தந்தை பெரியார் அவர்களின் 52 வது நினைவுநாளையொட்டி புகழ் வணக்க சிறப்பு கட்டுரை:
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
ஒவ்வொரு மனிதருடைய வாழ்வும் முழுமை அடைவது அவரது மறைவின் போதுதான். அதுவரை அம்மனிதர் இந்த சமூகத்திற்காக ஆற்றிய அரும்பணிகள் அனைத்தும் அப்பொழுதுதான் நினைவு கூறப்படுகின்றன. பிறக்கும்பொழுது எல்லோரும் சமமாகப் பிறந்தாலும், எல்லோரும் சமமாக வாழ்ந்து விடுவதில்லை. சிலர்தான் பிறந்த சமூகத்திற்கு பெரும்பணி ஆற்றி, மறைந்து “இவர் போல் அல்லவா நம் வாழ்வும் இருக்க வேண்டும்!” என்று அனைவரையும் வியப்புக்குள்ளாக்கி வரலாறாக மாறுகின்றனர். அப்படி தமிழ்நாட்டின் புதிய வரலாற்றுப் பக்கங்களை நிரப்பியவர் ஐயா தந்தை பெரியார் அவர்கள்.
திராவிடர்களின் சுயமரியாதைக்காகவும், தமிழின விடுதலைக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் அயராது போராடிய அரும்பெரும் தொண்டர், தலைவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியாருடைய பன்முக ஆளுமை எடுத்த போராட்டங்களில் எல்லாவற்றிலும் அவரை வெற்றிவாகை சூடச் செய்தது.
பெரியார் சாதி ஒழிப்பு போராளியாக, இந்து மத ஒழிப்பு போராளியாக, கடவுள் மறுப்பாளராக, பெண்ணுரிமை போராளியாக, மொழி உரிமை போராளியாக, இன விடுதலைப் போராளியாக தனது வாழ்க்கைப் பயணத்தை தாமே செதுக்கிக் கொண்டவர். இதற்கு இடையில் பத்திரிக்கை நடத்துவது, நூல்கள் எழுதுவது, எழுதிய நூல்களை பதிப்பித்து மக்களிடையே கொண்டு சேர்ப்பது என பரப்புரை ஆளுமையில் கோலோச்சியிருந்தார். பெரியாரின் அரசியல் எதிரிகள் கூட நேரில் பார்க்கும் பொழுது அன்போடும், உரிமையோடும் உரையாடக்கூடிய அளவிற்கு அரசியல் நாகரிகத்தையும், பண்பாட்டையும் கடைப்பிடித்தார். தனிமனித விரோதமோ, இன வெறுப்போ கொள்ளாமல் “நீங்கள் வாழ வேண்டாம் என்று சொல்லவில்லை, தமிழர்களாகிய எங்களையும் வாழ விடுங்கள்” என்ற சமத்துவ, சமதர்ம, சகோதரத்துவ உணர்வு உடையவராக திகழ்ந்தார். சற்றும் தலைகணம் கொள்ளாமல், தம்மோடு இயங்கிய தோழர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு நேராமல், தம்மை நம்பிய மக்களுக்கு துரோகம் நேராத வண்ணம் தேர்தல் அரசியலை தவிர்த்து இயக்க அரசியலை முன்னெடுத்த புரட்சியாளராக வாழ்ந்து காட்டினார்.
பெரியாரின் எழுத்துக்கள் இனிப்பு முலாம் பூசப்பட்ட, கவிதை நடையில் கொஞ்சி விளையாடும் எழுத்து வகை அல்ல. அவை வெடித்துச் சிதறும் எரிமலையின் வழிந்தோடும் நெருப்புக் குழம்புகளாய் சமூகத்தின் ஊடே பாய்ந்து சென்றன. அந்நெருப்பாற்றில் இறங்க நினைப்பவர்கள் சுயநலமற்ற சுயமரியாதைக்காரர்களாக இருக்க வேண்டியிருந்தது. சாதி இழிவு நீங்க, சமத்துவம் வளர்ந்திட பெரியார் தமிழ்நாட்டின் அரசியலில் இருந்த எவரையும் பயன்படுத்தத் தயங்கியதே இல்லை. ஆனால் பெரியாரைப் பயன்படுத்தி அரசியlல் ஆதாயம் பெற நினைத்த எவரும் அவரை நெருங்கியதும் இல்லை.
தமிழர் நலனுக்காக தான் முன்னிற்கவோ அல்லது பிறர் முன்னெடுக்கும் செயல் திட்டத்தில் கலந்து கொள்ளவோ பெரியார் ஒருபொழுதும் தயங்கியதில்லை. அதன் காரணமாகவே பெரியார் மீது தமிழ்ப்பற்றாளர் உலகம் முடிவிலா அன்பையும், பெருமதிப்பையும் வாரி இறைத்து கொண்டிருந்தது.
இன்று சில புல்லுருவிகள் பேசுவதைப் போல் அவர் தமிழ்த்தேசியத்திற்கோ, தமிழர் நலனுக்கோ, தமிழர் உரிமைக்கோ, தமிழ் மொழிக்கோ எதிரானவர் அல்ல என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த, அவருக்குப் பின்னால் தோன்றிய தமிழ் பேசும் நல்லுலகின் தன்னிகரில்லா செயல்வீரர்கள் கூறிச் சென்றுள்ளனர்.
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பெரியாரை புகழ்ந்து 1979 ஆம் ஆண்டு ‘செந்தமிழ் செல்வி’ என்ற ஏட்டில் எழுதியவை அவற்றுக்கு ஒரு சான்று.
“நான் பெரியாரை மதிப்பதெல்லாம், எவருக்கும் அஞ்சாமையும் எதையும் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கும் ஆற்றலும் பற்றியே. கோடிக்கணக்கான மக்களோடு கூடிக்கொண்டு கும்பலில் கோவிந்தா போடுவது போல் பேராயத்தார் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தது அத்துணை ஆண்மையன்று. கும்பகோணமாயினும், குமரிக்கோட்டக் காசியாயினும், சற்றும் அஞ்சாது பிராமணியத்தைச் சாடுவதிலும் அதன் கொடுமைகளைக் கல்லா மாந்தர்க்கு விளக்கிக் கூறுவதிலும் ஓய்வு சாய்வின்றி இனநலத்தைப் பேணுவதிலும் அவருக்கு ஈடானவர் இதுவரை இருந்ததுமில்லை; இனியிருக்கப் போவதுமில்லை. பிரித்தானியத்தை எதிர்த்ததிலும், பிராமணியத்தை எதிர்த்ததே பேராண்மை.”
இப்படி எழுதிய தேவநேயப் பாவாணர் அவர்கள், பெரியாரைப் புகழ்ந்து பாடல்கள் இயற்றி புகழ்மாலைச் சூடி உள்ளார். ஆம்! அரசர்களைப் புகழ்ந்து கொண்டிருந்த தமிழ் பாவலர் சமூகம், பெரியாரின் தொண்டைக் கண்டு சாமானிய மனிதனைப் புகழத் தொடங்கியிருந்தது.
“தமிழகத் தீரே! தமிழகத் தீரே!
மொழிவர லாறு மொழிவது கேண்மின்!
பிராமணி யம்மென்னும் பெருங்கேடு நஞ்சு
நாவலம் முழுவதும் நலங்கெடப் பரவிப்
பைந்தமிழ் திரவிடப் பழங்குடி மக்கள்
நைந்தமை தடுக்க நன்மருத்துவராய்
வள்ளுவர் மறைமலை வன்மறப் பெரியார்
தெள்ளிய மூவர் தென்னகந் தோன்றினர்
நாற்பொருள் விளக்கும் நடுநிலை யறநூல்
நானிலப் பொதுவாய் நல்கினார் தேவர்
அயற்சொல் களைந்த அருந்தமிழ் நூல்களால்
அடிமையும் மதமும் அளைந்தமை கண்டே
விடுதலை பெறவழி வேறில்லை யென்றே
கடவுள் இலையெனுங் காரங் கலந்து
மடந்தவிர்த் தனர்தன் மானப் பெரியார்
குறுகிய நோக்கிற் கொள்கை பிறழ்ந்து
பண்டம் விட்டுப் படிவம் பற்றித்
தமிழர் ஒற்றுமை தடுத்துப் பகைவரைத்
தம்மொடு சேர்த்துத் தமிழுணர் விழந்து
பெரியார் பெயரைக் கெடுப்பார்
தெரியார் தம்மால் தீதுறல் அவர்க்கே.”
தேவநேயப் பாவாணர்
இப்பொழுது எங்கே செல்வார்கள் போலித் தமிழ்த்தேசியவாதிகள்? இதோ தமிழ் மொழியின் திறனை, வளத்தை, ஆழத்தை ஆய்வு செய்து உலகுக்கு படைத்த மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார் “பெரியாரை இகழ்பவர் தமிழர் எதிரி” என்று.
அவர் மட்டுமா, பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் பெரியாருக்கு புகழ்மாலை சூடி உள்ளார். தந்தை பெரியார் அவர்கள் முன்னெடுத்த பகுத்தறிவு மாநாடு, பெண்கள் நல உரிமை மாநாடு, இந்தி எதிர்ப்பு மாநாடு, திருக்குறள் மாநாடு, வகுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு மாநாடு ஆகியவற்றை நினைவு கூறும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் “தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் பதவி நலமும், அரசியல் ஊதியமும் கருதிப் போகையில் திராவிடர் கழகம் ஒன்றே முழுக்க முழுக்க தமிழின நலமும், தமிழர் இன இழிவு நீக்கமும் நாடிப் போகின்ற தமிழர் இயக்கமாக நமக்கு தென்படுகிறது” என்று போற்றிப் கூறியுள்ளார். அத்தோடு விட்டாரா! இல்லையே. தன் பங்கிற்கு பாமாலையும் தொடுத்திருக்கிறார்.
தமிழ்நாடு தவிர்த்த இந்திய வரைபடம் எதிர்ப்பு போராட்டத்திற்காக தந்தை பெரியார் அறைகூவல் விடுத்த பொழுது தமிழ் உணர்வு கொண்டவர்களே பெரியாரின் அறைகூவலை ஏற்று திரண்டு வாருங்கள் என்று பாட்டு எழுதினார். அதில் முத்தாய்ப்பாய்,
“நாட்டுப் படத்தைக் கொளுத்துதற்கே, ஒரு
நாளைக் குறித்தார் பெரியார்- இதைக்
கேட்டுக் கொளுத்தும் தமிழர் எல்லாம்
எந்தமிழ் நாட்டுக் குரியார்!
வீட்டுக் கொருவர் இருவர் வந்திவ்
விடுதலைப் போரில் குதிப்பீர்! – பொன்
ஏட்டுக் குறிப்பில் உங்களின் பெயரை
எவர்க்கும் முதலில் பதிப்பீர்!“
என்று தமிழர்களை அழைத்தார். பெரியாரின் அறைகூவலை ஏற்று போராட்டத்தில் கலந்து கொள்பவர்களே இந்த தமிழ்நாட்டுக்கு உரியவர்கள் என்று தமிழ்த்தேசிய அரசியலில் இடதுசாரி தன்மையோடு இயங்கிய வெகு சிலரில் குறிப்பிடத் தகுந்தவராகிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே கூறியிருப்பது கண்டும் இன்னும் பெரியாரை தமிழ் தேசியத்திற்கு எதிரி என்று கூறுவது பெரியாரை இகழ்வது மட்டுமல்ல பெருஞ்சித்திரனாரையும் இகழ்வதற்கு இணையானது.
1958 ஆம் ஆண்டு பெரியார் சிறை சென்று மீண்ட பொழுது அவரை வரவேற்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய பாடல் திராவிட உணர்வை, தமிழர் அறத்தை தட்டி எழுப்பக் கூடியதாய் அமைந்த பாடலாகும்.
“கூட்டைத் திறந்ததும் கடுங்குரல் எழுப்பிக்
குறுநடை போட்டதே அரிமா! – சாதிக்
கேட்டை ஒழித்திட, சிறுநரிக் கூட்டம்
கிடுகிடுத் தொடுங்கின எங்கும்!
நாட்டைக் குழப்பிடும் சாதியும் – மதமும்,
நசுங்கிட வெழுந்ததே அரிமா அதன் பாட்டைக்
கெடுத்திடும் நாய்க்குல மழிக்கப்
பெரும்படை திரண்டதே எங்கும்!
பேச்சும், துணிவும் ‘பெருந்திறல் உரனும்’
பணிவும் அதன்கை வாளாம் – அதன்
மூச்சும், வாழ்வும் முத்தமிழ்த் தொண்டாம்!
மாற்றார் அதன்முன் தூளாம்!
காய்ச்சும் வெயிற்கும், கடுங்குளிர் மழைக்குஞ்
கம்பிச் சிறைக்குமஞ் சாது! – சாதி
பாய்ச்சும் கொடுமைப் பாதையைத் தூர்க்கப்
பகலும் இரவும்துஞ் சாது!”
பெரியாரினுடைய முயற்சிகளை கெடுக்கப் பார்க்கும் புல்லுருவிகளை அன்றே ‘நாய்குலம்’ என்று இகழ்ந்து இடித்துரைத்து இருந்தார் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.
“பெரியார்தான் தமிழ்நாட்டில் சாதியை ஒழித்தாரா, இந்து மதத்தை எதிர்த்தாரா?” என்றெல்லாம் ஏளனம் பேசும் எள்ளளவும் மூளையற்ற புள்ளினங்களுக்கு பதில் சொல்லுவோம் ஆம் என்று. சாட்சிக்கு நீட்சியாய் பாட்டேந்தி வருகிறார் புலவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
“பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்
நரியார் நாயகம் இங்கே நடந்திடும்!
திரியாத் தமிழ்க்கும் திகழ்நா டதற்கும்
உரியார் நாமெனும் உண்மை, பொய்த் திருக்கும்!
ஆரியர்க் கின்னும் அடியராய்க் கிடப்போம்!
பூரியர் புராணப் புளுகுக் குப்பையுள்,
சாதிச் சகதியுள், சமயச் சேற்றினுள்,
புதையுண் டிருப்போம்! புழுக்களாய் இருப்போம்!
சிதைவுற் றிவ்வினம் சிதறுண் டிருக்கும்!
பெரியார் பிறந்தார்! பிறந்தது உள்ளொளி!
அரியார் நாமெனும் ஆக்கமும் சிறந்ததே!”
என்ற வரிகள் தமிழ்நாட்டில் சாதி சகதிக்குள் இருந்து தமிழரை மீட்டெடுக்க தலைவர் பெரியார் செய்த பெரும்பணியை எடுத்துரைக்கும்.
பெரியாரின் மறைவின் பொழுது தன் சொந்த சகோதரனை இழந்தது போல் மனம் உருகி பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய பாடலை படித்துப் பார்க்கும் எவருக்கும் கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது.
“பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும்புகழைச் சுமந்த உயிர்
“பெரியார்” என்னும்
அரும்பெயரைச் சுமந்த நரை!
அழற்கதிரைச் சுமந்த மதி!
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல் பேச்சு!
பெரும்புதுமை! அடடா, இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்றதம்மா!
மணிச்சுரங்கம் போல்அவரின்
மதிச்சுரங்கத் தொளிர்ந்தெழுந்த
மழலைக் கொச்சை!
அணிச்சரம் போல் மளமளவென
அவிழ்கின்ற பச்சை நடை!
ஆரியத்தைத்
துணிச்சலுடன் நின்றெதிர்த்துத்
துவைத்தெடுத்த வெங்களிறு!
தோல்வியில்லாப்
பணிச்செங்கோ! அடடா, இப்
பகுத்தறிவைத் தமிழ் நாடும்
சுமந்த தம்மா!
உரையழ கிங்கெவர்க்குவரும்?
உடலழகிங் கெவர்பெற்றார்?
ஒளிர்முகத்தின்
நரையழகிங் கெவர்க்குண்டு?
நாளெல்லாம் வாழ்க்கையெல்லாம்
நடை நடந்து
திரையுடலை, நோயுடலைச்
சுமந்துபல ஊர்திரிந்து
தொண்டு செய்த
இரைகடலை அடடா இவ்
வெரியேற்றைத் தமிழ்நாடும்
இழந்ததம்மா!
எப்பொழுதும் எவ்விடத்தும்
எந்நேரமும் தொண்டோ டிணைந்த பேச்சு!
முப்பொழுதும் நடந்தநடை!
முழுஇரவும் விழித்தவிழி!
முழங்குகின்ற
அப்பழுக்கி லாதவுரை!
அரிமாவை அடக்குகின்ற அடங்காச் சீற்றம்!
எப்பொழுதோ, அடடா, இவ்
வேந்தனையித்
தமிழ்நாடும் ஏந்தும் அம்மா?
பெற்றிழந்தோம், பெரியாரை!
பெற்றிழந்தோம்! அவரின்
பெருந்த லைமை
உற்றிழந்தோம்; உணர்விழந்தோம்
உயிரிழந்தோம்; உருவிழந்தோம்!
உலையாத் துன்பால்
குற்றுயிராய்க் குலையுயிராய்க்
கிடக்கின்ற தமிழினத்தைக்
கொண்டு செல்லும்
தெற்றுமணித் தலைவரினை,
அடடா, இத் தமிழ்நாடும்
நெகிழ்ந்ததம்மா!
பெரியாரைப் பேசுகின்றோம்;
பெரியாரை வாழ்த்துகின்றோம்;
பீடு, தங்கப் பெரியாரைப் பாடுகின்றோம்;
பெரியார்நூல் கற்கின்றோம்;
பீற்றிக் கொள்வோம்!
உரியாரைப் போற்றுவதின் அவருரைத்த
பலவற்றுள் ஒன்றை யேனும்
சரியாகக் கடைப்பிடித்தால்
அடடா, இத் தமிழ்நாடும்
சரியாதம்மா!”
என்று காலமெல்லாம் தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டின் விடுதலைக்காக உழைத்த புரட்சியாளர் பெரியாரை பொதுவுடமைவாதியும், தமிழ்த்தேசிய பெரும்புலவருமான பாவலரேறு பெருஞ்சித்திரனார் போற்றிப் பாடுகிறார். பெரியார் கூறியதில் ஏதேனும் ஒன்றைக் கடைபிடித்தால் கூட தமிழ்நாடு சரியாக நிமிர்ந்து நிற்கும் என்று தமிழ் மக்களிடம் கோரிக்கை வைக்கிறார்.
மொழி வளத்தின் முதன்மை நாயகன் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் பாராட்டிய பெரியார், தமிழ் தேசியப் பெரும்பலவன் பாவலரேறு பெருஞ்சித்திரனார் சீராட்டிய பெரியார், புரட்சிக் கவிஞன் பாவேந்தர் பாரதிதாசனால் குன்றின் மேல் இட்ட விளக்காய் தமிழர் வரலாற்றில் தூக்கி நிறுத்தப்பட்டார்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பெரியாரின் வழி நடந்த தொண்டர். தன் தலைவரைப் பாராட்டாமல் இருந்திருப்பாரா? எழுத நினைத்தால் ஏடுகள் பத்தாது, அவ்வளவு பாராட்டி இருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் பாவேந்தரின் சிறு குறிப்புகளே போதும் பெரியாரின் புகழ் பாட.
1958 ஆம் ஆண்டு தாம் அதற்கு முன்பு நடத்தி வந்த குயில் ஏட்டை மீண்டும் தொடங்கிய பொழுது அதன் முதல் இதழிலேயே தலையங்கமாய் பெரியாரைப் பற்றி புகழுரை தீட்டினார் பாவேந்தர் பாரதிதாசன்.
“இன்று இந்த உலகத்தில் தி.க. உறுப்பினர் போன்ற தன்னலமற்றத் தவத்திருவாளர்களைக் காணமுடியாது. உடல் பொருள், ஆவி இம்மூன்றையும் கழக முன்னேற்றத்திற்குத் தமிழரிடம் பொதுநலத்துக்கு அளித்த-அளிக்கின்ற தவத்திருவாளர்களைப் பெரியார் விலாப்புறத்திலின்றி வேறு எங்கு காணமுடியும்” என்று பெரியாரை மட்டுமல்லாமல் அவருக்கு உறுதுணையாய் நின்ற உற்ற தோழர்களை உச்சி முகர்ந்து மனம் குளிர்ந்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் குயில் இதழ் மீண்டும் தொடங்கப்படுவதற்கு பெரியாரின் உறுதுணை காரணம் என்றும் மற்றொரு தலையங்கத்தில் வெளிப்படுத்தியிருந்தார். பெரியாரின் திராவிடர் கழகத்தின் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமே தன் ஏட்டை வாங்கினால் போதும் என்றும் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
“குயில் இரண்டாம் முறையாகத் துவக்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட ஆதரவு பெருகி வருக்கின்றது. இப்பெருக்கம் தமிழர்களிடையே வலுத்து வரும் தமிழ்ப்பற்றைக் காட்டுகின்றது.
இந்நிலைக்குக் காரணம் பெரியார் இயக்கம் ஒன்றே என்பதை நாம் மறந்தால் வாழ்வே நம்மை மறக்கும்…
சாதி ஒழிக – தமிழ்நாடு மீள்க! என்னும் உயிர் மருந்தே கொள்கையாகக் கொண்டு தமிழர் மானங்காக்கும் பெரியார் இயக்கத்தில் உண்மைப் பற்றுடையவர்கள் மட்டும் குயிலை – எழுத்தால் – பிறவகையால் ஆதரித்தால் போதும். அக்கொள்கையை இனி ஆதரிக்க எண்ணுவாரும் எழுதலாம். எழுத்துக்கள் வரவேற்கப்படும்.“
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பெரியார் மீது கொண்டிருந்த பற்று அளப்பரியது. அதற்கு எடுத்துக்காட்டாய் அமைவதுதான் கீழ்க்கண்ட வரிகள்.
ஒருமுறை பாரதிதாசனார் அவர்களின் இதழுக்கு முகம் தெரியாத நபர் ஒருவர் கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார். அதில் “மணியம்மையாரை நீங்கள் எப்படி ‘அன்னை’ எனப் புகழலாம்?” என்று பாரதிதாசனாரிடம் கேள்வி கொடுத்து இருந்தார். அதற்கு பாரதிதாசனார் சொன்ன பதிலைப் படிக்கும் பொழுது பெரியார் மீது பற்று கொண்ட உண்மையான தொண்டர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும். அவரது பதிலின் சுருக்கப்பதிவை கீழே பார்க்கலாம்.
“மணியம்மையாரைப் புகழ்கிறேன் என்று சொல்வது எனக்கு மகிழ்ச்சிக்குரிய செயலே.
நாம் இளம் வயதில் முருகனைப் புகழ்ந்தோம், நாளடைவில் முருகனைப் புகழ்வது தேவையற்றது என்று முடிவெடுத்தோம்.
அடுத்து பாரதியைப் புகழ்ந்திருந்தோம். அதன் காரணமாகவே எமது பெயரை பாரதிதாசன் என்றும் மாற்றிக் கொண்டோம். ஆனாலும் புகழ்வதற்கு பாரதியை விட உயர்ந்தவர் ஒருவர் இருப்பாரா என்றும் தேடினோம்.
….தமிழ் நெறி காப்பேன்; தமிழரை காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் இன்று தொண்டை கிழிய முழக்கமிடும் ஒரு உள்ளத்தைக் கண்டோம். அந்த அணுகுண்டு பட்டறை தான் பெரியார் என்றும் கண்டோம்.
பெரியாரைப் புகழ்ந்து பேசினோம்; புகழ்ந்து பாடினோம்; புகழ்ந்து எழுதினோம்; ஆனாலும் பெரியாரையும் தாண்டி புகழை யாரேனும் உண்டா என்று தேடினோம்;
பெரியார் செத்துக் கொண்டிருந்தார்; உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்தன விரியன் பாம்புகள்;
பெரியாரின் உடலை விட்டுப் போக மூட்டை முடிச்சோடு காத்துக்கொண்டிருந்த உயிரைப் பிடித்து வைத்திருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் அவர் மீது வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும் காற்று இறங்கிய பொதி மாடு போல் பெருத்து தொங்கும் அவரது விதையின் ஒருபால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆண்குறியில் இருந்து முன்னறிவிப்பின்றி பெருகும் சிறுநீரை அருகிருந்து களம் ஏந்தி காக்கும் அருந்தொண்டு. அவர் பெருந்தொண்டால் முடியாதது, மக்களின் அருளால் முடியாதது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையை பெரியாருக்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,
அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல் லோம்?” என்று விடை பகிர்ந்திருந்தார். இன்னும் கூறியிருந்தார் இந்த பாட்டு எழுதும் பாவேந்தன். எழுதத் தொடங்கினால் இமைக்கும் பொழுதில் கருமைத் தூவலின் முனையில் இருந்து கண்ணீர் தான் வரும். பெரியாரின் பெருந்தொண்டும் பெரியார் தொண்டரின் அருந்தொண்டும் அத்தகையது. அது வெயில் காயும் என்பிலதன் உயிர்களுக்கு புரியாது. அறம் பேசும் அன்பு நெஞ்சங்களுக்கே புரியும்.
புரட்சிக் கவிஞன் பாவேந்தனின் புகழ் மாலை கேட்டு இன உணர்ச்சி கவிஞர் இன்குலாப் வருகிறார் “இதோ நானும் பாடுகிறேன் பெரியாரின் புகழ்” என்று.
ஈரோடு என்றே பெயரிட்டு இன்குலாப் இயற்றிய கவிதை ஆரியத்தை வேரோடு சாய்த்து பெரியாருக்கு புகழ் மாலை சூட்டுகிறது.
“நந்தனின் குறிக்கோள் பார்ப்பனியம்
நமக்கும் குறிக்கோள் பார்ப்பனியம்
இந்தச் சூழலில்
தந்தை பெரியார் ..
மானுடம் சுமந்த துயரம் அனைத்தையும்
வரித்துக் கொண்டது போல்
கருத்த சட்டையுடன்
தள்ளாடும் உடம்பை தாங்கும் கைத்தடியால்
தள்ளாடும் மானுடத்தை
தாங்க வந்தது போல்.
நிமிர மறந்து
நெடுநாள் கிடந்தேன்..
முதுகில் அந்த கைத்தடி தட்ட
திரும்பினேன்.. அந்த
ஞாயிறு சுட்டது.
“நிமிர்
நிமிரத் தெரியாதது விலங்கு
மனித அடையாளம் நிமிர்வது”
தோளில் போட்ட துண்டை எடுத்து
பக்கத்தில் வைத்து
கை கட்டி நின்றேன்.
“துண்டை எடுத்து தோளில் போடு
வீசு கைகளை..
தேவைப்பட்டால்
கட்டச் சொன்னவன் முகத்தில் வீசு”
பேசாது கிடந்தேன்
பெண் என்பதனால்
எனது சொல் எனக்கு மறந்து போனது..
“நீ மனுசி.. நாம் மனிதர்.. நமது மானுடம்
நட,
ஆடவர் சொன்ன அசைவில் அல்லாது
உன் கால்களின் இயல்பில் நீ
நட,
மனசிலும் உடம்பிலும் ஆடவர் பூட்டிய
தளைகள் அனைத்தையும் தகர்த்தெறி
ஆடவர் சொன்ன தர்மங்களை துப்பு
உனது சொல்லை உச்சரி”
இப்படியாக பெரியாரின் பெருமைகளை பேசிக்கொண்டு இருந்த கவிதை தமிழர்களின் எதிரி யார்? என்று பெரியாரின் மொழியில் புலப்படுத்துகிறது.
“விடுதலைக்கு வழி எது?”
“போராடு..”
“நெருப்பும் கையுமாய்
தேசிய மாயையை
கொடியுடன் கொழுத்து
சாசனம் மாயையும்
சாம்பலாக்கு
தலைப்பது சங்கிலியல்ல; பூணூல்
தாக்குவது இந்த தர்ப்பை தான்
அடையாளம் காண்
உன் எதிரியை..”
ஆர்ப்பரிக்கும் ஆழியை அலைகளைக் கொண்டு அளந்தார் போல் கவிஞர் இன்குலாப்பின் சிறுதுளி மட்டும் இங்கே செப்பியுள்ளோம்.
பெரியார் யார் என்பதை பெரியாரின் எழுத்துகள் பலமுறை எடுத்துக்காட்டி விட்டன. பெரியாரின் போராட்டங்கள் வரலாறாய் மாறி அறுவடைக்கும் தயாராகி உள்ளன. அவரது பெரும்பணி பற்றி அவர்தம் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் என்ன கூறினார்கள் என்பதை தெரிந்து கொள்வது பெரியாரின் நினைவு நாளில் நாம் அவருக்கு சூடும் சரியான புகழ் மாலையாய் திகழும்.
பெரியாரோடு காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவரும், பெரியாரின் உற்ற உற்ற நண்பரும், பொதுவுடமைவாதியுமான தமிழ்த்தென்றல் திரு.வி.க அவர்கள் பெரியாரைக் குறித்து கூறும் பொழுது “ராமசாமி பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவரது புகழோ தென்னாட்டிலும் வடநாட்டிலும் வெளிநாட்டிலும் மண்டிக் கிடக்கிறது. காரணம் என்ன? தோழர் ஈவெராவின் உண்மையும் வாய்மையும் மெய்மையும் செறிந்த அறத்தொண்டாகும்.
ஈ.வே.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை? அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும்.
உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன ஈ.வே.ராவின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை.
பெரியார் கல்லூரி காணாதவர்; பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால், எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.
இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில், இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருததுக்களும், அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.
‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்’. இது பெரியாருக்குத்தான் பொருந்தும்.” என்று வியந்து போற்றியுள்ளார்.
அதேபோல் தந்தை பெரியாரோடு ஒரே மேடையில் நின்று ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய தனித்தமிழ் இயக்கம் கண்ட ஐயா தமிழ்த்திரு மறைமலை அடிகளார் பெரியாரைப் பற்றி கூறும் பொழுது “நான் சாதி சமய வேறுபாடுகளை களைந்து பழம் தமிழ் சமூகம் போல் எல்லா உயிரையும் என்னுயிர் போல் பேண வேண்டும் என்ற சைவ நெறிக்கு உட்பட்டு பேசத் தொடங்கிய காலத்தில் என்னை எதிர்த்தவர்கள் அனைவரும் சைவ நெறியில் இருந்த கற்றறிந்த பெருமக்களே. எனக்கென்று துணையாக யாரும் நின்றதில்லை, பெரியார் ஈவேரா என்றொருவர் வரும் வரை” என்று நன்றி பாராட்டி பெரியார் நீடூடி வாழ வேண்டும் என்று எழுதியுள்ளார்.
நீதிக் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராக பதவி வகித்தவரும், மருத்துவக் கல்வியில் சமஸ்கிருதம் கட்டாயம் என்று இருந்த பார்ப்பன சதியை ஒழித்து திராவிட சமூகத்தின் எளிய மாணவர்களும் மருத்துவராகும் மாபெரும் சாதனையை செய்து முடித்தவருமான ஐயா பனகல் அரசர் அவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி கீழ்கண்டவாறு புகழ்ந்துரைக்கிறார்.
“எந்தக் கொள்கையை, தான் நேர்மையானதாக எண்ணினாரோ அதற்காக அவர் பல தடவை சிறை சென்றது உங்களுக்குத் தெரியும். சமூக சீர்திருத்தக் கொள்கை முற்போக்கு அடைய இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்லவும் தமது உயிரையே கொடுக்கவும் அவர் தயாராகி இருக்கிறார்”
ஆம். தந்தை பெரியாரின் சிறை வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தனி வரலாறாக அமையக்கூடியது.
முதன்முதலாக 1921 இல் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தின் காரணமாக சிறைவாசல் மிதித்தவர் தந்தை பெரியார். அதன் பிறகு 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்திற்காகவும், அதே ஆண்டு கதர் சட்டை பரப்புரைக்காகவும், 1926 ஆம் ஆண்டு நாகை தொடர்வண்டி நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டும், 1933 ஆம் ஆண்டு தமது வெளிநாட்டு பயணங்களை முடித்து வந்தவுடன் குடியரசு பத்திரிக்கையில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான தலையங்கத்தை எழுதியதற்காகவும், 1934 ஆம் ஆண்டு கடன் பட்டவர்களை சிறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை வைத்தும், 1938 ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்திற்காகவும், 1948 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் செயற்குழு கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட விசாரணை இல்லாத கைதின் காரணமாகவும் சிறை சென்று வந்த தலைவர் ஐயா தந்தை பெரியார் அவர்கள்.
தந்தை பெரியாரோடு காங்கிரசில் பங்காற்றிய மற்றொரு தமிழகம் கண்டெடுத்த தகைசால் தலைவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்கள். காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் அமைப்பில் பெரியாரோடு கரம் கோர்த்து போராடியவர். பெரியார் முன்மொழிந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ தீர்மானத்தை காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலில் வழிமொழிந்தவரும் வ.உ.சிதம்பரனார் அவர்களே. கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு தமிழர்களால் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் பெரியார் நடத்திய சுயமரியாதை இயக்கமே மற்ற இயக்கங்களை விட நல்ல இயக்கமாக இருக்கிறது என்றும், அதனால் தான் தன்னால் முடிந்த உதவிகளை அதற்கு செய்து வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள எல்லா தலைவர்களையும் விட மிகப்பெரிய தியாகி பெரியார்தான் என்றும் புகழ்ந்திருந்தார்.
அன்றைய சென்னை மாகாண சட்ட சபையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக உரிமைக் குரல் எழுப்பிய ராவ் சாஹிப் என்.சிவராஜ் அவர்கள் பெரியாரைப் பற்றி கூறும் பொழுது பட்டியல் சமூக மக்களுக்காக மகத்தான வேலை செய்தவர் என்றும், அவரை இச்சமுகத்தினர் என்றுமே மறக்க முடியாது என்றும் வியந்து போற்றுகிறார். பெரியாரின் வைக்கம் போராட்டத்தை பெரிதாகப் புகழ்ந்த அய்யா சிவராஜ் அவர்கள் “இந்த காலத்து சீர்திருத்தவாதிகள் பின்பற்ற தகுந்த தலைவர் தந்தை பெரியார்தான்” என்றும் கூறுகிறார்.
நீதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான சர் பி.டி.பன்னீர்செல்வம் அவர்கள் பெரியாரைப் பற்றி கூறும் பொழுது “நமது பெரியார் அவர்கள் மகாத்மா அல்ல. ஆனால் தாம் நினைத்ததை சாதிக்கும் நேர்மைவாதி” என்று கூறிவிட்டு, “காங்கிரஸ்காரர்களுக்கு வார்தா எப்படியோ, அப்படியே திராவிடர்களுக்கு ஈரோடு. பெரியார் தமிழ்நாட்டின் உண்மை களஞ்சியம்” என்று புகழ்மாலை சூட்டுகிறார்.
டெல்லியில் இயங்கி வந்த இந்திய தொழிலாளர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பதவி வகித்த வி.பி.கார்னிக் பெரியாரைப் பற்றி கூறும் பொழுது “தென்னாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்ப்பனர் அல்லாத மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு சரியான ஆயுதம் திராவிடர் கழகம் என்னும் பேரியக்கம். பெரியார் ராமசாமிதான் அந்த இயக்கத்தின் மாபெருந்தலைவர். என்னுடைய ஆசை எல்லாம் அந்தப் பழம்பொருந்திய இயக்கம் மென்மேலும் வலுபெற்று, கூடிய விரைவில் தமது முழு சக்திகளையும் திரட்டி உழைப்பாளி மக்களுக்கு உடனடியாக விடுதலை கிடைக்கும்படி செய்து விட வேண்டும் என்பதுதான்” என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
திருமிகு கைவல்ய சுவாமிகள் பெரியாரைப் பற்றி கூறும் பொழுது “இவ்விருபதாம் நூற்றாண்டில் தென் தேசத்தில் உண்டான அறிவின் பயனையெல்லாம் அனுபவிக்க செய்த தீர புருஷன் ராமசாமி பெரியாரே என்று பின் சரித்திரங்களில் எழுதப்படும்” என்று பெரியாரை வரலாற்று நாயகனாக நிலைநிறுத்திக் காட்டியுள்ளார்.
பன்மொழி புலவர் க. அப்பாதுரையார் பெரியாருக்கு புகழ் மாலை சூட்டி உள்ளார். “மக்கிப்போன பழங்கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் மக்களை சிந்திக்கத் தூண்டிய வகையில் சாக்ரடீசும், ஈவேராவும் ஒரு நிலையினரே ஆவார். ஆனால் சாக்ரடிசின் அறிவு அவர் மறைந்த பின்பு தான் உலகில் வெளியே வரத் தொடங்கியது. ஈவேராவின் அறிவோ அவர் நம்மிடையே வாழும் காலத்திலேயே பேரொளி வீசி வெற்றியும் கண்டுள்ளது” கூறிய ஐயா அப்பாதுரை அவர்கள் “ஈவேரா ஒரு புரட்சிக்காரர். புரட்சிக்காரரின் முன்னணியில் நிற்பவர். ஆனால் அவர் புரட்சி வாட்புரட்சியன்று; கொலைப்புரட்சியும், குருதிப்புரட்சியும் அன்று. அது முற்றிலும் அறிவுப் புரட்சியே ஆகும்” என்று பெரியாரைக் குறித்து பெருமிதம் கொள்கிறார்.
பெரியாரின் விவாத தன்மை குறித்து தமிழ் புலவர் சாமி. சிதம்பரனார் “விவாதத்தில் இவரை யாரும் வெல்ல முடியாது. அடுக்கடுக்காக கேள்விகளைப் போடுவார். சொற்களின் பொருள்களை விளக்க வேண்டுவார். எதிரிகள் கேள்வி கேட்டால் அவர்கள் சொற்களைக் கொண்டே மடக்கி விடுவார். எத்தகையவரும் இவரிடம் அகப்பட்டு கொண்டு திக்குமுக்காடுவார்கள்” என்று கூறியுள்ளார்.
பெரியார் விவாதத்தில் மட்டுமல்ல, தான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நுணுக்கமாக சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் வல்லமை படைத்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த பொழுது விகிதாச்சார இட ஒதுக்கீடு சார்பான தீர்மானம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அப்பொழுது காங்கிரஸில் இருந்த பார்ப்பனத் தலைவர்கள் அதில் இருந்த விகிதாச்சாரம் (percentage) என்ற சொல்லுக்கு பதிலாக போதுமான அளவு (Adequate) என்ற சொல்லை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டு மாற்றி அமைத்தனர். பெரியாருக்கு இந்த செயலில் சந்தேகம் வரவே அந்த ஆங்கில வார்த்தையின் பொருளை பலரிடம் கேட்டு அறிந்து கொண்டார். அப்பொழுதுதான் போதுமான அளவு என்பது மட்டுமல்லாமல், தகுதிக்கு ஏற்ப என்ற வகையிலும் அந்த ஆங்கிலச் சொல்லை பயன்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அச்சொல்லை மாற்றி மீண்டும் தீர்மானத்தை காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைத்தார்.
இதேபோல் அறிஞர் அண்ணா அவர்கள் சுயமரியாதை திருமணத்தை சட்டமாக இயற்ற முன்வந்து அதற்கான சட்ட வரைவை பெரியாரின் பார்வைக்கு அனுப்பி வைத்தார் அதில் ‘மோதிரம் மாற்றிக் கொள்ளல் மற்றும் தாலி கட்டிக் கொள்ளல்’ மூலமாக திருமணத்தை அங்கீகரிக்கலாம் என்பதான வரிகள் இருந்தன. அதை நன்கு பரிசோதித்த தந்தை பெரியார் அவர்கள் ‘மற்றும்’ என்ற சொல் தாலி கட்டுவதை கட்டாயமாக்கி விடும். எனவே ‘மோதிரம் மாற்றிக்கொள்ள அல்லது தாலி கட்டிக் கொள்ளல்’ என்று மாற்றுங்கள் எனக் கோரிக்கை வைத்து திருத்தம் செய்தார். இந்த வரலாற்றுச் சம்பவங்கள் புலவர் சாமி சிதம்பரனார் அவர்களின் புகழுரையை மெய்ப்பிக்கிறது அல்லவா!
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பெரியாரை குறித்து “தமிழ்நாட்டின் சிறந்த எழுத்தாளியும், அழகிய பேச்சாளியும், பெரிய அறிவாளியும், தமிழர் இயக்கத்தின் தந்தையும், பகுத்தறிவு இயக்கத்தின் தலைவரும் ஆகிய ஈ.வே.ராமசாமி பெரியார் அவர்களின் வாழ்க்கை சரிதத்தை நாம் நன்கு கவனித்துப் பார்த்தால் வள்ளுவர் வாழ்க்கை பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்து காட்டும் பெரியார் ஈவெரா ஒருவரே என்பது இனிது புலனாகும்.” என்று புகழுரை அளித்துள்ளார்.
அன்னை சத்தியவாணி முத்து அவர்கள் பெரியாரின் தொண்டு பற்றி கூறும் பொழுது “தமிழ்நாட்டில் உணர்ச்சி அற்று உறங்கிக் கிடந்த தாழ்த்தப்பட்டோரை தட்டி எழுப்பிய தகைமிகு பெருமை பெரியாரையே சாரும். இதன் காரணமாகவே தாழ்த்தப்பட்டோர் பெரியாரினபால் அசைக்க முடியாத பக்தி பூண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூவலூர் ஆ.இராமாமிர்தம் அம்மாள் அவர்கள் “பெரியார், அழிக்க முடியாது என்று சொல்லப்பட்ட பிராமணியத்தை ஆட்டம் கொடுக்க செய்த மேதாவி. பார்ப்பனிய விஷப் பூச்சிகளை கொல்ல மருந்து கண்ட விஞ்ஞானி. முற்கால சீர்திருத்தவாதிகளால் அழிக்க முடியாத இந்து மதத்தை அழித்து பலரை பகுத்தறிவுவாதிகளாக மாற்றிய பெருமை அவருடையதே. அவருக்கு இணையான சீர்திருத்தவாதியை நாம் கண்டதே இல்லை என்பது என் கருத்து. வாழ்க பெரியார்” என்று மனதார வாழ்த்தி உள்ளார்.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவு இருக்கிறன, ஐயா பெரியாரை பாராட்டிய புகழுரைகள். பெரியாரைப் புகழாத வாய்களில்லை. பெரியாரை இகழ்பவர் தமிழ்த்தேசியரும் இல்லை.
அளப்பரிய பெரும்பணிகளை செய்து முடித்தவர் ஐயா தந்தை பெரியார் அவர்கள். சாதிப்பெயர் நீக்கம், சாஸ்திர சம்பிரதாயங்கள் அற்ற திருமணம், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற முழக்கம், “தமிழருக்கு இந்தி எதற்கு?” என்று எழுப்பிய கேள்வி, இட ஒதுக்கீடு கேட்ட உரிமைப் போர், சட்டத்தை எரிக்கும் கலகப் போர் இன்று தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு பெரியாரின் பெருந்தொண்டால் நிரம்பிக் கிடக்கிறது.
மீண்டும் பெருஞ்சித்திரனாரின் வரிகளைதான் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. “பெரியாரின் பெருந்தொண்டில் ஒன்றேனும் செய்தால் சரியாமல் நின்றிடுமே தமிழ்நாடு”. வாழ்க பெரியார்.
தமிழ்நாடு தமிழருக்கே! தமிழ்நாடு தமிழருக்கே!! தமிழ்நாடு தமிழருக்கே!!