போட்டித் தேர்வுகள் பயிற்சி என்னும் வணிகம்
பள்ளிப்படிப்பை முடித்ததும் மாணவர்கள் கனவுகளோடும்,எதிர்பார்ப்புகளோடும் உயர்ந்த படிப்பு, உயர்ந்த வேலை என்று கட்டமைக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களின் போட்டித் தேர்வுக்காக ஒருபுறம் குவிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறுபுறத்தில் தகுதி என்ற வலையை வீசி அரசும், தனியார் பயிற்சி நிறுவனங்களும் விரிக்கும் கல்விச் சந்தையின் வணிகம் நம் கற்பனைக்கு எட்டாத வகையில் அசுர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது.
உயர்ந்த தரம் என்று கட்டமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் குறைவான இடங்களுக்கு அதிகமான மாணவர்கள் போட்டியிடும் நிலை உருவாக அரசே காரணம். பெரும்பான்மை மாணவர்களுக்கு தோல்விகள் நேரும் எனத் தெரிந்தும் வெற்றியின் ஆசைகளை ஒவ்வொரு மாணவர்களிடமும் போலியாக உருவாக்கி தனியார் பயிற்சி நிறுவனங்கள் கோடிகளைக் கொள்ளையடிக்கின்றன. அடித்தட்டு மக்களும் கல்வி, வேலைவாய்ப்பை பெற்று, தங்களை முன்னேற்றக் கொண்டு வந்த சமூகநீதியை கானலாக்கும் முயற்சியே இந்தப் போட்டித் தேர்வுகள்.
இந்தியாவில் ஏறக்குறைய 10 லட்சம் பள்ளிகளும், மத்தியக் கல்வி முறைப்படி (CBSE) கிட்டத்தட்ட 22000 பள்ளிகளும் உள்ளன. ஒவ்வொரு வருடமும் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் எழுதுகிறார்கள். இந்தத் தேர்வுகளை தேசிய தேர்வாணைய முகமை (National Testing Agency – NTA) நடத்துகிறது. மனித வள மேம்பாட்டுத் துறை கண்காணிப்பின் கீழ் வரும் இந்தத் தேர்வாணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.
ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலக் கல்விக் கொள்கைப்படி (State Board) இயங்கும் பள்ளிகள் தான் அதிகமாக இருக்கின்றன. ஆனால் போட்டித் தேர்வுகளில் மத்தியக் கல்வி முறைப்படியே (CBSE) பெரும்பான்மையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அப்படியென்றால் இந்தத்தேர்வுகளில் பங்கெடுக்கும் மாணவர்களை சமமற்ற தளத்தில் நின்று போட்டியிட வைத்திருக்கிறார்கள் என்பதை எவராலும் புரிந்து கொள்ள இயலும். இந்த இடைவெளியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு லாப நோக்குடன் உள்ளே நுழைபவை தான் தனியார் பயிற்சி நிறுவனங்கள். போட்டித் தேர்விற்கு பயிற்சியளிக்கும் இந்த பயிற்சி நிறுவனங்கள் வருடத்திற்கு 15% விரிவடைவதாக கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மோடி அரசின் “ஒரே நாடு ஒரே தேர்வு” என்கிற கொள்கை இந்த பயிற்சி நிறுவனங்கள் விரிவடைவதற்கு மூலக் காரணமாக இருக்கிறது. இவை ”பயிற்சி தொழிற்சாலை” போலவே இயங்குகின்றன. இந்தத் தொழிற்சாலையில் ஏழை, எளிய மக்கள் நுழையவே முடியாது!!
ஒருபுறம் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைத் தவிர வேறு எந்த தொழில்நுட்ப வசதியும் கிடைக்கப் பெறாத, வசதி வாய்ப்பற்ற சூழலில் பெரும்பான்மை மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் வசதி வாய்ப்புடைய மாணவர்களை போட்டித் தேர்வுகளுக்காக தயார் செய்ய இணையதளத்தில் பல செயலிகளை (Applications) நிறுவி பணத்தை குவித்துக் கொண்டிருக்கிறார்கள் கல்வியின் வணிக வழிகாட்டிகள். இது போட்டித் தேர்வுகளின் வணிகத்திற்கான ஒழுங்கமைக்கபட்ட மாபியாவாக(Organized mafia) திகழ்கிறது.
போட்டித் தேர்வுகளால் நம் கற்பனைக்கு எட்டாத வகையில் இணைய வழிக் கல்விச் சந்தை அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. கல்வித் துறையில் இனி தனியாரின் அதிகாரமே அனைத்தையும் முடிவு செய்யும் என்ற வகையில் கல்வியின் நிலையும் மாறுகிறது. இந்தியாவில் 2018 வரை 3900 கோடி வரை இருந்த இணையவழிக் கல்விச்சந்தையின் நிலை 2024 க்குள் 360000 கோடி அளவிற்கு பெரும் பாய்ச்சலாக மாறும் என சந்தை ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்காக (IIT-JEE, CAT, CET, AIIMS, AIPMT) ஆயத்தமாகிறார்கள். இதற்காக அவர்கள் பெரும்பாலும் பயிற்சி நிறுவனங்களையே நாடுகிறார்கள். கொரோனோப் பேரிடரால் இணையவழிக் கல்வித் தொழில்நுட்பம்(edutech) வாயிலாக மாற்றுக் கல்வி முறை (Hybrid Learning) அசாதாரண வளர்ச்சி பெற்றிருக்கிறது.
இந்தியாவில் மோடி தலைமையிலான பிஜேபி அரசு பொறுப்பேற்றதிலிருந்து இந்தியா மொத்தமும் பனியாகளின் சந்தையாக மாற்றும் திட்டத்தை மிக வேகமாக செயல்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக கல்வியின் மூலம் பனியாகள் கொள்ளையடிக்கவே நீட் எனும் தேர்வும் அதனையொட்டிய இந்த இணைய கல்வி சந்தையையும்.
இதை மெய்பிக்கும் வண்ணமே இந்த துறையில் Embibe, unacademy, meritnation, examify, prepathon மற்றும் Vedanta etc ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த செயலிகளின் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பவர்கள் பெரு நிறுவனங்களான இந்திய கூகுள் நிறுவனத்தின் தலைவர் ராஜன் ஆனந்தன், சுமித் ஜெயின் (Common Floor), முன்னாள் ப்ளிப் கார்ட் (Flipkart) மூத்த நிர்வாகி, ரெட் பஸ் (Redbus) இணை நிறுவனர் போன்ற பெரு முதலாளிகள் ஆவர். இவற்றில் ஒன்றாம் வகுப்பிலிருந்தே உயர்கல்விப் போட்டித் தேர்விற்கு குழந்தைகளை பந்தயக் குதிரைகளாக ஆயத்தமாக்கும் செயலிகளும் உள்ளன. இதில் BYJU’S என்ற இணைய வழிக் கல்வி நிறுவனத்தின் BYJU’S செயலியும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இது Topper என்ற செயலியை 15 கோடிக்கும் , WhiteHatJr என்கிற செயலியை 30 கோடிக்கும் வாங்கி இணையவழிக் கல்விச் சந்தையின் பெரும்புள்ளியாக குறுகிய காலத்திலேயே வளர்ந்து நிற்கிறது. இந்த நிறுவனம் 2020 ம் ஆண்டு வருமானமாக முந்தைய வருடத்தின் 1340 கோடியை விட ஒரே வருடத்தில் இரட்டிப்பாக 2800 கோடியை ஈட்டியிருக்கிறது.
நீட் தேர்வுக்கான முக்கிய பயிற்சி மையமாக மேற்கு வங்காளத்தின் பார்ப்பனியக் குழுமமான ஆகாஷ் பயிற்சி நிறுவனம் இருக்கிறது. இதன் நிறுவனர்கள் J.C சவுத்ரி மற்றும் ஆகாஷ் சவுத்ரி. இந்த ஆகாஷ் நிறுவனத்துடன் BYJU’S நிறுவனம் இணைந்து 100 கோடி டாலர் அளவிற்கு இணைய வழி தொழில் நுட்பத்தை நீட் பயிற்சிக்காக துவங்கியுள்ளது.
இவர்களைப் போலவே பனியா நிறுவனமான மகேஸ்வரி சகோதரர்கள் குழுமத்தின் ஆலன் நிறுவனம் 1988ம் ஆண்டில் 8 மாணவர்களுடன் துவங்கப்பட்டது. ஆனால் 2020ல் நேரடியாகவும் மற்றும் இணைய வழியாகவும் சுமார் 350000 மாணவர்கள் பயிலும் நிறுவனமாக கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானின் கோடா பகுதியில் 1600 கோடி அளவில் பிரம்மாண்ட நிறுவனத்தையே நீட் பயிற்சிக்கெனவே நிறுவியிருக்கிறார்கள். இவர்களுக்கு 18 நகரங்கள் மற்றும் 6 மாநிலங்களில் 100 பயிற்சிக் கூடங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியளிக்க பத்தாம் வகுப்பிலிருந்தே துவங்கி விடுகிறது.. அதற்கென வகைப்படுத்திய பாடத்தொகுப்புகளுக்கேற்ப பணத்தைக் கறக்கிறது. குறைந்தபட்சக் கட்டணமாக 1,00,000 லிருந்து 3,00000 வரை ஒவ்வொரு மாணவரிடமும் பெறுகிறது. இவர்களைப் போன்றவர்களின் அசுர வளர்ச்சியை உற்று நோக்கினாலே நீட் தேர்வு என்பது ஏன் நம் தலையில் திணிக்கப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனாப் பெருந்தொற்று காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்க மாணவர்களிடையே கோரிக்கைகள் எழுந்தன. அப்பொழுது ஆலன் நிறுவனம் தேர்வுகள் தள்ளி வைக்கப்படாது என்று முன்கூட்டியே அழுத்தமாகக் கூறியது. அதோடு NTA வின் அறிக்கையையும் முன்கூட்டியே வெளியிட்டது. இந்த சர்ச்சை மாணவர்களிடையே பெரும் விவாதமாகியது. மாணவர்கள் NTA விற்கும் ஆலன் நிறுவத்திற்கும் தொடர்பு உள்ளதா என சந்தேகங்கள் எழுப்பினார்கள். அப்படியென்றால் கேள்வித்தாள்கள் இந்த ஆலன் நிறுவனத்துடன் பரிமாறப்படுகிறதா என்ற சந்தேகத்துடன் கடந்த வருடம் டிவிட்டர் வலைதளத்தில் டிரெண்ட் செய்தார்கள். NTAவின் நம்பகத் தன்மையை கேள்விக்குள்ளாக்கி CBI விசாரணை வேண்டுமென்றும், #Coachingmafia என்ற ஹேஷ்டேக்கையும் டிவிட்டரில் பகிர்ந்தார்கள். அத்துடன் டெல்லி சலோ பார் ஸ்டுடண்ட்ஸ் (#DelhiChaloForStudents) என்ற போராட்டத்தையும் முன்னெடுத்தார்கள். மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், உயிரையும் பொருட்படுத்தாமல் பயிற்சி நிறுவனங்களின் விருப்பத்திற்கேற்றபடி பனியாக்களின் மோடி அரசும் நீட் தேர்வை தள்ளி வைக்காததால் விண்ணப்பித்தவர்களில் 51% மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுதினார்கள் என்பதும் அம்பலமாகியது.
தேசிய தேர்வாணைய முகமை (NTA) லாப நோக்கமற்றது என்று தங்களை அறிவித்துக் கொண்டாலும் அதன் செலவீனங்களை எப்பொழுதும் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. இந்த முகமையானது 2019 ல் மட்டும் JEE MAIN மற்றும் NEET போட்டித் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணங்களால் முறையே 113 கோடியையும் 4662 கோடியையும் வசூலித்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறு பல்லாயிரம் கோடிகளை NTA மூலம் சுரண்டவும், பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களை சுரண்டவும் அனுமதிப்பது தான் மோடி அரசின் “ஒரே நாடு ஒரே கல்வி” என்கிற கொள்கையின் நோக்கமாக உள்ளது.
இந்தியாவிலேயே இன்னும் 12% திற்கும் குறைவான அரசுப் பள்ளிகளில் தான் இணைய வசதியும், அதிலும் செயல்திறனுடைய கணிப்பொறி 30% திற்கும் குறைவாகவே இருப்பதாக இந்திய ஒன்றிய கல்வி அமைச்சகமே கூறுகிறது.
இப்படியான மோசமான கட்டமைப்புடைய, தொழில்நுட்ப வாய்ப்பில்லாத அரசுப் பள்ளிகளில் தான் கிராமப்புற, ஏழை,எளிய மாணவர்கள் பயில்கிறார்கள். “ஒரே நாடு ஒரே கல்வி ” என்று மோடி அரசு கொண்டு வரும் புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்றுக் கொடுப்பதாக கூறுகிறது. வசதி வாய்ப்புடையவர்கள் சுலபமாக தொழில்நுட்பக் கல்வி பெறுவதும், அடித்தட்டு, ஏழை,எளிய மாணவர்களை சுலபமாக தொழிலாளியாக மாற்றுவதுமான நுட்பமான சனாதன ஆரிய குலக்கல்வி சிந்தனையின் விளைவே இந்த கல்விக் கொள்கை. ஆகவே தான் இந்த திட்டத்தை ஆரம்பம் முதலே மே 17 இயக்கம் மிகக்கடுமையாக எதிர்த்து வருவதுடன், இதனை திரும்ப பெற வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் நடத்தியது.
அரசு மாணவர்களை போட்டித் தேர்வுகளில் ஓடவிடுவதால் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை லாபத்தை சுரண்டிக் கொழுக்கிறார்கள். போட்டித் தேர்வின் தோல்விகள் மூலம் குற்றவுணர்ச்சி அடையும் மாணவர்களை உருவாக்குவதே அரசின் நோக்கம். அதன் மூலமே பல துறைகளிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை பரவலாக உருவாக்காத தங்களின் மேல் மாணவர்களின் கோவம் குவிவதையும் தவிர்க்கலாம். அதே சமயத்தில் கல்வியை வணிக சந்தைக்கு திறந்து விடும் தனியார் மயக் கொள்கையையும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதே அரசின் தந்திரம். இப்படியான சூழ்ச்சி வலைகளால் உருவானவையே போட்டித் தேர்வுகள்.
“தகுதியும், திறமையும் பெறத்தான் ஒருவன் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ வருகிறான். ஆனால் பள்ளிக்கோ கல்லூரிக்கோ வரவே தகுதி, திறமை தேவை என்பது மிகப் பெரிய அயோக்கியத்தனம்” என்பது பெரியாரின் கூற்று. இந்திய அதிகார சனாதனக் கும்பல் தகுதி என்று வரையறுக்கும் நீட் போன்ற தேர்வுகளால் தகுதியுடைய அனிதா போன்ற நம் பிள்ளைகள் மனம் நொந்து இறப்பதை இனியும் நிகழாமல் தடுக்க கல்வி மாநிலப் பட்டியலில் மாற வேண்டும். கல்வி குறித்த அனைத்து முடிவுகளையும் மாநிலங்களே முன்னெடுக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் ஒழிக்கப்பட்டு பள்ளி இறுதித் தேர்வு முறைப்படியே உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.