அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வெனிசுவேலா

கடந்த சனவரி 3, 2026 அன்று, வெனிசுவேலாவில் ‘ஆபரேஷன் அப்சலூட் ரிசால்வ்’ என்ற பெயரில் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட அமெரிக்கா, வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ்-சை கைது செய்தது. இந்தக் கைது நடவடிக்கை குறித்தும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் உலகளாவிய தெற்குப் பகுதியில் விரிவடைவது குறித்தும் ‘peoples dispatch’ ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம்:

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொய்யாக்கும் வெனிசுலா புரட்சி

வெனிசுவேலாவிற்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள சட்டவிரோத நடவடிக்கைக்குப் பின்னர், அந்நாட்டில் புரட்சி நீடிக்கிறதா என்ற  சந்தேகங்களை விதைக்க வேண்டுமென்றே தவறான பரப்புரை செய்யப்படுகின்றது. வெனிசுலாவில் பொலிவேரியன் புரட்சிக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் 25 ஆண்டுகளாக நடத்தி வரும் ஆட்சி மாற்ற நடவடிக்கை அதிகரித்துள்ளதையே கடந்த 72 மணி நேரமாக நடக்கும் நிகழ்வுகள் குறிக்கின்றன. ‘ஆபரேஷன் அப்சலூட் ரிசால்வ்’ என்ற பெயரில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டதும் தீவிரமான நெருக்கடி தருணத்தை ஏற்படுத்தியுள்ளதைப் போல ஒரு ஆழமான கருத்தையும் விதைக்கின்றது. இது குறித்து பரவும் தவறான தகவல்களைத் தாண்டி, சரியான திட்டத்தை வகுக்க, உலகளவில் உள்ள புரட்சிகர ஆற்றல்களுக்கு ஒரு தெளிவான பகுப்பாய்வு தேவைப்படுகிறது.

அமெரிக்க இராணுவத் தலையீட்டின் நோக்கங்கள்:

வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் பெரும் இராணுவபலம் குறித்து பலரும் பேசுகின்றார்கள். ஆனால் நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவை புரிந்து கொள்ள, இராணுவங்களைப் பற்றிய புரிதலுடன் மார்க்சிஸ்டுகள் தொடங்க வேண்டும். ஆழ்ந்து ஆராய்ந்தால், டிரம்ப் நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்பது வெனிசுவேலாவிலும், சர்வதேச அளவிலும், உள்நாட்டிலும் ஏகாதிபத்தியம் ஏற்படுத்திய பலவீனமான அரசியலுக்கு சான்றாகும்.

வெனிசுவேலா மீது முழு படைபலத்துடன் மோதாமல், இத்தகைய நடவடிக்கையை டிரம்ப் மேற்கொண்டது ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் புரட்சியின் ஆற்றலுக்கு சான்று. அங்கு அமெரிக்கா முழு படைபலத்துடன் மோதவிருந்ததை இரண்டு முதன்மை காரணிகள் தடுத்து நிறுத்தின:

1) வெனிசுவேலாவில் பெருமளவிலான அணிதிரட்டல்: பொலிவேரியன் போராளிகளை பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும் என்று அதிபர் மதுரோ அழைப்பு விடுத்தது எண்பது லட்சத்திற்கும் அதிகமான குடிமக்களை ஆயுதப்படுத்தியது. இவர்கள் வெனிசுவேலாவின் இராணுவத்துடன் இணைந்து போரிட்டால், அமெரிக்காவின் எந்தவொரு தரைப்படை படையெடுப்பும் நீண்ட மக்கள் போராக மாறி இருக்கும். இது அமெரிக்காவிற்கு அதிகப்படியான அரசியல் மற்றும் பொருளாதார இழப்பை உருவாக்கி இருக்கும். மேலும் சாவிஸ்மோ மற்றும் பொலிவேரியன் புரட்சிக்கு வலுவான ஆதரவு அடித்தளம் இருந்ததை டிரம்ப் அரசு மறைமுகமாக ஒப்புக்கொண்டது. வெனிசுலா வலதுசாரிகளுக்கு நாட்டை ஆள்வதற்கான ஆதரவு இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டது.

2) அமெரிக்க உள்நாட்டு எதிர்ப்பு: டிரம்பின் ஆதரவாளர்கள் பதவி வகித்த முக்கியமான துறைகள் உட்பட பல துறைகளில் நடந்த இராணுவத் தலையீட்டை அங்குள்ள மக்கள் நிராகரித்தனர். இது அரசியல் ரீதியாக பெரிய அளவிலான அமெரிக்க படையெடுப்பைத் தடுத்தது.

இந்தத் தடைகளை எதிர்கொள்ள வெள்ளை மாளிகை, ஒரு முக்கியமான  உத்தியை நோக்கிச் சென்றது: புரட்சியை அடக்கவும் அத்தகைய சூழலிருந்து தப்பிக்கவும் மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் இராணுவ உத்திகளைப் பயன்படுத்தியது. வெனிசுவேலா மீதான போருக்குப் பதிலாக, 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் உயரடுக்கு டெல்டா படைப் பிரிவுகளை உள்ளடக்கிய ‘surgical strike’ தாக்குதலை நடத்த முடிவு செய்தது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய இராணுவ நடவடிக்கைகள் தோல்வியுற்றதாலும் அவை ஏற்படுத்திய பொருளாதார இழப்பாலும் தனக்கு குறைவாக எதிர்ப்பு வரும் வழியை  மட்டுமே தேடியுள்ளது அமெரிக்கா. குண்டுவீசி தாக்குவதையும் அதிபரைக் கடத்துவதையுமே ‘அரசியல் வெற்றி’ ஆக்கிக்கொள்ள  விரும்பியது. டிரம்பின் உணர்ச்சி வேகத்தையும் மீறி, இராணுவ தந்திரோபாயங்களின் தீவிர தாக்குதலையும் மீறி, (முன்னர் லத்தீன் அமெரிக்காவில் கடைபிடித்த Gunboat diplomacy போல) ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போருக்குச் செல்ல தயக்கம் காட்டியது. (ஒரு நாட்டை மிரட்டும் நோக்கில் கடற்படையை நிறுத்தி அதன் மூலம் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பது Gunboat diplomacy). இவ்வாறு துப்பாக்கி முனையில் ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தி, 19 ஆம் நூற்றாண்டின் ‘ரவுடி ஏகாதிபத்திய’ காலத்திற்கு அமெரிக்கா இட்டுச் செல்கிறது. “வெனிசுவேலாவை அமெரிக்கா நிர்வகிக்கும்” என்று டிரம்ப் கூறியதன் மூலம் உண்மையில் அவர் இதையே குறிக்கிறார்.

அதிகாரத்தின் சமச்சீரற்ற தன்மை மற்றும் ‘துரோகத்தைக்’ குறித்த கேள்வி:

பரவலாக்கப்பட்ட மக்கள் புரட்சியால் முழு அளவிலான அமெரிக்க படையெடுப்பை எதிர்கொள்ள வெனிசுவேலா மக்களும் அரசும் தயாராக இருந்தனர். இருந்தபோதிலும், அமெரிக்கா நடத்திய கடுமையான தாக்குதலைத் தடுப்பதற்கான திறன், தற்போது இந்த புவியில் எந்த நாட்டிற்கும் இல்லை. அமெரிக்க போர் இயந்திரத்தில் உயர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயங்கும் கொடிய படைகளை எதிர்கொள்ளும் அளவிற்கு திறமையான இராணுவத்தைக் கொண்ட, தார்மீக ரீதியாக அணிதிரட்டப்பட்ட நாடும் தற்போது எதுவுமில்லை. 

 வெனிசுவேலாவில் குண்டுவீசித்தாக்கியது, தகவல் தொடர்பு மற்றும் மின்சாரத்தை துண்டித்தது, வான் எதிர்ப்பு பாதுகாப்புகளை முடக்கியது, அதைத் தொடர்ந்து பாதுகாப்பு நிறைந்த அதிபர் மதுரோவின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியது என அமெரிக்கா ஒருங்கிணைத்த இராணுவ நடவடிக்கை இந்த சமச்சீரற்ற அதிகாரத்தின் நடைமுறையாகும்.

வெனிசுவேலாவின் படைகள் மற்றும் கியூப சர்வதேசவாதிகள் அடங்கிய பாதுகாப்பு படையினரின் வீரமிக்க போரும் அதில் 50 பேர் இறந்ததும் இது ஒரு போர் நடவடிக்கை என்பதையே உறுதிப்படுத்துகிறது. (முன்பு சிலர் கூறியது போல வெனிசுவேலா சரணடையவில்லை – வெனிசுவேலா அமெரிக்காவிற்கு எதிராக போர் புரிந்தது). ‘உலகளாவிய தெற்கு நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஒரு பொறிமுறையாக தற்போதைய காலகட்டத்தில் பலமுனைத்தன்மை (multipolarity) செயல்படும்’ என்ற கருத்தை இது தெளிவாக  நிராகரிக்கிறது. உலகில் இராணுவத்திற்காக அதிகளவில் செலவு செய்யும் நாடான அமெரிக்கா, இராணுவ தளங்களின் மிக விரிவான வலையமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட அமெரிக்கா, இராணுவத் துறையில் தன் ஒருமுனை மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து வெனிசுவேலாவில் இடைக்காலத் தலைவராக பதவியேற்றவர் மீதும் தேசத்துரோக குற்றத்தை சுமத்தியுள்ளது அமெரிக்கா. குறிப்பாக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை குறிவைத்து ‘தேசத்துரோக’ குற்றச்சாட்டுகளைக் கூறி ஒற்றுமையை குலைக்க முயன்றது. இவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாத, முற்றிலும் தவறான ஒன்றை அமெரிக்கா கூறுவது பன்னெடுங்காலமாக அமெரிக்கா பின்பற்றும் இராணுவ தந்திரம், உளவியல் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

ரோட்ரிக்ஸ்-சின் குடும்ப வரலாறு புரட்சிகர போராட்ட வரலாற்றோடு தொடர்புடையது. அவரது தந்தை ஜார்ஜ் அன்டோனியோ ரோட்ரிக்ஸ்,  மார்க்சிஸ்ட்-லெனினிய அமைப்பான சோசலிஸ்ட் லீக்கின் தலைவராக இருந்தவர். 1976இல் புன்டோ ஃபிஜோ ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர். டெல்சி மற்றும் அவரது சகோதரர் ஜார்ஜ் (தேசியமன்றத்தின் தலைவர்) இருவரும் இத்தகைய வெகுஜன போராட்ட மரபிலிருந்தும் சோசலிசத்திற்கான மரபிலிருந்தும்  வந்தவர்கள். அதிபர் மதுரோவும் அதே சோசலிஸ்ட் அமைப்பில் செயலாற்றியவர். இவர்கள் மீதான எந்த தேசத்துரோக / சந்தர்ப்பவாத குற்றச்சாட்டும் நான்கு நூற்றாண்டுகளாக அவர்கள் உருவாக்கிய அரசியல் கட்டமைப்பையும் அதற்காக அவர்கள் அனுபவித்த துன்பங்களையும் புறம் தள்ளுகிறது. அது மட்டுமல்ல தொடர்ந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்த அவர்களின் புரட்சிகர தலைமைத்துவத்தையும் புறம் தள்ளுகிறது.

(படம்: டெல்சி ரோட்ரிக்ஸ்)

பொலிவேரியன் அரசின் விரிவாற்றலும் போரணி தந்திரமும்:

அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு, வெனிசுவேலா அரசு ஒரு ஆழமான, உறுதியான நிலைப்பாட்டை மெய்ப்பித்திருக்கின்றது. காலம் காலமாக ‘வெனிசுவேலா வீழ்ந்துவிட்டது’ என்று அமெரிக்கா செய்யும் பரப்புரைக்கு மாறாக, வெனிசுவேலாவின் அரசியல் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பு சிதிலமாகாமல் அப்படியே இருக்கின்றது. துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ், டியோஸ்டாடோ கபெல்லோ (உள்துறை அமைச்சர்), விளாடிமிர் பட்ரினோ (பாதுகாப்புத்துறை அமைச்சர்) போன்றோர், PSUV (வெனிசுலாவை ஆளும் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி Partido Socialista Unido de Venezuela) மற்றும் ஆயுதப்படைகளின் முக்கியத் தலைமைகள் இணைந்து செயலாற்றுகின்றனர். வெனிசுவேலாவை மீட்டெடுக்க மக்களை புரட்சிகர பாதையில் அணிதிரட்டவும், அதிபர் மதுரோ உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தைக் கோரவும் முயற்சி செய்கின்றனர்.

டிரம்ப் தொடக்கத்தில் அமெரிக்கா வெனிசுவேலாவை நிர்வகிக்கும் என்று கூறிய போதிலும், மார்கோ ரூபியோ (அமெரிக்க செயலாளர்) இதைத் திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. PSUV தலைமையின் தொடர்ச்சியான செயல்பாடு இந்த கட்டாயத்தை ஏற்படுத்தியது. “இந்த நாட்டிற்கு ஒரே ஒரு அதிபர் மட்டுமே இருக்கிறார், அவருடைய பெயர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸ்… நாங்கள் மீண்டும் எந்தப் பேரரசின் காலனியாகவும் இருக்க மாட்டோம்” என்று இடைக்காலத் தலைவர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறி உள்ளார். மேலும் அவர் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவை விமர்சித்ததன் மூலம் பொலிவேரியன் அரசுதான் அங்கு ஆட்சி செய்கிறது என்பதை தெளிவுபடுத்தி உள்ளார்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வெனிசுவேலா அழைப்பு விடுத்ததை சரணடைவதாக அல்ல, மாறாக சூழ்நிலையால் பின்வாங்குவதாகப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் அங்குள்ள சூழ்நிலை கடுமையாக இருக்கின்றது. அர்ஜென்டினா, பராகுவே, ஈக்வடார், எல் சால்வடார், பெரு மற்றும் பொலிவியாவில் ஏற்பட்டுள்ள வலதுசாரி அரசியல் அமைப்பும் மற்றும் பிரேசில், கொலம்பியா, மெக்சிகோவில் உள்ள முற்போக்கு அரசாங்கங்களின் ஊசலாட்டமும் லத்தீன் அமெரிக்காவில் வெனிசுவேலா அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவதைக் குறிக்கிறது. நட்பு நாடுகளான ரஷ்யா மற்றும் சீன அரசாங்கங்களிடமிருந்து வெனிசுவேலா பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதரவு பெற்ற போதும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பைத் தடுக்க அது போதுமானதாக இல்லை என்பது தெளிவாகிறது. தொடர்ச்சியான கடற்படை முற்றுகையும் அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் அதனால் உண்டாகும் அச்சுறுத்தலும் வெனிசுவேலாவின் இருப்பிற்கே (existence) மிக முக்கியமான சவால்களாக உள்ளன.

சனவரி 3 ஆம் தேதி தனது முதல் அறிக்கையில், டெல்சி ரோட்ரிக்ஸ் அமெரிக்காவுடன் ஒத்துழைத்து அதன் கோரிக்கைகளை நிறைவேற்ற விருப்பம் தெரிவித்ததாக டிரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டார். இடதுசாரிகளில் சிலர் அதை நம்பினர், வெனிசுவேலா சரணடைவதாக நினைத்தனர். ஆனால் அதே நாளில் நடந்த டெல்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு வெனிசுவேலாவின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. அதிபர் மதுரோவின் விடுதலை கோரிக்கை அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்டது. அடுத்த நாள், கட்சித் தலைமை மற்றும் அமைச்சர்களின் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய டெல்சி, அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை தெளிவாகக் கூறினார். வெனிசுவேலாவின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக, அதன் இறையாண்மை மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் தங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர் அமெரிக்க அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். இதை சரணடைதல் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. உண்மையில், கடந்த மூன்று மாதங்களாக மட்டுமல்ல பல ஆண்டுகளாக அமெரிக்காவை எதிர்த்த மதுரோவின் ஒவ்வொரு அறிக்கையும் இதையே எதிரொலிக்கிறது. அமெரிக்காவுடனான தீவிரமான போரைத் தவிர்க்க பேச்சுவார்த்தைக்கு மதுரோ தொடர்ந்து அழைப்பு விடுத்தார், மேலும் வெனிசுவேலாவின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களுக்காக அமெரிக்காவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஏற்கனவே முன்வந்திருந்தார். வெனிசுவேலா அரசு இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தால் (இப்போது மதுரோ கடத்தப்பட்ட நிலையில்)  தேசத்துரோக குற்றச்சாட்டு எழுந்திருக்காது.

1918ஆம் ஆண்டில், லெனினும் போல்ஷிவிக்குகளும் பிரெஸ்ட்-லிட்டோவ்ஸ்க் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் சோவியத் குடியரசை அழிவிலிருந்து காப்பாற்றும் நோக்கில் இருந்தாலும் இதனால் ஏகாதிபத்திய ஜெர்மனிக்கு பரந்த பிரதேசங்கள் வழங்கப்பட்டன. இதன் காரணமாக அவரது (லெனின்) கட்சியில் உள்ள ‘இடதுசாரி  கம்யூனிஸ்டுகள்’ புரட்சியை ‘விற்றதாக’ அவர் மீது குற்றம் சாட்டினர். ஆனால் ‘ஒரு ஆயுதமேந்திய கொள்ளைக்காரனிடமிருந்து நம் உயிரைக் காப்பாற்ற அவனிடம் பணப்பையை கொடுப்பதற்கு’ ஈடாக அவர் அத்தகைய சமரசத்தை ஒப்பிட்டார். இதுவே இடதுசாரி சோசலிச புரட்சியாளர்களுடனான கூட்டணி முறிந்து போக வழிவகுத்தது.

 மேலும் லெனினை “தேசத்துரோகி” என்று குற்றம் சாட்டிய இடதுசாரி சோசலிச-புரட்சியாளர்கள் போல்ஷிவிக் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் செப்டம்பர் 1918இல் ‘துரோகி’ பட்டம் பெற்ற லெனின் மோசமாக காயமடைந்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது. பிரெஸ்ட்-லிட்டோவ்ஸ்கினால் இழந்த அனைத்து பிரதேசங்களையும் சோவியத் குடியரசு மீண்டும் பெற்றது.

இன்று, வெனிசுவேலா இதேபோன்ற ‘பிரெஸ்ட்-லிட்டோவ்ஸ்க்’ சூழலை எதிர்கொண்டிருக்கின்றது. வலதுசாரி பிராந்திய அரசாங்கங்களால் தனிமைப்படுத்தப்பட்டு, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் முற்றுகையை எதிர்கொள்ளும் நிலையில், எதிர்கால போராட்டத்திற்கான தளமாக அரசு இயங்க வேண்டும் என்பதை அங்குள்ள புரட்சி மையம் முன்னுரிமைப்படுத்துகிறது. புரட்சிகர அரசு அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு PSUV மற்றும் வெனிசுவேலா அரசாங்கம் முன்னுரிமை வழங்குகின்றது.

 1992 கிளர்ச்சியின் தோல்விக்குப் பிறகு மறைந்த தளபதி ஹ்யூகோ சாவேஸ் “நாளை முன்னேற இன்று நாம் பின்வாங்க வேண்டும்” என்று கூறினார். தனக்கான அரசியல் இடத்தைப் பாதுகாக்கவும், முழுவதும் அழிந்து போகாமல் தடுக்கவும் வெனிசுவேலா அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமெரிக்க நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில், பொருளாதாரத் துறையில் பிற தற்காலிக சலுகைகளுடன்,  அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுவேலாவின் எண்ணெய் உற்பத்தியை அணுக அனுமதிக்கிறது. உலகளாவிய தெற்குப் பகுதியில், சோசலிச ஆற்றல்கள் குறையும் காலகட்டத்தில், வெனிசுவேலா மற்றும் கியூபாவை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கான இன்றியமையாத பின்தளங்களாக நிலைநிறுத்துவதே அதன் குறிக்கோள்.

உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகவே அமெரிக்கா வெனிசுவேலாவில் ஆட்சியைப் பிடித்ததாக டிரம்ப் கூறினார். உண்மையிலேயே ஆட்சி மாற்றத்தை செயல்படுத்த முடியாமல், வெறும் வாய் வார்த்தைகளைப் பயன்படுத்தி வெனிசுவேலாவில் “ஆட்சி மாற்றப்பட்டது” என்று பொய்யாக அறிவித்தார் டிரம்ப். “தனக்கு ‘வளைந்து கொடுக்கும்’ வகையில் டெல்சி ரோட்ரிகஸை டிரம்ப் தேர்ந்தெடுத்தார்” என்று அமெரிக்காவிற்கு ஆதரவான வகையில் நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிற கார்ப்பரேட் ஊடகங்கள் தவறான தலைப்புச் செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. இத்தகைய வளைந்து கொடுக்கும் (மண்டியிடும்) செய்தியைப் பரப்பும் முதலாளித்துவ பரப்புரையை எந்த சோசலிஸ்டும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

தற்போது வெனிசுலாவில் புரட்சி வீழ்ந்தாலும், அரசு அதிகாரத்தின் மீதான புரட்சியின் பிடி நீடிக்கிறது. வரவிருக்கும் காலம் அதன் ஒற்றுமையை சோதிக்கும் என்றாலும், பெரிய நெருக்கடிகளைத் தாண்டிச் செல்வதற்கான திறனை தொடர்ந்து நிரூபித்துள்ளது. இனியும் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பைத் தொடர்ந்து வளர்ப்பது, தவறான பரப்புரைகளைத் தடுப்பது மற்றும் உலகளாவிய தெற்கின் புரட்சியாளர்கள் அச்சுறுத்தல் இல்லாமல் செயல்படும் வகையில் இயங்குவதே வெனிசுவேலா மக்களின் பணியாகும். புரட்சி என்பது ஒரு நபர் சார்ந்தது அல்ல; அது ஒரு சமூக செயல்முறை, வெகுஜன நிகழ்வு. அதிபர் மதுரோ நியூயார்க்கில் ஒரு சிறைச்சாலையில் இருக்கலாம், ஆனால் பொலிவேரியன் புரட்சி வெனிசுவேலாவின் சாலைகளிலும் அதிபர் மாளிகையிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

(கட்டுரையின் ஆசிரியர்: மனோலோ டி லாஸ் சாண்டோஸ்)

 மனோலோ டி லாஸ் சாண்டோஸ் தி பீப்பிள்ஸ் ஃபோரமின் நிர்வாக இயக்குநராகவும், ட்ரைகான்டினென்டல்: இன்ஸ்டிடியூட் ஃபார் சோஷியல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். விவிரெமோஸ்: வெனிசுலா vs. ஹைப்ரிட் வார் (லெஃப்ட்வேர்டு, 2020), காம்ரேட் ஆஃப் தி ரெவல்யூஷன்: செலக்டட் ஸ்பீச்சஸ் ஆஃப் ஃபிடல் காஸ்ட்ரோ (லெஃப்ட்வேர்டு, 2021), மற்றும் ஓவர் ஓன் பாத் டு சோசலிசம்: செலக்டட் ஸ்பீச்சஸ் ஆஃப் ஹ்யூகோ சாவேஸ் (லெஃப்ட்வேர்டு, 2023) ஆகிய புத்தகங்களை தொகுத்துள்ளார்.

https://peoplesdispatch.org/2026/01/05/venezuelas-revolution-still-stands-debunking-trumps-psyop

https://peoplesdispatch.org/2026/01/05/venezuelas-revolution-still-stands-debunking-trumps-psyop

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »