திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! – மே 17 அறிக்கை

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பு சட்ட நெறிமுறைகளை மீறிய செயல்! மதுரையில் கலவரத்தை நடத்த திட்டமிடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-இந்து முன்னனி கும்பலுக்கு எதிராகவும், மதவெறியை தடுக்கும் விதமாக திமுக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மே பதினேழு இயக்கம் ஆதரவளித்து துணை நிற்கும்! – மே பதினேழு இயக்கம்

மதுரை திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ தீவிரவாதிகள் மதுரையில் கலவரத்தை உண்டாக்கவும் அந்த மூலம் மக்களிடையே பிளவு ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய நீண்டகாலமாக முயற்சித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக புதிய சர்ச்சையை உண்டாக்கி, நீதிமன்றத்தின் மூலம் திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு துணையாக நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது. வழக்கமாக விளக்கு ஏற்றப்படும் இடத்தை தவிர்த்து, மலையின் மற்றொரு பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா அருகிலுள்ள தூணில் தான் ஆங்கிலேயர் காலத்தில் விளக்கு ஏற்றப்பட்டது என்றும், அதன்படி இந்த ஆண்டு முதல் அந்த இடத்தில் விளக்கேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார் இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் இராம.ரவிக்குமார். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அந்த வழக்கினை விசாரித்த முறையும், அதன் மீது அளித்த தீர்ப்பும் தற்போது சர்ச்சையாகி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

மனுதாரர் கோரிய விளக்கேற்ற உரிமை கோரும் தூண் உண்மையில் விளக்குத் தூண் தானா என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அது நில அளவை தூண் என்றே பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அதில் விளக்கேற்றும் நடைமுறை இருந்ததா என்பதற்கான உறுதியான சான்றுகள் வழங்கப்படவுமில்லை. இருந்தும், எதிர்தரப்பிற்கு வாதாடுவதற்கு போதிய அவகாசம் வழங்காமல், நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் மனுதாரர் வழங்கிய சான்றுகளை கொண்டே தீர்ப்பு வழங்கியுள்ளார். ஒரு வேளை அப்படியான நடைமுறை முன்பு இருந்திருந்தாலும், அது ஏன் நிறுத்தப்பட்டது, தற்போது அதனை மீண்டும் தொடர்வதால் ஏற்படும் சமூக சிக்கல்கள் போன்ற எவற்றை குறித்த ஆய்வோ, விளக்கமோ இல்லாமல், சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல், அவசர அவசரமாக மனுதாரர் கோரிய தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று ஒருதலைபட்சமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

மேலும், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் மேற்கொண்ட வழிமுறைகள் சட்டநெறிமுறைகளை மீறிய செயலாகும். எதிர்தரப்பான தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் வழங்கிய தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்த போதும், மாலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்து மாலை 6.05 மணிக்குள் தனது தீர்ப்பை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பளிக்கிறார். அதேவேளை, சட்டம் ஒழுங்கு சீர்கெடும் சூழலில் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு ஊர்களிலிருந்து இந்துத்துவ குண்டர்கள் மலை அடிவாரத்தில் திரண்டனர். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சட்டம் ஒழுங்கு குறித்தோ, மத நல்லிணக்கம் குறித்தோ எவ்வித கவலையுமின்றி தன்னை ஒரு இந்துத்துவவாதியாக கருதி தீர்ப்பை நடைமுறைப்படுத்த முனைந்தது தெரிகிறது.

அதேவேளை, ஆண்டுதோறும் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் அருகில் வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டு வழக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இருந்தபோதிலும், தர்கா அருகிலுள்ள தூணில் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரருடன் உயர்நீதிமன்ற காவல் பணிக்கு அமர்த்தப்பட்ட மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை (CISF) அனுப்பியுள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன். இது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் மாநில காவல்துறைக்கு விடுக்கப்பட்ட சவாலாகும். தமிழ்நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். உயர்நீதிமன்ற காவலுக்கு இருப்பவர்களை நீதிமன்றத்தின் காவல்துறையாக கருதி தமிழ்நாட்டின் காவல்துறைக்கு இணையான அதிகாரத்தை வழங்க நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. இது தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தியாவது தனது தீர்ப்பை நடமுறைப்படுத்த வைக்க வேண்டும் என்ற நீதிபதியின் தன்முனைப்பை தான் காட்டுகிறது.

சில மாதங்கள் முன்பு, சிக்கந்தர் தர்காவில் ஆடு வெட்டி சமைக்கப்படும் நடைமுறை இருந்தது என்றும், அந்த உரிமையை தற்போது வழங்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தை நாடிய போது, இதே நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து உரிமையை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியது. ஆனால், அதே போன்ற ஒரு நடைமுறையை தற்போது இந்ததுத்துவா தரப்பு முன்வைக்கும் போது, உரிமையியல் நீதிமன்றத்தை நாட சொல்லாமல், அவசர அவசரமாக தீர்ப்பளித்ததும், அதனை எப்பாடுபட்டாவது நடைமுறைப்படுத்த முனைந்ததும் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அணுகுமுறையில் சந்தேகத்தை எழுப்புகிறது. ஒரே சட்டத்தின் கீழ் இரு வேறு அளவுகோல் வைப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல .இதற்கு முன்னர் இதேபோல இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவான சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய போதும் இதே போல் நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் விமர்சிக்கப்பட்டார்.

அனைத்தையும் உற்று நோக்குகையில், நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் சட்டத்தை தனக்கேற்றபடி வளைத்து, தான் விரும்பும் வகையில் இந்ததுத்துவ சக்திகளுக்கு ஆதாரவான தீர்ப்புகளை தொடர்ச்சியாக வழங்கி வருவது தெரிகிறது. இது நீதிமன்றத்தின் ஜனநாயக மாண்பை குலைக்கக் கூடியதாகும். இது போன்ற செயல்கள் ஜனநாயகத்தின் தூணான நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கச் செய்யும். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக இருக்க தகுதியற்றவர். அவர் நீதிபதி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான சட்ட நடைமுறைகளை தமிழ்நாடு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

திருப்பரங்குன்றத்தில் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்பட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தூண்டுதலாக இருந்துள்ளார். நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் முனைப்பையும் மீறி, மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சமூக சிக்கலை உண்டாக்கும் செயலை தமிழ்நாடு காவல்துறை தடுத்து நிறுத்தியது. அப்போது தடைகளை மீறி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ குண்டர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடு எடுத்ததற்கு பாராட்டுகிறோம். தொடர்ந்து சட்டரீதியான போராட்டத்தை நடத்தி தமிழ்நாட்தின மத நல்லிணக்கத்தை காக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்துக்கொள்கிறோம். இதற்காக திமுக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மே 17 இயக்கம் ஆதரவளித்து துணை நிற்கும்.

திருப்பரங்குன்றத்தினை முன்வைத்து மதுரையில் கலவரத்தை நடத்த திட்டமிடும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-இந்துமுன்னனி கும்பலுக்கு எதிராகவும், மதவெறியை தடுக்கும் விதமாக கட்சி, இயக்க வேறுபாடின்றி ஒன்றுபட்டு தமிழ்நாட்டை காத்திட அனைத்து கட்சி, இயக்க ஆளுமைகளுக்கும் வேண்டுகோள் வைக்கிறோம். மதவெறியை மாய்ப்போம்! தமிழ்நாட்டை காப்போம்!

மே பதினேழு இயக்கம்

9884864010

04/12/2025

https://www.facebook.com/share/p/1JquabFcSR

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »