
ஐரோப்பிய மார்க்சியத்தை அப்படியே லத்தீன் அமெரிக்காவில் பொருத்த முடியாது என்று மறுத்து, பழங்குடிகளின் கூட்டு வாழ்க்கையில் இருந்து ‘இன்கா கம்யூனிசத்தை’ உருவாக்கிய பெரு நாட்டின் மார்க்சிய சிந்தனையாளர் ‘ஹோசே கார்லோஸ் மரீயாதெகீ’ பற்றியது இந்நூல்.
தேசியத்தை மறுக்கும் மார்க்சியர்களுக்கும், தேசியத்தின் தேவையை உணர விரும்புவோருக்கும் மரீயாதெகீ ஒரு சிறந்த வழிகாட்டி. அதைத்தான் மார்க்சிய சிந்தனையாளர் எஸ். பாலச்சந்திரன் இந்நூல் வழியாக நமக்கு கடத்துகிறார்.
இந்நூலில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன. லத்தீன் அமெரிக்காவில் மார்க்சியம் பரவியதைக் குறித்து முதல் அத்தியாயம் விளக்குகிறது.
ஆரம்பத்தில் ஐரோப்பிய கோட்பாடாக இருந்த மார்க்சியத்தை, உள்ளூர் பழங்குடிகளின் கூட்டு வாழ்க்கைக்கும், காலனிய சூழலுக்கும் ஏற்ப மாற்றி அமைத்தவர்கள் தான் அங்கிருந்த சிந்தனையாளர்கள். அதில் முதன்மையானவர் மரீயாதெகீ என்பதை முதல் அத்தியாயம் பதிவு செய்கிறது.
இரண்டாம் அத்தியாயம் 1960-களுக்குப் பிந்தைய தத்துவங்களை பேசுகிறது. ஏழை நாடுகளின் பின்தங்கிய நிலைக்கு வளர்ச்சியின்மை அல்ல, பணக்கார நாடுகளின் சுரண்டலே காரணம் என்ற ‘சார்பு கோட்பாட்டை’யும் அதன் ஆய்வாளர்களையும் ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.
1960-க்குப் பிறகு லத்தீன் அமெரிக்க தத்துவம் அப்படியே திசை மாறுகிறது. கடவுள் ஏழைகள் பக்கம் என்கிறார் குஸ்தாவோ. ஒடுக்கப்படுவதன் காரணத்தை படிப்பதே கல்வி என்கிறார் பிரையர். தத்துவத்தின் மையமே பழங்குடிகளும் பெண்களும் தான் என்கிறார் துசெல். இந்தத் தத்துவங்களுக்கு இடையில், மூன்றாம் கட்டமாக லத்தீன் அமெரிக்க அரசியல் பயணத்தை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கியூபாவில் சேகுவேராவின் ஆயுதப் புரட்சி, சிலியில் தேர்தல் வழியாக சோசலிசத்தை நிறுவிய அலெண்டே, சில நாடுகளில் நடந்த நிலச் சீர்திருத்தங்கள், நிகரகுவா சாண்டினிஸ்டா புரட்சி, 90-களுக்குப் பிறகு மெக்சிகோ சபாதிஸ்டா எழுச்சி, அமெரிக்காவை ஓரங்கட்ட உருவான பொலிவாரிய புரட்சி, இறுதியாக ‘புயென் விவிர்’ எனும் நல்வாழ்வு மார்க்சியம் வரை இப்பயணம் விரிகிறது.

இந்நூலில் மூன்றாம் அத்தியாயத்தில், லத்தின் அமெரிக்க சோசலிச சிற்பியாக திகழ்ந்த ‘ஹோசே கார்லோஸ் மரீயாதெகீ’ முன்வைத்த கோட்பாடுகள் அலசப்படுகின்றன. அவரின் காலம் 1894 – 1930. இந்நூலின் இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்ட 1960 – க்கு பின்பான தத்துவங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வதால், இவரே “லத்தின் அமெரிக்க மார்க்சியத்தின் தந்தை” என அறியப்படுகிறார்.
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், முதல் உலகப் போருக்கு பிறகான காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த அவர், 1923 – க்குப் பிறகு பெருவுக்கு திரும்புகிறார். 1926-ல் பண்பாட்டுத் துறையில் புரட்சிகர மாற்றத்திற்காக ‘அமவூதா’ பத்திரிகை துவங்குகிறார். பழங்குடிகளை மையமாக வைத்த தேசிய அடையாளத்தை ‘அமவூதா’ பேசியது. அறிவுசார் ஆன்மீகப் புரட்சிக்கான முன்னோடி குரலாக அது இருந்தது.
1928-ல் ‘பெரு யதார்த்தம் பற்றிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள்’ என்கிற புகழ்பெற்ற நூலைப் படைக்கிறார். பெரு, லத்தீன் அமெரிக்க கண்டத்தின் நிலைமைகளை பொருள் முதல்வாத பகுப்பாய்வில் ஆய்ந்த கட்டுரைகளாக அவை விளங்கின.
‘கலைஞனும் காலமும்’ என்கிற தொகுப்பு முதலாளித்துவ சமூகத்தில் கலையின் வீழ்ச்சியை ஆராய்ந்தது. கலை அதன் உள்ளார்ந்த மதிப்புக்காக அல்லாமல், முதலாளித்துவ ரசனைக்காக படைக்கப்படும் போது தாழ்கிறது என்கிறார் மரீயாதெகீ. பத்திரிகைகளும் கலை ஆளுமைகளும் சந்தையில் விலைபோனதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இன்று இந்திய சூழலில் திணிக்கப்படும் கலைகளுக்கும் குறிப்பாக திரைக்கலைகளுக்கு இதை பொருத்திப் பார்க்கலாம்.
ஐரோப்பிய மார்க்சியத்தை அப்படியே பெருவில் பொருத்த முடியாது என்று திட்டவட்டமாக மறுத்த மரீயாதெகீ.
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை எது திரட்டுகிறது? அவர்களை விட சமமற்ற முறையில் அதிக சக்தி வாய்ந்த எதிரியை எதிர்கொள்ளும் துணிவையும் வலிமையையும் அவர்கள் எங்கிருந்து பெறுகிறார்கள் என்கிற தேடலில், அவர் கண்ட பதில் தான் “புரட்சிகரத் தொன்மம்” எனும் அடையாளம். இந்த தொன்மம் என்பது பிற்போக்கான பிம்பங்கள் இல்லை, மாறாக ஆழமான சுயத்தை திரட்டுகின்ற, தூங்கிக்கிடக்கும் சக்தியை எழுப்புகின்ற ஒரு வீரஞ்செறிந்த சக்தி. இது சமூக உறவுகளை மாற்றும் சக்தி வாய்ந்த கூட்டுச் செயல்பாட்டுக்கான கருவி எனக் கண்டறிகிறார்.
இன்கா பழங்குடிகளின் கூட்டு வாழ்க்கையில் இருந்தே ‘இன்கா கம்யூனிசம்’ என்ற தேசிய கம்யூனிசத்தை உருவாக்குகிறார். பெருவில் நில உடைமைக்கு அடுத்து முதலாளித்துவம் என்கிற படிநிலை வளர்ச்சி இல்லை. மாறாக நிலப்பிரபுத்துவமுமம், முதலாளித்துவமும் சேர்ந்தே சுரண்டும் நிலை தானிருந்தது. இந்த நிலையினை மாற்ற பழங்குடிகளின் தொன்மத்தை கையிலெடுக்கிறார் மரீயாதெகீ. முந்தைய இன்கா பழங்குடிகளின் ‘அய்லூ’ எனப்படும் கூட்டு வாழ்வியல் முறையும், இயற்கை வழிபாட்டு முறையுமே கம்யூனிசமாக தான் இருக்கிறது. அதை நவீனமாக்கினாலே போதும் என்கிறார். ‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்’ என்பதன் வடிவம்தான் இது.

இன்கா பழங்குடிகளின் வழிபாட்டு முறை, வாழ்வியல் சடங்குகள் அனைத்தும் மூடநம்பிக்கை என்று ஐரோப்பிய மார்க்சியர்கள் போல மரீயாதெகீ கூறவில்லை. இன்கா மதம் ஐரோப்பிய மதம் போல ஆதிக்க மதம் அல்ல, அது வாழ்வியல் மதம் என்று கூறினார். அவர் நாத்திகராக இருந்தாலும், இன்கா வழிபாட்டு முறையில் இருந்த கூட்டு வாழ்வு தத்துவம், ஒழுக்கம், பகிர்வு மனப்பான்மை போன்ற பண்பாட்டுப் பெருமைகளை மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்கிறார். அதுவே ஒரு தார்மீக சக்தியாக நவீன சோசலிசத்தைக் கட்டி எழுப்பும் என்கிறார்.
இப்படியாக கூட்டு வாழ்வியல் முறை வாழ்ந்த பூர்வகுடிகளை ஸ்பானிய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த நிலப்புரபுத்துவம் பண்ணை அடிமைகளாக மாற்றியது. அதற்குப் பின் வந்த முதலாளித்துவம் தொழில் அடிமைகளாக மாற்றியது. இரண்டும் அவர்களை அடிமையாக்கும் சமூகக் கட்டமைப்புகளை செய்தது. அதன் மூலமாக அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை விதைத்தது என்கிறார் மரீயாதெகீ. அந்த உணர்வில் இருந்து மீட்டு, சுயமரியாதை மீட்கப்பட்டால் தான் அவர்களின் முந்தைய தொன்மத்தில் இருந்த உயிர்ப்பை எடுத்து, புரட்சியைக் கட்ட முடியும் என்பது அவரது வாதம்.
நம் தமிழர்களும் இன்கா பழங்குடிகள் போல சமத்துவக் கட்டமைப்பில் வாழ்ந்தவர்களே. ஆரிய பார்ப்பனர்கள் இங்கு வந்த பின்பே அரசர்களிடம் அண்டி பிழைத்து நில உடைமையாளர்களாக மாறுகிறார்கள். சமத்துவமாய் வாழ்ந்த மக்களை பிரிவினைப்படுத்த, அவர்களிடம் தாழ்வுணர்ச்சியை உருவாக்கிய சாதி, மதம், சாஸ்திரம், சடங்கு போன்ற மூடநம்பிக்கைகளைப் புகுத்தினர்.
பெருவில் இன்கா மக்களை அடிமையாக்கும் சமூகக் கட்டமைப்புகள் போல், இங்கும் சமூக கட்டமைப்புகள் பார்ப்பனீயத்தால் கட்டி எழுப்பப்பட்டன.
பெரு நாட்டின் ஆதிக்கக் கட்டமைப்புகளை உடைத்து, பாட்டாளிகளுக்கு சுயமரியாதை உணர்வை கொடுத்தால் தான் புரட்சிக்கான மனநிலை உருவாகும் என நினைக்கிறார் மரீயதெகீ. இங்கு, ஆரிய நிலவுடைமை, பனியா முதலாளித்துவத்திடம் இருந்து தமிழர்கள் சுயமரியாதை உணர்வு பெற்றால் தான் புரட்சிக்கான மனநிலை உருவாகும் என கணிக்கிறார் பெரியார். இந்த சுயமரியாதை மீட்டெடுக்கும் புள்ளி தான் பெரியாரும், மரீயாதெகீயும் சந்திக்கும் புள்ளியாக இருக்கிறது.
இந்தப் புள்ளியே திராவிடக் கொள்கையாக இங்கு எழுந்தது. அதிலிருந்தான இயங்கியலே தமிழ்த்தேசியமாக உருப்பெறுகிறது. நூற்றாண்டு கால திராவிடக் கருத்தியலைக் கடந்தும் திராவிடப் பழங்குடிகளாக வாழ்ந்ததே தமிழர்களின் தொன்மையாக இருக்கிறது. அந்தப் பழங்குடி வாழ்வினில் புகுந்த பார்ப்பனியம் நம் திராவிடத் தொன்மங்களில் (நாட்டார் வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு) புகுத்திய மூட நம்பிக்கைகளைக் களைத்து விட்டால், அந்த வழிபாடு சமத்துவத்தின் மேல் கட்டியெழுப்பப்பட்டதாவே இருக்கும். அந்தப் தொன்மம் ஊடாக கூட்டுணர்வை வென்றெடுப்பதே புரட்சிகரத் தொன்மமாக, மண்ணுக்கேற்ற தேசியமாக மாறும். அதுவே தமிழ்த்தேசியம். அது மரீயாதெகீயின் இன்கா கம்யூனிச தேசியத்தை ஒத்ததாக இருக்கும்.
இந்த உணர்வை மீட்டெடுக்கவே மே 17 இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் ‘அறிஞர் அவையம்’ எனும் தமிழர்களின் சமூக, பண்பாட்டு, அரசியல் மீட்சிக்கான மாநாட்டை நடத்துகிறது. தமிழர்களின் விழுமியங்களை மீட்கும் முயற்சியைத் தொடர்கிறது.

லத்தீன் அமெரிக்க சூழலுக்கு ஏற்ப மரீயதெகீ முன்வைத்த “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்கிற கோட்பாடு, தமிழ்த்தேசிய இனத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உயிர்ப்புள்ளதாக இன்றும் திகழ்கிறது
மரீயதெகீயின் சிந்தனைகள் இன்றும் சோசலிசம், பழங்குடி உரிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு குறித்த உலகளாவிய விவாதங்களுக்கு உயிரூட்டுகின்றன. உலகமயமாக்கலும் பன்னாட்டு மூலதனமும் விளிம்புநிலை மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை புரிந்துகொள்ள அவர் ஒரு வரலாற்றுப் பார்வையைத் தருவதை இப்புத்தகத்தின் மூலம் ஆழமாகப் புரிய வைக்கிறார் ஆசிரியர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள்.
தேசியத்தை மறுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும், வறட்டுத்தனமான வாதத்தால் பெரியாரியத்தை இறுக்க நினைக்கும் பெரியாரியவாதிகளுக்கும் தேவைப்படும் முக்கிய நூல் இது.
தொடர்புக்கு : திசை புத்தக நிலையம்,
5/9, Parthasarathy Pettai Steet, Anna Salai, Teynampet, Chennai, India, 600086,
098840 82823