
தமிழர்கள் வழிபடும் முருகனின் மீது இந்துத்துவ சாயத்தைப் பூசும் மாநாட்டை இந்து முன்னணி நடத்தியிருக்கிறது. இந்திய மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இன மக்களும் மரபு வழியில் வழிபடும் தெய்வங்களை கையகப்படுத்தும் பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து அரங்கேற்றப்படுகிறது.
வட மாநிலங்கள் முழுக்க இராமனை முன்னிறுத்தி இசுலாமிய வெறுப்புணர்வை வளர்த்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரக் கும்பல்கள், தமிழ்நாட்டில் மதுரை திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்யத் திட்டமிட்ட போது, அது சனநாயக சக்திகளால் தடுக்கப்பட்டது. நீண்ட நெடுங்காலமாக திருப்பரங்குன்றம் மலையின் மேலிருந்த சிக்கந்தர் தர்காவை வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என்று மதுரையில் தடையை மீறி கூட்டத்தை கூட்டியது. ஆனால் மதுரை மக்கள் அந்த கும்பலின் வெறியூட்டும் பேச்சுக்கு இரையாகவில்லை. அந்த முயற்சி தோல்வி அடையவே, ஆர்.எஸ்.எஸ்-ன் கிளை அமைப்பான இந்து முன்னணி இந்த மாநாடு முயற்சியை எடுத்திருக்கிறது என்பதே மதுரை வாழ் மக்களின் கருத்தாக இருக்கிறது.
இம்மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தும், ‘ஆபரேசன் சிந்தூர்’ நடத்தியதற்காக மோடி அரசை பாராட்டுவது, திராவிட அரசியல்வாதிகளை தோற்கடிக்கும் கோரிக்கை, அறநிலையத் துறைக்கு கண்டிப்பு என பாஜக-வின் தேர்தல் பிரச்சாரம் போல தீர்மானங்களை இயற்றி, பாஜக-வின் ஓட்டரசியலுக்காக இயங்கும் அமைப்புகளென இந்துத்துவ இயக்கங்கள் தங்களை அம்பலப்படுத்திக் கொண்டனர். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க, தமிழர்களின் முருக பக்தியைக் கையில் எடுத்ததை போல் ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பாக கேரளா, ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும், பெரும்பான்மை மக்கள் வழிபடும் கடவுளர்களை கையிலெடுத்துள்ளனர்.

அந்த வகையில் கேரளாவின் பெரும்பான்மையினர் வழிபடும் கடவுளான ஐயப்பனை முன்வைத்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தினர். சபரிமலையில் 10 – 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதியில்லை என்பது, இந்திய அரசியல் அமைப்பிற்கு ஏற்புடையதல்ல என உச்சநீதிமன்றம் 2018-ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு ஆணாதிக்கம் ஊறிப் போன இந்துத்துவவாதிகளுக்கு, இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளாவுக்கு எதிராக அரசியல் செய்ய ஏதுவாக அமைந்தது. ஐயப்பனை வழிபட சபரிமலைக்கு பெண்கள் வருவதைத் தடுக்க ஐயப்ப பக்தர்கள் போல வேடமிட்டுக் கொண்டு வன்முறைகளை கட்டவிழ்த்தனர். பம்பா மற்றும் நிலக்கல் பகுதிகளில் பெண் செய்தியாளர்கள் முதற்கொண்டு அனைவரையும் தாக்கினர். தென்பகுதியின் அயோத்தியாக சபரிமலைப் பிரச்சனையை மாற்ற முனைந்தனர். பாஜகவின் வளர்ச்சிக்கு ஐயப்பனைக் கொண்டு நடத்திய அரசியல் அங்கு எடுபடவில்லை என்றாலும், கேரளாவில் முதன்முறையாக பாஜக ஒரு மக்களவைத் தொகுதியை பிடித்திருக்கிறது. நடிகர் சுரேஷ் கோபி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில், ஐயப்பனை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகளின் நடத்திய அரசியல் பெரும் காரணமாக அமைந்தது.
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் முருகன், கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கடவுளர்களின் புனிதத்தை கைக்கொண்ட ஆர்.எஸ்.எஸ், பிஜேபியினர், ஆந்திராவில் திருப்பதி பெருமாள் கோவிலின் புனிதத்தை வைத்து அரசியல் செய்ய லட்டு பிரச்சனையை கையில் எடுத்தது. ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தியதாக சந்திரபாபு நாயுடு பிரச்சனை எழுப்பினார். இந்துத்துவவாதியான பவன் கல்யாண் திருப்பதியின் புனிதம் கெட்டுவிட்டதாக விரதம், பாதயாத்திரை என இந்தப் பிரச்சனையை பெரிதாக்கினார். மாட்டுக் கொழுப்பு பயன்படுத்தப்படவில்லை என விளக்கம் அளித்தும், அதை ஏற்றுக் கொள்ளாமல் இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தி விட்டதாக மக்களின் உணர்ச்சியைத் தண்டும் பரப்புரையை பாஜக, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகள் செய்தன. உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்தப் பிரச்சனை சிறப்பு விசாரணைக் குழுவை நியமிக்க ஆணையிட்டதும் தான் அடங்கியது.

அதைப் போல ஒடிசாவில் பூரி ஜெகன்னாதரை வைத்து அரசியல் செய்தார்கள். கடந்த வருட ஒடிசா சட்டமன்றத் தேர்தலின் போது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒடிசாவில் பணியாற்றிய தமிழரான பாண்டியனை, ’பூரி ஜெகன்னாதர் கோவிலின் சாவியைத் திருடி தமிழ்நாட்டிற்கு கொடுத்து விட்டார்’ என மோடி இகழ்ந்துப் பேசினார். ஒடிசாவை தமிழர்கள் ஆள்வதா என அம்மக்களின் இனவாத உணர்ச்சியைத் தூண்டினர். பூரி ஜெகன்னாதரை மையமாகக் கொண்டு தமிழர்கள் மீது மோசமானப் பரப்புரைகளைக் கட்டியமைத்தனர். வாழை இலையில் அவர் சாப்பிடுவது போல, அதில் பழைய சோறை ஊற்றுவது போலவும் கேலிச்சித்திரக் காணொளிகளைப் பரப்பினர். தமிழர்களைப் படுமோசமாகப் பேசிய அமித்சாவும், பாஜகவினரும் இங்கு வந்து தமிழர்களின் மேல், தமிழின் மேல் பெரும்பற்று கொண்டவர்கள் போல பேசினார்கள். எப்போதும் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும் மோடியே, உத்திரப் பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் இழுபறி நிலையில் வெற்றி பெற்றதால், ஜெய் ஸ்ரீ ஜெகன்னாதர் என்று பேசியதும் குறிப்பிடத்தக்கது. கடவுளர்களிலும் பிரிவினை பார்ப்பவர்களே இந்துத்துவவாதிகள் என்பது மோடி மூலமே உறுதியானது.
மணிப்பூரில் தங்களின் பழமையான சனாமகி வழிபாட்டை மீளக் கட்டமைப்பதற்கென துவங்கியதாகக் கூறி, மணிப்பூர் பற்றி எரியக் காரணமான அரம்பை தெங்கோல், மெய்தி லீபின் என்ற இரண்டு இனவாத அமைப்புகளுமே ஆர்.எஸ்.எஸ்-சின் கிளை அமைப்புகளே. வெளிப்படையாக அறிவித்தும், மறைமுகமாக செயல்பட்டும் வரும் அமைப்புகளில் இவ்விரண்டு அமைப்புகளும் ஆர்.எஸ்.எஸ் – சின் மறைமுக அமைப்புகளே என்பதனை அம்மாநிலத்தின் மனித உரிமை செயல்பாட்டாளர்களே கூறினர். இனவெறி அமைப்புகளான அரம்பை தெங்கோல், மெய்தி லீபுன் அமைப்புகளின் கருத்துக்களே மணிப்பூர் மெய்தி மக்களிடம் திணிக்கப்படுவதாகவும், அது ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கைகளுக்கு இணையானதாக செயல்படுகிறது என்றும் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான பப்லு லொய்டங்பம் என்பவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, ஒவ்வொரு மாநிலங்களிலும் கடவுளர்களையும், அவர்களின் புனிதங்களை நிலைநாட்ட அவதரித்திருப்பவர்கள் போலவும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. மாநிலக் கட்சிகளை அழித்து விட்டு பாஜகவின் ஆட்சியை அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரும் துருப்புச் சீட்டாகவே கடவுள்களைப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினரே, உண்மையில் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
மலைவாழ் மக்களின் அரசனான, முன்னோர் வழிபாட்டு மரபுப்படி வணங்கப்படக் கூடிய தமிழர் தெய்வமான முருகனை புனைவுக் கதைகளாலும், சடங்கு, சம்பிரதாயங்களாலும் புனிதங்களைப் பூசி அந்நியப்படுத்தியது போலவே, மாலா அரையர் என்னும் பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்த ஐயப்பனுக்கு பிரம்மச்சர்யம், விரதம் என்னும் சடங்குகளைக் கற்பித்து புனிதமாக்கியது பார்ப்பனியம். கர்நாடகாவின் நாட்டுப்புறத் தெய்வங்களை இதே வழியில் பார்ப்பனிய மயப்படுத்தியது. ஒவ்வொரு இனக்குழு சமூகமும் வணங்கிய தெய்வங்களை நிறுவனப்படுத்தி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டது பார்ப்பனீயம். அதன் கீழ் சேவைப் படைகளாக இந்துத்துவ அடிமைக் கூட்டமாக ஆர்.எஸ்.எஸ் – சின் கிளை அமைப்புகள் செயல்படுகின்றன. கடவுளர்களை புனிதத்திற்கு கேடு ஏற்படுத்துவதாக மாற்று மதத்தவர் மீது வெறுப்புணர்வைப் பரப்ப சாமானிய பக்தர்களைத் தூண்டி விடுகிறது இக்கூட்டம்.

இந்துக்களுக்கு, இந்துக் கடவுளர்களுக்கு ஆபத்து என்று கூறி, பாஜகவின் ஓட்டரசியலுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் கிளை அமைப்புகளில் ஒன்றே இந்து முன்னணி. தமிழகத்தில் இந்த அமைப்பைத் துவங்கியவர் பார்ப்பனரான ராமகோபாலன். சில நூறு பேர் கொண்ட இந்த அமைப்பு, பிள்ளையார் சதுர்த்தி தோறும் கட்டாய வசூல் செய்தல், இசுலாமிய வெறுப்புணர்வை வளர்ப்பது, கடவுளை வைத்து பிரச்சனைகள் உருவாக்குவது என்று பல நாசகார வேலைத் திட்டங்களை கொண்டிருக்கிறது. இந்த அமைப்பே பாஜக-வின் அரசியல் ஆதாயத்திற்காக முருகனைக் கையிலெடுத்து, மதுரையில் முருக மாநாடு நடத்தியுள்ளது.
தமிழ்ப்பற்று, இந்தி எதிர்ப்பு, மாநில உரிமை எனத் தொடர்ந்து தமிழ்நாடு சுயமரியாதையுடன் இயங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணமான பெரியாரை முன்னிறுத்தி, தமிழ்நாட்டை பெரியார் மண் என அழைக்கிறோம். ஆனால் மதக் கலவரம், இசுலாமிய வெறுப்பு, பன்மைத்துவ எதிர்ப்பு போன்றவற்றில் முழு மூச்சுடன் இயங்கும் இந்துத்துவக் கூட்டம் தமிழ்நாட்டை கலவர மண்ணாக்க வேண்டும் என்று தொடர்ந்து வேலை செய்கிறது.
“மதம் அரசியலுக்குள் நுழைந்தால், சனநாயகம் பழங்கால மத நம்பிக்கைகளால் பாதிக்கப்படும்” என்கிறார் அம்பேத்கர்.
மதம் என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. சனநாயக அரசியல் என்பது பொது நலத்திற்கானது. இவை இரண்டையும் கலந்து செயல்படுவது நாடு, மக்கள், மற்றும் சனநாயகத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது.
மனிதர்களை பிளவுபடுத்தும் அரசியலை எதிர்த்தே வந்த தமிழ் மரபின் தொடர்ச்சியாக, இன்று நாம் இந்த ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பலின் மதவாத அரசியலை விரட்ட அணிதிரள்வோம்.