
‘விஸ்வகுரு’ என்று ஆர்.எஸ்.எஸ்-ஸினால் விளம்பரப்படுத்தப்பட்டு ‘பல்வேறு நாடுகளின் நட்பை பெற்றவர்’ என்ற அடையாளத்தை பெறத் துடித்த மோடியின் பிம்பம் ட்ரம்ப் பதவியேற்பிற்குப் பின்னர் சுக்கு நூறாக உடைந்திருக்கிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதிவியேற்றத்தில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இந்தியர்களின் கைவிலங்கில் மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையும் பின்னப்பட்டிருந்தது தற்போது வெளிப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மூன்று விமானங்களில் 332 இந்தியர்களை கைவிலங்கிட்டு நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் இன்னும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக கடந்த சனவரி மாதத்தில் பொறுப்பேற்றவுடன் தனது தொடக்க உரையில், பனாமா கால்வாயைக் கட்டுப்படுத்துவது, செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடியை நடுவது எனப் பல திட்டங்களை அறிவித்தார் டிரம்ப். இதில் முக்கியமாக “சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி வரும் பிற நாட்டினரை அவர்கள் நாட்டிற்கு அனுப்புவேன்” என்று ட்ரம்ப் கூறியிருந்தது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடையே கலக்கத்தை உருவாக்கியது. இந்தியா மட்டுமல்ல ஏற்கனவே குவாத்தமாலா, பெரு, ஹோண்டுராஸ், ஈக்வடார், கொலம்பியா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்ப திட்டமிட்டிருந்தது அமெரிக்கா.
அதன்படி கடந்த சனவரி 25, 2025 அன்று மெக்ஸிகோ மற்றும் குவாத்தமாலா நாட்டைச் சேர்ந்தவர்களை அமெரிக்காவின் இராணுவ விமானத்தில் அவர்கள் நாட்டிற்கு அனுப்பிவைத்தது. ஆனால் மெக்ஸிகோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் டிரம்ப் அரசாங்கம் மெக்ஸிகோ மீது 25 சதவீத வரியை விதித்தது. இருப்பினும் தங்கள் நாட்டினர் மேல் உண்மையான அக்கறை கொண்ட மெக்சிகோ அரசு தனது நாட்டின் எல்லையில் வந்திறங்கும் ஆயிரக்கணக்கான குடிமக்களை தங்க வைக்க கூடாரங்களை அமைத்திருக்கிறது. அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தது.

மெக்சிகோ மக்களை நாடு கடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி தங்கியுள்ள 7 லட்சம் இந்தியர்களை (இதில் பெரும்பான்மை பஞ்சாப், குஜராத்தை சேர்ந்த வடஇந்தியர் என்று கூறப்படுகிறது) மோடியின் உற்ற நண்பரான ட்ரம்பின் அரசு நாடு கடத்துவதாக கூறியுள்ளது.
ஏன் இத்தனை லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்? இவர்கள் ஆவணமின்றி எவ்வாறு அமெரிக்காவில் நுழைந்தனர்? போன்ற கேள்விகளுக்கு பல கோணங்களில் பதில் கிடைக்கிறது. அனைத்துக் கோணங்களிலும் முதல் பதிலாக இந்தியாவில் பெருகும் வேலைவாய்ப்பின்மையும் பொருளாதார காரணங்களும் இருக்கின்றன. இந்தியாவின் வடமாநிலங்களில் தலைவிரித்தாடும் பொருளாதார சிக்கல்கள் அங்கு சராசரி குடும்பங்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது. தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் வரி பங்கீடை பெற்றுக்கொண்டாலும் வட மாநிலங்களால் அவற்றின் வீழ்ச்சியிலிருந்து வெளியேற முடியவில்லை என்பதே உண்மை. கல்வி, வேலைவாய்ப்பு என வளர்ச்சியின் எந்த கூறுகளும் வெளிப்படாதவாறு அங்கு சனாதன கருத்து மட்டுமே வேரூன்றி வளரும் நிலமாக இந்துத்துவ ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். (விரிவாக வாசிக்க: https://may17kural.com/wp/south-vs-north-book-review/)
இத்தகைய செயல்பாடுகளின் தாக்கத்தால் அமெரிக்காவில் எந்த சிறிய வேலையாவது பெற்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் இத்தனை லட்சம் இந்தியர்கள் அங்கு முறையான ஆவணங்களின்றி நுழைந்திருக்கின்றனர். எப்படியாவது ஒருமுறை அமெரிக்காவுக்குள் நுழைந்து விட்டால் தனது குடும்பத்தின் பொருளாதார கடன்களை அடைத்து விடலாம் என்ற எண்ணத்தினாலேயே ஆவணங்களின்றி அமெரிக்கா செல்வதற்கு வட மாநில மக்கள் தயங்குவதில்லை. எனவே படகுகளில், கண்டைனர் லாரிகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து பிற நாடுகளின் எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சென்றிருக்கின்றனர். ஆவண பரிசோதனையில் சிக்கும்போது பல இந்தியர்கள் அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்டு இந்தியாவிற்கு கடந்த ஆண்டுகளிலும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதிகளவில் கைவிலங்கிட்டு இந்தியர்கள் அனுப்பப்படுவது இதுவே முதல் முறை. அவர்களின் பயண நேரமான 40 மணிநேரம் விலங்கிடப்பட்டே கூட்டிவரப்பட்ட மக்களுக்கு அவர்கள் சாப்பிடும்போது கூட விலங்குகள் கழட்டப்படவில்லை.

ட்ரம்பின் இந்த எதேச்சதிகார நடவடிக்கைக்கு மோடி வாய்மூடி அமைதியாக இருப்பதுதான் இப்போது உலக அரசியலில் அவரின் ‘பொய் பிம்பத்தை’ வெளிப்படுத்துகிறது. அமெரிக்கர்களைத் தவிர்த்த வேற்று நாட்டினரை தரம் தாழ்ந்து பேசிய ட்ரம்ப், தனது தேர்தல் பரப்புரையில் அவர்களை நோக்கி இழிவான, இனவெறி சொற்களை பயன்படுத்தி இருக்கிறார். இப்போது கைதிகளை போல் விலங்கிட்டு அனுப்பி இருக்கிறார். ஆனால் வெளிநாடுவாழ் இந்தியர்களின்/ இந்துக்களின் உலகளாவிய பாதுகாவலர் என்று மார்தட்டிக் கொண்ட மோடி அவர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மெக்சிகோ போன்ற சிறு நாடுகள் செய்த எதிர்ப்பை கூட இந்தியா காட்டவில்லை.
இந்தியா இவ்வாறு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதற்கு பார்ப்பன-பனியா ஆதரவு வர்த்தக நிலைப்பாடுகளே முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பரில், வரி விதிப்பில் புதிய முறைகளை அறிமுகப்படுத்தப்போவதாக டிரம்ப் கூறினார். இந்தியாவின் (இறக்குமதி) வரிகள் அதிகமாக இருப்பதாகவும் அமெரிக்காவும் இந்தியாவிற்கு அதே அளவு (ஏற்றுமதி) வரி விதிக்கப் போகிறோம் என்றும் கூறினார். (அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் விதிக்கும் அதே வரி விகிதங்களை அமெரிக்கா விதிக்கும் இந்த முறைக்கு ‘Reciprocal Tariff’ என்று பெயர். இந்த முறையில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) விதிகளின் கீழ் இனி இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வரி தளர்வுகளைப் பெற இயலாத சூழல் ஏற்படும்.)
இந்த ‘Reciprocal Tariff’ முறையை பிப்ரவரி 13, 2025 அன்று ட்ரம்ப் உறுதி செய்தவுடன் அமெரிக்காவுடனான வர்த்தக நலனை மட்டுமே முதன்மையாக நினைக்கும் பாஜக அரசு அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரியைக் குறைத்தது. குறிப்பாக இந்தாண்டு பட்ஜெட்டில் ஹார்லி-டேவிட்சன் பைக்குகள், சொகுசு கார்கள், மற்றும் அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளை பாஜக அரசாங்கம் குறைத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 14, 2025 அன்று ட்ரம்ப்-மோடி சந்திப்பு நிகழ்ந்த பிறகு, ட்ரம்ப் அரசாங்கத்துடன் இணக்கமாக இருப்பதற்காக அமெரிக்காவுடன் எண்ணெய் வர்த்தகத்தை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுவரை ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவை விட கூடுதல் விலை நிர்ணயிக்கும் அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க திட்டமிடுகிறது இந்தியா. தற்போதைய நிலவரப்படி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை விட அமெரிக்கா 15 டாலர் முதல் 20 டாலர் வரை அதிகமான விலையில் எண்ணையை விற்கிறது. இருப்பினும் அமெரிக்காவின் ‘Reciprocal Tariff’ வரிவிதிப்பைக் குறைப்பதற்காக அந்நாட்டிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறி இருக்கிறார். இவ்வாறு அதிக விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதால் ஏற்படும் பொருளாதார சுமைகள் எளிய மக்களின் தலையில்தான் விழும் என்பதை தெரிந்தும் பாஜக அரசு அதைக் கண்டுகொள்ளாமல் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய்யைப் போன்றே ட்ரம்பின் அழுத்தம் காரணமாக F-35 ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டிருப்பதாகவும் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரஃபேல் விமான ஊழல் வழக்கே தீர்க்கப்படாத நிலையில், எதற்காக இத்தகைய ஒப்பந்தங்கள் முன்மொழியப்படுகின்றன என்ற கேள்வியே மக்கள் மனதில் எழுந்திருக்கின்றது.
இந்த ஒப்பந்தங்களோடு அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கும் மோடி அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. இவ்வாறு அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மக்களை நலனை புறந்தள்ளி இருக்கிறது பாஜக அரசு.

2020ல் டிரம்ப் இந்தியா வந்தபோது ‘நமஸ்ட்டே டிரம்ப்’ என்று புகழ் பாடி, தனது சொந்த மாநிலத்தில் ஏழைகள் வாழும் பகுதியில் தார்பாய் போட்டு மறைத்தவர்தான் இந்த மோடி. “நான் ஆட்சிக்கு வந்தால் இந்திய விசா வாங்க அமெரிக்கர்கள் இந்திய தூதரகத்தில் வரிசையாக நிற்பார்கள்” என்று சொன்னார் மோடி. அமெரிக்காவில் ‘ஹவுடி மோடி’ பேரணி போன்றவற்றை நடத்த பாஜக காட்டிய அக்கறையில் சிறு பங்கு கூட இப்போது கைவிலங்கிடப்பட்ட இந்தியர்கள்மீது மோடி காட்டவில்லை. ஆனால் இதை சித்தரித்து ‘கார்ட்டூன்’ ஓவியம் வெளியிட்ட விகடன் பத்திரிக்கையின் வலைத்தளத்தை முடக்கியது மோடி அரசு.
ட்ரம்ப் இந்தியர்களை நடத்தும் முறை குறித்து மக்கள் கொந்தளித்தாலும் அதை கண்டு கொள்ளாமல், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் “இது நடைமுறையில் உள்ளதுதான்” என்று கூறி இருக்கின்றார். தன் நாட்டின் மக்கள் அவமானப்பட்டு, தண்டிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவதை வழக்கமான நடைமுறைதான் என்று மோடியும் அவரின் அரசாங்கமும் கடந்து செல்கிறது.
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 30 பேர் பலியானபோது டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் மூழ்கியிருந்தார் மோடி. இப்போது கை கால்கள் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்படும்போது கும்பமேளாவில் நீராடுகிறார். இவ்வாறு மூன்றாவது முறையாக இந்திய ஒன்றியத்தின் பிரதமராய் பதவி ஏற்றிருக்கும் மோடியின் செயல்கள் அனைத்தும் ‘நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்’ என்ற திரை வசனத்திற்கு ஏற்ப நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.