கொரொனோ மரணத்திற்குள் தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்!

கொரொனோ மரணத்திற்கு தள்ளப்படும் ஆட்டோமொபைல் ஊழியர்கள்

ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் 2019ல் பெரும் சரிவை சந்தித்துக் கொண்டிருந்த ஆட்டோமொபைல் துறைக்கு 2020ல் ஏற்பட்ட கொரானா முதல் அலையும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பில் இருந்து மீண்டு ஆட்டோமொபைல் துறை  வேகமெடுத்திருந்த சூழ்நிலையில் தற்போது கொரானா இரண்டாம் அலையில் ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள ஊழியர்களின் தொடர் கொரானா தொற்று மரணங்கள் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், ஆட்டோமொபைல் துறை சார்ந்த பெரிய நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிக்கும் 1500க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கிலும் அதன் பின்னர் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கிலும் ஏற்றுமதி மற்றும் “தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகள்” என்ற பிரிவின் கீழ் விலக்கு பெற்று 100 சதவிகித பணியாளர்களுடன் இந்நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வந்தன. கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து இருபத்திநான்கு மணிநேரமும் மூன்று ஷிப்ட்கள் என சில நிறுவனங்கள் இயங்கி வந்த நிலையில் மே மாதம் தொடக்கத்தில் இருந்தே ஊழியர்கள் கொரானா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பது தொடர்கதையானது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் செயல்பட்டு வரும் ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் மே 4 ஆம் தேதி ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மே10-ஆம் தேதி ஒருவரும் மே21-ம் தேதி இரண்டு ஊழியர்களும் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து மே 10ஆம் தேதி ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் தெய்வசிகாமணி என்பவரும் சான்மினா தொழிற்சாலையில் மே12-ல் புருஷோத்தமன் என்ற ஊழியரும் மே15-ல் கார்த்திக் என்ற ஊழியரும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தனர்.

சென்னை இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் ஹூண்டாய் தொழிற்சாலையில் மே 24ஆம் தேதி வரையில் 7 தொழிலாளர்கள் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பலியான நிலையில் அங்கு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் மூன்று நாட்கள் இடைவெளியில் இரண்டு ஊழியர்கள் கொரோனாவிற்கு பலியான நிலையில் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டன. மேலும் அங்குள்ள தொழிற்சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. 6500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் நோய்தொற்று பாதுகாப்பு விதிமுறைகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை மே 17 அன்று விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் தமிழ் நாடு அரசுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் ஹூண்டாய் தொழிலாளர்கள்.

மே 9-ஆம் தேதி இரண்டு ஊழியர்கள் கொரோனாவிற்கு பலியான நிலையில் எம்ஆர்எப் தொழிற்சாலையின் ஊழியர்கள் சிஎம் செல்லுக்கு மனு அனுப்பும் போராட்டத்தை தொடங்கினர். ஃபோர்ட் நிறுவனத்தில் இரண்டு பேர் கொரானா நோய்க்கு பலியான நிலையில் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியதை தொடர்ந்து அந்நிறுவன ஊழியர்கள் மதிய உணவு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.

ஹூண்டாய், சான்மினா, ரெனால்ட் நிசான், எம்ஆர்எப், ஃபோர்ட், லுமாக்ஸ், கப்பாரோ, போரோசில், சேயோன்-இ-வா (Seoyon-e-wha) மற்றும் எஸ்.எச்.ஜி (SHG) ஆட்டோமேட்டிவ் என பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களில் 35க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பலியானதை தொடர்ந்து ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதாலும் ஊழியர்களின் தொடர் போராட்டத்தினாலும் பெரிய நிறுவனங்கள் மே 30 ஆம் தேதி வரை பணி நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காமல் கடுமையான நோய் தொற்று காலத்திலும் தொடர்ந்து மூன்று ஷிப்ட்களும் தொழிற்சாலைகளை இயக்கியதே ஊழியர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் முழு ஊதியத்துடன் கூடிய விடுமுறை, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உயர்தர சிகிச்சை, உயிரிழந்த ஊழியர்களுக்கு இழப்பீடு மற்றும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என பல்வேறு கோரிக்கைகளுடன் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன.

இதுவரை பதினோரு ஊழியர்களை கொரோனாவிற்கு பலிகொடுத்துள்ள ஹூண்டாய் நிறுவனம் 10 லட்சம் ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக அறிவித்துள்ளது அதுபோல் மூன்று ஊழியர்களை  பலி கொடுத்துள்ள எம்ஆர்எப் நிறுவனமும் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையாக அறிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் 5 ஊழியர்கள் பலியான  ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் மே 30 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு அருகிலிருக்கும் ஹிராநந்தினி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கவும், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு “கொரோனா ஹெல்த் கிட்” வழங்கப்படும் எனவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

ஓரிரு நிறுவனங்கள் போராடிவரும் தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் இப்பிரச்சனையில் கள்ள மௌனம் சாதிக்கின்றன. பலியாகும் ஊழியர்களுக்கு தரும் இழப்பீடு பற்றி எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் பல பெரிய நிறுவனங்களும், MSME உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

ஹூண்டாய் நிறுவனத்தில் மே 30ஆம் தேதியன்றும் சீனிவாசன் என்ற  ஊழியர் கொரோனாவிற்கு உயிரிழந்த நிலையில் ஜூன் 1 முதல் நிறுவனம் செயல்பட தொடங்கியுள்ளது. உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்ட ஒரு வாரத்தில் மூன்று நாட்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று இரண்டு ஷிப்ட் முறையில் பணிபுரிய ஊழியர்கள் நோய்த் தொற்று அச்சத்துடன் பணிக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசின் தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் ஜூன் 2ஆம் தேதி ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் கொரானா பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். பெருந்தொற்றால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் நிசான் நிறுவனம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம் வழக்கை ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

இதனிடையே பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தொழிலாளர் நல சட்டங்களை காற்றில் பறக்கவிட்டு 60 சதவிகிதத்திற்கும் அதிகமான தினக்கூலி பணியாளர்களுடன் இயங்குவதாகவும், நிரந்தர ஊழியர்களே பெருந்தொற்று காலத்தில் உரிமைகளை போராடிப் பெற வேண்டியிருக்கும் நிலையில் தினக்கூலி பணியாளர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாகவும் நம்மிடம் தெரிவித்தார் Steel strips wheels pvt ltd நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்.

ரெனால்ட் நிசான் மற்றும் SSW நிறுவன தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தை அணுகியதன் பிறகே தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் வாரத்திலேயே அரசு இந்த நிறுவனங்களை கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் ஊழியர்களின் உயிர்களை காப்பாற்றியதோடு பெருந்தோற்று காலத்தில் தொழிலாளர்களின் நன்மதிப்பை இந்த அரசு பெற்றிருக்கும்.

உயிரிழப்புகள் தொடர்ந்து வரும் நிலையிலும் தொழிற்சாலைகளை தொடர்ந்து இயக்க நிறுவனங்கள் முனைப்பு காட்டும் நிலையில் பணியிடங்களில் ஊழியர்களிடையே 10 மீட்டர் சமூக இடைவெளி சாத்தியமா?  ஃபேஸ் ஷீல்டு போன்ற உபகரணங்களை அணிந்துகொண்டு பணி செய்ய முடியுமா? தனிநபர் போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில் நிறுவன பேருந்துகளில் பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படும் என்ற அச்சம் ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ளது.

பெருந்தொற்று தீயாய் பரவி வரும் சூழ்நிலையில் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் அல்லது ஊழியர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 50 சதவிகித பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க வேண்டும், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை உறுதி செய்ய வேண்டும், தொற்றால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மருத்துவ உதவி நிறுவனத்தின் சார்பாக அளிக்கப்படவேண்டும், பணிக்கு செல்பவர்கள் சமூக இடைவெளியுடன் பயணிக்கும் பொருட்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறதா என்று அரசு ஒரு குழுவை அமைத்து தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும் இவை எதையும் கணக்கில் கொள்ளாமல் பெருந்தொற்று காலத்தில் இந்த நிறுவனங்களை அரசு தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஊழியர்களின் கல்லறைகளாக மாற்றப்பட்டுவிடும்.

Translate »