
மார்ச் 15 மற்றும் 16 2025, அன்றைய தேதிகளில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் தமிழ்தேசியப்பெருவிழா பல சிறப்பான நிகழ்வுகளோடு (அறிஞர் அவையம், அருந்திறல் தமிழர், தமிழ்க்கனலி விருது விழா மற்றும் காந்தள் கலைவிழா) நடைபெறவுள்ளது. மார்ச்15, 2025 அன்று நடைபெறும் அறிஞர் அவையம் மூன்று பெரும் தலைப்பின் கீழ் 5 அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது:
1. தமிழர் வாழ்வும், வரலாறும் (முதலாம், இரண்டாம் அமர்வு)
2. தமிழ் மக்கள் பண்பாடு (மூன்றாம் அமர்வு)
3. தமிழர்களும் சமயங்களும். (நான்காம், ஐந்தாம் அமர்வு)
இந்த பெருந்தலைப்புகளின் கீழ் குறிப்பிட்ட தலைப்பில் அறிஞர்கள் உரை நிகழ்த்துகிறார்கள். இது குறித்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் முகநூலில் பதிவு செய்த கருத்துக்கள்:
“வரலாறை எங்கிருந்து தொடங்கலாம்? தமிழர்களின் சங்ககால வரலாற்றிலிருந்து ஆரம்பிக்கலாம். சங்க காலம் முதல் நமக்கென தொடர் வரலாற்று பதிவுகள் உண்டு. சங்கத்திற்கு முற்பட்ட காலகட்டம் குறித்த ஆய்வுகளும் விரிவடையும் காலத்தில் வாழும் பெருமை நமக்குண்டு.
சங்ககாலத்தின் விவசாய உற்பத்தி தொடங்கி, ‘சோழ நாடு சோறுடைத்து..’ எனும் காலம் வரையிலான தமிழர்கள் நதிநீர் பாசனத்தை விரிவு செய்து வளர்ச்சி கண்டதையும், பல்லவர் காலத்தின் குடைவரை கோவில்கள், பின் சோழர் கால கற்களால் கட்டமைந்த கோவில்கள், அழகுணர்ச்சி கொண்ட கட்டிட வளர்ச்சி நிலைகள் என துறை சார்ந்த வளர்ச்சியும், ஏழை-பணக்காரன் என வர்க்கபேதம் இல்லாமல் இருந்த திணை-குடி வாழ்வியல் பின்னாளில் எவ்வாறு வர்க்க நிலையை அடைந்து ஜாதியை உள்வாங்கியது என்பதையும் அறிவுப்பூர்வமாக விவாதித்தால் இன்று தமிழினம் எதிர்கொள்ளும் சவால்களை தீர்க்கும் திறவுகோல்களை நாம் கண்டடையலாம்.
சங்க வாழ்வு அதற்கு அடுத்தடுத்த காலகட்டங்களாக அமைந்த களப்பிரர், பல்லவர், சோழர் என ஆட்சிக்காலங்களில் கண்டடைந்த வளர்ச்சிகள், மாற்றங்கள் என்பவற்றை தொகுத்து பார்த்தால் தமிழ்த்தேசியத்தை நுணுக்கமாக அறிந்து கொள்ளலாம். இக்காலகட்டத்தினை ஆய்ந்தறிந்த அறிஞர் பெருமக்கள் உரை நிகழ்த்தவிருக்கிறார்கள்.
சோழர்கள், பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்பாக நடந்த விஜயநகர அரசுகள் கீழான ஆட்சிக்காலத்திலிருந்து, தொடக்கக் கால காலனியமாக அமைந்த போர்ச்சுக்கீசியர்-டச்சு கம்பெனிகளின் வருகை காலம் என்பது தமிழர்கள் நெருக்கடியையும், மாறுதல்களையும் எதிர்கொண்ட காலகட்டம். கிழக்கிந்திய ஆங்கிலேயருக்கு முன் வந்திறங்கியவர்கள் போர்ச்சுக்கீசிய கம்பெனியார்கள். தூத்துக்குடியில் முத்தெடுப்பது முதல் கிழக்கு-மேற்கு கடற்கரையில் வணிகத்தை கட்டுப்படுத்தியது, தமிழர்களின் தனித்திறமையை தனது கம்பெனி நலனுக்காக பயன்படுத்தியது என விரிவான 150 ஆண்டுகால வரலாறு ஆரம்பகால காலனியத்திற்கு உண்டு. 1858ம் ஆண்டிற்கு பின் இந்திய துணைக்கண்டம் இங்கிலாந்து அரசியின் கீழ் ஆட்சிக்கு வந்த பின்னர், புதுவிதமான நெருக்கடிகள் எழுகின்றன. அதுவரை தனித்தனி நாடுகளாக இருந்தவை ஒற்றை அரசாட்சியின் கீழ் கொண்டுவரப்படுகிறது.

இப்படியாக தமிழர்களின் வரலாற்றில் தாக்கம் ஏற்படுத்திய காலகட்டம் குறித்து இரண்டாம் அமர்வில் விவாதிக்கலாம். அறிஞர் பெருமக்களின் உரைகளோடு இந்த அரங்கம் உங்களின் பங்கேற்பிற்காக திறந்திருக்கிறது.
கல்வெட்டுகளாக, ஓலைச்சுவடிகளாக, செப்புப்பட்டையமாக, ஆவணங்களாக பதியப்பட்ட தமிழரின் நீண்டநெடிய வரலாறை வாட்சப் செய்திகளால், யூட்யூபர்களால் கண்டறிய இயலுமா? அறிஞர்கள் எனும் பெயரில் மேலோட்டமான தகவல்களைப் பேசி, வரலாறை திரிக்கும் போலி தமிழ்த்தேசியவாதிகளை கண்டறிவது எப்படி என்பதே நம் முன் இருக்கும் ஆகப்பெரும் சவால். தமிழர் வரலாறை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை பின்வரும் ஒரு சில வரிகள் நமக்கு உணர்த்தும். வாசித்துப் பாருங்கள். வாசித்தபின் நீங்கள் நேரில் கண்டவற்றோடு பொறுத்திப் பாருங்கள். வரலாறை எப்படி வாசிப்பது என புரியும்.
“…சடங்குகளே வழிபாடாக இருந்த (தொல்சமய) காலத்தில் சடங்கு செய்யும் உரிமை (அதிகாரம்) பெண்களிடமே இருந்தது. இச்சமயத்தில் வழிபடும் தளங்கள் ‘கோட்டங்கள்’ எனப்பட்டன. கோட்டங்கள் எனப்படுபவை வட்டவடிவிலான அமைப்பைக் கொண்டவை. சமூகம் அதிகார மையமாகிய போது, ‘கோட்டங்கள்’ என்பன, ‘கோவில்கள்’ ஆக மாறின.
கோவில் கருவறைகள் வட்டவடிவத்தை கைவிட்டு, நீள்சதுர வடிவத்தைப் பெற்றன. இந்த நீள் சதுர வடிவ கருவறைகள் ‘பெளத்த’ கட்டடக் கலையின் பாதிப்பைப் பெற்றவை. கீழ்தளத்தில் இரட்டை சுவர், உட்பிரகாரம் உடையதாக மாறின. இதை தஞ்சை பெரிய கோவிலில் காணமுடியும். அதாவது பக்தி இயக்கக் காலத்துக் கோவில்கள் ஒரே நேரத்தில் ஆணாதிக்கத்துக்கும், அரசதிகாரத்துக்கும் துணையான அமைப்புகளாக வடிவ மாற்றம் பெற்றன. கோவில் பண்பாடு உருவாக்கத்தில் நடந்த மாற்றம் என்பது, ‘இறைத்திருமேனியை’ (கடவுள் சிலையை) தொட்டு வழிபடும் உரிமையை ‘தீட்டு’ எனும் பார்ப்பனியத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக, பார்ப்பனரல்லாத சாதிகள், பெண்கள் ஆகியோரிடம் இருந்து இறைவன் (சிலையை) தொட்டு வணங்கும் உரிமை பறிக்கப்பட்டது. பார்ப்பனிய அதிகாரத்தின் மேலாண்மை (ஆதிக்கத்தின்) காரணமாக பார்ப்பனரல்லாதோர்-பெண்கள் ஆகிய இருவரும் வஞ்சிக்கப்பட்டார்கள். ஆகவே அரசு அதிகாரம் உருவாகும் பொழுது, அதற்கு தேவையான தத்துவார்த்த பின்புலத்தை வைதீகம் எனும் பார்ப்பனீய கருத்தியல் பண்பாட்டு தளத்தில் உருவாக்கிக் கொடுத்தது..” என்பார் அறிஞர் தொ.ப. (நூல்: சமயங்களின் அரசியல்)
தமிழர்களின் பண்பாடு, அரசு, சமயம் ஆகியவற்றை இணைத்து வாசிக்காமல் தமிழ்த்தேசியத்தின் அடித்தளத்தை புரிந்துகொள்ள இயலாது. இந்தத் தளத்தை கொச்சையாகவும், நிராகரித்தும் முன்வைக்கப்படுகிற அரசியலையே நாங்கள் ‘போலி தமிழ்த்தேசியம்’ என்கிறோம். இன்று தமிழ்த்தேசியர்கள் என அறிவித்து கொண்டு ‘திராவிட எதிர்ப்பு-பெரியாரிய எதிர்ப்பு’ பேசுகிறவர்களின் வன்மத்தையும், தற்குறித்தனத்தையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில் தமிழரின் அரசியல்-சமூக-பண்பாட்டு மானுடவியலை வாசிப்பது மிக அவசியமானது.
மாநாட்டு தலைப்புகளில் சிலவற்றை நீங்கள் வாசிக்க இயலாமல் போயிருக்க வாய்ப்புண்டு அல்லது உரையாற்றுபவர்களை கவனிக்காமல் சென்றிருக்க வாய்ப்புண்டு என்பதால் மூன்றாம் அமர்வின் முக்கியத்துவத்தை பதிவு செய்கிறேன்.

சாதி என்பது குடி என்கிறார்கள் சிலர். சாதி ஆதிக்கம் வேண்டுமென்பவர்கள் இரண்டும் ஒன்று என்கிறார்கள். குடி என்பது வர்க்க வேறுபாடில்லா சமுதாயம், தனியுடமை கொள்ளாத சமூகத்தின் அடையாளமாக பயன்படும் வார்த்தை, ஆனால் சாதி (ஜாதி) என்பது வர்க்க வேறுபாடும், வர்ண வேறுபாடும் கொண்ட ஏற்றத்தாழ்வை அறிவிக்கும் சொல் என்பார் மானுடவியல் அறிஞர் பக்தவத்சலபாரதி.
தமிழர் பண்பாடுகளை உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வியலில் கண்டறியலாம் என்பர் பண்பாட்டு ஆய்வாளர்கள். அரசர்களின் வாழ்வியலில் வரலாறை தேடாமல் சாமானியரை ஆய்வு செய்து தமிழின வேர்களைக் கண்டறியும் அறிஞர்களின் உரைகளை செவிமெடுத்தால் போலி-தமிழ்த்தேசியத்திற்கும், சனாதன சீண்டல்களுக்கும் விடை கிடைக்கும்.
தமிழர்களின் அரசியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு, சமய வரலாறு எனும் பெருந்தலைப்பின் கீழ் அறிஞர் பெருமக்கள் உரையாற்றுகிறார்கள். இந்தத் துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து, புலமை பெற்ற அறிஞர்கள் ‘தமிழ்த்தேசியபெருவிழா’வில் உரையாற்றுகிறார்கள். தமிழர் உரிமை மீதும், தமிழ்த்தேசியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட அனைவருக்குமான நிகழ்வு இது. அவசியம் வாருங்கள்.
சந்திப்போம். சிந்திப்போம்.
*தமிழ் கனலி* செயற்பாட்டாளர் விருதுகள்.

நாம் இன்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் களப்போராட்டங்கள் மூலமாக வெல்லப்பட்டவையே. சனநாயகக் கோரிக்கைகளை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் சென்று, அவர்களைத் திரட்டி, உரிமைகளை வென்று காட்டிய களப்போராட்டங்களே நமது வரலாறு. அவ்வகையில் தமிழினத்தின் நலனுக்காகவும், உயர்வுக்குமான கோரிக்கைகளை கண்டறிந்து ஓய்வொழிச்சல் இல்லாமல் களப்பணியும், அறிவுப்பணியும் அர்ப்பணிப்போடு செய்து வரும் களச் செயற்பாட்டாளர்களால் தமிழ்நாடு இன்றளவும் வலதுசாரிகளால் வெல்லப்பட இயலாமல் நிமிர்ந்து நிற்கிறது. அப்படியான செயற்பாட்டாளர்களையும், அவர்களது போராட்டங்களையும் மக்கள் மன்றத்தில் அடையாளப்படுத்தி கெளரவிக்க ‘தமிழ் கனலி’ விருதுகளை அறிவிக்கிறோம். எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் மக்கள் பணி செய்யும் தோழமைகளை அன்புடன் கொண்டாடி மகிழ்ந்திட வாருங்கள்.
நிகழ்வு நாள் : 16 மார்ச் 2025, ஞாயிறு, மாலை 5:00 மணி முதல்.
சைதை தேரடி (சைதை இரயில் நிலையம் அருகில்) சென்னை.
‘அருந்திறல் தமிழர்‘ விருதுகள்
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

தமிழின உயர்விற்காகவும், உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் வாழ்நாள் முழுதும் போராடிய ஆளுமைகளை கெளரவிக்கும் வகையில் ‘அருந்திறல் தமிழர்’ எனும் விருது மற்றும் மரியாதை செய்யும் நிகழ்வை கடந்த ஆண்டு முதல் மே17 இயக்கம் செய்து வருகிறது. அவ்வகையில் இவ்வாண்டிற்கான விருதுகளை அறிவிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறோம். எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் உழைத்திட்ட பெரியோர்களை நினைவுபடுத்தி பெருமைப்படுத்துவோம்.
தம் வாழ்நாளை எளிய தமிழர்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட இச்சான்றோர்களை நீங்கள் அவசியம் வாழ்த்தி மரியாதை செய்திட அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்வு:
தமிழ்த்தேசியப் பெருவிழா,
16 மார்ச் 2025, மாலை 5 மணி முதல், சைதை தேரடி(சைதை ரயில் நிலையம் அருகில்), சென்னை.
காந்தள் விழா
நம் இளம் தலைமுறை புத்துணர்வுடன் தமிழினத்தைக் கொண்டாடுகிறது. இளம் கலைஞர்கள் உற்சாகத்துடன் முன்னேறுகிறார்கள். எளிமையாக, இனிமையாக, ஆற்றல்வாய்ந்தவர்களாக நம்மை ஆக்கிரமிக்கிறார்கள். பாடல், இசை, கவிதை, உரைவீச்சு என அவர்களது திறமையும், புதுமையும் நம்மை ஆட்கொள்கிறது. இவர்களின் படைப்புகளோடு சான்றோர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு ‘காந்தள்’ எனும் நிகழ்வாக மார்ச்16ம் தேதி மலர்கிறது. மூத்தோர்களுக்கு விருதளிக்கும் நிகழ்வை இளையோர்கள் முன்னெடுக்க, வாழ்த்திட அவசியம் வாருங்களென அழைக்கிறோம்.

காந்தள் மலருக்கு ‘சுடர் பூ’ (Flame Lilly) என ஆங்கிலத்தில் சொல்வர்.
கிழக்கை வெளுக்கும் சுடரொளியாக, இளைஞர்கள் மேடையை நிறைக்க, ‘காந்தள் கலை விழா’ நிகழ இருக்கிறது. இளம் தலைமுறையின் உயர்வுக்காக போராடியவர்களை இளைஞர்கள் தானே கொண்டாட வேண்டும். இளையோர்களின் உற்சாகப் பாடல்களோடு சான்றோர்களுக்கு விருதளிப்போம். நிகழ்வை அரசியல் ஆளுமைகளுடன் கலையுலக ஆளுமைகளும் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். தவறாது வாருங்கள். சான்றோர்களையும், இளையோர்களையும் ஒருசேர போற்றிடுவோம்.
இளம் கலைஞர்களுக்கான மாலைப் பொழுதில், சான்றோர்களை போற்றிடுவோம்.
மார்ச் 15ம் தேதி அரங்கத்தில் தொடங்கிய அறிஞர் மாநாடு, இளையோரின் உற்சாகத்துடன், சான்றோருக்கு விருதளிக்கும் நிகழ்வாக மார்ச் 16ம் தேதி மாலை பொதுவெளியில் நிறைவுறுகிறது.
மகிழ்வுடன் சந்திப்போம், பெருமையுடன் மரியாதை செய்வோம். உற்சாகமாய் முன்னகர்வோம்.
நாம் வெல்வோம்.