
எம்புரான் திரைப்படத்தின் முதல் அரை மணி நேரக் காட்சிகள், 2002-ல் குஜராத்தில் இந்துத்துவ சங்பரிவார அமைப்புகளால் நடத்தப்பட்ட இஸ்லாமியர் இனப்படுகொலையின் சிறு பகுதியை கண்முன் நிறுத்துகிறது. மதவெறி ஊட்டும் சித்தாந்தத்தை மண்டையில் ஏற்றியவன் மதத்திற்கு இரைகளாக்க அப்பாவி மக்களைக் குரூரமாகக் கொல்வான். சிறு குழந்தையின் தலையை பாறாங்கல்லில் அடித்தே உடைப்பான். கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை வெளியே எடுத்து சிரிப்பான். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண்களுக்கு நரக வேதனை தருவான். கும்பல் கும்பலாக சிறுபான்மையின ஆண்களை வெட்டி வீசுவான் என்னும் கொடூர சித்திரவரைகளின் வகைகளை உலகிற்கு அறிமுகப்படுத்திய சங்பரிவாரக் கொடூரர்களின் உண்மை முகத்தை விவரிக்கும் காட்சியமைப்பாக அக்காட்சிகள் அமைந்தன.
இப்படத்தில், ஒரு இந்து பெண்மணியின் வீட்டில் அடைக்கலம் புகுந்த 70 இஸ்லாமியர்களை எரித்துக் கொன்ற காட்சி, ஹெசான் ஜாஃப்ரி எனும் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் அடைக்கலம் புகுந்த 70 இஸ்லாமியர்களை ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்புகளாக இருந்த சங்பரிவாரிக் கும்பல்கள் எரித்துக் கொன்ற காட்சியை நினைவூட்டியது. இதை விட குரூரமான சம்பவங்கள் உண்மையில் குசராத் கலவரத்தில் நடந்தேறின என்பதை சங்கிகள் தங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டதை தெகல்கா என்னும் பத்திரிக்கை அம்பலப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மோடி முதல்வராக இருந்த காலத்தில் குஜராத்தில் காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க இந்த கொடூரங்கள் நிகழ்ந்தன.

அடைக்கலம் தேடி வந்தவர்களைக் காட்டிக் கொடுக்கும் முன்னா கதாபாத்திரமும், அனைவரையும் கொல்லும் மதவெறிக் கும்பலின் தலைவனாக வரும் பாபுராச் கதாபாத்திரமும் பின்னாளில் டெல்லியின் பெரிய அரசியல்வாதிகளாக மாறி கேரளாவிற்கு வருவதாகக் காட்டியிருக்கிறார்கள். டெல்லி அரசின் மைய சக்தியாக இருக்கும் பாபுராச், பாபா பஜ்ரங்கியாக வருகிறான். இந்த பஜ்ரங்கி பெயர் கையாளப்பட்டிருப்பது சிறப்பு. இந்த பஜ்ரங்கி தான், தெகல்கா என்னும் பத்திரிக்கை சிறிய வகை காமெராவை மறைத்து வைத்துக் கொண்டு, இந்துத்துவ சக்திகளாக அடையாளப்படுத்திக் கொண்டு பேட்டி எடுத்த போது, இஸ்லாமிய பெண்ணின் வயிற்றிலிருந்து சிசுவை எடுத்துக் கொன்றதைப் பற்றியும், மோடி தனக்காக நீதிபதிகளை மாற்றிக் கொண்டேயிருந்தார் என்பதையும் கூறியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மாநிலக் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க, டெல்லி பாஜக அரசு ஏவல் துறைகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருவாய் துறை போன்றவற்றையும் அம்பலப்படுத்தும் காட்சிகள் கதையின் ஊடாக வந்து செல்கின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்பதற்காக அணையை சுற்றி சுவர் கட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் அம்மாநில முதல்வர் ஊழல் செய்ததாக கட்சியினர் சந்தேசிக்கின்றனர். கட்சித் தலைமைகளிடையே அதிருப்தி வருகிறது. இதனால் மதவெறி அரசியல் கட்சியோடு, கைகோர்த்து அம்மாநிலத்தின் முதல்வரே புதிய கட்சியை ஆரம்பிக்கும் போது, முதல்வரின் சகோதரியான மஞ்சுவாரியார் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பேற்க கட்சியினரால் நிர்ப்பந்திக்கப்படுகிறார். அவர் பொறுப்பேற்கும் வேளையில் உடனே அவர் மீது பண மோசடி வழக்கில் கைது செய்ய அமலாக்கத் துறை வருகிறது. இக்காட்சிகள் பாஜகவினால் பணமோசடி வழக்கினில் பந்தாடப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை நினைவூட்டின. ஊழலிலிருந்து தப்பிக்க மதவெறிக் கட்சியுடன் கூட்டணி சேரும் மாநிலக் கட்சிகளையும் நினைவூட்டின.

மோகன்லால் போன்ற பெரிய திரை நட்சத்திரத்தின் கதாநாயக மிகைப்படுத்தல் கதையமைப்பைக் கொண்ட படமே என்றாலும், அதனை இந்துத்துவ மதவெறி அரசியலை அம்பலப்படுத்தும் வகையில் எடுத்தது சிறப்பானது. கேரளாவில் இந்துத்துவ மதவெறி கொண்ட ஒருவன், ஆளுங்கட்சி முதல்வருடன் சேர்ந்து புதிய கட்சியை துவங்குகிறான் என்றதும், அங்குள்ள இடதுசாரி அரசியல்வாதிகளிடமும், மாநில ஊடகங்களிலும் ஏற்படும் பதட்டங்களை நேர்த்தியாக காட்டியிருக்கிறார்கள். கடவுளின் தேசத்தைக் காவு கொடுக்க மதவெறியன் வருகிறான் என்பதைக் கேள்விப்பட்டதும் கேரளத்தைக் காக்க வேண்டும் என்கிற துடிப்பு ஒவ்வொருவர் கண்ணிலும் பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகள் உள்வாங்கி எடுக்கப்பட்டிருக்கின்றன. சிறிய மாநிலமான கேரளத்தின் இயற்கை வளங்களையும், கடற்கரை செழிப்பையும் கைக்கொள்ளும் நோக்கத்தை சுமந்தே மதவெறியன் வருகிறான் என்பதையும் தெளிவாக்கி விடுகிறார்கள்.
ஒரு மதவெறி அரசியல்வாதி மாநிலக் கட்சிகள் இருக்கும் இடத்தில் கால் பதிப்பது அம்மாநிலத்தை சிதைப்பதற்கே என்னும் நடைமுறை அரசியலை உணர்ந்து, அவன் வருகையைக் கண்டு பயம் கொள்வது என்பது இயல்பான ஒன்று தானென்றாலும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்தால், அந்த அணை உடைந்து விடும் என்கிற அதீதக் கற்பனையுடன் வடிவமைத்திருக்கும் காட்சிகள் துளியும் ஏற்புடையதல்ல. உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுக்கள் சோதனையிட்டும், அணையில் ஏற்பட்ட பிரச்சனைகளை அவ்வப்போது சரி செய்தும், அணை வலுவாக இருக்கிறது என்று ஆய்வுகளை சமர்ப்பித்தப் பின்பும், பெருங்கற்பனைக் கட்டமைப்பினை மக்கள் மனதில் நிறுவ நினைப்பது இரு மாநிலங்களிடையே நிலவும் உறவுகளின் சிதைப்பிற்கே பயன்படும். இவ்வகையிலான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை.
மதவெறி அரசியலும், மாநில கட்சி மிரட்டலும் என பாஜக அரசு தொடச்சியாக நடத்தி வரும் அரசியல் அடாவடிகள் காட்சிகளாக்கப்பட்டிருப்பதை வரவேற்கலாம். முல்லைப் பெரியாறு அணை குறித்த சித்தரிப்பு வசனங்கள் கண்டிக்கத் தகுந்தவை. மற்றபடி, சர்வதேச ஆயுத மோதல் குழுக்கள் போதை மருந்து கடத்தல்கள் என கதாநாயக சாகச வடிவமைப்புகளுடன் கதை நகர்கிறது.

மதவெறி அரசியலை அம்பலப்படுத்தும் ஒரு படம் வெளிவந்த உடனேயே இப்படத்தின் இயக்குனரும், நடிகருமான பிருத்விராச் இல்லத்திற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு படையெடுத்து விட்டார்கள். மேலும் இப்படத்தை தயாரித்த கோகுலம் சிட் பண்ட் நிறுவனத்திற்கும் சோதனைக்கு வந்து விட்டார்கள். மேலும் மோகன்லால் மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். படம் வெளிவந்து பிறகும் 14 காட்சிகளில் வசனங்கள் தணிக்கை செய்யப்பட்டது. இவ்வளவு நெருக்கடிகளை தங்களை அம்பலப்படுத்திய ஒரு படத்திற்கே கொடுத்த ஆர்.எஸ்.எஸ். பாஜகவினர் தான், பான் இந்தியா திரைப்படங்களாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படங்களை இயக்க ஊக்கமளிக்கிறார்கள்.
காஷ்மீர் பைல்ஸ், கேரளா ஸ்டோரிஸ், தி சபர்மதி ரிப்போர்ட், சவான் போன்று மிகைப்படுத்தப்பட்ட பொய்களை இசுலாமியர்களுக்கு எதிரான படைப்புகளாக இந்தி திரையுலகம் வெளியிட்டுக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், கேரள திரையுலகில் இருந்து உண்மையின் சிறு பகுதியாவது படத்தில் இடம் பெற்றிருப்பது பாராட்டப்படக் கூடியது.
இந்தி திரைத் துறையினர் ‘கேரளா ஸ்டோரிஸ்’ என்கிற படமெடுத்து கேரள இந்துப் பெண்கள் 40 ஆயிரம் பேரை லவ் ஜிகாத் என்கிற பெயரில் மதம் மாற்றி தீவிரவாத குழுக்களில் இணைக்கிறார்கள் என்கிற அண்டப்புளுகை கட்டியமைத்தார்கள். அதனை உண்மை வரலாறு என மோடியும் விளம்பரம் செய்தார். பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியிருக்கும் படம் எனப் பாராட்டு மழை பொழிந்தார். இப்படத்தினை எதிர்த்து கேரள அரசு வழக்கு தொடர்ந்ததும்தான் இது உண்மைக் கதை என்று போடப்பட்டிருந்த இடத்தில், கற்பனைக் கதை என படக்குழுவினர் மாற்றினார்கள். இவ்வாறு மாற்றிய பிறகு, மக்களுக்கு தவறான செய்தியை பரப்பிய மோடி நியாயவானாக இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டு விட்டு, உண்மையான தகவலை சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ஆர்.எஸ்.எஸ் பயிற்சிப் பட்டறையில் பயின்று வந்தவர்களுக்கு போலியும், புனைவும் மட்டுமே வாக்கரசியலின் ஒரே வழி எனும் பாடத்தைப் பயின்றவர் என்பதை இந்த தவறான கட்டமைப்பை மௌனமாகக் கடந்து நிரூபித்தார்.

குஜராத்தின் குல்பர்க் என்னும் குடியிருப்பில் கிட்டத்தட்ட 1000 சங்பரிவார வெறியர்கள் கையில் ஆயுதங்களுடன் இஸ்லாமியர்களைத் தாக்க வந்த போது, அடைக்கலம் கொடுத்த ஹெசான் ஜாப்ஃரியையும் சேர்த்து 70 பேரை எரித்துக் கொன்றதற்கு நியாயம் தேடி, அவரின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி 23 வருடங்களாகப் போராடி, இறுதியில் நீதி கிடைக்காமல் இந்த வருடம் பிப்ரவரி 1, 2025-ல் இறந்தார். ஆனால் கலவரத்திற்கு காரணமானவர்கள் உச்ச பதவிகளை அலங்கரிக்கிறார்கள்.
இந்நிலையில் இனப்படுகொலைக்கு ஆளான அந்த மக்களுக்கான நியாயத்தை வெகு மக்களிடத்தில் கோரி நிற்கும் ஒன்றாக கேரளத் திரையுலகம் இப்படத்தை வெளியிட்டு இருப்பது வரவேற்புக்குரியது. தமிழ்நாடு அரசு மும்மொழித் திணிப்பு, நீட் எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என்று பாஜக அரசை எதிர்த்தாலும், குஜராத் கலவரத்தை வெளிப்படுத்திய பிபிசி-யின் ஆவணப்படத்தை வெளியிட முனைப்பு காட்டவில்லை. வெகு மக்களை சென்று சேரும் திரைப் படைப்புகளை திராவிட இயக்கங்கள், ஆரம்ப காலகட்டத்தில் பயன்படுத்திக் கொண்டு மக்களை சமத்துவமாக்கும் கருத்தியல் கட்டமைப்புகளை செய்தது. ஆனால், திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லும் திராவிட முன்னேற்றக் கழகம், இந்துத்துவ பாஜக சித்தாந்தவாதிகளும், கேரள இடதுசாரி கருத்தியல்வாதிகளும் திரையுலகை கையாளும் அளவிற்கு தமிழ் திரையுலகை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்கிறதா என்பது சந்தேகமாகவே நீடிக்கிறது.
இந்துத்துவ மதவெறி அரசியல் செய்த கொடூரங்களை விவரிக்கும் வகையிலான எம்புரான் படத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்கும், அதே வேளையில் தமிழர்களுக்கு எதிராக, முல்லைப் பெரியாது அணை குறித்த உண்மைக்கு மாறான சித்தரிப்புகளுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்க வேண்டும்.