
“தமிழ்த்தாய் வாழ்த்து முதல் மேகதாது வரை தவெக அரசின் நிலைப்பாடு”: ஒரு அரசியல் பார்வை
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் நிகழும் பல்வேறு விடயங்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு, உயர் மருத்துவ கல்வி இடங்கள் பறிபோனது, யுஜிசி, நீட் எதிர்ப்பு போராட்டம், மேகதாது அணை விவகாரம்) குறித்தும், இதில் தவெக அரசின் நிலைப்பாடு குறித்தும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ‘ஷர்மிளா டாக்கீஸ்’ ஊடகத்திற்கு ஜூலை 30, 2026 அன்று வழங்கிய நேர்காணல்:
ஊடகவியலாளர்: ஷர்மிளா டாக்கீஸ் நேயர்களுக்கு வணக்கம்.
இந்த நேர்காணலில் நாம் சந்திக்க இருப்பவர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள். வணக்கம்.
ஊடகவியலாளரின் கேள்வி: தவெக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கான முக்கியத்துவம், தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், “தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்தில் தான் பாடப்படும்” என்று சுற்றறிக்கை வெளியிடும் அளவிற்கு நிறைய உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது.
ஒருபக்கம் “ஊழலை ஒழிக்கிறோம், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்கிறோம், நிர்வாகச் சீர்கேடுகளைச் சரி செய்கிறோம்” என்று சொல்கிறார்கள். ஆனால் மறுபக்கம், ஆண்டாண்டு காலமாகப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகள் பறிப்போகின்றனவே என்ற கேள்வியும் எழுகிறது. நீங்கள் மாநில உரிமைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? மாநிலத்திற்கான மரியாதை இருக்கிறதா?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில உரிமையாகப் பார்க்கலாம். நம்முடைய தமிழ் மொழியின் மீது நமக்கு இருக்கக்கூடியப் பற்றின் வெளிப்பாடாக தமிழ்த்தாய் வாழ்த்திற்கான முன்னுரிமை இருக்கிறது. அது நமக்கான மரியாதை. ஆனால் அதையெல்லாம் நாம் இழந்து வருகிறோம். இந்த இடங்களில் எல்லாம் பாரதிய ஜனதா கட்சியுடன் எந்தவித உரசலும் வந்துவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா கட்சி இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, நீங்கள் ஆரம்ப கட்டத்திலேயே அதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், எதிர்த்து நிற்கவில்லை என்றால், அவர்கள் உங்களை மீறி மேலே போய்க்கொண்டே இருப்பார்கள்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லாமல் போனது, ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட செய்திதான். அப்படி நடக்கப்போகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம்தான். ஆனால் அதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை. அதற்கான வழிகாட்டுதலும் தரவில்லை. இறுதியில் நிகழ்வு நடந்த பிறகு கண்டனம் தெரிவிப்பது என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை. இங்கு இருப்பவர்களை எல்லாம் மடையர்களாகப் பார்க்கக் கூடாது. துணைவேந்தர் அவர்களே “எனக்கு இப்போது அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன” என்று சொல்லியிருக்கிறார். அப்போதெல்லாம் எதுவும் பேசாமல், முடிந்த பிறகு கண்டனம் தெரிவித்தால் நாம் நம்புவோமா? எந்தக் கட்சியாக இருந்தாலும் இப்படி செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.
“நாங்கள் இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம், எங்களுக்கு நேரம் கொடுங்கள்” என்று எப்படிக் கேட்க முடியும்? இந்த அரசை விட தமிழ் மொழி எத்தனை ஆண்டு காலம் பழமையானது. தமிழ் மொழிதான் எங்களுக்கு முக்கியமானது. “தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தேனும் விடேன்” என்பதை நாம் எப்படி மறந்திருக்க முடியும்? இந்த அரசு சந்தர்ப்பவாதமாகவும், கோழைத்தனமாகவும் நடந்துகொண்டது. அது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விடயம்.

இப்போது 151 மருத்துவ இடங்கள் (உயர் சிறப்புப் படிப்புகள்), குறிப்பிட்ட துறை சார்ந்து படிக்கக்கூடிய மருத்துவப் படிப்புகள், இந்தியாவிலேயே அதுபோன்ற பாடத்திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் இருக்கின்றன. அதை நிரப்பாமல் இருக்கக்கூடிய இடத்தை மொத்தமாகத் தாரை வார்த்துவிட்டது தவெக அரசு. அதாவது ஒன்றிய அரசின் கையில் ஒப்படைத்துவிட்டார்கள். மாநில அரசு நிரப்பவில்லை என்றால், ஒன்றிய அரசு நிரப்பலாம் என்ற நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
மாநில உரிமை என்ன? மாநிலம் எப்படி அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தது? என்ற வரலாறு இருக்கிறது. உதாரணமாக, கணையம் குறித்துப் படிக்க வேண்டும், அதைக் குறித்தான அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். பிறகு வாஸ்குலர் (Vascular) எனப்படும் இரத்த நாளங்களைப் பற்றிய அறுவைச் சிகிச்சைகள், இரத்த நாளங்களைப் பற்றிய படிப்புகள் – இதெல்லாம் குறிப்பிட்ட துறை சார்ந்த படிப்புகள். இந்தியாவில் வேறு எந்த மருத்துவக் கல்லூரிகளிலும் இவ்வளவு உயர் மருத்துவ கட்டமைப்பைக் அதிகமாகப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறது. நாம் அவ்வளவு உயரத்தை எட்டியிருக்கிறோம்.
அந்த இடத்தில் யார் படிக்கலாம் என்றால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கக்கூடிய, அரசு மருத்துவர்களாக வேலை செய்யக்கூடியவர்களுக்குப் படிப்பதற்கு முன்னுரிமை இருக்கிறது. ஆனால் நாம் இன்று 151 மருத்துவ இடங்களை இழந்து நிற்கிறோம். உயர் மருத்துவ இடம் ஒரு துறைக்கு இரண்டு பேர், நான்கு பேர் என்ற ஒற்றை எண்ணிக்கையிலோ இரட்டை எண்ணிக்கையிலோதான் இருக்கும். அதில் அதிகமாக, நூற்றுக்கணக்கில் சேர முடியாது. இரண்டு பேர், நான்கு பேர், எட்டு பேர் – இந்த மாதிரிதான் இருக்கும். அதில் 151 இடத்தை மொத்தமாக ஒன்றிய அரசின் கையில் ஒப்படைத்துவிட்டார்கள்.
கணையம் தொடர்பாக அல்லது இரத்தநாளங்கள் தொடர்பாக ஒரு சிறப்பு மருத்துவர் வேண்டும் என்றால், வருங்காலத்தில் நம்முடைய மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். (அரசு மருத்துவமனையில் இருக்க மாட்டார்கள்). இன்றைக்கும் விபத்தில் துண்டான கையை இணைத்தார்கள் என்று ஒரு செய்தி படிக்கிறோம். அதில் எலும்பு சம்பந்தப்பட்டதும் இருக்கிறது, இரத்தநாளங்கள் சம்பந்தப்பட்டதும் இருக்கிறது. சிறப்பு மருத்துவர்கள் இங்கே இருந்தால்தான் அந்த அறுவைச் சிகிச்சையைச் சிறப்பாகச் செய்ய முடியும். இப்போது அந்த இரத்த நாளங்களைப் பற்றிய படிப்பு என்பது வட மாநிலத்திற்குப் போய்விடும். அவன் இங்கே படித்துவிட்டு அவன் ஊரில் மருத்துவம் பார்க்க சென்று விடுவான். நம்முடைய அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவம் இருக்காது. இதையெல்லாம் விட்டு கொடுத்து விட்டனர்.
இதைக்கூடப் பேசி வாங்க முடியவில்லை என்றால் “இது என்ன அரசு? எதற்கு இப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்கிறோம். நீங்கள் (தவெக) புதிய துறையெல்லாம் உருவாக்க வேண்டாம். உருவாக்கின துறையில் வரக்கூடிய, படிப்பதற்கான உரிமைகளைப் பாதுகாப்பதற்குக்கூட தவெக அரசு ஆவன செய்யவில்லை. அவர் (முதல்வர்) இன்னும் சினிமாத்தனமாகவே எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்கிறார் என்று நமக்கு தோன்றுகிறது. எதைப் பாதுகாக்க வேண்டுமோ, அதைப் பாதுகாப்பதுதான் முதலமைச்சர் பதவியின் பணி. அதைத் தவிர மற்ற பணிகளைச் செய்துகொண்டிருந்தால், தினம் ஒரு நாடகத்தைச் செய்துகொண்டிருந்தால் அதை எவ்வாறு ஏற்றுக் கொள்வது?
ஊடகவியலாளரின் கேள்வி: ”அரசாங்கத்தை நடத்துவதற்கு நிதிகள் வேண்டும். அதற்கு மத்திய அரசினுடைய அணுகுமுறையை இப்படித்தான் கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது” என்கிறார்கள். இப்போது யூ.ஜி.சி விடயத்தில் கூட “மாநில அரசு ஒரு ஆளைப் போடுகிறோம், ஒன்றிய அரசு ஒரு ஆளைப் போடுங்கள்” என்பது போல தவெக சொல்கிறார்கள். யூ.ஜி.சி-யில் முன்னால் இருந்த மூன்று பேர் குழுவை, இப்போது ஐந்து பேராக போடலாம் என்ற ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கிறார்கள்.
தோழர் திருமுருகன் காந்தி பதில்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான பல்கலைக் கட்டுப்பாட்டுச் சட்ட வரைவு தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டது. அது உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி, “இதற்குக் கையெழுத்துப் போடவில்லை என்றால், நடைமுறைக்கு வந்ததாகவே ஒப்புதல்” என்று சொல்லித் தீர்ப்புக் கொடுத்துவிட்டார்கள். அப்போது அந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது என்று அர்த்தம். அதற்கு ஒரு தடையாணை இப்போது மே மாதத்தில் வாங்கியிருக்கிறார்கள். அந்தத் தடையை நீக்குவதற்கு எவ்வளவு நாள் ஆகப்போகிறது? தடை உத்தரவை ரத்து செய்து மறுபடியும் நடைமுறைக்கு வந்திருந்தால், கல்லூரிகள், பள்ளிகள் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிற்கு வரப்போகின்றன.

இப்போது இதைச் செய்வதற்குத் தானே உயர்கல்வித்துறை அமைச்சர் இருக்கிறார், அவர் என்ன செய்கிறார்? காங்கிரஸ்காரர்தானே? காங்கிரஸ்காரர்கள் பாதி சங்கிகள். வட இந்தியாவில் காங்கிரஸ் வெல்வதற்குக் காரணமே, “இவர்கள் அரை சங்கி என்றால், முழு சங்கியே பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு பி.ஜே.பி-க்கு ஓட்டுப் போட்டுவிட்டார்கள். காங்கிரஸ்காரர்கள் முழுக்க முழுக்கச் சங்கித்தனமாகத்தான் இருப்பார்கள். இன்றைக்கு உயர்கல்வித் துறையும் அந்த மாதிரிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. மனோன்மணியம் பல்கலைக்கழக விடயத்தில் அவர் ஒன்றும் பேசவில்லை. அவர் போகமாட்டாராம். இவர் போகவில்லை என்றால் அது பெரிய எதிர்ப்பாம்.
நான் சொல்கிறேன்: உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக்கூடிய அந்த அமைச்சர் (திரு. விசுவநாதன் அவர்கள்), தமிழ்நாட்டு உரிமைகள் எல்லாவற்றையும் கைகழுவிவிட்டு, சங்கித்தனமான வேலையைச் செய்துகொண்டே இருந்தால், கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்வார். எல்லா கல்லூரிகளுக்குள்ளும் நுழைய முடியாத அளவுக்குக் கருப்புக் கொடி போராட்டத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டிய நிலைமையும், ஆசிரியர்கள் எதிர்த்து நிற்க வேண்டிய நிலைமையும் உருவாகப்போகிறது. இதுதான் நடக்கப்போகிறது. இங்கே மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ் கட்சித் தலைவர்) வீராவேசமாக வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். உங்க அமைச்சர் என்ன வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்? அவரை பி.ஜே.பி-யில் போய்ச் சேரச் சொல்லுங்கள். எதற்கு இங்கு இருக்கிறார்?
ஊடகவியலாளரின் கேள்வி: அரசு ஒப்புதல் கொடுத்துத்தான் அமைச்சர் பேசப்போகிறார் தானே?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: அவர்தானே அமைச்சர்? அவர்தானே முடிவெடுக்க வேண்டும்? பேச வேண்டும்? அதை மீறி தவெக அரசு தவறான நிலைப்பாடு எடுக்கிறது என்றால், அப்போது வேண்டுமென்றால் இவர் வந்து கருத்து சொல்லட்டும் – “என் கையை மீறிப் போகிறது” என்று. இப்போது என்ன செய்கிறார்? அமைச்சராக பணி செய்யவில்லையென்றால் அவரை பதவி விலகச் சொல்லுங்கள். தி.மு.க கூட்டணியில் ஜெயித்துவிட்டு, பிறகு தவெக கூட்டணியில் அமைச்சராக ஆகிவிட்டு, ‘பா.ஜ.க’தனமான வேலையைச் செய்யக்கூடிய ஒருவரை நாம் ஏன் அமைச்சராக வைத்திருக்க வேண்டும்? இதை மிகவும் மோசமான ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். மாநில உரிமை நம் கையை விட்டுப் போகக்கூடிய விடயங்கள் நடக்கின்றன. இதில் நாம் சமரசம் செய்ய முடியாது.
“ஒன்றிய அரசோடு சமரசமாக இருந்தால்தான் நிதி கிடைக்கும்” என்றால், நீங்கள் (தவெக) எதற்கு ஆட்சியைக் கைப்பற்றி வைத்திருக்க வேண்டும்? அதற்கு பா.ஜ.க கையில் கொடுத்துவிட்டுப் போங்கள். உங்கள் கையில் எதற்கு நாங்கள் ஆட்சியைக் கொடுக்க வேண்டும். பா.ஜ.க ஆட்சி வந்துவிட்டால் பா.ஜ.க-க்குப் பிரச்சனையே கிடையாதே. நிதியும் நல்லமுறையில் கிடைக்கும். “நாங்கள் கேட்டோமா, எங்கள் நிதியை வாங்கிக் கொடு, இந்த வேலையைப் பார்” என்று? “உங்களால் (தவெக அரசால்) ஆட்சி நடத்த முடியுமா, முடியவில்லையா?” என்று சொல்லுங்கள்.

ஊடகவியலாளரின் கேள்வி: “சண்டை போட்டால் தீர்வு கிடைத்துவிடுமா?” என்று ஒரு வியாக்கியானம் சொல்லப்படுகிறது.
தோழர் திருமுருகன் காந்தி பதில்: அப்போது ”சினிமாப் படத்தில் வில்லனை எதிர்த்து சண்டை போடாமல், போய்க் காலில் விழு” என்று சொல்லுங்களேன். அவர் 67 படங்கள் நடித்திருக்கிறார். அதில் எல்லாம் வில்லன் காலில் விழுந்து சண்டையைத் தவிர்த்த படம் எடுத்தீர்களா? அங்கே மட்டும் வில்லனைப் போட்டு அடிக்கிறான், உதைக்கிறான், மிதிக்கிறான் என்றுதானே இன்றைக்கு ஹீரோவாகி, அதை வைத்துத்தானே நீங்கள் முதலமைச்சராக இருக்கிறீர்கள்? முதலீடு வேறு என்ன இருக்கிறது?
இதே தங்கை அனிதா இறந்தபோது மாணவர்களோடு நீட் தேர்வுக்கான போராட்டத்தை வீதியில் இறங்கிப் பண்ணினார்களா? விஜய்யின் கட்சிக்காரர்கள் பண்ணினார்களா? அன்றைக்கு அவர் ரசிகர்கள் வீதியில் இறங்கினார்களா? அல்லது அவர் வீதியில் இறங்கி போராடினாரா?
ஊடகவியலாளரின் கேள்வி: “அவர் அனிதா வீட்டிற்குப் போனாரே!
தோழர் திருமுருகன் காந்தி பதில்: வீட்டிற்கு எல்லோரும் தான் போவார்கள். அன்றைக்கு நான் (திரு) சிறையில் இருந்தேன். அந்த சமயத்தில் சிறையில் இருந்தவன் சாப்பிடுவதற்கு மறுத்தான். சிறு குற்ற வழக்கில் வந்தவர்கள், திருட்டு வழக்கில் வந்தவர்கள், கொலை வழக்கில் வந்தவர்கள் எல்லோருமே அன்றைக்கு அனிதா இறந்தது கேட்டு மன இறுக்கத்தில் இருந்தார்கள். அன்றைக்கு அதிகாரிகள் வந்து சமரசம் பேசினார்கள். “உணவு எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டீர்கள் என்றால் பெரிய பிரச்சனை வரும்” என்று சமரசம் பேசினார்கள். அந்த அளவிற்கு சிறையில் இருக்கக்கூடியவனுக்கே, அரசியலே தெரியாமல், அரசியலுக்கு எதிராக இருக்கக்கூடியவனுக்கே கூட அவ்வளவு தூரம் உளப்பூர்வமாக வருத்தப்படக்கூடிய விடயமாக (அனிதாவின் மரணம்) இருந்தது.
விஜய் கட்சி ஆட்கள் என்ன செய்தார்கள்? நான் கேட்க வேண்டுமென்றால் 1000 விடயம் கேட்க இருக்கிறது. முதலமைச்சராக யார் யாரையோ பார்த்துவிட்டோம். நீட் தேர்வுக்கான போராட்டத்திற்கு நீங்கள் (விஜய்) என்ன செய்தீர்கள்? என்ன இடத்தை ஒதுக்கிக் கொடுத்தீர்கள்? திரும்பத் திரும்ப மே 17 மட்டும்தானே இந்தக் கேள்வியை கேட்கிறது.
மெரினா கடற்கரை என்பது போராட்டத்திற்குரிய இடம். தமிழர்களுடைய அரசியல் நிகழ்வுகள் எல்லாம் மையமாக நடந்த இடம் மெரினா கடற்கரை. அங்கே போய் நான் மெழுகுவர்த்தி ஏந்தியதற்காக கைது செய்யப்பட்டேன். தேசத்துரோக வழக்கெல்லாம் என் மேல் ஏவப்பட்டது. ஆனாலும் நான் விடமாட்டேன். அது தந்தை பெரியார் பேசிய இடம். அறிஞர் அண்ணா பேசிய இடம். காமராஜர் அவர்கள் பேசிய இடம். அவ்வளவு வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை இன்றைக்கு கால்பந்து விளையாட்டு போட்டுக் காண்பிப்பது, இவருடைய சினிமாவைப் போட்டுக் காண்பிப்பது, ஐ.பி.எல் விளையாட்டுப் போட்டுக் காண்பிப்பது என்று இதை ஒரு வேலையாகச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஊடகவியலாளரின் கேள்வி: “தவெக-வை நோக்கிக் கேள்வி கேட்டால், தி.மு.க ஆட்சிக் காலத்தில் நீங்கள் பேசினீர்களா? தி.மு.க செய்தபோது நீங்கள் அமைதியாகத்தானே இருந்தீர்கள்?” என்று ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது.

தோழர் திருமுருகன் காந்தி பதில்: தி.மு.க ஆட்சிக் காலத்தில் அதிகமாகக் கேள்வி கேட்டது மே 17 இயக்கம்தான். தவெக-காரர்களுக்கு நான் சொல்கிறேன். திமுக ஆட்சியில் நான் ஒன்பது வழக்குகள் வாங்கியிருக்கிறேன். உங்கள் கட்சிக்காரன் என்ன வழக்கு வாங்கியிருக்கிறான்? என சொல்லச் சொல்லுங்கள். உங்கள் கட்சித் தலைவர் விஜய் என்ன வழக்கு வாங்கினார்? 41 பேர் இறந்ததற்கே வழக்குப் போடவில்லை. மகிழ்ச்சியாகத்தான் சுற்றிக்கொண்டிருந்தீர்கள். அச்சமயத்தில் உங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. நாங்கள் வாங்கிய வழக்கை நீங்கள் (தவெக) வாங்கினீர்களா? ஆனால் நாங்களோ இதே மெரினாவைத் திறக்கச் சொல்லி போராடியிருக்கிறோம். தி.மு.க ஆட்சியில் மெரினாவைப் போராட்டக் களமாகப் பயன்படுத்தியதில் என் மேல் வழக்கு இருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியிலும் வழக்கு உண்டு, தி.மு.க ஆட்சியிலும் வழக்கு உண்டு.
தி.மு.க ஆட்சிக் காலத்தில் வழக்கு வாங்கிய ஒரு ஆள், ஒரே ஒரு நபர் யாராவது உள்ளார்களா என்று ஒரு தவெக-காரனைக் கைநீட்டிச் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். நாங்கள் (மே 17) என்னென்ன போராட்டங்களை நடத்தினோம் என்று சொல்கிறோம். அந்த மாதிரிப் போராட்டம் நடந்ததா என்பதாவது தெரியுமா அந்தக் கட்சிக்காரர்களுக்கு?
எங்களை சமூக வலைதளத்தில் அவதூறு செய்யும் அவர்களுக்கு (தவெக கட்சிக்காரர்களுக்கு) நான் ஒன்று சொல்கிறேன். பா.ஜ.க எங்களை அவதூறு செய்திருக்கிறது. நாம் தமிழர் செய்திருக்கிறார்கள். அ.தி.மு.க செய்திருக்கிறது. தி.மு.க-வும் செய்திருக்கிறது. இப்போது நீங்கள் புதிதாக வந்திருக்கும் கத்துக்குட்டிப் பசங்கள். நாங்கள்(மே 17 இயக்கம்) என்ன தேர்தலில் போய் நின்று ஓட்டுக் கேட்டு எம்.எல்.ஏ ஆகப் போகிறோமா? தவெக என்ன நரேந்திர மோடியின் ஐ.டி விங்கை விடவா பெரிய ஐ.டி விங் வைத்திருக்கப் போகிறது? எங்களை ட்ரோல் பண்ணினால் நாங்கள் கண்டுகொள்ளவே மாட்டோம். துடைத்துப் போட்டுவிட்டுப் போய்கொண்டே இருப்போம்.
அன்றைக்கு எடப்பாடிக்கு எதிரான ஆட்சி, மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது, பா.ஜ.க-வுக்குச் சாதகமான ஆட்சியாக இருக்கிறது என்று அம்பலப்படுத்தி, முன்னணியில் நின்று போராடிய இயக்கம் மே 17 இயக்கம். எடப்பாடியார் அவர்களுக்கு எதிரான மிகப்பெரிய அரசியலைக் கட்டி எழுப்பியது மே 17 இயக்கம். இரண்டு முறை நான் சிறைக்குப் போயிருக்கிறேன். அதற்காக தேசத்துரோக வழக்கு, UAPA வழக்கு, குண்டர் சட்டம் – இத்தனையும் எதிர்கொண்டிருக்கிறேன். அன்றைக்கு எடப்பாடி ஆட்சியை வீழ்த்தியதில் மே 17-க்கு முக்கியமான பங்கு இருக்கிறது. நாங்கள் ஏதோ தினம் ஒரு டயலாக், தினம் ஒரு அறிக்கை என்று இருக்கும் ஆள் கிடையாது. செய்து காட்டிவிட்டுப் போய்விடுவோம். மேலோட்டமாக மதிப்பிட்டுப் போக வேண்டாம்.
அன்றைக்குப் “பெரியார் சிலையை உடைப்பேன்” என்று சிலர் சொன்னபோது, எல்லா அமைப்புகளையும் ஒன்று திரட்டி நாங்கள் நின்றோமே? திருச்சியில் கருஞ்சட்டை பேரணி நடத்திக் காண்பித்தோமே? அதனால் மே 17-ஐ சும்மா போற போக்கில் கையாள்வதாக நினைக்க வேண்டாம். இந்தச் சின்னப் பசங்க செய்யும் விளையாட்டுத்தனமான வேலைகளையெல்லாம் எங்களிடம் செய்ய வேண்டாம். தவறு என்றால் தவறு என்று சொல்வோம்.

”ஆளுநர் ஆட்சி வரக்கூடாது, தவெக ஆட்சி அமைய உரிமை இருக்கிறது, இதை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும்” என்று முதலில் பேசியது மே 17 இயக்கம். தமிழ்நாட்டின் நலன் எதுவோ, அந்த நலனைப் பொறுத்து, அன்றைக்கு என்ன தேவையோ அதைப் பொறுத்து நாங்கள் பேசுவோம். இன்று நீங்கள் தவறு செய்தால் தவறு என்று கூறுவோம்.
தி.மு.க காலத்தில் என்ன போராடினார் விஜய் அவர்கள்? உங்கள் பட்டியலைக் கொடுங்கள். நான் எங்களுடைய பட்டியல் தருகிறேன். எங்கள் பட்டியலை பத்தால் பெருக்கினால், அந்த அளவிற்குக் கூட தவெக போராட்டம் நடத்தியது கிடையாது. உங்கள் பட்டியலில் அந்த அளவிற்குக் கூட செய்தது கிடையாது. அதனால் மே 17 இயக்கத்தை தவெக குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
ஊடகங்கள் முழுமையாக எங்களை மறுக்கின்றன. போராட அனுமதி இல்லை. எங்கள் சமூக வலைத்தளங்கள் எல்லாம் முழுக்க தடுக்கப்படுகின்றன. இதையெல்லாம் மீறித்தான் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எத்தனை அடக்குமுறை, எத்தனை வழக்குகள். எங்கேயுமே கருத்து சொல்ல முடியாத நிலைமை. எங்களுடைய சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்ட நிலைமையை மீறி, மே 17 இன்னும் இயங்குகிறது. இன்னும் மே 17 இயக்கம் உயிரோடு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. அப்படியென்றால் எங்களுடைய இயக்கம், எங்களுடைய வேலை என்பது எவ்வளவு தீவிரமானதாக இருக்கும்!
தமிழ்நாட்டின் நலன் என்று வந்துவிட்டால் மே 17 சமரசம் செய்யாது. எங்களை அடக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் எத்தனையோ பேர்! இன்றைக்கு மட்டுமல்ல, 2009, 2010, 2011, தி.மு.க ஆட்சிக்காலத்திலேயே நாங்கள் எதிர்த்தோம். அதற்குப் பிறகு ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்காலத்தில், அதற்குப் பிறகு ஓ.பி.எஸ் ஆட்சிக்காலத்தில், அதற்குப் பிறகு எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில், அதற்குப் பிறகு கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் என எங்கள் போராட்டம் தொடர்ந்தது.
தி.மு.க ஆட்சிக்காலத்தில் மட்டும் எங்களுக்கு என்ன இடம் இருந்தது? எந்த ஊடகத்தில் கூப்பிட்டார்கள்? இல்லையே. எந்த திராவிட இயக்கம் எங்களை மேடையில் ஏற்றினார்கள்? நாங்களும் பெரியார் இயக்கம்தான். திராவிட இயக்கம்தான். பெரியார் கொள்கையையும் திராவிட இயக்கத்தையும் முன்னுக்கு நகர்த்துகிறோம். இங்கு எத்தனை இயக்கங்கள் இருக்கின்றன, எங்களை மேடையில் ஏற்றினார்கள்? தி.மு.கவுக்கு பயந்து எங்களோடு பேச மறுத்த இயக்கங்களை எங்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களிடமிருந்து ஒதுங்கி நின்ற/தள்ளி நின்ற இயக்கங்களைத் தெரியும். எங்களைத் தனிமைப் படுத்தினார்கள். இதையெல்லாம் கடந்து தான் நாங்கள் தனித்து நிற்கிறோம். நிமிர்ந்து நிற்கிறோம்.
எங்களை எத்தனை அவதூறுகள் செய்தார்கள்? பா.ஜ.க-வில் என்னை கிறிஸ்தவர் என்று சொன்னார்கள். தெலுங்கர் என்று நாம் தமிழர் சொன்னது தானே? நாங்கள் சந்திக்காத அவதூறா என்ன? அதனால் “அப்போது செய்தாயா, இப்போது செய்தாயா” என்ற கதையெல்லாம் நாங்கள் கண்டுகொள்ளவே மாட்டோம். உங்கள் (தவெக) கட்சி, தமிழ்நாட்டின் நலனுக்கும், தமிழ்நாட்டின், தமிழர்களின் சுயமரியாதைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். தவெக அரசு அந்த சுயமரியாதை தளத்தில் நின்று பேச வேண்டும்.
ஊடகவியலாளரின் கேள்வி: இன்றைக்கு மேகதாது விவகாரத்தில் “நாங்கள் கடிதம் எழுதுகிறோம்” என்கிறார்கள். ஒருபக்கம் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்திருக்கிறார். “நாங்கள் போனில் பேசினோம், நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். கர்நாடகாவில் எங்களுடைய நீர்நிலைகளை ஹெலிகாப்டரில் வந்து பார்க்கச் சொல்லியிருக்கிறேன். ஹெலிகாப்டர் கூட தயாராகத்தான் இருக்கிறது” என்று டி.கே. சிவகுமார் அழைப்பு விடுக்கிறார். இதை எப்படிப் பார்ப்பது?
தோழர் திருமுருகன் காந்தி பதில்: இரண்டு முதலமைச்சர்கள் சந்தித்துப் பேசுவது என்பது சட்டப் போராட்டத்திற்கு முன்னால் நல்ல விடயம்தான். பேசித் தீர்ப்பது என்பது வரவேற்புக்குரிய விடயம்தான். அவர் “கர்நாடகாவில் நீர்நிலைகளுடைய நிலைமையைப் பாருங்கள்” என்று சொல்கிறார் என்றால், அதைப் பார்ப்பதற்கு முன்னால் “காவிரி நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள்” என்று கூப்பிட வேண்டும்.

தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசம். கர்நாடகம் மழை மறைவுப் பிரதேசம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு ஜீவநதியாகக் காவிரியைச் சொல்கிறோம். ஆனால் கர்நாடகத்திற்கு நிறைய நதிகள் இருக்கின்றன. அதிகமான தண்ணீர் கொள்ளளவு கொண்ட அணைகள் அங்கே நிறைய இருக்கின்றன. காவிரியை மட்டும் நம்பி அவர்கள் இல்லை. ஒரு சில மாவட்டங்கள் மட்டும்தான் காவிரியை நம்பியிருக்கின்றன. பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில்தான் இருக்கின்றன. அதனோடு மேற்கிலிருந்து பாயக்கூடிய நதிகள், சிறு சிறு நதிகள் எல்லாமே அவர்களுக்குத்தான் இருக்கிறது. கிழக்கில் பாயக்கூடிய நதிகளும் அவர்கள் இடத்திலிருந்துதான் கிளம்பிப் போகிறது. அதனால் அவர்களுக்குத் தண்ணீர் என்பது பிற நதிகளிலிருந்து கிடைப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ள இடம்.
தமிழ்நாட்டை விட மக்கள் தொகை குறைவு. அவர்களுக்கு விவசாயப் பாசனப் பரப்பு மிகக் குறைவு. நமக்குத்தான் ஒரு சமவெளிப் பிரதேசம் இருக்கிறது. ஒரு டெல்டா பிரதேசம் இருக்கிறது. அதனால் நமக்கு விவசாய நிலங்களின் மதிப்பு அதிகம். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 13 / 14 மாவட்டங்கள் காவிரியின் கரையை ஒட்டித்தான் அமைந்திருக்கின்றன. மிக முக்கியமான நகரங்கள் – ஓசூர், தர்மபுரியில் தொடங்கி சேலம், கரூர், மேட்டூர், ஈரோடு, திருச்சி, நாகப்பட்டினம், சிதம்பரம் வரைக்கும் இருக்கக்கூடிய நகரங்கள் மட்டுமல்லாது, சென்னை நகரத்தினுடைய தண்ணீர் தேவையைக் காவிரிதான் பூர்த்தி செய்கிறது. பாண்டிச்சேரியினுடைய தண்ணீர் தேவையைக் காவிரிதான் பூர்த்தி செய்கிறது. காரைக்காலின் தேவையை அதுதான் பூர்த்தி செய்கிறது. இத்தனை மாவட்டங்களுக்கும் நீர் ஆதாரமாக காவிரி இருக்கிறது. தமிழ்நாட்டினுடைய மூன்றில் ஒருவர் காவிரித் தண்ணீர் குடிக்கிறார் என்ற நிலைமையில், காவிரியை நாம் விட்டுத் தர முடியாது.
கர்நாடக முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வந்து பார்க்கட்டும். அதைத்தான் தவெக அரசு சொல்ல வேண்டும். பேச்சுவார்தை நடத்துவதை வரவேற்கிறோம். ஆனால் என்ன விதிமுறைகள் (terms) நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால் இப்போது காவிரித் தண்ணீர் திறந்துவிட வேண்டும். திறந்துவிடவில்லை. அடுத்து மேகதாது அணை. இரண்டு பிரச்சனை இருக்கிறது. இரண்டும் ஒன்றல்ல. அந்த இரண்டு பிரச்சனைகளையுமே பேசித் தீர்த்து, தமிழ்நாட்டிற்குச் சாதகமான தீர்ப்பை வாங்கித் தர வேண்டும். இல்லையென்றால், பேச்சுவார்த்தைகளை முடித்த பிறகு கர்நாடகத்திற்குச் சாதகமாகப் போனால் கேள்வி எழும். அந்தக் கேள்வியை நாம் தவிர்க்க முடியாது.
ஊடகவியலாளர்; நிறைய விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி.
தோழர் திருமுருகன் காந்தி: நன்றி!