தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் நீதிக்கான போராட்டத்தில் மே 17 இயக்கம்

தஞ்சையில் தனது சகோதரனை விடுவிக்க கோரி இரண்டு சகோதரிகள் விஷம் அருந்திய நிலையில் ஒருவர் இறந்தார், இன்னொரு சகோதரியை மருத்துவ சிகிச்சை நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள ஊர்மக்கள் தொடர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி மற்றும் தோழமை அமைப்புகளுடன் நேரில் சந்தித்தார். அம்மக்களின் கோரிக்கைகளையும், நடந்த நிகழ்வுகளின் விவரங்களையும் தனது சமூக வலைதளங்களில் ஏப்ரல் 16, 2025 அன்று பதிவு செய்தவை.

13.4.2025ம் தேதி தஞ்சை மாவட்டம் நடுக்காவிரிக்கு சென்றிருந்தோம்.

இவ்வூரில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற தங்களின் சகோதரனை விடுவிக்க கோரி இரண்டு சகோதரிகள் விஷம் அருந்தினர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனைத் தொடர்ந்து ஊர்மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகளையும், நடந்த நிகழ்வுகளின் விவரங்களையும் அறிந்தோம்.

நடுக்காவிரியில் வசித்துவரும், தினேஷ் எனும் இளைஞரை விசாரணைக்காக காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர். இச்சமயத்தில் அவரது தாய்மாமா இறந்த செய்தியறிந்து, அவருக்கு இறுதிக்கடன்களை செய்ய, தன் சகோதரனை விடுவிக்க கோரியுள்ளனர் சகோதரிகள். தினேஷ் தரப்பும், எதிர்தரப்பும் என அவ்வூரில் நடந்த சச்சரவிற்காக வழக்கினை பதிந்தது தொடர்பாக அழைக்கப்பட்டிருந்தார். வீட்டில் இறப்பு நிகழ்ந்ததையடுத்து வழக்கினை திரும்பப்பெற்று மேலதிக விசாரணை வேண்டாம் என இரு தரப்பும் சமாதானம் எட்டியதால் வழக்கை முடித்துக்கொள்ள கேட்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் தினேசை விடுவிக்க கேட்டனர் சகோதரிகள்.

மேலும், அச்சகோதரியில் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் நிகழ்வும் ஓரிரு நாளில் நடப்பதாக இருந்ததால், தினேஷை விசாரணை முடித்து அனுப்புமாறு கேட்டதற்கு காவல்துறை மறுத்துள்ளது. அவரை விடுவிக்கவில்லையெனில் மீண்டும் தனது திருமண ஏற்பாடு நின்றுபோகுமென கூறி அச்சகோதரிகள் கேட்டுள்ளனர். ஏற்கனவே பலமுறை திருமண ஏற்பாடுகள் தள்ளிபோனது என்பதால் அவர்கள் மன உளைச்சலில் இருந்துள்ளனர். காவல்நிலைத்தின் ஆய்வாளர் மறுக்கவே சகோதரிகள் தமது எதிர்ப்பை பதிவு செய்ய காவல்நிலைய வாயிலில் விசமருந்தியிருக்கிறார்கள். தம்மை மிரட்டவே இவ்வாறு செய்கிறார்கள் என காவல்துறை அலட்சியமாக இருந்துள்ளதால், மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்லாமல் தாமதமப்படுத்தியதில் ஒரு சகோதரி கீர்த்தி இறந்து போயிருக்கிறார். அவர் குரூப் இரண்டு(Group2) பரிட்சையில் தேர்வாகி அடுத்தகட்ட தேர்வுக்கு தயாரான நிலையில் அவரது மரணம் நடந்துள்ளது. மற்றொரு சகோதரிக்கு ஓரிரு நாளில் திருமணம் நிச்சயம் செய்யப்பட இருந்தது.

சாமானிய மக்களை சாதியமாகவும், மனிதத்தன்மையற்றவகையில், அடக்குமுறை உணர்வுடனும், மனிதத்தன்மையற்ற வகையில் நடந்து கொண்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை கோரி நடுக்காவிரி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அம்மக்களை சந்தித்து எங்களது ஆதரவை மே17 இயக்கம் சார்பாகவும், விடுதலை தமிழ்ப்புலிகள் சார்பாக தோழர் குடந்தை அரசனும் பதிவு செய்தோம். தமிழர் ஆட்சி கழகத்தின் தோழர் எஸ்.ஆர். பாண்டியன் அவர்கள் தமது தோழர்களை தொடர்புகொள்ள செய்தார். அவரும் தோழர் கே.எம்.செரீபும் நேரடியாக 12ம் தேதி சென்று மக்களை சந்தித்து விவரங்களை தெரியப்படுத்தினர். பல சனநாயக அமைப்பு தோழர்கள் போராடும் மக்களுடன் பங்கெடுத்திருந்தனர்.

நடுக்காவிரியில் போராடும் மக்களை சந்தித்த பின்னர் தஞ்சை மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சையிலிருந்த அவரது மற்றொரு சகோதரியை சந்தித்தோம். தன்னுடைய சகோதரி இறந்துபோன செய்தி அறியாத வண்ணம் மருத்துவர்கள் அவரை சிகிச்சையளித்து பாதுகாக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவிலிருந்து பொதுப்பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் நடந்த விடயங்களை தெரிவித்தார். தொடர்ச்சியாக தம் வீட்டிற்கு காவலர்கள் தொந்தரவு செய்த விடயங்களை பதிவு செய்தார். ‘..நடுஇரவில் பெண்கள் இருக்கும் வீட்டிற்கு வந்து எதற்காக தொந்தரவு செய்ய வேண்டுமென்றார்?. விசாரணைக்கு எனில் பகலில் அழைக்கலாம்தானே, எதற்கு எங்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்ய வேண்டுமென்றார்’. கைதான தினேஷ் தனது பட்டியல் சமூக மக்களுக்காக குரல்கொடுக்கிறார் எனவும், கள்ளச்சாராயம் தொடர்பாக புகார் அளிக்கிறார் என்பதால் நெருக்கடிக்குள்ளாவதாக சகோதரி தெரிவித்தார். காவல்துறை தம் குடும்பத்தினை இதன் காரணமாக தொந்தரவு செய்வது குறித்து கடந்த ஆண்டு தஞ்சை மாவட்ட துணை கண்காணிப்பாளர் DSP அவர்களை சந்தித்து சகோதரிகள் நேரடியாக புகார் அளித்திருக்கிறார்.

சாதிய ரீதியான வகையில் இக்குடும்பத்தை தொந்தரவு செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தினேஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

போராடும் மக்களின் கோரிக்கை மிக நியாயமானது. காவல்துறை அதிகாரிகள் மீது குறைந்தபட்ச நடவடிக்கைக்கூட எடுக்கப்படவில்லை. சாமானிய மக்களை கையாளும் எவ்வித தகுதியுமின்றி காவல்துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். சாதியம் புரையோடிய நிறுவனமாக மாறுவதை இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. இந்த நிகழ்வின் மீதான முறையான, வெளிப்படையான விசாரணை தேவை. அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாதிய வன்மத்தோடு இந்த துயரம் நிகழ்த்தப்பட்டுள்ளதை விசாரித்து வழக்கு பதிவு செய்து காவலர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

போராடுகிற இம்மக்களின் கோரிக்கையை கேட்க இதுவரை இப்பகுதியின் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற பிரதிநிதிகள் வரவில்லை. 2026ல் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக-அதிமுக கட்சிகள் இதுபோன்ற நெருக்கடிகளில் அக்கரை செலுத்துவதில்லை. வாக்கு கேட்க வரும் பிரதான ஆளும்வர்க்க கட்சிகள் சாதிய அரசியலுக்கு துணையாக நிற்கும் அவலத்தை தொடர்ந்து கண்டு வருகிறோம்.

இம்மக்களின் நியாயமான கோரிக்கையையும், குற்றம் செய்த காவலர்கள் மீதான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் வரை மக்கள் போராட்டத்திற்கு மே17 இயக்கம் ஆதரவளிக்கும். தமிழ்நாட்டில் ஏதேனும் ஒருமூலையில் பாதிக்கப்படும் மக்களை மே17 இயக்கம் நேரில் சென்று சந்திக்கவும், போராடவும் செய்கிறது. எமது இயக்கம் எளிய மக்களோடு என்றும் துணை நிற்கும். அவசியமெனில் நடுக்காவிரி வன்முறைக்கு நீதிகேட்கும் போராட்டத்தினை மே17 இயக்கம் முன்னெடுக்கும்.

சமுக செயற்பாட்டாளர்கள், சனநாயக ஆற்றல்கள், தோழமை அமைப்புகள் நேரில் சென்று இம்மக்களையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் அவசியம் சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்.

இந்நிகழ்வு குறித்து ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தோம். ஓரிரு ஊடகம் அப்பகுதி செய்தியாக வெளியிட்டிருக்கலாம். தமிழகம் தழுவிய செய்தியாக இதுபோன்ற நிகழ்வுகள், போராட்டங்கள் மாறுவதில்லை. போராட்டங்கள், போராடும் அமைப்புகள், போராட்ட களங்கள் செய்திகளாக்கப்படாமல் கவனமாக தவிர்க்கப்படுகின்றன. அதேநேரம் அண்ணாமலை, சீமான், திமுக-அதிமுக, நடிகர்கள், பிரபலங்கள் தும்மினால் கூட அவை செய்திகளாக்கப்படுகின்றன. இச்சூழலிலேயே நாம் மக்களின் கோரிக்கையை முன்னுக்கு நகர்த்த முயற்சிக்கிறோம். இச்செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்லும் பொறுப்பினை உங்கள் பொறுப்பில் விடுகிறோம்.

நடுக்காவிரி நிகழ்வுக்கு உரிய நீதி, காவலர் பணி நீக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு ஆகியன உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

மே17 இயக்கம்.

https://www.facebook.com/share/p/18v3BRRg2n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »