இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் முந்தைய எழுத்து “தமிழி” என்றும், தமிழர்களின் தொன்மை நாகரிகத்தின் காலகட்டம் முன்னோக்கி செல்கிறது என்பதையும் உலகிற்கு பறைசாற்றிய, கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறது பாஜக அரசு. ஆனால் இதனை மறுபரிசீலனை செய்ய ஒரு ஆய்வுக்குழுவை டில்லியில் இருந்து அனுப்ப இருப்பதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. பாஜகவிற்கு சாதகமான அறிக்கையை தயார் செய்வதற்காக இந்த ஆய்வுக் குழுவை அனுப்புகிறார்களா என்னும் சந்தேகம் தமிழர்களிடையே வலுத்துள்ளது.
பாஜகவின் தொடர்ச்சியான சதிகளை தமிழர்கள் முறியடிக்க வேண்டிய காலகட்டத்தை உணர்ந்து மே 17 இயக்கம் கீழடிக்கு நடக்கும் அநீதி குறித்தும், கீழடியின் சிறப்பம்சங்கள், நமது கடமைகள் ஆகியன குறித்தும் ஆய்வறிஞர்கள், அரசியல் ஆளுமைகள் பங்கேற்ற ‘கீழடி பாதுகாப்பு’ கருத்தரங்கை ஜூலை 5, 2026 அன்று மதுரையில் நடத்தியது.
இக்கருத்தரங்கை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கொண்டல்சாமி அவர்கள் தொகுத்து வழங்கினார். மே 17 இயக்கத் தோழர் நாகராச் தலைமை தாங்கினார். தோழர் லேனா ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.
தொல்லியல் துறை ஆய்வாளர் – மேனாள் உதவி இயக்குநர் திருமிகு சொ. சாந்தலிங்கம், மாநிலக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் மாரப்பன், மேனாள் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோழர் பூமிநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் தோழர் தமிழ் வேந்தன் (எ) வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
மக்கள் விடுதலை கட்சியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் – தலைவர் தோழர் சு.கா. முருகவேல்ராசன், ஆதித்தமிழர் கட்சியின் தோழர் வசந்தன், எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்டத் தலைவர், தோழர் அ. பிலால்தீன், எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் ஜி.எஸ்.சீமான் சிக்கந்தர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் தமிழ்ப்பித்தன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பேரறிவாளன், தமிழ் தமிழர் இயக்கத்தின் தோழர் பரிதி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
சிறப்புரை ஆற்றிய தொல்லியல் ஆய்வாளர், முனைவர் மாரப்பன் அவர்களின் உரை:
“கீழடி இறுதி அறிக்கையை எழுதும் பணியை 2021 ஜூன் மாதம் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 18 மாதங்கள் அந்த அறிக்கையை எழுதினார்கள். அந்த அறிக்கையை எழுதும்போது கூடவே ஐயா. அமர்நாத் ராமகிருஷ்ணனோடு நானும் இருந்தேன். அவர் எனக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்தார். நிறைய விவாதித்தோம், நிறைய பேசினோம். நிறைய புத்தகங்களைப் படித்தோம். பல அறிஞர்களின் புத்தகங்களை எல்லாம் படித்து அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தோம். உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த அறிக்கையைத்தான் உருவாக்கினோம். இந்த நிலையில் 2023 ஜனவரி மாதம் அந்த அறிக்கையை அரசாங்கத்திற்கு தாக்கல் செய்தோம். ASI – Archaeological Survey of India-க்கு சென்று தாக்கல் செய்தோம். ஆனால் அந்த 18 மாதத்தில் ஒவ்வொரு 15 நாளைக்கும் Zoom Meeting போட்டு “என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்ன பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம் கொடுங்க, விரைவில் கொடுங்க” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.
இன்றைக்கு மிக முக்கிய காரணங்களாக கூறப்படுவது இரண்டு. ஒன்று காலத்தை மறைப்பது. இரண்டாவது தமிழினுடைய தொன்மையை ஏற்றுக்கொள்ளாதது. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில்தான் அவர்கள் (Director of General of ASI) ஆரம்பத்தில் மறுத்தார்கள்.
ஏற்கனவே Zoom Meeting போட்டு பேசி ஒப்புதல் பெற்றுதான் அதை எழுதினார்கள். எழுதிய அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அதற்குப் பிறகு அந்த அறிக்கை அவர்களுக்கு பிடிக்காமல் போனது. அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவே மறுத்தார்கள்.
அதை மறுப்பதற்காக, அந்த அறிக்கையை இரண்டு பேரிடம் கொடுத்தார்கள். அவர்கள் யார் என்றால், அயோத்தியை அகழாய்வு செய்து அறிக்கையை கொடுத்தவர், இன்றைக்கு அந்த அயோத்தி கோயில் கட்டுவதற்கு காரணமாக இருந்த ஒருவர், இன்னொருவர் என இரண்டு பேரிடம் விமர்சனத்திற்காக கொடுத்தார்கள். அவர்கள் இரண்டு விடயங்களை சொன்னார்கள்.
ஒன்று “காலம் சரியில்லை, நீங்கள் காலத்தை மாற்றுங்கள்” என்றார்கள். அவர்(அமர்நாத் ராமகிருஷ்ணன்) காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டு என்று கூறினார். ஆனால் அவர்களோ “கி.மு. 8-ஆம் நூற்றாண்டில் இருந்து கி.மு. 5-ஆம் நூற்றாண்டாக மாற்றுங்கள்” என்று கூறினார்.
தமிழினுடைய தொன்மையைப் பற்றி தெரிந்தவர்கள் நாம். இந்த கூட்டத்தில் பலர் மதுரையை சார்ந்தவர்கள். உங்களுக்கு நிறைய தமிழ் எழுத்துக்களை பற்றித் தெரியும். தமிழின் ஆரம்ப எழுத்துக்கள் தோன்றிய இடமே தமிழ்நாடுதான். இந்தியாவில் எழுத்துக்கள் தோன்றிய இடமே இந்தியாதான். இன்றைக்கு Genetic Engineers ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். அந்த ஆய்வுகளை செய்யும் போது, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த மனிதன் 75,000 வருடத்திற்கு முன்பு ஒரு இடப்பெயர்வும், 60,000 வருடத்திற்கு இன்னொரு இடப்பெயர்வும், 45,000 வருடத்திற்கு முன்னால் இன்னொரு இடப்பெயர்வும், 30,000 வருடத்திற்கு முன்னால் ஒரு இடப்பெயர்வும், அதற்குப் பின்னால் 7,500, முதல் 3,500 வருடங்களுக்கு முன்னால் ஒரு இடப்பெயர்வும் இருந்ததாக DNA மூலமாக தெரிவித்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 11 லட்சம் பேரிடம் இரத்த மாதிரியை எடுத்து அந்த ஆய்வை ”Spencer Wells என்பவரும், டாக்டர் பிச்சப்பன்” அவர்களும் செய்தார்கள். அதில் தமிழ்நாட்டில் 5% இரத்தத்தில், 60,000 வருடத்திற்கு முன்னால் வந்த அந்த இனத்தின் இடப்பெயர்வை செய்த மனித இனத்தின் இரத்தம் மதுரையில் இருக்கிறது என்று சொன்னார்கள். இந்த சூழ்நிலையில் இங்கே இருக்கிற தட்பவெப்பம், இங்கே இருக்கிற நில அமைப்பு, எல்லா வகையிலும் இங்குதான் மொழி உருவாகியது, மனிதன் அந்த மொழியை உருவாக்கினான், அதேபோல எழுத்துக்களையும் உருவாக்கினான் என்பதற்கான ஆதாரங்கள் இங்கே கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் சொல்ல மறந்த ஒரு விடயம் என்னவென்றால், அவர்கள் தமிழனுடைய காலத்தையும் கண்டுபிடித்துவிட்டு, தமிழனுடைய எழுத்துக்கள் எந்த காலம் என்று சொல்லிவிட்டால், அடுத்த கேள்வியை தமிழ்நாட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். இந்த அறிக்கை வெளியே வராமல் இருக்க மிக முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரே ஒரு காரணம். அது கடவுள். ஏனெனில் “கடவுள் இருக்கிறார்” என்று அந்த அறிக்கையில் சொல்லியிருந்தால், இது எப்போதோ வெளியே வந்திருக்கும்.
மேலும் அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் மற்றொரு ஆய்வையும் மேற்கொண்டார். அதுவும் வெளிவரவில்லை. 2023-க்குப் பிறகு அறிக்கை எழுதி முடித்த பின்னர், “The lesson of Important Temple Architecture” என்ற தலைப்பில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் கடவுள் முதன்முதலாக எப்போது தோன்றினார்? என்பது குறித்த ஆய்வின் அடிப்படையில், எந்த இடத்தில் முதன்முதலாகக் கடவுள் வழிபாடு தோன்றியது? ஓர் உருவநிலையில் இருந்து கடவுள் எவ்வாறு பரிணாமம் அடைந்தார் என்பதை நாங்கள் ஆய்வு செய்து வந்தோம். அந்த ஆய்வினை இரண்டு ஆண்டுகள் மட்டுமே செய்ய அனுமதித்தனர். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆய்வு ஓரளவு முன்னேறி இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், அதனைப் பற்றி கவலைக் கொள்ளாமல் அப்படியே அவரை பணியிட மாற்றம் வழங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தனர்.
ஏனெனில் அனைத்து மதங்களிலும், அனைத்து நாடுகளிலும் கடவுளின் வரலாறு எழுதப்பட்டுள்ளது. கடவுளுக்கான சிலை எப்போது தோன்றியது, கடவுளை எப்போது வழிபடத் தொடங்கினர், கடவுள் எந்த மதத்தில், எந்தக் காலத்தில் தோன்றினார் என்பதையெல்லாம் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் அதற்கான காலத்தை அவர்கள் நிர்ணயிக்கவில்லை. அந்தக் காலத்தை நிர்ணயிக்காமல் இருப்பதே ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இன்றுவரை வாழ்வாதாரமாக இருக்கிறது. அவர்கள் மக்கள் கூட்டத்தை அடக்கி ஆள்வதற்காகவே இது செய்யப்படுகிறது.
“கடவுளின் தோற்றம்” குறித்த வரலாற்றை எழுத நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், அது குறித்த கண்டுபிடிப்புகள் வெளிவரும்போதெல்லாம் அவற்றை அடித்து நொறுக்கும் வேலையைச் செய்கிறார்கள். இந்த அடிப்படையில்தான், கீழடி அறிக்கை வெளிவராமல் இருப்பதற்கான காரணம் ’கடவுள்’ பற்றிய வார்த்தை அந்த அறிக்கையில் இல்லாமல் அமைந்தது தான் என்பது என் கருத்து.
அடுத்து என்ன நடந்தது என்றால், அந்த அறிக்கை தொடர்பாக முதன்முதலில் அயோத்தியைச் சேர்ந்தவர்கள் இரண்டு கேள்விகளை எழுப்பி அனுப்பினர். அதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் 23.05.2026 அன்று, “நான் திருத்த மாட்டேன்”, ”எனது ஆய்வின் முடிவை நான் மாற்றித் தர மாட்டேன்” என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.
03.02.2026 அன்று அதற்கான அறிக்கையையும், 08.09.2025 அன்று 114 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதாவது ஒவ்வொரு அத்தியாயத்தையும் எடுத்து, அதில் கேள்விகளை எழுப்பி, அந்த 114 பக்க அறிக்கைக்கும் “Critical Evaluation and Recommendation – Keeladi Report” என்று தலைப்பிட்டு அனுப்பினர். அந்த அறிக்கையில் Priyan Gupta என்ற உதவி தொல்லியல் அலுவலர், Karishma Kaushik என்ற உதவி கண்காணிப்பு தொல்லியல் அலுவலர், Aravazhi என்ற துணை கண்காணிப்பு தொல்லியல் அலுவலர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று பெயர்களும் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் (அதாவது வட நாட்டு பெயர்களாகவே உள்ளது). இந்த நபர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு உள்ளது. அதனை நான் இறுதியில் கூறுகிறேன். அதேபோல் Himanshu K. Nayak என்ற இயக்குநர், Nandini Bhattacharya என்ற இணை இயக்குநர் ஜெனரல் ஆகியோரும் இணைந்து இந்த “Critical Evaluation” எனப்படும் பகுப்பாய்வை மேற்கொண்டனர்.
பகுப்பாய்வு என்றால் என்ன? உதாரணத்திற்கு MA, MSc, MBBS, BE படித்த மாணவர்கள் தேர்வு எழுதினால், அதனை Ph.D படித்த பேராசிரியர்கள்தான் திருத்த வேண்டும்.
ஆனால் இந்த கீழடி அறிக்கைப் பகுப்பாய்வைச் செய்த குழுவில் இருந்தவர்கள் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் போன்றவர்கள். ஏனெனில் இவர்கள் யாரும் அகழாய்வு செய்ததே இல்லை. அகழாய்வே செய்யாதவர்கள், அகழாய்வு குறித்த பகுப்பாய்வை எப்படிச் செய்ய முடியும்? அகழாய்வின் குறைகளைச் சொன்னால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பகுப்பாய்வை இவர்களைக் கொண்டே செய்ய வைத்துள்ளனர். அதனால்தான் “MSc படித்தவரின் விடைத்தாளை 10-ஆம் வகுப்பு மாணவரைக் கொண்டு திருத்த வைக்கிறீர்களே” என்று நாங்கள் கருத்துத் தெரிவித்தோம்.
அதன்பிறகு அந்த 114 பக்க அறிக்கையில் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், முதலிலேயே “நீங்கள் ஏன் ’தமிழ்நாடு’ என்று குறிப்பிடுகிறீர்கள்? ’தமிழகம்’ என்று குறிப்பிடுங்கள்” என்று கூறுகின்றனர். இதனை 08.09.2025 அன்று தெரிவித்துள்ளனர். இன்று தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்கிறதா, தமிழகமாக இருக்கிறதா? என்பது உங்களுக்குத் தெரியும். அதன் பின்னணியை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
மேலும் அவர்கள் கூறுவது: “நீங்கள் அந்த அறிக்கையில் ’ஒரு நகர நாகரிகம்’ என்று குறிப்பிடுகிறீர்கள். வட இந்தியாவில் ’மௌரிய நாகரிகம்’ இரண்டாவது நகர்ப்புற நாகரிகம். முதலாவது ’சிந்து சமவெளி நாகரிகம்’. அதனால் இந்த கீழடி நகர நாகரீகம் என்பது இந்த நாகரீகத்திக்கெல்லாம் முந்தையாக இருப்பதால், இதனை மெளரிய நாகரீகத்துடன் தொடர்புபடுத்துங்கள் என்றார்கள்.
நகர்ப்புற நாகரிகம் என்பது, முதன்முதலில் மன்னர் ஒரு நகரத்தை ஆட்சி செய்து, அங்கு அரசியல் நடைபெற்றது என்பதைக் குறிக்கும். இது மௌரிய ஆட்சி முறையிலிருந்து வருகிறது. ஆனால் கீழடி நாகரிகத்தின் காலம், மௌரிய நாகரிகத்திற்கு முன்னோடியாக உள்ளது என்று கூறுகிறது.
இதுவரை எழுதி வந்த வரலாற்றின்படி, மௌரிய நாகரிகத்தில்தான் சாணக்கியர் அரசியலை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. கீழடி வந்தால் அந்த வரலாறே உடைந்துவிடும். அதனால்தான் ’கீழடி’ இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
கீழடியில் அடுத்த கட்டமாக எந்த மன்னர் ஆட்சி செய்தார், இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டியது யார் என்பதை அடுத்த ஆய்வுகள் மூலம் கண்டறிய வேண்டும். அதற்கு முன்பாகவே வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்வதற்கு முன்பே இதனைத் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
மேலும், கீழடி ஆய்வு என்பது: ”இந்தியா முழுவதும் நாங்கள்(பாஜக) உருவாக்கும் ஒரே இந்தியா என்ற கருத்துக்கு ஏற்றதாக இல்லை. தெற்காசியா முழுவதற்கும் எழுதப்படும் வரலாற்றுக்கும் இது பொருந்தாது” என்று கூறுகின்றனர்.
தெற்காசியா முழுவதும் என்றால், அது அகண்ட பாரதம். ’அகண்ட பாரதம்’ என்ற கட்டமைப்பிற்கான வரலாற்றை நாங்கள்(ASI) எழுதவிருக்கிறோம். ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் வரலாற்றை எழுதுகிறீர்கள். “இதுதான்(கீழடி) முன்னதாக வந்தது, இதுதான் சிறந்தது” என்று ஏன் கூறுகிறீர்கள்? எனவே அதனுடன்(மெளரியத்துடன்) தொடர்புபடுத்துங்கள் என்கிறார்கள்.
தெற்காசிய வரலாற்றுக்கும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், அகண்ட பாரத வரலாற்றுக்கும், “ஒரே இந்தியா” என்ற கோட்பாட்டிற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். அதேபோல், இதுவரை நாங்கள் கண்டறிந்துள்ள தொல்பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் அனைத்தையும் கீழடி சிதைத்துவிடும் என்றும் கூறுகின்றனர்.
ஆரிய நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இந்திய வரலாறு இதுவரை எழுதப்பட்டு வருகிறது. தற்போது நீங்கள் தமிழ்நாட்டை மட்டும் மையமாக வைத்து கீழடியை முன்னிறுத்தி, இந்த அறிக்கையை வெளியிட்டால், இந்திய வரலாறு எழுதப்படும் போது நாங்கள் கட்டி வைத்திருக்கும் அந்தக் கோட்டை தகர்ந்து விடும் என்கிறார்கள்.
இப்போது “பான் இந்தியா” அதாவது ஒருங்கிணைந்த இந்தியா என்ற கருத்தின் அடிப்படையில் ஒரு வரலாற்றைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோம். கீழடி கண்டுபிடிப்புகள் அந்தக் கட்டமைப்பை சிதைக்கின்றன.
அதேபோல் “சங்கத்தமிழ்” என்று கூறுகிறீர்களே, அதில் வரலாற்றுத் தன்மை இல்லை. அது வெறும் பாடல்கள் மட்டுமே. எனவே ’ராமாயணத்தையும் மகாபாரதத்தையும்’ கீழடி ஆய்வுகளோடு தொடர்புபடுத்துங்கள் என்கிறார்கள். சங்க இலக்கியங்களில் வரலாற்றுத் தன்மை இல்லை, சர்சைக்குரிய விடயங்கள் உள்ளன. அகழாய்வின் போது இவற்றை நீங்கள் கவனிக்கவே இல்லை என்றும் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அதேபோல் “நீங்கள் இலக்கிய ஆதாரங்களை அதிகமாக கொடுத்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டு இலக்கிய ஆதாரங்கள் எல்லாம் பயனற்றவை. அவற்றை எல்லாம் எடுத்துவிட வேண்டும்” என்கிறார்கள்.
அறிவியல் பூர்வமாக அதிகமான விவரங்களை கொடுத்திருப்பதாக ஒரு பக்கம் சொல்கிறார்கள். மறுபக்கம் அறிவியல் பூர்வமாக இல்லை என்றும் சொல்கிறார்கள்.
அறிவியல் பூர்வமாக இல்லை என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம்: கீழடியில் இருந்து 28 மாதிரிகளுக்கு மட்டும் நீங்கள் கார்பன் டேட்டிங் கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் 2020-ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட “IntCal20” என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் காலக்கணிப்பு செய்யவில்லை. அந்தத் தொழில்நுட்பம் அந்தக் காலகட்டத்தில் வளிமண்டலத்தில் இருந்த கார்பனின் அளவையும் சேர்த்து கணக்கிடும். அதை பயன்படுத்தாததால் இது அறிவியல் பூர்வமாக இல்லை என்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் கூட 2, 3 அல்லது 5 மாதிரிகளுக்கு மேல் இந்திய தொல்லியல் துறை கார்பன் டேட்டிங் கொடுத்ததில்லை. ‘நீங்கள் 28 மாதிரிகள் செய்துவிட்டு, இன்னும் 80-க்கும் மேற்பட்ட மாதிரிகளை வைத்திருக்கிறீர்கள். அவற்றையும் 15 நாட்களில், ஒரு மாதத்திற்குள் அறிக்கையாக கொடுங்கள்’ என்று கேட்கிறார்கள்.
கீழடியைச் சுற்றியுள்ள சமணர் குகைகளுடன் தொடர்புபடுத்தி, எழுத்து எப்போது தோன்றியது என்பதைச் சொல்ல வேண்டும் என்கிறார்கள். இதில் ஒரு நுணுக்கமான விடயம் இருக்கிறது. சமணர் காலத்தில்தான் எழுத்துக்கள் தோன்றின என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்கு முன்பே கீழடியில் எழுத்துக்கள் இருந்ததாக நீங்கள் காலத்தை முன்னோக்கி கொண்டு சென்றால், நாங்கள் கட்டி வைத்திருக்கும் எழுத்துக்களின் வரலாறு முழுவதும் உடைந்து விடும்.
அதாவது ஜைனர்கள்தான் தமிழ்நாட்டிற்கு எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார்கள் என்று மாற்றச்சொல்கிறார்கள். ஜைன மதம் தோன்றியதே கிமு 3-ஆம் நூற்றாண்டில்தான். ஆனால் கீழடியில் அதற்கு முன்பே எழுத்துகள் தோன்றியது என தேதி கொடுத்து உள்ளீர்கள் என்றால், அந்தப் பகுதியின் முழு வரலாறும் மாறிவிடும். எனவே சமணக் கொள்கைகளுடன் தொடர்புப் படுத்தி எழுத்தின் காலத்தைச் சொல்லுங்கள். மேலும் ’நாகசாமி’, ’ஐராவதம் மகாதேவன்’ ஆகியோரின் புத்தகங்களை ஆதாரமாக வைத்து கிமு 3 முதல் கிபி 3-க்குள் எழுத்தின் தொடக்கத்தைச் சொல்லுங்கள் என்கிறார்கள்.
மதுரை என்று சொன்னாலே ’மீன்’ இருக்கிறது என்கிறீர்கள். பானைகளில் மீன் சின்னங்களை கண்டுபிடித்திருக்கிறீர்கள். அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் மீனின் எலும்புகள் ஏன் கிடைக்கவில்லை? குதிரையின் எலும்புகள் கீழடியில் கிடைத்திருக்கின்றன என்கிறீர்களே, மீனின் எலும்புகளைத் தோண்டி எடுத்துக் காட்டுங்கள் என்கிறார்கள்.
2014-2015-ல் எடுக்கப்பட்ட எலும்புகளை, 2021-ல் ஆந்திராவில் கிடைத்த “பொட்டி” பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்கிறார்கள். ஆனால் அவர்கள்(ASI) இன்னும் அந்த அறிக்கையை வெளியிடவே இல்லை. வெளியிடாத ஒரு அறிக்கையுடன் எப்படி ஒப்பிட முடியும்?
காலத்தை கிமு 3 நூற்றாண்டு என்று சொல்கிறீர்கள். அதை விட்டுவிட்டு கிபி 10-ஆம் நூற்றாண்டு வரையிலான நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. AMS டேட்டிங் மூலம் கிபி 10-ஆம் நூற்றாண்டு வரை இங்கு நாகரிகம் இருந்தது என்று சொல்லுங்கள் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 7200 தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12,525 பஞ்சாயத்துகளில் கிட்டத்தட்ட 60% பஞ்சாயத்துகளில் 2000 முதல் 3000 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்த தொல்லியல் மேடுகள் உள்ளன. ஆனால் அதையும் சொல்லக்கூடாது என்கிறார்கள் . 15,949 கிராமங்களில் 47-48% கிராமங்கள் தொல்லியல் மேடுகளாக உள்ளன. தமிழ்நாட்டின் வரலாறு போல் இந்த உலகத்திலே வேறெங்கும் இந்த சிறப்பு கிடையாது. 4 லட்சம் சதுர கிலோமீட்டர் உள்ள ஒரு சிறிய மாநிலத்தில் இவ்வளவு பழமையான குடியிருப்புகள் இருக்கின்றன என்று சொன்னால், நாங்கள் இதுவரை கட்டி அமைத்த இந்திய வரலாறு முழுவதும் போய்விடும் என்பதால் கீழடி ஆய்வை மறுக்கிறார்கள்.
எனவே கீழடியை இப்போதே அடக்கிவிட்டால், பிறகு வருவதை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் கீழடியின் காலம் கிமு 1000 முதல் 2000-க்குள் வரும். தமிழ்நாடு அரசு எடுத்துள்ள காலம் ஏற்கனவே கிமு 1000-ஐ தொட்டுவிட்டது. அதை வெளியிடாமல் வைத்திருக்கிறார்கள்.
அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள் தோண்டிய ஆழம் 18 அடி 570 செ.மீ. அதில் 225-வது செ.மீ-யில்தான் கார்பனை எடுத்து காலத்தை கணக்கிட்டிருக்கிறார். இன்னும் 570 செ.மீ வரை உள்ளது. அதையும் எடுத்தால் காலம் இன்னும் முன்னோக்கி செல்லும். இரும்பு காலம் 5000 ஆண்டுக்கு முந்தையது என உறுதிப்படுத்தியுள்ளது.
சிவகளையில் 2800 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்பு உருக்கும் உலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேட்டூர் அணைப் பகுதியில் 2% கார்பன் கலந்த எஃகு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட வரலாற்றை அவர்களால் (பாஜக அரசு) ஏற்றுக்கொள்ளவே முடியாது.
கீழடியை 10 அல்லது 20 ஆண்டுகள் தடுத்து நிறுத்திவிட்டால், அடுத்த தலைமுறைக்கு எதுவும் தெரியாது. அந்த 20 ஆண்டுகளில் அவர்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்று ஆட்சி செய்துவிட்டுப் போய்விடுவார்கள். வரலாறு மறைக்கப்பட்டுவிடும்.
மதுரை ஒரு ஆபத்தான இடம். இன்னும் ஒரு வருடம், இரண்டு வருடத்தில் இங்கு பெரிய ரத்த கலவரம் வரும். ஏனெனில் மூன்று விஷயங்களை அவர்கள் திட்டமிட்டுள்ளனர்: 1. கீழடியை மறுப்பது, 2. திருப்பரங்குன்றம், 3. வைகையை சுத்தப்படுத்துவது.
கங்கையை 45,000 கோடி செலவு செய்து சுத்தப்படுத்தி, அதை புனிதம் என்று சொல்லி அரசியல் அதிகாரத்தைப் பெற்றார்கள். அதேபோல் வைகையையும் புனிதம் என்று சொல்வார்கள். அதற்கு நாம் இடமளிக்க கூடாது. நம் அணையை நாம் பாதுகாப்போம்.
திருப்பரங்குன்றம் உட்பட 7 மலைகளை கைப்பற்றுவதுதான் அவர்களின் நோக்கம். அதற்காகவே திருச்சி வட்டத்துக்கு ஒரு ASI அதிகாரியை நியமித்துள்ளனர். நீதிமன்றம் ASI-க்கு நோட்டீஸ் அனுப்பியது. தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கன்னியாகுமரியில் கூட்டம் போட்டு, திருப்பரங்குன்றம் ASI-க்கு சொந்தம் என்று வாதாட வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, திருச்சியில் நியமிக்கப்பட்ட அந்த புதிய அதிகாரி- தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு ஆய்வு செய்ததற்கு நோட்டீஸ், மெமோ கொடுத்து மிரட்டியுள்ளனர். இது யாருக்கும் தெரியாது. என்னையும் நேரடியாக மிரட்டினார். “114 பக்க அறிக்கையில் உன் பெயர் இருக்கிறது. தமிழின் தொன்மையை மறைத்த துரோகி நீ” என்று அரை மணி நேரம் பேசினேன். இதெல்லாம் திரை மறைவில் நடந்தது.
முன்பெல்லாம் திருப்பதியில் “கோவிந்தா” என்று சொல்லிக்கொண்டு போனவர்கள், இப்போது “ஜெய் ஸ்ரீராம்” என்று சொல்கிறார்கள். அதேபோல் திருப்பரங்குன்றத்தில் “அரோகரா” என்பது “ஜெய் ஸ்ரீராம்” ஆக மாறும். அங்கு வரும் வருமானம் இந்து சமய அறநிலைத்துறைக்கு போகாது. அங்குள்ள (பார்ப்பனர்)களே எடுத்துக்கொள்வார்கள்.
இந்தச் சூழ்நிலையில் 114 பக்க அறிக்கைக்குப் பிறகு “மேலதிகாரிகள் சொல்வதைக் கேள், திருத்திக் கொடு” என்று சொன்னார்கள். அதற்கு அமர்நாத் ராமகிருஷ்ணா, UPS சர்வீஸ் ரூல் 76(2)-ஐ மேற்கோள் காட்டி, “ஒரு ஆய்வாளர் தான் கண்டுபிடித்ததை மேலதிகாரிகளுக்கு பயப்படாமல் அப்படியே சொல்ல முழு உரிமை உண்டு” என்று பதில் அளித்துள்ளார்.
நீங்கள் கொடுத்த அறிக்கையில் “இதை எல்லாம் நான்தான் கண்டுபிடித்தேன்” என்று சொல்லிவிட்டு, இரண்டாவது முறையும் மூன்றாவது முறையும் அவர் கொடுத்திருக்கிறார்.
இதற்கு அடுத்து அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், “நீ செய்கிறாயா? அடுத்த கேள்வி என்ன? செய்கிறாயா? இல்லை வீட்டுக்கு போகிறாயா?” என்று கேட்பார்கள்.
இந்த “செய்கிறாயா, வீட்டுக்கு போகிறாயா” என்ற நிலைக்கு முன்புதான், இந்த 114 பக்க அறிக்கையை தயாரித்த குழு இங்கு வருவதற்கு தயாராக இருக்கிறது. இங்கு வரப்போகிறது.
நான் இரண்டே இரண்டு வார்த்தைகள் சொல்லி முடித்துக்கொள்கிறேன். அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களே, அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் தூக்கி எறிந்துவிட்டு வாருங்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.” – இவ்வாறு பாஜக அரசும், பார்ப்பனிய தொல்லியல் அதிகாரிகளும் கீழடி அறிக்கை வெளிவராமல் தொடர்ச்சியாக செய்யும் இன்னல்களை வரிசைப்படுத்தினார் முனைவர் மாரப்பன் அவர்கள்.
தொல்லியல் ஆய்வாளர் ஐயா சாந்தலிங்கம் அவர்களின் உரை :
“தோழர்களே, இது 2000 ஆண்டு சண்டை. கீழடி சண்டை இன்று நேற்று வந்ததல்ல. 2000 ஆண்டுகளாக நடக்கும் ஆரிய-திராவிட போரின் தொடர்ச்சிதான் இந்த கீழடி.
மாரப்பன் அவர்கள் அந்த அறிக்கையை எப்படியோ பெற்று, விரிவாக படித்திருக்கிறார். சில முக்கியமான குறிப்புகளை சொன்னார். அவர் “இலக்கிய தரவுகளை மட்டுமே கொடுத்திருக்கிறீர்கள். அந்த இலக்கிய தரவுகளின் உண்மைத் தன்மை என்ன என்பதை நீங்கள் ஆராயவில்லை” என்று அவர்கள்(ASI) குறை சொல்லியிருக்கிறார்கள்.
இலக்கிய தரவு என்றால் என்ன? நீங்கள்(பாஜக அரசு) இந்தியாவின் வரலாறு என்றாலே, மகாபாரதமும் ராமாயணமும் என்றுதான் சொல்கிறீர்கள். அதைத்தான் வரலாறு என்கிறீர்கள். ஆனால் அது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு ஏதாவது வரையறுக்கப்பட்ட காலம் இருக்கிறதா? மகாபாரதம் எப்போது எழுதப்பட்டது? அவர்கள் சொல்வது போல 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுதப்பட்டுவிட்டது என்கிறார்கள். 2200 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதம் என்ற மொழியே இல்லை, எழுத்தே இல்லை.
சரி, அதை நாம் ஏற்றுக்கொண்டாலும், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மகாபாரதம் நடந்தது என்று உங்கள் இலக்கியத்தில் சொல்லியிருந்தால், என்னுடைய தமிழ் இலக்கியமான புறநானூற்றில் “பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், இருவருக்கும் சோறு போட்டான்” என்று சொல்லியிருக்கிறான். அப்போது நீங்கள் மகாபாரத யுத்தத்தில் போராடிக்கொண்டிருந்தபோது உங்களுக்கு சோறு போட்டவன் தமிழன் என்கிறது எங்கள் இலக்கியம். அந்த இலக்கியத்தை ஏற்றுக்கொண்டால், இந்த இலக்கியத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது கதை என்றால் இதுவும் கதை.
இன்னும் சொல்லப்போனால், இங்கே அடுத்த ஒரு கதையை சொல்வார்கள். மீனாட்சிக்கு சுயம்வரம் நடந்தது. அந்த சுயம்வரத்தில் கலந்துகொள்ள அர்ஜுனன் வந்தான் என்று கதை சொல்வார்கள். இது திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்படும் கதை. அதை சில பார்ப்பனர்கள் உயர்த்தி பேசுவார்கள்.
நாங்கள் கேட்கிறோம்: திரௌபதிக்கு சுயம்வரம் நடந்தபோது பாண்டியன் போனானே? அப்போதே ஏக இந்தியா, ஏக தமிழாக அகண்ட தமிழகம் இருந்துவிட்டதல்லவா? நீங்கள் அங்கிருந்து சுயம்வரத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று சொன்னால், பாண்டியன் சுயம்வரத்திற்கு அங்கே போனதை ஏன் மறைக்கிறீர்கள்? இது Selective Amnesia. ஒரு காலத்தில் புரட்சித் தலைவி- அத்வானியை பார்த்து “Selective Amnesia” என்று சொன்னார்கள். அதுபோல இந்த வடநாட்டு ஆய்வாளர்களுக்கும் Selective Amnesia இருக்கிறது.
அவர்களுடைய மொழி உயர்ந்தது, தொன்மையானது என்று சொன்னால், அதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. பிறகு ஏன் அவர்கள் மறுக்கிறார்கள்? தமிழ்நாட்டில் தோன்றுகின்ற இடங்கள் எல்லாம் எழுத்துக்கள் கிடைக்கின்றன. நேற்று ஒரு பேப்பரில் முதல் பக்கத்தில் “5000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு” என்று செய்தி வந்திருக்கிறது. கடந்த மாதம் 1-ஆம் தேதி நானே நேரடியாக ஆப்பனூரில் ஏறி “மாண்டு விழுந்த அத்தியன் கீரன்” கல்வெட்டை கண்டுபிடித்து வந்திருக்கிறேன்.
இப்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட “தமிழி” என்று சொல்லக்கூடிய எழுத்துக்கள் கிடைத்துள்ளன. அதை அவர்கள் “தமிழ் பிராமி” என்று சொல்வார்கள். நான் “பிராமி” என்பதை கெட்ட வார்த்தையாக கருதுகிறேன். ஏனென்றால் அது எங்கும் இல்லை. கிமு 1-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ’சமவய சுத்த’ நூலில் 18 எழுத்துக்களில் ‘பம்மி’ இருந்ததாகதான் சொல்லப்பட்டதே தவிர, எங்கும் “பிராமி” என்று சொல்லவில்லை. பிரம்மன் உருவாக்கினான் என்று புகுத்துவதற்காக “பிராமி” என்று சொன்னார்கள். அதை சமணர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஏனென்றால் சமணத்தில் பிராமி, சுந்தரி என்ற இரண்டு பெண் தெய்வங்கள் உண்டு.
அவர்கள் சொல்லக்கூடிய அந்த எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன்பாகவே “திராவிடம்” என்ற சொல் 2500 ஆண்டுகளுக்கு முன்பே உஸ்பெகிஸ்தானில் கிடைத்த அகழாய்வில் கிடைத்தது. “தமிழ்” என்ற சொல்லை உச்சரிக்க முடியாதவர்கள் “த்ரமுள, திராவிட, தமிழ, தமிழம்” என்று ஆக்கினார்கள் என்று நமது பாவாணர் சொல்லியிருக்கிறார்.
2500 ஆண்டுகளுக்கு முன்பு உஸ்பெகிஸ்தானில் கிடைத்த அகழாய்வில் ஒரு பானையில் “திராவிட விகாரை” என்ற சொல் வந்தது. ’விகாரை’ என்றால் பௌத்த கோயில். எனவே திராவிட நாட்டிலிருந்து சென்ற ஒரு பௌத்தர் அங்கு கோயில் கட்டியிருக்கிறார். பௌத்தமும் சமணமும் கிமு 6-ஆம் நூற்றாண்டிலேயே வந்துவிட்டன. சமணர்கள் கடல் வழியாக போகமாட்டார்கள். பௌத்தர்கள் கடல் வழியாக போவார்கள். எனவே வணிகத்திற்காக சென்ற திராவிடர்கள் அங்கு தங்கள் முத்திரையை பதித்திருக்கிறார்கள்.
மகாபாரதத்தில் “திராவிடபதி” என்ற குறிப்பு வருகிறது. அந்த திராவிடபதி யார்? “நிலந்தரு திருவின் பாண்டியன்” அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று படிக்கிறோம் அல்லவா? அந்த நிலந்தரு திருவின் பாண்டியன்தான் திராவிடபதி. ’திராவிட நாட்டின் தலைவன்’ என்று மகாபாரதம் சொல்கிறது.
கிபி 2-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பௌத்த நூல் “லலித விஸ்தரம்”. அந்த நூலில் 64 வகையான எழுத்துக்கள் இருந்ததாக சொல்லும்போது, அந்த தமிழ் எழுத்துக்கு “திராவிடி” என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். எனவே என்னை பொறுத்தவரை தமிழும்- திராவிடமும் ஒன்று. இந்தியாவில் எந்த அகழ்வராய்ச்சி நடந்த பானையில் எந்த எழுத்தும் கிடையாது.
இன்றைக்கு தமிழ்நாட்டில் 143 இடங்களில் மாதிரிகள் எடுத்து, அமெரிக்காவிற்கு AMS டேட்டிங்கிற்கு அனுப்பியுள்ளனர். அதில் 73 மாதிரிகள் கிமு 400-க்கு முந்தைய எழுத்துக்களை கொண்ட பானைகள். மீதி 70 மாதிரிகள் கிமு 300, 200 என்று இருக்கின்றன. கிமு 400-க்கு முன்பு என்றால், அது அசோகனுக்கு முன்பு போய்விட்டது. அதில் ஒன்று கீழடி. கிமு 585-லேயே மதுரையில் எழுத்து இருந்தது.
இந்த எழுத்து எப்படி வந்தது? நேரடியாக யாரும் எழுதவில்லை. பானை செய்யும் குயவர்கள் தங்கள் அடையாளமாக சில குறியீடுகளை போட்டு வந்தார்கள். உதாரணமாக சலவை தொழிலாளிகள் எழுத்தறிவு வருவதற்கு முன்பு ஒவ்வொருவர் துணிக்கும் குறியீடு போடுவார்கள். அதுபோல எழுத்தறிவு வருவதற்கு முன்பே தமிழன் குறியீடுகளால் கருத்துக்களை பரிமாறிக்கொண்டான். எழுத்தறிவு வந்தபோது குறியீடுகள் மறைந்து எழுத்து நிலைத்தது. இதை 25 ஆண்டுகளுக்கு முன்பே ’வல்லம் அகழாய்வு’ நிறுவியது.
கோயம்புத்தூர் ஒய். சுப்பாராயலு என்ற பேரறிஞர் வல்லம் அகழாய்வில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், “முதன் முதலாக குறியீடுகள் இருந்தன. பிறகு குறியீடுகளும் எழுத்துக்களும் இருந்தன. எழுத்துக்கள் முழுமையாக வந்த பிறகு குறியீடுகள் தேவையில்லாமல் போய்விட்டன” என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்.
மதுரை தமிழர்கள் கிமு 585-லேயே எழுத்துக்களை படித்துவிட்டார்கள். ஆனால் வடநாட்டில் இப்படி ஒரு சான்று கூட காட்ட முடியவில்லையே என்ற குற்ற உணர்வுதான், பாஜக அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 2013-ல் தோண்டி 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அதை மூடிவிட்டு, கண்ணாடி அருங்காட்சியகமும் வைத்துவிட்டார்கள். இனி வரப்போகும் குழு எதை ஆய்வு செய்யப்போகிறது? 110 ஏக்கரில் இன்னும் 10 ஏக்கர் வேண்டும் என்று சொல்லி, பிறகு “ஒன்றுமே இல்லை” என்று சொல்வார்கள்.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 8 ஆண்டுகளாக செய்து இன்று எவ்வளவு கண்டுபிடித்திருக்கிறது. சிவகளையில் இரும்பின் பயனை முதன்முதலாக கண்டறிந்தவன் தமிழன். ஆதிச்சநல்லூரில் சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர் கொடுத்த அறிக்கையிலேயே கிமு 9-ல் அங்கு நாகரிகம் இருந்தது என்று சொல்லிவிட்டார்.
அறிக்கையில் இன்னொரு குறை: “நாகசாமி சொன்னதை கேட்டாயா? ஐராவதம் சொன்னதை கேட்டாயா?” என்கிறார்கள். நாகசாமி ஆட்சி மாறும்போது கருத்தை மாற்றுவார். கலைஞர் காலத்தில் “கல்வெட்டு” என்ற மாத இதழில் அட்டைப்படத்தில் கலைஞர் படம் போடுவார். எம்ஜிஆர் ஆட்சி வந்தால் படத்தை மாற்றிவிடுவார்.
நாகசாமியின் கொற்கை அகழாய்வு காலம் கிமு 785. ராமாயணத்தில் கம்பர் கொற்கையைப் பற்றி சொல்கிறார். ராமன் தனுஷ்கோடியில் தங்கியிருந்ததாக அகநூற்றில் பாட்டு வருகிறது. எனவே ராமன் வாழ்ந்த காலத்தில் தமிழன் வாழ்ந்திருக்கிறான், ”கொற்கை” என்ற நாடு இருந்திருக்கிறது.
ஐராவதம் மகாதேவன் கொஞ்சம் நல்லவர். நாகசாமிக்கு பத்மபூஷன் கொடுக்க, “சமஸ்கிருதம்தான் மேன்மையான மொழி. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் சமஸ்கிருதத்தின் பிழிவு” என்று ஒரு நூல் எழுது என்று சொன்னார்கள். அவர் எழுதிவிட்டு பத்மபூஷன் வாங்கிவிட்டார்.
இந்த கீழடியை அவர்கள் ஏற்றுக்கொள்ளாத காரணம்:தமிழ்நாட்டில் எந்த இடத்தில் அகழாய்வு செய்தாலும் சாமி சிலை கிடைக்காது. தஞ்சாவூர் பக்கம் தோண்டினால் ஒன்பது சிலை கிடைக்கும். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் ஒரு சிலையாவது கிடைத்ததா? இல்லை. அது இந்தியாவிலேயே கிடையாது.
தமிழனுக்கு மதம் கிடையாது, சாதி கிடையாது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதுதான். வீர வழிபாட்டை தவிர வேறு வழிபாடு கிடையாது. அதுதான் ’நடுகல்’ வழிபாடு. சிவ வழிபாடு, வைணவம் கூட கிடையாது. தொல்காப்பியத்தில் வரும் நான்கு திணை கடவுள்கள் எல்லாம் பிற்கால பார்ப்பன தாக்கம்.
இன்றுவரை தமிழ்நாட்டில் 100 இடங்களுக்கு மேல் அகழாய்வு செய்துள்ளனர். சில இடங்களில் தாய் தெய்வம், குழந்தையோடு மண் பொம்மை கிடைக்கும். சிலை வழிபாடு கிபி 6-ஆம் நூற்றாண்டிற்கு பிறகுதான். அதுவரை தாய் தெய்வ வழிபாடு, மூதாதையர் வழிபாடு, வீர வழிபாடுதான்.
தமிழ்நாட்டில் எங்கு போனாலும் முதுமக்கள் தாழிகள் கிடைக்கும். வசதிக்கு தகுந்தபடி தாழிகளை செய்து அடக்கம் செய்தார்கள். ஆனால் கடவுள் வழிபாட்டிற்கான சான்று எங்கும் இல்லை. அதனால்தான் கீழடியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசு கிமு 585-லேயே எழுத்தறிவு வந்துவிட்டது என்றும், கொடுமணலில் கிமு 630 என்றும் வெளியிட்டுள்ளது. அதை இந்தியாவின் 22 மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. ஒருவரும் எதிர்த்து பேசவில்லை. எனவே அனைத்து வகையிலும் தமிழர் நாகரிகம் மிக மிக தொன்மையானது. இதையே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் 8 இடங்களில் அகழாய்வு செய்கிறது. இப்போதும் தென்காசி திருமலைபுரத்தில் பெரிய அகழாய்வு நடந்துள்ளது. அவை எல்லாம் வெளியே வரும்போது கீழடியையே தூக்கி சாப்பிட்டு விடும்.. அவ்வளவு சான்றுகள் கிடைத்து இருக்கின்றன. அவையெல்லாம் வெளிவரும்போது ஆரிய கூட்டம் இன்னும் அலறும்
அமர்நாத் ராமகிருஷ்ணாவை நாம் காப்போம். அவரை அசைக்க முடியாது. ஏனென்றால் அகழாய்வு செய்தவனுக்குதான் அறிக்கை எழுதும் தகுதி. பார்க்காத 3 பேர், 13 ஆண்டுகள் கழித்து, அவரை விட Junior-ஆனவர்கள் மதிப்பீடு செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களை உள்ளே விட மதுரை மக்கள் தயாராக இல்லை. நாம் ஒன்று திரள்வோம்.
“நான் ஒரு தொல்லியலாளனாகவும், தமிழ் உணர்வாளனாகவும் சொல்கிறேன்: கீழடி அறிக்கையில் Typographical Mistake இருந்தால் வேண்டுமானால் மாற்றி கொடுப்பேன். ஆனால் ஒரு காற்புள்ளி கூட மாற்ற மாட்டேன்” என்றார் அவர். அந்த மனிதனின் பின்னால் நாம் நிற்போம் என்று சொல்லி முடிக்கிறேன்.” – இவ்வாறு இலக்கிய ஆதாரங்களை முன்வைத்து கீழடி அறிக்கைக்கு சான்றுகளை அடுக்கினார் ஆய்வாளர் சாந்தலிங்கம் அவர்கள்.
தோழர் சு.கா. முருகவேல்ராசன் அவர்கள். மதுரையில் ஆங்காங்கே சில சில சாதிய சிக்கல்கள், மத சிக்கல்கள் இருப்பது என்பது உண்மைதான். அதை தமிழர்களாகிய நாங்கள் எங்களுக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகளை கலைந்து தீர்த்துக் கொள்வோம். ஆனால் தமிழர்களை வரலாற்றை மாற்ற நினைக்கும் பிஜேபி இந்த பிளவுகளை பெரிதாக்கி தமிழர்களை பிரித்து, தமிழர் வரலாற்றை மாற்ற நினைத்தால் தமிழர்கள் ஒன்று திரண்டு அதை முறியடிப்போம் என்று அழுத்தம் திருத்தமாக ஒன்றிய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து கருத்துரையாற்றிய தோழர் வசந்தன், தோழர் அ. பிலால்தீன், ஜி.எஸ். சீமான் சிக்கந்தர், தோழர் தமிழ்ப்பித்தன், தோழர் பேரறிவாளன், தோழர் பரிதி ஆகியோர், கீழடி ஆய்வை பாதுகாப்பது தமிழர் வரலாற்றையும் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையும் பாதுகாப்பதற்கான சனநாயகப் பொறுப்பு என வலியுறுத்தினர்.
கருத்தரங்கை ஒருங்கிணைத்து நடத்திய மே 17 இயக்க தோழர் கொண்டல்சாமி அவர்கள் நிறைவாக, “தோழர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் கீழடி குறித்தான ஆய்வறிக்கை என்பது பெரும் காகிதம் அல்ல தமிழர்கள் தனித்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை இந்த உலகிற்கு காட்டும் மாபெரும் வரலாற்று ஆவணம். தமிழர்கள் தனித்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்த உலகிற்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் கடந்த 2000 ஆண்டுகளாக தமிழர்களின் நூல்கள் தமிழர்களின் பண்பாடு தமிழர்களின் நம்பிக்கைகள் தமிழர்களின் நிலங்கள் ஆகியவற்றை ஆரியம் மறைத்தது, அழிதத்து. இறுதியாக 2009இல் ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை சிங்களத்தோடு சேர்ந்து அழித்ததும் இந்த காரணங்களுக்காகத்தான். ஆகவே இனியும் நாம் ஆரிய பார்ப்பன மேலாதிக்கத்தையும் ஏமாற்று வேலையை நம்பாமல் நமது வரலாற்றை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். கீழடி என்பது மண் மட்டுமல்ல; தமிழர் நாகரிகத்தின் உயிருள்ள வரலாறு. அதைத் திரிக்க நினைப்பவர்களை அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் தமிழர்கள் முறியடிக்க வேண்டும். டெல்லியில் இருந்து அனுப்பப்படும் அரசியல் நோக்கமுள்ள மறுஆய்வுக் குழுவை எதிர்ப்போம்! கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிடக் கோருவோம்! தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!” என்று பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்.
”அகழாய்வு’ என்பது அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதாகும். ஆனால் பார்ப்பனியம் கட்டமைத்து வைத்திருக்கும் வரலாற்றுத் திரிபுகளுக்குப் பங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால், அனைத்து சான்றுகளையும் மாற்றச் சொல்லி அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களையும் கீழடி ஆய்வுக் குழுவையும் இந்திய தொல்லியல் துறை பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாக்கியுள்ளது.
இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல், தனது ஆய்வில் கண்டறிந்த உண்மைகளுக்காக உறுதியுடன் நிற்கும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்குப் பக்கபலமாகத் தமிழர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
டெல்லியில் இருந்து அனுப்பப்படும் ஆய்வுக் குழுவை எதிர்த்து நிற்போம்!
கீழடி அறிக்கையைப் பாதுகாப்போம்!
தமிழர் வரலாற்றை மீட்டெடுப்போம்!
குறிப்பு: 2016ல் முதன்முதலாக இந்துத்துவ பாஜக அரசின் நயவஞ்சகத்தை எதிர்த்து அன்று கீழடிக்கு வந்த ஒன்றிய பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரைக் கண்டித்து மறியல் போராட்டத்தை மே பதினேழு இயக்கம் மதுரையில் நடத்தியது. இதுவே கீழடி உரிமைக்காக நடந்த முதற்போராட்டம். இன்றளவும் கீழடியின் தமிழர் நாகரீகத்தை பாதுகாக்க மே பதினேழு இயக்கம் மேற்கொள்ளும் தொடர் செயற்பாடுகளில் ஒன்றாக இந்த கருந்ததரங்கம் அமைந்தது.