அல்ஹஜ் ’பழனி பாபா’ நினைவேந்தல் நிகழ்வில் தோழர் திருமுருகன் காந்தி உரை

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் ’கே.எம். செரிப்’ அவர்கள் தலைமையில் அல்ஹஜ் ‘பழனி பாபா’ நினைவேந்தல் நிகழ்வு சனவரி 28, 2026 அன்று பழனி ஆயக்குடியில் மிக எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் கலந்துக்கொண்ட மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர்’ திருமுருகன் காந்தி’ அவர்கள் அல்ஹஜ் ‘பழனி பாபாவுக்கு மரியாதை செலுத்திய பின், அவர் ஆற்றிய உரை.

அன்பான தோழர்களே! தமிழ்நாட்டுடைய வரலாறை அமைச்சர்களோ, முதலமைச்சர்களோ, முடிவு செய்வதில்லை. பழனி பாபாக்களும் ஷெரீபுகளும் தான் முடிவு செய்கிறார்கள். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கடுமையான நெருக்கடிக்கு நடுவே இந்த சமூகம் மறந்துவிட்டிருந்த ’அல்ஹச் பழனி பாபா’ அவர்களை நினைவுபடுத்துகின்ற ஒரு முயற்சியை முன்னெடுத்தது. எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு இன்றைக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கே திரண்டிருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்? பணம் கொடுத்து, பொருள் கொடுத்து கூட்டத்திற்கு பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்டக்கூடிய இந்த காலகட்டத்தில் தானாக திரளக்கூடிய தோழர்களை வைத்திருக்கக்கூடிய தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலை நிமிர்ந்து நிற்கிறது. தமிழ்நாட்டிற்கு வழிகாட்டுகிறது.

தோழர்களே, தன்னை நெறிப்படுத்திய தலைவனை இன்றும் மறக்காமல் அவரது கொள்கைகளை முன்னெடுப்பதற்காக எவ்வித சமரசம் செய்து கொள்ளாமல் இந்த கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கக்கூடிய மரியாதைக்குரிய தோழர் கே.எம் ஷெரீப் அவர்கள், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். இன்றைக்கு தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற பலவேறு கோரிக்கைகளை தொடக்கி வைத்தவர் அவர்.

தந்தை பெரியார் மறைந்து 53 ஆண்டுகள் ஆன பின்பும் கூட இன்றைக்கும் எதிரிகளை அச்சுறுத்த கூடியவராக இருக்கிறார். ஆனால் தந்தை பெரியார் ஒரு காலத்திலும் அமைச்சர் பதவியை வகித்ததில்லை, முதலமைச்சராக மாறியதில்லை, எம்எல்ஏ என்று சட்டசபைக்குள் நுழைந்தவரும் இல்லை. அவரது கூட்டங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்று நாம் பார்க்க முடியாது. ஆனால் வெகு சில மக்களை அவர் அரசியல் படுத்திவிட்டுதான் அவரது கூட்டம் கலைந்து செல்லும். ஆக தந்தை பெரியாரினுடைய இந்த அரசியல் பயிற்சி என்பதை தனது வழிகாட்டியாக தோழர் கே. எம். ஷெரீப் அவர்கள் வைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான பேரை கூட்டி மாநாடு காட்டுகின்ற கட்சிகள் தான் தமிழ்நாட்டின் அதிகாரமிக்க கட்சிகள் என்று நாம் நினைத்து விடக்கூடாது. சில நூறு பேர்களை வைத்துக்கொண்டு கூட்டம் நடத்தி தந்தை பெரியார் தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அரசியல் செய்வதல்ல, மக்களை அரசியல் படுத்துவதுதான் எதிர்காலத்திற்கு வலிமையான ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி கொடுக்கும்” என்பதற்கு தந்தை பெரியாரில் இருந்து மரியாதைக்குரிய பழனி பாபா வரை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதை மறந்துவிட கூடாது.

பழனி பாபா அவருடைய காலகட்டத்தில் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? எத்தனை அமைச்சர்கள் இருந்திருப்பார்கள்? எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள்? விரல்விட்டு எண்ணக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர்களை நம்மால் சொல்லிவிட முடியுமா? 30/ 40 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைக்கு கோலோச்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருந்து அமைச்சர்களின் பெயரை நம்மால் சொல்லிட முடியுமா? ஆனால் அமைச்சராக இல்லாமல் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் எந்த அதிகாரத்திலும் இல்லாமல், இன்றளவும் லட்சக்கணக்கான மக்கள் ஆயிரக்கணக்கான மக்கள் திரளக்கூடிய ஒரு வலிமையை பழனி பாபா அவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கார் என்றால், கருத்தியல் வலிமைதான் காலத்தில் நிற்கும். காசு கொடுத்து கூட்டுகின்ற கூட்டமல்ல. அந்த கூட்டம் எல்லாம் வரலாறை படைச்சறாது.

இன்றைக்கு இங்கே பெருமளவில் இளைஞர்கள் திரண்டிருக்கிறார்கள் என்பது பெரிய நம்பிக்கை கொடுக்கிறது. பெரிய கட்சிகள் மட்டும்தான் அல்லது நடிகர்கள் மட்டும்தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயித்து விட முடியும் என்று நம்பி விடாதீர்கள். அவர்களால் ஒரு காலத்திலும் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடிந்ததில்லை. தந்தை பெரியாரும் பழனி பாபா போன்றவர்களும் தான் எதிர்காலத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்.

நாம் யாரைப் பற்றி நினைவு கூறுகின்றோம், தமிழ்நாட்டிற்கு எத்தனையோ முதலமைச்சர் இருக்கிறார்கள். அவர்களது சிந்தனைகள் இன்றைக்கு வழிகாட்டுதலாக இல்லை. மாறாக அதிகாரத்தில் இல்லாத அதிகாரத்திற்கு ஆசைப்படாத அண்ணல் அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ, பழனி பாபா அவர்களோ தான் நமக்கு வழிகாட்டியாக இன்றளவும் நாம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் மிக முக்கியமானவர்கள். அந்த வகையிலே தோழர் கே. எம் ஷரீப் அவர்கள் இன்றைய சமகாலத்தில் வழிகாட்டியாக இருக்கிறார் மறந்து விடாராதீர்கள்.

நமக்கு ஒரு பிரச்சனை என்னவென்றால், நம்மளுடைய காலத்தில் நம்மோடு இருக்கக்கூடிய சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை தன்னலம் இல்லாமல் உழைக்கக்கூடிய செயல் வீரர்களை பற்றி நாம் பெரிதளவு கவலை கொள்வதில்லை. அந்த நோய்தான் தமிழினத்தினுடைய தீராத நோயாக இருக்கிறது. நம் காலத்தில் கண்டெடுத்த மாணிக்கம் தான் தோழர் கே.எம் ஷரீப் அவர்கள் மறந்து விடாதீர்கள். அவர் பதவியை பெற வேண்டும் என்றால் ஆயிரம் வழிமுறைகள் இருக்கிறது. அவர் ஒன்றை கூட செய்யவில்லை. அவர் பதவி பெறுவதற்கான எந்த வேலையும் அவர் இன்றைக்கு வரைக்கும் செய்யவில்லை.

இன்றைக்கு எல்லோரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கக் கூடிய காலத்தில் பழனி பாபா அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. நீண்ட காலம் கழித்து அவரோடு நான் இந்த மேடையில் நேரத்தை இந்த அரசியல் உணர்வோடு இங்கே பகிர்ந்து கொள்வது என்பது எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுக்கிறது. பல கோரிக்கைகளை எந்த ஊடகத்திலும் அவர் பேசிய கோரிக்கைகள் எல்லாம் வந்ததில்லை. ஆனால் முதல் முதல் குரலாக ஷரீப் அவருடைய குரல் தான் இருக்கும். அவர்தான் அந்த குரலை, அந்த அரசியலை, அந்த கோரிக்கையை பற்றி பேசியிருப்பார்.

நான் ஒரு ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு  பழனி பாபா அவர்களுடைய வீரவணக்க கூட்டத்திற்கு வந்த பொழுது இருந்த கூட்டத்தை விட இன்றைக்கு மூன்று மடங்கு கூட்டம் அதிகரித்திருக்கிறது. இதற்காக அவர் எனக்கு தெரிந்து எந்த முயற்சியும் மெனக்கெடவில்லை. நேர்மையாக இயங்கினார், துணிச்சலோடு இயங்கினார். அதுதான் இத்தனை இளைஞர்களை இன்றைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.

தோழர்களே, நாமெல்லாம் அதிகாரத்தில் இல்லாதவர்கள் தான் ஆனால் நாம்தான் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை முடிவு செய்கிறோம், நிகழ்காலத்தை முடிவு செய்கிறோம். நம்மவர்களை யார் அங்கீகரிக்க மாட்டார்கள். வரலாறுதான் நம்மை அங்கீகரிக்கும். பழனி பாபா காலத்தில் அன்றைக்கு சமகாலத்தில் யாரும் அவரைப் பற்றி பேசி இருக்க மாட்டார்கள், பேசவும் பயந்தார்கள். ஆனால் இன்றைக்கு அவர் பேசிய பேச்சுக்கள் வழிகாட்டியாக இருக்கிறதா இல்லையா?

ஒரே ஒரு வாசகம் தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் எவனெல்லாம் ஏற்றுக்கொள்ளவில்லையோ அவனையெல்லாம் அரசியல் தலைவனாக அங்கீகரித்து விடாதே என்கின்ற ஒற்றை வரி போதும். 

ஏன் அதை அவர் சொல்லி இருக்க வேண்டும்? அது தான் ரொம்ப முக்கியம். அவர்கள் எதிர்காலத்தை கணிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். ஏன் பழனி பாபாவை கொண்டாடுகிறோம்? அவர் எதிர்காலத்தை கணிக்கின்றார். எதிர்காலத்திற்கு தேவைப்படுகின்ற வழிகாட்டுதலை சொல்கின்றார், உணர்த்துகின்றார். நம் கண் முன்னே அவர் செயல்பட்டிருக்கிறார். நம்மோடு அவர் வாழ்ந்திருக்கிறார். அது தான் ரொம்ப முக்கியம். அவர் எதை பற்றியும் கவலைப்பட வில்லை.

அவரை பற்றியான ஆவணப்படம் மிகத் துல்லியமாக என்ன சொன்னது என்றால் அவர் எம்ஜிஆரோடு இருந்தார், சரிசமமாக இயங்கினார், திமுகவோடு சரிசமமாக இயங்கினார், பாட்டாளி மக்கள் கட்சியோடு சரிசமமாக இயங்கினார். ஆனால் எந்த இடத்திலும் மக்கள் நலனை அவர் விட்டுக் கொடுத்துவிட்டு கூட்டணி அமைக்கவில்லை. அதனால்தான் அவர் வாழ்கிறார்.

தந்தை பெரியாரை ஏற்காதவன் என்ன செய்வான்? சாதிவெறியனாக மதவெறியனாக ஆரிய அடிமையாக மாறிப்போவான் என்பதை கணித்திருக்கிறார். அண்ணல் அம்பேத்கரை ஏற்காதவன் சனாதனவாதியாக சாதி வெறியனாக மக்களை கூறு போடக்கூடிய ஒரு காட்டுமிராண்டியாக இருப்பான் என்கின்ற இரண்டை அவர் புரிந்துதான் அவர் சொல்லி இருக்கிறார். 

எதிர்காலத்திலே ஆயிரம் கட்சிகள் வரலாம், ஆயிரம் தலைவர்கள் வரலாம். ஆனால் கோட்பாட்டாளர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் தான் இதை மீறி வேறுயாரும் எந்த அரசியலும் செய்துவிடக்கூடாது. அப்படி செய்தால் அவர்களை நிராகரிக்க வேண்டும் என்று அவர் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்.

அந்த வகையிலே இந்த கூட்டம் மிக முக்கியமான கூட்டம். நாம் தமிழ்நாட்டை காக்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம். நீங்கள் இத்தனை ஆயிரம் இளைஞர்கள் வந்துள்ளீர்கள். உங்கள் ஒவ்வொரு ஊரிலும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினுடைய கொடி பறக்க வேண்டும். கட்சியை விரிவுபடுத்துங்கள்.

எங்களுக்கோ, தோழர் குடந்தை அரசன் அவர்களுக்கோ, எஸ்.ஆர் பாண்டியன் அவர்களுக்கோ, அல்லது இங்க மேடையில் இருக்கக்கூடிய எல்லா இயக்கம் அல்லது கட்சி கொடிகள் வண்ணங்கள் எல்லாம் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் நாங்கள் எல்லாம் ஒரே கட்சிதான் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்டைய கட்சிதான். அதனால் எங்களுக்கு இந்த கொடியை பற்றியான கவலைகள் எல்லாம் இல்லை. அதை பற்றி எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.

நம்முடைய அரசியல் வெல்ல வேண்டும். திமுக, ஆதிமுகவை கடந்து ஒரு அரசியல் சூழல் உருவாகினால் அந்த இடத்தில் நாம் தான் எழுந்து நிற்க வேண்டும். வேறு யாரும் வரக்கூடாது. அந்த வகையில் தயாராக இருங்கள். நமக்கான காலம் நிச்சயம் வரும். மறந்து விடாதீர்கள். அந்த காலத்தை வைத்து இந்த நிலத்தை நாம் வென்றெடுப்போம். அதிகாரத்தை நாம் மீட்டெடுப்போம். தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்.

இப்பேர்பட்ட ஒரு பெருந்திரளான ஒரு கூட்டத்தை திரட்டி இன்றைக்கு பழனி பாபா அவர்களுடைய கூட்டங்கள் தமிழ்நாட்டின் பல மூளைகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இதுதான் அவரது வெற்றி. அவர்கள் தடை செய்ய, தடை செய்யத்தான் பழனி பாபா அவருடைய புகழ் உயர்ந்த நிற்கும். பழனி பாபாவின் அரசியல் வெல்லும். இதற்கான விதையை கொண்டு வந்து இங்கே விதைத்த தோழர் கே எம் ஷரீப் அவர்களுக்கும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கும் மே 17 இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்து விடைபெறுகிறேன்.

நன்றி! வணக்கம்!!.

https://www.facebook.com/reel/1351068923438452

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »