இரவல் கடப்பாரை இமயத்தை சரிக்காது

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முரசறைந்த பெரியாரை, ‘சுதந்திர தமிழ்நாடு’ கோரிக்கையை வாழ்நாள் முழுவதும் பேசிய பெரியாரை, தமிழர்களுக்கு விரோதமாக, தமிழ்நாட்டிற்கு விரோதமாக போலித் தமிழ்த்தேசியவாதிகள் நிறுவத் துடிக்கிறார்கள். இந்த மலினமான சித்தரிப்பினைத் தகர்த்து ‘தமிழ்த் தேசியத்தின் வழிகாட்டியே பெரியார்’ என்பதை மக்களுக்கு உணர்த்துவது உண்மையான தமிழ்த் தேசியவாதிகளின் கடமையாகிறது.

தமிழர்களின் இறைமையாண்மையாக இருக்கக்கூடிய வரலாறு, பண்பாடு, அரசியல், பொருளாதாரம், கல்வி,  மொழி, பண்புக் கூறுகள் என அனைத்தும் விடுதலை அடையும் விடுதலைக் கருத்தியலே தமிழ்த்தேசியமாக வரையறுக்கப்பட்டது. இந்த இறைமைகள் மீதான ஆரியப் படையெடுப்பை எதிர்த்து நின்று தமிழ்த்தேசியத்திற்கு பாதுகாப்பு அரணாக எழுந்ததே திராவிடக் கருத்தியல். 

திராவிட வார்த்தையை முதலில் கையாண்டவர் பெரியாரல்ல. பெரியாருக்கு முன்னோடியாக 1880-களிலேயே தமிழ் தலைவர்களான அயோத்திதாசர் ‘திராவிட மகாஜன சபை’ என்றும், ரெவ்ரென்ட் ஜான் ரத்தினம் ‘திராவிட கழகம்’ என்றும் உருவாக்கி, ஆரியத்திற்கு எதிரான திராவிட அரசியல் சொல்லாடலைத் துவங்கினர். திராவிடப் பாண்டியன், திராவிட மஞ்சரி போன்ற இதழ்கள் திராவிட அடையாளத்தை பறைசாற்றின.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி நிலையான பகுத்தறிவு, சாதி மத ஒழிப்பு, அறிவியல் மனப்பான்மை, சமத்துவம், சம வாய்ப்பு, பெண்ணுரிமை, சகோதரத்தன்மை, சமூக நீதி போன்றவற்றை அடித்தளமாகக் கொண்டு எழுந்தது திராவிடம். தமிழ்த் தேசிய விடுதலை கருத்தியலின் நுழைவாயிலாக இருந்த இவற்றையெல்லாம் சமூகத்தில் பரவச் செய்யும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பெரியார். மேலும் தமிழர்களின் பண்பாட்டு, அரசியல், பொருளாதார, வரலாற்று அடையாளங்களைக் கூர்தீட்டும் பட்டறையாக திராவிடக் கருத்தியலை பேசினார்.

தமிழ்த்தேசியத்தின் இறைமையை திராவிடம் பட்டை தீட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், அதை அழித்துக் கொண்டிருந்த ஆரியத்தை அம்பலப்படுத்தினார் பெரியார். அதன் முதல் படியாக, ஆரியம் கற்பித்து வைத்த இந்தியத் தேசியத்தை மறுத்தார். தேசிய இனம் என்று சொல்லக்கூடிய எந்த அடையாளமும் இல்லாத பார்ப்பனியம், தனது ஆதிக்க மேலாண்மையைத் தக்க வைப்பதற்காக இந்தியாவை தேசியமாக வரையறுத்த மோசடியை தெளிவுபடுத்தினார். பழங்குடிகளின் தெய்வங்களை அபகரித்து, அவர்களின் கடவுளர்களை, பல கட்டுக் கதைகளைக் கட்டி விட்டு, புனிதம், சடங்கு, சம்பிரதாயம் எனப் பலவற்றைப் புகுத்தி, மத அதிகார மையமாக மாற்றியது பார்ப்பனியம். இதுவே வைதீக மதமாக மாறியது.  இந்து மதத்தின் முகமூடியிட்டு பார்ப்பனிய வைதீக மதம் வருவதை முதலில் கண்டறிந்தவரே பெரியார். அதை வலுப்படுத்த புராண, இதிகாசங்களைக் கற்பித்து வைத்திருப்பதையும், உழைக்கின்ற மக்களை உறிஞ்சும் மத அமைப்பே பார்ப்பனிய மதம் மற்றும் அது விரும்பும் பார்ப்பனிய தேசியமே இந்திய தேசியம் என்பதையும் ஆய்வுப்பூர்வமாகப் பகுத்து விரிவாகப் பேசினார்

“தமிழன் தன்னை ‘இந்தியன்’ என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரிகத்தையும் மறந்தான்.

தமிழன் தன்னை ‘இந்து’ என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்” என்று இந்தியன், இந்து என்று தமிழர்கள் எண்ணியதால்  ஏற்பட்ட விளைவைக் குறிப்பிட்டார்.‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி தமிழ்த் தேசியத்தின் உயிர்ப்பை உணர்த்தியவர் பெரியார்.

நம் சமகாலத்திலேயே, தமிழர்களே மூத்த குடிகள், தமிழ் மொழியே மூத்த மொழி, தமிழர் நாகரிகமே தொன்மையான நாகரீகம் என்று இந்திய வரலாற்றையே புரட்டிப்போடும் அளவிற்கு உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் ‘கீழடி’ அகழ்வாய்வில் கிடைத்ததை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், இந்தியப் பார்ப்பனிய அதிகார மட்டங்கள் போலியானக் காரணங்களைக் கூறி நிராகரிக்கின்றன. ஆனால் அதைப் பற்றி எல்லாம் துளியும் கவலையோ, அக்கறையோ கொள்ளாத சீமான் ‘பாரத தேசம் என்று தோள் தட்டுவோம்’ என்று பாரதியின் பாடலில் இறுமாப்பு கொண்டு ஆர்.எஸ்.எஸ் மேடையில் பேசுகிறார்.

‘சிங்கள தேசத்திற்குள்’ அடங்கி ஒடுங்கி வாழ்வதை நிராகரித்து ஆயுதம் எடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளை ‘தமிழ் தேசியத்தின் அடையாளமாக’ ஏற்றுக் கொண்டதாகக் கூறும் சீமான், ‘இந்திய தேசத்திற்குள் இணங்கி இருப்பதையே ‘தமிழ்த் தேசியம்’ என்று சுருக்குகிறார். தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக் கருத்தியலான தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தி, தான் இனத்தால், மொழியால், நிலத்தால் ‘தமிழன்’ என்றாலும் தேசத்தால் ‘இந்தியன்’ என்று புளகாங்கிதம் அடைந்து ஆர்.எஸ்.எஸ் மேடையில் பேசுகிறார்.

கீழடி போன்று நம் கண் முன்னே சமகாலத்தில் தமிழர் வரலாறுக்கு நிகழ்த்தப்படும் அநீதியை எதிர்த்து நிற்கும் துணிச்சலற்று  ஆரிய சித்தாந்தவாதிகளின் கைப்பாவையாக இருக்கும் சீமான், 2000 ஆண்டு காலம் தமிழர்களுக்கு ஏற்பட்ட வரலாற்று அநீதியைத் துடைக்க எழுந்த பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறார்.

இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்பு, குலக்கல்வி திட்ட எதிர்ப்பு, சாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகள் எதிர்ப்பு என இந்தியம் திணித்த அனைத்தையும் எதிர்த்துப் போரிட்டு இந்திய அரசியல்வாதிகளிடம் நேருக்கு நேராக நின்று சண்டையிட்டார் பெரியார். இட ஒதுக்கீடு உரிமை மீது கைவைத்த உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி மைய அரசை எதிர்த்து போராடிய களங்களே இந்திய அரசியமைப்பு சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க வைத்தது. தமிழர்களோடு சேர்ந்து மற்ற இன மக்களுக்கும் வேலைவாய்ப்பில் உரிமை பெற வைத்தது.  

நம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் உரிமை பெறுவதற்கு முதலில் கல்வியே பரவலாக பெறவில்லையே என்று போராடியவர் பெரியார். பிள்ளைகள் படிக்க துவங்கிய காலத்தில் குலத்தொழிலை நுழைத்த ராஜாஜியை எதிர்த்து கடுமையான சண்டையிட்டார். குலக்கல்வி திட்டம் பின்வாங்கப்பட்டது. இன்று நம் சமகாலத்தில், குலக்கல்வி திட்டத்தின் மற்றொரு வடிவமான விஸ்வகர்மா திட்டத்தை மோடி கொண்டு வந்தார். இந்தியைத் திணிக்கும் பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி கிடைக்கும் என்கிற நிபந்தனை விதித்தார். ஐஐடி, ஐஐஎம் போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. இதில் எவை குறித்தும் வாயைத் திறக்காத சீமான்தான், அன்று தனது போராட்டங்களினால் டெல்லி அரசை கதிகலங்க வைத்த பெரியாரையும், திராவிடத்தையும் பிராமணக் கடப்பாரையால் உடைக்கப் போவதாக வெட்டி வீரம் பேசுகிறார்.

தமிழ்த்தேசிய விடுதலையும், சாதி ஒழிந்த தமிழ் தேசியமே இலக்கு என்றார் தமிழரசன்.  ‘சாதி ஒழிந்த, மதம் ஒழிந்த, சமத்துவம் நிறைந்த தேசியம் ஒன்று உருவாகுமானால் அந்த தேசியத்தை நான் ஏற்பேன்’ என்கிறார் பெரியார்.

ஆனால் போலித் தமிழ்த் தேசியவாதியான சீமான், சாதியைக் குடி அடையாளமாக்கி விட்டார். அதைப் பெருமையாகப் பேசிய ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் என அடையாளப்படுத்திக் கொள்வதை மேடையில் பெருமைப்படுத்தி பேசியவர். அதே சமயம் ஏதாவது பத்திரிக்கையாளர்கள் சாதியைப் பற்றிக் கேட்டால் சாதி ஒழிப்பைப் பற்றியும் பேசுவார். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடி விட்டு, தன்னை ஆரிய மைந்தன் என்று சாதி உயர்வையும் பாடிய பாரதியை இவர் போன்றவர்கள் கொண்டாடித் தீர்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் தமிழ்த்தேசிய கோட்பாட்டையே சிதைத்து விட்டு, அந்த சிதைவை தமிழ்த்தேசியம் என்று கட்டமைக்கும் புல்லுருவிக்கு தமிழ்த்தேசியத்தில் இடமில்லை.

தமிழ் மீதான பற்றுணர்வைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழரை இழிவுபடுத்தும் சித்தாந்தத்தை மேன்மைப்படுத்தும் வேலையை திறம்பட கையாண்டார்கள் பார்ப்பனர்கள். கம்பன், பாரதி போன்ற தமிழ்க் கவிகளின் திறன் தான், ஆரியப் பார்ப்பனிய மற்றும் வடநாட்டுப் புனைவுகளை தமிழரின் தலையில் கட்டி, தமிழரின் பண்பாட்டை வரலாற்றை சிதைத்தது. அதை நுட்பமாக அறிந்து கொண்டவர்களே பெரியாரைப் பின்பற்றும் திராவிடர் இயக்கத்தவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்கள் சங்க இலக்கியத்தை கைக்கொண்டார்கள். ஆனால் எதிலும் தமிழ் சமூகத்தின் அறிவியல் முன்னேற்றமும், சமூக வளர்ச்சிப் போக்கையும் மட்டுமே சிந்திக்கும் பெரியார், பலரின் தமிழ்ப் பற்று ஆரியம் புகுத்தும் இழிவை ஏற்றுக்கொண்டு இருந்ததையும், ஆங்கிலம் தெரிந்ததால் மட்டுமே பார்ப்பனியம் வெள்ளையரின் நிர்வாகத்தில் கோலோச்சியிருக்கிறது என்பதையும் அறிந்தார்.  அதே சமயத்தில் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என்கிற சிந்தனையிலும், தமிழர்கள் ஆங்கிலம் படித்தால் மட்டுமே அந்த வேலை வாய்ப்புகள் பெற முடியும் என்கிற எண்ணத்திலும் தமிழ் சனியனை விட்டொழி என்கிற வார்த்தையைப் பயன்படுத்தினார். தமிழர்களுக்கு தமிழ்ப்பற்றை விட, தங்கள் வளர்ச்சி மீது கவனம் கொள்ள வேண்டும் என்பதிலே மட்டுமே நாட்டம் கொண்டவர் பெரியார்.

‘தமிழர் கழகம்’ என்று பெயர் வைத்தால் ஆரியம் புகுந்து விடுமென்றே, அதனை வைக்காமல் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் சூட்டியவர், அதே ஆரியம் தமிழ் மீது பற்று கொண்டு தமிழர் இறையாண்மைக்குள் உள்நுழைவதைக் கண்கூடாகப் பார்த்தார். பார்ப்பனர்களின் உறவாடிக் கெடுக்கும் தன்மையில் தமிழர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற ஆற்றாமையில் தமிழை அவ்வாறு கூறினார். அவர் அப்படி கூறியதற்குக் காரணம் ‘தமிழ் அழிப்பின் வெளிப்பாடு அல்ல, தமிழர் வளர்ச்சி மீதான ஆதங்கத்தின் வெளிப்பாடு’ என்று புரிந்து கொண்ட  அவர் வழிவந்த திராவிடப் பேரறிஞர்களான அண்ணா, கலைஞர், கவிஞர் பாரதிதாசன் போன்றவர்கள் சங்க இலக்கியத்தைக் கைக்கொண்டனர். அதன் மூலமாக தமிழர் மேன்மையை தமிழின் சிறப்பை பல வடிவங்களில் எடுத்துரைத்தனர். திராவிட இயக்கத்தவர்கள், தமிழின் மீது மாசாகப் படிந்திருந்த அனைத்து கறைகளையும் கழுவினர். சங்க இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்தனர். பகுத்தறிவு தமிழைப் பரப்பினர். தமிழர் சிந்தனையைத் தூண்டினர். 2000 ஆண்டு காலத்தில் இல்லாத ஒரு எதிரியை, பெரியார் என்ற எதிரியை ஆரியம் அன்றுதான் சந்தித்தது. அந்த திராவிடத்தைத் தான் பிராமண கடப்பாரையைக் கொண்டு இடிப்பேன் என்று கூறுகிறார் சீமான். பல காலமாக திராவிடத்தை இடித்த கடப்பாரைகள் முனை மழுங்கியதுதான் வரலாறு.

தமிழ் மொழியை மட்டுமே தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக்கும் கள்ளத்தனத்தை மிக லாவகமாக கையாளுகிறார் சீமான். தமிழ் உணர்வு மட்டுமல்ல தமிழரின் பண்பாடு, பொருளியல், வரலாறு, அரசியல் விடுதலை கோரிக்கையும் கொண்டதே தமிழ்த் தேசியம். பெரியார் அந்தத் தமிழ்த் தேசியத்தை அழிக்கும் நோக்கம் கொண்டவனைப் பார்த்து, தனது 94 ஆம் வயதில் தியாகராய நகரில் இறுதி உரையாற்றிய போது கூட, ‘டெல்லியை பார்த்து உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என்று கேட்டவர். எங்களுக்கென்று எல்லா வளங்களும் இங்கு இருக்கும்போது நீ யார் எங்களை ஆள்வதற்கு? என்று துணிச்சலுடன் டெல்லியை நோக்கி அந்த வயதிலும் கர்ஜித்தவர். ஆனால் தமிழன் அடிமையாக உரிமையற்று இருப்பதற்கு பார்ப்பான் ஆண்டால் என்ன? அல்லது வெள்ளையன் ஆண்டால் என்ன? என்று குறிப்பிட்ட பெரியாரை தேச விடுதலையே வேண்டாம் என்று சொன்னதாகக் கட்டமைத்துவிட்டு, பாரதியாரை ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று சுதந்திரத்திற்கு முன்பே பாடிக் களித்து விட்டதாக ஒப்புமைப்படுத்தி பேசுகிறார் சீமான். தேசம் என்பது இங்கு சீமானுக்கு பாரத தேசமாகவே தெரிகிறது. பெரியாருக்கு அது தமிழ் தேசிய விடுதலையாகவே தெரிந்தது. அதனால்தான் இறுதி உரையிலும் கூட ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழங்கினார் பெரியார்.

பல தேசிய இனங்களின் சிறைக் கூடமாக அதிகாரத்தை மையப்படுத்திக் கொண்டு, மாநில உரிமையை அபகரித்துக் கொண்டு, மாநிலங்களை ஆட்டுவிக்கும் ஒன்றிய மோடி அரசை எதிர்க்கும் துணிச்சலற்று, தமிழர்களைப் போன்று இந்திய சிறை கூடத்தில் இருக்கும் மற்றொரு தெலுங்கர் தேசிய இனத்தை திராவிடர்கள் என்று வார்த்தை விளையாட்டுடன் தொடர்புபடுத்தி, முதன்மை எதிரியான இந்தியப் பார்ப்பனியத்தை மடைமாற்றி விட்ட பணியை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கைக்கூலியே சீமான்.

பிராமண கடப்பாரையைக் கொண்டு தமிழ் தேசியத்தையே இடிக்கிறார் சீமான். இரவல் கடப்பாரை இமயத்தை சரிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »