
தொழிலாளர்களின் உரிமை மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் உழைக்கும் வர்க்கத்தினருக்கானது மட்டுமல்ல. ஒரு நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதன் மூலம் அனைத்து வர்க்கத்தினரையும் உயர்த்துபவை தொழிற்சங்கங்கள் தான். இன்று வளர்ந்த நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொழிலாளர்க்காக தனி சட்டங்கள் இயற்றப்படுவதற்கு காரணமாக அமைந்தவை தொழிற்சங்கங்களே. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 14-16 மணி நேரம் உழைத்த தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர உழைப்போடு நியாயமான ஊதியமும் தொழிற்சங்கங்கள் அங்கு ஆற்றிய பங்கின் காரணமாகவே கிடைத்தது.
அமெரிக்கா, இங்கிலாந்து போல பிற வளரும் நாடுகளிலும் தொழிற்சங்கங்கள் முயற்சியால் தொழிலாளர்களுக்கான தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்கள் இந்திய துணைக் கண்டத்தை காலனித்துவப்படுத்தத் தொடங்கிய பிறகு, இங்கிலாந்தைப் போலவே இந்தியாவில் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் அமைக்கத் தொடங்கினர். இந்தியாவில் மலிந்திருந்த மனித வளமும் இயற்கை வளமும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான கூறுகளாக இருந்தன. ஆனால் அன்றைய இங்கிலாந்தைப் போலவே இந்தியாவிலும் தொழிலாளர் நிலைமை மோசமாக இருந்தது. மும்பையில் பஞ்சு தொழிற்சாலைகளும் கல்கத்தாவில் சணல் தொழிற்சாலைகளும் பெருகிய 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து இந்தியாவின் தொழிற்சங்க வரலாறு தொடங்குகின்றது.
மும்பை மற்றும் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட முதல் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து சென்னை மாகாணம் போன்ற பிற மாகாணங்களில் தொழிற்சாலைகள் வளர ஆரம்பித்தன. தொழிற்சாலைகள் எண்ணிக்கையின் வளர்ச்சிக்கேற்ப முதலாளிகளின் சுரண்டலும் அதிகரிக்கத் தொடங்கின. அதிக வேலை நேரம், குறைவான கூலி எனப் பல ஒடுக்குமுறைகள் சேர்ந்து தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராட வைத்தன. (1877 ஆம் ஆண்டில் கூலி குறைக்கப்பட்டதால் நாக்பூர் எம்ப்ரஸ் மில் தொழிலாளர்கள் முன்னெடுத்த முதல் போராட்டம் இத்தகைய வகையானதே.)

1884இல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘ஃபேக்டரி கமிஷன்’ (Factory commission) தொழிலாளர் நலனுக்கு ஏற்றதாக அமையவில்லை. அப்போதைய காலகட்டத்தில் சிறு சிறு குழுக்களாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த சிறு போராட்டங்கள் சுரேந்திர பானர்ஜி அவர்களின் கைதிற்குப் பிறகு முழுமையான போராட்டங்களாக மாறின. 1883இல் வங்கத்தில் இந்திய தேசியவாத தலைவரான சுரேந்திர பானர்ஜி தொழிலாளர்களுக்கான அரசியல் உரிமை பேசியதற்காக ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக சுரேந்திர பானர்ஜியுடன் தொடர்புடைய ஆலை தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் எழுச்சிமிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். எந்த விட திட்டமிடலும் இன்றி ஒருங்கிணைக்கப்பட்ட அந்த போராட்டம் இந்திய வரலாற்றில் அப்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
மீண்டும் 1883-84 காலகட்டங்களில் ‘ஃபேக்டரி ஆக்ட்’ (Factory act) கொண்டுவரப்பட்டது. ஆனால் அதுவும் தொழிலாளர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. 1897இல் கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட தொழிலாளர் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக சென்னையிலும் ஒரு சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த காலகட்டத்தில் மத்திய ரயில்வே ஊழியர்கள் ‘தொழிலாளர் சங்கம்’ (Labour society) ஒன்றை உருவாக்கினர். இந்த சங்கத்தின் மூலமாக அவர்கள் ஒவ்வொரு ஊராகச் சென்று தொழிலாளர்களிடம் பேசினர்.
1897க்கு பிறகு மத்திய ரயில்வே ஊழியர்கள் அரசுக்கு எதிராக நடத்திய போராட்டம் குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைக்கப்பட்ட அரசு ஊழியர்களால் ஏற்பட்ட ஒரு போராட்டமாக அது அன்று மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. 1907 மே முதல் வாரத்தில், பஞ்சாபில் பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். அப்போது ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவில் இருந்த ராவல்பின்டியில் அரசு ஊழியர்களும் இளைஞர்களும் சேர்ந்து அந்த பத்திரிகையாளருக்கு ஆதரவாக ஒரு பெரிய போராட்டத்தை நடத்தினர். பத்திரிக்கையாளருக்கு ஆங்கிலேய அரசால் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கிட்டத்தட்ட 8,000 பேர் வரை அந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் அரசு ஒடுக்குமுறையின் காரணமாக பாதிக்கும் மேற்பட்டோர் இறந்ததாக அன்று கருதப்பட்டது.

இவ்வாறு இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் தொழிற்சங்கங்கள் வருகைக்கு முன்பு தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றன. முதல் உலகப் போர் வெடித்தவுடன், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் தங்கள் அடக்குமுறை ஆட்சியை தீவிரப்படுத்தினர். முதலாம் உலகப் போருக்குப் பிறகு உலகெங்கிலும் முதலாளிகள் தொழிலாளர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்தியாவிலும் இந்த நிலை எதிரொலிக்கத் தொடங்கியது. இந்தியாவில் தொழிற்சங்கங்கள் உருவாகத் தொடங்கின.
அதிக வேலை நேரத்தைக் குறைக்கவும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தவும் இந்த தொழிற்சங்கங்களின் மூலமாகவே தொழிலாளர்கள் போராடத் தொடங்கினர்.1921ஆம் ஆண்டில், பின்னி மில்ஸ் தொழிலாளர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தம் 6 மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது. பின்னி மில்ஸ் வேலை நிறுத்தம்தான் இந்தியாவில் முதன்முதலாக நிறுவப்பட்ட ‘மெட்ராஸ் தொழிலாளர் சங்கம்’ (Madras Labour Union) எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. 1921-24க்கு இடையில், பின்னி மில்ஸ் தொழிலாளர்களிடையே நடந்த பல போராட்டங்கள் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்தது. சென்னை மாகாணத்தின் ஆளுநரின் கீழ் இருந்த உள்துறை அமைச்சகம், கடுமையான நடவடிக்கைகள் மூலம் இந்த வேலைநிறுத்தத்தை அடக்க முடிவு செய்தது. 1921 ஆகஸ்ட் 29 அன்று தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

அதோடு பின்னி மில்ஸ் நிர்வாகம் தொழிற்சங்கத்தின் மீது வழக்கும் தொடர்ந்தது. ஆனால், வழக்கில் தொழிற்சங்கம் வெற்றி பெற்றது. இதன் பின்னரே, தொழிற்சங்கங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய தொழிலாளர் சட்டம் (1926) நிறைவேற்றப்பட்டது. 1918ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதல் பெரிய தொழிற்சங்கமான ‘மெட்ராஸ் தொழிலாளர் சங்கம்’ சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறியது. இதைத் தொடர்ந்து 1920இல் ‘அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்’ உருவாக்கப்பட்டது.
மே 1, 1923 அன்று, ‘பொதுவுடமைச் சிற்பி’ சிங்காரவேலர் முதல் மே தின கொண்டாட்டத்தை சென்னை கடற்கரையில் ஒருங்கிணைத்தார். தொழிலாளி வர்க்கத்தில் கம்யூனிச சித்தாந்தம் நுழைந்த தொடங்கிய காலகட்டமும் இதுவே. இந்தியா சுதந்திரம் பெற்ற பின், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சங்கம் அமைப்பதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தது. தொழிற்சங்கங்களின் மூலமாக ‘வருங்கால வைப்பு நிதி சட்டம்’ (Provident fund act 1952), ‘தினக்கூலி சட்டம்’ (Daily Wage Act) போன்ற சட்டங்கள் உருப்பெற்றன.
1960ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்தியாவில் பொருளாதார நிலைமை மோசமடையத் தொடங்கியது. பஞ்சம் மற்றும் போர்கள் காரணமாக பணவீக்க விகிதம் உயர்ந்து உணவு தானியங்களின் விலைகள் உயர்ந்தன. பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் தொழில்களும் பாதிக்கப்பட்டன. இந்த காலகட்டத்திலும் தொழிலாளர் உரிமையை காப்பாற்ற தொழிற்சங்கங்கள் உறுதுணையாக இருந்தன.
1990க்குப் பிறகான உலகமயமாக்கல் காலகட்டத்திலும், வேலையிழப்பு போன்ற வாழ்வாதார சிக்கல்களிலிருந்து தொழிலாளர்களைக் காப்பாற்ற தொழிற்சங்கங்கள் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டன. பல தொழிற்சங்க போராட்டங்களின் நீட்சியாக, தற்போதைய காலகட்டம் வரை தொழிலாளர்களின் பணிநீக்கத்திற்கு எதிராக தொழிற்சங்கமே போராட்டங்களை முன்னெடுக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் சென்னையின் Ford நிறுவனத்தில் வெளியேற்றப்பட்ட ஊழியர்களுக்கு முறையான இழப்பீடு பெறுவதற்கு, தொழிலாளர் நலன் பேணும் அரசியல் அமைப்புகள் துணை நின்றன. இன்றும் சாம்சங் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க வேண்டி போராடிக் கொண்டிருக்கின்றனர்.

போராட்டங்கள் ஒருபுறம் என்றாலும், தொழிற்சங்கங்களின் வருகைதான் இந்தியாவை தொழில்துறையில் முன்னேறிய நாடாக மாற்றிக் கொண்டிருக்கின்றது. முதலாளிகள் மட்டுமே லாபம் பார்த்து, தொழிலாளியை சக்கையாய்ப் பிழிந்த நிலையை மாற்றியது தொழிற்சங்கம் மட்டுமே. ஒருவேளை தொழிற்சங்கங்கள் இல்லை என்றால் ஆளும் வர்க்கத்திடமும் சுரண்டும் பெரும் முதலாளிகளிடமும் இந்த பிராந்தியம் சிக்கி சின்னாபின்னமாய் போயிருக்கும். அத்தகைய நிலை ஏற்படாமல் காத்து, பொதுவுடைமை அரசியலை இன்று வரை வளர்த்தெடுக்கும் அமைப்பே தொழிற்சங்கம். நிதி ஆதாரங்கள் குறைந்தாலும், அரசாங்க ஆதரவு இல்லாமல் போனாலும், முதலாளித்துவ அடக்குமுறையை உடைக்கும் சுத்தியல் தொழிற்சங்கம். இந்த மே முதல் நாளில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்.