பெகாசஸ் செயலிக்காக கோடிகளை கொட்டி உளவு பார்த்த மோடி அரசு

பெகாசஸ் செயலிக்காக கோடிகளை கொட்டி உளவு பார்த்த மோடி அரசு

அரசு என்பது மக்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் அரசை விமர்சிப்பவர்களின் அன்றாட செயல்பாடுகளை அவர்களுக்கேத் தெரியாமல் உளவு பார்த்த அரசாக மோடி அரசு இருக்கிறது. ஒரு உளவு செயலியின் மூலம் ஒருவரின் கைப்பேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களில் தகவல்களைத் திருடவும் முடியும். அதே சமயத்தில், அந்த திருடர்களுக்கு சாதகமான தகவல்களை அவற்றில் நுழைக்கவும் முடியுமென்பது நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது. இப்படியான உளவு வேலைக்காகவும், களவு வேலைக்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட உளவு செயலியே “பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware)”. இது இஸ்ரேலின் NSO நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

தேச பாதுகாப்பு, பயங்கரவாதத்தை கண்காணிக்கவே இந்த பெகாசஸ் உளவு மென்பொருளை அரசுகளுக்கு அல்லது இராணுவம் போன்ற அரசு நிறுவனங்களுக்கு வழங்குவதாக இதனை தயாரித்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த NSO என்ற நிறுவனம் கூறுகிறது. ஆனால் அரசின் மக்கள் விரோத கொள்கைகளை விமர்சிக்கும், அரசின் மோசமான நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரும் சமூக செயல்பாட்டாளர்களை, மனித உரிமை ஆர்வலர்களை, பத்திரிக்கையாளர்களை உளவு பார்த்த செய்தி பலரையும் அதிர்ச்சியளிக்கும் வகையில் தற்போது வெளிவந்திருக்கிறது. மேலும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அம்னெஸ்டி இண்டர்நேஷனல் (Amnesty International) அமைப்பும், ஃபார்பிடன் சுடோரிஸ் (Forbidden stories) மற்றும் “தி வயர் ” போன்ற 16 உலகளாவிய பத்திரிக்கை நிறுவனங்களும் இணைந்து “பெகாசஸ் ப்ராஜெக்ட்” (Pegasus Project) என்ற ரகசிய செயல்திட்டத்துடன் ஆய்வு நடத்திய போது தான் சுமார் 50,000 கைப்பேசி எண்களை என்.எஸ்.ஒ (NSO, Israel) நிறுவனத்திலிருந்து கசிந்த ஆவணத்திலிருந்து கண்டறிந்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் 300-க்கும் அதிகமான கைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் நாட்டில் மக்கள் செயற்பாட்டாளர்களான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக நிறுவனர் கோவை ராமகிருட்டிணன் உள்ளிட்டோர் கைப்பேசி எண்களும் அடக்கம்.

பெகாசஸ் கட்டண விவரம்

அம்னெஸ்டி அமைப்பு டிஜிட்டல் தடயவியல் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட 67 ஸ்மார்ட்போன் கைப்பேசிகளில் இந்த உளவு தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, 23 கைப்பேசிகளில் உளவு பார்க்கப்பட்டதும், 14 கைப்பேசிகளில் ஊடுருவ முயற்சித்ததின் அறிகுறிகள் உள்ளதாகவும், மீதியுள்ள 30 கைப்பேசிகளில் பயனர்கள் புதிய கைப்பேசிக்கு மாறியதாலும், கூகுளின் ஆன்ட்ராய்டு முறைப்படி இயக்கப்பட்டதாலும் பெகாசஸ் உளவு செயலியின் தாக்குதல் நடைபெற்றிருக்கிறதா என முடிவுக்கு வர முடியாதவையாகவும் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.

தி நியூயார்க் டைம்ஸ் இதழ், 2016 ஆம் ஆண்டுக்கு முந்தையதும், 2016 ஆண்டுக்குமாக NSO நிர்ணயித்த கட்டணம் பற்றி கசிந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அப்போதுள்ள விலை நிர்ணயிப்பின் படி, பெகாசஸ் செயலி உளவு பார்ப்பதற்கு வரையறுத்த தொகை பல கோடிகளைத் தாண்டுகிறது. அதன்படியான கட்டணப் பட்டியலை கீழே காணலாம்.

 

விவரம் தொகை (ஏறக்குறைய)
இணைப்புக் கட்டணம் 3 கோடி 75 லட்சம்
10 ஐ போன் & ஆன்டிராய்டு போன் 4 கோடி 55 லட்சம்
5 பிளாக்பெர்ரி 3 கோடி 75 லட்சம்
5 சிம்பியன் 2 கோடி 25 லட்சம்
கூடுதல் கண்காணிப்பு இலக்கு 100 வரை 6 கோடி
கூடுதல் கண்காணிப்பு இலக்கு 50 வரை 3 கோடி 75 லட்சம்
கூடுதல் கண்காணிப்பு இலக்கு 20 வரை 1 கோடி 12 லட்சம்
வருடாந்திர பராமரிப்பு செலவு மொத்தத் தொகையில் 17%

 

இந்தியாவில் 300 கைப்பேசி எண்களும் உளவு பார்க்கப்பட்டிருக்கும் என்றால் 2016ம் ஆண்டுக்கு முந்தைய விலை நிர்ணயிப்பின் படி ஒரு இணைப்பிற்கான பெகாசிஸ் உளவு செயலிக்கான தொகை ரூ 3 கோடி 75 லட்சம் (பல உளவு நிறுவனங்கள் என்றால் அதன் இணைப்புக் கட்டணம் தனி), 10 ஐ போன் மற்றும் 10 ஆன்டிராய்டு கைப்பேசிகளுக்கான கட்டணத் தொகை , இதர இலக்குகளை உளவு பார்க்கும் தொகை, வருடாந்திர பராமரிப்புத் தொகை 17% என மொத்தமும் சேர்த்து 2016- 2021 வரையிலான காலகட்டம் வரை ரூ 56 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும்..

ஆனால், NSO-வைப் போன்று மற்றொரு உளவு நிறுவனமான கேண்டிருவின் (Candiru) 2020ம் ஆண்டின் படி தற்போதைய விலை விவரமும் கிடைத்திருக்கிறது. அதன் தற்போதுள்ள விலை மதிப்பு NSO நிறுவனத்தின் விலையை விட 25 மடங்கு அதிகமாக இருக்கிறது. கேண்டிருவின் இணைப்புக் கட்டணம் மட்டும் 2 கோடியே 80 லட்சம் டாலர். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பின் படி 210 கோடி. இது NSO வின் விலை மதிப்பை விட 60 மடங்கு அதிகம். அப்படியென்றால் NSO வின் சமீபத்திய விலை மதிப்பும் கேண்டிருவின் (Candiru) விலை மதிப்பை ஒத்ததாகவோ அல்லது அதனை விட அதிகமாகவோ தானிருக்க வேண்டும். எனவே கிடைத்துள்ள 2016 ஆவணத்தின் படி 10 ஐ போன் மற்றும் 10 ஆன்டிராய்டு கைப்பேசிகளை உளவு பார்த்த கட்டணம் ரூ 56 கோடி என்றால், கேண்டிருவுடன் தற்போதைய விலை மதிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போதுள்ள விலை மதிப்பில் 1400 கோடி அளவிற்கும் அதிகமாகவே இருக்கும் என்பது “பெகாசஸ் ப்ராஜெக்ட்” செயல்திட்ட ஆய்வாளர்களின் கருத்து.

இணைய தாக்குதல் மூலமாக நடக்கும் வணிகத்தின் மூலமாக இஸ்ரேல் ஆண்டிற்கு 7500 கோடி வருமானம் ஈட்டுகிறது என்று இஸ்ரேலிய ஹாரிட்ஸ் (Haaretz) இதழ் கூறுகிறது. இதில் NSO நிறுவனத்தின் கடந்த ஆண்டின் வருமானம் மட்டுமே 1800 கோடி என்று அந்த இதழ் தெரிவிக்கிறது. இதன் 2013ம் ஆண்டு 225 கோடியாக இதன் வருமானம் இப்போது எட்டு மடங்கு லாபகரமாக உயர்ந்திருக்கிறது.

இவ்வாறு இந்த உளவு நிறுவனத்திற்கும் அரசுக்கும் இடையில் பல நூறு கோடிகளின் புழக்கம் நடைபெற்றிருக்கிறது என்பதை பத்திரிக்கையாளர்களே கண்டறிந்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் ரகசிய ஆவணம் கசிந்ததால் கண்டறியப்பட்ட சிறு துரும்பின் அளவு தான். உண்மையில் எவ்வளவு கோடிகள் கைம்மாறியிருக்கிறது என்பது மோடி அரசுக்கே வெளிச்சம்.

இந்த உளவு பட்டியலில் நீதிபதியின் கைப்பேசி எண்ணும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அரசு சாராத தன்னாட்சி அமைப்புகளான நீதித்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட உயர் பொறுப்பாளர்களை உளவு பார்த்தால், உளவு செயலி மூலம் கண்காணிப்பது தீர்ப்புகளையும், தங்களுக்கு சாதகமான தேர்தல் முடிவுகளை விலை பேசுவதற்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

ஜனநாயகத்தை மெல்லக் கொல்லும் நஞ்சாக மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கு இந்த உளவு செயல்பாடும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

கோவிட் பெருந்தொற்றினால் மக்கள் பசி, பட்டினியால் வாடிய போதும், வேலையின்மையால் அவதிப்பட்ட போதும், புலம்பெயர் தொழிலாளர்கள் பல ஆயிரம் மைல்கள் பசியோடு நடந்து சென்ற அவலங்கள் நிகழ்ந்த போதும், தகுந்த மருத்துவக் கட்டமைப்பு இல்லாமல் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவித்த போதும் சொந்த நாட்டு மக்களுக்கு அவர்களின் வரிப்பணத்திலிருந்து எதுவும் செய்யாமல் கண்டுகொள்ளாமல் கடந்த இந்த அரசின் அலட்சியப் போக்கையும், எதேச்சையதிகாரத்தையும், மோசமான நிர்வாகத்தையும் கேள்வி கேட்ட சமூகப் போராளிகளை, மனித உரிமை செயல்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை உளவு பார்க்கும் இழிவான செயலுக்கு மக்களின் வரிப் பணத்தை வாரி இறைத்திருக்கிறது.

ஒரு அரசு கேட்டுக் கொள்வதற்கிணங்க பணத்திற்காக அரசு கூறும் நபர்களின் தகவல் திருடும் நிறுவனம், ஒரு நாட்டின் ரகசியங்களை இன்னொரு நாட்டிற்கு திருடிக் கொடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதனால் தான் தொழில்நுட்பப் பேரழிவின் வீழ்ச்சியில் இருக்கிறோம் என ஐ.நா அவை கவலைத் தெரிவித்திருக்கிறது. அந்தக் கவலை மக்களிடம் எழ வேண்டும். ஜனநாயம் மீள வேண்டுமென்றால் மக்களே விழிக்க வேண்டும். மக்களின் குரல்களே பாசிச அரசை வீழ்த்தும் கருவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

Translate »