
கொரோனா பெருந்தொற்றின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று கூறி ‘பி.எம் கேர்ஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார் ஒன்றிய பிரதமர் மோடி. 2021-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயதை எட்டும்போது அவர்களின் கல்வி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தது மோடி அரசு.
ஆனால் ‘பி.எம் கேர்ஸ்’ திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகள் அதை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன. முற்றிலும் வெளிப்படைத்தன்மை அற்ற முறையில் அது இயங்குவதாக குற்றசாட்டு எழுந்தது. 1948-ஆம் ஆண்டிலிருந்தே பிரதம மந்திரி நிவாரண நிதி (PMNRF) என ஒன்று இருக்கும் போது, இப்போது ஏன் இந்த புது திட்டம் என பல தலைவர்கள் கேள்விகள் எழுப்பினர்.
இது தொடர்பான மனுக்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழும், நீதி மன்றங்களிலும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிதி விடயத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென அந்த மனுக்கள் கோரின. ஆனால், பி.எம் கேர்ஸ் அமைப்பு என்பது பொது அமைப்பு அல்ல, அதனால் இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்று தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசால் அமைக்கப்பட்டதால், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ‘பெருநிறுவன சமூகப் பொறுப்பு’ (CSR) நிதியை கொடுக்கலாம் என்று அரசாங்கம் கூறியது. இதில் CSR நிதிகளை உள்ளடக்கும் வகையில் நிறுவனங்களின் சட்டம் கூட திருத்தப்பட்டது. அரசு அதிகாரிகள் தங்கள் சம்பளத்தை நன்கொடையாக வழங்குமாறு பாஜக அமைச்சர்கள் “வேண்டுகோள்” விடுத்தனர். மேலும் இந்தியாவில் NGO எனப்படும் அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவது தொடர்பாக பெருமளவில் விமர்சனம் செய்து, அந்த நிதியை பெற கட்டுப்பாடுகள் விதிக்கும் பாஜக அரசு, பி.எம் கேர்ஸ்-க்கு மட்டும் வெளிநாட்டு நிதியை அனுமதித்தது.
இப்படி பல சர்ச்சைகள் பின்னணியில் தான் முதல் மூன்று ஆண்டுகளில் ரூ.13,000 கோடி திரட்டப்பட்டிருக்கிறது. இப்படி திரட்டிய மக்கள் பணத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு உயிர் காக்கும் வென்டிலேட்டர்களை வழங்கியதிலும் சர்ச்சை எழுந்தது. மோடி அரசால் வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பலவும் செயலற்று உள்ளதாகவும், அவற்றை நம்பி சிகிச்சையில் பயன்படுத்த மருத்துவமனைகள் மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இத்தனை சர்ச்சைகளில் சிக்கிய பி.எம் கேர்ஸ் திட்டத்தின் தணிக்கை அறிக்கை பல சமூக ஆர்வலர்களின் அழுத்தத்திற்குப் பிறகு தற்போதுதான் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை அறிக்கைகளின்படி, 2023-24 ஆம் ஆண்டில், ரூ. 682.94 கோடியை வசூலித்த பிஎம்-கேர்ஸ், ரூ. 15.59 கோடியை மட்டுமே செலவிட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில், ரூ. 479.97 கோடியை வசூலித்த பிஎம்-கேர்ஸ், கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக வெறும் ரூ. 87.85 லட்சத்தை மட்டுமே செலவிட்டுள்ளது. தற்போது இந்த நிதியம் ரூ. 8,452.06 கோடி வைத்திருக்கிறது. இதில், ரூ. 7,846.65 கோடி நிலையான வைப்புத்தொகையில் இருக்கிறது.

இந்த தணிக்கை அறிக்கையில் 2024-25 நிதியாண்டில் எவ்வளவு பி.எம் கேர்ஸ் தொகை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனும் விவரம் தற்போது பல கேள்விகளை எழுப்புகிறது. ஏனெனில் ரூ.8,452 கோடி கையிருப்பு இருந்த நிலையில், வெறும் ரூ.87.85 லட்சம் மட்டுமே குழந்தைகளுக்கு நிதியாக வழங்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்பட்டதாக 2025 டிசம்பரில் மோடி அரசு மக்களவையில் தெரிவித்தது நினைவிருக்கலாம். அதன்படி அரசு கொடுத்துள்ள 2024-25 பட்டியலில் 3,383 பயனாளிகள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வழங்கப்பட்டிருந்தால், மொத்த செலவு ரூ.6.76 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் ரூ.88 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. அப்படியென்றால் ஒரு குழந்தைக்கு ரூ.20,000க்குப் பதில் ரூ.2,596 மட்டுமே கிடைத்திருக்கலாம் அல்லது குழந்தைகள் எண்ணிக்கையில் குளறுபடி நடந்திருக்கலாம். இதனால் கொரோனா காலத்திலும் பாஜக செய்த ஊழல்களில் ஒன்றாக பி.எம் கேர்ஸ் திட்டம் இருந்தது தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

தற்போது ரூ.8,452 கோடியில் மீதமுள்ள தொகை ‘நிலையான வைப்புத்தொகை’களில் (fixed deposit) வைக்கப்பட்டிருக்கிறது. இது யாருக்காக என்பதும், இந்த தொகையை மோடி அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களை போலவே கொரோனா பெருந்தொற்றும் மக்களை பெருமளவில் பாதித்தது. உடல்நலக் கோளாறுகள் மட்டுமன்றி கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழல்களில் மக்களுக்கு உதவக்கூடிய பெரும் தொகையை பயன்படுத்தப்படாமல் வைப்புத்தொகையில் போட்டிருக்கிறது மோடி அரசு.
மாநிலங்களைப் பொறுத்தவரை, 2025–26 ஆண்டில் மஹாராஷ்டிரா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலக்கங்களுக்கு கொடுத்ததை விட தமிழ்நாட்டிற்கு குறைவாகத் தான் கொடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 650 குழந்தைகள் பி.எம் கேர்ஸ் நிதிக்காக விண்ணப்பித்திருந்த நிலையில் 426 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. 224 குழந்தைகளின் விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. வைப்புத்தொகையில் நிதி இருந்தும் இந்தக் குழந்தைகளுக்கு எப்போது நிதி கிடைக்கும் என்பது தெரியவில்லை.


தகவல் ஆதாரம்: https://socialjustice.gov.in/writereaddata/UploadFile/71441776233188.pdf
மொத்தத்தில் வெளிப்படைத்தன்மை – முற்றிலும் இல்லை.
பேரிடர்களின் போது நிதி – முறையாக பயன்படுத்தப்படவில்லை.
நிதியில் வாங்கப்பட்ட உயிர் காக்கும் வெண்டிலேட்டர் – வேலை செய்யவில்லை.
இது தான் பி.எம் கேர்ஸ். கார்ப்பரேட் நிறுவங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் வசூலித்த பாஜக, நன்கொடை என்ற பெயரில் வசூலித்த மற்றொரு மோசடிதான் பி.எம் கேர்ஸ். கொரோனா பாதிப்பினால் கல்வி பாதிக்கப்பட்டு, மீண்டும் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது மோடி அரசு?
Pm cares பற்றிய முந்தைய கட்டுரைகள் தொகுப்பு:
https://may17kural.com/wp/pm-cares-allocates-2000-crores-for-defective-ventilators/