
இஸ்ரேல்-ஈரான் போரினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக மக்களை சிக்கனமாக இருக்கக் கூறியிருக்கிறார் மோடி. மக்களுக்கு மட்டும் சிக்கனத்தை வலியுறுத்திய மோடி, அதானி அம்பானி போன்ற பெரிய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. மாறாக, இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மக்களிடம் இருந்து இன்னும் அதிகமாக சுரண்டவும் தயங்கவில்லை.
இந்திய ரூபாயின் மதிப்பு 1டாலருக்கு 96ரூ எனும் அளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது, பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதாவது கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 8 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இவற்றின் விலை உயர்வினால் மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. (தற்போது உரங்களின் விலை ரூ. 400 முதல் ரூ.550 வரை உயர்ந்துள்ளது. அதாவது பொட்டாசியம் உரம் ரூ. 1850-லிரிந்து ரூ.2250 வரையும், காம்பிலக்ஸ் உரம் ரூ.1550-லிருந்து ரூ. 2100 வரை அதிகரித்துள்ளது). மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்நிலையில்தான், மோடி, மக்களிடம், தங்கம் வாங்க வேண்டாம், பெட்ரோல் டீசல் வாகனங்களை பயன்படுத்தாமல் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும், பள்ளி, அலுவலகங்கள் இணையவழி (Online) முறையில் நடத்த வேண்டும், விவசாயத்திற்கு உரத்தின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் போன்ற பல சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தியிருக்கிறார். சர்வதேச எரிபொருள் உயர்வு, போர், கொரோனாப் பேரிடர் போன்றவற்றால் கடந்த 10 ஆண்டுகளாகவே ‘பொருளாதார பேரிடர் தசாப்தம்’ உருவாகி விட்டதாக பேசியிருந்தார்.

மக்களிடம் இவ்வளவு கோரிக்கைகளை முன்வைத்த மோடி, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-லிருந்தே இந்தியாவின் அந்நியச் செலாவணி வெளியேறும் இரண்டு முக்கியப் பிரச்சனைகளை கண்டு கொள்ளவே இல்லை.
- வெளிநாடுகளுக்கு இந்திய முதலாளிகள் முதலீடுகளைக் கொண்டு செல்வது.
- வெளிநாட்டு முதலாளிகள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளின் லாபத்தை வெளிநாட்டுக்கே கொண்டு செல்வது.
இங்கு அந்நிய முதலாளிகள் அரசின் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு லாபத்தை தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்று விடுகின்றனர். மீண்டும் அவர்கள் இங்கு மறுமுதலீடு செய்யும் நிகர முதலீடு என்பது மிகவும் குறைவானதாக இருக்கிறது. அதே சமயம் இந்திய வங்கிகளிடம் பல கோடிகள் கடன் வாங்கி இங்குள்ள முதலாளிகள் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று முதலீடு செய்கின்றனர். Tata, Reliance, Sun Pharma, L&T, Lupin Pharma, jsw steel, Adani Enterprises போன்ற பல இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் தொழில் தொடங்குவதற்கு இங்கிருக்கும் பணத்தை முதலீடு செய்ய கொண்டு போய் விடுகிறார்கள்
அந்திய முதலாளிகள் எடுத்துச் சென்ற லாபம்:

இந்திய முதலாளிகள் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்ற மூலதனம்:

இந்த ஆண்டில் 2025-26-ல் மட்டும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 5358 கோடி டாலரை (5.14 லட்சம் கோடி) லாபமாக இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றுவிட்டனர். அதே சமயம் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்த தொகை 3330 கோடி டாலர் (3.20 லட்சம் கோடி) இப்படி இருபக்கமும் அந்நியச் செலாவணியாக வெளியேறுவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது. இதன் வீழ்ச்சி மக்களையே அதிகம் பாதிக்கிறது.
நாம் இறக்குமதியை மட்டுமே அதிகம் சார்ந்திருப்பதும் ரூபாயின் மதிப்பு வீழ்வதற்குக் காரணமாகிறது.

2013-14-ல் நாம் ஏற்றுமதி செய்த பொருட்களுக்கும், இறக்குமதி செய்த பொருட்களுக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 140 பில்லியன் டாலராக (ரூ13.44 லட்சம் கோடி) இருந்தது. ஆனால் 2024-25-ல் அந்த வித்தியாசம் சுமார் 300 பில்லியன் டாலராக (ரூ28.8 லட்சம் கோடி) உயர்ந்துவிட்டது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகிவிட்டதால், நமக்கு 160 பில்லியன் டாலர் (ரூ15.36 லட்சம் கோடி) அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. நாம் அதிகமாக இறக்குமதி செய்யும்போது டாலரில் தான் பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், நம்மிடம் இருக்கும் அந்நியச் செலாவணி அதிகமாக வெளியேறுகிறது.
டாலரின் வெளியேற்றம் அதிகமானதால் ரூபாயின் மதிப்பு வீழ்கிறது.

இந்தியாவின் பொருளாதாரம் இந்திய மற்றும் அந்நிய பெரு நிறுவனங்களால் சரிந்த போதிலும், அதைத் தாங்கிப் பிடிப்பவையாக சிறு குறு நிறுவனங்கள்தான் இருக்கின்றன. இந்திய வர்த்தகத்தில் 30% பங்கு இவர்களுடையது. சுமார் 12 கோடி பேருக்கு இவர்கள்தான் வேலை கொடுக்கிறார்கள். இந்தியா அந்நிய முதலாளிகளின் லாபங்கள் டாலராக வெளியேறும் போது, சிறு குறு நிறுவனங்களின் வர்த்தகம் உள்ளூர் சந்தையிலே இந்திய ரூபாயின் மதிப்பிலேயே சுழலுகின்றன. இதனால் ரூபாயின் தேவை அதிகமாகி அதன் மதிப்பை தாங்கிப் பிடிக்க உதவும்.
ஆனால் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பல சிறு நிறுவனங்கள் தாங்க முடியாமல் மூடப்பட்டன. இந்நிறுவனங்கள் மீது திணிக்கப்பட்ட ஜி.எஸ்.டி கணக்கு முறை மிகவும் சிக்கலானது. அதனால் சிறு வியாபாரிகள் எல்லாவற்றுக்கும் பட்டயக் கணக்கரை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றாட கணக்கில் ஏற்படும் சிறிய தவறுக்குக் கூட அபராதம் விதிக்கப்படும் சூழலில், அவர்களை மேலும் நெருக்கடியில் தள்ளுகிறது. இதனால் பலர் தொழிலை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது. மீதமிருக்கும் சிறு குறு நிறுவனங்களும் கடின சூழலே எதிர்கொண்டே தாக்குப் பிடிப்பதால் உள்ளூர் சந்தையில் சுழலும் ரூபாய் பெரு நிறுவனங்கள் வெளியில் அனுப்பும் டாலருக்கு ஈடான நிலையில் இல்லை.

இது மட்டுமல்ல, ஏற்றுமதி இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவுகளும் ரூபாய் மதிப்பு வீழக் காரணமாகிறது. நாம் வெளிநாட்டிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெய், தங்கம், மின்னணுப் பொருட்கள், மருந்துகள், மூலப்பொருட்கள், கனிமங்கள் போன்றவை எல்லாம் டாலரில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.
அதனால் ரூபாயின் மதிப்பு குறையும்போது இந்தப் பொருட்களின் விலை நமக்கு அதிகமாகிறது.
உதாரணமாக, ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 80 டாலர் என்றால், ஒரு டாலருக்கு 85 ரூபாய் எனும்போது அதற்கு நாம் 6,800 ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் ரூபாயின் மதிப்பு 96 ரூபாயாகக் குறையும்போது, அதே 80 டாலருக்கு 7,680 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். இதனால் ரூபாயின் மதிப்பு வீழும்போது பெட்ரோல், டீசல் விலையை அரசு கூட்டி விடுகிறது.
ஆனால் பெட்ரோல், டீசல் விலை என்பது வெறும் கச்சா எண்ணெய் விலையை மட்டும் பொருத்தது அல்ல. வெளியிலிருந்து கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைத்த போதும் கூட, மொத்த விலையில் 55% வரை வரிகளாக சுமத்தப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறு சுமத்தப்பட்ட வரிகளால் மட்டும் அரசுக்கு கிடைத்த தொகை சுமார் 2.75 லட்சம் கோடி ரூபாய். போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும் கூட, அரசு வரிகளை குறைத்திருந்தாலோ அல்லது நிறுவனங்களின் கடந்த லாபத்தில் இருந்து சிறிது ஈடு செய்திருந்தாலோ, மக்கள் மீது விலை உயர்வை சுமத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
இப்படியாக மோடி அரசின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்ட இழப்புக்கு மக்கள்தான் தண்டனை அனுபவிக்கிறார்கள். இந்திய முதலாளிகள் வெளிநாட்டில் லாபம் சம்பாதிக்கிறார்கள். அந்நிய முதலாளிகள் இந்தியாவிலிருந்து லாபத்தை சுரண்டி எடுத்துச் செல்கிறார்கள். மேலும், பெரு நிறுவனங்கள் வங்கியில் வாங்கிய கடன் வாராக்கடனாக மாறி தள்ளுபடி செய்யப்படுகிறது. பெரு நிறுவனங்களுக்கு மட்டும் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெரு நிறுவனங்களுக்கு செய்யப்படும் இவ்வளவு சலுகைக்கும் மக்களிடம் வரி பிடுங்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்றால் கூட வருமையிலிருந்து மீள முடியாத நிலையே இந்தியக் குடும்பங்களின் நிலையாக இருக்கிறது. அன்றாட தேவைகளுக்கும், அடிப்படைத் தேவைகளுக்கே செலவு செய்ய முடியாமல் சிக்கனமாக வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களே கிட்டத்தட்ட 30 கோடி குடும்பங்கள். சுமார் 120 கோடி பேர். நடுத்தர குடும்பம் என்றால் 50 லட்சம் குடும்பங்கள் தான்.. சுமார் 2 கோடி பேர். ஓரளவு தேவையைப் பூர்த்தி செய்து சேமிப்புடன் வாழும் குடும்பங்கள் 8 கோடி. சுமார் 35 லட்சம் கோடி பேர்.. பல நூறு கோடி சொத்து மதிப்புக்கு மேல் வசதியாக வாழ்பவர்கள் ஒரு லட்சம் பேருக்குள் தான்.. இந்தப் பிரிவுக்கான பொருளாதாரக் கொள்கையைத்தான் மோடி அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஈட்டும் லாபத்திற்காகவே 150 கோடி மக்களும் பெட்ரோல், டீசல், விலை உயர்வையும், வரி விதிப்பையும் தாங்க வேண்டி இருக்கிறது.
எனவே மோடி சொல்லும் ‘இந்த பொருளாதார பேரிடர் தசாப்தம்’ என்பது முழுக்க முழுக்க அவர்களின் மோசமான ஆட்சி முறையால் ஏற்பட்டதே ஒழிய, போர் மட்டும் காரணமல்ல என்பதே உறுதியான ஒன்றாகும்.