கரூர் கள ஆய்வு குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

கரூரில் கடந்த 29 செப்டம்பர் 2025 சனிக்கிழமை மாலை விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் நடத்திய கூட்டத்தில் 41 பேர் இறந்த துயரமான நிகழ்வு நடந்தது. இத்துயர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இச்செய்தி கேள்விப்பட்டதும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் செப்டம்பர் 28, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை கரூர் அரசு மருத்துவமனையில் சந்தித்தார். சம்பவ இடத்திற்கும் சென்று பார்த்தார். இறந்தவர்கள் வீட்டிற்கும் நேரடியாக சென்று அந்த குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த சந்திப்பில் தமிழர் ஆட்சி கழகத்தின் தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் மற்றும் தமிழக மக்கள் சனநாயக கட்சி பொறுப்பாளர் சண்முகராஜா மற்றும் மே 17 இயக்க தோழர்கள் உடன் இருந்தனர். கரூரில் நேரில் சென்று  களத்தில் மக்களை சந்தித்தது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பும் 30, செப்டம்பர் 2025 அன்று நடத்தப்பட்டது. கள ஆய்வுக்கு உடன் சென்ற தோழமை கட்சி, அமைப்புத் தோழர்களும் இச்சந்திப்பிலும் உடனிருந்தனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர் திருமுருகன் காந்தி பேசியவை:

தமிழக வெற்றி கழகத்தினுடைய நிகழ்விலே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். காயப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களை அவர்களது உறவினர்களை சந்தித்தோம். இந்த நிகழ்விலே பங்கெடுத்து உயிர் தப்பியவர்களை சந்தித்தோம். கரூருக்கு அருகில் இருக்கக்கூடிய கிராமங்களிலே வசிக்கக்கூடிய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தோம். அதிகாரிகளை சந்தித்து பேசினோம். ஊடக நண்பர்களை சந்தித்து பேசினோம். பிற முற்போக்கு இயக்கங்கள், சனநாயக அமைப்புகளினுடைய பொறுப்பாளர்களை சந்தித்து பேசினோம். அந்த சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அங்கே ஆய்வுகளை மேற்கொண்டோம். இந்த சந்திப்பின் அடிப்படையில் எங்களது கருத்துக்களை இச்சமயத்திலே நாங்கள் மக்கள் மன்றத்தில் வைக்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் நடக்காத ஒரு பெரிய துயரச் சம்பவமாக கரூர் சம்பவம் 41 அப்பாவி தமிழர்களை பலிவாங்கி இருக்கிறது. இந்த இழப்பு என்பது கட்சி கடந்து நாம் அனைவரையும் ஒரு துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வாக இருக்கிறது. இந்த நிகழ்விலே உயிரிழந்த 41 தமிழர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே சமயத்தில் அங்கே காயம்பட்ட மக்களை உடனுக்குடனாக காத்த மருத்துவத் துறையை சார்ந்த செவிலியர்கள், அவசர ஊர்தி வாகனத்திலே பணிபுரிந்தவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றியை இச்சமயத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் இல்லையென்றால் இன்னும் சாவு எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். ஆகவே சரியான சமயத்தில் அந்த மக்களைக் காத்த மருத்துவத்ததுறை சார்ந்த பொறுப்பாளர் அனைவருக்கும் எங்களது நன்றிகளை நாங்கள்(மே 17) தெரிவித்துக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாமல் அந்த இரண்டு நாட்களாக அங்கிருந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்த அரசுத்துறை அதிகாரிகளுக்கும் எங்களது நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்கள் அந்த மக்களை சென்று சந்தித்த பொழுது பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. அந்த சம்பவத்தில் இறந்தவர்களுடைய குடும்பத்தாரை சென்று சந்தித்த போது  பெரும்பாலானோர் விஜய் அவர்களுடைய தமிழக வெற்றி கழகத்தை சார்ந்தவர்கள் அல்ல, அந்த அரசியல் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்களும் அல்ல, என்பதையே அறிய முடிந்தது. அரசியல் சார்ந்தும்  அந்த நிகழ்விலே அவர்கள் பங்கெடுக்கவில்லை. பெரும்பாலான மக்கள் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்த அனுபவம் கொண்டவர்களும் இல்லை. பெண்களும் குழந்தைகளுமாக பெரும் எண்ணிக்கையிலே அங்கு உயிரிழந்திருக்கிறார்கள். பெருமளவில் பெண்கள், குழந்தைகள் பங்கெடுக்கக்கூடிய அரசியல் நிகழ்வு என்று தமிழ்நாட்டில் எங்களது அனுபவத்தில், நாங்கள் பார்த்த நிகழ்வுகளில் எங்கும் சந்தித்ததில்லை.

பொதுவாக ஆண்கள், அரசியல் உணர்வு பெற்றவர்கள், அரசியல் கருத்து கொண்டவர்கள், கட்சியில் இருக்கக்கூடியவர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அழைத்து வரப்படக்கூடியவர்கள் இப்படித்தான் அரசியல் நிகழ்வுகளுக்கு வருவார்கள். அவர்கள் பெரிய ஈடுபாட்டோடு அந்த தலைவர்களை சென்று சந்திக்க வேண்டும் என்கிற பெரும் விருப்பத்தோடு எல்லாம் முந்தி செல்லக்கூடியவர்கள் இல்லை. இங்கு வந்த கூட்டம் விஜய் அவர்களுக்காக வந்த பெரும்பான்மையான கூட்டமாக இருந்திருக்கிறது. அவரை சந்திக்க/பார்க்க வேண்டும் என்கின்ற ஒற்றை ஆசையில் வந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த ஒரு கலைஞனை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என வந்தவர்கள். நாங்கள் சந்தித்தவர்களில் பெரும்பாலானோர் அவருடைய முகத்தை பார்த்திருந்தால் கூட நாங்கள் அங்கிருந்து வெளியில் வந்திருப்போம் என்று கூறினார்கள். அதனை அரசியல் கூட்டத்திற்கு வரக்கூடிய ஒரு கூட்டமாக நாம் பார்க்கவே முடியாது. பெருந்திரளான மக்கள் அரசியலாக அங்கு அணிதிரள்வது என்பதை விட  ரசிகர்களாக அவரைப் பார்க்க வருகிறார்கள். அப்படி ரசிகர்களாக அவரைப் பார்க்க வரக்கூடிய இந்த பெரும் கூட்டத்தை அந்த கட்சி எப்படி நெறிப்படுத்தப் போகிறது என்கிற கேள்விதான் எழும்புகிறது.

இந்த சம்பவத்தில் அவர் தாமதமாக வந்து சேர்கிறார். அவருடனே வந்த கூட்டமும் சேர்ந்து அங்கே பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. அந்த கூட்டத்தை சமாளிக்க இயலாமல் அது ஒரு புறத்திலே தள்ளப்படுகிறது, மறுபுறத்தில் தள்ளப்படுகிறது. இப்படித் தான் அந்த மக்கள் பலியாகிறார்கள். அவர் சொல்லிய நேரத்திற்கு வந்திருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்திருக்காது எனவும் மதிய நேரத்தில் அங்கு பெரும்பாலான கூட்டம் இருக்காது எனவும் சந்தித்த மக்கள் கூறினார்கள்.

சனிக்கிழமை வார இறுதி சம்பள நாள். அதனால் பெருந்திரளான  கூட்டம் இருக்கும் எனக் கூறுகிறார்கள். இந்த சம்பவம் நடந்த பகுதியில் பெரும்பாலானவர்கள் உழைக்கும் மக்கள். அன்றாட கூலிகளாக இருக்கக்கூடியவர்கள். அதனால் சம்பள நாளாக இருந்த அன்று, சம்பளம் வாங்கிய மக்கள் அந்த மாலை நேரத்தில் சேர ஆரம்பிக்கிறார்கள். விஜய் வருகிறார் எனக் குறிப்பிட்ட நேரத்திலிருந்து ஏழு மணி நேரம் கடந்து வரும்பொழுது பெருந்திரளாக அந்தப் பகுதி மக்கள் திரள ஆரம்பிக்கிறார்கள். நாமக்கல்லில் இருந்து கரூருக்கு கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் அவர் பயணம் செய்து வரும்பொழுது ஒரு பெரும் கூட்டம் அவரோடு வருகிறது. இந்தப் பெரும் கூட்டம் ஏற்கனவே திரண்டிருக்கும் கூட்டத்தோடு சேர்கிறது. அதனால் மிகப்பெரிய நெருக்கடி அந்த இடத்தில் உருவாகிறது. அந்த கூட்டத்தில் இந்த மக்களைப் பாதுகாப்பதற்குரிய எந்த தயாரிப்பும், எந்த தரப்பினரிடமும் இல்லை.

இதை முதலில் விபத்தாக எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். விபத்து வரும்பொழுது எல்லாத் தரப்பிலும் தவறுகள் இருக்கும். எல்லாத் தரப்பிலும் இருக்கக்கூடிய தவறுகள் ஒன்று சேர்ந்து ஒரு சமயத்தில் நடந்து பெரும் விபத்தாக முடிந்திருக்கிறது. அந்த விபத்தில் அரசு தரப்பிலும் குற்றம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் மீதும் மிகப்பெரிய குற்றம் இருக்கிறது. இரண்டு தரப்புமே இதை பொறுப்பெடுத்துக் கொண்டு இதனை அரசியல் ஆக்காமல் இது போன்ற அவலம் அடுத்து நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளியில பேச வேண்டும். அது நடக்கவேயில்லை.

இங்கு பலியான 41 பேரின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் சாமானிய ஏழைகள். ஒரு ஜனநாயக அமைப்பாக நாங்கள் அங்கு பார்த்த அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுத் துறையில் ஒரு வேலையை உறுதி செய்து தாருங்கள் என வேண்டுகோள் வைத்தோம். ஏழை அப்பாவி மக்கள், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். காயம்பட்டவர்கள் என்றைக்கு மீள்வார்கள் என்றும் தெரியாது. அவர்களுக்கும் அரசின் எந்த துறையிலாவது வேலை போட்டுக் கொடுங்கள் என்று கேட்கிறோம். ஏனென்றால் அரசு அதிகாரிகள் இதை கவனம் எடுத்து முறைப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு அவர்களின் மேல் இருக்கிறது. பொதுவாகவே நாங்கள் ஒரு கூட்டம் நடத்துகிறோம் என்றால் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கொடுக்கிறார்கள். பொதுக்கூட்டம் நாங்கள் நடத்துகிறோமென்றால் இரண்டு பக்கமும் தெருவை அடைத்து விடுவார்கள். வெளிக்கூட்டம் உள்ளே வராமல் அடைத்து விடுவார்கள். ஆனால் இங்கு இவ்வளவு கூட்டத்தை அனுமதித்திருக்கிறார்கள். இவ்வளவு கூட்டம் சேர்வதற்கு அனுமதித்திருக்கக் கூடாது. விஜய்யை அனுமதித்திருக்கக் கூடாது. விஜய் கட்சிக்காரர்கள் தங்களுக்கு கேட்ட இடத்தில் அனுமதி தரவில்லை என்று சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எந்த நகரத்தில 20/30ஆயிரம் பேர் திரளக்கூடிய தெருக்கள் நகரத்தில் இருக்கிறது? கரூர் போன்ற ஒரு நகரத்தில் அவ்வளவு பேர் திரளக்கூடிய தெரு எங்கு இருக்கிறது? எங்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடு போடக்கூடிய காவல் துறை  எப்படி இவ்வளவு மக்கள் திரள்வதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக தவெக கட்சிக்காரர்கள் காவல்துறை அதிகமாக போடப்பட்டு பாதுகாத்து இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காவல்துறை பாதுகாப்பு என்பது எங்களைப் போன்ற அமைப்புகள், கட்சிகள், பெரிய கட்சிகளுக்கு கூட வெளியில் இருந்து எந்த வித தாக்குதலும் நடந்து விடக்கூடாது, எதிர்கட்சியிடம் இருந்து பிரச்சனை வந்துவிடக்கூடாது, கலவரம் செய்யக்கூடியவர்களை தடுத்து நிறுத்துவது போன்ற பாதுகாப்பு தான் காவல்துறை தரும்.

பொதுவாக அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்கள் தங்களுடைய  தோழர்கள், தொண்டர்கள் திரள் இருக்கக்கூடிய இடத்தில் காவல் துறையை அனுமதிக்க மாட்டார்கள்.. எந்த மாநாட்டுக்குள்ளும் உள்ளே சென்று காவல்துறை நெறிப்படுத்தறதுக்கு எந்த கட்சியும் அனுமதிக்காது. காவல்துறை உள்ளே வந்து ஏன் தடுக்கவில்லை என்று தவெக கேட்கிறது. இவர்களை எல்லாம் ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை கூட்டத்திற்குள் வரலாம் என்று தவெக சொல்கிறதென்றால், அது தவெக கட்சிக்காக, தனிப்பட்ட விதியாக அந்த கட்சி சொல்லட்டும். ஆனால் வேறு எந்த கட்சியும் அப்படி சொல்ல மாட்டார்கள். காவல்துறைக்கு உள்ளே என்ன வேலை என்றுதான் கேட்பார்கள். கூட்டத்தை நெறிப்படுத்தக்கூடிய பொறுப்பு கட்சி பொறுப்பாளர்களுக்கு மட்டுமே இருக்கிறது. கட்சி பொறுப்பாளர்களே கூட்டத்தை நெறிப்படுத்துவார்கள். கட்சித் தொண்டர்களே கூட்டத்தை நெறிப்படுத்தக் கூடியவர்கள். பல கட்சிகளில் தொண்டர் படை அமைக்கப்பட்டிருக்கிறது. அது  வரக்கூடிய கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காக இருக்கிறது. விஜய் தன் கட்சியில் நெறிப்படுத்துவதற்கு ஆட்களை உருவாக்குவதுதான் தீர்வாக இருக்க முடியுமே தவிர, உள்ளே வரலாம் என்கிற அனுமதியை காவல் துறையிடம் ஒப்படைக்க முடியாது.

காவல்துறையை அதிகமாக போட்டுருக்கலாமே என அண்ணாமலை உட்பட பலர் பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியினுடைய கூட்டத்துக்குள் காவல்துறையை நெறிப்படுத்த அனுமதிப்பாரா, அண்ணாமலை? தங்களை சுற்றி ஒரு 1000 பேர் கொண்ட கூட்டம் வருவதை ரசிக்கின்ற ஆட்கள். தங்களை சுற்றி அப்படியே கூட்டம் நிற்பதைப் பார்த்து ரசிக்கும் பிஜேபி ஆட்கள், அந்த இடத்திற்குள் புகுந்து காவல்துறை நெறிப்படுத்துவதை அனுமதிக்குமா? தலைவர்களை பாதுகாப்பதற்குதான் பாதுகாப்பாளர்கள் (ப்ரொடக்ஷன் ஃபோர்ஸ்) வைத்திருக்கிறீர்கள். கூட்டத்தை நெறிப்படுத்த உங்கள் கட்சி பொறுப்பாளர்களை நிற்க வைக்கிறீர்கள். நீங்கள் இப்போது வைக்கும் கோரிக்கையான காவல்துறை உள்ளே புகுந்து நெறிப்படுத்தலாம் என்பது, நாளை எல்லா இயக்கத்தினுடைய கூட்டத்திற்குள்ளும் காவல்துறை நுழைந்து அங்கு ஒரு அணி திரட்சி நடக்காமல் தடுப்பார்கள். அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? எல்லா கட்சியும் இதனை ஏற்றுக் கொள்வார்களா? அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? காவல்துறையை அழைத்து எங்கள் கூட்டத்தை நெறிப்படுத்துங்கள் என்கிற பொறுப்பை ஒப்படைப்பதற்கு அண்ணாமலை தயாராக இருக்கிறாரா? பிரச்சார பயணத்திற்கு செல்லும் இடமெல்லாம் காவல்துறை வந்து நெறிப்படுத்த வேண்டும், கட்சிக்காரர்கள் வேண்டாம் என்று ஒதுக்குவார்களா? 

காவல் துறைக்கு இவ்வளவு கூட்டம் அங்கு சேர்கிறது என்கிற எண்ணிக்கை தெரிந்த பின் அங்கு விஜய் பேச அனுமதித்திருப்பது தவறு. அங்கு நடந்த நெரிசல் போல கும்பமேளாவில் நடந்தது. இந்த நெரிசல் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்தான அறிவியல் ரீதியான ஆய்வு அறிக்கைகள் வந்திருக்கிறது. அந்த ஆய்வறிக்கையில் தெளிவாக பல குறிப்புகள் கொடுத்திருக்கிறார்கள். ஒரு கூட்டம் அளவுக்கு அதிகமாக நெருக்கி நிற்கும் பொழுது அந்த இடத்தில் ஏற்படும் நெரிசலில் இது போன்ற சாவு நடப்பதற்கான அனைத்து காரணங்களும் இருக்குமென்று  சொல்லிருக்கிறார்கள். அவ்வளவு கூட்டம் அங்கு போய் திரள்வதற்கும், நாமக்கல்லில் இருந்து இளைஞர்கள் பின்னால் வருவதற்கும் அந்த கட்சி அனுமதித்ததை காவல்துறை எப்படி அனுமதித்தது? 

முதலில் திரு. விஜய் அவர்கள், அவர் முகத்தை பார்க்க வேண்டும் என்று அத்தனை பேர் வருவதை ஒரு தலைவராக அவர் எப்படி அனுமதித்தார்? அத்தனை இளைஞர்கள் தலைகவசம் (helmet) போடாமல் கூட பின்னால் வந்தார்கள். சாகசம் செய்தார்கள். விஜய் சென்ற பேருந்தின் முன்னால் ஒருவன் விழுகிறான். இவர்களை எல்லாம் எப்படி விஜய் நெறிப்படுத்த போகிறார்? அவருக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள், விஜய் அவர்களே! நீங்கள் முற்பகல் 12மணிக்கு வருகிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். பிற்பகல் 7 மணிக்கு வந்திருக்கிறீர்கள். தாமதங்கள் என்பது இயல்பாக அரசியல் கட்சியில் நடப்பது தான். அப்படி தாமதம் ஏற்படுகின்றது என்றால், அதற்கு முன்பு அந்த நேரத்தில் அங்குக் கூடிய மக்களை நெறிப்படுத்துவதற்கு உங்கள் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் பேச வேண்டுமா, வேண்டாமா? நீங்கள் என்ன கருத்தை சொல்லப் போகிறீர்கள்? உங்கள் கட்சியினுடைய கொள்கை என்ன? நீங்கள் திமுகவை எதிர்த்து அவர்களுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை முன் வைக்கிறீங்களே, அதைக் குறித்தாவது உங்கள் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் விளக்கிப் பேச வேண்டுமா, இல்லையா? அப்படி எல்லாம் ஒரு நடைமுறை இருக்கிறது. இதையெல்லாம் செய்யாமல் பெரும் ரசிகர் கூட்டமாக நீங்கள் வழி நடத்துகிறீர்களா? ஏன் பேசவில்லை? உங்கள் கட்சிக்காரர்கள் தானே பேசப் போகிறார்கள். இப்படியான நடைமுறை இருந்தால் கூட்டத்தை நெறிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும்.

உங்களைப் பார்ப்பதற்கு இத்தனை பேர் வருகிறார்கள். வந்திருந்தவர்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது? ஒரு அம்மாவும், மகளும் 12 மணியில் இருந்து 7 மணி வரைக்கும் காத்திருந்திருந்து நெரிசலில் சிக்கி இறந்திருக்கிறார்கள். அவர் கணவர் அதைச் சொல்லி அழுகிறார். இன்னொரு இடத்தில் காலையில் 12 மணிக்கு வருவதாக சொன்னதால் காலை 9 மணிக்கே சென்று இருக்கறார்கள். ஒரு பெண்மணி காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணி வரைக்கும் தண்ணீர் குடிக்காமல் சாப்பிடாமல் அங்கு நிற்கிறார் என்றால் உங்கள் கட்சி என்ன ஏற்பாடு செய்தது? உங்கள் கட்சியின் தொண்டர்களாகவோ அல்லது ரசிகர்களாகவோ வந்திருக்கறார்கள். அவர்கள் மேல் உங்கள் கட்சிக்கு என்ன அனுதாபம் இருக்கிறது? அவங்களுக்கு உணவு, தண்ணீர், குடிநீர் ஏற்படுத்தி கொடுப்பது ஒரு குறைந்தபட்ச மனிதாபிமானம். கூட்டம் பெரிதாக வேண்டுமென்று கேட்கிறீர்கள். ட்ரோன் ஷாட் எல்லாம் வைத்து இப்படி பிரம்மாண்டமா காட்டும் போது, அந்த மக்கள் மீது அன்பு இருக்க வேண்டுமா, வேண்டாமா? இதற்கு தவெக கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டும். அந்த மக்களுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்ய முடியாத வசதியில்லாமலா இருக்கிறார்கள்? பொறுப்பாளர்கள் தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

பல மணி நேரமாக வெயிலிலே காத்திருந்த ஒரு அம்மா என்னிடம் பேசும் போது, அவர் காலையிலேயே இங்கு வந்து விட்டதாகவும் வெளியே போய் விட்டு வந்தால் திரும்ப அந்த இடம் தனக்கு கிடைக்காது என்பதனால் எங்கேயும் செல்லாமல் அங்கேயே நின்று விட்டதாகவும் சொன்னார். அப்படி என்றால் அந்தக் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் இவ்வளவு மணி நேரம் நிற்கும் அந்த மக்களை கவனித்துக் கொள்வதற்கு ஏதாவது ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. இது போன்ற தவறுகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய இழப்பை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

மின்சாரம் அணைந்து விட்டது, ஜெனரேட்டர் அணைந்து விட்டது என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் நிர்வகிக்க வேண்டியது கட்சி பொறுப்பாளர்கள். உங்களுக்கு இது முதல் கூட்டம் இல்லை. எல்லாக் கட்சியிலும் இதையெல்லாம் கவனிப்பதற்கு, உணவை கவனிப்பதற்கு, தண்ணீரை கவனிப்பதற்கு அங்கு இருக்கக்கூடிய வசதிகளை பார்த்துக் கொள்வதற்கு என எல்லாவற்றிற்கும் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள்.  பொறுப்பாளரை நியமிப்பார்கள். உங்கள் கட்சியில் அப்படியான நிகழ்ச்சி  உள்கட்டமைப்பு செய்ய, அதற்கான அத்தியாவசியமான விஷயங்களை பாதுகாப்பதற்குரிய அணி இருக்கிறதா?

திமுகவினர் சதி செய்திருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். திமுக உங்களுக்கு எதிராக இருக்கிறது என்றால் அந்த கட்சியை எதிர்கொள்ள உங்கள் கட்சி தயாராக இருக்கிறதா? நாங்கள் கேட்ட இடத்தில் அனுமதி தரவில்லை என்று சொல்கிறீர்கள். எங்களுக்கும் எங்கேயும் கேட்ட இடத்தில் அனுமதி தருவது இல்லை. நாங்கள் நீதிமன்றத்துக்கு சென்று வாங்கிக்கொண்டு வருகிறோம். நான்கு நாட்களுக்கு முன்பு கூட, தமிழக மக்கள் சனநாயக கட்சி பாலஸ்தீனத்துக்கு பேரணி நடத்தினார்கள். அதற்கு அனுமதி கிடையாது என்று கைது செய்தார்கள். இத்தனைக்கும் முதலமைச்சர் பாலஸ்தீனத்தின் இடர்பாடுகளை கண்டித்து அறிக்கை விட்டுருக்கிறார். வக்பு போர்டு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு  நிலைப்பாடு எடுத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த சட்டத்திற்கு எதிராக இருக்கிறது. ஆனால் அந்த சட்டத்தை கண்டித்து கூட்டம் நடத்துவதற்கு கோயம்புத்தூரில் அனுமதி கிடையாது. அதற்கு வழக்கு நடத்திதான் அனுமதி வாங்க வேண்டியிருக்கிறது.

கடந்த மாதம் நாங்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேரணிக்கு வேலூரில் கேட்ட பொழுது, காவல்துறை அதிகாரி,  நீங்கள் எப்படி வெளிநாட்டு பிரச்சனையை கொண்டு வந்து பேசலாம் என்று கேட்கிறார். அதற்கு அனுமதி கேட்டவர் வீட்டுக்கு ஆள் அனுப்பி இருக்கிறது காவல்துறை. இவ்வளவு அடக்கு முறை எதிர்கொண்டுதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். நாங்கள் இதற்கெல்லாம் காவல்துறையுடன் மல்லுக்கட்டிதான் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே என்ன நடக்கிறது என்றால் தவெக,  திமுகவில் தவறு  இருக்கிறது என்று சொல்வதும், திமுக தவெக மேல் தவறு சொல்வதும் மட்டுமே நடக்கிறது. முத்திரை குத்துதல் மட்டுமே நடக்கிறது. இது யாருக்கு லாபம்?

அடுத்த நிகழ்ச்சியை எப்படி சரியாக செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்வியை எழுப்ப வேண்டிய கடமை எங்களைப் போன்றவர்களுக்குதான் இருக்கிறது. நாங்கள்தான் மக்களுக்காக பேசுகிறோம். ஏனென்றால் அங்கு நாங்கள் போய் பார்த்த வீட்டில் எல்லாம் விஜய் அவர்கள் பேசுகின்ற அரசியல் கருத்துக்காக வரவில்லை. விஜய்க்காக மட்டும், அவருக்கான ஒரு ரசிகராக மட்டுமே வந்திருக்கிறார்கள். பல கட்சியை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறார்கள். எங்கள் அமைப்பில் இருக்கும் ஒரு தோழரின் உறவினர் அங்கு சென்று கூட்டத்தில் இறந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் திமுகக்காரர். கட்சி கடந்து சென்றிருக்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய செருப்புகளை பார்த்தாலே தெரிகிறது. எல்லாமே இளம் வயது குழந்தைகள் செருப்புகள் தான் கிடந்தது. அவர்களுடைய செருப்புகள் தான் அங்கு ஆயிரக்கணக்கில் கிடக்கிறது.

எங்கள் குடும்பத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள் கூட விஜய் ரசிகர்களாக இருக்கிறார்கள். பதின்பருவத்தில் இருக்கக் கூடியவர்களுக்கு விஜய் பிடிக்கிறது. பலர் விஜய் ரசிகர்கள் தான். அவருக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். நீங்கள் சொல்வதை எல்லாம் அவர்கள் ரசிக்கிறார்கள். உங்கள் மேல் பெரிய அன்புடன் இருக்கிறார்கள். அவர்களை நெறிப்படுத்த என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களை உங்கள் வண்டி பின்னால், உங்களுடைய கார் பின்னால், உங்களுடைய பேருந்து பின்னால் இரு சக்கர வாகனத்தில் வரச் சொல்லப் போறீங்களா? அதனை நெறிப்படுத்த என்ன செய்ய போகிறீர்கள்? அவர்கள் மரத்தின் மேல் ஏறுவது, டிரான்ஸ்பார்மர் மேல் ஏறுவது என எல்லாவற்றையும் நீங்கள் விரும்புகிறீர்களா? முதல் நிகழ்ச்சியல்ல இது. இரண்டு வருடமாக கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அந்த இளைஞர்களை எப்படி நெறிப்படுத்த போகிறீர்கள்? 

திமுக போன்ற பல கட்டமைப்புகளைக் கொண்டு நீண்ட காலமாக இயங்கக்கூடிய அதிகாரத்தில் இருந்த ஒரு கட்சியை எதிர்கொள்கிறேன், அதற்கு எதிராக நான் வந்து போராடுகிறேன் என்று சொல்கிறீர்கள். நாங்கள் பல கோரிக்கைகளை திமுக அரசை நோக்கி வைத்துக் கொண்டு போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். பல வழக்குகளை வாங்கி இருக்கிறோம். திமுக ஆட்சியில் நீங்கள் அமைதியாகிவிட்டீர்கள் என்று பலர் சொல்வார்கள். ஆனால் திமுக ஆட்சியில் அதிக வழக்குகளை வாங்கியவர்கள் நாங்கள் தான். அதிமுககாரர்களோ, பிஜேபிகாரர்களோ வாங்கவில்லை. தவெக கட்சியும் வாங்கியதில்லை. இப்போது வேண்டுமானால் இந்த கூட்டத்துக்கு வாங்கிருப்பீர்கள்.  ஆனால் போராட்ட வழக்குகளை வாங்கியது நாங்கள்.

கவின் ஆணவப் படுகொலையை எதிர்த்து போராட்டம் நடத்தி அதற்கும் வழக்கு வாங்கி இருக்கிறோம். மீனவர் பிரச்சனைக்கு போராட்டம் நடத்தி வழக்குகளை வாங்கி இருக்கிறோம். சாதி வன்கொடுமைக்கு எதிராகப் போராடி வழக்குகளை வாங்கி இருக்கிறோம். தொழிலாளர் பிரச்சனைக்கு போராடி வழக்குகள் வாங்கியிருக்கிறோம். மாஞ்சோலைக்காக போராட்டம் நடத்தி, அதற்கு மீண்டும் போராட அனுமதி வாங்க அல்லாடிக் கொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு ஆவணப்படுத்தலுக்கு கள ஆய்வு சென்றால் காவல்துறை அவ்வளவு நெருக்கடி கொடுக்கிறது. எங்களுக்கு இவ்வளவு நெருக்கடிகள் இருக்கிறது.

நான் தவெககாரர்களைப் பார்த்து கேட்கிறேன். உங்களுக்கு இடம் தரவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு சென்று போராடி வாங்கலாமே, என்ன தவறு? உங்களுக்கு வரக்கூடிய தொண்டர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அப்படி வாங்கி வெற்றிகரமாக நடத்துங்கள். 10 ஆயிரம், 20 ஆயிரம் என்று உங்களுக்கு மக்கள் கூட்டம் வரக் கூடிய கணக்கு தெரியும். அப்படியென்றால் நீங்கள் ஊருக்குள் எப்படி ஒரு அரசியல் கூடத்தை நடத்த முடியும்?  அப்படி தமிழ்நாட்டில் எந்த இடம் இருக்கிறது?  நீங்கள் ஊருக்கு வெளியேதான் நடத்த வேண்டும்.  பெரிய இடம் கொடுத்தால் உங்களுக்கு இன்னும் நல்லபடியாக செய்யலாம்.  

அந்த பகுதிக்காரரான ஒரு இளைஞர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்து 100 மீட்டர் அளவில் தான் விஜய் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார். அங்கு அத்தனை பேர் இறந்தது கூட அவருக்கு தெரியவில்லை. அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

இந்த கூட்டம் எப்படி நெரிசலாக மாறுகிறது என்றால், தனக்கு பிடித்த தலைவரோ அல்லது ஒரு நடிகனோ வரும்பொழுது அதைப் பார்ப்பதற்காக உள்ளே போகும் மக்கள் கூட்டம் எல்லாரும் ஒரு திசையை நோக்கி நகர்கிறார்கள். எத்துக்காட்டாக, ஒரு சாமி ஊர்வலமோ, தேர் வருகிறது என்றால், எல்லாரும் போய் ஒரே திசையில் பார்ப்பார்கள். அப்படி செல்லும் போது நெரிசலில் சிக்கி இறக்கிறார்கள். ஆற்றில் குளிக்கும் போது நெரிசல் வந்து இறக்கிறார்கள். தனக்குப் பிடித்த நடிகர் வரும்பொழுது எல்லோரும் ஒரே திசையை நோக்கி ஒன்றாக நகர்கிறார்கள். எனவே எவ்வளவு பெரிய இடம் கொடுத்தாலும், ஏன், 1000 ஏக்கர் நிலம் கொடுத்தாலும் கூட அந்த நடிகரைப் பார்க்க வேண்டும் என்றால் 500 அல்லது 50 ஏக்கர் தள்ளி நின்று கொண்டா பார்க்க முடியும்? பக்கத்தில் போய் நின்று தான் பார்க்க ஆசைப்படுவீர்கள். அப்படியே எல்லாரும் போகிறார்கள்.

நெரிசல் வரக் காரணமே, அவர் வாகனத்தைச் சுற்றி நடக்கக்கூடிய நெரிசல்தான். இதுதான் நடந்திருக்கிறது. அப்படி என்றால் எவ்வளவு பெரிய இடம் கொடுத்தாலும் இந்தப் பிரச்சனை வரும். இந்தப் பிரச்சினையை எப்படி தவிர்ப்பது? இதில் மாற்றி மாற்றி குறை சொல்லி, அடுத்த ஒரு சம்பவம் நடக்கும் வரைக்கும் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம் என்று இருக்கப் போகிறார்களா?

எங்களுக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கும் திமுக அரசு, அந்தக் கட்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? அந்தக் கட்சியில் இருந்து அதை ஒழுங்குபடுத்துவதற்கு ஆட்கள் இல்லை என்றால் அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் போய் அனுமதி வாங்கி வந்தாலும், அதற்கேற்ற எண்ணிக்கைதான் இருக்க வேண்டும்.  நாங்கள் சாதாரணமாக 300 பேர் வரும் இடத்தில் 500 பேர் வந்து விட்டால் உடனே எங்கள் மேல் வழக்கு போடுகிறது காவல்துறை. ஒரு 200 பேர் அல்லது 50 பேர் அதிகமாக கூட்டி விட்டோம் அல்லது எங்களுக்கே தெரியாமல் வந்துவிட்டார்கள் என்றாலே என்ன செய்கிறார்கள்? வழக்கு போட்டு விடுகிறார்கள். இதற்கு எப்படி அனுமதித்தீர்கள் என்கிற கேள்விதான் காவல்துறையிடம் கேட்க வேண்டியதாக எங்களுக்கு இருக்கிறது. 

திரு விஜய் அவர்களே, நீங்கள் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மாநாடு நடத்திவிட்டீர்கள். பல்வேறு இடங்களில் ’ரோட் ஷோ’ போய் விட்டீர்கள்.  நீங்கள் உங்கள் கட்சியை பல்வேறு மட்டங்களில் எப்படி வளர்த்தெடுக்கப் போகிறீர்கள். இப்படியேதான் கும்பல் மனநிலையில் வைத்திருக்கப் போகிறீர்களா? இப்படி வைத்திருப்பதை தான் விரும்புகிறீர்களா என்பதும் எங்களுக்கு தெரியவில்லை. இந்த சாவுக்கு எல்லாம் நீங்கள்தான் காரணம் என்கிற இடத்துக்குள் நாங்கள் வரவில்லை. உங்களிடம் கேட்க எங்களுக்கு கேள்விகள் இருக்கின்றது.

நீங்கள் திராவிடம், தமிழ் தேசியம் இரண்டுமே எங்களது இரு கண்கள் என்று  சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் பேசுகிற திராவிடத்திற்கும், திமுக பேசுகிற திராவிடத்திற்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் தான் பேச வேண்டும். நீங்கள் பேசுகிற தமிழ் தேசியத்துக்கும், நாங்கள் பேசுகிற தமிழ் தேசியத்துக்கும் என்ன ஒற்றுமை என்று நீங்கள்தான் பேச வேண்டும். நீங்கள் மக்கள் கோரிக்கைக்காக போராடுகின்ற பல அமைப்புகளோடு  கைகோர்த்து நின்று இந்த இரண்டு வருடத்தில் அரசியலை முன்னகர்த்தி  இருக்க வேண்டும். உங்கள் கட்சி தொண்டர்களுக்கு நீங்கள் அதை விளக்கி சொல்லி இருக்க வேண்டும். அது ஏன் நடக்கவில்லை? 

நீங்கள் மட்டும்தான் வருகிறீர்கள், நீங்கள் மட்டும் தான் பேசுகிறீர்கள். வேறு யாருமே பேச மாட்டார்களா? உங்கள் கட்சியில் இருப்பவர்களை எல்லாம்  அரசியல்படுத்த மாட்டீர்களா? நீங்கள் வரும் நேரத்துக்கு முன்பு வரை ஐந்து மணி நேரம், ஏழு மணி நேரம் நின்றிருக்கும் மக்களிடத்தில் பேசுவதற்கு நான்கு பேர் கூட உங்கள் கட்சியில் இல்லையா? கட்சி பொறுப்பாளர்களை பேச சொல்லலாம். உங்களுடைய கொள்கையை அல்லது நீங்கள் திமுகவின் மீது வைக்கக்கூடிய கேள்வியை விளக்கி பேச சொல்லலாம். உங்களைப் பார்க்க வருகிற இளைஞர்கள் அரசியல்படட்டும். அரசியல் கற்றுக்கொள்ளட்டும்.

ஏன் திராவிடத்தை ஆதரிக்கிறோம்?  திராவிடத்தினுடைய கூறுகள் என்னென்ன என்று உங்கள் கட்சி பொறுப்பாளர்கள் அங்கு திரண்டு இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களிடம் விளக்கிப் பேசட்டும். தமிழ்த்தேசியத்தை ஏன் ஆதரிக்கிறோம் என்று உங்கள் கட்சி பொறுப்பாளர்கள் அங்கு இருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களிடத்தில் பேசட்டும், வரவேற்கிறோம். ஏன் பேச மறுக்கிறீர்கள்?

நீங்கள் சென்னையில் பேசும்போது குறிப்பிட்ட பல செய்திகள் வரவேற்புக்குரியதாக இருந்தது. நீங்கள் ஈழத்தை குறித்து தீர்மானம் கொண்டு வருவதற்கு வலியுறுத்துவோம் என திமுக வாக்குறுதி கொடுத்ததே, செய்ததா? எனக் கேட்டீர்கள். சரியான கேள்வி கேட்டீர்கள். ஆனால் ஈழப் பிரச்சனை என்னவென்று உங்கள் கட்சி தொண்டர்களிடத்தில் நீங்கள் விளக்கி சொன்னீர்களா? சொல்ல வேண்டுமா, இல்லையா? யார் சொல்வார்கள்? உங்களுடைய கட்சியில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான இளைஞர்கள், உங்களைப் பின் தொடரக்கூடிய இளைஞர்களின் வயது 20 களில் இருக்கிறது. ஈழப் பிரச்சனை நடந்த பொழுது பிறந்தவர்களாக இருப்பார்கள் அல்லது இரண்டு மூன்று வயது கைக்குழந்தைகளாக இருந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்சனை குறித்து விளக்கி சொல்ல வேண்டியது உங்கள் பொறுப்பா, இல்லையா? இந்தக் கோரிக்கையில் திமுக தவறு செய்திருக்கிறது என்றால், கோரிக்கையின் உண்மை என்ன? ஏன் தேவை? என்று சொல்ல வேண்டியது யார்?

எத்தனையோ வாக்குறுதிகள் திமுக அரசு கொடுத்திருக்கிறது. ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. போராடிக் கொண்டு இருக்கிறோம். பரந்தூர் வேண்டாமென்று சொல்கிறோம். மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு நட்டயீடு கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கேட்கிறோம். அனகாப்புத்தூரில் வீடு இடிக்கப்பட்டது. அதேபோல 11000 வீடுகள் சென்னையில் இடிக்கப் போகிறார்கள். அதையெல்லாம் எதிர்த்து கண்டித்து நாங்கள் கேட்கிறோம். இதற்கெல்லாம் திமுக அரசை கேள்வி கேட்க வேண்டிய நீங்கள் என்ன செய்தீர்கள்? அனகாபுத்தூரில் உங்கள் கட்சியில இருந்து ஒரு அறிக்கை வரவில்லை.. 11000 வீடுகள இடிக்கப் போகிறார்கள், அத்தனை மக்கள் வெளியே போகப் போகிறார்கள். எங்களுக்கு யாராவது பேச மாட்டார்களா என்கிற ஆதங்கம் இருக்கிறது. நீங்கள் பேசினால் மகிழ்ச்சி. இந்தக் கோரிக்கைகளை வலுப்படுத்தி கொடுங்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலை நிரந்தரம் வேண்டுமெனக் கேட்கிறோம். வலுப்படுத்தி கொடுங்கள். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறோம். அதை விளக்கிப் பேசுங்கள். விளக்கக் கூட்டம் வையுங்கள், வரவேற்கிறோம்.

இன்றைக்கு என்ன நடக்கிறதென்றால், உங்கள் கூட்டத்தில் நடந்த பிரச்சனைக்கு ஆளும் கட்சியை குற்றம் சாட்டுவதற்கு, பாரதிய ஜனதா கட்சிக்காரர்கள் எல்லாம் ஆதரவு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆர்எஸ்எஸ்காரர்கள் எல்லாம் ஆதரவாக பேசுகிறார்கள். நீங்கள் ஆர்எஸ்எஸ்-யை கண்டித்து பேசி இருக்கிறீர்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். இன்று பிஜேபி காரர்கள் ஆதரவாக பேசுகிறார்கள். அண்ணாமலை ஆதரவாக பேசுகிறார். அப்படியென்றால் அந்த நிலைப்பாடும், உங்கள் நிலைப்பாடும் எவ்வளவு வேறுபட்டு இருக்கிறது என்று நீங்கள் தான் பேச வேண்டும். உங்கள் கட்சியை அவர்கள் சாப்பிட்டுவிட்டு போகட்டும் என்று இருக்கிறீர்களா?

இங்கிருக்கும் சனநாயக அமைப்புகள் பலவும் தேர்தலுக்கு வரும் அமைப்புகள் இல்லை. தேர்தலில் நிற்காமல் போராட்டத்தை முன்னிலைப் படுத்தக்கூடிய அமைப்புகள் இருக்கிறார்கள்.  மக்களுக்காக உழைக்கக்கூடிய அமைப்புகள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் ஆட்சி கழகம், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி என பலரும் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களோடு உரையாடல் வைத்து கோரிக்கைகளை பேசலாம். அந்தக் கோரிக்கைகளை முன் நகர்த்தலாம். ஆனால் அப்படி எல்லாம் நடப்பதில்லை. சினிமா அரசியலை பண்பாடாக மாற்றாதீர்கள். Politics is not about popularity sir. அரசியல் கொள்கைகளை நீங்கள் பேச வேண்டும். விளக்க வேண்டும்.

நீங்கள் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. பெருந்திரளான இளைஞர்களை கொண்டு வந்திருக்கிறீர்கள், அதற்கும் மகிழ்ச்சி. திராவிடம் தமிழ் தேசியம் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், மிகவும் மகிழ்ச்சி. அவர்களை அரசியல் படுத்துங்கள். உங்கள் கட்சியில் இருக்கிறவர்களை கூட்டம் போட சொல்லுங்கள், பேச சொல்லுங்கள் வரவேற்கிறோம். இதையெல்லாம் செய்யாமல் உங்கள் முகத்தை காட்ட மாட்டேன், வண்டியை மூடிக் கொள்வேன், திடீரென்று இப்படி காட்டுவேன் என்றால் இது என்ன சினிமாவா?

41 பேர் இறந்து போய்விட்டார்கள். அதற்கு நீங்கள் பொறுப்பு இல்லை. ஆனால் இதையெல்லாம் தவிர்க்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருந்தது.. நீங்கள் உங்களுக்கு பின்னால் வரக்கூடியவனை ரசிகனாக மட்டும் வைத்திருக்கப் போகிறீர்களா? அல்லது அரசியல் செயல்பாட்டாளராக மாற்றப் போகிறீர்களா? எங்களுக்கு பெரிய கவலையாக இருக்கிறது. நீங்கள் ஒரு இளைஞர் சக்தி.

ஆனால் உங்கள கட்சியின் பொறுப்பாளர் Gen z  புரட்சி நடத்துகிறோம் எனப் பேசுகிறார். புரட்சி என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? எந்தக் கோரிக்கைக்காக சார் புரட்சி செய்யப் போகிறீர்கள்? சொல்லுங்கள். எந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவற்காக, எந்த ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்காக புரட்சி செய்ய போகிறீர்கள்? சொல்லுங்கள். Gen Z  வைத்து நீங்கள்  புரட்சி பண்ணப் போகிறீர்களா? முதலில் உங்கள் கூட்டத்துக்கு வரக்கூடியவர்களைக் கட்டுப்படுத்தி ஒரு கொள்கையின் பக்கம் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களுடைய பொறுப்பாளரான ஆதவ் அர்ஜுனா பேசியதை ஆபத்தானதாகப் பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் ஆயிரம் போராட்டம் நடந்திருக்கிறது. ஸ்டெர்லைட் போராட்டம் நடந்திருக்கிறது, கூடங்குளம் போராட்டம் நடந்திருக்கிறது. முல்லைப் பெரியாருக்கு போராட்டம் நடந்திருக்கிறது, ஏழுதமிழர் விடுதலைக்கு போராட்டம் நடந்திருக்கிறது. நீட்டுக்கு போராட்டம் நடந்திருக்கிறது, ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடந்திருக்கிறது. இப்படி எந்த போராட்டத்திலேயும் நாங்கள் ஆதவ் அர்ஜூன் என்கிற பெயரைக்  கேட்டதே கிடையாது. என்ன புரட்சி செய்யப் போகிறீர்கள்? எல்லா போராட்டத்திலும் நாங்கள் இருந்திருக்கிறோம். அடக்கு முறையை எதிர்கொண்டு இருக்கிறோம். வழக்கு வாங்கி இருக்கிறோம். நீங்கள் எந்தப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? நீங்களா புரட்சி செய்யப் போகிறீர்கள்?

41 பேர் இறந்து போனது உங்களுக்கு தெரியும். 30 பேர் இறந்து போன செய்தி கேட்டதும் ஏன் ஆதவ் அர்ஜுனா அங்கு நிற்கவில்லை? கட்சித் தலைவர் வந்தால் கூட்டம் கூடும் என்று போய்விட்டார். பரவாயில்லை. ஆதவ் எங்கே போனார்? அவரும் ஓடிவிட்டார். உங்களை நம்பி வந்த மக்கள் அங்கே செத்து விழும் போது அதை விட்டு ஓடி போனீர்கள். இந்த வரலாறை யாரும் மறக்க மாட்டார்கள்.

நாங்கள் சென்று அந்த மக்களை சந்திக்கும் வரை உங்கள் கட்சியின் கடைநிலை பொறுப்பாளர் கூட அந்த மக்களை சந்திக்க வரவில்லை. இறந்து போனவர்களின் இறுதி நிகழ்வில் கூட பங்கெடுக்கவோ, அஞ்சலி செலுத்தவோ வரவேயில்லை. உங்கள் கட்சியை வைத்துக் கொண்டு தான் நீங்கள் gen z புரட்சி பண்ணப் போகிறீர்களா? உங்களை நம்பி வந்தால் என்ன செய்வீர்கள்? புரட்சிக்கென்று மக்கள் வீதியில் இறங்கினால் போலீஸ் அடிக்கும், சுடும். ஆதவ் அர்ஜுனா ஓடி விடுவார். சிக்குவது யார்? இந்த மூன்று நாளே கூட அவரைக் காணோமே?

மக்கள் கோபப்படுகிறார்கள் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் பாராட்டும் பொழுது இனிக்கிறது என்றால், கோபப்படும்போதும் வாங்கத் தயாராக இருக்க வேண்டும். உங்கள் மேல் இருக்கும் அன்பில் தான் மக்கள் வந்தார்கள். அவர்களை விட்டுவிட்டு இப்படி போனீர்கள் என்றால், அது எப்படி பொறுப்பாகும்? நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கூட, உங்கள் நிர்வாகிகளை அனுப்பி என்னாச்சு, என்ன ஏதாச்சு என்று கேட்டிருக்கலாமே?  உங்கள் கட்சி கூட்டத்துக்கு வந்தவர்கள் தானே அவர்கள். இந்த மாதிரியெல்லாம் எங்களுக்கு நடந்தால் நாங்கள் ஒரு காலத்திலும் விட்டுப் போனவர்கள் கிடையாது. உடன் நின்றவர்கள். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாங்கள் நின்றிருக்கிறோம். தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் நின்றிருக்கிறோம். ஸ்டெர்லைட் போராட்டத்தில் நின்றிருக்கிறோம். இப்படி அனைத்திலும் நின்றிருக்கிறோம்.  எங்கள் சட்டையைப் பிடித்து போலீஸ் இழுத்துக் கொண்டு போனதெல்லாம் நீங்கள் வீடியோவில் பார்த்ததில்லயா? எங்களை இழுத்துக் கொண்டு சென்று சிறையில் போட்டதோ, வழக்கு போட்டதோ,  சித்திரவதை செய்ததோ யாரும் பார்த்தது இல்லையா? அதெல்லாம் மீறித்தான் இன்று நாங்கள் நிற்கிறோம். இந்த மாதிரி ஆதவ் அர்ஜுனாவிற்கு நடந்திருக்கிறதா அல்லது உங்கள் பொறுப்பாளர்கள் இதனை எல்லாம் எதிர்கொண்டிருக்கிறார்களா? கடைசியாக அனகாபுத்தூரில் மக்கள் வீடு இடிக்கிற போதும் கூட மக்களுடன் சென்று நாங்கள் நிற்கவில்லையா? போலீசுடன் மல்லுக் கட்டவில்லையா? அப்பொழுது எல்லாம் எங்கு சென்றீர்கள்? புரட்சி செய்கிறேன் என்று சொல்கிறீர்கள். பணக்காரர்களா புரட்சி செய்ய கிளம்புவது? யாருக்கு எதிரான புரட்சி?  ஏழைக்கு எதிரான புரட்சியா?

நீங்கள் கட்சி ஆரம்பித்த இந்த இரண்டு வருடத்தில் தமிழ்நாட்டில் எந்த பெரிய போராட்டத்திற்கு பெரிய அளவிற்கு அணி திரட்டினீர்கள்? எந்தக் கோரிக்கையை வென்று காட்டினீர்கள்? கவின் ஆணவப் படுகொலை நடந்ததே பேசுனீர்களா? அனகாபுத்தூர் வீடு இடிப்பிற்கு, 11000 வீடு இடிக்கப்படப் போகிறதே என இதற்கெல்லாம் உங்கள் கட்சியில் இருந்து ஒரு அறிக்கை கூட வரவில்லை. நீங்கள் புரட்சி செய்யப் போகிறீர்களா?  உங்களைப் போன்ற பணக்காரர்கள் புரட்சியா அல்லது ஏழை பாட்டாளி மக்கள் புரட்சியா என்று பார்த்து விடுவோம்.

நாங்களும் திமுக அரசை விமர்சித்து போராட்டம் நடத்தி வழக்கு வாங்கி இருக்கிறோம். ஆதவ் அர்ஜூனா சார், நீங்களும் வந்து களத்தில் நின்று போராடி வழக்கு வாங்குவதற்கு துணிவு இருந்தால் வாருங்கள், சேர்ந்து கேட்போம். நாங்கள் எவ்வளவு கேட்டிருக்கிறோம். மாட மாளிகையில உட்கார்ந்து ட்விட் போட்டு புரட்சி பேசுவீர்களா? நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் நீங்கள் அப்படியே வருவீர்கள், முகத்தைக் காட்டுவீர்கள், அதன் பிறகு இரண்டு அறிக்கை போடுவீர்கள், கையசைத்து விட்டு கிளம்பி விடுவீர்கள். 41 பேர் இறந்தும் உங்கள் கட்சி பொறுப்பாளர்கள் போகவே இல்லை. இதெல்லாம் ஏன்?

திமுக கூட்டம் காட்ட வேண்டும், தவெக  கூட்டம் காட்ட வேண்டும் என்கிற போட்டி அரசியல் தான் நடக்கிறது. அதிமுக கூட்டம் காட்ட வேண்டும். பாஜக கூட்டம் காட்ட வேண்டும் என எல்லா கட்சிக்கும் போட்டி அரசியல் தான் நடக்கிறது.

எல்லா கட்சியினரும் ஏறி இறங்கும் போது பேட்டி கொடுக்கிறீர்கள். அது மட்டும் தான் ஊடகத்தில் வருகிறது. எங்களுடையதெல்லாம் வருவதில்லை. ஆனால் கேட்பவர்கள் எல்லாம், ‘நீங்கள் எங்கு போனீர்கள்’ என்று கேட்பார்கள். எங்களைப் பற்றிய எந்த செய்தியும் ஊடகத்தில் வராது. ஆனால் இந்தக் கேள்வியை எதிர்கொள்கிறோம்.. நாங்கள் போராட்டம் நடத்தும் பொழுது, வழக்கு வாங்கும் பொழுது, நீதிமன்றம் செல்லும் பொழுது என எதுவுமே ஊடகத்தில் பதிவாகாது. எங்களைப் பற்றி, எங்களுடைய போராட்டங்களைப் பற்றி, எங்களுடைய துயரங்களைப் பற்றி எதுவுமே ஊடகத்தில் காட்டப்படாது. ஆனால் எல்லா கட்சிக்காரர்களும் எங்கு போனீர்கள் என்று கேட்பார்கள். இங்கு தான் நிற்கிறோம். இங்குதான் போராட்டம் நடத்துகிறோம். வருடத்திற்கு 200/300 கூட்டமாவது நடத்துகிறோம், கலந்து கொள்கிறோம். நீங்கள் எல்லாம் சாதாரணமாக சமூக வலைதளத்தில் பதிவு செய்தாலே 5/10 லட்சம் பார்வையாளர்கள் வந்துவிடுகிறார்கள். அனைத்தையும் பணம் கொடுத்து வளர்க்கிறீர்கள். இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா? நீங்கள் பணம் கொடுத்து ’Paid promotion’ செய்கிற ஆட்கள். எங்களுக்கு அந்த வசதி கிடையாது. அதனால் எங்கள் செய்தி எல்லாம் வெளியே போவது இல்லை. ஆனால் நாங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறோம். வந்து பாருங்கள். என்னுடன் ஒரு நான்கு நாட்கள் வந்து பாருங்கள். எந்த செய்தி வெளியே போயிருக்கிறது என்று தெரியும். வந்து பாருங்கள்.

நாங்கள் எதற்காக கரூருக்கு சென்றோம்? ஓட்டு வாங்குவதற்காகவா? அல்லது நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோமா? அல்லது எங்கள் அமைப்பில் அங்கு லட்சம் பேர் இருக்கிறார்களா? அல்லது எங்கள் தொண்டர்கள் யாராவது இறந்து விட்டார்களா? இப்படி எதுவும் இல்லையே. அங்கு இறந்தவர்கள் அனைவரும் அப்பாவிகள். அன்றாடம் காட்சிகள். ஒன்பது பிள்ளைகள் இறந்திருக்கிறார்கள். அவ்வளவு பெண்கள் இறந்திருக்கிறார்கள். எப்படி எங்களால் தூங்க முடியும்? அப்பாவி மக்கள் அவர்கள் . இந்த மக்கள் எங்களை ஏற்றுக் கொள்கிறார்களா? மறுக்கிறார்களா? என்றெல்லாம் எங்களுக்கு கவலை கிடையாது. நாங்கள் மக்களை நேசிக்கிறோம் மக்களை மதிக்கிறோம். அவர்களுக்கு தண்ணீர் கொடுக்காமல், நாள் முழுக்க சோறு கொடுக்காமல் வெயிலில் நிற்க வைத்தது என்ன அரசியல்? இந்த மக்களை நீங்கள் நேசிக்கிறேன் என்று கதை விடுகிறீர்களா? நீங்கள் எப்படியும் மாற்றி மாற்றி குறைகள் சொல்லி அடுத்த கூட்டம் நடத்தப் போவீர்களே, அப்படி போகும் போதாவது இந்தத் தவறுகள் நடக்காமல் நிவர்த்தி செய்வதற்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்கள்.

தமிழ்நாட்டினுடைய காவல்துறை என்ன செய்யப் போகிறது என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். எந்த ஊரில் 10/20 ஆயிரம் பேர் திரள்வதற்கு இடம் இருக்கிறது? அப்படி இருந்த மெரினா கடற்கரையும் மூடி விட்டீர்கள். எங்களுக்கு முட்டு சந்து, சாக்கடை சந்து தான் கொடுக்கிறீர்கள். அங்கு தான் நிற்கிறோம். எங்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருக்கிறார்கள். அங்கு எல்லாம் இப்படி நடந்ததில்லை. நாங்கள் எல்லாம் சினிமா நட்சத்திரம் இல்லை, அதனால் இப்படி யாரும் நடந்து கொள்வதில்லை. காவல் துறை இது குறித்து பொறுப்பெடுத்து பதில் சொல்ல வேண்டும்.

இப்பொழுது எங்களுக்கு என்ன கவலை என்றால், காவல்துறை உள்ளே புகுந்து ஒழுங்குப்படுத்தி இருக்க வேண்டும் என்று தவெகவினர் சிலர் கூறுவது தான் கவலையாக இருக்கிறது. ஏனென்றால் இனி காவல்துறை ஒழுங்குபடுத்துகிறோம் என்கிற பெயரில் எங்கள் மேல் தான் பாய்வார்கள். நாளை நாங்கள் ஒரு சிறிய கூட்டம் நடத்தக் கூட அனுமதி கிடைக்காது. அதற்கு இத்தனை பேரை போடு, இதற்கு இத்தனை பேரை போடு, நாங்கள் ஆளைப் பார்க்க வேண்டும், நாங்கள் அங்கு இருக்க வேண்டும், பட்டியல் வேண்டும், அவர்களின் எண்கள் வேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடிகளை காவலர்கள் விதிப்பார்கள். நாங்கள் எப்படி கூட்டம் நடத்துவது? போலீஸ் அரசியல் கூட்டத்திற்குள் நுழைந்து கூட்டத்தை நெறிப்படுத்துவது என்கிற பண்பாடு தமிழ்நாட்டில எந்த கட்சியும் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எந்த கட்சி கூட்டத்துக்குள் போலீஸ் சென்று தொண்டர்களை நெறிப்படுத்துவதற்கு அனுமதிக்கும்?  திமுக, அதிமுகவிலிருந்து இருந்து எந்தக் கட்சியும் அனுமதிக்காது. தவெக கட்சி அனுமதிக்குமா? இதெல்லாம் ஒன்றிரண்டு பேர் பேசக்கூடிய கருத்துக்கள் எனக் கடந்து போக முடியாது. இது காவல் துறைக்கு வாய்ப்பாக கொடுக்கப்படும் கருத்துக்களாக இருப்பதனால் பேச வேண்டியிருக்கிறது.

41 பேர் இறந்து போயிருக்கிறார்கள் எத்தனையோ பேர் காயப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவு பேரையும் மருத்துவர்கள் பாதுகாத்து இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதிகாரிகளும் வேலை செய்திருக்கிறார்கள். வெகுமக்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். அதனால் அரசிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், உளவுத்துறையின், காவல்துறையின் தோல்விகள் பற்றி விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்தை அழைத்து இது குறித்தான ஒரு விதிமுறைகளை நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இது எல்லாருக்குமான பிரச்சனை. இது இரண்டு கட்சியினுடைய பிரச்சனையாக மாற்றி சதி இருக்கிறது, சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி பெரிதாக்காமல் என்ன நடந்தது என்ற உண்மையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் திமுக அரசு அமைத்திருக்கிறது. அதனை வரவேற்கிறோம். ஆனால் எவ்வளவு காலத்திற்குள் அந்த முடிவுகள் வரப்போகிறது? அப்படி வந்தால் நடைமுறைப்படுத்துவார்களா என்கிற கேள்வி எங்களுக்கு இருக்கிறது ஏனென்றால் அருணா ஜெகதீசன் ஆணையம் ஸ்டெர்லைட் பிரச்சனையின் போது அமைக்கப்பட்டு, அது காவல்துறை அதிகாரிகளை குற்றவாளிகள் என அறிக்கையும் கொடுத்து விட்டது. ஆனால் இதுவரை எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் இந்த ஆணையம் எப்பொழுது முடிவுகள் தரும்? என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்பதை தெரியப்படுத்துங்கள். 

அதேபோல திரு விஜய் அவர்களுக்கு கேட்டுக்கொள்வதெல்லாம், தயவுசெய்து உங்கள் கட்சியை கட்சியாக மாற்றுங்கள். ஒரு அரசியல் அமைப்பாக மாற்றுங்கள். அரசியல் படுத்துங்கள். நீங்கள் சொல்லும் கருத்துக்களை மக்களுக்கு சொல்லக்கூடிய வகையில் பரப்புரையை மேற்கொள்ளுங்கள். இதைப்போன்று ஒரு ’ரசிகர் மன்ற ஷோ’ போல தயவு செய்து நடத்தாதீர்கள். மக்கள், குழந்தைகள், இளைஞர்கள் அனைவரும் பாவம்.  இதை விட்டுவிட்டு டிவிட்டரிலும், சோசியல் மீடியாவிலும் சண்டை போடும் உங்கள் கட்சிக்காரர்களை நிறுத்தச் சொல்லுங்கள்.

திமுக தவெக ஐடி விங்குகள் இந்த சண்டை கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும். மக்கள் இறந்து போயிருக்கிறார்கள் அவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்ல வேண்டும் எல்லோருமே சேர்ந்து பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இனிமேல் இது நடக்காமல் இருப்பதற்கு அரசு தரப்பு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது? தவெக தரப்பு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? இது இரண்டும் தான் இப்பொழுது நம் முன் நிற்பவை. இரண்டையும் குறித்து தான் பேச வேண்டும். மனித உரிமை ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் கொண்ட குழுவை அமைத்து கள ஆய்வு செய்து ஒரு உண்மை அறிக்கையை வெளியில் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் முன்னெடுப்போம். நாங்கள் எந்த கட்சிக்கும் சார்பானவர்கள் கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததில் இருந்து மக்கள் சொன்ன கருத்துக்களை உங்களிடத்தில்  பகிர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த துயரம் இதனுடனே இறுதியான நிகழ்வாக இருக்கட்டும். இதற்கு மேலும் இந்த துயரங்கள் வேண்டாம்.

நெரிசல் குறித்து நிறைய ஆய்வுகள், ஆவணங்கள் வெளியே வந்திருக்கிறது. அதை எப்படி தவிர்ப்பது என்கிற ஆவணங்கள் இருக்கிறது. கும்பமேளாவில் இருந்து பல நெரிசல் சம்பவங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டு இதை தயாரித்திருக்கிறார்கள். தவெக கட்சியினர் அதை தயவுசெய்து படிக்கட்டும். தமிழ்நாடு காவல்துறை படிக்கட்டும். திமுக அரசு படிக்கட்டும். சமூக ஆர்வலர்கள் படிக்கட்டும். இந்த சமூக வலைத்தளத்தில் தோன்றியதை எல்லாம் எழுதிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் விடுத்து ஆய்வுப் பூர்வமானதை எடுத்துப் படியுங்கள். ‘ChatGpt’ செயலியை கேட்டாலே ஆயிரம் பட்டியல்கள் வந்து விடும். தயவுசெய்து படியுங்கள். அதன் மூலம் மக்களைப் பாதுகாக்கக்கூடிய வகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். இந்தப் பிரச்சனையில் எந்த சார்பும் இல்லாமல் மக்கள் சார்பில் நிற்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

கேள்வி – பதில்கள்

கேள்வி – ஆம்புலன்ஸ் கூட்டத்தில் வந்ததைப் பற்றி?

கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்ததை பெரிய பிரச்சினையாக சொல்கிறார்கள். கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருகிறது என்கிற தவறான பிரச்சாரத்தை முதலில் எடப்பாடி அவர்கள் பேசினார். இது முற்றிலும் தவறான மோசமான பிரச்சாரம். ஒரு தலைவர் பேசிக்கொண்டு இருந்தால் அங்கு ஆம்புலன்ஸ் போவதால் உரை கெட்டு போய்விடுமா? அங்கு கலைந்த கூட்டம் பிறகு ஒன்று சேராதா?  ஆம்புலன்ஸ் என்பது அவசரத் தேவைக்காக பயன்படுத்துவது அதை எதிரியாக மாற்றி விட்டீர்கள் என்றால், நாளை நோயாளிகளுக்கு பிரச்சனையாக மாறிவிடும். எங்களுடைய கூட்டங்களுக்கு கொடுக்கக்கூடிய முதல் விதியே ஆம்புலன்ஸ் வருவதற்கான வழியை விட்டுவிட்டு தான் மேடை அமைக்க வேண்டும் என்று சொல்வார்கள். சல்லிக்கட்டு போராட்டத்தில் கூட அத்தனை ஆம்புலன்சுகள் போனது. ஒழுங்காக வழிவிட்டோமா, இல்லையா? அதனால் கூட்டம் கலைந்து விட்டதா?  இவர்கள் உரையை ஆம்புலன்சு தடுக்கிறது என்று பேசுகிறார்களே? இவர்கள் என்ன, பேரறிஞர் அண்ணாவா அல்லது பெருந்தலைவர் காமராஜரா அல்லது தந்தை பெரியாரா? அப்படியான உரை நிகழ்த்தக்கூடியவர்கள் அல்ல. இப்படியான குற்றச்சாட்டு வைப்பவர்கள் ’பஞ்சு டயலாக்‘ தான் உரையாக பேசுகிறார்கள். இசுலாமியத் தலைவர்கள் கூட்டம் நடத்தும் பொழுது அங்கு பாங்கு ஒலித்தால் ஒரு ஐந்து நிமிடம் நிறுத்திவிட்டுத் தான் பேசுவார்கள். ஒரு ஆம்புலன்சு வந்தால் வந்து விட்டுப் போகட்டும். என்ன ஆகி விடப்போகிறது? ஆம்புலன்சை வில்லனாக மாற்றி இருக்கிறீர்கள். ஆம்புலன்சு டிரைவரை அடிக்கும் அளவிற்கு சென்றால் நோயாளிகளின் கதி என்ன ஆவது?

41 பேர் இறந்து போயிருக்கிறார்கள். காயப்பட்டவர்கள் 100 பேராவது இருப்பார்கள். அவர்களே வெளியில் கொண்டு போவதற்கு எத்தனை ஆம்புலன்சு வேண்டும்? ஒரு ஆம்புலன்சு இரண்டு பேரை ஏற்றினாலே 50 ஆம்புலன்சு தேவைப்படும். நீங்கள் ஆம்புலன்சை எதிரியாக மாற்றிவிட்டால் ஆபத்தாகி விடும். அப்படி ஆம்புலன்சு தடையாக இருக்கிறது என்றால் என்ன தவறு வந்து விடப் போகிறது? சாலையில் கூட்டம் நடத்தினால் ஆம்புலன்சு வரும். உங்க மாநாட்டுக்குள் ஆம்புலன்சு வரப் போவதில்லை. ஆனால் சாலையில் ஆம்புலன்சு வரும். அதனால் உங்கள் உரை தடைபடுகிறது என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை.

விஜய் கையில் பேப்பர் வைத்திருக்கிறார். நோட்ஸ் வைத்திருக்கிறார். சொல்லிக் கொடுப்பதற்கு நான்கு பேர் இருக்கிறார்கள். ஏதாவது கருத்துக்களை விட்டு விட்டால் அதை எழுதிக் கொடுப்பதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவையெல்லாம் இல்லாமல் அவர் பேசுவதில்லை. பெரிய கருத்துக்கள் எல்லாம் சொல்வதில்லை. அந்த கருத்துக்களை மக்கள் தவற விட்டு விட்டார்கள் என்ற வருத்தம் யாருக்கும் கிடையாது. அதனால் ஆம்புலன்ஸ் சேவையை எதிரியாக மாற்ற வேண்டாம். அதை மிகவும் தவறாக நான் பார்க்கிறேன்.

கேள்வி – சிபிஐ விசாரணை கேட்டிருப்பது பற்றி?

தவெக தரப்பில் சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை கேட்டிருக்கிறீர்கள். NTA சார்பில் தேசிய விசாரணை குழு வருகிறது. எத்தனை விசாரணை குழு வேண்டுமானாலும் வரட்டும். முடிவுகள் உடனடியாக கொடுக்கட்டும். அது அரசியல் நோக்கம் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் அதெல்லாம் அரசியல் சார்பானதாக இருக்கிறது. சிபிஐ அரசியல் கட்சி சார்பானது. பாராளுமன்ற குழு அரசியல் கட்சி சார்பானது. தமிழ்நாட்டில் எத்தனை மூத்த வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், செயல்பாட்டாளர் இருக்கிறார்கள். அவர்களை வைத்து ஒரு குழு அமைப்பதற்கு தவெகவிற்கு என்ன பிரச்சனை? சிபிஐ விசாரணை கேட்டீர்கள், சரி அது உங்கள் உரிமை. அதைப்போல இங்கு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருக்கிறோமா, இல்லையா? இவர்களையும் கொண்டு ஒரு விசாரணைக் குழு கேளுங்கள். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இருக்கிறார்களா, இல்லையா? இவர்களைக் கொண்டு கேளுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். நாங்களும் மனிதர்கள் தான். இல்லையா? கேளுங்கள், விசாரிக்கிறோம். ஓய்வு பெற்ற அதிகாரிகள், மக்கள் சார்ந்து இயங்கக்கூடியவர்கள் என எல்லோரும் இங்கு இருக்கிறோம். இப்படி இங்கு இருப்பவர்கள் யாரையும் நம்ப மாட்டீர்கள். நேராக டெல்லியைத்தான் நம்புவீர்களா?

டெல்லி பிஜேபியில் இருந்து யார் வந்தாலும் உள்நோக்கத்தோடுதான் வருவார்களே ஒழிய, அதில் மக்கள் மேல் எந்த நலனும் இருக்காது. முதலில் உத்திரப்பிரதேசத்தில் நடக்கிறதை கவனிக்கட்டும். 25 வருடத்தின் 3600 பேர் நெரிசலில் அங்கு இறந்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்குள்ளாக வட இந்தியாவில் மட்டும் 400 பேர் இதே போன்று இறந்திருக்கிறார்கள். இது எல்லாமே பாரதிய ஜனதா கட்சி ஆண்ட மாநிலங்கள். ரயில்வே பாலத்தில் ஒரு நெரிசல் நடந்ததாக ஒரு ஆய்வு இருக்கிறது. அதில் ஒருவர் தனது லக்கேஜை கீழே போட்டு விட்டார். அது கீழே விழுந்ததில் பலரும் அதே பக்கம் சாய்ந்ததின் காரணமாக 22 பேர் நெரிசலில் இறந்து போனார்கள். அதேபோன்று கும்பமேளா பற்றிய ஆய்வும் இருக்கிறது. அலை போன்ற, ஊஞ்சல் ஆடுவதைப் போன்ற கூட்டம் இருந்தாலே அங்கு நெரிசல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை ஆய்வுகள் சொல்கிறது. கரூரில் இந்தக் கூட்டத்திலும் கூட்டம் அலை மாதிரி ஆடும் சூழல் இருந்தது. அப்படி என்றால் கண்டிப்பாக நெரிசல் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகவே அமைந்தது. சிறியதாக ஏதாவது ஒரு சத்தம் எழுந்தாலே, ஒரு பட்டாசு வெடித்தது போன்று சத்தத்தை கேட்டாலே அங்கு நெரிசல் நடக்கும் வாய்ப்பு அதிகம். அந்த அறிக்கை எல்லாம் எடுத்து படித்துப் பாருங்கள். அதை செய்தியாக ஊடகங்கள் மாற்றுங்கள்.

ஒரு பக்கம் வருவது, இன்னொரு பக்கம் செல்வது என்று இரண்டு வழிகள் இருக்கும். ஆனால் விஜய் ஒரு பக்கம் வருவதாக அனைத்து கூட்டமும் அந்த பக்கம் நிற்கிறது. ஆனால் விஜய் வந்த வண்டி எதிர்பக்கத்தில் இருந்து வருகிறது. உடனே இந்த பக்கம் நின்றிருந்த கூட்டம் அந்த பக்கம் தாவுகிறது. அப்பொழுது கூடுதலான கூட்டம் இந்தப் பக்கம் வருகிறது. அது மட்டும் இல்லாமல் இவர் வண்டிக்கு பின்னால் 5000 பேர் வருகிறார்கள். அவர்கள் வேறு தள்ளுகிறார்கள். இந்த இறப்புகள் விஜய் பேசுவதற்கு முன்பே ஆரம்பித்து விட்டதாக மக்கள் சொல்கிறார்கள். பிறகு ஏன் இந்த கிரவுட் டர்புலன்ஸ் தடுக்கப்படவில்லை?

விஜய்க்கு பாதுகாப்பாக பவுன்சர் வைத்திருக்கிறீர்கள். தொண்டர்களுக்கு யார் பவுன்சர்? தொண்டர்களுக்கு அப்படியாக எந்த அணியும் உருவாக்கவில்லை. தங்களை மட்டும் பாதுகாப்பது என்ன தலைமைத்துவமாக இருக்க முடியும்? – இவ்வாறு தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விரிவாக கரூர் கள ஆய்வில் கிடைத்த தகவலின் படி பேசினார். 

மேலும் கரூர் கள ஆய்வுக்கு பின்னும் அங்கும் பத்திரிக்கையாளரை சந்தித்தார். அதைத் தொடர்ந்து சத்தியம் தொலைக்காட்சி, The Roster News, மின்னம்பலம் வலை ஊடகங்களுக்கும் பேட்டி அளித்தார். அது குறித்த இணைப்புகள் கீழே:

1) 28-09-2025 அன்று கரூரில் அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு மருத்துவமனையின் வெளியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

2) 30-09-2025 அன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு

3) 30-09-2025 அன்று சத்தியம் தொலைக்காட்சியில் திருமுருகன் காந்தி தோழருடன் நேர்காணல்

4) 30-09-2025 அன்று The Roster news youtube சேனலில் திருமுருகன் காந்தியின் நேர்காணல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »