
தமிழ்நாட்டில் நேற்று மூன்று செய்திகள் அனைவரின் மனதையும் நெகிழச் செய்தது. தமிழர்கள் கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அறிய வைத்தது. அம்மா இறந்த போதும், ஒரு மாணவன் தேர்வு எழுத கிளம்பிய ஒரு காட்சி, மாற்றுத் திறனாளி மாணவியை தாயும், தந்தையும் அழைத்து வந்த காட்சி மற்றும் மாற்றுத் திறனாளி மாணவன் முதல்முதலாக கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதியது என்கிற மூன்று காட்சிகள், தமிழ் மாணவர்களின் கல்விப் பற்றுதலை வெளிப்படுத்தியது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நேற்றைய தினமான மார்ச் 4, 2025-ல் கண்ட காட்சிகள் இவை.
நீதிக்கட்சி ஆட்சியிலிருந்து இன்று வரை தமிழ்நாட்டில் தொடர்ந்த ஆட்சிகள் கல்வியின் தேவையை மக்களிடையே பதிய வைத்து, பல சலுகைகளை அளித்து பிள்ளைகளை பள்ளிக்கு வரவழைக்க கடும் முயற்சி மேற்கொண்டனர். அதன் பயனாகவே இன்று இந்தியாவிலேயே உயர்கல்விக்கு தமிழக மாணவர்களே அதிகம் செல்லும் கல்வி வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஏழை, எளிய பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் கல்வி பெற்று விட வேண்டும் என்று நினைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு ஆட்சி மட்டத்திலிருந்து எளிய மக்கள் வரை தொடரும் இந்த கல்விக் கட்டமைப்பை இந்திய ஒன்றிய பாஜக அரசின புதிய கல்விக் கொள்கையின் பல வரைவுகள் தகர்க்கும்படியாக இருக்கிறது என்றே தமிழ்நாடு அரசு அதனை ஏற்க மாட்டோம் என்கிறது.
இவ்வாறு புதிய கல்விக் கொள்கையை ஏற்காத காரணத்தால், தமிழ்நாட்டிற்குரிய கல்வித் தொகையான ரூ. 5000 கோடியை விடுவிக்க முடியாது என மோடி அரசு ஆணவத்துடன் கூறியிருக்கிறது. இந்திய மாநிலங்களில் அதிகப்படியான வரியைக் கொடுக்கும் தமிழ்நாட்டிற்கு பரிசளிக்கும் இத்துரோகம், தமிழர்களின் இந்த கல்விக் கட்டமைப்பை தகர்க்கும் வஞ்சக செயல்பாடாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒன்றிய அரசின் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ்(SSA) நிதியுதவி அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கி வருகிறது. இதற்கிடையே, தேசிய கல்விக் கொள்கையின் அம்சமான பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்தில் சேராத தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களுக்கு (கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை) எஸ்எஸ்ஏ நிதியை ஒன்றிய அரசு கடந்த ஆண்டு முதல் நிறுத்திவிட்டது. அந்த வகையில் இந்த திட்டத்தின் படி தமிழ்நாடுக்கு 2023-24 கல்வியாண்டின் 4-ம் தவணை நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டின் நிதி ரூ.2,152 கோடியும், மொத்தம் ரூ. 2401 கோடி ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை. மேலும் பிஎம்ஸ்ரீ தமிழ்நாடு 5000 கோடியை இழக்கும் என இந்திய ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டியிருக்கிறார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் படி நிதியுதவி அளித்து வருகிறது. இத்திட்டம் செயல்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒன்றிய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% என்ற பகிர்வு முறையில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி வழங்காததால் ஆசிரியர் ஊதியம், மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் போன்ற பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய திட்டங்கள் தடைபடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்படைக்கிறார்கள், எனவே ஒன்றிய அரசு நிதி உடனே வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது. இருப்பினும் நிதியை விடுவிக்கவில்லை. தொடர்ச்சியாக வலியுறுத்திய சூழலில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றே ஆக வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவமாக கூறியுள்ளார்.
மும்மொழிக்கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வட மாநில அரசு பள்ளிகளில் ஆங்கிலமும், இந்தியும் கட்டாயப் பாடங்களாக உள்ளன. மூன்றாவது உருது அல்லது சமஸ்கிருதம் மட்டுமே கற்பிக்கப்படுகின்றன. இவற்றில் உருதுவை இசுலாமிய மாணவர்களும், சமஸ்கிருதத்தை இசுலாமியர் அல்லாத மாணவர்களும் பயில்கின்றனர். மூன்றாவது மொழியில் மாணவர்கள் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படுவதில்லை. அதாவது மூன்றாவது மொழித் தேர்வை பெயரளவில் நடத்துவதாகப் புகார் உள்ளது. இதற்கு அந்த அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையே காரணமாக உள்ளது.
மேலும் சமஸ்கிருதம் இந்திக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால், இந்தி மொழி கற்பிக்கும் ஆசிரியரே சமஸ்கிருத பாடத்தையும் நடத்துகிறார். மேலும் உருது மொழி ஆசிரியர்களும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் இல்லை. இதற்காக, உருது பாடம் கற்பிப்பதற்கு அருகிலுள்ள இசுலாம் மதரஸாக்களுக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களில் மூன்றாவது மொழிக்கான ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கப்படாத நிலையில், புதிய கல்விக் கொள்கை 2020-ல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ 22 மொழிகளை மூன்றாவதாக இந்தியா முழுவதும் கற்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என பாஜக அரசு கூறுகிறது.

இந்தியாவில் சுமார் 15 லட்சம் பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. தேசிய மொழிகள் அனைத்துக்கும் ஒரு ஆசிரியர் நியமிப்பதாக இருந்தாலும் கூட கிட்டத்தட்ட மூன்று கோடி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 97 லட்சமாக உள்ளது. மூன்றாவது மொழி கற்பிப்பதற்குரிய நிதி, பயிற்று ஆசிரியர்கள், அதற்குரிய கட்டமைப்புகள் குறித்து எவ்வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை ஒன்றிய அரசு. மும்மொழி என்று வெறும் அறிவிப்புடனும் மாநில அரசின் மீது சுமத்தும் சுமையுடனும் கடந்து விடுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் இல்லை என்பதே தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலமாக தெரியவருகிறது. அதில் எடுக்கப்பட்ட தகவலில் கே.வி பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களே கிடையாது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சைனிக், கே.வி பள்ளிகளில் 53 ஆசிரியர்கள், 100 இந்தி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தமிழ் பேசும் ஆசிரியர்கள் பூஜ்ஜியம் எனவே RTI தகவல் தெரிவிக்கிறது. மும்மொழித் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசின் பள்ளிகளிலே கூட தமிழ் இல்லை எனும் போது, மற்ற மாநிலங்களில் மும்மொழி திட்டம் சரியாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நவம்பர் 2024 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 47% ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 28.4% ஐ விட அதிகமாகும். புதிய கல்விக்கொள்கையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 50% GER இலக்கை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழ்நாடோ கடந்த காலங்களில் கடந்து சென்று வென்று கொண்டிருக்கிறது. தென்னிந்தியா பொதுவாக வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் சுகாதார அணுகல், மருத்துவர்-நோயாளி விகிதம் மற்றும் மருத்துவ வசதிகளின் தரம் ஆகியவற்றில் தொடர்ந்து உயர்ந்த இடத்தில் உள்ளன. இவை பெரும்பாலான வட இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு “சிறந்த சுகாதார கட்டமைப்பாக” உள்ளது. இருமொழிக் கொள்கையின் மூலமே இத்தகைய சிறந்த கல்வி வளர்ச்சி விகிதங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இருமொழி கொள்கைகளை மூலமே தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள். உள்ளூர் முதல் நூற்றுக்கும் மேற்பட்ட உலகநாடுகளுக்கு தங்களுடைய தொழில் மற்றும் வணிகம் சார்ந்து தங்களுடைய அறிவுப் பங்களிப்பை தமிழர்கள் அளித்துள்ளனர். இங்கிருக்கும் அரசு பள்ளியில் தமிழக கல்விக் கொள்கையில் படித்து வந்தவர்கள் தான் இசுரோ தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளாக இருந்து வருகின்றனர். முன்னாள் சனாதிபதி அப்துல் கலாம் முதல் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்,கே. சிவன் அவர்கள், வீரமுத்துவேல் அவர்கள், தற்போது வி.நாரயணன் அவர்கள் வரை அறிவியலை தமிழர்கள் ஆண்டு வருகின்றனர்.
இந்தி படித்தால்தான் முன்னேற முடியும் என்பது குறித்து இதுவரையான புள்ளி விவரங்கள், தரவுகள் என எதுவும் இல்லை. இந்தி மொழியால் அறிவியல் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அல்லது மானுட வளர்ச்சிக்கும் பயன்பட்டது என கல்வியாளர்கள் யாரும் விளக்கம் கொடுத்ததுமில்லை. இந்த புதிய கல்விக்கொள்கையை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுமில்லை.

ஒன்றிய கல்விக் கொள்கை என்பது இந்தி திணிப்பு மட்டுமல்ல, மூன்றாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளை தேர்வுக்கு கட்டாயப்படுத்தும் செயல்முறையும் உள்ளடக்கியது. மேலும் கல்லூரி படிப்புகள் அனைத்திற்கும் நுழைவுத் தேர்வை திணிக்கும் வகையிலானது. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வரக் கூடியது. இவ்வாறு பல பாதகமான வரைவுகள் தேசிய கல்விக் கொள்கையில் இருப்பதால்தான், தமிழ்நாட்டின் கல்வியாளர்கள் முதற்கொண்டு அனைவரும் எதிர்க்கிறார்கள். ஏழைப் பிள்ளைகளை கல்விக் கூடத்தை விட்டு விரட்டும் தன்மைகள் அதில் இருக்கிறது என்னும் தொலைநோக்குப் பார்வையுடன் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது.
தமிழ்நாட்டை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் சிபிஎஸ்சி தேர்வின் வரைவு திட்டத்தில் இருந்து பஞ்சாப் மொழி நீக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாபி மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவத்மான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தில் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐபி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்ற தெலுங்கானா அரசின் இதழில் கூறப்பட்டுள்ளது.
“ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்கு தள்ளி மொழியை அழிப்பது சிறந்த வழி. வெள்ளையர்கள் இதைத் தான் செய்தார்கள்” என சமீபத்தில் குடியரசுத் துணை தலைவரான ஜெகதீப் தன்கர் ஒரு மாநாட்டில் பேசியிருந்தார். வெள்ளையர்களை ஒப்பிட்டு பேசிய இவரின் பேச்சு, மோடி அரசு தமிழ்நாட்டிற்கு செய்யும் மொழி சர்வாதிகாரமும் அதைத் தானே குறிக்கிறது என சமூக வலைதளங்களில் தமிழர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தம் கொண்ட பாஜகவினர் இது போன்ற பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் தலைவரான கோல்வால்கர் சொன்னபடி ’இந்தி இடைக்காலத்திற்கே, சமஸ்கிருதமே இறுதியாக’ என்ற படி, இந்த புதியகல்விக்கொள்கை அமைந்துள்ளது என்பதை தான் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. கல்விக்கு நிதி தர மறுக்கிறது. பட்ஜெட்டில் நிதிகுறைப்பு மற்றும் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிப்பு செய்கின்றனர். ஆளுநர் மூலமாக, மசோதாக்களை நிறுத்தி வைத்தல் போன்ற அத்துமீறல்கள் யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான உயர்மட்ட குழு நடவடிக்கைகள், மேலும் தொடர்ச்சியான திராவிட, தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் பாஜகவினால் நடத்தப்படுகின்றன.
இதன்மூலம் மாநில உரிமைகளை பறித்து தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பார்ப்பதும் உறுதியாகி இருக்கிறது. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானதும் கூட. இந்தித் திணிப்பு, கல்விநிதி மறுப்பு போன்ற செயல்களின் மூலம் தமிழர்களின் அறிவுத் தளத்தையே பிளக்கக் கூடிய சூழ்ச்சியாகும். தமிழர்கள் கொதித்தெழுந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்கு நிர்ப்பந்தித்திருக்கிறார்கள்.
இந்திராகாந்தி ஆட்சியில் காங்கிரசாரால் உருவாக்கப்பட்ட நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி அதிகாரத்தை, இரு அரசுகளுக்கும் அதிகாரம் அளிக்கும் ஒத்திசைவுப் பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இதனால் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நம் கல்வி நம் உரிமை என்கிற நிலை மாறி, இன்று கல்வி சார்ந்த எந்தத் திணிப்பிற்கும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். இதற்கு ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதே ஒரே தீர்வாக அமையும். இதை நோக்கிய களங்களை தமிழர்கள் கட்டியமைக்க வேண்டும்.