
தோழர் முனைவர் திருமா அவர்களின் 65வது பிறந்தநாள் விழா & தமிழ்த்தேசிய மாநாட்டு மலர் வெளியீட்டு விழா ஆகத்து 29, 2026 அன்று சென்னை- வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது. இதில் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு வழங்கிய வாழ்த்துரை.
சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றி இருக்கக்கூடிய முனைவர் தோழர் திருமாவளவன் அவர்களுக்கு மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிகழ்வு வேறு எந்த அரசியல் நிகழ்ச்சியும் விட மாறுபட்டது. ஏனென்றால் இங்கே மகிழ்ச்சியாக கூடியிருக்கின்றோம். தலைவருடைய பிறந்தநாளை கொண்டாடுகின்ற விதமாக, திரளுகின்ற தோழர்கள் கருத்தியலாக தயாராக வேண்டும் என்று நினைப்பவர் முனைவர் திருமா அவர்கள். இந்த சந்திப்பிற்கு கூட ஒரு கருத்தியல் தலைப்பை ”தமிழ் தேசிய எழுச்சி” அரசியலை அவர் முன்வைத்திருக்கிறார். காலத்தே சரியாக முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தியலாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது.
அதற்கு மின்பு எழுச்சி மிகுந்த மாநாடாக ஊளுந்தூர்பேட்டையில் நடந்ததனுடைய தொகுப்பு சிறப்பு நூலாக வெளியிடக்கூடிய, இந்த நிகழ்விலே பங்கு பெற்றிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய அனைத்து ஆளுமைகளுக்கும், இந்த நிகழ்விலே வாழ்த்துரை வழங்க வந்திருக்கக்கூடிய நடிகர் பார்த்திபன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து தோழமைகளுக்கும் நான் சார்ந்திருக்கக்கூடிய மே பதினேழு இயக்கத்தின் சார்பாக வணக்கங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்பானவர்களே! தமிழ் தேசியம் என்பதை மிக தெளிவாக உளப்பூர்வமாக கருத்தியலாக தோழர் தமிழரசன் எப்படி வரையெறுத்தாரோ, அப்படியான ஒரு அரசியலை தொடர்ச்சியாக முன்னிறுத்தக்கூடிய ஒரே இயக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்த தமிழ் தேசியத்தை வீதிதோறும் பேசி வருகிறது. சாதி ஒழிப்பில்லாமல் தமிழ்த்தேசியம் சாத்தியமில்லை. ஆனால் இங்கே சாதியை வைத்துதான் தமிழ் தேசியம் என்று பேசி கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு இருக்கக்கூடிய பிரச்சனை என்னவென்றால், சாதி ஒழிந்த தமிழ் தேசியமா, சாதி இணக்கமாக இருக்கக்கூடிய தமிழ் தேசியமா என்கின்ற இரண்டு பிளவுகளை கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள். இதிலே சாதியை ஒழித்தால்தான் தமிழ் தேசியம் சாத்தியமாகும். இல்லை என்றால், அது தமிழ் தேசியமே இல்லை என்பதை தான் வரலாறு சொல்லியிருக்கிறது.
தமிழ் தேசியத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், தமிழ்த்தேசியம் என்பது ஒரு இலக்கு. அந்த இலக்கை அடைவதற்கான கருத்தியல் தேவை. இங்கு இலக்கை பேசுகிறார்கள், அதற்கான கருத்தியலை பேசவில்லை. தோழர் திருமா அவர்கள் அந்த கருத்தியலை பேசுகிறார். அதனால்தான் இலக்கு தெளிவாக இருக்கிறது. இலக்கிற்கும் இலக்கை அடைவதற்கான கருத்தியலுக்குமான உறவுகளை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
இலக்கு தமிழ் தேசிய விடுதலை என்றால், எதிலிருந்து விடுதலை அடைவது? ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைவது. அந்த ஆதிக்கம் எப்படி எல்லாம் இருக்கிறது? இந்திய தேசியமாக இருக்கிறது, பார்ப்பனியமாக இருக்கிறது, இந்து மதமாக இருக்கிறது, சாதியாக இருக்கிறது. இதிலிருந்தெல்லாம் விடுதலை அடைவதுதான் தமிழ் தேசிய விடுதலையாக இருக்க முடியும்.

அப்படியாக இவற்றிலிருந்தெல்லாம் விடுதலை அடைவதற்கான கருத்தியல் ஆயுதத்தை எங்கிருந்து எடுப்பீர்கள்? தமிழ்த்தேசிய விடுதலை எப்படி கிடைக்கும்? கருத்தியல் ஆயுதம் இல்லாமல், தமிழ்த்தேசியத்தை சாத்தியப்படுத்த முடியாது. எல்லோரும் இலக்கை பேசுகிறார்கள். ஆனால் அந்த தமிழ் தேசிய இலக்கை அடைவதற்கான ஆயுதம் அவர்களிடத்தில் கிடையாது. தமிழ் தேசியத்தை அடைவதற்கான கருத்தியல் ஆயுதம் அம்பேத்கரியமாக இருக்கிறது; பெரியாரியமாக இருக்கிறது; திராவிடமாக இருக்கிறது; மார்கசியமாக இருக்கிறது; ஏகாதிபத்திய எதிர்ப்பாக இருக்கிறது; பெண்ணிய விடுதலையாக இருக்கிறது. இவை அனைத்துமே ஐமுனை கொண்ட விடுதலை சிறுத்தைகளின் உடைய நட்சத்திரமாக இருக்கிறது. இதைத்தான் கருத்தியலாக/குறியீடாக வைத்திருக்கிறார்கள்.
ஆக தமிழ் தேசியத்தை இங்கே குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீ உன் சாதியை தூக்கிக் கொண்டு வா, நான் என் சாதியை தூக்கிக் கொண்டு வருகிறேன். நாமெல்லாம் சாதிகளாக ஒன்றிணைவோம் என்று சொல்கிறார்கள். நாம் ஒன்றிணைவதை தடுப்பதே சாதிகளாகத்தானே இருக்கிறது.
இன்றைக்கு இருக்கக்கூடிய சூழலில், எது இலக்கு? எது எதிரி? என்பதை ஒரு ஒரு குழப்பமான சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் எக்காலத்திலும் ஒற்றை எதிரிதான். அது பார்ப்பனிய சனாதனம் என்கின்ற ஒற்றை எதிரிதான். நமக்கு இருக்கக்கூடிய அத்தனை இழிவுகளுக்கும் காரணமாக இருக்கிறது.
தோழர் திருமா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை சனாதன எதிர்ப்பை பேசுகிறார். நான் என்னுடைய கல்லூரி காலத்தில் மாணவப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், 1996ல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து நான் அவரை சென்று சந்தித்திருக்கின்றேன். எனது மாணவர் காலத்தில் அவர் எனக்கு அறிமுகம். அன்றிலிருந்து இன்றுவரை நாங்கள் பார்க்கின்றோம். ஒரு தமிழ்த்தேசிய கருத்தியலை தேர்தல் அரசியலோடு பொருத்திக் கொள்வது என்பது மிகவும் நெருடலான ஒரு சிக்கலான ஒரு அரசியல் கேள்வி. ஆனால் மிக அருமையாக அதை பொருத்தி பார்க்கின்றார்.
அம்பேத்கரிய வழியிலே அதிகாரத்தில் பங்கு என்றால் அதை எப்படி அடைவது, அதிகாரத்தில் பங்கை வைத்துக்கொண்டு இந்திய தேசியத்திற்குள்ளாக தமிழ் தேசியத்தை பேசுவதற்கான வழி என்ன? என்பதை அவர் கண்டடைகின்றார். அதிலே இன்றைக்கு அவர்(திருமா) முன்வைப்பதிலே மிக முக்கியமானது தேசிய இனங்கள். தங்கள் தேசிய இன உரிமையை பேச வேண்டும் என்று அனைத்து தேசிய இனங்களையும் சென்று சந்திக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தோழர் திருமா அவர்கள் சொல்லி இருக்கக்கூடிய மிக முக்கியமான வரலாற்று வாசகம். அது தேசிய இனங்களின் உரிமையை பற்றி, பிற தேசிய இனங்களிடத்தில் பேச போகிறேன் என்று திருமா சொல்லி இருக்கிறார். இது விவாதமாக இருக்க வேண்டிய பொருள். தமிழ்நாட்டில் கவனத்தை பெற்றிருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டிலே சச்சரவுகள் தான் கவனத்தை பெறுகின்ற ஒழிய, கருத்தியல் கவனத்தை பெற மறுக்கின்றன. இதுவரை இந்தியாவில் பேசாத கருத்தியல் அவர் பேசி இருக்கிறார். அது என்ன? தேசிய இனங்கள் தங்களது விடுதலை உணர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்த தேசிய இனங்களுக்கு பாடம் எடுப்பதற்காக தோழர் திருமாவளவன் அவர்கள் செல்கிறார்கள். பிற தேசிய இனங்களை சந்திக்கிறேன் என்று சொல்லுகிறார்கள்.
அன்பானவர்களே! இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த தேசிய இனங்களும், தாங்கள் தேசிய இனம் என்று உணர்ந்தால் தான், தேசிய இன விடுதலை என்பதை நாம் வென்றெடுக்க முடியும். அப்படி என்றால் இங்கே அண்டையில் இருக்கக்கூடிய ஆந்திராவோ, கர்நாடகமோ, கேரளமோ எடுத்துக்கொண்டால் தேசிய இன உணர்வோடு அவர்கள் செயல்படவில்லை. இவர்களை எல்லாம் யார் அரசியல்படுத்துவது? மராத்தியர்களை, குஜராத்திகளை, பெங்காளிகளை, ஒடியா மக்களை யார் அரசியல் படுத்துவது? அந்த அரசியல் படுத்துகின்ற பொறுப்பை இங்கே தோழர் திருமா அவர்கள் சுமந்து செல்கின்றார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் வாழ்த்தி வரவேற்க வேண்டிய கூற்றும் அரசியல் செயல்பாடும் அது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
ஏனென்றால் இந்த அரசியல் செயலை வேறு எந்த தலைவரும் இதுவரை சொல்லவில்லை. தோழர் திருமா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். தமிழ் தேசியம் தனித்து நின்று சண்டை போடுகின்ற அந்த பலுவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கக்கூடிய பெரும் பொறுப்பை அவர் எடுத்திருக்கிறார். அந்த வகையிலே அந்த முயற்சி என்பது வரலாற்றிலே நிச்சயமாக எழுதி வைக்கப்படும். அவர் பாராளுமன்றத்தில் பேசுகிறார். இங்கே வீதியிலே அரசியல் பேசுகிறார். வீதியில் பேசுகின்ற அரசியலை பாராளுமன்றத்தில் பேசுகிறார். பாராளுமன்றத்தில் சொல்லுகின்ற உண்மைகளை எல்லாம் வீதியிலே மக்களிடத்தில் அரசியல் படுத்துகின்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்? இப்படியான ஒரு அரசியல் தலைமை அதாவது ஒடுக்கப்பட்ட மக்கள்தான் தமிழ் தேசிய விடுதலையினுடைய முன்னணிப்படையாக இருக்க முடியும். அவர்கள்தான் தமிழ் தேசிய விடுதலைக்கு தலைமை தாங்க முடியும்.
ஏனென்றால் அவர்கள்தான் அனைத்து வகைகளிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த மக்கள் எழுந்தால்தான் தமிழ்த்தேசியம் என்பது எழுமே ஒழிய, இல்லை என்றால் அது மூழ்கி போகும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லாம் அரசியல் ஆற்றலாக எழலாம் என்று சொன்ன தலைவரை நான் 2000 வருட காலகட்டத்தில் பார்க்கிறேன். எனக்கு தோழர் திருமா அவர்கள் தெரிகிறார்.

தமிழ்நாட்டினுடைய 2000 ஆண்டுகால வரலாற்றில் இந்த மக்களை அமைப்பாக்கி, அமைப்பான மக்களை அரசியல் படுத்தி, அரசியல் படுத்தப்பட்ட மக்களை லட்சியவாதிகளாக மாற்றி, லட்சியவாதம் கொண்ட மக்களை எல்லாம் அதிகாரத்திலும் கொண்டு செல்லுகின்ற ஒரு பெரும் பொறுப்பை அவர் சுமந்து கொண்டிருக்கிறார்.
அவர் எந்த இடத்திலும் தனக்கு இந்த அதிகாரம் வேண்டும் என்ற விருப்பத்தில் எந்த செயலும் செய்யவில்லை. இத்தனை மக்களை அமைப்பாக்குவது என்பது விளையாட்டான காரியமல்ல. இருப்பதிலே பாட்டாளி மக்களை அரசியல் படுத்துவதும் அமைப்பாக்குவதும் ஒரு மாபெரும் வேலை. இந்தியாவிலே வேறு எந்த தேசிய இனத்திலும் நடந்ததா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. தோழர் திருமா அவர்கள் அதை சாதித்திருக்கிறார்கள்.
யோசித்து பாருங்கள். பட்டியல் சமூகத்திலிருந்து ஒரு தலைவர் எழுந்து வர வேண்டும் என்றால், இந்த நாட்டிலே தமிழ்நாட்டிலே யார் ஆதரிக்கிறார்கள்? எந்த பின்புலம் இருக்கிறது? தமிழ்நாட்டின் அரசியலில் கடந்த 40 ஆண்டு காலத்தில் எடுத்துக் கொண்டீர்கள் என்றால், முதலாளிகளின் ஆதரவில்லாத எந்த அரசியல் கட்சியும் அதிகாரத்தை நோக்கி நகர முடிந்தது இல்லை. இடைநிலை சாதிகளில் இருக்கக்கூடிய, முதலாளிகளின் உடைய ஆதரவில்லாமல் யாரும் அதிகாரத்தை நோக்கி நகர முடியாத நிலை இருந்ததை உடைத்தவர் தோழர் திருமா அவர்கள். எந்த பின்பலமும் கிடையாது. முதலாளிகளின் ஆதரவோ, கட்சிக்கான பணத்தை, தேர்தலுக்கான பொருளை தேடி திரட்டிக் கொள்வதற்கு, வலுவான மக்களோ, அதற்கான கட்சி உறுப்பினர்களோ, ஊடக பலமோ இல்லாத நிலையில், இவற்றையெல்லாம் உருவாக்கி இந்த மக்களுக்கு ஒரு கட்சியை கொடுத்து, அந்த கட்சியின் மூலமாக அதிகாரத்தை அடைவதற்கான வழியை காட்டிக் கொடுத்திருக்கிறார் தோழர் திருமா அவர்கள்.
இல்லை என்றால் ஏது வழி? ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் எங்கிருந்து கிடைக்கிறது? யார் உருவாக்கிக் கொடுத்தார்கள்? அவர்கள் யார் அமைப்பாக்கினார்கள்? யார் அவர்களை அரசியல் படுத்தினார்கள்? கும்பலாக திரட்டுவது அரசியல் அல்ல. ரசிகர்களாக திரட்டுவது அரசியல் அல்ல. அவர்களுக்கு ஒரு கருத்தியலை கொடுப்பது, அவர்களை செம்மைப்படுத்துவது, அவர்களுக்கு பாடம் எடுப்பது அவர்களை நெறிப்படுத்துவது என்று தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார்.
அவருக்கென்று வாரிசாக இந்த கட்சிதான் இருக்கிறது. நீங்கள் தான் இருக்கிறீர்கள். அவரது கொள்கை தான் இருக்கிறது. காலம் முழுவதும் அவர் கொள்கை தான் பேசும் அந்த கொள்கை நிச்சயம் வெல்லும். 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு தலித்துகளினுடைய கட்சிதான் தமிழ்நாட்டின் அரசியலை அதிகாரத்திற்கு யார் செல்கிறார்கள் என்பதை முடிவு செய்யும் என்று சொன்னால், எவனே நம்பி இருப்பார்களா? ஆனால் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு செய்திருக்கிறது. யார் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை முடிவு செய்திருக்கிறது. இது எப்படி சாத்தியம்?
இந்தியாவினுடைய அனைத்து மாநில தேர்தல்களில் தமிழ்நாடு உட்பட எல்லாத்தையும் பார்த்தால், தலித் மக்கள்தான் யார் அரசியலுக்கு வர வேண்டும்? அதிகாரத்திற்கு வர வேண்டும்? என்று முடிவு செய்கிறார்கள். ஆனால் அவர்கள தான் அமைப்பாக்கப்படவில்லை.
வடநாட்டிலே பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதற்கான ஒற்றை காரணம். பட்டியல் சமூகத்தவரை, அவர்கள் சார்ந்த அமைப்புகளை தன்பக்கம் இழுத்து எடுத்து கொண்டது அல்லது எதிரணியில் அவர்கள் இணையவிடாமல் செய்கின்ற யுக்தியை தொடர்ச்சியாக செய்தார்கள். பட்டியல் சமூக மக்கள் எக்காலத்திலும் பாரதி ஜனதா கட்சியின் எதிர்கூட்டணி இருக்கக்கூடாது என்பதை திட்டமிட்டு நகர்த்தினார்கள். அதனால்தான் பாரதி ஜனதா கட்சி இன்றுவரை வட மாநிலங்களில் வென்று கொண்டிருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான ஒரு விபத்து நடந்துவிடக்கூடாது என்பதிலே தோழர் திருமா அவர்கள் உறுதியாக நின்றார். அவர் கடந்த திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்ததனுடைய காரணம்: இங்கே தலித்துகளின் வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கின் எதிரணியில் இருந்து சிதரும் என்றால், பாரதிய ஜனதா கட்சி வெல்வதற்கான வாய்ப்புகளும் அதனுடைய கூட்டணி வென்று ஆட்சி பிடிப்பதற்கான வாய்ப்புகளும் மிக மிக அதிகம் என்பதை நன்கு உணர்ந்தவர் தோழர் திருமா அவர்கள். கிட்டத்தட்ட 22 சதவீதம் இங்கே பட்டியல் சமூகத்தவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அவர்களது வாக்குகள் உடைந்து போகும் / பிரிந்து போகும் என்றால், அவரது அவர்களது வாக்குகள் இந்த திமுகவினுடைய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக திரும்பும் என்றால், அவர்கள்(பாஜக கூட்டணி) ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்கின்ற நிலை இருப்பதை மறந்து விடாதீர்கள். இதை சொல்ல மறுக்கிறார்கள் இதுதான் உண்மை. ஆக பட்டியல் சமூக வாக்குகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரணியில் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்கின்ற கொள்கை பாட்டை தோழர் திருமா அவர்கள் மிக தெளிவாக எடுத்தார்.
திரும்ப திரும்ப சொன்னார்: அதனுடைய காரணம் சனாதனத்தின் மீதான எதிர்ப்பு என்பது மட்டுமல்ல, அந்த சனாதன எதிர்ப்பு அரசியல் வெல்ல வேண்டும் என்றால், பட்டியல் சமூக மக்கள் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி, அந்த சனாதனத்துக்கு எதிரணியிலே பட்டியல் சமூக மக்களை நிறுத்தி வைத்தவர் தோழர் திருமா அவர்கள். யாராவது மறுக்க முடியுமா?
2017,18,19 காலகட்டங்களில் திரும்ப திரும்ப தோழர் திருமா அவர்களை மட்டும்தான் பாரதி ஜனதா கட்சி குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்தது. அவதூறு செய்தார்கள். அவமானப்படுத்த நினைத்தார்கள். பல்வேறு பொய்களை கட்டவிழ்த்தார்கள். இதெல்லாம் எதற்கான காரணம்? பாரதி ஜனதா கட்சியின் எதிர்கூட்டணியில் தோழர் திருமாவளவன் இருக்கக்கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளையும் பாரதி ஜனதா கட்சி ஏன் செய்கிறது? விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதி ஜெயிக்கும் என்பது முக்கியமல்ல. யார் ஜெயிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யக்கூடிய சக்திகளாக அவர் இருக்கிறார் என்கின்றதுதான் காரணம்.
ஆக அப்படிப்பட்ட இடத்தில் தான் அவர் அந்த முடிவை திரும்ப திரும்ப எடுக்கிறார். தமிழ்நாட்டிலே சனாதன சக்திகள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்கின்ற ஒற்றை இலக்கோடு தான் விடுதலை சிறுத்தை கட்சியினுடைய தலைவர் மரியாதைக்குரிய தோழர் முனைவர் தொல் திருமாவளவன் அவர்கள் எடுக்கக்கூடிய முடிவு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. அதான் தமிழ்நாட்டு நலன் சார்ந்தது. அவர் மந்திரி அமைச்சர் பதவி கிடைக்கிறது என்பதற்காக எடுக்கவில்லை. தமிழ்நாட்டின் எதிர்கால நலன் பாரத ஜனதா கட்சியின் கையில் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் முடிவெடுத்தார் என்று நான் முழுவமாக நம்புகின்றேன்.
நாங்கள் அதை முன்வைத்தோம். இங்கே தமிழ்நாட்டில் பாரத ஜனதா கட்சி அல்லாத ஒரு மாநில கட்சி அதிகாரத்தில் இருப்பதிலே எங்களுக்கு பிரச்சனை இல்லை. அப்படி ஒரு ஆட்சி அதிகாரத்தை உருவாக்குவதிலே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு ஆற்றல் இருக்கிறது என்றால், அதை நாம் உளமாற வரவேற்போம்.
அன்பானவர்களே, பாரதிய ஜனதா கட்சி வருவதை தடுத்தது மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தில் பங்கையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதுதான் மிக முக்கியமானது. தோழர் வன்னியரசு அவர்களை அனைத்து போராட்ட களங்களிலும் நான் பார்த்திருக்கின்றேன். சாதி ஒடுக்கு முறையில் இருந்த அனைத்து போராட்ட களங்களும் நின்றவர். இன்றைக்கு அவர் அமைச்சராகி அந்த களங்களில் எல்லாம் யாரை எதிர்த்து நின்று கேள்வி கேட்டோமோ, எந்த காவல் துறையை வைத்து எந்த தீர்வை கேட்டோமோ, அந்த தீர்வை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதை பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எமது தோழர் அங்கே களத்திலே போராளியாகவும் இருந்திருக்கிறார். இன்றைக்கு உத்தரவிடக்கூடிய அமைச்சராகவும் இருக்கிறார். இதைவிட வேற என்ன எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு பெரிய மகிழ்ச்சி. இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு நிச்சயம் இந்த சமூகத்திற்கு தேவை. ஏனெனில் அதிகாரத்திலே நமக்கு எங்கு கிடைக்கிறதோ, அங்கிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை வைத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதற்குரிய பொறுப்பை உரியவரிடத்திலே ஒப்படைத்திருக்கிறார் தோழர் திருமா அவர்கள்.

ஆக தோழர்களே தமிழ்த்தேசியம் என்பது ஒரு நீண்ட கால செயல் திட்டம். மேதகு பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைக்காக அங்கு நடத்திய போராட்ட களங்களிலே, தமிழ்நாட்டிலிருந்து அழைத்து பெருமைப் படுத்தியவர் தோழர் திருமா அவர்களைதான். காரணம்: சாதி ஒழிப்பு களத்திலே அவர் இருக்கிறார் என்கின்ற காரணத்தினால் அவர் அழைத்து பெருமைப்படுத்தினார்.
தமிழீழத் தேசியத்தினாலே அங்கே ஒரு நடைமுறை அரசை உருவாக்கிய காரணத்திலே, அவர் அழைத்து பேசி இருக்கிறார். காரணம்: ஒரு தன்னாட்சி பிரதேசத்தை (Defacto state) வந்தது. அந்த பிரதேசத்தில் சாதி ஒழிப்பு குறித்தான ஒரு அரசியலை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக, குறியீடாக அவர் தோழர் திருமா அவர்களை அழைத்து மரியாதைப்படுத்தி இருக்கிறார் என்றுதான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் மேதகு பிரபாகரன் அவர்கள் குறியீட்டு அரசியலில் மிக மிக முக்கியமானவர். ஒவ்வொன்றையும் வார்த்தைகளால் அல்ல குறியீடு மூலமாக வெளிப்படுத்தக்கூடியவர்.
ஒரு தன்னாட்சி பிரதேசத்தை எப்படி ஆள வேண்டும் என்றால், சாதி ஒழிப்பின் மூலமாகத்தான் ஆள வேண்டும். அந்த வகையில் சாதி ஒழிப்பு அரசியலில் அங்கே இருக்கக்கூடிய தோழர் திருமா அவர்களை அழைத்து மரியாதை செய்திருக்கிறார். அதுதான் தமிழீழ விடுதலை புலிகள் அரசியல், அவர்கள் அரசியல் சாதி ஒழிப்பு அரசியல், அவர்கள் அரசியல் பெண் விடுதலை அரசியல், அவர்கள் அரசியல் என்பது முற்று முழுதுமான விடுதலை அரசியல். ஆக இங்கே தமிழ்த்தேசியம் என்பது விடுதலை புலிகள் பேசிய அரசியல்தான் தமிழ் தேசிய அரசியல். சாதிகளோடு இணக்கமாக இருப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல. சாதிகளை நிராகரித்து தமிழராய் ஒன்றிணைவதுதான் தமிழ் தேசிய அரசியல்.
அப்படிப்பட்ட களத்தை தொடர்ச்சியாக வழுப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய அனைத்து தோழமைகளுக்கும், உங்களை மட்டுமல்ல எங்களையெல்லாம் நெறிப்படுத்துகின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், தோழர் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதிலே பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.