
தமிழீழத்தின் விடுதலைக்காக போராடி தம் உயிரை ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகளை நினைவு கூரும் வகையில், விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த மாவீரர் நாளை முன்னிட்டு சென்னை சைதாப்பேட்டை தேரடி அருகில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நம்பர் 27, 2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு உரையாற்றினார். அம்மேடையில் 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் தமிழீழ போராட்ட வரலாறுகளை உள்ளடக்கிய ஆறு பக்கங்கள் கொண்ட மே 17 இயக்க நாட்காட்டியை தலைவர் வை.கோ அவர்கள் அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மாவீரர் நாள் உரை:
மதிமுகவின் நிறுவன பொதுச்செயலாளர் ஐயா வைகோ அவர்களுக்கும், பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த மதிமுக தோழர் சைதை சுப்பிரமணியன் அவர்களுக்கும், வருகை புரிந்திருந்த விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன் அவர்கள், ஈழ உணர்வாளரும் இயக்குநருமான தோழர் புகழேந்தி தங்கராசு அவர்கள், சமூக செயல்பாட்டாளர் தோழர் பொன்னையன் அவர்கள் மற்றும் மதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் வணக்கங்களைத் தெரிவித்து கொண்டார். பின் தனது உரையை தொடங்கினார்.

“அன்பானவர்களே! தமிழர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று கனவு கொண்டவர்கள். அதை இந்தியாவின் விடுதலைக்கு முன்பே பெரியார் அவர்கள் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று உரக்க அறிவித்தார். தமது இறுதிநாள் உரை வரை “தமிழனுக்கு என்று ஒரு நாடு இருக்க வேண்டும். டெல்லியின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு இருக்கக் கூடாது. சுதந்திர தமிழ்நாடு உருவாக வேண்டும்” என்று கனவு கண்டவர். அதை இறுதி மூச்சு வரை எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
அவர்கள் உருவாக்கிய திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை செழுமைப்படுத்தியது. இன்று இந்திய அளவில் பாசிசத்திற்கு எதிரான, பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நகர்த்திக் கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்கான, ஆர்.எஸ்.எஸை வீழ்த்துவதற்கான வழியை கண்டடைந்து முன்னகர்த்துகின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கு பெரியாருடைய முழக்கம் இன்றைக்கும் நமக்கு ஆயுதமாக இருக்கிறது.
தமிழினம் தனித்த குரலை எக்காலத்திலும் எழுப்பி வந்திருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் உலகில் நாடுகள் உருவாகக்கூடிய காலகட்டம். தேசிய இன தேசங்கள் உருவாக்கப்படுவது குறித்து ஐரோப்பாவில் பேசப்பட்ட பொழுதே தமிழ்நாட்டில் தமிழனுக்கு என்று நாடு வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். அந்த மரபின் வழியில் இன்றளவும், தேர்தல் அரசியல் களத்தில் இருந்தாலும், “நாங்கள் ஒருபோதும் பெரியார் அவர்களின் கொள்கையிலே பின்வாங்க மாட்டோம்” என்று நாடாளுமன்றத்தில் முழங்கியவர் மரியாதைக்குரிய ஐயா வைகோ அவர்கள்.
நாடாளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய இறுதி உரை என்பது வரலாற்று சிறப்புமிக்க உரை. தேசிய இன விடுதலை குறித்து பேசுகின்ற கம்யூனிஸ்ட்கள் கூட அந்த மன்றத்திலோ மேடையிலோ இதை பேசவில்லை ஐயா வைகோ அவர்கள் தான் இதை பேசினார்.
‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கட்சி’ என்று பேசிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் அதே கருத்தை கொண்ட ஒருவர் பிரதமராக இருக்கிறார். இந்த நேரத்தில் ‘இது ஒற்றை மொழியோ, ஒற்றை இனமோ, ஒற்றைப் பண்பாடு அல்லது அனைவரையும் ஒன்றாக அடைக்க கூடிய ஒரு பட்டியோ தேசமோ அல்ல; இது பன்முகத்தன்மை கொண்ட தேசம்’ என்று சொல்லக்கூடிய ஒற்றை குரல் அய்யா வைகோ அவர்களின் குரலாகத்தான் இருந்தது.
இந்தியாவின் பன்முகத்தன்மையை ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் பேசுகிறார்கள். அதை எப்படி செய்வது? இந்தியாவில் இருக்கக்கூடிய தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து பேசுவதன் மூலமாகத்தான் இந்தியாவின் பன்முகத்தன்மையை காப்பாற்ற முடியும். ஆனால் அதை அவர்கள் பேசுவதில்லை.

ஒரு பாசிசத்தை வீழ்த்துகின்ற அரசியல் வேலை திட்டம் எப்படி உருவாகும்? அரசியல் சாசனத்தை காப்பாற்றுகிறோம், ஜனநாயகத்தை காப்பாற்றுகிறோம், பாசிசத்தை வீழ்த்துகின்றோம் என்ற முழக்கத்தை வெறுமனே பேசிக்கொண்டிருப்பது கவர்ச்சிகரமானதாக இருக்கும். ஆனால் அது வேலை திட்டமாக உருவெடுக்காது. ‘எது பாசிசத்தை வீழ்த்தும் அதை எங்கிருந்து தொடங்குவது’ என்ற கருத்தை சொல்ல வேண்டும். அந்தக் கருத்தை வீதியில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொன்னவர் ஐயா வைகோ அவர்கள். அதற்கான வேலை திட்டத்தை ஏற்படுத்தினார்.
தேசிய இன விடுதலை குறித்து புரட்சியாளர் லெனின் அவர்கள் கூறியதைப் பற்றிய நூல்களை கேட்டு கொண்டார். அவற்றை தேடி கண்டெடுத்தார். இத்தனைக்கும் இவற்றையெல்லாம் அவர் ஏற்கனவே படித்து நன்கு உணர்ந்தவர். அது மட்டுமல்லாமல் மார்க்சிய இயக்கத்தின் மூத்த தலைவர் எழுதிய தேசிய சுயநிர்ணய புத்தகத்தையும், கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் முதலமைச்சராக இருந்த தோழர் நம்பூதிரிபாட் அவர்கள் எழுதிய நூலையும் தேடி பெற்றுக் கொண்டார். அவற்றின் அடிப்படையில் மோடி-ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் பாசிசத்தை அடித்து வீழ்த்தக்கூடிய ஒற்றை வலிமை தேசிய விடுதலைக்கு தான் உண்டு என்று அறுதியிட்டு சொன்னவர் ஐயா வைகோ அவர்கள்.
அவர் கூறியது பெரும் கவனத்தை தன்னகத்தே ஈர்க்கவில்லை ஆனால் வரலாற்றில் எழுதப்படும். ஏனென்றால் வரலாற்றில் எழுதப்பட்ட அத்தனையும் தமது சமகாலத்தில் மறைக்கப்பட்டுதான் இருந்துள்ளன. வரலாறுதான் அவைகளை மீட்டெடுத்து இந்த உலகத்துக்கு சொல்லி இருக்கிறது. அந்த வகையில் ஐயா வைகோ அவர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய இறுதி உரையான தேசிய இன விடுதலை குறித்தான உரை முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஒரு நாளும் வரலாறு மறந்துவிடாது.
காஷ்மீரிகளோ, வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களோ, கம்யூனிஸ்ட்களோ பேசாத “பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேசிய இன விடுதலைதான் அடிப்படை. அதுவே முதன்மையான கருவியாக இருக்கும்” என்ற கருத்தை கூறிய ஐயா வைகோ அவர்கள்தான். தமிழீழத்தின் விடுதலைக்காக கடந்த 32 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சரி, அதற்கு முன்பாக அவர் பங்கெடுத்திருந்த கட்சியிலும் சரி “என் இறுதி மூச்சு வரை இதைப் பேசிக்கொண்டு இருப்பேன்” என்று உறுதியோடு நின்று கொண்டிருக்கிறார். அதுதான் எங்களைப் போன்றோருக்கு உற்சாகத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது. வழிகாட்டியாக அமைந்துள்ளது.

தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் போரியல் திறமை குறித்து எல்லோருக்கும் தெரியும். ஆனால் தமது தோழர்களை தயார் செய்வது, போருக்கு ஆயத்தமாவது, உயிரை கொடுத்தாவது இலக்கை வென்றடைவது போன்ற அவருடைய குணங்களைப் பற்றி நாம் படித்து அறிந்து கொண்ட வேண்டியவை ஏராளமாக உள்ளன.
ஒருவர் இலக்குகள் இல்லாமல் கொள்கையோடு இருக்க முடியும். ஏனென்றால் கொள்கைவாதியாக இருப்பது எளிது. அவருக்கு இலக்குகள் இருக்க வேண்டுமென்ற தேவையில்லை. அதேபோல் இலக்குகளை வைத்திருப்பவர்களுக்கு கொள்கை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இலக்கை அடைவதற்கு இதுதான் கொள்கை என்று கூறி இலக்கை நோக்கி அனைவரையும் நகர்த்துவதும், அவர்களைக் கொள்கைவாதிகளாக மாற்றுவதுதான் முக்கியமானது. அதை செய்தவர் தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். அதே வழியை நடைமுறைப்படுத்தியவர்கள் தான் ஐயா வைகோ அவர்கள்.
இதை பாராட்டுவதற்காக, மேடைக்காக பேசவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களுடன் செயல்பாட்டாளர்களுடன் நான் பழகி இருக்கிறேன் போராட்டத்தில் உடன் இருந்திருக்கிறேன். அவர்கள் எவருக்கும் பதவி ஆசை இருந்ததில்லை. அவர்கள் கொள்கைவாதிகள் ஆகத்தான் இருந்தார்கள். தேர்தலில் பங்கெடுக்காத ஒரு இயக்கத்தில் இது சாத்தியம். ஆனால் தேர்தல் அரசியலில் இருந்து கொண்டு தங்கள் தோழர்களை தொண்டர்களை கொள்கைவாதிகளாக, லட்சியவாதிகளாக மாற்றுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் அதை இந்த 32 ஆண்டுகளாக செய்து முடித்த காரணத்தினால்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தலை நிமிர்ந்து நிற்கிறார்கள். பிற கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் தலை குனிந்து நிற்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். ஆனால் மதிமுகவை சேர்ந்த தோழர்களுக்கும், தொண்டர்களுக்கும் அப்படி ஒரு சூழல் எந்த காலகட்டத்திலும் இருந்ததில்லை.
தமிழீழ அரசியலை இந்தியாவிற்குள் பேசுவதனுடைய சிரமங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த இந்தியமும் ஈழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆரிய இந்துத்துவத்திற்கு எதிரான, ஆரிய மேலாதிக்கத்திற்கு எதிரான, ஏகாதிபதியத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் தமிழர்கள், எனவே அவர்களது அரசியல் வளர்ந்து விடக்கூடாது என்று தான் கடந்த 45 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் தங்களுக்கென்று ஒரு தனி நாட்டை உருவாக்கிக் கொள்ள ஒரு ஒப்பற்ற போரியல் படையணியை உருவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளை அவர்கள் எப்படி விட்டு வைப்பார்கள்?
டெல்லியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதிகாரத்தில் அமர்ந்தாலும் அவர்கள் தமிழின விரோதிகளாக தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது தமிழின விரோத கொள்கைகளில் மாற்றம் கொள்வதில்லை. தலைவர் வைகோ அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல பிரதமர்களை பார்த்து விட்டார். அவர்கள் எவரிடத்திலும் தமிழ் இனத்திற்கான ஆதரவு கருத்து இருந்ததில்லை. ஆனால் அந்த ஆதரவை பெறுவதற்கு அவர்களிடம் மோதிப் போராடுவதை தலைவர் வைகோ அவர்கள் ஒருபோதும் விட்டுக் கொடுத்ததில்லை; பின் வாங்கியதில்லை. அவர்களிடத்தில் தமிழீழத்திற்கான குரலை பதிவு செய்வதில் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்திருக்கிறார்.

ஒரு தேசிய இன விடுதலைக்காக ஒரு கட்சியை நடத்துவது என்பது மிகச் சிரமமானது. 2009 தமிழீழ இனப்படுகொலைக்கு பிறகு 15 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய இன உணர்வு உயர்ந்து ஓங்கி இருக்கிறது. இந்த 15 ஆண்டுகளாக நடந்த அத்தனை போராட்டங்களிலும் தமிழருக்கென்று உரிமை வேண்டும் என்ற முழக்கமே முன்னுரிமை பெற்று இருக்கிறது. அது ராஜுவ் படுகொலையில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணையில் நமக்கான உரிமையை பெற வேண்டும் என்ற போராட்டமாக இருந்தாலும் சரி, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கிற திட்டத்தின் வாயிலாக நமது நிலத்தை பாலைவனமாக மாற்ற முயலும் டெல்லிக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, மதுரையையும் தேனி மலையையும் காப்பாற்றும் நியூட்ரினோ எதிர்ப்பு போராட்டமாக இருந்தாலும் சரி, மேற்கு மண்டலத்தில் நடந்த கெயில் குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும் சரி, கூடங்குளத்தில் நடந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம் ஆக இருந்தாலும் சரி, இவை அனைத்துமே அந்தத்த கோரிக்கைகளாக மட்டும் அல்லாமல் தமிழ்த்தேசிய இன உரிமை அடிப்படையாக வைத்து தான் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013 காலகட்டத்தில் ஐயா வைகோ அவர்கள் ஒவ்வொரு கல்லூரி வாசலிலும் நின்று அங்கிருக்கும் மாணவர்கள் இடத்திலும் இளைஞர்களிடம் தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்தான காணொளிகளை நேரடியாக நின்று காண்பித்து அந்த அரசியலை முன்ன நகர்த்தினார். அதன் காரணமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகாக நடைபெற்ற பெரும் எழுச்சியான மாணவர் போராட்டம் நடந்தது. பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போராட்டத்தில் நானும் பங்கு எடுத்திருக்கிறேன். அந்த நேரத்தில் எல்லாம் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம்தான் முன்னணியில் இருந்தது.
“எங்கள் மீதான டெல்லியின் ஆதிக்கம் போதும். எங்கள் முடிவுகளை நாங்களே எடுத்துக் கொள்கிறோம்” என்று மாணவர்கள் முழங்கினார்கள்.
நான் தஞ்சை பகுதியிலே நடந்த மாணவர் போராட்டத்தில் “எங்கள் தமிழ்நாடு, தனி நாடு!” என்ற முழக்கத்தை கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் எங்கிருந்து வந்திருக்க முடியும்? பெரியார் மற்றும் திராவிடர் இயக்கம் முன்னெடுத்த அந்த முழக்கங்கள்தான் மாணவர்கள் இடத்திலே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
தேசிய என விடுதலையை பேசிய இயக்கம் தான் திராவிடர் இயக்கம். தந்தை பெரியாரின் அரசியல் முழக்கமும் அதுதான்.

சிந்தித்துப் பாருங்கள். நம் இன மக்கள் ஈழத்தில் தங்களுக்கென்று நாடு வேண்டுமென்று போராடிக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டு மக்கள் தேசபக்தியோடு வரி கொடுக்கும் இந்திய அரசு இலங்கையோடு கைகோர்த்து தமிழனை அழிப்பதற்கான எல்லா உதவிகளையும் செய்ததா இல்லையா! காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இது நடந்தது. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை படுகொலை செய்தார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த மோடி அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது இன்று வரையிலும் இலங்கையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே டெல்லியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் எதிர் எதிர் கட்சியாகவே இருந்தாலும், தமிழனை அழிக்க வேண்டும் என்ற கருத்தில் மட்டும் ஓரணியில்தான் இருக்கின்றார்கள். எந்த பாஜககாரர்களாவது இன்று வரை தமிழின உரிமைக்காக பேசி இருக்கிறார்களா? பாகிஸ்தானிலும், வங்காள தேசத்திலும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கக்கூடிய இந்துக்களை காப்பாற்றவும், குடியுரிமை கொடுக்கவும் பேசிக்கொண்டிருக்கும் பாரதிய ஜனதா மோடி அரசு, தமிழீழத்திலே கொல்லப்படுகின்ற தமிழர்களுக்கு குரல் கொடுத்தார்களா? ‘இந்துக்களுக்காகதான் நாங்கள் போராடுகிறோம்’ என்று சொல்லும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்காரர்கள் ஈழத் தமிழர்களுக்காக இதுவரை குரல் கொடுத்து இருக்கிறார்களா? தமிழ்நாட்டில் இருந்து வரிகட்டி இந்திய கொடி உயர்த்திப் பிடித்துக் கொண்டு செல்லும் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் கடலில் இலங்கையால் கொல்லப்படுகிறார்களே, அவர்களுக்காக பேசியிருக்கிறார்களா? இல்லையே!
ஏனென்றால் அவர்கள் தமிழர்களை ஒரு காலத்திலும் இந்துக்களாகவும் பார்த்ததில்லை. இந்த தேசத்தின் மக்களாகவும் பார்த்ததில்லை. அதனால் தான் நாம் அவர்களை நிராகரிக்கிறோம். இந்த அரசியல் அனைத்தையும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர் ஐயா வைகோ அவர்கள். இதைப் பேசுகின்ற ஒற்றைக் கட்சியாகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தான் இருக்கிறது.
ஈழத்தின் மிகச்சிறந்த உலகப் புகழ்பெற்ற ஆய்வாளரான கா.சிவத்தம்பி அவர்கள் “தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கக்கூடிய ஒற்றை திராவிட கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்” என்று தமது கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு திராவிடக் கட்சிகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சரி செய்து, ‘திராவிட கட்சி என்பது தமிழினத்தின் உரிமைக்கும், தமிழ்த்தேசிய இன விடுதலைக்கும் குரல் கொடுக்கும்’ என்கின்ற முழக்கத்தை முன்வைத்த ஒற்றைக் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்தான். இன்றைக்கும் பெரியாரின் உடைய கொள்கைகளை பேசுகின்ற ஒற்றை கட்சி இதுதான்.
நாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசுகிறோம், இந்தியாவிற்கு தமிழினம் கொடுத்த பங்களிப்பை பற்றி பேசுகிறோம், ஆனால் தமிழினத்தின் எதிர்காலத்தை குறித்து யார் பேசுவது?

தனது இறுதி காலத்திலும் தந்தை பெரியார் டெல்லியை பார்த்து “உனக்கும் எனக்கும் என்னப்பா தொடர்பு? 2000 மைல்களுக்கு அப்பால் இருக்கின்ற நீ எதற்காக இங்கு வந்து எங்களுக்கு சட்டம் போடுகிறாய்” என்று கேட்டார். அந்தக் குரலை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கக்கூடிய தேர்தல் கட்சிகளில் முதன்மையான கட்சியும் ஒற்றைக் கட்சியுமானது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
தோழர்களே, தன் தொண்டர்களை, தோழர்களை பதவிக்காக இல்லாமல் கொள்கைக்காக வளர்த்தெடுத்தவர் ஐயா வைகோ அவர்கள். அவரோடு நிற்பதற்கு நாங்கள் பெருமை கொள்கின்றோம். இவை எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். பழிச்சொற்கள் வரத்தான் செய்யும். நேர்மையாக நின்று போராடக்கூடிய அனைவருடைய வாழ்க்கையிலும் வரலாற்றில் பழிச் சொற்கள் வந்து கொண்டு தான் இருந்திருக்கின்றன. காட்டி கொடுத்தவன் மீது என்றைக்குமே பழிச்சொல் வந்ததில்லை. சோரம் போனவர்கள் மீது என்றைக்குமே விமர்சனம் வந்ததில்லை. அவர்களுக்கு ஊடகம் கிடைக்கும். அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அவர்கள் சொற்களுக்காக அலைவார்கள். ஆனால் அவையெல்லாம் வரலாற்றில் ஏறாது. நாம்தான் நிற்போம். நாம் தான் வரலாற்றை முன் நகர்த்துவோம். நன்றி வணக்கம்!
குறிப்பு: மே பதினேழு இயக்கத்தின் 2026 ஆண்டு வரலாற்று நாட்காட்டியை ஐயா.வைகோ அவர்கள் வெளியிட்டார்.