சங்ககால பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு சிலை வைக்க தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் ஏப்ரல் 2025ல் ஆணையிட்டு, நிதி ஒதுக்கியும் கூட, சிலையை நிறுவ தடையாக இருக்கும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வனவேங்கைகள் கட்சியின் தோழர். இரணியனின் தலைமையில் மதுரை நகரத்தில், திருவள்ளுவர் சிலை அருகே நவம்பர் 14, 2025 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருமுருகன் காந்தியின் உரை:
வனவேங்கைகள் கட்சி நடத்துகின்ற இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தலைமையேற்று நடத்தக்கூடிய, போர்க்குணம் மிக்க பழங்குடி மக்கள் தலைவர் மரியாதைக்குரிய தோழர் இரணியன் அவர்களுக்கும், இந்த நிகழ்விலே பங்கெடுத்து எனக்கு முன்பு உரையாற்றி இருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர்கள் மங்கள்ராஜ் பாண்டியன் அவர்களுக்கும், தோழர். பூமிராஜன் அவர்களுக்கும், தோழர். வையவன் அவர்களுக்கும், தோழர். சாகுல் அமீத் அவர்களுக்கும், தோழர். பனை ராஜ்குமார் அவர்களுக்கும், விடுதலை சிறுத்தை கட்சியினுடைய துணை பொது செயலாளர் தோழர். கனியமுதன் அவர்களுக்கும், தோழர். ஜக்கையன் அவர்களுக்கும், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியினுடைய தலைவர் தோழர். குடந்தை அரசன் அவர்களுக்கும், தமிழ்ப்புலிகள் கட்சியினுடைய மரியாதைக்குரிய தோழர். பேரறிவாளன் அவர்களுக்கும், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய தோழர். பசும்பொன் பாண்டியன் அவர்களுக்கும், தமிழக மக்கள் பண்பாட்டு கழகத்தின் தோழர். கீதா பாண்டியன் அவர்களுக்கும், இங்கே பங்கெடுத்திருக்கக்கூடிய வனவேங்கை கட்சியினுடைய மாநில பொறுப்பாளர்கள் அனைவருக்கும், இங்கே பெருந்திரளாக வந்திருக்கக்கூடிய தோழமைகளுக்கும், நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கங்களைத் தெரிவித்து கொள்கின்றேன்.
அன்பான மக்களே, பெண்பாற் புலவர் குறமகள் இளவெயினி அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்கின்ற ஒரு ஒற்றை கோரிக்கைக்கான போராட்டமாக இதனை நான் பார்க்கவில்லை. ஏனென்றால், தமிழர்களுடைய வரலாறு இந்த நிலத்தில் தான் ஆரம்பிக்கிறது. ’எயினர்- எயற்றியர்’ என்று சொல்லப்படுகின்ற குறவர் மக்கள் தமிழினத்தினுடைய முதுகுடி மக்களாக, இந்த தமிழர் நாகரிகத்தை வளர்த்தெடுத்தவர்களாக, பல்வேறு மானுடவியல் ஆய்வுகளில் குறிப்பிடப்படக்கூடியவர்கள். தமிழ்நாட்டினுடைய தமிழர்களுடைய பொருளாதாரம் வளர்ந்த குறிஞ்சி நிலம். அதாவது மலையும் மலை சார்ந்த அந்த நிலப்பரப்பில் தான் அனைத்து விலைப் பொருள்களும் உற்பத்தியாகின. விவசாய நிலம் எல்லாம் அதற்கு பின்புதான் வந்தன. மருத நிலமும் அதற்கு பின்புதான் உருவாகியது.
முதலில் தமிழன் மையம் கொண்ட இடம் இந்த குறிஞ்சி நிலப்பரப்பு. குறிஞ்சி நிலத்திலிருந்து உற்பத்தியாகக்கூடிய பொருள்கள்தான் உலகெங்கிலும் வணிகத்திற்காக கொண்டு செல்லப்பட்டன. இன்றைக்கும் கூட தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்கக்கூடிய மிக முக்கியமான சந்தைகள் எல்லாம் குறிஞ்சி நிலத்தை ஒட்டி இருக்கக்கூடிய சமவெளிப் பரப்பில் இருக்கக்கூடிய நகரத்தில் தான் இருக்கின்றன. அது மேட்டுப்பாளையமோ, ஒட்டன்சத்திரமோ, பழனியோ இவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டீர்கள் என்றால், இவையெல்லாம் இந்த குறிஞ்சி நிலத்தின் அருகில் இருக்கக்கூடிய சந்தைகள். இந்த மலையும் மலை சார்ந்த பகுதியில் விளையக்கூடிய விளை பொருட்கள், கிடைக்கக்கூடிய சொத்துக்கள், ஆபரணங்கள் இவற்றை எல்லாம் கொண்டு வந்து இறக்குகின்ற ஒரு சந்தையாக இந்த நிலம் இருக்கின்றன. இங்கிருந்துதான் பிற நாடுகளுக்கும் இந்த நாட்டினுடைய உள்நாட்டு பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகி இருக்கின்றன. ஆகவே தமிழனுடைய முதல் சொத்து உருவாக்கம் என்பது இந்த குறிஞ்சி நிலப்பரப்பில் நடந்தது.
அந்த குறிஞ்சி நிலப்பரப்பினுடைய வரலாறுதான் தமிழனுடைய முதல் பண்பாட்டு மற்றும் பொருளாதார வரலாறாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதுவும் குறிப்பாக மதுரையில் நாம் பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. காரணம் என்னவெனில், இந்த குறிஞ்சி முல்லை நிலத்தில் இருக்கக்கூடிய மன்னர்கள் தான் இந்த சொத்துக்களையும் இந்த வளங்களையும் ஆட்சி செய்தவர்கள். புலவர் இளவெயினி பற்றி சொல்லக்கூடிய ஒரு பாடல் சங்கப் பாடலில் இருக்கிறது. அந்த பாடலினுடைய முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று அரசு (தோழர்களுடைய கடுமையான போராட்டத்தின் காரணமாக) ஒப்புதல் கொடுக்கிறது. அந்த பாடல் என்ன சொல்லுகிறது என்றால், பல அரசர்கள் இருக்கக்கூடிய மன்றத்தில் தான் சார்ந்திருக்கக்கூடிய நிலத்தினுடைய அரசன் அவனுடைய பெருமைகளை இளவெயினி துணிந்து பேசுகிறார். அரசன் நடத்துகின்ற போரிலே அவன் படைவீரர்களுடைய அறம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பான என்பதை இளவெயினி பேசுகிறார். போர் நடக்கக்கூடிய காலத்தில் போர் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய அறத்தையும், போர் வீரர்கள் அந்த அறத்தை கடைபிடிக்காமல் போனால், அரசன் எவ்வாறு துன்புறுவான் என்பதையும் எடுத்துச் சொல்லுகிறார் இளவெயினி. அரசனுடைய பெருமையை பேசுகிறார். அந்த போர் மரபிலே கடைபிடிக்கப்பட்ட அறத்தை பேசுகின்ற இளவெயினிக்கு தான் நாம் சிலை கேட்கின்றோம்.
ஈழத்திலும் அந்த நெருக்கடியான போரில் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கடைபிடித்த அறம் எங்கிருந்து வருகிறது? என்றால், அந்த குறிஞ்சி நிலத்திலே இளவெயினி சொல்லுகிறாரே அந்த இடத்திலிருந்து வருகிறது. அதுதான் தமிழனுடைய அறம்.
அப்பேற்பட்ட ஒரு மரபை ஆவணப்படுத்தியவர் இளவெயினி. அவர் வெறும் கவிஞர் அல்லது புலவர் என்பதற்காக மட்டும் நமது தோழர்கள் அதற்காக மட்டும் சிலை கேட்கவில்லை. தமிழனுடைய மரபை, தமிழனுடைய அறத்தை பதிவு செய்யக்கூடிய அவரது குரலை உலகெங்கிலும் கொண்டு சென்றவன் தமிழன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போர்களத்தில் எந்த அறத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பதிவு செய்தவர். அந்த பதிவிற்காகத்தான் இளவெயினிக்கு சிலை கேட்கின்றார்.
அது ஏன் மதுரையில் தேவைப்படுகிறது? இந்த குறிஞ்சி முல்லை நிலத்தில் இருக்கக்கூடிய அரசர்கள் எப்படி உருவானார்கள் என்பால், இந்த நிலங்களில் உற்பத்தி செய்யக்கூடிய இந்த சொத்துக்களை, வளங்களை, பொருட்களை வைத்துதான் சமவெளியிலே அரசுகள் உருவாக ஆரம்பிக்கின்றன. அவையெல்லாம் மதுரையில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. அதன் காரணமாக இங்கே ஒரு நகரம் உருவாகிறது. இந்த நகரத்தினுடைய மூலம் எங்கே இருக்கிறது என்றால் குறிஞ்சி நிலத்திலே இருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய வளங்கள்தான் இங்கு மதுரையின் வழியாக வணிகமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இந்த நகரம் அப்படியாக தான் உருவாக்கப்பட்டது. அதற்கு பிறகுதான் விவசாயங்கள் எல்லாம் வருகின்றன. இந்த நகரத்தின் வளத்திற்கு அடிப்படைக் காரணியாக இருப்பது குறிஞ்சி நிலம். அந்தக் குறிஞ்சி நிலத்தினுடைய அரசர்களை வெல்வதன் மூலமாக குறிஞ்சி நிலத்தினுடைய வளங்களைக் கைப்பற்றலாம் என்று வேந்தர்கள் முடிவு செய்கிறார்கள், அப்படித்தான் சேர,சோழ, பாண்டிய வேந்தர்கள் இந்த அரசர்கள் மீது படையெடுத்து அந்த நிலப்பரப்பை கைப்பற்றுகிறார்கள். ஆக சமவெளியில் இருந்த மூவேந்தர்களுக்கும் குறிஞ்சி முல்லை நிலத்திலிருந்து ஆட்சி செய்த அந்த அரசர்களுக்குமான போர் மரபு என்பது, இந்த வளங்களுக்குள்ளாக நடந்த மிக முக்கியமான ஒரு வரலாற்று சம்பவம் ஆகும்.
தமிழருடைய வரலாற்றிலே மிக மிக முக்கிய முக்கியமான காலகட்டம் எதுவென்றால், பழங்குடி ஆட்சி என்பது அழிக்கப்பட்டு சமவெளி ஆட்சி என்பது உருவாக்கப்பட்ட காலகட்டம். அப்படியாக உருவாக்கப்பட்ட நிலப்பரப்புதான் மதுரை மாநகரமாக இருக்கிறது. அந்த மதுரை மாநகரத்தில் இப்பேர்ப்பட்ட இந்த நிலத்தில் ஆட்சி செய்த அரசர்களின் அறத்தின் குரலாக இருந்த இளவெயினிக்கு சிலை கேட்கிறோம். இது பெருமைக்காக அல்ல, தமிழ் வரலாற்றை சொல்வதற்காக வைக்க வேண்டும். 50 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இருக்கிறது. ஆனால் வரலாற்று பின்பலத்தை சொல்ல வேண்டி இருக்கிறது. இன்றைக்கும் மலையிலிருந்து கிடைக்கக்கூடிய அந்த இயற்கை செல்வங்கள் ஒரு நாட்டினுடைய பொருளாதாரமாக இருக்கிறது. மிளகு போன்ற வாசனை திரவியங்கள், தேன், திணை, தந்தம் என அனைத்துமே அந்த மலையில் உற்பத்தியாகும் இயற்கை செல்வங்களாக இருக்கின்றன.
இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய இந்த வளங்கள் நிறைந்த குறஞ்சி நிலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்கக்கூடிய ஒரு போரைத்தான் பாரதிய ஜனதா கட்சி நடத்தி கொண்டிருக்கிறது. பழங்குடிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்தி கொண்டிருக்கக்கூடிய அரசாக பாரதிய ஜனதா கட்சி இருப்பதால் தான் நாம் பாஜக கட்சியை எதிர்க்கிறோம்.
இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக 170 ஆண்டு காலம் போர் புரிந்தவர்கள் பழங்குடிகள் மட்டும்தான். பிர்ஜாமுண்டாவை இங்கே நாம் பார்க்கின்றோம். இந்த துண்டறிக்கையில் பிர்ஜாமுண்டாவின் படம் உள்ளது. அவர் யார்? பழங்குடிகள் போர் மரபில் மிக உயர்ந்த இடத்தை தொட்டு வெள்ளைகளுக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் கொடுத்தவர். அவர் பழங்குடிகளைத் திரட்டியவர். அவர் காலம் பொற்காலம். ஆனால் 1700 ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து பழங்குடிகளும் வெள்ளையருக்கு எதிராகப் போர் புரிந்தார்கள். ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
“பழங்குடிகள் போர் புரிந்தார்கள். ஆனால் பழங்குடிகள் நடத்திய போரிலே சமவெளி மக்கள்தான் விடுதலை அனுபவிக்கிறார்கள். பழங்குடிகள் அல்ல”.
தமிழ் நிலத்தில் ஒரு தமிழ் வீரன் எப்படிப்பட்ட அறத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு அரசன் விரும்பி இருக்கிறான் என்பதைப் பற்றி ஒரு பெண்பாற் புலவர் பாடுகிறார் என்றால், அந்த காலகட்டத்தில் வீரத்தைவிட அறத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தெரிகிறது. ஒரு நாகரிகம் அடைந்த சமூகத்தை / இனத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.
இஸ்ரேலியன் பாலஸ்தீனத்தில் போடுவதை போலவோ அல்லது சிங்களவன் தமிமீழத்தின் மீது நடத்திய போரைப் போலவோ அநியாயமான அறமற்ற போரல்ல; 2300 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறத்தோடு எப்படி போர் புரிய வேண்டும் என்று வழிமுறையை வகுத்த, இந்த இனத்தினுடைய மூத்தக் குடிக்கு இந்த மண்ணிலே சிலை எழுப்பித்தான் ஆகவேண்டும். அதை மறந்துவிடுகிறோம்.
ஏன் பழங்குடிகளை இன்றைக்கும் ஒரு குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்? இன்றைக்கு இருக்கக்கூடிய நம் காவல்துறை இந்தியா விடுதலை அடைந்த பிறகும் கூட, வெள்ளையன் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட அந்த சட்டங்களை வைத்துக்கொண்டு இன்றைக்கும் பழங்குடி மக்களை குற்றவாளிகளைப் போல நடத்துகிறதே, இதற்குக் காரணம் எங்கிருந்து வருகிறது?
வெள்ளைக்காரன் வேறு எந்த இன மக்களையும் குற்றவாளி பட்டியலுக்கு கொண்டு செல்லவில்லை.பழங்குடி மக்களைத்தான் குற்றவாளி பட்டியலுக்கு கொண்டு சென்றான். காரணம் பழங்குடிகள் 170 ஆண்டுகளாக வெள்ளையனை எதிர்த்துப் போர் புரிந்தார்கள்.
வடகிழக்கு மாகாணத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால், அங்கு இருக்கக்கூடிய பழங்குடிகள் அனைவருமே போர் புரிந்தார்கள். வெள்ளையர்களை வீழ்த்திய வரலாறு பழங்குடிகளுக்கு இருக்கிறது. மணிப்பூரில் மற்றும் நாகாலாந்தில் இருக்கிறது. அதுபோல மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு சார்ந்த பழங்குடிகள் அனைவருமே போர் புரிந்தவர்கள். இந்த பழங்குடிகள் மீதுதான் குற்றப்பரம்பரை சட்டத்தை வெள்ளையர் அரசு ஏவியது. வெள்ளைக்கார அரசு இந்த பழங்குடி உணர்வு கொண்ட பழங்குடி கட்டமைப்பு கொண்ட இந்த மக்களை எல்லாம் குற்றவாளிப் பட்டியலுக்கு கொண்டு வந்தார்கள். இந்தியா விடுதலை அடைந்த பிறகும் கூட தமிழ்நாட்டினுடைய காவல்துறை விடுதலை அடையாமல் வெள்ளையனுக்கு அடிமையாகவே இருக்கின்ற காரணத்தினால்தான், பழங்குடி மக்களையும் குற்றவாளிகளாக பார்க்கக்கூடிய பல்வேறு துயர சம்பவங்களைப் நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.
அது இருளர் பழங்குடி மக்களாகவோ அல்லது மற்ற பழங்குடி மக்கள் சமரசமின்றி சண்டையிட்டார்கள். இந்தியாவினுடைய விடுதலைக்காக போராடியதாக சொல்லப்படுகின்ற காங்கிரஸ் கட்சிக்குள் அவர்கள் (பழங்குடிகள்) உறுப்பினராக இல்லை. அவர்கள் எந்த கட்சியும் இல்லை. அவர்கள் அமைப்பாகவும் இல்லை. அவர்கள் என்றைக்கு அமைப்பாக திரள்கிறார்களோ, அன்றைக்குத்தான் அவர்களுடைய பாரம்பரியத்தையும், போர் குணமிக்க அந்த வரலாறையும் நாம் மீட்டெடுக்க முடியும். அதன் அடிப்படையில் தான் நமது உரிமையை வென்றெடுக்க முடியும்.
பழங்குடிகளுக்கு ஒரு பெரிய மரபு இருக்கிறது, ஒரு வரலாறு இருக்கிறது, ஒரு நாகரிக கட்டுமானம் இருக்கிறது, இதையெல்லாம் அடையாளமாக சொல்லுகின்ற விதத்தில்தான் இளவெயினிக்கு நாம் சிலை கேட்கின்றோம்.
இது மாநகராட்சிக்கு புரியுமா என்றால், புரியாது. மதுரையோட லட்சணம் இப்படியாகத்தான் இருக்கிறது. ஒரு அருமையான நகரம் இன்றைக்கு இந்தியாவில் தூய்மைப் பட்டியலில் மிக மோசமான இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த மோசமான நிலைக்கு பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் மதுரையினுடைய அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான்.
இன்றைக்கு மதுரையில் என்ன பிரச்சனை இருக்கிறது? நான்(திரு) மதுரையில் படித்தவன். மதுரைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மதுரையை சுற்றியிருக்கக்கூடிய இத்தனை ஆயிரம் கிராமங்கள், அதிலிருந்து வரக்கூடிய மக்களினுடைய உழைப்பு, அதன் மூலமாக வரக்கூடிய அந்த விளைபொருட்கள் என மக்களுடைய சந்தைதான் மதுரை. ஆனால் இன்றைக்கு அந்த மக்களுக்கு இடம் கிடையாது. மதுரை தூங்கா நகரம் என ஏன் சொல்றோம்? 24 மணி நேரமும் இயங்கக்கூடிய நகரமாக இருந்தது. ஏன்? ஏதோ ஒரு கிராமத்திலிருந்து தான் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை தூக்கிக் கொண்டு ஒரு விவசாயி வருவான், ஒரு பழங்குடி வருவான், ஒரு மீனவன் வருவான். அவன் இந்த நகரத்தில் வணிகம் செய்துவிட்டு, அதில் கிடைக்கக்கூடிய பணத்தை எடுத்துக்கொண்டு தன் குடும்பத்திற்கான பொருட்களை வாங்கி கொண்டு செல்வான். அது இன்றைக்கு நேற்றல்ல, ஈராயிரம் ஆண்டுகளாக இருக்கக்கூடிய ஒரு பாரம்பரியம்தான் மதுரை. இந்த வணிக பாரம்பரியம் 2500 வருடங்களாக இருக்கிறது.
கீழடியில் கிடைக்கக்கூடிய தொல்பொருட்கள் எதை சொல்கிறது? அங்கு துணி நெய்தலை செய்வதற்கு ஒரு தொழிற்சாலை இருந்ததை சொல்கிறது. நான் கேட்கிறேன்? 50 பேர் 100 பேர் இருக்கிறவர்களுக்கு துணி நெய்வதற்கு தொழிற்சாலை தேவைில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழக்கூடிய நகரத்திற்கு அதற்கான தொழிற்சாலை கட்டமைப்பு தேவை. ஏற்றுமதி செய்வதற்கு தொழிற்சாலை கட்டமைப்பு தேவை. அன்றைக்கு இரவும் பகலுமாக தமிழன் வேலை செய்திருப்பான். ஆக இந்த நகரம் இரவும் பகலுமாக உழைத்து கொண்டிருந்த நகரம் இது.
ஆனால் என்ன நடக்கிறது? இன்றைக்கு 10 மணிக்கு மேல் கடையை திறக்க கூடாது என எல்லா கடைகளையும் காவல்துறை பூட்டு போடுகிறது. ஏதோ கிராமத்திலிருந்து வரக்கூடிய அந்த விவசாயிக்கோ, மீனவனுக்கோ, பழங்குடிகளுக்கோ அல்லது தொழிலாளிக்கோ அவனுக்கு உணவு கிடைப்பதற்காக தான், இங்கே மதுரை 24 மணி நேரமும் இயங்கியது. அவனுக்கு உணவு கிடைத்தது. ஏதேனும் ஒரு நேரத்தில் இங்கே வந்து இறங்குவான். அவனுக்கு உணவு வேண்டும். பசித்த வயிரோடு இருக்கக்கூடாது. அவனுக்கு உணவு கொடுப்பதற்காகதான் இந்த நகரம் 24 மணி நேரம் உணவு கொடுக்கக்கூடிய நகரமாக இருந்தது. 24 மணி நேரம் வணிகம் செய்யக்கூடிய நகரமாக இருந்தது.
’தூங்கா நகரமாக’ அறியப்பட்ட நகரம் இந்த மதுரை நகரம். காரணம் தமிழனுடைய பொருளாதாரத்தினுடைய மையப்பகுதி. வரலாறில் மதுரையை நீக்கிவிட்டால் தமிழன் பொருளாதாரத்தைப் பற்றி பேசுவதற்கு என்ன இடம் இருக்கிறது? ஆனால் இன்றைக்கு என்ன நடக்கிறது என்றால், மதுரை நகரம் என்றாலே ’கோயில் நகரம், புனித நகரம், ஆன்மீக நகரம்’ என்று மாற்றி விட்டார்கள். அதைத் தவிர வேறு எதுவுமே இங்கு இல்லையா? வேறு எதுவுமே கிடையாதா? இத்தனை மக்கள் இங்கு வந்ததற்கு பிறகுதான் கோயில் வருகிறது. அதற்குப் பிறகு அனைத்தும் வருகிறது. ஆனால் இவை அனைத்தையும் அழித்துவிட்டு வெறுமனே ஆன்மீகத்துக்கு மட்டுமான இடமாக பிஜேபிகாரன் பேசிக்கொண்டு இருக்கிறான். அதை ஒத்துக்கொள்ளும் வகையில் தமிழ்நாடு காவல்துறை இரவு 10 மணிக்கு மேல் கடை அடைப்பது என்பது சட்ட விரோதமானது.
இந்த நாட்டில் குடிமக்களுக்கு 24 மணி நேரமும் தான் விருப்பப்பட்ட நேரத்தில் விருப்பப்பட்ட இடத்தில் வணிகம் செய்வதற்கு உரிமை இருக்கிறது. அதை தடுக்கக்கூடிய உரிமை காவல்துறை கிடையாது. ’இரவு 10 மணிக்கு மேல் கடையை அடை’ என்று சொல்லுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் கிடையாது. ஆனால் செய்கிறார்கள். வெள்ளைக்காரன் கூட செய்யாத எதேச்சயதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது. இதை வணிகர் சங்கம் பேச வேண்டும். ஒரு கடை எடுத்தால் 24 மணி நேரமும் இயங்குவதற்குதான் வாடகை கொடுக்கிறார்கள். காவல்துறை சொல்கின்ற மாதிரி 12 மணி நேரம் அந்த கடையைத் திறந்து வைப்பதற்காக மட்டும் வாடகைத் தரவில்லை. காவல்துறை 12 மணி நேரம் வியாபாரம் செய்யுங்கள், 12 மணி நேரம் வியாபாரம் செய்யக் கூடாது என சொன்னால், மீதி 12 மணி நேரத்துக்கான வாடகை தமிழ்நாடு காவல்துறை கொடுக்கட்டும். நீங்கள் ஏன் தர வேண்டும்?
காவல் துறைக்கு திருடனைப் பிடிக்க முடியவில்லை என்றால், குற்றத்தை தடுக்க முடியவில்லை என்றால், அது அவர்களின் குறைபாடு. சரியாக குற்றவாளிகளை கட்டுப்படுத்தி குற்றத்தை கட்டுப்படுத்தினால்தான் மக்கள் வணிகம் செய்ய முடியும். மக்களின் வணிகத்தை நிறுத்தி நீங்கள்(காவல்துறை) சரியாக வேலையை பார்ப்பதுதான் முறை என்றால், என்ன கதை! உங்களுக்காக நாங்கள் வேலை பார்க்க வேண்டுமா? அல்லது எங்களுக்காக நீங்கள் வேலை பார்க்க வேண்டுமா? எது முறை? இந்த நகரம் 24 மணி நேரம் இயங்கிய பொழுது நடக்காத குற்றம், இன்றைக்கு இத்தனை சிசிடிவி கேமரா வைத்தபின்பு கூட நடக்கிறது என்றால், பிழை எங்கே இருக்கிறது ? காவல் துறையில் இருக்கிறதே ஒழிய, அதிகாரிகளிடத்தில் இருக்கிறதே ஒழிய, சாமானிய மக்களிடத்தில் இல்லை.
ஏன் சொல்கிறேன் எனில், இரவு 11 மணிக்கு/12 மணிக்கு பசியோடு வந்து இறங்கக்கூடிய சாமானிய ஏழை மக்கள் விசாரிக்கப்படுகிறார்களா இல்லையா?, உணவில்லாமல் அலைகிறார்களா இல்லையா?, இந்த இடத்தில் வேலை செய்யக்கூடிய அந்த ஏழை எளிய மக்கள் உழைப்பாளிகளுக்கு இரவில் டீ கொடுப்பதற்கு கூட ரகசியமாக டீ கொடுக்க வேண்டும். போலீஸ் வண்டி வந்தால் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும். ஏன் கஞ்சா/ போதை விற்கிறார்களே?, அவர்களெல்லாம் நன்றாகத்தான் விற்கிறார்கள். இரவில் டீ/சாப்பாடு விற்பதைத் தான் திருட்டுத்தனமாக விற்க வேண்டியிருக்கிறது. கதவை பாதி மூடிக்கொண்டு விற்க வேண்டியிருக்கிறது. என்ன தவறான விசயம் நடக்கிறதா என்ன? அங்கே வணிகம்தானே நடக்கிறது. இந்த அநியாயத்தைக் கூட கேட்க இயலாத நிலையில் நாம் இருக்கிறோம்.
ஏதாவது போராட்டத்திற்கு சென்றுவிட்டு இரவு 10/12 மணிக்கு மேல் ஏதாவது ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்கு சென்றால், பாதி கதவு மூடிவிட்டு அருகே போலீஸ்காரர் நிற்கும் போது கோவம் வரும். கடைக்காரர் அமைதியாக இருப்பார், நாம் சாப்பிடுவதை தடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் கிடையாது. அங்கே உட்கார்ந்து இருக்கக்கூடியவன் யாராவது குற்றவாளியாக இருந்தால் பிடித்து செல்லுங்கள். கடையை ஏன் மூடச் சொல்றீர்கள்? அதுதான் கிரிமினல் குற்றம். எல்லாரையுமே கிரிமினலாக பார்ப்பதற்கு எதற்கு காவல்துறை?
இது எப்படி இருக்கிறது என்றால், இந்த எஸ்ஐஆர்-ஐ கொண்டு வந்திருக்கானே பிஜேபிக்காரன், அதைப் போல இருக்கிறது. எவன்போலி வாக்காளரோ அவனை கண்டுபிடிப்பதற்குதான் மென்பொருள் அமைப்பு (Software system) இருக்கிறது. போலி வாக்காளர்களை கண்டுபிடிக்க தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது. ஆறரை கோடி பேரில் போலி வாக்காளர்களை களையெடுப்பதை விடுத்து, ஆறரை கோடி பேரும் ஆவணங்களை எடுத்துக் கொண்டு போய் நிரூபிக்க வேண்டுமாம். இதற்கு எதற்கு தேர்தல் ஆணையம்? இங்கு நாம் வாக்காளர் உரிமையை தொடர்புப்படுத்தித்தான் பேச வேண்டியிருக்கிறது.
இன்றைக்கு வாக்குரிமை சம்பந்தமாக எடுக்கக்கூடிய நடவடிக்கை என்பது குடியுரிமை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
அகதியாக ஈழத்திலிருந்து வருகிறார்கள். ஈழத்தமிழனுக்கு ஓட்டுரிமை கிடையாது, வாழ்கின்ற உரிமை இருக்கிறது. அதைப் போலத்தான் தமிழ்நாட்டில் தமிழனுக்கு வாழ்கின்ற உரிமை இருக்கலாம், ஆனால் ஓட்டுரிமை இருக்கக்கூடாது என்கின்ற முடிவை பிஜேபி அரசு செய்யப் போகிறது. அதற்கான வேலையைத் தான் தேர்தல் கமிஷன் மூலமாக வேலையை பார்க்கிறான்.
இத்தனை வருடமாக இருக்கிறோம். பல வருடமாக ஓட்டு போடுகிறோம். யார் போலி வாக்காளர்? யார் இறந்து போன வாக்காளர்? யார் உண்மையான வாக்காளர்? என கண்டுபிடிக்க முடியாத லட்சணத்தில் தேர்தல் கமிஷன் இருக்கிறது என்றால், விரட்டப்பட வேண்டியது தேர்தல் கமிஷன் தானே ஒழிய, வாக்காளன் அல்ல.
நமக்கான வாக்குரிமை ரத்து செய்யப்பட்டால் நாம் குடிமகன் என சொல்ல என்ன சான்று இருக்கிறது? இந்த நாட்டினுடைய அரசியலை முடிவு செய்யக்கூடிய அதிகாரம் நமக்கு இல்லை என்றால், ஓட்டு போடுகின்ற உரிமை நமக்கு இல்லை என்றால், எதுக்கு வரி கட்டுகிறோம்?
நாம் எல்லோரும் வாக்காளர் அட்டை வைத்துள்ளோம். ஆனால் வாக்காளர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது சொல்கிறது தேர்தல் ஆணையம். வாக்காளர் அடையாள அட்டையை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள முடியாது, எதை ஏற்றுக்கொள்கிறான் எனில், பீகாரில் தேர்தல் நடந்தது இல்லையா, பீகார் வாக்காளர் பட்டியலில் உங்கள் பேர் இல்லை என்றால், அதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்வானாம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? தமிழ்நாட்டினுடைய இந்த எஸ்ஐஆர் திட்டத்தில், பீகாரினுடைய வாக்காளர் தேர்தல் பட்டியலில் பெயர் இல்லை என்றால், அதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று 13வது ஆவணமாக தேர்தல் ஆணையம் இணைந்திருக்கிறது.
பீகார்காரனுக்கு இங்கே வாக்கு கொடுப்பதற்கு இந்த வேலை செய்திருக்கிறான். பீகார்காரன் ஓட்டு போடப் போகிறான். நாம் என்ன பண்ண போகிறோம்?
இன்று இவை அனைத்தையுமே நாம் இணைத்து பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் நேரத்தை நான் அதிகமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே புலவர் இளவெயினி சிலை மிக முக்கியமானது. இது நமது உரிமை. இந்த சிலையை உடனே திமுக அரசு, உங்கள் ஆட்சி காலத்தில் வைக்கவில்லை எனில் பிஜேபிகாரன் சிலை வைத்து காவி துணியை உடுத்துவான். அதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு இதற்கான சிலை நிறுவுவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் பிஜேபிக்காரனும், சங்பரிவாரக் கும்பலும் ஒரு சமஸ்கிருத பெயரை சேர்த்து கொண்டு அவனுடைய ஆளாக இளவெயினியை மாற்றிடுவான். அந்த ஆபத்து நடந்து விடும். இதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி, இந்த கோரிக்கை மிக நியாயமானது மட்டுமல்ல, வரலாற்றுத் தேவையான கோரிக்கையுமாகும். அந்த வகையில இந்த கோரிக்கையை முன்னெடுத்த வனவேங்கைகள் கட்சி தோழர்களுக்கு வாழ்த்துகள்.
நாங்கள் எஸ்ஐஆருக்கு எதிரான தேர்தல் அலுவலக முற்றுகை போராட்டத்தை மூன்று நாட்களுக்கு முன்பு அறிவித்தோம். உடனடியாக தோழர் இரணியன் அவர்கள் அந்த போராட்டத்தில் பங்கெடுத்தது என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுக்கிறது. அதற்காக நான் இச்சமயத்தில் அவருக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோரிக்கையை நாம் அனைவரும் தொடர்ந்து முன்னெடுப்போம். இதனுடைய வரலாற்று பின்னணியை மிக விளக்கமாக மக்களிடத்தில் எடுத்து வைப்போம். இந்த மண்ணினுடைய பூர்வ குடிகள் குறிஞ்சி மக்கள். அந்த மக்களினுடைய வரலாற்று அடையாளத்தை நாம் எக்காலத்திலும் இழக்க கூடாது. அதை உயர்த்தி பிடிப்போம்! உயர்த்தி பிடிப்போம்!! உயர்த்தி பிடிப்போம்!!! என்று சொல்லி வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்!