
“எங்களுக்கு நிதி தேவையில்லை; எங்களுக்கு நீதி தான் தேவை.” – நேபாளத்தின் இந்தக் கேள்வி ஒரு நாட்டின் கேள்வி அல்ல; எதிர்கால தலைமுறைகளின் கேள்வி. நேபாளத்தின் இந்தக் குரல் இன்று இமயமலையில் இருந்து மட்டும் எழவில்லை. மாறாக, உலகின் மிகக் குறைந்த அளவு கார்பனை வெளியிடும் நாடுகளில் ஒன்றாக இருந்தும், காலநிலை மாற்றத்தின் மிகக் கொடூரமான விளைவுகளைச் சந்திக்கும் அனைத்து நாடுகளின் குரலாக அது மாறியுள்ளது.
ஆகஸ்ட் 26, 2026 அன்று நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவு, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் நேபாளத்தின் ராசுவா உள்ளிட்ட பகுதிகளைப் பேரழிவுக்குள் தள்ளின. இதனால் கிராமங்கள், பாலங்கள், சாலைகள், எல்லைச் சோதனைச்சாவடிகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் முழுமையாக அழிந்தன; நீர்மின் திட்டங்களின் சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கினர்.
இன்று வரை உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. சமீபத்திய ராய்ட்டர்ஸ்(Reuters) நாளிதழ் தகவலின்படி, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளைச் சேர்த்து 1,399 பேர் உயிரிழந்ததாகவும், 5,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் அடிப்படைக் கேள்வி என்ன?
பேரழிவுக்குப் பிறகு சர்வதேச சமூகத்திடம் நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கானல் முக்கியமானதொரு அரசியல் விவாதத்தை முன்வைத்துள்ளார்.
பூமியை வெப்பமாக்கும் வாயுக்கள் வெளியேற்றத்தில் நேபாளத்தின் பங்கு மிகமிகக் குறைவு (0.1%-க்கும் குறைவு). ஆனால், பனிப்பிரதேசம் சூழ்ந்த இடத்தில் இருப்பதால், காலநிலை மாற்றத்தால் உருவாகும் பேரழிவுகளின் தாக்கத்தை அது மிக அதிகமாகச் சந்திக்கிறது. அதனால், பேரழிவுக்குப் பிறகு வழங்கப்படும் உதவியை வெறும் “தொண்டு” அல்லது “நன்கொடை” என்று பார்க்கக் கூடாது; அதிக அளவில் புவி வெப்பமயமாக்கும் வாயுக்களை வெளியிடும் நாடுகளின் நெறிமுறை மற்றும் பொறுப்பின் அடிப்படையிலான காலநிலை இழப்பீடாக பார்க்க வேண்டும் என்பதே நேபாளத்தின் வாதமாக உள்ளது. இதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாடுகளை நேபாளம் குற்றம் சாட்டியுள்ளது.
இமயமலைப் பகுதி உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்து வருவதால், நேபாளத்தின் பனிப்பாறைகள் கடந்த பத்தாண்டுகளில் கணிசமான அளவில் பனியை இழந்துள்ளன. எனவே, இந்த நாடுகளை நேபாளம் சுட்டிக்காட்டுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு அல்ல.
அமெரிக்கா, சீனா, இந்தியா — ஏன் இந்த மூன்று நாடுகள்?
2024ஆம் ஆண்டின் புதைபடிவ எரிபொருள் சார்ந்த கார்பன்-டை-ஆக்சைடு வெளியீட்டைப் ‘குளோபல் கார்பன் பட்ஜெட்’ (Global Carbon Budget) கீழ்க்கண்டவாறு கணக்கிடுகிறது:
- சீனா: உலகின் சுமார் 32%
- அமெரிக்கா: சுமார் 13%
- இந்தியா: சுமார் 8%

இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து உலகளாவிய கார்பன் வெளியீட்டில் பாதிக்கும் மேற்பட்ட பங்கை வெளியிடுகின்றன. ஆண்டுதோறும் வெளியாகும் கரியமில வாயுவின் அளவை மட்டும் வைத்து காலநிலைப் பொறுப்பை முடிவு செய்ய முடியாது. தொழிற்புரட்சி காலம் தொட்டு இன்று வரை, வளிமண்டலத்தில் யார் எவ்வளவு கரியமில வாயுவைச் சேர்த்துள்ளனர் என்பதே வரலாற்றுப் பொறுப்பு ஆகும். இந்த அடிப்படையில், வரலாற்றில் அமெரிக்காவின் பங்கே மிக அதிகம் என்று அந்நாட்டின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ‘பெர்னி சாண்டர்ஸ்’ குறிப்பிட்டுள்ளார். அதே வேளையில், கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் அதிக கரியமில வாயுவை வெளியிடும் நாடாக சீனா அமெரிக்காவை முந்தியுள்ளது.
வளர்ச்சி மற்றும் போர்களினால் ஏற்படும் தாக்கம்:
மனித சமூகம் வளரத் தொழிற்சாலைகள், மின்சாரம், சாலைகள், நகரங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வளரும் நாடுகள் வளராமல் இருக்க வேண்டும் என்று யாரும் கூற முடியாது. ஆனால் கேள்வி என்னவென்றால் — “மாசுபடுத்தியவர்கள் வேறு; அதன் பாரத்தை சுமப்பவர்கள் வேறு. யாருடைய அழிவில் இந்த வளர்ச்சி?” என்பதுதான்.
இன்றைய சூழ்நிலைக்குக் காலநிலை மாற்றம் மட்டுமே காரணமல்ல; போர்களும் மிகப்பெரிய கார்பன் வெளியிட்டுக்கு அடிப்படை காரணமாகும். ஆனால் போர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளால் வெளிப்படும் கார்பன் அளவு பற்றி உலகம் இன்னும் போதுமான அளவில் பேசவில்லை.
- அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர்: சமீபத்தில் தீவிரமடைந்த அமெரிக்கா-இசுரேல் மற்றும் ஈரான் இடையேயான போரின் தாக்கம் மனிதகுலத்தைத் தாண்டிச் சுற்றுச்சூழலிலும் பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுகளின்படி, இந்தப் போரின் முதல் 14 நாட்களில் மட்டும் சுமார் 5 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு இணையான புவி வெப்பமயமாக்கும் வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது ஐஸ்லாந்து (Iceland) போன்ற ஒரு நாட்டின் ஓராண்டு மொத்த வெளியீட்டை விட அதிகமாகும். ஈரானில் உள்ள எண்ணெய் ஆலைகள் மீதான குண்டுவீச்சுகள், எரிபொருள் கிடங்கு தீ விபத்துக்கள், கட்டிடங்களின் இடிப்பு மற்றும் ஏவுகணை பயன்பாடுகள் ஆகியவை இணைந்து இந்த அதீத கார்பன் அமிலங்களை வெளியிட்டுள்ளன.
- ரஷ்யா-உக்ரைன் போர்: 2022 முதல் 2026 தொடக்கம் வரையிலான நான்கு ஆண்டுகளில், சுமார் 311 மில்லியன் டன் கரியமில வாயு வெளியாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
- இசுரேல்–காசா போர்: 2026-ல் வெளியான ஆய்வின்படி, போருக்கு முந்தைய மற்றும் பிந்தைய மறுகட்டமைப்பு உள்ளிட்ட மொத்த வெளியீடுகள் 33.2 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடு என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய இராணுவ சக்திகள் ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள் மற்றும் இராணுவத் தொழில்துறை மூலம் உருவாக்கும் கார்பன் வெளியீடுகள் ஏன் உலகளாவிய காலநிலை கணக்கீட்டில் வெளிப்படையாகப் பதிவு செய்யப்படுவதில்லை என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது.
அறிவியலும், அரசியல் மறுப்புகளும்:
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் காலநிலை அறிவியலை ஏற்றுக்கொள்பவர்களும், அதனை அரசியல் ரீதியாக மறுப்பவர்களும் நீண்ட காலமாக இருந்துள்ளனர்.
உதாரணமாக, முன்னாள் செனட்டர் ஜேம்ஸ் இன்ஹோஃப், “நாங்கள் மட்டும் வெளியீடுகளைக் குறைத்தால் உலக வெப்பநிலை உடனடியாக குறையுமா?” என்று கேள்வி எழுப்பினார். ஆனால் காலநிலை அமைப்பு என்பது ஒட்டுமொத்த உலகப் பொது அமைப்பு. ஒரு நாடு தன் பங்கைக் குறைப்பதால் அடுத்த நாளே வெப்பநிலை உடனடியாகக் குறையும் என்கிற நேரடி கணக்கு இல்லாவிட்டாலும், ஒவ்வொரு டன் கார்பன் குறைப்பும் வளிமண்டலத்தின் மொத்தச் சுமையைக் குறைக்கும் என்பதே அறிவியல் உண்மை.
கோபர்நிகசின் (Copernicus Climate Change Service) தரவுகளின்படி, 2021–2025 ஐந்தாண்டு சராசரி உலக வெப்பநிலை, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது சுமார் 1.3–1.4°C அதிகமாகியுள்ளது. அதாவது, பூமி சூடாவது எதிர்காலக் கணிப்பு அல்ல; அது இன்று கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மையாக இருக்கிறது.

தட்பவெப்ப மாற்றத்தை எதிர்கொள்ளும் எந்தவொரு திட்டமும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். ஒரு அரசின் உண்மையான கடமை, தன் காலத்தில் மக்களை வாழ வைப்பது மட்டுமல்ல; நாளைய தலைமுறை வாழ்வதற்கான பாதுகாப்பான உலகை விட்டுச் செல்வதும் தான்.
காலநிலை மாற்றம் என்பது இயற்கை கோளாறு அல்ல. அது உலக முதலாளித்துவ – ஏகாதிபத்திய வளர்ச்சி மாடலின் விளைவு.
தொழிற்புரட்சி, போர்கள் போன்றவற்றால் பெயரில் வளங்களைச் சூறையாடி, உலகை 250 ஆண்டுகளாக மாசுபடுத்தியது அமெரிக்க – ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள். இன்று ஆண்டுதோறும் அதிக கரியைக் கொட்டுவது சீனா, அமெரிக்கா, இந்தியா போன்ற G20 வல்லரசுகள். ஆனால் அதன் முதல் பலி நேபாளம் போன்ற, 0.1% கூட மாசுபடுத்தாத சிறு தேசங்கள் தான். இதுதான் காலநிலை அநீதி.
அதேபோல் போர்களின் கார்பன் உமிழ்வை யாரும் கணக்கில் காட்டுவதில்லை. ரஷ்யா-உக்ரைன் போரில் 311 மில்லியன் டன், காசாவில் இஸ்ரேல் கொட்டிய குண்டுகளில் 33.2 மில்லியன் டன், அமெரிக்கா-ஈரான் மோதலில் 14 நாளில் ஒரு நாட்டின் ஓராண்டு உமிழ்வு என கணக்கிடப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியங்கள் தங்கள் ஆயுத வியாபாரத்திற்காக நடத்தும் போர்கள், பூமியையே வாயுக் கிடங்காக மாற்றுகின்றன. இந்த வல்லரசுகளின் சுமையை யார் சுமப்பது?
இது நேபாளத்தின் பிரச்சினை மட்டுமல்ல. இமயம் உருகினால் கடல் ஏறும். கடல் ஏறினால் வட மாநிலம் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கடற்கரை அழியும். நம் சென்னை, நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம் மூழ்கும். ஏற்கனவே கோபர்நிகஸ் தரவு 1.4°C வெப்பம் ஏறிவிட்டதாக சொல்கிறது.
இந்த பூமி கார்ப்பரேட்டுகளின் லாபக் கருவி அல்ல, அது நம் பிள்ளைகளிடமிருந்து நாம் வாங்கிய கடன். அதை ஏகாதிபத்தியங்கள் கருகிய நிலமாக மாற்ற அனுமதிக்க கூடாது. இயற்கையை மையமாக வைத்த புதிய வளர்ச்சி அரசியலே இன்றைய தேவை.
எனவே நேபாளம் கேட்கும் இழப்பீடு என்பது உதவி மட்டும் அல்ல; அது வரலாற்றுப் பொறுப்பு. மாசுபடுத்தியவன் நிதி மட்டுமல்ல நீதியையும் தர வேண்டும் என்னும் தார்மீகக் குரல். இயற்கை பேரழிவுகள் சூழும் இக்காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் போர்களைத் திணித் சூழலை கெடுக்கும் ஏகாதிபத்திய நாடுகளை எதிர்த்து இந்த குரலை வலிமையாக எழுப்ப வேண்டியது இன்றியமையாதது.