சங்ககாலம் – அறிந்ததும் அறியாததும்

“பண்டைப் பெரும்புகழ் உடையோமா, இல்லையா?

பாருக்கு வீரத்தைச் சொன்னோமா, இல்லையா?

முந்தாநாள் விட்ட பிஞ்சுகள் தமிழை முறிக்க எண்ணுதல் மடமையா இல்லையா” –  இயற்கையோடு பிணைந்து வாழ்ந்த சங்ககாலத் தமிழர்களின் வாழ்வும், அதனை வெளிப்படுத்திய சங்கப் புலமைகளின் இலக்கிய திறனும், பாரதிதாசன் உள்ளத்தில் செலுத்திய தாக்கத்தில் விளைந்த வரிகள் இவை. 

உலகுக்கே வீரத்தைச் சொன்னவர்களின் மொழியை அழிக்கத் துடிக்கும் முந்தாநாள் விட்ட பிஞ்சான இந்தித் திணிப்பை இன்றும் எதிர்த்து நிற்பது என்பது தமிழ் மரபின் நீட்சியாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்றாலொழிய கல்வி நிதியை அளிக்க முடியாதெனும் பாஜகவின் திமிரை எதிர்த்து நிற்கும் கோவம் என்பது சங்க காலத் தமிழர்களின் மரபு வழி தொடர்ச்சியாக வருகிறது. .

“யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என உலகத் தத்துவம் பேசிய தமிழர்கள், அதன் தொடர்ச்சியாக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என பொதுவுடைமை பரப்பிய வள்ளுவர் என சங்க கால நூல்களிலிருந்து அறிந்தவையே தமிழர்களின் மேன்மையை பறை சாற்றுபவையாக இருக்கின்றன. ஆனால் நம் கையில் கிடைக்காது அறியாமல் போன இலக்கிய நூல்கள் பலவாகும். தமிழில் நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்திற்கு முன்பாக ஒரு நீண்ட இலக்கிய மரபு இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் இலக்கணம் என்பது இலக்கியம் படைக்கப்பட்டிருந்தால் ஒழிய எழுதப்பட்டிருக்க முடியாது என சங்கத்தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாம் அறிய முற்படாத பலவற்றிலும் ஆரியத்தின் கற்பனைத் திரிபுகள் வந்து அடைத்துக் கொள்ளும் துயரமும் நிகழ்ந்து விட்டது. தொல்காப்பியருக்கு முன்பாக தமிழைப் பரப்ப இமயமலையிலிருந்து வந்தவர் அகத்தியர் என ஆரியம் கதைப் புனைந்து அதனை மெய்யாக்க அனைத்துத் தளங்களிலும் வேலை செய்து கொண்டிருக்கிறது. சங்க கால வரலாற்றிற்கு பிந்தைய காலத்தில் உருவான சித்தர் மரபில் பிறந்திருக்கலாம் என பல சான்றுகளின் மூலம் கருதப்படும் சித்தரான அகத்தியரை, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியருக்கு முன்னவராகக் கட்டமைக்கும் பார்ப்பனியத்தின் புனைவுகளை தவிடு பொடியாக்க, சங்க காலத்தில் தமிழர் வாழ்வை இலக்கியச் சான்றுகளின் மூலமாக முன்வைக்கும் ஆய்வாளர்களின் துணை தேவைப்படுகிறது. இந்த நோக்கத்திற்காகவே மே 17 இயக்கம் கடந்த ஆண்டில் தமிழ் தேசிய பெருவிழா என்று அறிஞர்களின் அவயத்தை நடத்தியது. அதில் சங்க காலம் பற்றி அறிய வேண்டிய பல தலைப்புகளில்  பேசிய அறிஞர்களின் குறிப்புளில் சில துளிகள் :

தமிழர்களின் சங்ககால வாழ்வியலில் காதலும், வீரமும் எவ்வகையிலாக இருந்தது என்பதைக் குறித்து முனைவர். தெ. வெற்றிச்செல்வன் அவர்கள் கூறும் போது, “போர் முடிந்து மீளுகிற தலைவன் பற்றிய காட்சிகள், சங்கப்பாடல்களில் ஆங்காங்கே இடம் பெறும். போர்க்களத்தில் வீரதீரமாகச் சண்டையிட்டு, வெட்டிச் சாய்த்துவிட்டு, இரத்தக் கவிச்சு படிந்த அந்தச் சூழலில் வருகிற ஒரு மனிதன், அடர்ந்த கானகத்தின் வழியாகக் குதிரையை முடுக்கிப் பயணிக்கிறபோது, அங்கே பூக்களில் வண்டுகள் முயங்கி இருக்கிற அந்தச்சூழல் கெட்டுவிடுமோ; வண்டுகளின் முயக்கம் கலைந்துவிடுமோ என்பதற்காக, இடையூறு செய்துவிடக்கூடாதே எனும் அக்கறையில், குதிரைக் கழுத்து மணியின் நாவை இழுத்துக் கட்டிவிட்டு அமைதியாகப் பயணத்தைத் தொடர்ந்தான்” என்கிற குறிப்பைப் பார்க்கிறோம்.  நண்டுகள் ஊர்ந்துவருகிற சாலைகளில் அவற்றுக்கு இடையூறின்றி வண்டிகளை மிகுந்த அவதானத்தோடு இயக்க அறிவுரைக்கும் பாடலையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். தேவையான இடத்தில் போரில் அவன் பொலிகிறான் ஒரு வீரனாக; மனம் நெகிழவேண்டிய இடத்தில் நெகிழ்கிறான் ஒரு மனிதப் பண்புள்ளவனாக என்கிற குறிப்பை, நமக்குச் சங்கத் தமிழர் வாழ்வியல் தருகிறது. “வீரமும் காதலும் கூடி முயங்கிய சமூகமாயிற்றே.” என்று தமிழர்களின் வாழ்வியல் குறித்து  பேசினார்.

இன்று, தமிழர்களின் கல்வி நிதியை பறித்து வைத்துக் கொண்டு தமிழர்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று மக்களவையில் பாஜக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிகவும் கொழுப்புடன் பேசியிருக்கிறார். ஆனால் இரும்பை  உருவாக்கி நாகரிகத்தை முன்னகர்த்தியவர்கள் தமிழர்கள்  என்பதே இன்று உறுதியாகி இருக்கிறது. ‘கீழடி கண்டறியும் வரையில் வெகு மக்களுக்கு புரியும் வகையில் நாம் நம்முடைய தொல்லியல் வரலாற்று தகவல்களை வெளி மக்களிடம் வெளி சொல்வதில்லை’ என்று ஆதங்கப்பட்டுப் பேசிய திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள், தமிழர்களின் தொன்மை வரலாறு பற்றிப் பேசும்போது,

“முதன் முதலில் இரும்பு எஃகை கண்டுபிடித்தவன் தென்னகத்தைச் சார்ந்த தமிழன்தான் என்பது உறுதியாகி இருக்கிறது. இரும்போடு கரிமப்பொருளை (Corbon) சேர்த்து உருவாக்குவதுதான் எஃகு என்ற உலோகம். வேறு எந்த உலோகத்திலும்  கரி என்ற பொருளைச் சேர்த்து உலோகத்தை உருவாக்க முடியாது. ஆனால் அந்த இரும்பில் மட்டும் கரி என்று சொல்லப்படுகிற கரிப் பொருளை (Corbon) சேர்த்து உருவாக்கினால் எஃகு உருவாகும். அதை எப்படி உருவாக்குவது என்று தெரியுமா?  1.5 முதல் 2.5 சதவீதம் மட்டும் தான் இரும்பில் அந்த கரிப்பொருளை சேர்க்க முடியும். அதற்கு மேல் சேர்ப்பீர்கள் என்றால் இரும்பு உடைந்து மண்ணாக போயிவிடும். அந்த ஒரு தொழில் நுட்பம் (Technique) கண்டுபிடிக்கப்பட்ட இடம் மயிலாடும்பாறை, மேட்டூர் பக்கத்திலே உள்ள தெங்களூர் என்கிற இடம். இந்த எஃகு தான் பிற்காலத்தில் கி.மு 3ம் – 4ம்  நூற்றாண்டுகளில் Damascus Steel,  மற்றும் Damascus Sword என்று சிரியாவில் பயன்படுத்திய வாளுக்கு மூலப் பொருளாக இருந்திருக்கிறது. அவர்களே இதனை வரலாற்றுக்  குறிப்பில் பதிவு செய்கிறார்கள். இந்த மூலப்பொருள் கலந்து எஃகு செய்கின்ற முறை என்னும் இந்தப் படைப்பு எங்களுக்கு தென்னிந்தியாவில் இருந்துதான் வந்தது என்கிறார்கள். அவ்வகையில் தென்னிந்தியாவில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது. சிந்து சமவெளியில் செம்பை பயன்படுத்திய போது நாம் இங்கு இரும்பை பயன்படுத்தி இருக்கிறோம். அதன் விளைவாகத்தான் நமது வேளாண்மை மேம்பாடு வந்திருக்கிறது என்று தொல்லியல் ( Archaeology ) மூலம் உறுதி செய்திருக்கிறோம் – என தமிழர்களின் தொன்மை வரலாற்றைப் பற்றி பேசியிருந்தார்.

கடந்த ஆண்டு அறிஞர் அவையத்தில் பேசிய இரு ஆளுமைகளின் உரைகளில் சில குறிப்புகளே இவை. மேலும் பல ஆளுமைகள் 20 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் உரையாற்றி இருந்தார்கள். இந்த ஆண்டும் 5 அமர்வுகளில் அறிஞர்கள் பேசவிருக்கிறார்கள். மார்ச் – 15, 16-ம் நாட்களில் நடக்கவிருக்கும் அறிஞர் அவையத்தின் முதல் அமர்வாக “சங்க காலம் அறிந்ததும் அறியாததும் – ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் வாழ்வும் வரலாறும்” என்கிற தலைப்பில் அறிஞர் பேசவிருக்கிறார்.

தமிழர்களின் வரலாற்றை திரித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனியமும், அதனை நிலைநாட்டத் துடிக்கும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சக்திகளும், அதற்கு துணை புரியும் போலி தமிழ் தேசியவாதக் கும்பலும் நிறுவத் துடிக்கும் புனைவு வரலாற்றிலிருந்து தமிழர் வரலாற்றை மீட்பதற்குரிய முயற்சியாக ‘தமிழ்த் தேசியப் பெருவிழா’ என்னும் நிகழ்வினை மே 17 இயக்கம் நடத்துகிறது. 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் தங்கள் வாழ்வையே ஆய்வுகளில் அர்ப்பணித்த ஆளுமைகளைக் கொண்டு நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

தமிழ்மொழி தழைக்க, தமிழ்நாடு செழிக்க, தமிழர் தலைநிமிர தமிழர்களின் வாழ்வும், வரலாறும் குறித்து அறிய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்வில் தமிழர்கள் கலந்து கொள்ள வாருங்கள் என உரிமையுடனும், அன்புடனும் அழைக்கிறது மே 17 இயக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »