நோ அதர் சாய்ஸ் – திரைப்பார்வை

உலகெங்கிலும் செயற்கை நுண்ணறிவு குறித்தான விவாதங்கள் அனைத்து துறைகளிலும் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது. 2023 ஆம் வருடம் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தங்களின் துறையில் மேலோங்கி கொண்டிருப்பதால் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என்று அமெரிக்க எழுத்தாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கால வரையறையின்றி வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர். அமெரிக்க திரைத்துறையை சார்ந்த பலர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டம் நிறைவுபெறும் வரை தங்களது படப்பிடிப்புகளை தொடங்கவில்லை. திரைத்துறையினர் போராட்டம் மேற்கொண்டால், வெகு விரைவில் கவன ஈர்ப்பு கிடைத்துவிடும், அதிலிருந்து தீர்வை நோக்கி விரைவில் நகரலாம். ஆனால் அப்படி இருந்தும் இந்த போராட்டம் 5 மாதம் வரை நீடித்தது, பின்னர் நிறுவனங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே சுமூக தீர்வு எட்டப்பட்டது.

ஆனால் இதுவே, ஒரு சாமானிய மனிதன் செயற்கை நுண்ணறிவின் வருகையால் வேலை நீக்கம் செய்யப்பட்டால் என்ன ஆகும்? அடுத்த ஒரு மாதத்திலேயே அவனது சூழல் மிகவும் மோசமாக மாறிவிடும் நிலையில் தான் உழைக்கும் மக்களின் பொருளாதார கட்டமைப்பு உள்ளது. தான் இழந்த வேலையை எப்படியாவது திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் செய்யும் ஒருவனை பற்றிய படம் தான் “நோ அதர் சாய்ஸ்”(No other Choice).

“வென்ஜென்சு டிரிலஜி” (Vengeance Trilogy) என்று சினிமா ஆர்வலர்களால் அழைக்கப்படும் “சிம்பதி ஃபார் வென்ஜென்சு”(Sympathy for Vengeance), “ஓல்ட் பாய்”(Old boy), “லேடி வென்ஜென்சு”(Lady Vengeance) ஆகிய உலகப்புகழ் பெற்ற திரைப்படங்களை இயக்கிய தென் கொரிய இயக்குனரான பார்க் சான் வூ (Park Chan Wook) அவர்களின் சமீபத்திய படைப்பு தான் “நோ அதர் சாய்ஸ்”(No other Choice).

காகித உற்பத்தி நிறுவனத்தில் 20 வருடங்களாக வேலை செய்து வருகிறார் யூ மேன் சூ (Yoo Man Su). ஒரு நாள், அமெரிக்க முதலாளிகளால் தனது நிறுவனம் விலைக்கு வாங்கப்படுகிறது. அமெரிக்க முதலாளிகள் நிறுவனத்தை கைப்பற்றிய சில நாட்களிலேயே பல தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகின்றனர். அவர்களில் யூ மேன் சூ – ம் ஒருவர். கடனில் வாங்கிய வீடு, தனது குழந்தைகள், மனைவி, இரண்டு நாய்கள் என அனைவருக்குமான செலவுகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று திகைத்து நிற்கிறார் யூ மேன் சூ. மூன்று மாதங்களுக்குள் புதிய வேலையை தேடி பிடித்துவிடுவேன் என்று நம்பும் யூ மேன் சூ-விற்கு ஒரு வருடம் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. தனது வீடு, ஆசையாய் வளர்த்த நாய்கள், பெண் குழந்தையின் செல்லொ (Cello) வகுப்புகள் என அனைத்தையும் கைவிடவேண்டும் என்ற நிலை யூ மேன் சூவுக்கு வருகிறது. வேலையை திரும்பப்பெற யூ மேன் சூ எடுக்கும் விபரீத முடிவுகளும், அவருக்கு வேலை கிடைத்ததா என்ற கேள்வியியையும், நம்மை சுற்றி பின்னிப்பிணைந்து இருக்கும் சுரண்டல் கட்டமைப்பு சாமானிய மக்களை எப்படி மிருகத்தனமான முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது என்பதையும் நகைச்சுவையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் பார்க் சான் வூ.

ஆசியாவின் மிகத்தொன்மையான தொழில்நுட்பங்களில் ஒன்றான காகித உற்பத்தி, சீனாவில் உருவாகி ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் ஆறாம் நூற்றாண்டு முதலே மக்களிடம் ஒரு பெரும் தொழிலாக வளர்ந்துள்ளது. பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக செம்மை பெற்று, பல விதங்களில் வளர்ந்து ஆசிய நாடுகளில் மாபெரும் தொழிலாக உருவெடுத்த காகித உற்பத்தி தொழிலை ஒரு அமெரிக்க நிறுவனம் விலைக்கு வாங்குகிறது. 30 ஆண்டுகளாக இந்த தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஒரு நபராக மட்டுமில்லாமல் தனது உழைப்பை அந்த நிறுவனத்திற்கும், அந்த தொழிலின் மேம்பாட்டிற்கும் கொட்டித்தீர்க்கும் யூ மேன் சூ-வை வேலையை விட்டு நீக்குகிறது அமெரிக்க நிறுவனம். தன்னுடைய உழைப்பிற்கான அங்கீகாரமாக தனக்கான நிரந்தர வேலை மற்றும் ஊதியம் கிடைக்கும் என்று நம்பி தன் வாழ்க்கையை கட்டமைக்கிறான். ஆனால் அந்த பொருளின் உற்பத்தியை நம்பியே அவனது வாழ்க்கை நகர்கிறது என்று உணர்வதற்குள் அவனுடைய உழைப்பு போதவில்லை என தூக்கியெறியப்படுகிறான். 

“அந்நியமாக்கப்பட்ட உழைப்பு” எனும் தலைப்பில் 1844-ம் ஆண்டு எழுதப்பட்ட “பொருளாதார மற்றும் தத்துவம்” எனும் தலைப்பில் மாமேதை மார்க்ஸ் அவர்களின் கூறுவது,

“தொழிலாளி தனது வாழ்க்கையையே அந்தப் பொருளுக்குள் செலுத்துகிறான், ஆனால் இப்போது அவனுடைய வாழ்க்கை அவனுக்குச் சொந்தமானதல்ல — அந்தப் பொருளுக்கே சொந்தமானதாகிவிடுகிறது.”

“தொழிலாளியின் செயற்பாடு அதிகரிக்கும்போது, அவனிடம் இருக்கும் பொருட்கள் குறைகின்றன. அவன் உழைப்பின் விளைவாக உருவாகும் பொருள், அவன் அல்ல. எனவே, அந்த உற்பத்தி அதிகரிக்கும் போதெல்லாம், அவன் தன்னையே இழக்கிறான்.”

இக்கதையில் வரும் யூ மேன் சூ உட்பட, சுரண்டப்படும் அனைத்து தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் அவலத்தை மாமேதை மார்க்ஸ் விளக்குகிறார்.

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளி, பல ஆண்டுகளாக கட்டியெழுப்பிய தனது வாழ்க்கை நொடிப்பொழுதில் இடிந்து விழும் காட்சியை கண்முன் காண்கிறான். அந்த வாழ்க்கையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்ற அவசரத்தில் அவன் விபரீத முடிவுகளை எடுக்க தள்ளப்படுகிறான். இந்நிலையில் தான் எளிய ஒருவருக்கொருவரை எதிரிகளாக்கி மாற்றி அந்த குழப்பத்தை பயன்படுத்தி அவர்களை சுரண்டும் வேலையை அமர்ந்த இடத்திலிருந்தே கணக்கச்சிதமாக செய்து முடிக்கின்றனர் பன்னாட்டு முதலாளிகள்.

கதை விரியத் தொடங்க, கதையின் போக்கில் முதலாளித்துவம் யூ மேன் சூ-வை தனக்கு ஏற்ற ஆளாக வெற்றிகரமாக மாற்றுகிறது. அதன் பின்னர் அவருக்கு ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. அது, ஒரு மிகப்பெரிய காகித உற்பத்தி தொழிற்சாலையில் அனைத்து வேலைகளையும் செயற்கை நுண்ணறிவே (Artificial Intelligence – AI) செய்ய, அதனை ஒற்றை ஆளாக நின்று மேற்பார்வை செய்யும் வேலையாகும்.

எண்ணற்ற மனிதர்கள் தங்களது உழைப்பினாலும், அறிவாற்றலினாலும் பல நூற்றாண்டுகளாக மேம்படுத்திய தொழில்நுட்பத்தின் சாரம்சங்கள் அனைத்தும் தரவுகளாக சேகரிக்கப்பட்டு  செயற்கை நுண்ணறிவிற்கு செலுத்திய பிறகே அந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது. அதற்கென்று தனியாக அனுபவ அறிவு கிடையாது. மனிதர்களின் அனுபவங்களே அதனுடைய அனுபவமாக மாறுகின்றன. 

செயற்கை நுண்ணறிவு மூலம் காகிதம் தயாரிக்கும் வேலையை இயந்திரங்கள் முழுமையாக செய்து முடிக்கும் நிலையில், அவற்றுள் 30 ஆண்டுகளாக தன்னுடன் வேலை செய்த பல தொழிலாளர்களின் பங்கு இருந்தும் அவர்கள் வேலையில்லாமல் தெருக்களில் நிற்கிறார்கள் என்ற எண்ணம் யூ மேன் சூ – விற்கு சிறிதளவும் இல்லை. தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று திருப்தி அடையும் நிலையில் முதலாளித்துவம் தனக்கான ஒரு அடிமையை நிலைநிறுத்தியிருப்பதாக படம் நிறைவடைகிறது.

அதற்காக செயற்கை நுண்ணறிவை முற்றிலும் தவிர்த்துவிட முடியுமா என்றால், இல்லை. மனிதனின் உழைப்பை எளிதாக்கும் கருவியாக, கூட்டு முயற்சியின் அடிப்படையில் மனிதர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் அதனைப் பயன்படுத்துவதே செயற்கை நுண்ணறிவை உருவாக்கிய மனிதர்களாகிய நாம் அதனுடன் அடைய வேண்டிய சமநிலை. இது தவிர, அமெரிக்க உள்ளிட்ட பல ஆதிக்க சக்திகளின் வசமே பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் உள்ளன. எந்த தகவல் பொதுமக்களுக்கு செல்லவேண்டும், எந்த தகவலை தடுக்க வேண்டும் என தன்னுடைய சாதக பாதகங்களுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவை உருவாக்கி வைத்திருக்கிறது மேற்குலகம். இதன் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும் எந்த முன்னெடுப்பும் இன்னும் தொடங்கப்படவில்லை.

கொரிய திரைப்படங்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையை உலக சினிமா தளங்களில் பதித்துள்ளன. கிம்- கி-டுக் (Kim-Ki-Duk), பாங்-ஜூன்-ஹோ (Bong-Joon-Ho) போன்ற உலகப்புகழ் பெற்ற கொரிய இயக்குநர்கள் வரிசையில் பார்க்-சான்-வூ-ற்கு (Park-chan-wook) ஒரு தனி இடம் உண்டு. 2000-ஆம் ஆண்டு “ஜாயின்டு செக்யூரிட்டி ஃபோர்சு” (Joint Security Force) என்ற அரசியல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் 25 ஆண்டுகள் கழித்து வடகொரியாவின் அரசியல் சூழலை மையமாகக் கொண்ட ஒரு கதையை அவர் மீண்டும் கையில் எடுத்து இருக்கிறார்.

இவர் மட்டுமே இதுபோன்ற படங்களை எடுத்திருக்கிறார் என்று நினைத்தால், இல்லை.  உலகின் பல நாடுகளை சேர்ந்த மூத்த, புகழ்பெற்ற இயக்குநர்கள் பலரும், தங்களது வழக்கமான பாணியிலிருந்து விலகி பாசிசத்திற்கு எதிரான, வலது சாரிகளுக்கு எதிரான, முதலாளித்துவத்திற்கு எதிரான படைப்புகளை சென்ற (2025) ஆண்டில் வலுவாக படைத்துள்ளனர். உதாரணத்திற்கு, பால் தாமஸ் ஆண்டர்சன் (Paul Thomas Anderson) இயக்கி லியோனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio), சான் பெண் (Sean Penn) நடித்த ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் (One battle after another), பிரான்சிஸ் லாரன்ஸ் (Francis Lawrence) அவர்களின் தி லாங் வாக் (The long walk) போன்ற வலதுசாரி அரசியலுக்கும் எதிரான பல படைப்புகள் சென்ற (2025) ஆண்டு வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு இந்த இயக்குநர்கள் அனைவரும் தாங்கள் எடுத்த திரைப்படங்களில் வெவ்வேறு கதைகளையும் கருப்பொருள்களையும் பேசியிருக்கின்றனர். ஆனால் சென்ற ஆண்டு அனைவரும் வலதுசாரி அரசியலுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டினை மிகவும் ஆணித்தரமாகவும் தெளிவாகவும் நிறுவியுள்ளனர்.

பெரும் நெருக்கடியில் இருந்த நிலையில், 3500 கோடி பொருட்செலவில் வெளிவந்து மாபெரும் பணத்தை ஈட்டி ஹாலிவுட்டையே வணிக ரீதியாக காப்பாற்றியது F1 திரைப்படம்.

F1 திரைப்படத்தின் கதாநாயகன் சோனி ஹேய்ஸ் (Sonny Hayes) இளம் வயதில் ஒரு கார் பந்தயத்தில் விபத்துக்குள்ளானதால் தான், அந்த பந்தயத்தில் மூன்றாம் உலக நாடான பிரேசிலை சேர்ந்த கார் பந்தயத்தின் பிதாமகன் என்று அழைக்கப்படும் அயர்டன் சென்னா-வால் (Ayrton Senna) முதலிடம் பிடிக்க முடிந்தது போன்று காட்சிபடுத்தியிருப்பார்கள்.

இப்படி பெரும் நெருக்கடியான சூழலில் வெளிவரும் படங்களில் கூட எளிய மக்களுக்கு எதிரான கருத்துக்களை ஆங்காங்கே திட்டமிட்டு தூவி செல்கின்றனர்.

மூன்றாம் உலக நாடான பிரேசில், அமெரிக்காவின் ஆதிக்க அரசியலால் இன்றளவும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கடின உழைப்பின் மூலம் பெரும் பெயரை அடைந்த ஒரு வீரனின் வெற்றி என்பது ஓர் அமெரிக்க கார் பந்தைய வீரன் போட்ட பிச்சை என்று சித்தரிக்கும் நேர்மையினமையால் வந்த 10,000 கோடி வசூலை ஈட்டும் திரைப்படங்களைப் புறந்தள்ளிவிட்டு முதலாளித்துவத்தால் நாம் அடையும் பெருந்துன்பங்களைச் காட்சிப்படுத்தும் “நோ அதர் சாய்ஸ்” போன்ற படங்களை நோக்கி தமிழ் திரைப்பார்வையாளர்களின் பார்வை திரும்புவது தமிழ் சினிமா மேலும் இரு படி அரசியல் முதிர்ச்சி அடையை துணை நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »