தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகள்

தமிழ்நாடு மின்சாரக் கட்டணத்தை மேலும் 11 ஆயிரத்து 200 கோடி அளவில் உயர்த்தத் திட்டமிடும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முறையற்ற நடவடிக்கை குறித்து விளக்கிட ஊடக சந்திப்பு ஜூன் 12, 2025 அன்று சென்னைப் பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் சங்கத்தின் சார்பில் ஐயா. சா. காந்தி அவர்களும், தமிழ்நாடு மின்வாரிய என்ஜினியர்ஸ் யூனியன் சார்பில் சீனி. மனோகரன் அவர்களும் பங்கேற்றுப் பேசினர்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஜூலை மாதத்திலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படப் போவதாக அறிவிப்பு வெளியானதும், இதன் பின்னணியில் இருக்கும் காரணங்களைக் குறித்து ஜூன் 4, 2025 அன்று ஊடக சந்திப்பு ஐயா. சா. காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அது குறித்தான இணைப்பு :

ஜூன் 12, 2025 அன்று நடந்த ஊடக சந்திப்பில் ஐயா. சா. காந்தி அவர்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல ஒழுங்கற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறித்தும், அதில் ஒன்றாக தூத்துக்குடியில் அமைந்துள்ள SEPC POWER LTD நிறுவனத்தின் மெகா ஊழலைப் பற்றியும், அந்த ஊழலுக்கு எந்தெந்த வகைகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உதவி செய்கிறது என்பது குறித்தும் விரிவாக விளக்கினார்.

SEPC POWER LTD என்பது தூத்துக்குடியில் அமைந்துள்ள 525 மெகாவாட் தனியார் மின் உற்பத்தி நிலையம் ஆகும். இதன் முழு உற்பத்தியையும் மின்சார வாரியம் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. SEPC மின்சாரத்தின் விலை என்பது அதன் மூலதன செலவைச் சார்ந்ததாக இருக்கும்.

இந்நிறுவனம் 1998-ல் ரூ 1536 கோடி முதலீட்டில் அமைக்க ஒப்பந்தமிடப்பட்டது. ஆனால் இதை அமைப்பதற்கான அடிப்படை நிலம் கூட இந்நிறுவனத்திடம் அப்போது இல்லை. தமிழ்நாட்டில் 2008-09 களில் கடுமையான மின்வெட்டு நிலவியதைத் தொடர்ந்து மின் நிலையம் அமைக்க 1998 ஒப்பந்தத்தை காட்டி இந்நிறுவனம் முன்வந்தது.  மின்சாரம் உற்பத்தி செய்ய தேவையான நிலம், நிலக்கரி ஒதுக்கீடு போன்ற அவசியமான அனுமதிகள் எதுவும் இல்லாதபோதும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 2015ல் இதற்கு அனுமதி வழங்கியது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்நிறுவனத்திற்கு பல நிபந்தனங்களை அளித்தது. அதிகபட்ச மூலதன செலவு ரூ 3514 கோடியைத் தாண்டக்கூடாது, 42 மாதங்களுக்குள் அதாவது 2018 அக்டோபருக்குள் மின் நிலையம் அமைக்க வேண்டும் என விதித்தது. மேலும் இந்த நிறுவனம் ஏற்படுத்திய காலதாமதத்தினால் உயர்ந்த செலவையும் அன்றைய ஆணையம் கணக்கில் கொண்டு, பகுதி கூடுதல் செலவினத்தை SEPC ஏற்கவும், அது மின் கட்டணத்தில் வராது எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை SEPC-ம், தமிழ்நாடு மின்சார வாரியமும் ஏற்றுக் கொண்டன. அதன் பின்னர் நிலக்கரி துறைமுகம் அமைக்காததால், இந்த மூலதன செலவை ரூ 3249 கோடிக்கு குறைக்கவும் இருவரும் ஒப்புக் கொண்டனர்.  முதலில் ரூ 3514 கோடியைத் தாண்டக் கூடாது என்று கூறியிருந்ததை, ரூ 3249 கோடி எனக் குறைத்தனர். இப்போது அதிகபட்ச மூலதனம் ரூ 3249 கோடியானது. ஆனால் 42 மாதத்தில் துவங்க வேண்டிய SEPC மின் நிலையம் 79 மாதங்களுக்குப் பின் தான் அதாவது நவம்பர் 30, 2021-ல் தான் உற்பத்தியைத் துவங்கியது.

இந்நிலையில், 2023-ல் கூடுதல் செலவு செய்துள்ளதாகவும், அதனால் மூலதனச் செலவை ரூ 3249 கோடியில் இருந்து ரூ 5118 கோடிக்கு உயர்த்தவும் ஆணையத்திடம் SEPC மனு செய்துள்ளது. இதனையே உண்மை கணக்கு என்றும் சொல்லுகிறது. ஆனால் இந்நிறுவனம்  காலதாமதப்படுத்தினால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை இந்நிறுவனமே ஏற்க வேண்டும் என முன்பே ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்போது கூடுதலாகக் கேட்கும் ரூ 1869 கோடியில் ரூ 1126 கோடி இன்னமும் செலவழிக்கப்படவில்லை என்று SEPC-ன் மனுவே கூறுகிறது. அதாவது செலவழிக்கப்படாத ரூ 1126 கோடியையும் செலவழிக்கப்பட்டதாக கொண்டு, கொள்முதல் செய்யக்கூடிய மின்சாரத்தின் விலையைக் கூட்டச் சொல்கிறது. இதுதான் உண்மையான கணக்கு என்று சொல்லுவதை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக் கொண்டு ஆலோசகர்களை நியமித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் மூலதன செலவுக்கும், மக்கள் செலுத்தும் மின் கட்டணத்திற்கும் சம்பந்தம் உண்டு, தனியார் கொள்முதல் மின்சாரத்தின் விலை என்பது இரண்டு பட்டியல் கொண்டதாகும். ஒன்று எரிபொருள் கட்டணம். இரண்டாவது மூலதனக் கட்டணம். இந்த கட்டணங்களை மின்சாரத்தை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் மின்சார வாரியம் கட்டியே தீர வேண்டும். இந்த கட்டணம் மொத்த மூலதனச் செலவில் SEPC-க்கு ஆண்டுதோறும் 22.28% கட்ட வேண்டும். அதாவது ரூ 3249 கோடிக்கு ரூ 724 கோடி ஒவ்வொரு ஆண்டுக்குமான மூலதனக் கட்டணம் ஆகும். அதாவது மொத்த மூலதனத்தையும் 4.5 ஆண்டுகளில் மின்வாரியம் திருப்பி செலுத்தி விடும்.

ஆனால் SEPC நிறுவனம் மின் நிலையம் அமைக்கவே 6.5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2023-ம் ஆண்டில் கூடுதல் செலவு செய்துள்ளதாக SEPC கேட்பது போல, மூலதன செலவு ரூ 5118 கோடியானால் ரூ 724 கோடிக்கு பதிலாக ரூ 1140 கோடி SEPC க்கு ஆண்டுதோறும் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் ரூ 416 கோடி அதிகமாகும். இந்த கொள்ளை அடுத்த 27 ஆண்டுகளுக்கும் தொடரும். அதாவது மொத்தமாக ரூ 11212 (416 x 27) கோடி இந்நிறுவனத்திற்கு அதிகமாக கிடைக்கும்.

இதுபோன்ற மூலதனச் செலவை நிர்ணயிக்கும் மனுக்கள் PPAP என வகைப்படுத்தப்படும். இதற்கான மனு கட்டணம் ரூ10,50,000 (2000 X 525) திருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆணையம் MP என வகைப்படுத்தி வெறும் 25 ஆயிரம் மட்டுமே வசூலித்திருக்கிறது. இது மட்டுமல்ல தற்போதுள்ள மின்சாரக் கொள்முதலில் 104 கோடி அளவிற்கு மின்சார வாரியத்திற்கும், SEPC -க்கும் இடையே தகராறு உள்ளது இந்நிறுவனம் இதற்கான வழக்கை ஆணையத்தில் தொடுத்தது. இந்த மனு DRP (DISPUTE RESOLUTION PETITION) என்று வகைப்படுத்தி மனுக் கட்டணமாக 1.04 கோடியை வசூலித்திருக்க வேண்டும். ஆனால் ஆணையம் IA (IMPLEADING PETITION) என வகைப்படுத்தி வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. ஒரு கோடிக்கு பதிலாக வெறும் ஆயிரம் ரூபாயை வசூலித்திருக்கிறது.

இந்த ஊழல் புகார் மனுக்கள் அனைத்தும் அரசு முதன்மை செயலாளர், எரிசக்தி துணைச் செயலாளர், ஊழல் தடுப்பு இயக்குனர் அலுவலகங்களில் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது மட்டுமல்ல SEPC நிறுவனத்தின் மூலதனத்திற்கான 2023-ன் மனு ( M.P 6 OF 2023) பெறப்பட்டவுடன், தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் கருத்து கேட்புக் கூட்டத்திற்காக பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மின்சார சட்டம் (Section 64 of Electricity Act 2003) சொல்கிறது. மக்களின் கருத்துக்குப் பின்னரே மனுவினை அனுமதிப்பதா அல்லது அனுமதி மறுப்பதா என முடிவு செய்ய வேண்டும். ஆனால் மக்கள் மன்றத்தில் வைக்கப்படாமல் மின்சார சட்டத்தை புறந்தள்ளி விட்டு 40-க்கும் மேற்பட்ட நாள் விசாரணையை மட்டுமே ஆணையம் நடத்தியுள்ளது. இதனை எதிர்த்து மின்துறை பொறியாளர் சங்கமும், மின்வாரிய பொறியாளர் சங்கமும் தொடுத்த வழக்குகளை ஆணையம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால் தீர்ப்பளிக்கப் போகும் நேரத்தில் மக்கள் கருத்து கேட்பு என பத்திரிக்கையில் அவசரமாக வெளியிட்டுள்ளது.

மேலும் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தான் மனுவின் முக்கிய பகுதிகளை வெளியிட வேண்டும் என்பது சட்டம். ஆனால் SEPC நிறுவனம் 2023 அன்று தாக்கல் செய்யப்பட்ட செய்திகளை மட்டுமே மே, 29, 2025 நாளிட்ட தினத்தந்தி, தி இந்து பத்திரிக்கை வெளியீடுகள் சொல்கிறது.  இதற்கு மட்டும் ஆணையம் அனுமதி வழங்கி இருக்கிறது. 

ஊழலைத் தடுக்கவும், அநியாயமான மின் கட்டணத்தை தடுக்கவும் தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை மனுவாக,  முன்னர் நிர்ணயித்த ரூ 3249 கோடி அளவிலான மூலதனச் செலவை தாண்டக்கூடாது, மனுவின் முழு விபரத்தையும் வெளியிட்டு மக்களின் நேரடி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும், SEPC-யிடம் வசூலிக்கத் தவறிய மனுவிற்கான கட்டணங்களை வசூலிக்க வேண்டும், மேலும் மாநில அரசு ஊழல் அதிகாரிகள் மீது தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி மனுவினை அனுப்பிட வேண்டும் என தமிழ்நாடு மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் சார்பாக ஐயா. சா. காந்தி அவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

SEPC என்ற தனியார் மின் உற்பத்தி நிலையத்துடன் கைகோர்த்துக் கொண்டு மக்கள் தலையில் 11,212 கோடியை மின் கட்டணமாக சுமத்தும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒழுங்கில்லா இந்த ஊழல் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மின்துறையின் அதிகார மட்டத்தில் பல வகைகளில் நடக்கும் ஊழலை ஒழிக்க முயற்சிக்காமல், இதன் மூலமாக மின் துறையில் ஏற்படும் நட்டத்திற்கு மக்கள் தலையில் மின் கட்டண உயர்வை சுமத்துவது நிறுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »