
கறுப்பின வரலாற்று மாதம்: பிப்ரவரி
அது ஒரு அழகிய கிராமம் எங்கு திரும்பினும் அடர்ந்த காடுகளும், ஆறுகளும், வன உயிர்களும் கால்நடைகளும் சூழ செழிப்பாக இருந்த ஒரு கிராமம், இயற்கையோடு இணைந்த அற்புத வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் அம்மக்கள். திடீரென ஒரு நாள் அவர்கள் இதுவரை கண்டிராத வெள்ளை நிறம் கொண்ட மனிதர்கள் அவர்கள் முன்பு தோன்றி அவர்களை அடித்து துன்புறுத்தி, சங்கிலியால் கட்டி, கப்பல்களில் தூக்கிப்போட்டுக் கொண்டு கண்காணாத ஒரு நாட்டில் இறக்கி விடுகிறார்கள்.
செப்பனிட முடியாத அடர்ந்த காடுகளையும், நிலத்தையும் சீர் செய்ய இரவு பகல் பாராமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், அவர்கள் அங்கேயே வாழ்கிறார்கள் இறக்கவும் செய்கிறார்கள். அவர்கள் இறந்தபின் அவர்களின் பிள்ளைகள் அதே வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். இப்படியே பல நூறு ஆண்டுகள் ஓடுகிறது, அப்படி இவர்கள் உழைத்து உருவாக்கிய நாடுதான் இன்று உலக வல்லாதிக்க நாடுகளில் முதல்நாடாக இருக்கும் அமெரிக்கா, அப்படி அடிமைகளாக சொந்த நிலமான ஆப்பிரிக்காவிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்ட மக்கள் தான் இன்றைய ஆப்ரோ அமெரிக்க மக்கள், அதாவது கறுப்பின மக்கள்.
வெள்ளை நிறவெறியால் சொல்லொணா துயரங்களை அனுபவித்த மக்களை இன்றளவும் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்துகிறது அமெரிக்க அரசு. சுருங்கச் சொன்னால் அமெரிக்காவின் தீண்டத்தகாத மக்களாய் கருப்பின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆம், தீண்டத்தகாத மக்களாய் வாழ்ந்து வருகின்றனர்.
வெள்ளையர்களின் எதிரில் நிற்கக் கூடாது, நடக்கக் கூடாது, பார்க்கக் கூடாது, பேசக் கூடாது, வெள்ளையர்கள் வசிக்கும் இடங்களில் கறுப்பர்கள் வசிக்கக் கூடாது, ஒரே பள்ளியில் கல்வி கற்கக் கூடாது, ஒரே பேருந்தில் பயணிக்கக் கூடாது, உயர் பதவிகளில் வேலை செய்யக் கூடாது, கீழான வேலைகள் மட்டுமே செய்ய வேண்டும் என இந்திய தலித்களின் நிலையை ஒட்டியே தான் அமெரிக்க கறுப்பின மக்களின் வாழ்க்கை இருந்தது.
அமெரிக்காவில் அண்ணல் அம்பேத்கர் படித்துக்கொண்டிருந்த போது அவருக்கு ஒரு கறுப்பின நண்பர் இருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் வேலை செய்து வந்தனர். அப்பொழுது அவர்களுடைய உரையாடல்கள் அனைத்தும் வெள்ளையர்களின் நிறவெறி பற்றியே இருந்து வந்திருக்கிறது. மேலும் அண்ணல் அம்பேத்கர் அமெரிக்காவிலிருந்து மேற்படிப்பிற்காக லண்டன் செல்வதற்கு முன் கறுப்பின மக்களின் தேவாலயத்தில் அம்பேத்கர் தன் நாட்டில் தீண்டாமை கொடுமையை அனுபவித்து வருகின்ற தன் மக்களின் இழிவு நிலை நீங்க மேற்படிப்பு படிக்க லண்டன் செல்கிறார், அவருக்காக நாம் பிரார்த்திப்போம் என அவருக்காக பிரார்த்தனை செய்தனர்.

அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் காந்தியை தன்னுடைய ஆதர்ஷ நாயகனாக ஏற்றுக்கொண்டு அகிம்சை வழியில் போராடி வந்தார். மிகப்பெரிய நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்தார், ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார். இதில் ஸ்டாக்லீ கார்மெக்கில் போன்ற தலைவர்கள் எதிர்த்து வந்தாலும் மார்ட்டின் லூதர் கிங்கின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். எனக்கொரு பெருங்கனவு உண்டு (I have a dream) என்று புகழ்பெற்ற பேச்சு கறுப்பின மக்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது.
KKK (Klu Klux Klan) என்ற வெள்ளை நிறவெறி வலதுசாரி பயங்கரவாத இயக்கமும் இன்னும் பல நிறவெறியர்களும் கறுப்பின மக்கள் மீதும், அவர்களின் தலைவர்கள் மீது வன்முறை விதைத்து அவர்களை கொலை செய்தும் வந்தனர். இந்த அமைப்புகளின் நோக்கமானது வெள்ளை ஆதிக்கம், கம்யூனிச, சோசலிச எதிர்ப்பு, தற்பாலின ஈர்ப்பாளர் எதிர்ப்பு என பாசிச சிந்தனைகளை வெள்ளையின மக்கள் மனதில் விதைத்து வருவதே. சுருங்கச் சொன்னால் இந்தியாவின் பயங்கரவாத அமைப்பான RSS போன்ற ஒரு அமைப்பு.
மார்ட்டின் லூதர் கிங்கின் மீது பல முறை கொலை முயற்சி நடந்து வந்துள்ளது. அவருடைய இணையர் கொரெட்டா ஸ்காட் கிங் கிடம் பல முறை நானும் ஒரு நாள் கொல்லப்படலாம் என கூறி வந்துள்ளார். அதை போலவே 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் கொல்லப்பட்டார்.

மார்ட்டின் லூதர் கிங்கிற்கு முன்பாக கொல்லப்பட்ட முக்கிய கறுப்பின ஆளுமை மால்கம் X அவர்கள், பொதுவாக கறுப்பின மக்களுக்கு குடும்ப பெயர்களை அவர்களை அடிமைகளாக வாங்கிய வெள்ளையர்களே சூட்டுவார்கள். அப்படி மால்கமின் குடும்பத்திற்கு அவர்களின் வெள்ளை எஜமானன் வைத்த பெயர் லிட்டில், எந்த ஒரு அடிமைத்தன குறியீடும் தனக்கு இருக்க கூடாது என தன்னுடைய பெயரில் இருந்த லிட்டிலை மாற்றி X என வைத்துக்கொண்டார்.
பெரும்பான்மையான கறுப்பின இளைஞர்களை போல வறுமையின் காரணமாக குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த மால்கம் X ஐ சிறையில் அடைத்தனர், சிறையில் Nation of Islam அமைப்புடன் நெருக்கமாகி சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரானார், இவருடைய வழிக்காட்டலில் தான் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறினார். பின்னர் அந்த அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அதிலிருந்து வெளியேறி Muslim mosque in மற்றும் Pan African Organization of African American Unity (OAAU) என்ற அமைப்பை துவங்கினார், மால்கம் X மார்ட்டின் லூதர் கிங்கின் அகிம்சை வழி போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வந்தார், அடித்தால் திருப்பி அடி என எதிர் தாக்குதலுக்கு கறுப்பின இளைஞர்களிடம் உரையாடினார். இது அமெரிக்க அரசாங்கத்திற்கு புது நெருக்கடியை உண்டு பண்ணியது. 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி Nation of Islam அமைப்பை சேர்ந்தவர்களால் மானஹாட்டனில் OAAU அமைப்பின் கூட்டத்தில் பேச தயாராகும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய உடம்பில் 21 இடத்தில் காயம் ஏற்பட்டது.
அமெரிக்க வெள்ளை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய நெருக்கடியாக இருந்த அமைப்பு Black Panther Party, இந்த அமைப்பு கறுப்பின இளைஞர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது, 1966 ஆம் ஆண்டு ஹீயி பி நியூடன், பாபி சீல், எல்பர்ட் ஹவர்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்ட அமைப்பு, மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட இந்த அமைப்பு, ஒரு தனி இராணுவமாக, தனி அரசாங்கமாக செயல்பட்டு வந்தது, கறுப்பின குழந்தைகளுக்கு இலவச கல்வியும், காலை உணவும், அரசியலும் பயிற்று விட்டு வந்தனர். இந்த அமைப்பின் கிளைகள் அமெரிக்கா முழுவதும் பரவி ஒரு புதிய புரட்சியை உண்டு பண்ணியது. இந்த அமைப்பின் தாக்கத்தால் தான் இந்தியாவில் ‘தலித் பாந்தர்ஸ்’ அமைப்பு உருவானது, இந்த அமைப்பில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் திருமாவளவன் ஆரம்ப காலங்களில் இணைந்து செயல்பட்டார்.
பிளாக் பாந்தர்ஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ப்ரெட் ஹாம்ப்டன், தன்னுடைய பேச்சாற்றலாலும், ஆளுமையாளும், கொண்ட கொள்கையின் மீதும் மார்க்சிய லெனினிய தத்துவத்தின் மீதான நம்பிக்கையாலும் இளம் வயதிலேயே மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவும் மரியாதையும் கிடைத்தது, FBI யின் தலைவர் எட்கர் ஹூவர் இவரை ப்ரெட்டை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்தார்.

ப்ரெட் ஹாம்டன், கறுப்பின மக்களின் விடுதலை மட்டுமல்லாது வெள்ளை ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட அத்தனை மக்களையும் ஒன்று திரட்டி ‘Rainbow Coalition’ என்ற பெயரில் கூட்டமைப்பை உருவாக்கினார். அமெரிக்க வரலாற்றில் இடதுசாரி அரசியலுக்கு புது உத்வேகத்தை அளித்தது, அதுவரை வெள்ளை இனவெறி என்று பேசிய மக்கள் வெள்ளை ஏகாதிபத்தியம் என பேச ஆரம்பித்தினர், இந்த அமைப்பினர் வறுமை, ஊழல், நிறவெறி, உரிமை, காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், உணவு, கல்வி தங்கும் இடம் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகவும் மக்களை திரட்டி போராடி வந்தனர். இது அமெரிக்காவிற்கு கடும் அச்சுறுத்தலை கொடுத்தது. காரணமற்ற காரணங்களுக்காக ப்ரெட் ஹாம்ப்டனை சிறையில் அடைத்தது. 1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று FBI-யால் உளவாளியாக பிளாக் பாந்தர் அமைப்பிற்குள் அனுப்பப்பட்ட ‘வில்லியம் ஓ நீல்’ என்ற நபரால் உணவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. பின்னர் அவருடைய வீட்டிற்குள் நுழைந்த அமெரிக்க காவல்துறை அங்கிருந்த மற்ற தோழர்களை சரமாரியாக சுட்டது, கர்ப்பிணியாக இருந்த ப்ரெட் ஹாம்டனின் காதலி அகுவா நெஜிரியின் கண்முன்னே தூக்கத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் ப்ரெட் ஹாம்ப்டன். அவர் கொல்லப்படும் போது அவருடைய வயது 21.
கறுப்பின மக்களை சமூக விரோதிகளாக, திருடர்களாக, அமெரிக்க திரைப்படங்களில் சித்தரித்து வருகின்றனர், நிஜ வாழ்க்கையிலும் அவர்களுக்கு கல்வி பெறவிடாமல், வறுமையிலும் போதைக்கு அடைக்கும் வேலையை அமெரிக்க அரசாங்கம் செய்து வருகிறது, வியட்நாம் போருக்கு வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட கறுப்பின இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்பிய போது அவர்களுக்கு அதிகப்படியான போதைப்பழக்கம் உண்டானது. அது மெல்ல அவர்கள் வாழ்ந்த இடங்களிலும் பரவலாக்கப்பட்டது. அவர்கள் வசித்து வந்த சேரிகள் (Ghetto) சமூக விரோத செயல்கள் நடக்கும் இடங்களாக அமெரிக்க அரசாங்கத்தாலும், அமெரிக்க உளவுத்துறையாலும் மாற்றப்பட்டது.

இன்றளவும் கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறை அரங்கேறி வருகிறது, 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள மினிப்போலிஸ் நகரில் ‘ஜார்ஜ் பிலாய்ட்’ என்ற நபரை காவலர்கள் கைது செய்த போது அவரை தரையில் தள்ளி கழுத்தில் கால் வைத்து பூட்ஸ் காலால் 9 நமிடங்கள் 9 நொடிகள் நசுக்கி படுகொலை செய்தனர், இது அமெரிக்கா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, உலகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்தது, கிட்டத்தட்ட ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு கொலையில் ஈடுபட்ட காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுவரை அமெரிக்க அரச பயங்கரவாதத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கறுப்பின மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் அமெரிக்க கறுப்பின மக்கள் வெள்ளை நிறவெறியால் இத்தனை துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்களோ, அப்படி தான் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இந்திய பார்ப்பனியமும், ஈழத்தமிழர்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதமும் செய்து வருகிறது.
கறுப்பின மக்கள் முழுமையான விடுதலையை அடைந்தார்களா என்றால் நிச்சயமாக இல்லை, இன்று அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்பும், இந்திய பிரதமராக இருக்கும் மோடியும் வரலாற்று எச்சங்களாக கறுப்பர்களையும், தமிழர்களையும் வஞ்சித்து வருகின்றனர்.

எப்படி அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றில் மார்ட்டின் லூதர் கிங், மால்கம் X, ப்ரெட் ஹாம்ப்டன் போன்ற தலைவர்களை காலம் முழுதும் அவர்கள் போற்றி பின்பற்றுகிறார்களோ, அதைப் போலவே தமிழர்களாகிய நாமும் நமது கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும் தலைவர் பிரபாகரனையும் ஏற்றுப் போராடி இன விடுதலையை அடைவதையே இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.