மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை புலிகள் மூடினார்கள் என்ற அவதூறுக்கு மறுப்பு – தோழர் திருமுருகன் காந்தி பதிவு

திரிகோணமலையில் இருந்த மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதால் தான், சிங்கள அரசு 2009-ல் தமிழர் மீது நடத்திய இனப்படுகொலைப் போர் தொடங்கக் காரணமானது என X தளத்தில் பெரியாரியவாதி என்று சொல்லக்கூடிய ஒருவர் பதிவிட்ட அவதூறுக்கு, மறுப்பு தெரிவித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் தனது வலைதளத்தில் ஏப்ரல் 27, 2025 அன்று பதிவு செய்தது.

இச்செய்தி முழு பொய், புலிகள் மீதான நேர்மையற்ற பார்ப்பனப் பரப்புரையின் மீள்பதிவே இவரின் பதிவு.

இலங்கை 1970களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி அதற்கான குடிநீர், விவசாய நீர்பாசன வசதியை செய்ய முயற்சித்தது. ஆனால், அமைதி ஒப்பந்தத்தின் காலத்தில்தான் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. ஆசியன் டெவலப்மெண்ட் வங்கியின்(ADB) துணையோடு திரிகோணமலையில் செனுறுவாலா-மூதூர் பகுதியின் விவசாய நிலத்திற்கு பாசன வசதிக்காக  ‘அல்லை-கந்தாலை’ திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தது. இதனால் சிங்கள குடியேற்ற பகுதியும், தமிழர் பகுதியும் பாசனம் பெறுமென அறிவிப்பு செய்யப்பட்டது. ஆனால் ADB நிதியை கொண்டு தமிழர் பகுதிகளுக்கு பாசன வசதி செய்ய மறுத்தது. தமிழர்களின் பூர்வீக குடியேற்றப் பகுதியில் உருவான சிங்கள குடியேற்றங்களுக்கு மட்டுமே பாசனத்தை உருவாக்குவது தமிழர்களுக்கு ஏமாற்றமளித்தது. வாக்குறுதியை மீறிய இலங்கைக்கு எதிராகவும், இலங்கை-ஈழ தேச எல்லையில் தொந்தரவு செய்யும் சிங்கள ராணுவத்தை கண்டித்தும் தமிழர்கள் போராடினர்.

இக்கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்ற மறுத்ததால், பொதுமக்களில் சிலர் மாவிலாறு அணையின் மதகுகளை மூடி, தமிழர்களுக்கான பாசனத்தை உறுதி செய்யுங்கள் என்றனர். ஏனென்றால் திருகோணமலையின் பன்குளம் கண்மாயை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்திருந்ததால் ஏற்கனவே பாசனமற்று போயிருந்தனர். இதனால் 20 ஜூலை 2006ல் போராட்டம் தொடங்கியது. ADB வங்கி தமிழர்களின் கோரிக்கையை ஏற்றது. புலிகளுக்கு தெரிவித்தது.

கோரிக்கையை ஏற்காமல் நார்வே அமைதிக்குழுவிற்கு கடிதம் அனுப்பினார் இலங்கையின் அமைச்சர் பலிதகொகனா. இக்கடிதம் கிடைத்த உடன் புலிகளின் திரிகோணமலை பொறுப்பாளர் எழிலன் (அனந்தியின் கணவர்) நேரடியாக சென்று மக்களை சமாதனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது, பொதுமக்கள் நார்வே அமைதிக்குழுவை நேரடியாக சந்திக்க வேண்டுமென 26 ஜூலையில் கோரிக்கை விடுத்தனர். மதகுகளை திறப்பதற்காக அதேதினத்தில் 2:00 மணியளவில் எழிலன் அமைதிக்குழுவை சந்தித்து கோரிக்கை வைத்தார். பாதுகாப்பு உறுதி செய்து பயணப்பட வேண்டுமென்பதால் உடனடியாக அவர்களால் கிளம்ப இயலாத நிலையில், அதேநாளில் பிற்பகல் 3:30 மணிக்கு (எழிலன் சந்தித்த 1:30 மணி நேரத்திற்குள்) இலங்கை விமானப்படை தாக்குதலை நடத்தி 7 தமிழர்களை கொலை செய்தது. எனினும் புலிகள் பதில் தாக்குதலை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமாக தீர்ப்பதற்காக மக்களை 27ம் தேதி அமைதிக்குழு சந்திக்க ஏற்பாடு செய்தார். 28ம் தேதி இருதரப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பொழுதே பேச்சுவார்த்தை திடலுக்கருகே இலங்கை குண்டு வீசியது. நார்வே அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடத்திய இடத்தில் இலங்கை தாக்குதல் நடத்தியதை அமைதிக்குழு கண்டித்தது.

இதன்பின்னர் இலங்கை ராணுவம் குவிக்கப்பட்டதாலும், தாக்குதல் தொடர்ந்ததாலும் மக்களை பாதுகாக்க மாவிலாறு பகுதியில் புலிகள் படைகளை குவிக்க நேர்ந்தது. மதகுகளை திறக்க புலிகள் எடுத்த முயற்சியை இலங்கை குண்டுவீச்சின் மூலமாக முறித்தது. ஆனால் இச்சம்பவத்திற்கு ஒருவாரத்திற்கு பின்னரே ஆகஸ்டு முதல்வாரத்தில் புலிகள் எதிர்தாக்குதல் தொடங்கினர்.

மாவிலாறு சிக்கலுக்கு அடிப்படை காரணம் இலங்கை ராஜபக்சே அரசு. அமைதி பேச்சுவார்த்தையை முறிக்க காத்திருந்த சிங்களம் இதை காரணமாக காட்டியது. உண்மைகள் மறைக்கப்பட்டன.

பி.பி.சிக்கு பேட்டி அளிக்கும் போது மாவிலாறு சிக்கலை தூண்டுவதன் மூலம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கும், அமைதி ஒப்பந்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தோம் என வெளிப்படையாக பேட்டி அளித்தவர் கோத்தபய ராஜபக்சே. மேலும் ஈழத்தின் மீதான போரை தொடங்கிய காலம் மாவிலாறு சிக்கலுக்கு முன்பான காலகட்டமே. இந்திய பார்ப்பன கூட்டமும், சிங்கள இனவெறியர்களும் மாவிலாறு சிக்கலால் தான் போர்மூண்டது எனும் பரப்புரையை பார்ப்பன ஊடகத்தின் பிதாமகனான, தற்போதய திமுகவின் நெருங்கிய நண்பரான என்.ராம் தனது இதழில் பொய் செய்தியை பரப்ப ஆரம்பித்தார். இதுபோன்ற பொய்பிரச்சாரங்களை செய்த காரணத்தினால் 2008ல் ‘தி இந்து’ பத்திரிக்கை அலுவலத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக பெரியார் தி.க தோழர்கள் கைதானார்கள். 2008ல் சென்னை திருவல்லிக்கேணி கூட்டத்தில் ‘தி இந்து’ இதழின் பொய்பரப்புரையை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர்கள் அம்பலப்படுத்தினார்கள்.

2004 சுனாமி தாக்குதலின் போதும், அதன் பின்பான வெள்ளத்தின் போதும் சிங்கள கிராமங்களுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு சென்றவர்கள் புலிகள். இதை செய்த எழிலன் இலங்கை இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டார்.

மாவிலாறு அணை சிக்கல் குறித்த குறைந்தபட்ச அரசியல் நேர்மையோடும் எழுதுவது நல்லது. உண்மையான பெரியாரிஸ்டுகள் பார்ப்பன கும்பலின் அடிவருடிகளாக இருக்க மாட்டார்கள். விடுதலை புலிகளின் வரலாறு தெரியாதவர்கள் பெரியாரிஸ்டுகளாகவோ, திராவிட இயக்கவாதிகளாகவோ ஆகிவிட இயலாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »