சைவம் புனிதம்!! அசைவம் தீட்டா?? – இந்தியப் பார்ப்பனியம் திணிக்கும் உணவு அரசியல்

நெல்லையில் ஜெயந்த் என்ற இளைஞன் தன் பிரியாணி கடைக்கு முன் பிள்ளையார் பிரியாணி சமைப்பது போன்ற ஒரு பதாகை வைத்ததற்காக காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். நீதிமன்றமும் சிறைக்கு அனுப்புகிறது. இதுவரை தமிழ்நாட்டில் நிகழ்ந்திராத சம்பவம் இது.

ஒரு தனி மனிதனின் விளம்பரம், அவனது உணவுப் பண்பாட்டு வெளிப்பாடு கூட இன்று காவல்துறை, நீதித்துறை அடக்குமுறைக்கும், இந்துத்துவ வெறுப்பு அழுத்தத்திற்கும் உள்ளாகிறது. இது தற்செயல் அல்ல.

இதே அரசியலின் நீட்சியாக, டெல்லியில் நடந்த BRICS மாநாட்டு இரவு விருந்து வரை தொடர்கிறது. உலகத் தலைவர்களுக்கு இந்தியாவை அறிமுகப்படுத்துகிறோம் என்ற பெயரில் சைவம் மட்டுமே பரிமாறப்பட்டது. இந்தியாவின் 70% மக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்ற உண்மையை மறைத்து, ‘சைவம் மட்டுமே இந்திய மரபு’ என்று உலக அரங்கில் பொய் சொல்லும் திட்டமிட்ட முயற்சி இது. இதனை எதிர்கட்சிகளும், பத்திரிகையாளர்களும் பன்முகத்தன்மை அழிக்கும் செயல் என கண்டித்தனர்.

வங்கத்தில் பாகேஸ்வர் என்றும் சாமியார் மற்றும் விசுவ இந்து பரிசத் அமைப்பும் “துர்கா பூஜை பந்தல்களில் மீன், இறைச்சியை தடை செய்ய வேண்டும்” என்கிறார்கள்.மீன் இல்லாமல் வங்காளியே இல்லை என்பதுதான் அம்மண்ணின் மரபு. அந்த மரபின் மீதே ஏவப்படும் தாக்குதல் இது.

நெல்லை கடை வாசலில் தொடங்கி, டெல்லி விருந்து மேசை வழியாக, வங்காள பந்தலில் வந்தது வரை இந்த சம்பவங்கள் வெவ்வேறு அல்ல; ஒரே நூலில் கோர்க்கப்பட்டவை. உணவின் பெயரால் ஒரு பண்பாட்டு மேலாதிக்கத்தை நிறுவும் பார்ப்பனிய சைவ அரசியலின் திட்டமிட்ட வடிவங்கள்.

இந்தியா என்றால் சைவ உணவு மட்டும்தானா?

இந்தியா என்பது ஒரே மாதிரியான உணவுப் பழக்கம் கொண்ட துணைக்கண்டம் கிடையாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி உணவுப் பண்பாடு இருக்கிறது. சிலர் சைவம் சாப்பிடுகிறார்கள்; சிலர் அசைவம் சாப்பிடுகிறார்கள்; சிலர் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அசைவம் சாப்பிடுகிறார்கள்.

அப்படியிருக்கும்போது, இந்தியாவின் உணவு பிரதிநிதித்துவத்தை சைவ உணவுப் பழக்கத்தின் மூலமாக மட்டும் காட்டுவது சரியா என்பதுதான் கேள்வியாக எழுகிறது.

உணவு எப்போது அரசியலாகிறது?

உணவு என்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால் ஒருவர் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்று அரசு, அதிகாரம், சமூக அழுத்தம் அல்லது மத அடையாளத்தின் பெயரில் கட்டுப்படுத்தத் தொடங்கும்போதுதான் உணவு அரசியலாகிறது.

பண்டிகை காலங்களில் இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என்கிற உத்தரவுகள், குறிப்பிட்ட பகுதிகளில் இறைச்சி அல்லது மீன் விற்பனை குறித்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் என அரசின் மூலமாகவும் உணவு அரசியலாகிறது.

வட இந்தியாவில் மாட்டிறைச்சி சந்தேகத்தில் ‘கௌ ரக்ஷா’ குண்டர்களால் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள், கொலைகள் நடந்து கொண்டிருப்பதும் உத்திரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் வடநாட்டின் உணவு அரசியலாக இருக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் லூப் ரோடு மீன் சந்தையிலும். நடைபயிற்சிக்கு மீன் வாசனை இடையூறாக இருக்கிறது என்று ஒரு நீதிபதியே வழக்கு போட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கினார்.

தங்களது உணவு பழக்கத்தை வைத்து, தலைமுறையாக தொழில் செய்யும் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மறுக்கும் ஆதிக்கம் இந்துத்துவ அரசு முதல் நீதிபதிகள் வரை புரையோடியுள்ளது.

உணவு என்பது இயற்கை, புவியியல், பொருளாதாரம், பண்பாடு, குடும்பப் பழக்கம் என பல காரணிகளை மையமாகக் கொண்டது.

கடற்கரைப் பகுதியில் வாழும் ஒருவரின் பாரம்பரிய உணவில் மீன் இருப்பது இயல்பானது. விவசாயப் பகுதிகளில் வேறு உணவுகள் முக்கியமாக இருக்கலாம். மலைப்பகுதிகளில் வேறு உணவுப் பழக்கங்கள் இருக்கலாம். மேற்கு வங்காளத்தில் பிராமணர்கள் கூட மீன் சாப்பிடுகிறார்கள்..

சைவ உணவை உயர்ந்ததாகவும், அசைவ உணவை தாழ்ந்ததாகவும் பார்க்கும் மனநிலை பார்ப்பனிய அதிகார மட்டத்தினால், இந்துத்துவ அமைப்புகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது.

சமீபத்தில், பிள்ளையார் சதுர்த்தி அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் ஒரு உணவகத்தில் கறி உணவு உண்டதை  புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். உடனே சங்கிகள் அவரது பதிவுகளில் இருந்து குவியலாக வந்து தாக்கத் தொடங்கினர். கறி சோறை கடவுளுக்கு படையலிடுவதும், தமிழர்களின் வாழ்வியலில் முதன்மையான உணவு கறி உணவே என்பதற்குரிய இலக்கிய ஆதாரங்கள் எடுத்துக்காட்டியும் விடாமல் தொடர்ந்து அருவருப்பாக அவர் பதிவில் குவிந்தனர். பார்ப்பனியம் கட்டமைத்த உணவின் புனித அரசியல் தமிழர் பண்பாட்டையும் புறக்கணிக்கும் வகையில்,  இப்படியான வன்ம சிந்தனைகளை உருவாக்கியுள்ளதை சங்கிகள் நிரூபித்தனர்.

இதைத்தான் தந்தை பெரியார், “பார்ப்பானும் சைவனும் மாமிசம் சாப்பிடுவதில்லை என்று தங்களுக்கு பெருமை ஏற்படுத்திக் கொண்டு, மாமிசம் சாப்பிடுபவர்களை இழிவாய், கீழ்மக்களாய் கருதுகிறார்கள்” என்று கூறினார். காபி, அரிசி சாதம் போன்ற சத்தற்ற உணவு முறையை திணித்து, மாட்டிறைச்சி போன்ற சத்துள்ள, குறைந்த செலவிலான உணவை மறுக்கச் செய்வதே இந்த சூழ்ச்சி என்றும் அவர் எழுதினார்.

அன்று பெரியார் எதிர்த்த அதே உணவு மேலாதிக்கம்தான் இன்று ஜெயந்த் மீது வழக்காகவும், பிரிக்சு மாநாட்டின் விருந்தாகவும், துர்கா பூஜை தடையாகவும், தோழரின் தட்டில் எட்டிப் பார்ப்பது வரையிலும் உருவெடுத்து நிற்கிறது.

மேலும், உணவை வைத்து மனித குணத்தை மதிப்பிடும் மனநிலையும் வேத இதிகாசங்களால்  உருவாக்கப்பட்ட மோசமான உணவு அரசியலும் இங்கிருக்கிறது. பகவத் கீதையில்  17:8-10 -ல் உணவை சாத்விகம், ராஜஸம், தாமஸம் என உணவுத் தன்மையைப் பிரிக்கிறது. சைவம்  அமைதி, பொறுமைக்கும் அசைவம் ஆக்ரோஷம், சோம்பலுக்கும் என பிரிக்கிறது. இதற்கு எந்த ஆய்வும் இல்லை என்றாலும் பகவத்கீதையில் சொல்லப்பட்டது என்பதற்காக இன்றுவரை சைவம் புனிதமாகவும், அசைவம் தீட்டாகவும் கற்பிக்கப்படுகிறது. 

யூத இனப்படுகொலை செய்த ஹிட்லர் வாழ்நாள் முழுவதும் சைவ உணவைத்தான் உண்டதாக சொல்லப்படுகிறது. காந்தியை கொலை செய்த கோட்சேவும், அதற்கு தூண்டுதலாக இருந்த சாவர்க்கரும் கூட சைவ உணவைப் பின்பற்றியவர்களே. சைவம் உண்பதால் மட்டுமே ஒருவர் அமைதியானவர் ஆகிவிட முடியாது என்பதற்கு இதுவே சாட்சி.

இன்றைய நிலையில் சைவ உணவுக்கு தேவைப்படும் அரிசி கோதுமை, காய்கறி, பழம், பருப்பு, சிறுதானியங்கள் இன்று ஏழைக்கு எட்டாத விலையில் உள்ளன.

இந்த பொருளாதார சூழலில் “இதைத்தான் சாப்பிட வேண்டும்” என சைவ உணவை திணிப்பது ஏழை மீது சுமத்தும் சுமை. குறைந்த விலையில் புரதச்சத்து கிடைக்கும் மாட்டிறைச்சி போன்றவையே அவர்களின் தேவையாக இருக்கிறது. ஏழைக்கு உணவு முதலில் வாழ்வுரிமை; அதற்கு பின்புதான் கலாச்சாரம்,

நெல்லை ஜெயந்த் கடை பேனர் முதல் டெல்லி BRICS விருந்து வரை, லூப் ரோடு மீன் சந்தை முதல் வங்காள துர்கா பூஜை பந்தல் வரை, நடப்பது ஒன்று தான். உணவு என்பது தனிப்பட்ட விருப்பம் என்பதில் இருந்து, புனிதம், தீட்டு என்று தீர்மானிக்கும் அதிகார அரசியலாக மாறி இருக்கிறது.

அசைவ உணவே தமிழர்களின் உணவு. முருகனுக்கு உணவும் கறி சோறும் சேர்ந்து படையல் இட்ட காட்சிகள் எல்லாம் நம் இலக்கியங்கள் கூறுகின்றன. சாமானியர்களின் தெய்வமான அய்யனாருக்கும், கருப்புசாமிக்கும், மாரியம்மனுக்கும் கறி உணவு இல்லாமல் தமிழர்கள் படைப்பதில்லை. இந்த வரலாற்று இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு, புனிதம் தீட்டு என்ற கற்பிதங்களை உடைத்து, இந்துத்துவ பார்ப்பனியம் நிறுவி வைத்திருக்கும் உணவு அரசியலை தகர்ப்பதே நமக்கான அரசியலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »