கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகள் குறித்து தோழர் திருமுருகன் காந்தி நேர்காணல்

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் கரூர் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் தெரிவித்ததோடு கள ஆய்வும் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் மற்றும் பொறுப்பாளர்களின் மோசமான நிர்வாகம் குறித்தும், பாஜகவின் அரசியல் குறித்தும், நியூஸ் கிளிட்ஸ் சேனலுக்கு அக்டோபர் 2, 2025 அன்று தோழர். திருமுருகன் காந்தி அளித்த நேர்காணலின் தொகுப்பு.

பத்திரிக்கையாளர்: நியூஸ் கிளிட்ஸ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய சிறப்பு நேர்காணலில் நம்மோடு மே பதினேழு இயக்கத்தின் தலைவர் தோழர். திருமுருகன் காந்தி அவர்கள் இணைந்திருக்கிறார். வாருங்கள் அவரை வரவேற்று நிகழ்ச்சிக்குள் போகலாம்.

பத்திரிக்கையாளர் கேள்வி: வணக்கம். இந்த கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக “நீதான் பொறுப்பு, நான்தான் பொறுப்பு. இதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறது” என அரசு தரப்பில் ஒரு பக்கம். தவெக தரப்பில் “எங்கேயோ இறந்தவர்களை கொண்டு வந்து போட்டு எங்கள் கணக்கில் எழுதுகிறார்கள்” என தவெக வழக்கறிஞர்கள் பேசுகிறார்கள். அதன்பின் தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில்/ இடத்தில் பிரச்சாரம் செய்தோம். அதை தவிர வேறு என்ன தவறு செய்தோம் என குற்றச்சாட்டு முன்வைக்கிறார். எங்கே தவறு நடந்தது என பார்க்கின்றீர்கள்?

தோழர். திருமுருகன் காந்தி பதில்: முதல் விடயம், எந்த அரசியல் நிகழ்வுக்கும் அந்த கட்சி, அதனுடைய நிர்வாகிகள்தான், அந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறவர்களுக்கான பாதுகாப்போ தேவைகளையோ உருவாக்க வேண்டும். கட்சி தலைவருக்கு எப்படி பாதுகாப்பு தருகிறோம், மேடைக்கு எப்படி முக்கியத்துவம் தருகின்றோமோ, அதேபோலத்தான் வருகின்ற/ பங்கேற்கின்ற மக்களுக்கும் அந்த பாதுகாப்பும், வசதிகளையும் செய்து தர வேண்டும். அப்படி செய்யும் பொழுது, வெளியில் உங்களுக்கு எதிராக இருக்க கூடியவர்கள், உங்களுக்கு எதிர்கட்சிகளாக இருக்கக்கூடியவர்கள், அல்லது உங்களுடைய கூட்டங்களில் குழப்பம் கொண்டுவர நினைக்க கூடியவர்களை தடுக்க முடியும். எல்லா கட்சிகளுக்குமே ஒரு எதிர்கட்சி உண்டு. எல்லா இயக்கங்களுக்கும் எதிர் தரப்பினர் உண்டு. எல்லாரும் அந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசுகிறோம் எனில், நாங்கள்(மே 17) நடத்தக்கூடிய கூட்டங்களில் அவர்கள்(பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்) பிரச்சனை பண்ணுவதற்கு வருவார்கள். அதை யார் கையாளுவார்கள் என்றால், எங்கள் இயக்கத் தோழர்கள்தான் கையாளுவார்கள். ஒரு மாநாடு நடத்துகிறோம். அதில் பெரிய அளவு எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்கிற சமயத்தில் நம் அமைப்பினுடைய தன்னார்வலர்கள் (volunteers) அல்லது அமைப்பினுடைய பொறுப்பாளர்கள் என அனைவருக்கும் தனியான உடை (T-shirt/batch) அணிந்திருப்பார்கள். அவர்கள்தான் எங்கே என்ன நடக்கிறது? கூட்டத்துக்குள் தேவையில்லாத ஆள் யார் பிரச்சனை செய்கிறார்கள் என்பதை எல்லா இடத்திலும் சென்று பார்ப்பார்கள்.

பொதுவாகவே என்ன நடக்கும் எனில், கூட்டங்களில் குடித்துவிட்டுவந்து (போதை) பிரச்சனை பண்ணுவார்கள். அவர்கள் முன்னாடி வந்து நின்று கத்துவார்கள். 10 பொதுக்கூட்டம் நடக்குமெனில் இது போன்ற நிகழ்வுகள் ஆறு/ஏழு பொதுக்கூட்டத்தில் நடக்கும். அப்போது அதை யார் கையாள்வார்கள் எனில், நம் இயக்கத்தை சார்ந்த பொறுப்பாளர் கையாள்வார்கள். அவர்களைக் கூட்டி கொண்டு போய் காவல்துறையிடம் ஒப்படைப்பார்கள். காவல்துறை அந்த கூட்டத்திற்கு வெளியேதான் இருப்பார்கள். கூட்டத்துக்குள் காவல்துறை வராமாட்டார்கள், அதை எந்த அரசியல் கட்சியும் அனுமதிக்காது. இது மிக இயல்பான ஒன்று. இதை நாம் எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கரூரில் 10,000/ 20,000 பேர் வருவார்கள். பெரியளவில் பெண்கள் குழந்தைகள் இருக்கிறார்கள் எனில், உங்கள் (தவெக) கட்சி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர், மண்டல பொறுப்பாளர், பகுதி பொறுப்பாளர், வட்ட பொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர் போன்றோர்தான் அங்கே நின்று நிர்வாகம் செய்ய வேண்டும். மக்களுக்கு கட்சி பொறுப்பாளர்களை வேறுபடுத்தி காட்டுவதற்கு தனியான உடையோ (T-shirt/batch) என்கிற ஒன்றை கட்சி அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். அந்த முறையை / அணியை தவெக உருவாக்கி இருக்க வேண்டும். சிறிய அமைப்பு கூட இதை செய்வார்கள். இதுதான் அரசியல் அடிப்படை.

உங்கள் அமைப்பை பாதுகாப்பதற்கு உங்களிடம் ஒரு படை இருக்க வேண்டும். உங்களுக்கான ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். பொறுப்புகள் இருக்க வேண்டும். அதாவது யார் எதை பார்க்கனும்? மேடையை பார்ப்பது யார்? ஒலிப்பெருக்கியை பார்ப்பது யார்? வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது யார்? தலைவர்களுக்கு டீ தருவது யார்? அவர்களை எங்கே உட்கார வைப்பது? வரும் தலைவர்களுக்கு இருக்கையை சரிசெய்வது யார்? இதைத் தவிர மேடைக்கு பின்னால் ஏதாவது நடக்க போகிறதா? அதை எப்படி கையாளுவார்கள்? வாகனம் நிறுத்தும் இடம் எங்கே? என இத்தனையும் பார்ப்போம். இதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (Event Management) மாதிரி வணிகமாக வேலை செய்யக்கூடிய ஆட்களுக்கு கொடுத்தீர்கள் எனில், கூட்டநெரிசலில் மக்கள் கடினப்படுவதை பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். தலைவரை பாதுகாப்பதை மட்டுமே பார்ப்பார்கள். விஜய் மாநாட்டில் ரசிகர்கள் வரும்போது தூக்கி வீசும் வீடியோ இதையே வெளிக்காட்டுகிறது.

அதிமுக, திமுக அல்லது கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் தன்னுடைய தொண்டர்களை இப்படி தூக்கி வீசி இருந்தால் என்ன ஆகியிருக்கும்? பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். அந்த பொறுப்பாளர்கள் பதில் சொல்ல வேண்டி வந்திருக்கும். கட்சி மேலிடம் மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்திருக்கும். இப்படி எதுவும் நடக்கவில்லை, எந்தக் கட்சிகளிலும் நாம் பார்க்கவில்லை. திமுக எதிராகத்தான் தவெக அரசியல் செய்கிறார்கள் என்றால், திமுகவிலிருந்து எங்களுக்கு சதி /பிரச்சனை செய்கிறார்கள் என எதிர்பார்த்து இருந்தால், இத்தனை நிகழ்ச்சி செய்துள்ளீர்கள் இல்லையா, அப்போது இந்தமாதிரியான நிகழ்வை கணிப்பதற்கு கூட முடியாமல் இருக்கிறீர்கள். அப்படியெனில், தவெக இதற்கான தயாரிப்புகள் செய்திருக்க வேண்டும். குறை சொல்லக்கூடாது.

கேள்வி: ஆனால் திரு.விஜய் அவர்கள், வீடியோவில் ’இது கிட்டத்தட்ட சதிதான்’, இதற்குப் பின் முழுக்க முழுக்க திமுகதான் இருக்கிற மாதிரி அறிவிக்கிறாரே?

பதில்: அவர் ஒரு கட்சித் தலைவர். இப்படி ஒன்று சொல்கிறார் எனில், அதற்கான ஆதாரங்களை பொதுவெளியில் வைக்க வேண்டும். இது இரண்டு கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. இரண்டு தலைவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை இல்லை. இறந்து போனது வெகுமக்கள், பெண்கள், குழந்தைகள். உங்கள் கட்சிக்கே தொடர்பு இல்லாதவர்கள். அவர்கள் விஜயை பார்க்க வந்த ரசிகர்கள். இதை உங்களுக்கும் (விஜய்) திமுகவினுடைய தலைவருக்குமான பிரச்சனையாக சுருக்கி நிறுத்துகிறார்கள். இதை அரசியலாக நாம் பார்க்க முடியாது, சினிமாத்தனமான ஒன்றாகத்தான் நாம் பார்க்க முடியும்.

நீங்கள் (விஜய்) ஒரு சினிமாக்காரர் இல்லையா? வீடியோ இல்லாமல் எங்கேயும் நகர மாட்டீர்கள். எல்லா கோணங்களையும் வீடியோ வைத்து பதிவு செய்யக்கூடியவர்கள். ஊடகங்கள் உங்களையே சுற்றிவருகின்றன, அதுவும் பதிவாகும். உங்கள் பக்கம் அநீதி நடந்து அதனால் அப்பாவிகள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கூறினால், அதற்கு ஒரு கட்சிதான் காரணம் எனில், அதை ஆதாரப்பூர்வமாக / உறுதிப்பூர்வமாக சொல்லுங்கள். அப்போது உங்களை ஆதரிக்கிறோம். நீங்கள்(தவெக) போராட பயந்தால் கூட நாங்கள் போராடுகிறோம். அதில் எங்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. ஆனால் அதற்கான எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியவில்லை. கேட்டால் காவல் துறைதான் வர வேண்டாம் என சொல்லிவிட்டது என்கிறீர்கள்.

அப்போது காவல்துறை சொல்வதெல்லாம் செய்துகொண்டு இருப்பீர்களா? எங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ அதை நாங்கள் செய்வோம். காவல்துறை தடுத்தாலும் நாங்கள் செய்வோம். அதற்கான வழக்குகளை வாங்குகிறோம். காவல்துறை போராட்டத்துக்கு போகாதீர்கள், அதை செய்யாதீர்கள், இதை செய்யாதீர்கள், போராட்டத்தை நடத்தாதீர்கள் என சொல்லும். அதை மீறித்தான் செய்கிறோம். அது உரிமை சம்பந்தப்பட்ட விடயம்.

உங்களுடைய தொண்டர்கள் இறந்து போயிருக்கிறார்கள் அல்லது உங்களைப் பார்க்க வந்தவர்கள் இறந்து போயிருக்கிறார்கள் எனில், அதைத் தடுப்பதற்கான வழிமுறை கண்டறிந்து நின்று பேசியிருக்க வேண்டும். ஆயிரம் இருந்தாலும் மக்கள் கொல்லப்படும் பொழுது, ஒரு தலைவர் அந்த களத்தை விட்டு வெளியே ஓடுவதை தமிழ்நாட்டினுடைய வரலாற்றில் பார்க்க முடியாது.

கேள்வி: ’அங்கே போனால் தேவையில்லாமல் இன்னொரு வழக்கு ஆகலாம், மீட்புப் பணிகளில் பாதிப்பு ஏற்படலாம்’ என்கிற மாதிரிதான் விஜய் சொல்கிறாரே?

பதில்: களத்தில் உங்கள் கட்சி பொறுப்பாளர் இல்லையா? எல்லாமே நீங்கள் மட்டும்தானா? ஒற்றை மனித இராணுவமா அது? நாம் என்ன சொல்கிறோம் எனில், கரூரில் ஏதோ ஒரு இடத்தில் உங்களுடைய கேரவேனில் (caravan) தங்கிக்கொள்ளுங்கள். அல்லது பொறுப்பாளர் வீடுகள் இருக்கும் அங்கே தங்கலாம். அல்லது ஹோட்டலில் தங்கலாம். சினிமா ஷூட்டிங் போனால் தங்குகிறீர்கள் அல்லவா! பொறுப்பாளர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுன் போன்றவர்களெல்லாம் இருக்கிறார்கள் இல்லையா, அந்த ‘புரட்சியாளர்’ களத்திற்கு சென்று வேலை பார்க்கட்டும். தமிழ்நாட்டு போராட்ட களத்தை விட்டு தங்களை நம்பி வந்த மக்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது, அதை விட்டு வெளியேறக்கூடிய யாரும் தலைவன் அல்ல, தலைவன் ஆவதற்கான தகுதியே கிடையாது.

முள்ளிவாய்க்காலில் அத்தனை மக்களை பாதுகாப்பதற்காக நின்று உயிர் கொடுத்த அந்த மரபுதான் தமிழர் மரபு, அதுதான் தமிழ்தேசிய மரபு. தந்தை பெரியார் மற்றவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு அவர் சிறைக்கு வெளியில் இருந்தெல்லாம் பார்த்தில்லை. அவரும் முதல் ஆளாக சிறைக்கு சென்று சித்திரவதைகளை அனுபவித்தவர். ஒரு தலைவனுக்குரிய தகுதி அதுதான். அவர்தான் அனைத்து பிரச்சினைகளும் எதிர்கொள்ளக்கூடிய ஆள். ஒரு தலைவன் என்கின்றவன் இந்த சமூகம் கொடுக்கக்கூடிய நெருக்கடிகளையோ எதிரி கொடுக்கக்கூடிய சிக்கல்களையோ எதிர்கொண்டு போராடி வீழ்த்தி தன் மக்களை பாதுகாக்கத் தெரிந்தவன் தான்  தலைவன்.

கேள்வி: இந்த விவகாரத்தில் விஜய் எப்படி கையாண்டார் என நினைக்கிறீர்கள்?

பதில்: அவர் எங்கே கையாண்டார்? அந்த நெருக்கடியிலுள்ள மக்களை மீட்பதற்கோ, இறந்த மக்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தக்கூடிய சமயத்தில் கூட கட்சி பொறுப்பாளர்கள் போகவில்லை. அவர்கள் சென்று அஞ்சலி செலுத்தக்கூடிய சம்பவம் நடக்கவேயில்லை.

கேள்வி: அதற்கு விஜய், “சிஎம் சார் (முதல்வர்) எதுவாக இருந்தாலும் என்னிடம் நேரடியாக மோதுங்கள், ஏன் என்னோட அப்பாவி தொண்டர்களை கைது செய்கிறீர்கள்” என நேரடியாக எச்சரிக்கையெல்லாம் விடுகிறாரே?

பதில்: அப்படியெனில் சி.எம் (முதல்வர்) என்ன பண்ணார் என சொல்லுங்கள் தெரிந்துகொள்வோம். ஒரு பெரிய தவறை (40 பேர் இறந்து போகிற அளவுக்கு) சி.எம் ஏதோ உங்களுக்கு பண்ணிவிட்டார் என சொன்னீர்கள் எனில், அதை பற்றி சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறதா இல்லையா? ஆதாரத்தை கொடுங்கள். அதை ஏன் மறைக்கிறீர்கள். எல்லா மக்களுக்கும் தெரியட்டும். 40 பேர் இறந்துள்ளனர். இந்தத் தவறை சரி செய்வதற்கு நீங்கள்(விஜய்) என்ன முயற்சி எடுத்தீர்கள். இங்கே இருக்கக்கூடிய சனநாயக அமைப்புகளிடம் ஏதாவது பேசினீர்களா? அப்படி எதுவுமே இல்லையே! மூன்று நாட்களாக எந்த செய்தியுமே அந்த கட்சி (தவெக) தலைவர்களோ பொறுப்பாளரோ எதுவுமே பேசவில்லை.

அவர் பின்னால் எதுவுமே புரியாமல் இவ்வளவு இளைஞர்கள் போகிறார்கள். அவர்களுக்கு இரண்டு வருடமாக எந்தவிதமான அரசியல் பயிற்சியும் தராமல் வைத்துள்ளனர். “தமிழ் தேசியம் என சொல்றீங்க, எது தமிழ் தேசியம்? இந்திய தேசியத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் என்ன வேறுபாடு என பேசுங்கள், திராவிடம் பற்றி சொல்றீங்க, திராவிடத்திற்கும் திமுகவுக்கும்  வேறுபாடு மட்டும் அல்ல, உங்கள்(விஜய்) திராவிடம் எப்படி பாஜகவை கையாள போகிறது எனப் பேசுங்கள்.

கேள்வி: அரசியல் பயிற்சி பெறாத இளைஞர்கள் அதெல்லாம் கேட்கின்ற இடத்தில்தான் இருக்கின்றார்களா?

பதில்: தவெக தலைவருக்கு பொறுப்பு இருக்கிறது. நீங்கள்தானே அறிவித்தீர்கள், மாநாடு நடத்துகின்றீர்கள், அப்போது கருத்துக்களை சொல்லவேண்டும் அல்லவா! கருத்துக்களைப் பேசவேண்டும், அறிக்கைகள் வர வேண்டும். குறிப்பாக இந்தமாதிரி இளைஞர்களாக இருந்தவர்கள்தான் இவ்வளவு பெரிய அரசியல் இயக்கங்கள் எல்லாம் உருவாக்கினார்கள். இது போன்ற லட்சக்கணக்கான மாணவர்கள் வீதிக்கு வந்து அன்றைக்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்தினார்கள். இளைஞர்கள்தான் இந்தி  எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். இதே கல்லூரி மாணவர்கள்தான் ஈழ போராட்டத்துக்காக பாலசந்திரன் படுகொலையை பார்த்து கட்டுப்பாட்டுடன் போராடினார்கள். இதையெல்லாம் இந்த சமூகத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது அந்த கட்சி (தவெக) தலைமையைத்தான் நாம் கேள்வி எழுப்புகிறோம். ரசிக மனப்பான்மை மிக ஆபத்தானது. இப்படிப்பட்ட ஒரு பண்பை வளர்த்து எடுப்பது ஒரு கட்சியா? என்றாவது ஒரு நிகழ்ச்சிக்கு விஜய் வரார் போறார் எனில் பரவாயில்லை. இரண்டு வருடமாக இதேமாதிரி ஒரு மனநிலையை அந்த கட்சி பாதுகாக்கிறது. அரசியல் பயிற்சியற்று இப்படியே இருங்கள், மாறி விடாதீர்கள் எனக் கூறுவது போல் கட்சித் தொண்டனை வைத்திருந்தால் அது ஆபத்தானது.

தவெக முதல் மாநாட்டில் அசம்பாவிதங்கள் நடந்ததைப் பார்த்தோம். ஆர்வக்கோளாறில் இளைஞர்கள் வருகிறார்கள். பிறகு மதுரையில் மாநாடு நடந்தது. அதில் ஒரு கொடிக்கம்பமே விழுந்தது. ஒரு முழுமையான பொறியாளர் இல்லை, சரியான தொழில்துறை ஆட்கள் அதில் வேலை செய்யவில்லை. அதுவே மாநாடு நடக்கும் போது, மக்கள் இருக்கும் பொழுது விழுந்திருந்தால், எவ்வளவு பெரிய அசம்பாவிதம் வந்திருக்கும். அதுக்கு யாரை குறைச்சொல்லி இருப்பீர்கள்? இது போன்ற தவறுகளை நிவர்த்தி செய்ய என்ன முயற்சி எடுத்தீர்கள் எனத் தெரியாது. ஆனால் உங்கள் தொண்டர்களை இரண்டு ஆண்டுகளாக இப்படித்தான் வைத்துள்ளீர்கள்.

தற்போது நாங்கள் விஜயை நோக்கி கேள்வி எழுப்பினால், திமுக ஆதரவாளர் எனப் பேசுவார்கள். அல்லது திமுகவை கேள்வி கேட்டால் வேறு யாருக்கோ  ஆதரவு என முத்திரை குத்துவார்கள். இந்த முத்திரைகளால் வெகு மக்களுக்கு எந்தப் பலனும் கிடையாது. 41 பேர் இறந்து போனால் கேள்வி கேட்பார்கள். நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.

வேங்கைவயலுக்கு திமுகவை கேள்வி கேட்டோம். வடகாடு பிரச்சனைக்கு திமுகவை கேள்வி கேட்டோம். கவின் படுகொலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கூறி மே 17 இயக்கம் மறியல் செய்து வழக்கு வாங்கினோம். இத்தனையும் செய்துள்ளோம். தவறு நடக்கும் பொழுது கட்சி சார்பு இல்லாமல் பொதுமக்களுக்காக நின்று யோசிக்க வேண்டும்.  பொதுமக்களுக்காக நின்று பேச வேண்டும். அதுதான் அரசியல் பொறுப்பு.

கேள்வி: இந்த விவகாரத்தில் பாஜக கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துகின்ற மாதிரி இருக்கிறது. இளைஞர்கள் எல்லாம் விஜய்க்கு திரள்கிறார்கள். கிட்டத்தட்ட இதை மனதில் வைத்துக்கொண்டு பாஜக உண்மை கண்டறியும் குழு அனுப்புகிறார்கள். கிட்டத்தட்ட அரசுதான் இதுக்கு பொறுப்பு என்கிற மாதிரி செய்தியாளர் சந்திப்பில் பாஜக குழு தலைவர் ஹேமமாலினி பேசுகிறார். பாஜக எதற்கு ஏன் இதில் கூடுதல் அக்கறை செலுத்துகிறது?

பதில்: பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரைக்கும் இதுபோல கூட்டநெரிசலில் இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடத்தில் கிட்டதட்ட 500 பேர். 15 வருடத்தில் இன்னும் அதிகமான கணக்கு வருகிறது. இந்த லட்சணத்தில்தான் பாஜக இருக்கிறது. பாஜக இங்கே அரசியலை செய்வதற்குக் காரணம், ஒரு புரளியை கிளப்பி விடுவதற்காக…அதை மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவார்கள். இதனால் தவெக கட்சிக்கு லாபம் இருக்காது. பிஜேபிக்கு லாபமாக இருக்கும்.

ஜெயலலிதா அம்மையார் மரணத்தில் புரளிளை கிளப்பி விட்டார்கள். இன்றைக்கு வரைக்கும் அதற்கு ஆதாரங்களை கொடுக்கவில்லை. என்ன சொன்னார்கள்? ஜெயலலிதா அம்மையார் இறப்புக்கு சசிகலா அம்மையார் காரணம் எனப் பேசினார்கள். 10 வருடம் ஆகப் போகிறது. என்ன ஆனது? அந்த கட்சிக்குள் குழப்பத்தை கொண்டு வந்து, சசிகலா அம்மையார் மேல் பெரிய அவநம்பிக்கையை கொண்டு வந்தது. இத்தனையுமே நடந்தது. இந்தப் புரளியை கிளப்பி விட்டது யார்? பிஜேபிதான். தற்போதும் புரளியை கிளப்பி விடுவது யார்? பிஜேபிதான் கிளப்பி விடுகிறது. அவர்களுக்கு புரளியை கிளப்புவதுதான் வேலை.

கேள்வி: இந்த அரசியல்மயப்படுத்தப்படாத இளைஞர்கள் விஜய் பக்கம் திரள்கிறார்கள், ஒருவேளை விஜயை காப்பாற்றினால் இவர்கள் (பாஜக) பக்கம் வந்துவிடுவார்கள் என கணக்கு போடுகிறதா?

பதில்: விஜய் எவ்வளவு நாள் தாக்குப் பிடிப்பார் என யோசிப்பார்கள். அவருக்கு அப்படி என்ன அனுபவம் இருக்கிறது? ஒரு நடிகராக நாம் அவரை மதிப்பது என்பது வேறு. கூட்டநெரிசல் சம்பவம் நடந்து முடிந்தவுடன் ஓடி விட்டாரே! அவர் நின்று சண்டை போட்டிருந்தால் மக்கள் விஜய் பக்கம் நின்றிருப்பார்கள். திமுக மீது தவறு இருந்திருக்கிறது என மக்கள் மன்றத்தில் நிரூபித்து, என் தொண்டரை விட மாட்டேன் என மல்லுக்கட்டி, அவர்களைப் புதைக்கின்ற வரைக்கும் நானே (விஜய்) நிற்பேன் எனச் சொல்லி ஒரு தலைவன் நின்றிருந்தார் எனில், தமிழ்நாடு அவர் பக்கம் திரண்டிருக்கும். ஆனால் அவர் விட்டு ஓடி விட்டாரே! மேலும் அண்ணாமலை அங்கே வந்து நிற்கிறார். அவர் போய் உண்மையை கண்டுபிடிக்கிறேன் என கதை விடுகிறார்.

கேள்வி: அண்ணாமலை என்ன சொல்கிறார் எனில், ஒரு மாவட்டத்தில் ஒரு துயர சம்பவம் நடக்கிறது எனில், அந்த மாவட்ட ஆட்சியரும் எஸ்பியும்தான் பொறுப்பு. திமுக அரசு கள்ளக்குறிச்சியில் ஒரு விவகாரம் (பள்ளி மாணவி தற்கொலை) நடக்கும்போது உடனடியாக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி எஸ்பியை இடைநீக்கம் செய்தார்கள். இங்கே (கரூரில்) ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அப்போது இவர்களுடைய உள்நோக்கம் என்ன என கேட்கிறார். அது சரிதானா?

பதில்: இடைநீக்கம் செய்யட்டும். அந்த மாதிரி நிறைய விடயங்களை நாம் கேட்டுள்ளோம். அப்படி பார்த்தால் கவின் படுகொலைக்கு என்ன நடந்தது என கேட்க வேண்டி இருக்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடந்தது, அருணா ஜெகதீசன் அறிக்கை (அதிமுக காலத்தில் போட்ட அறிக்கை) என்ன சொன்னது? அந்த அதிகாரிகளையே குற்றம் சொன்னது. அதற்கே திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதையும் சேர்த்து அண்ணாமலை பேசுவாரா? இதையும் சேர்ந்துப் பேசட்டும். அண்ணாமலை அந்த இடத்துக்கு ஏற்ற மாதிரி ஒரு விடயத்தை பேசிட்டுப் போவார். நாளை அவர் தேர்தல் லாபத்துக்காக இந்த விடயத்தைப் பயன்படுத்திக் கொள்வார், வேறு ஒன்றுமே கிடையாது.

நாங்களும் கரூர் சென்று கள ஆய்வு செய்து வந்துள்ளோம். அண்ணாமலை மருத்துவமனை ஐ.சி.யுவில் சென்று பார்த்தப்போது, நானும் அந்த ஐசியுக்குள்தான் இருந்தேன். மக்களை சந்தித்துப் பேசினோம். அண்ணாமலைக்கு என்ன புது தகவலா கிடைத்திருக்கும்? அந்த மக்கள் அப்படி எதுவும் சொல்லவில்லை.

கேள்வி: ’உண்மை கண்டறியும் குழு’ வந்து அங்கு நேரில் கண்ட சாட்சிகளிடம் பேசுகிறார்கள். பேசிவிட்டு செய்தியாளரை சந்திக்கும் போதுதான் தேஜஸ்வி சூர்யா, ஹேமாலினி ஆகியோர் உள்ளூர் நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பு என்கிற மாதிரி பேசினார்கள். அது காவல்துறையுடைய தோல்வி என்கிற மாதிரியான முடிவு செய்து, விஜயை பாதுகாக்கும் வேலையை பாஜக செய்கிறதா? 

பதில்: காவல்துறை விஜயை பேசவே அனுமதித்திருக்கக் கூடாது, திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். பொதுமக்கள்தான் முக்கியம் என நாங்கள் சொல்வோம். விஜய் அவர்கள் என்னவேண்டுமானாலும் குற்றச்சாட்டு அடுக்கினாலும், நாமக்கலில் அத்தனை மணிக்கு கிட்டதட்ட 5000 பேரை கூட்டிக்கொண்டு சாலையை மறித்து வருகிறார்கள். அதுவும் தவறான வழியில் வண்டியை ஓட்டிக்கொண்டும், பல இளைஞர்கள் சாலையிலும் வண்டிக்கு அடியிலும் விழுந்து எழுந்திரிக்கிறார்கள். இத்தனை அட்டூழியத்தோடு வருகிறார்கள். சாலையே தடைபடுகிறது என்று விஜயை கிளம்ப சொல்லி இருக்க வேண்டும். அதை செய்திருக்க வேண்டும். செய்யாததால் மாவட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதில் நமக்கு மாற்று கருத்து இல்லை.

இது துறை சார்ந்த நடவடிக்கை, துறை சார்ந்த தவறுகள். விஜய் பேச முடிவு எடுத்தது அந்தக் கட்சியோட முடிவு. ஆனால் போகக்கூடாது என தடுத்திருக்க வேண்டியது காவல்துறையின் வேலை. அப்போது இதில் எங்கே சதி வருகிறது? சதி யாருடையது? ஸ்டெர்லைட்டில் துப்பாக்கி சூடு நடந்தது சதி. அந்த சதியை பேசி இருக்கிறாரா அண்ணாமலை? இல்லை. முன்னாள் நீதியரசரான அருணா ஜெகதீசன் அறிக்கையைப் படித்தவர்களுக்கு தெரிகிறது அது சதி என்று. இவர்கள் கடமை செய்யவில்லை விட்டுவிட்டார்கள், மக்கள் இறந்தார்கள்.

(நேர்காணல் நிறைவுற்றது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »