
மோடி அரசு 2019-ல் ‘ஏழை உயர் சாதியினர்’ என்ற பெயரில் கொண்டு வந்த EWS 10% இடஒதுக்கீடு, இன்று கோடீஸ்வரர்களின் குழந்தைகள் IAS, IPS ஆகும் குறுக்கு வழியாக மாறியிருக்கும் கொடுமை அம்பலமாகியுள்ளது.
மோடி அரசின் NTA தேர்வு மோசடிகளில் இருந்து UPSC மோசடிகள் வரை, தகுதி என்பது திறமையில் இல்லை, மோசடியில் இருக்கிறது என்கிற உண்மையை இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய EWS இட ஒதுக்கீட்டு மோசடி ஆய்வு அப்பட்டமாக நிரூபித்திருக்கிறது.
EWS -க்கான வருமான உச்ச வரம்பு ஆண்டுக்கு ₹8 லட்சம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் ரூபாய் 40 கோடி சொத்து வைத்திருப்பவர்கள் ஏழை சான்றிதழோடு IAS/IPS நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். நில வரம்பு 5 ஏக்கர் என்று விதி சொல்கிறது, ஆனால் 25 ஏக்கருக்கும் மேலான நிலத்தின் சொந்தக்காரர்கள் “பொருளாதாரத்தில் நலிந்த உயர்பிரிவினர்” என்னும் பெயரில் திருடியிருக்கிறார்கள்.
பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டின் கீழ் 2019-23 வரை குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்ற 104 தேர்வர்கள் ஒவ்வொருவரையும் ஆய்வு செய்து இந்த நாளிதழ் இத்தகவல்களை அம்பலப்படுத்தி உள்ளது.
இந்த ஆய்வில், EWS இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களில் பலர், EWS வரையறையைத் தாண்டிய செல்வந்தர்களாக இருப்பதைக் இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளது. இதில் பலருக்கு சொந்தமான கார், ஆடம்பரமான வீடு, கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் பெரிய வணிகக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 28 பேர், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் பயிற்சி நிறுவனங்களில் பயின்றவர்கள் 67 பேர், பெரு நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் 10 பேர், தனியார் பள்ளிகளில் பயின்றவர்கள் 48 பேர், IIT பட்டம் பெற்றவர்கள் 14 பேர் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரின் குடும்ப ஆண்டு வருமானமும் EWS-க்கு நிர்ணயிக்கப்பட்ட ₹8 லட்சம் வரம்பை விட அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே புனேவைச் சேர்ந்த RTI ஆர்வலர் விஜய் கும்பார் 2015 – 2023 வரை பணிக்குத் தேர்வான IAS, IPS, IFS, IRS போன்ற உயர் குடிமைப் பணி அதிகாரிகள் 22 பேர் மீது, போலி சான்றிதழ் மூலம் இடஒதுக்கீடு பெற்றதாக ‘மத்திய பணியாளர் நலத்துறையிடம் (DoPT)’ புகார் அளித்திருந்தார். இதில் EWS மட்டுமின்றி OBC, SC/ST ஆகிய அனைத்து பிரிவினரும் சான்றிதழ் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.. இவர்களில் 15 அதிகாரிகள் மீது இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த 22 பேர் மீதான விசாரணைக்கு வழிவகுத்தது பூஜா கேத்கர் என்ற முன்னாள் பயிற்சி IAS அதிகாரியின் விவகாரம்தான். இவர் அரசு வாகனத்தைப் பயன்படுத்தாமல், சொந்த ஆடி காரில் சிவப்பு-நீல விளக்கு பொருத்திச் சென்றது முதலில் அம்பலமானது. விசாரணையில், இவரது குடும்பச் சொத்து ₹40 கோடிக்கும் மேல் என்பதும், தந்தை திலீப் கேத்கர் என்கிற ஓய்வுபெற்ற IAS அதிகாரி என்பதும் தெரியவந்தது.

மேலும், பூஜா கேத்கர் போலியாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் சமர்ப்பித்ததும், பெயரை மாற்றி கூடுதல் முறை தேர்வு எழுதியதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து RTI ஆர்வலர் விஜய் கும்பார் அளித்த புகாரின் அடிப்படையில், மொத்தம் 22 அதிகாரிகள் மீது DoPT விசாரணை தொடங்கியது. இந்த 22 பேரில், ஒரு IPS அதிகாரியின் மகள் EWS முறைகேட்டில் IPS ஆனது, இன்னொரு IAS அதிகாரி OBC கிரீமிலேயர் தகுதியை மறைத்து தேர்வானது உள்ளிட்ட விவகாரங்கள் விசாரணையில் உள்ளன. சில முன்னாள் IAS/IPS அதிகாரிகளே இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், பூஜா கேத்கரைத் தவிர மீதமுள்ள 21 பேரின் பெயர்கள் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.
ஏற்கனவே மோசடி செய்து பணிக்குச் சேர்ந்த 22 அதிகாரிகள் மீது DoPT விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில்தான், அடுத்த அதிர்ச்சி தகவலாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட 104 அதிகாரிகளின் பின்னணி குறித்த ஆய்வும் வெளிவந்துள்ளது.
இந்த சூழலில்தான் முக்கியமான கேள்வி எழுகிறது. EWS சான்றிதழ்களை வழங்குவது வருவாய்த் துறை அதிகாரிகள். ஆனால் வெளியான ஆய்வில் பெரும்பாலானோர் ₹8 லட்சம் வருமான வரம்பை மீறியவர்கள், கோடிக்கணக்கில் சொத்து வைத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. எனவே, இந்த மோசடிக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் போலிச் சான்றிதழ் கொடுத்து உடந்தையாக இருந்தார்களா? அல்லது சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் அப்படியே அங்கீகரித்த UPSC-யின் அலட்சியமா? என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் மூலமும் வெளிவந்த மோசடி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆய்வில் வெளியிட்ட EWS போலிச் சான்றிதழ் மோசடி, இரண்டும் பனிப்பாறையின் ஒரு நுனியாகவே தெரிகிறது. இன்னும் எத்தனை பேர் மோசடி செய்து IAS/PS/IFS பதவியை அலங்கரிக்கிறார்களோ என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
ஒரு நாட்டின் அதிகார மட்டம் தான் அரசின் கொள்கைகளை வகுக்கிறது. மாவட்டத்தின் மொத்த நிர்வாகத்தையும் கையில் வைத்திருப்பவர் IAS படித்த ஆட்சியர். அவரே மாவட்ட வருவாய், வளர்ச்சி, தேர்தல், பேரிடர் போன்ற 30க்கும் அதிகமான துறைகளை ஆளும் அதிகாரம் கொண்டவர். IPS சட்டம் ஒழுங்கு அவர் கையில் தான். புலனாய்வு அமைப்புகளின் தலைமையாளராக இருப்பவர்கள். மாநில காவல் துறைக்கே தலைவராகும் தகுதி (DGP) உடையவர்.
IFS உலக அரங்கில் இந்தியாவின் தூதுவராக பணி செய்து வெளியுறவுக் கொள்கை, வர்த்தக ஒப்பந்தம் போன்று வெளியிலிருந்து ஒரு நாட்டின் குரலாக ஒலிப்பவர்கள். இவர்களின் கொள்கை வடிவமைப்புக்கு உட்பட்டே அரசும், மக்களும் இயங்குவது தொடர்கிறது. இந்த அதிகாரம் மட்டம் வகுக்கும் கொள்கைகளால் பாதிக்கப்படும் போது தான் போராட்டங்கள் வெடிக்கின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் ஆணையம் UPSC ஆகும். ஆனால் அந்த ஆணையமே போலியான நபர்களைத் தேர்வு செய்து பணிக்கு அனுப்பியுள்ளது. இந்த மோசடியை ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும், ஒரு நாளிதழும் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. இதுபோன்று வெளிச்சத்திற்கு வந்தால் மட்டுமே, இன்னும் எத்தனை முறைகேடுகள் மறைந்துள்ளன என்பது கூட தெரியவரும்.

ஒவ்வொரு பாஜக ஆளும் மாநிலங்களிலும் உள்ள மத்தியத் துறைகளான வங்கி, ரயில்வே மற்றும் அரசு அலுவலகப் பணியாளர் நிறுவனங்கள் போன்ற பல துறைகளில் பல பணிகளில் EWS பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண், மற்ற சாதிப் பிரிவினரை விட மிகக் குறைவாக நிர்ணயித்தது கண்டறியப்பட்டது. அதனால் பலத்த எதிர்ப்புகள் எழுந்த பின்னரே, தற்போது EWS கட்-ஆஃப் OBC பிரிவினருக்கு நிகராக உயர்த்தப்பட்டுள்ளது. நூற்றாண்டு கால ஒடுக்குமுறையால் கல்வியும் அதிகாரமும் மறுக்கப்பட்டு, சமூக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டின் கட்-ஆஃப் அளவை, வரலாற்றில் எந்தத் தடையும் இல்லாமல் அதிகாரங்களை அனுபவித்து வந்தவர்களுக்கான EWS கட்-ஆஃப்புடன் ஒரே தட்டில் சமூக நீதிக்கு எதிராக வைத்திருப்பதே சமூக அநீதி.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை EWS என்பது சமூகநீதிக்கு சவக்குழி என்றே பார்க்கிறது. தமிழ்நாடு 69% இடஒதுக்கீட்டை 9-வது அட்டவணையில் பாதுகாத்து, EWS-ஐ மாநில கொள்கையில் தலையீடு என எதிர்க்கிறது.
தமிழ்நாட்டின் இடஒதுக்கீடு நீண்ட வரலாற்றைக் கொண்டது. நூற்றாண்டு காலப் போராட்டத்தில் பலரின் உயிரைக் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமை இது. ஆனால் மோடி அரசு எந்த விவாதமும் இல்லாமல் ஒரே நாளில் உயர்சாதியினருக்கு EWS என 10% இடஒதுக்கீடு கொண்டு வந்தது. அரசியலமைப்பு சட்ட விவாதங்களில் இடஒதுக்கீடு பிறப்பின் அடிப்படையில் சமூகத் தாழ்வைப் போக்குவதற்கே என முடிவானது, பொருளாதார அடிப்படையில் அல்ல. ஆண்டுக்கு 8 லட்சம் வருமான வரம்பு நிர்ணயித்து “பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதி” என்பது ஏற்க முடியாதது.
ஏற்கனவே பொதுப் பிரிவு 50% இடங்களை பெரும்பாலும் பொருளாதாரத்தில் உயர்ந்த உயர் வகுப்பினரே பெறுகிறார்கள். அதில் EWS கூடுதல் சலுகையாக சேர்கிறது. பொருளாதாரம் ஒரு முகமூடி; தலைமுறை தலைமுறையாக அதிகாரத்தை அனுபவித்தவர்களுக்கும், இப்போதுதான் தலையெடுக்க ஆரம்பித்தவர்களுக்கும் இடையில் மோசடியான போட்டியை EWS உருவாக்குகிறது.
பிறப்பின் அடிப்படையில் சாதியப் படிநிலையைத் தக்கவைக்கும் பார்ப்பனீய சூழ்ச்சியாகவே EWS இடஒதுக்கீடு உள்ளது என்பது இப்படியான முறைகேடுகள் மூலம் உறுதியாகிறது.