
மக்கள் திரள் அமைப்பின் ஆற்றலும், அரசியல் நுணுக்கமும் அறிந்த தீலிபனின் அறப்போராட்டம் குறித்தும், இந்திய அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்காக உண்ணாநிலை இருந்த திலீபனை சாகடித்த இந்தியப் பார்ப்பனிய அரசின் ஆதிக்கப் பண்பை வெளிப்படுத்திய திலீபனின் உண்ணாநிலை குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் செப்டம்பர் 26, 2025 அன்று சமூக வலைதளப் பதிவு.
தெற்காசியாவின் போக்கை மாற்றிய போராட்டம் திலீபனுடையது. ஒரு மக்கள்திரள் அமைப்பின் ஆற்றல் மிகு செயல்வீரர்கள், அரசியல் நுணுக்கமறிந்த போராளிகள் கட்டமைக்கும் போராட்டம் எக்காலத்திலும் பின்னடைவை சந்திக்காது என்பதற்கு நல்லூரில் திலீபன் பசியை தின்று உயிரை ஈந்து நடத்திய அறப்போராட்டம் சாட்சி.
மாலத்தீவிற்குள்ளாக தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்திய பார்ப்பன ஆற்றல்கள் தமிழீழ ப்ளோட் போராளி குழுக்களை பகடை காய்களாக பயன்படுத்தி வெற்றி கண்டன. மாலத்தீவை கைப்பற்றலாமென போராளிக்குழுவை தூண்டி மாலத்தீவிற்கு தாக்குதல் நடத்தி ஆட்சியை கைப்பற்ற அனுப்பிய இந்திய அரசு, உடனடியாக மாலத்தீவை காக்கிறோம் என்று அறிவித்து தனது இராணுவத்தைக் கொண்டு தமிழ்ப்போராளிகளை அழித்து மாலத்தீவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. ஆபத்திலிருந்து மாலத்தீவை இந்தியா காப்பாற்றியதாக நடத்தப்பட்ட நாடகத்திற்கு அப்பாவி போராளி குழுக்கள் பலியாகின. இந்தியாவும், இராஜீவ்காந்தியும் பிராந்திய வல்லரசாக உணர்ந்த தருணம் அது.
இந்த வெற்றியின் ஆணவம் ராஜீவ்காந்தியின் தலையிலேற்றப்பட்டது. வங்கதேசத்திலும், பாகிஸ்தான்-காசுமீர் சிக்கலிலும் போர் நடத்தி அதிகார உச்சியிலும், அசைக்க இயலாத தலைமையாகவும் இருந்த இந்திராகாந்தி அம்மையார் போன்று இராஜீவ்காந்தியும் உயரவேண்டுமென்று திட்டமிட்டு காங்கிரஸும், பார்ப்பன ஆற்றல்களும் நடத்திய போர் நாடகமே மாலத்தீவு தலையீடு.

இதனையடுத்து இலங்கைக்குள்ளும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தமிழர் விரோத ‘அமைதி ஒப்பந்தத்தை – தமிழர்களின் நலன்’ Indo-Srilanka Accord எனும் பெயரில் இந்திய-ராஜீவ் அரசு ஒப்பந்தமிட்டது. இதன் பேரில் கொடுக்கப்பட்ட வாய்மொழி அம்சங்கள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அப்பாவி ஈழ தமிழர்கள் நம்பினர்.
ஈழ நிலத்தை சிங்களத்திடமிருந்து, ‘அமைதிப்படை IPKF Indian Peace Keeping Force’ எனும் பெயரில் ஆக்கிரமிக்க இந்திய ராஜீவ்காந்தி அரசு படைகளை இறக்கியது. தரையிறங்கிய இந்திய ராணுவம் ஒரு ‘ஆக்கிரமிப்பு படை’ என்பதை அறியாத அப்பாவி தமிழர்கள், இந்திய ராணுவத்தினருக்கு மாலை சூட்டி வரவேற்றனர். தம்மை காக்க வந்த பாதுகாப்பு அரணாக இந்திய அமைதிகாப்பு படையை நம்பிய தமிழர்களிடத்தில், இந்திய-இலங்கை அரசுகளின் ஆதிக்க சதித் திட்டத்தை கொண்டு சேர்க்கும் பெரும்பொறுப்பை புலிகள் சுமந்தனர். சுதுமலை பிரகடனத்தில் மேதகு அவர்கள், ‘இந்திய அரசின் மீதான தமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், அதை நிறைவேற்றிக் காட்டவேண்டிய பொறுப்புள்ளதையும்’ சுட்டிக்காட்டினார். தமிழர் நலனை இந்திய அரசு நிறைவேற்றாது என்பதை புலிகள் அறிந்தே இருந்தனர். EPRLF, TELO உள்ளிட்ட பிற போராட்ட இயக்கங்கள் இந்திய அரசின் விரிவாதிக்க நலனுக்கு உடன்பட்டு தமிழ் மக்களை பலியிட அணியமாக இருந்த பொழுது, புலிகள் அமைப்பு இந்திய நலனுக்காக தமிழர் கோரிக்கைகள் பலியிடப்படுவதை தடுக்க போராடியது.
ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் மிக எளிமையானவை. தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமெனும் உத்திரவாதங்களை கூட இந்திய பார்ப்பன கூட்டம் நிறைவேற்றாமல் தமிழர்களை வஞ்சித்தது. தமிழர் போராட்ட கோரிக்கைகளை பின்னுக்கு தள்ளி ஆக்கிரமிப்பு பணிகளை இந்திய-ராஜீவ் அரசு உருவாக்கத் தொடங்கியதை அறிந்த புலிகள், வெகுமக்களை அரசியல்படுத்தும் பணியை தொடங்கினர். தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய படைகளையும், இந்திய அரசையும் தனிமைப்படுத்தும் விதமாக அரசியல் பரப்புரையை புலிகள் தொடங்கினர். இதன் பின்னரும் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத இந்திய அரசை வலியுறுத்தி சமரசமற்று உண்ணாநிலை போராட்டத்தை புலிகள் இயக்கத்தின் முடிவின் அடிப்படையில் கேணல் திலீபன் தொடங்கினார்.
தமிழர்களிடத்தில் விடுதலை கோரிக்கைக்கான அரசியல் பரப்புரைகளையும், மக்கள் திரள் அமைப்பினையும், பெண்களின் விடுதலைக்கான அமைப்பையும் உருவாக்கிக் கொண்டிருந்த கேணல் திலீபன் அடிப்படையில் மருத்துவராவார். சோசலிசத் தமிழீழ இலக்கிற்காக இயங்கிக்கொண்டிருந்த செயற்பாட்டாளனான கேணல் திலீபன் சாமானிய தமிழர்களால் நேசிக்கப்பட்ட களப்போராளி.
அவரது உண்ணாநிலைப் போராட்டம் போர்க்குணம் மிக்கது. இந்திய அரசை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக இந்திய அரசின் ஆதிக்கப்பண்பை அம்பலப்படுத்தக்கூடியது. திலீபனின் 1987 உண்ணாநிலை போராட்டத்திற்கு முன்பாக அயர்லாந்து விடுதலை போராளிகளுக்காக உண்ணாநிலையிருந்து 1981ல் பாபி-சாண்ட்ஸ் உயிர் துறந்தார். அரசியல் சிறைவாசிகளின் உரிமைக்கான வீரஞ்செறிந்த உண்ணாநிலை போராட்டத்தை நடத்தி 66ம் நாள் உயிர்துறந்தார். உண்ணாநிலை போராட்டங்களை ஆதிக்க அரசுகள் மதிப்பதில்லை என்பதை நன்கு அறிந்தே புலிகள் இப்போராட்டத்தை முன்னகர்த்தியதன் காரணம் மிக முக்கியமானது. தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளையும், அரசியல் உரிமைகளையும், அமைதிவழி போராட்டத்தையும் இந்திய-பார்ப்பன அரசு மதிக்கப்போவதில்லை என்பதை உலகிற்கும், தமிழினத்திற்கும் அம்பலப்படுத்தவே இப்போராட்டத்தை தொடங்கினர்.

தண்ணீர் எடுக்காமல் எந்த உண்ணாநிலை போராட்டமும் நடந்ததில்லை. உடலின் 70% நீர் எனும் நிலையில் தண்ணீரை எடுத்துக்கொள்வது உடல்நலனை சிறிதளவேனும் காக்க உதவும், மேலும் போராட்ட காலத்தை நீட்டிக்க உதவும். தண்ணீர் குடிக்காமல் இருக்கும் பட்சத்தில் உடலின் நீர்சத்து வெளியேறி உலர்ந்த இலை போல சருகாகி சித்தரவதை அனுபவித்து, ஒவ்வொரு உடல் உறுப்புகளாக செயலிழந்து மரணத்தை நெருங்குவார்கள் என்பதை மருத்துவரான திலீபன் அறிந்தே போராட்டத்தை தொடங்கினார். புலிகள் முன்வைத்த திலீபன் உண்ணாநிலை போராட்டத்தின் கோரிக்கைகள் என்பது எளிமையானவை. இந்திய அரசினால் நடைமுறைப் படுத்தக்கூடிய கோரிக்கைகளையே புலிகள் முன்வைத்தனர். அவை,
- மீளக்குடியமர்த்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவக் காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு (கூலிப்படையினர்) வழங்கப்பட்ட ஆயுதங்கள் முழுமையாகக் களையப்பட வேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாகக் (சிங்கள) காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இக்கோரிக்கைகள் இந்திய அரசினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளே. இவற்றை நிறைவேற்றமாட்டோம் என அமைதிகாத்தது இந்தியா. மேலும் திலீபனின் உண்ணாநிலை போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி எடுக்காமலும், புலிகளை சந்திக்காமலும் திலீபனை மரணத்திற்குள் தள்ளியது இந்திய பார்ப்பனிய ராஜீவ்காந்தி அரசு. இந்த 12 நாட்காளாக திலீபன் அனுபவித்த சித்தரவதைகளையும், இந்திய அரசின் மெளனத்தையும் தமிழீழ மக்கள் நன்கு உணர்ந்தனர். இந்திய அரசு திலீபனின் நியாயமான எளிய கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாதெனில், எங்ஙனம் தமிழ் மக்களை காக்கும் என்பதே அவர்களுக்கு கேள்விக்குறியானது.
12 நாட்களாக திலீபன் நடத்திய இப்போராட்டத்தில் பெருந்திரளாக லட்சக்கணக்கில் தமிழர்கள் பங்கெடுத்து கண்ணீர்மல்க வேண்டி நின்றனர். இந்தியாவின் கல்நெஞ்சை, நயவஞ்சகத்தை உணர்ந்தார்கள். இந்தியாவின் ஆதிக்க அரசியலையும், இராணுவ ஆக்கிரமிப்பையும் எதிர்த்து போர் புரிய ஆயத்தமானார்கள். இந்த புரட்சிகர அணிதிரட்டலை நிகழ்த்திக்காட்சிய மாபெரும் போராளி கேணல் திலீபன்.
பசியை தின்று, விடுதலையை வென்ற மாவீரன் அவர்.
திலீபனின் ஈகத்திற்கு பின்பான காலத்தில் தமிழீழ மக்கள் புலிகள் பக்கம் அணிதிரண்டனர். போலியான பிற போராளிக்குழுக்கள் தனிமைப்பட்டன, இந்தியாவின் கூலிப்படைகளாக சில அமைப்புகள், தலைமைகள் மாறின. சமரசமற்ற போரை புலிகள் நடத்தியதில் இந்திய இராணுவம் நிலைகுலைந்தது வரலாறு. பலவேறு மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களை அமைதிப்படை செய்ததாக சர்வதேச மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி இண்டர்நேசனல் உள்ளிட்டவை குற்றம்சாட்டி வழக்குகளை தொடுக்க ஆயத்தமானார்கள். இவ்வகையில் இராஜீவ்காந்தியை பார்ப்பன ஆற்றல்கள் போர்க்குற்றவாளியாக்கினார்கள். சுப்பிரமணியசாமி போன்றவர்களால் அசம்பாவிதம் நடைபெறாமல் இருந்திருந்தால், இசுரேலின் நேதன்யாகுவை போல சர்வதேச போர்க்குற்றவாளிப் பட்டியலில் ஒருவேளை இணைக்கப்பட்டிருப்பார்.

இந்தியாவின் ‘தெற்காசியாவின் வல்லரசு’ எனும் கற்பனைக் கோட்டையினை தகர்த்தவர்கள் புலிகள், இதை சாத்தியமாக்கியவர் கேணல் திலீபன்.
இதனால் தான் 2009 அழிவிற்கு பின்னர், இந்திய அரசின் துணைத்தூதரகம் தமிழர் பகுதியில் திறக்கப்பட்ட பொழுதில், திலீபனின் நினைவுச் சின்னம் அழிக்கப்பட்டது. 1994லிருந்து 2009 வரை திலீபன் உண்ணாநிலை போராட்டம் நடத்திய நல்லூர் சிங்களப் படை வசம் இருந்த போதிலும் சிங்கள ராணுவம் கூட திலீபன் நினைவுச் சின்னத்தை அழிக்க முற்படவில்லை, மாறாக 2009 அழிவிற்கு பின் இந்திய அரசின் உத்தரவால் இந்த சின்னம் அழிக்கப்பட்டதாக ஈழத்தமிழர்கள் நினைவு கூர்வார்கள். கேணல் திலீபன் போராட்டத்தின் வீரியத்தை எடுத்துரைக்க இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
எளிய உறுதியான மனிதர்கள் வரலாறுகளை திருத்துகிறார்கள், திருப்புகிறார்கள், மாற்றி எழுதுகிறார்கள். ஆயுத பலமோ, பொருளாதார பலமோ எவையாயினும் வல்லரசு கனவு கோட்டையை பாதுகாக்க இயலாது என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்திய வீரஞ்செறிந்த போராட்டமே கேணல் திலீபனின் அறப்போர்.
சருகைப்போல மேனியுருகி வீழ்ந்தாலும், வேர்களாக நம் மனதிற்குள் புதைந்து நின்ற மாவீரன் கேணல் திலீபனுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்.
வெல்வாய் திலீபா!
தமிழீழம் வெல்லும்!!
திருமுருகன் காந்தி
மே17 இயக்கம்.