
தமிழர்கள் களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலையை வீட்டுக்குள் வைத்து வழிபட்டு, மூன்றாம் நாள் நீர் நிலைகளில் கரைத்த நிகழ்வு என்பது கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் பிள்ளையார் நாள் நிகழ்வாக நடந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று மூலைக்கு மூலை பிள்ளையாரை வைத்து இந்துத்துவ அமைப்புகள் மதவெறி ஊர்வலம் நடத்தி அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் நபர்கள் நச்சுப் பிரச்சாரங்களை ஊர்வலத்தின் ஊடாக அங்கங்கே நிகழ்த்திக் கொண்டே செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத செயலாக, சென்னை பட்டினப்பாக்கம் மசூதி ஒன்று திரை சீலையிட்டு மூடப்பட்டிருந்தது. பாஜக ஆளும் வட மாநிலங்களில் ராம நவமி, விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது மசூதிகளை திரைச் சீலையிட்டு மூடி வைத்திருக்கும் செய்திகளை அறிந்த நமக்கு, தமிழ்நாட்டிலும் அதே வெறுப்புணர்வு இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ சக்திகளால் துளிர் விடத் தொடங்குகிறதா என்கிற கேள்வியை இந்த சம்பவம் எழுப்பியிருக்கிறது. இந்துத்துவ சக்திகளே காவல்துறையை இயக்குகிறதா, திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் திமுக ஆட்சியில் இந்துத்துவ சக்திகள் வலுவாகிக் கொண்டிருக்கிறார்களா என்கிற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பிள்ளையார் ஊர்வலங்கள் மூலமாக, இந்துத்துவ வலைக்குள் தமிழ்நாட்டை இந்துத்துவ அமைப்புகள் இழுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இதன் பின்னால் உள்ள அரசியலைப் பற்றிப் புரிந்து கொள்ள “பிள்ளையார் அரசியல்” என்கிற இந்த சிறு புத்தகம் உதவுகிறது. சமீப காலங்களில் பிள்ளையார் ஊர்வலம் பிரம்மாண்டமாக நிகழ்வதற்குக் காரணம் என்ன?, இதன் அரசியல் திட்டங்கள் என்ன?, இதனால் பயன் அடைவது யார்?, பாதிக்கப்படுவது யார் என்பது குறித்து இந்நூலின் ஆசிரியரும், தமிழ் சமூகத்தின் வரலாற்று ஆய்வாளருமான ஆ. சிவசுப்ரமணியன் தெளிவாக விளக்குகிறார்.

பிள்ளையாரின் தோற்றம் குறித்து பல கதை வடிவங்கள் உள்ளன. அதில் ஒரு வடிவமாக பழங்குடி மக்கள் விலங்கு, தாவரம் போன்ற இயற்கையை தமது குலக் குறியாகக் கொண்டதாகவும், யானைக்குலம் மற்றும் எலிக்குலம் என்கிற இரண்டு குலக்குறிகளில், யானையை பழங்குடி குலக் கடவுளென்றும், எலி குலக்கடவுளின் வாகனமென்றும் கருதியதாக ஒரு கதையை நமக்கு அறியத் தருகிறார் ஆய்வாளர் அவர்கள்.
இந்நூலில், பிள்ளையார் நான்காவது வர்ணமான சூத்திரர்களின் கடவுளாக மதிக்கப்பட்டார் என்றும், சைவ வைணவ தெய்வங்களைப் போல அல்லாமல் நாட்டார் தெய்வங்களைப் போல் மக்களின் தண்டனைக்கும் ஆளாகியுள்ளதாகவும் கூறுவது இதுவரை பலரும் அறியாத செய்தி. மழை வேண்டி வெட்ட வெளியில் இருக்கும் பிள்ளையாரை மிளகாய் பூசுவது, சாணி பூசுவது, குப்பைக் குழியில் புதைப்பது, கிணற்றில் போடுவது போன்ற தண்டனைகள் அளித்தது பழந்தமிழர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. முருகனை ஸ்கந்தன், சுப்ரமணியன் போன்ற பெயர்களை மாற்றி பிராமணியம் எவ்வாறு செரித்துக் கொண்டதோ, அதைப் போல பழங்குடிகள் மற்றும் சூத்திரர்களின் கடவுளாக இருந்து, பின்னர் பிராமணியத்தினால் உள்ளிழுக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறார் ஆய்வாளர் அவர்கள்.
பிள்ளையாரின் அரசியல் நுழைவு தொடங்கியது குறித்து சொல்லும் போது,
- 1893-ல் மராட்டிய பிராமணர்கள் ‘பசு பாதுகாப்பு பிரச்சார சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இசுலாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதை உணர்ச்சியூட்டும் வகையில் ஊர்வலத்தின் போது பேசி, அவர்களுக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கி இந்து முசுலிம் மதக்கலவரம் உருவானது.
- 1893-ல் திலகரால் உருவாக்கப்பட்ட கணேசர் உற்சவம் என்ற நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர்கள் 1899-ஆம் ஆண்டு மித்ரமேளா (நண்பர்கள் சங்கம்) என்ற அமைப்பை உருவாக்குகிறார்கள்.
- 1904-ஆம் ஆண்டு மித்ரமேளாவின் உறுப்பினர்கள் ‘இளம் இந்தியர் கழகம்’ என்ற அமைப்பை உருவாக்குகின்றனர். இதில் இளைஞராக இருந்த சவார்க்கர் ‘இந்து மகாசபை’ என்ற மத அடிப்படைவாத அமைப்பை உருவாக்குகிறார். இதன் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் என்ற பெயரில் சங் பரிவாரங்கள் தோன்றின.
தற்போதைய பிள்ளையார் சிலைகளில் பல கைகள் கொண்டதாகவும், அதில் ஆயுதங்கள் ஏந்தியும், பூநூல் அணிவித்தும் பல சினிமா கதாநாயகன் பெயர் தோற்றத்திலும் வருகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் பிள்ளையார் வழிபாடு தொடங்கி விட்டது என்றும், மிகப் பழமையான பிள்ளையார்பட்டி கோவில் தொடக்க காலத்தில் இரண்டு கைகளை உடையதாகவும், பூணூல், அணிகலன், ஆயுதங்கள் இல்லாமல் காட்சியளித்தது என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர் தொ.பரமசிவம் (1997: 46-48) கருதுகிறார்.
1981 ஆம் ஆண்டு திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் ஆதிதிராவிட மக்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர். இதனையொட்டி மதமாற்றத்திற்கு எதிரான ‘தாய் மதம் திரும்ப செய்தல்’ என்ற குரல் இந்து மத அடிப்படைவாதிகளால் எழுப்பப்பட்டு ‘இந்து முன்னணி’ உருவாக்கப்பட்டதும், அதன் மூலம் 1982-ல் மண்டைக்காடு மதக்கலவரம் நடந்ததும், தொடர்ந்து 1983-84 ரதயாத்திரைகள் மூலம் இந்துமத அடிப்படைவாதம் மிக எளிதாக மக்களிடையே ஊடுருவியதையும் வரிசையாக குறிப்பிட்டுள்ளார் ஆ. சிவசுப்ரமணியம் அவர்கள்.

பிள்ளையார் அரசியல் 1990 -இல் சென்னையில் தொடங்குகிறது. அதன் பின்பு தமிழ்நாடு முழுவதும் பரவியது. இந்து முன்னணி மற்றும் விஷ்வ இந்து பரிசத் அமைப்புகளும் அதன் ஆதரவாளர்களாக பாஜக, அதிமுக, திமுக, மதிமுக, தமாகா போன்ற கட்சியின் வட்டாரத் தலைவர்கள் கலந்து கொண்டு ஊக்குவித்த குறிப்புகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
வட நாட்டில் ராமர் வழிபாடு செல்வாக்கு பெற்றுள்ள நிலையில் இங்கு ராமர் எடுபடாததால், அதாவது தமிழ்நாட்டில் அதற்கு மாற்றாக தேடிக் கண்டுபிடித்த வெகுசனக் கடவுள்தான் பிள்ளையார் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், மத எதிர்ப்பை மையமாகக் கொண்டு தமிழ்நாட்டில் பிள்ளையார் ஊர்வலம் நடக்க ஆரம்பிப்பதையும் வரிசையாகக் கூறுகிறார். முதலில், ‘ மார்வாடி பனியா சமூகத்தினரின் வர்த்தகப் போட்டியான இஸ்லாமியர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். பிள்ளையார் சிலை மற்றும் ஊர்வலத்திற்கு நிதியைத் திரட்டி “ரக்ஷாபந்தன், ராம நவமி” போன்ற வட இந்திய சமய விழாக்களை இங்கு புகுத்துகிறார்கள்.
சென்னை நகரின் சேரிப் பகுதிகளில் தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி விநாயகர் ஊர்வலத்தில் பங்கெடுக்க வைக்கிறார்கள், மதமாற்றம் மற்றும் நாத்திக பிரச்சாரத்தை தடை செய்யும்படியும், பண்டிகை நாட்களில் இந்து தயாரிப்புகளை இந்து கடைகளிலேயே வாங்கும்படியும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான முழக்கங்களை எழுப்புகிறார்கள், சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் திட்டமிட்டு பிள்ளையார் ஊர்வலம் எடுத்துச் சென்று அதில் வன்முறைகள் ஏற்படுத்துகிறார்கள் என இந்துத்துவவாதிகள் கட்டமைக்கும் அரசியலைக் குறித்து இப்புத்தகத்தில் ஆ. சிவசுப்ரமணியம் அவர்கள் விளக்கமாக விவரித்துள்ளார்.

வகுப்புவாதம் ‘அடிப்படையில் ஆட்சியைப் பிடிப்பதற்கான ஒரு தந்திரமே ஆகும் எனக் குறிப்பிடும் ஆய்வாளர், “மத நம்பிக்கை என்பது வேறு, வகுப்புவாதம் என்பது வேறு, எனவே மத நம்பிக்கை உடையவர்கள் அனைவரும் வகுப்புவாதிகள் அல்லர்” என வகுப்புவாதத்திற்கு விளக்கமளித்து, வகுப்புவாதத்தின் மூன்று பிரிவுகளான “வகுப்புவாத தேசியம், தாராள வகுப்புவாதம், பாசிச வகுப்புவாதம்” ஆகியவற்றிற்கு விளக்கம் கொடுத்துள்ளார் ஆய்வாளர்.
மத நம்பிக்கையை வகுப்புவாதமாக மாற்ற இந்துத்துவ அடிப்படைவாதிகள் பிள்ளையார் அரசியலைக் கண்டறிந்து உள்ளதாகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
1989 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடித்து அங்கு ராமர் கோயில் கட்டப் போவதாக இந்து மத இயக்கங்கள் அறிவித்தது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற பல இந்துத்துவக் குண்டர்கள் 1992-ல் மசூதியை இடித்தார்கள். 2024ஆம் ஆண்டில் ராமர் கோவில் திறக்கப்பட்டது. தற்போது வரை வட மாநிலங்களில் இசுலாமிய வீடுகள் மற்றும் வழிபாட்டு தளங்களை தகர்க்கிறார்கள். குடியுரிமை சட்டங்கள் மற்றும் வக்ஃப் நிலங்களை அபகரிக்க சட்டங்கள் இயற்றப்படுகிறது. இவை அனைத்தையும் நமக்கு நினைவூட்டும் வகையில் இருக்கிறது இப்புத்தகம்.
பிள்ளையார் அரசியல் குறித்து அறிந்து கொள்ள வைக்கும் எளிமையான இப்புத்தகம் கிடைக்குமிடம் :
திசை புத்தக நிலையம்,
5/9, பார்த்தசாரதி பேட்டை தெரு,
டிஎம்எஸ்/ஆவின் பாலகம் அருகில்,
காமராசர் அரங்கம் எதிரில்,
அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
சென்னை – 600086
தொடர்புக்கு : 98840 82823