
ஹிட்மா-ராஜே, மாவோயிஸ்டுகள் மற்றும் பழங்குடி மக்கள் மீதான போலி மோதல் படுகொலைகளுக்கு நீதி விசாரணை வேண்டி திசம்பர் 19, 2025 அன்று காலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ‘அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பாக ஊடக சந்திப்பு நடைபெற்றது. தமிழக மக்கள் புரட்சிக் கழகம், தமிழ் தேசிய விடுதலை இயக்கம், மே 17 இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், வெல்ஃபேர் பார்ட்டி, மக்கள் அதிகாரக் கழகம், பொதுமையர் பரப்புரை மன்றம், முற்போக்கு இளைஞர் முன்னணி, தமிழ் தேச மக்கள் கட்சி, பாட்டாளி வர்க்க சமரன் அணி, மனித உரிமை செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், ஜனநாயக உரிமை பாதுகாப்புக் குழு, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் உட்பட பல்வேறு முற்போக்கு அமைப்புகள் ஊடக சந்திப்பில் பங்கேற்றன.
இந்த ஊடக சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை:
மத்திய இந்தியாவிலே பழங்குடிகள் தங்கள் காடுகளையும் இயற்கை வளங்களையும் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் என்பது ஆங்கிலேயர் வந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக நடந்து வருகின்ற போராட்டம். இந்திய விடுதலைக்குப் பிறகு, பழங்குடிகளுக்கான வளங்களை பாதுகாப்பதற்குரிய எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களது வளங்கள் சூரையாடப்படுவதை தடுப்பதற்காக பல்வேறு வழிகளிலே அவர்கள் போராடி வந்திருக்கிறார்கள்.
கடந்த 20- 30 ஆண்டுகளாக அவர்களது வளங்கள் தனியாருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தாரை வார்க்கப்பட்டதன் அடிப்படையிலேயே மாவோயிஸ்டுகள் இந்த பழங்குடி மக்களினுடைய வளங்களை பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் பழங்குடி மக்களினுடைய கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை மட்டுமே குறிக்கோளாக/இலக்காக கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசு பழங்குடி மக்களிடமோ அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கக்கூடிய மாவோயிஸ்ட் தலைவர்களுடனோ பேச்சுவார்த்தை நடத்தி உடன்படிக்கை ஏற்படுத்தாமல் இருக்கிறது.
மேலும் பழங்குடிகளைப் பாதுகாக்காமல் அவர்களை படுகொலை செய்யும் போரை நடத்தி வருகிறது. மாவோயிஸ்டுகள் போர் நிறுத்தத்தை அறிவித்து தாங்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்படுவதாக சொன்ன பிறகும் கூட மாவோயிஸ்டுகளுடைய தலைவர்களை வேட்டையாடுகிறது. மேலும் போலி மோதல் மூலமாக படுகொலை செய்கிறது. இதன் மூலமாக “கனிம வளங்களை நாங்கள் தனியாருக்கு தாரை வார்ப்போம். அது குறித்து எழுகின்ற எந்த கோரிக்கையையும் நாங்கள் செவிமெடுக்க மாட்டோம்” என்று மோடி அரசு எதேச்சதிகாரமாக சொல்லி வருகிறது.

பழங்குடி மக்கள் இந்த நாட்டினுடைய விடுதலைக்காக போராடியவர்கள். பழங்குடிகளில் இருந்து ஒருவரை ஜனாதிபதி ஆக்குகிறேன் என்று சொன்ன மோடி அரசு பழங்குடிகளை கொத்து கொத்தாக படுகொலை செய்வதும், அவர்கள் நிலங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவதும், அவர்கள் காடுகளை/ வளங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதுமான பழங்குடி விரோத செயலை செய்து வருகிறது. இவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்கக்கும் மாவோயிஸ்டுகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதில் மோடி அரசுக்கு என்ன தயக்கம்?
மோடி அரசு இந்த பிரச்சனைகளை நேரடியாக பேச்சு வார்த்தையின் மூலமாக எதிர்கொள்வதில் ஏன் பின்வாங்குகிறது? என்கிற கேள்வியை இந்தியா முழுவதும் உள்ள சிவில் சமூக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் இவை எவற்றிற்கும் செவிமடுக்காமல் படுகொலைகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.
மாவோயிஸ்ட் பிரச்சனை என்பதை இந்தியாவினுடைய பாதுகாப்பு பிரச்சனையாக முன்வைக்கக்கூடிய மோடி அரசு பழங்குடிகளினுடைய வளங்களை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் குறித்து எதுவும் பேசாமல் அவற்றை பாதுகாத்து வருகிறது. இத்தகைய இரட்டை தன்மையை மோடி அரசு முன்னெடுத்து வருவது அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.
ஆகவே “மத்திய இந்தியாவில் நடைபெற்று வருகின்ற இந்த அழிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி மாவோயிஸ்ட் தலைவர்கள் மற்றும் பழங்குடி மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களது வளங்களை பாதுகாக்க கூடிய வகையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்” என்கின்ற கோரிக்கையை நாங்கள் (மனித உரிமை செயல்பாட்டாளர்கள்/ ஜனநாயக சக்திகள்) வலியுறுத்துகிறோம்.
தொடர்ச்சியாக ராணுவ தாக்குதலை போல சொந்த நாட்டு மக்களின் மீது நவீன ஆயுதங்களை கொண்டு தாக்குவது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அவர்கள் இந்த நாட்டின் மக்கள். இந்த நாட்டின் வளத்திற்காகவும் விடுதலைக்காகவும் போராடி உயிர் கொடுத்தவர்கள். 200 ஆண்டுகளாக வெள்ளையர் காலத்திலிருந்து தங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடுகின்ற மக்கள் மீது இந்த கொடும் தாக்குதலை நடத்துவதற்கான காரணம் என்ன என்று இதுவரை மோடி அரசு வெளிப்படையாக விவாதிக்கவில்லை.
அனைத்தையும் தனியார் மயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றும் கூட அணுசக்தி திட்டத்தை தனியாருக்கு தாரைவாக்கக்கூடிய ஒரு கொடுஞ்செயலை செய்திருக்கிறார்கள். அணுவுலையின் மூலமாக ஏற்படுகின்ற விபத்துகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுகின்ற நட்டஈடு இவற்றை குறித்து மிக மோசமான நிலைப்பாட்டை, மக்கள் விரோத நிலைப்பாட்டை மோடி அரசு எடுத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இன்சூரன்ஸ் என்று சொல்லப்படுகின்ற காப்பீட்டு துறையை தனியார் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு நிறுவனத்திற்கும் முழுவதுமாக திறந்து விட்டு இருக்கிறார்கள். ‘நாட்டை பாதுகாக்கிறோம், தீவிரவாதத்திலிருந்து இந்த நாட்டை விடுவிக்கிறோம்‘ என்று சொல்லக்கூடிய மோடி அரசு, காப்பீட்டு துறையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்த்திருக்கிறது. இதன் மூலமாக காப்பீட்டு நிறுவனங்களிலே இருக்கும் இந்திய குடிமக்களினுடைய ஆதார் உள்ளிட்ட தகவல்கள் வெளிநாட்டுக்கு செல்லுவதை மோடி அரசு அனுமதித்திருக்கிறது.
இவ்வாறு குடிமக்களினுடைய தனிப்பட்ட தகவல்களை வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கக்கூடிய தேச விரோத செயலை நடைமுறைப் படுத்துகின்ற மோடி அரசு, பழங்குடி மக்களின் வளங்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக போராடக்கூடியவர்களிம் மோதல் போக்கை ஏன் நடத்துகிறது என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். ஆகவே உடனடியாக இதுபோன்ற மனித உரிமை விரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு நாங்கள் வேண்டுகோள் வைக்கின்றோம்.
முழு காணொளி: