசமயம், ஆரிய இந்துத்துவத்திற்கு ஏற்றாற்போல் திராவிட இயக்கத்தின் மீதான ஆழமற்ற விவாதங்களையும், தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளையும், அவதூறுகளையும் மட்டுமே த.தே.பேரியக்கம் முன்னெடுக்கிறது என்பதை, தோழர். அருணபாரதியின் கட்டுரைகளின் வழியே வெளிப்படுகிறது. சமகாலத்தில் பலவேறு ஆவணங்கள் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய சூழலில் அவதூறுகளை மட்டும் சார்ந்து மே 17 இயக்கத்தின் மீது த.தே.பேரியக்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் தன்மைகளை கவனிக்கும் போது இவ்வகையான முடிவுகளுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. இனி, தோழர். அருணபாரதி புதிதாக எழுதியிருக்கும் அவதூறுகளுக்கு பதிலை பட்டியலிடுவோம். அரசியல் தோற்கும் இடத்தில் அவதூறுகள் பந்தல் கட்டும் என்பதை தோழர். அருணபாரதியின் எழுத்துகள் நிரூபிக்கின்றன.
தமிழ்தேசியம் எனது லட்சியம் என்று சொல்லும் தமிழ்தேசிய பேரியக்கம் அதற்கு நேரெதிரான இனவாதிகளோடும், ஆரியத்தோடும் சமரசம் செய்யும் போக்கை தமிழ்தேசிய பேரியகத்தின் அரசியல் செயல்பாடுகளின் அடிப்படையில் மே 17 இயக்கம் கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் சொல்லுகிறோம் என்கிற பெயரில் வசவுகளையும், முத்திரை குத்துவதையுமே (Branding) த.தே.பே செய்து கொண்டிருக்கிறது. அதிலும் பிஜேபியோடு கூட்டணி வைத்த வைகோவிற்கு ஓட்டுக்கேட்டார்கள் என்று தோழர் அருணபாரதி அவர்கள் நீட்டி முழங்கி எழுதியிருக்கிறார்.
முதலில் மே 17 இயக்கம் தேர்தல் சம்பந்தமாக எடுக்கும் நிலைப்பாடுகளை மக்கள் மன்றத்தில் வைத்திருக்கின்றோம். அதன்படி தான் நடந்துகொண்டிருக்கின்றோம். அதுபோல நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற 2014 தேர்தலிலும், எங்கள் தேர்தல் நிலைப்பாடுகளான பிஜேபி, காங்கிரசை புறக்கணிப்போம் என்று தான் சொன்னோம். அதைத்தான் செய்தோம். அதேநேரத்தில் பிஜேபியோடு கூட்டணியில் இருந்த மதிமுகவிற்காக ஆதரவு தெரிவிக்கமுடியாது என்று நேரிலேயே அவர்களிடம் தெரிவித்து விட்டோம். ஆனால் இன்றளவும் மதிமுகவிற்காக பிரச்சாரம் செய்தோமென்று அவதூறு பரப்புகிறீர்கள். சரி, இந்த அவதூறுக்கான ஆதாரம் கொடுங்கள் என்று கேட்டால், நாங்கள் மதிமுகவிடம் சொல்லி மறுக்கச்சொல்லவேண்டுமாம் என்னே ஒரு பதில்!
அவதூறை நீங்கள் பரப்புவீர்கள், நாங்கள் அதற்கான ஆதாரத்தை தரவேண்டுமாம். அதுசரி, உங்களுடைய சிஷ்யர் சீமானும் இதைத்தான் செய்கிறார். பெரியார் குறித்து அவர் உளறுவதற்கு ஆதாரம் கேட்டால், நான் தரமாட்டேன் நீங்களே நிருபியுங்கள் என்கிறாரே, அதேபோலவே சீமானின் ஆசானாகிய நீங்களும் சொல்வதை பார்க்கும்பொழுது ஆம், இருவரும் உண்மையிலேயே இரட்டை குழல் துப்பாக்கிகள் தான் பொய்யை கட்டமைப்பதில் என்பதை புரிந்துகொள்கிறோம்.
அடுத்து மே 17 இயக்கத்தின் மீது அவதூறுக்கு உமரை துணைக்கு அழைத்துக்கொள்கிறீர்கள். உமர் சொல்லியது அனைத்தும் பொய்கள் என்று ஏற்கனவே நிருபிக்கப்பட்ட பிறகு, அதே பொய்யை மே 17 இயக்கத்தின் மீது அவதூறு பரப்ப நீங்கள் எடுத்துக்கொண்டு வருவதை பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இவ்வளவு ஏன் உமர் மே 17 இயக்கத்தின் மீது அவதூறு பரப்பியதை அறிந்த அய்யா மணியரசன் அவர்கள், “இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவதூறு பரப்புவர்களின் நோக்கம் நம் வேலையை தடுப்பதுதான் என் மீது எங்களுடனேயே இருந்தவர்கள் சொல்லாத அவதூறா? உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள்” என்று திருமுருகன் காந்தி அவர்களிடம் உங்கள் த.தே.பே அலுவலகத்தில் வைத்து அய்யா மணியரசன் அவர்கள் சொன்னார்களே. உங்கள் தலைவரே அதை அவதூறு என்று சொன்னபிறகும் அதை தூக்கிக்கொண்டு இப்போது பேசுகிறீர்களே தோழர் அருணபாரதி. கட்சிக்குள் ஏதேனும் குழப்பமா? இருந்தாலும் சில உண்மைகளை, உங்களுக்கு இல்லையென்றாலும், பொதுமக்களுக்கு சொல்லவேண்டுமென்பதற்காக உமரின் அவதூறு குறித்து ஒன்றே ஒன்றை பார்ப்போம்.
”மே 17 இயக்கம் ப்ரெமன் தீர்ப்பாயத்தில் இந்தியாவிற்கெதிரான ஆதாரத்தை சரியாக வைக்கவில்லை” என்ற பச்சை பொய்யை சொன்னார். அதை பொய்யென்று அந்த தீர்ப்பாயத்தை நடத்தியவர்களே அறிக்கையாக கொடுத்திருந்தார்கள். அதில்,
”இந்தியாவை காப்பாற்றும் நோக்கத்தோடு ஆதாரங்களை மே 17 இயக்கம் முன்வைத்தது என்பதை தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர்கள் என்ற முறையில் நாங்கள், இந்த குற்றச்சாட்டிற்கு எந்த அடிப்படை ஆதாரமும் அற்றவை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறோம். இந்தியா குறித்து விசாரிக்க கூடுதல் நேரத்தை மே 17 இயக்கத்திற்கு கொடுக்க நினைத்தோம். ஆனால் முடியவில்லை. தீர்ப்பாயத்திற்கு பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் இந்தியாவிற்கு ஈழபடுகொலையில் பங்கு இருக்கிறது என்பதை தாங்கள் நம்புவதாகவும், அதை வருங்காலங்களில் மேலும் நிச்சயமாக விசாரித்து முடிவு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் இயங்கும் ஒரு துடிப்பான இயக்கத்தின் பெயரை கெடுப்பதற்கு ப்ரெமன் தீர்ப்பாயத்தின் பெயர் பயன்படுத்துவது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் ப்ரேமன் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்த தோழர்.ஜூட்லால் பெர்னாண்டோ மற்றும் காலஞ்சென்ற புகழ்பெற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர், விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவு இடதுசாரி சிந்தனையாளர் தோழர்.விராஜ் மெண்டிஸ். இந்த அறிக்கை அவர்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டு இன்றும் காணக்கிடைக்கிறது.
இப்படி மிகத்தெளிவாக உமரின் பொய்களை தீர்ப்பாயம் மறுத்தது. இதனை விரிவாகவே மே 17 இயக்க மின்னிதழில் வெளியிட்டிருக்கிறோம். https://may17iyakkam.com/wp-content/uploads/2020/07/May17-iyakka-kural-May-2020-Final-High-Res.pdf. இப்படி பச்சைபொய் பேசும் ஒருவரின் எழுத்தை தூக்கிக்கொண்டு மே 17 இயக்கத்தின் மீது அவதூறு பரப்புவது தான் அய்யா மணியரசன் அவர்களின் தமிழ்தேசிய பேரியக்கத்தின் நிலைப்பாடா? கடந்த காலங்களில் அய்யா மணியரசன் அவர்களின் மீது மறைந்த அய்யா இராஜேந்திர சோழன் எழுதியவற்றை எடுத்து மே 17 இயக்கம் எழுதினால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வாரா தோழர் அருணபாரதி! ஒருநாளும் மே 17 இயக்கம் அப்படி செய்யாது. ஆகவே தோழர் அருணபாரதி பயப்படத் தேவையில்லை. அரசியலுக்கு பதில் அவதூறு இல்லை என்பதை மே 17 இயக்கம் நம்புகிறது.
அடுத்து, முல்லைப்பெரியாறு உரிமைப் போராட்டத்தை திராவிட-பெரியாரிய அமைப்புகள் அல்லாமல் தாமே முன்னின்று நடத்தியதைப் போல த.தே.பேரியக்கம் கருதிக்கொள்வது நகைப்பிற்குரியது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.
த.தே.பே நடத்திய தமிழ்தேசிய போராட்டமாக மலையாள ஜோய் ஆலூக்காஸ் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், முல்லைப் பெரியாறு அணைகாக்க நடத்திய போராட்டத்தையும் சொல்லியிருக்கிறீர்கள். இந்த ஜோய் ஆலூக்காஸ் முற்றுகை போராட்டத்தில் மே 17 இயக்கமும் பங்கெடுக்க அழைக்கப்பட்டு, நாங்கள் வருவதற்குள் நீங்கள் (அருணபாரதி) கைதாகிவிட்டீர்கள். ஆனால் அதே தினத்தில், 2011இல் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கிய மலையாளிகளின் நிறுவனங்களை பெரியார் தி.க தோழர்கள் தாக்கி கைதாகி சிறை சென்றார்கள். காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர்களும் கைதாகினர். இவர்கள் திராவிட-பெரியாரிய இயக்கத்தைச் சார்ந்தவர்களே. தேனி, கம்பம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டு மறியல் போராட்டத்தை ஐயா.வைகோ நடத்தினார். தொடக்கப்புள்ளியாக, தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்தது மதிமுக. இச்சமயத்தில் டேம் 999 என்ற மலையாள திரைப்படம் முல்லைப் பெரியாறு அணை குறித்து மோசமாக சித்தரிப்பதால் அந்த படத்தின் படச்சுருளை வெளியே எடுத்து தடுத்து நிறுத்தினார்கள் தோழர் மல்லை சத்யா தலைமையிலான மதிமுகவினர். இவ்வாறு எண்ணற்ற போராட்டங்களை நடத்தி முல்லைப் பெரியாறு உரிமை காத்திட போராடிய திராவிட-பெரியாரிய இயக்கங்களை மிகமலினமாக பேசும் த.தே.பேரியக்கம் செய்த போராட்டமாக ஜாய் ஆலுக்காஸ் முற்றுகையிட சென்ற போராட்டம் மட்டுமே.
ஆனால், இதே சமயத்தில் மே 17 இயக்கமோ அனைத்து கட்சி, இயக்கங்கள், கலைத்துறை ஆளுமைகள் என சுமார் 10,000 பேர் பங்கேற்ற பேரணியை தடையை மீறி சென்னை தமிழர் கடலாம் மெரினாவில் நடத்தியது. மேலும், அதேபோல முல்லை பெரியாறு அணை குறித்து 1970களிலும் கட்டுரை வெளியிட்டதோடு 2011லிலும் கட்டுரை வெளியிட்டு மலையாள இனவெறியை தூண்டிய ‘மலையாள மனோராமா’ கடை சென்னை புத்தக் கண்காட்சியில் இருக்கக்கூடாது என போராடி வெளியேற்றினோம். இதனால் நீண்டகாலமாக சென்னை புத்தகச் சந்தையில் பங்கேற்காமல் தவிர்த்தார்கள். த.தே.பேரியக்கம் இப்பிரச்சனையை இனவாத பிரச்சனையாக மாற்ற முயன்ற பொழுதில், மே 17 இயக்கம் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதியான இடுக்கியை தமிழ்நாட்டோடு இணைக்கவேண்டுமென்றே மெரினாவில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி போராட்டம் நடத்தியது. மேலும், கேரளாவின் ஆளும்வர்க்கங்களின் நலன்களை அம்பலப்படுத்தியது.
பெரியாரிய தோழர்கள் நடத்திய போராட்டங்கள், மதிமுக நடத்திய போராட்டங்கள் எல்லாம் தமிழ்த்தேசிய கணக்கில் வராது, ஆனால் ஜாய் ஆலுக்காஸ் முற்றுகை போராட்டம் மட்டுமே தமிழ்த்தேசிய கணக்கில் வைத்துக்கொள்ளப்படுமா? தமிழர் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுத்தவர்களை எவ்வாறு வகைப்படுத்த போகிறார் அய்யா மணியரசன்? அல்லது வழக்கம் போல போராட்டத்தைக் கண்டாலே காததூரம் ஓடுகின்ற சீமானை மட்டுமே தமிழ்த்தேசியவாதியாக முடிவு செய்துவிட்டாரா?.
இந்த போராட்டங்களில் த.தே.பே கோரிக்கைக்கும், இங்குள்ள திராவிட-பெரியாரிய இயக்கங்களில் கோரிக்கைகளுக்கும் என்ன வேறுபாடு இருந்தன, அவற்றின் கொள்கைவழி மாறுபாடு என்ன என்பதை த.தே.பே விளக்கவேண்டும்.
மே 17 இயக்கம் கேரளாவிற்கு எதிரான போராட்டத்தில் கேரளாவின் ஆளும்வர்க்கத்தை, தேசிய கட்சிகளை (காங்கிரஸ், சி.பி.எம்) மட்டுமே பிரதான எதிரிகளாக குற்றம்சாட்டியது. மலையாள மக்களை குற்றவாளிகளாக காட்டி, இதை தமிழ், மலையாள மக்களுக்கு இடையேயான தேசிய இன முரண்பாடாக மாற்றிவிடக்கூடாதென தெரிவித்தது.
இதை முல்லைப் பெரியாறு குறித்த 2011 டிசம்பர் 22ம் தேதி நடந்த மே 17 இயக்கத்தின் ஊடக சந்திப்பில் இயக்குனர் பாரதிராஜாவை நோக்கி, “மலையாளியை மருமகளாக கொண்டுள்ள நீங்கள மலையாளியை எதிர்க்கலாமா?” என கேட்டகப்பட்ட கேள்விக்கு இடைமறித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, “இது மலையாள மக்களுக்கும், தமிழர்களுக்குமான போராட்டமல்ல, மலையாள அரசினை நோக்கிய போராட்டம்” என அறிவித்து தெளிவுபடுத்தினார். ஆனால் இந்த பிரச்சனையில் த.தே.பே வேறு ஒரு நிலையையே எடுத்தது. அதாவது மலையாளிகளை எதிரிகளாகவே த.தே.பே வரையறை செய்தது.
இதைப்போலவே கர்நாடக காவிரி போரட்டத்திலும் கர்நாடகத்தின் இனவெறி குழு, கர்நாடகத்தில் அதிகாரத்தில் உள்ள தேசிய கட்சிகள், கர்நாடகத்தில் இயங்கும் பன்னாட்டு நீர் வணிக நிறுவனங்களை நோக்கி மே 17 இயக்கம் குற்றம் சாட்டியது. ஆனால் கர்நாடக இனவெறி, மலையாள இனவெறி அமைப்புகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த மக்களை எதிரிகளாக்கும் நிலைப்பாடுகளையே த.தே.பே அரசியல் நிலைப்பாடுகளாக எடுத்தது. இதனை தான் மே 17 இயக்கம் கேள்வி எழுப்புகிறது.
அருணபாரதி பரப்பும் அவதூறுகளுக்கு முடிவுகட்ட மதிமுகவிடமிருந்து விளக்கம் பெற்றுக்கொடுத்தால் த.தே.பேரியக்கம் மன்னிப்பு கோருமா என்பதை விளக்கினால், பொருத்தமானதாக இருக்கும்.
தொடரும்…
த.தே.பே. பொதுச்செயலாளர் அருணபாரதி அவர்கள் வைத்த அவதூறுகளுக்கு, மே பதினேழு இயக்கத் தோழர் கொண்டல்சாமி அவர்களின் பதிவு 1 இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.