வசூலாகும் “அக்கறை”கள்

கொரோனா தொற்று சர்வதேச பரவலை அடுத்து இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 24 முதல் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதனையடுத்து, மார்ச் 28ம் தேதியன்று “PM-CARES Fund: Citizen Assistance and Relief in Emergency Situations Fund” (பிரதம மந்திரியின் அக்கறை) என்ற பெயரில் ஒரு புதிய அறக்கட்டளை அமைப்பதாக அறிவித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மருத்துவம் வழங்கிடவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் நிதி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான போரில் உதவ பலதரப்பு மக்கள் முன்வந்துள்ளதாகவும், அதற்காகவே இந்த அறக்கட்டளையை உருவாக்கியுள்ளதாகவும் மோடி கூறினார்.

இந்த அறக்கட்டளைக்கு நிதி சேகரிக்க தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, ”போர்க்காலங்களில் நம் தாய்மார்களும், சகோதரிகளும் தங்களுடைய நகைகளை எல்லாம் வழங்கியுள்ளனர். தற்போது, நாம் அதே போன்ற ஒரு போர்ச் சூழலில் தான் உள்ளோம். நாடுமுழுவதும் உள்ள பாஜகவினர் நிதி வழங்கவும் மற்றும் பொதுமக்கள் 40 பேரிடம் நிதி வழங்க கோர வேண்டும்” என்றும் வேண்டுகோள் வைத்தார்.

 

தொலைக்காட்சியில் நிதி கேட்கும் பிரதமர் மோடி.

கொரோனாவிற்கு எதிரான போர் நடைபெறும்போது தான் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற வளாகம் கட்டுவதற்காக ரூ.20,000 கோடி மக்கள் வரிப்பணத்தை ஒதுக்கி கட்டுமான பணிகளை துவங்கிவுள்ளார். அந்த வரிப்பணத்தை வைத்து கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவும் சுமார் 3,33,000 வென்டிலேட்டர்களை வாங்கி இருக்கலாம். ஆனால், மோடி அதை செய்யவில்லை.

பிரதமர் மோடி PM-CARES அறிவித்த அடுத்த ஒரு வாரத்தில் சுமார் ரூ.6500 கோடி நன்கொடை குவிந்தது. ஒப்பீடாக, 1948ல் நேருவால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதி (PMNRF) 2014-15 முதல் 2018-19 வரை நிதியாண்டில் பெற்ற நிதி ரூ.2,119 கோடி மட்டுமே. மோடியின் நெருங்கிய நண்பர்களான இந்தியாவின் பெரும் பணக்காரர்களும், பெருநிறுவனங்களும் இணைந்து ரூ.2500 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகின. மேலும், இராணுவப் பாதுகாப்பு துறை ஊழியர்கள் ரூ.500 கோடி வழங்கியுள்ளனர். 339 பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து மட்டும் ரூ.365 கோடி நிதி பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 17ம் தேதி அன்று நிதியமைச்சகம் தனது துறையில் பணிபுரியும் சுமார் 50,000 ஊழியர்கள் மாதம் ஒரு நாள் ஊதியத்தை மே 2020 – மார்ச் 2021 வரை வழங்குவார்கள் என அறிவித்தது. நிதி அளிக்க “விருப்பமில்லாதவர்கள்” எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. பின்னர், ஏப்ரல் 29ம் தேதி நிதி அளிக்க “விருப்பமுள்ளவர்கள்” மட்டும் ஒப்புதல் கடிதம் வழங்கும்படி மாற்றிக்கொண்டது. ஏப்ரல் 28ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் ரூ.7.3 கோடி PM-CARES நிதி வழங்குவதாக அறிவித்தனர்.

PM-CARES அறக்கட்டளை
PM-CARES அறக்கட்டளையின் தலைவராக பிரதம மந்திரி இருப்பார். கூடுதல் அறங்காவலர்களாக பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் இருப்பார்கள். குறைந்தபட்ச நிதி பங்களிப்பு ரூ.10/ முதல் இந்த அறக்கட்டளைக்கு மக்கள் செலுத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் “பெருநிறுவன சமூக பொறுப்பு”ன் (CSR – Corporate Social Responsibility) கீழ் நிதி வழங்கலாம். 2019 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த CSR தொகை ரூ.8,691 கோடி என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் அனைத்து நிதி பங்களிப்புக்கும் வருமான வரி விலக்கு வழங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளுக்கான CSR நிதியையும் தற்போது செலுத்தி பிறகு வரி விலக்கு கோரலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அதே சமயம், CSR மூலம் மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் பங்களிப்பிற்கு வரி விலக்கு வழங்கப்படமாட்டாது என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது

இந்த அறக்கட்டளையின் நிதி கணக்கை இந்திய அரசின் பொது தணிக்கைத் துறை (CAG – Comptroller and Auditor General of India) தணிக்கை செய்யாது என்றும், அறங்காவலர்கள் நியமிக்கும் தணிக்கையாளர்களே கணக்கை தணிக்கை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்த பொது தணிக்கை துறையினர், “அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டால் நாங்கள் தணிக்கை செய்வோம்” என்று தெரிவித்துள்ளனர். மக்களிடம் இருந்து நன்கொடை பெரும் “தொண்டு நிறுவனங்களின் நிதி கணக்குகளை தணிக்கை செய்யும் உரிமை எங்களுக்கு கிடையாது” என்று ஒரு சிபிஐ அதிகாரி கூறியதாக தொலைக்காட்சி செய்தியும் வெளியாகியது.

தன் மக்கள் அணிந்திருக்கும் நகை ஆபரணங்களை கழட்டி கொடுக்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்ளும் பிரதமர் மோடிக்கு அந்த அறக்கட்டளையின் நிதியை பொது தணிக்கைக்கு உட்படுத்தி மக்கள் கண்களுக்கு வெளிப்படையாக காட்ட ஏனோ இவ்வளவு தயக்கம்?

கேள்விகளும் குழப்பங்களும்
1948 முதல் பிரதம மந்திரி தேசியப் பேரிடர் நிவாரண நிதி (PMNRF) உள்ளபோது புதியதாக “PM-CARES” என்ற புதிய அக்கறை எதற்கு? எந்த சட்டத்தின் கீழ், எப்போது இந்த அறக்கட்டளை அமைக்கப்பெற்றது? ஏன் பொது சமூகத்தின்  பிரதிநிதியோ, எதிர்க்கட்சியின் பிரதிநிதியோ இணைக்கப்படவில்லை? என்று சரமாரியாக கேள்விகள் எழுந்தன. தங்கள் மாநில நிவாரண நிதிகள் இருக்கும் போது ஏன் ஒன்றியத்தின் நிவாரண நிதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென சில முதல்வர்களும் கேள்வி எழுப்பினர்.

“ஏற்கனவே, பிரதம மந்திரி நிவாரண நிதி (PMNRF) இருக்கும் போது மறுபடியும் பிரதம மந்திரியின் அக்கறை (PM-CARES) பெயரில் ஒரு நிவாரண நிதி தொடங்குவதின் நோக்கம் என்ன? தற்பெருமை பேசி விளம்பரம் தேட வேண்டுமென்றால் பழைய நிவாரண நிதியின் பெயரை மட்டும் மாற்றி வைத்துக் கொள்ளலாமே?” என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா கேள்வி எழுப்பினார்.

கொரோனா போன்ற சர்வதேச தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே உள்ள பிரதமர் நிவாரண நிதி (PMNRF) இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படும் என்றும் அரசு அதிகாரிகள் கூறினார்கள். மேலும், இந்த அறக்கட்டளை நிதியினை “நன்கொடை”யாக பெறுவதால் பாராளுமன்ற ஒப்புதல் பெறவேண்டிய வீண் சிரமங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்கள்.

கொரோனா தொற்றும் ஒரு இயற்கை பேரிடர் என்று தானே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது? மாநிலங்களும் தங்கள் மாநில பேரிடர் நிவாரண நிதிகளை பயன்படுத்துகின்றன. PMNRFல் உள்ள ரூ.3800 கோடியை என்ன செய்ய உத்தேசம்? பாராளுமன்ற ஒப்புதல் முறைகளை வீண் என்று நினைக்கும் பிரதமர் சனநாயகத்தை பற்றி என்ன மனநிலையில் உள்ளார்?

மேலும், PM-CARES குறித்து வெளிப்படையாக சொல்லப்படாத அம்சங்கள்:

  • அரசுத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை PM-CARESக்கு மடைமாற்றி விடலாம்.
  • அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டில் இருந்து எடுத்து PMNRFக்கு நிதி அளிக்க முடியாது. அப்படியிருக்க, பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை PM-CARESக்கு மடைமாற்றி விடுவதால் திட்டமிட்டு நிதி ஒதுக்கப்பட்ட அரசுதுறைகள் நிதிக்கு என்ன செய்யும்? பாராளுமன்ற உறுப்பினர்களின் ரூ.365 கோடி நிதியை மறுபடியும் PM-CARESக்கு எடுத்துக்கொண்டால் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு பணிகள் என்னவாகும்? அனைத்து திட்டங்களையும் மோடி மட்டுமே செயல்படுத்துவார் என்றால் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் முறைகள் எல்லாம் எதற்கு?!
  • மார்ச் 31ம் தேதி ஒரு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி PM-CARESக்கு நன்கொடை அளிக்கும் தனிநபர்களுக்கு 80G பிரிவின் கீழ் ஜூன் 30, 2020 வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
  • இதனையடுத்து, டாடா ரூ.1500 கோடி , அசிம் பிரேம்ஜி ரூ.1000 கோடி , அதானி ரூ.100 கோடி, வேதாந்தா அனில் அகர்வால் ரூ.100 கோடி என பல பெரும் பணக்காரர்கள் மோடிக்கு தங்கள் ஆதரவை காண்பித்து தாங்கள் வழங்கிய நிதிக்கு வரிச்சலுகையையும் பெற்றுக்கொண்டனர்.
  • பிரதம மந்திரி பேரிடர் நிதி (PMNRF) வெளிநாடுகளிடம் இருந்து நன்கொடை பெறும் 2018 சட்ட திருத்தம் PM-CARESக்கும் பொருந்தும் என்று அரசு தெரிவித்தது.
  • இதில், நாம் கவனிக்க வேண்டிய விசயம் PMNRF நிதிக் கணக்கு பொது தணிக்கைத் துறையால் தணிக்கை செய்யப்படுகிறது. 2019 திச.16 அன்று PMNRF கணக்கில் ரூ.3,800 கோடி உள்ளது. ஆனால், PM-CARES பொது தணிக்கை துறையின் (CAG) கீழ் வராது. அப்படியென்றால், தங்களுக்கு பிடித்த தணிக்கையாளர்களை நியமித்து நிதி கையாடல்களை மறைக்க திட்டமிட்டுள்ளார்களா?

PMNRF நிதி கணக்கு – மக்கள் பார்வைக்காக இணையத்தில் உள்ளது:

பிரதம மந்திரியின் அக்கறையால் “வசூலிக்கப்படும்” நிதியின் மூல ஆதாரங்களும், அவை இந்தியாவில் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பவையே நமக்கு எழும் முதன்மையான கேள்விகள்.

ஒரு பேரிடரை அடித்தளமாக வைத்து மக்களிடம் நிதி திரட்டுவதாக அறிவித்துவிட்டு மார்ச் 30ம் தேதி அன்று இந்தியாவின் அனைத்து தூதரகங்களுடன் காணொளி சந்திப்பு நடத்தி “இந்த அறக்கட்டளையை வெளிநாடுகளில் விளம்பரம் செய்து அனைத்து தரப்பினரிடம் இருந்தும்  நன்கொடை பெறுமாறு” பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மட்டுமல்லாது, அந்நிய நாட்டு குடிமகன்களும், நிறுவனங்களும் நிதி பங்களிப்பு செலுத்தலாம் என்று செய்திகள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 15ம் தேதி ரஷ்ய அரசின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரொசோபோரோன் எக்ஸ்போர்ட் (Rosoboronexport)  ரூ.15.3 கோடி நிதியை PM-CARESக்கு வழங்கியது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டு நிறுவனத்திடம், அதுவும் போர் ஆயுதம் தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து அரசு நிவாரண நிதி பெற்றுள்ளது. இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என அனைவரிடம் இருந்தும் PM-CARESக்கு நன்கொடை வரும் வாய்ப்புகள் உள்ளன. அவற்றை, கண்காணிக்க இந்திய குடிமகன்களுக்கு தான் வாய்ப்பில்லை!

எந்த வெளிநாட்டு நன்கொடையாளர் PMCARESக்கு எவ்வளவு நன்கொடை வழங்கினார் என்று மக்களுக்கு தெரிவிக்கப்படாது. அவர் ஏதாவது உள்நோக்கத்துடன் வழங்கினாரா என்பதும் வெளியில் வராது. அந்த நிதிக்கு கைமாறாக இந்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதும் தெரியாது. இப்படியாக, மக்களின் பெயரால் திரைமறைவில் வசூலிக்கப்படும் பல ஆயிரம் கோடிகள் எதற்காக செலவு செய்யப்படுகிறது என்பதும் அறியப்படாமலே போகும்.

தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) என்ற பெரும் ஊழல் முறையின் மூலம் பாஜக கார்ப்பரேட்களிடம் இருந்து கட்சி நிதியை குவித்து வருவது ஒரு முன்னுதாரணம். பத்திரங்களை வழங்கும் நிறுவனங்களும் அந்த நிதியை தங்கள் செலவு கணக்கில் காட்டவேண்டியதில்லை என்கிற அயோக்கியத்தனத்தை சட்டதிருத்தமாக கொண்டுவந்த பெருமைக்குரியவர் தான் பிரதமர் மோடி. விளைவு, இன்று உலகின் பெரும் பணக்கார அரசியல் கட்சியாக பாஜக உள்ளது.

இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்று தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் மற்றும் வேறு மருத்துவ ஆராய்ச்சிகளுக்கும் PM-CARES நிதி பயன்படுத்தக்கூடும். மேலும், இந்தியாவில் மருத்துவ சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறைகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்படியென்றால், ஒன்றிய அரசு நிதியறிக்கையில் மருத்துவ சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி என்னவாயிற்று?

பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து இருதயம் வெடித்து இறப்பவர்கள், பட்டினியால் இறப்பவர்கள், பசிக்கொடுமை தாளாமல் குடும்பமாக தற்கொலை செய்துகொள்வோர், விளைச்சலை விற்கமுடியாமல் பரிதவித்து வரும் விவசாயிகள், ஜிஎஸ்டியுடன் கூடிய கொரோனா பரிசோதனை கட்டணத்தை செலுத்த முடியாத மக்களின் அவலத்தை காட்டி PM-CARES என்ற வசூல் வேட்டையில் இறங்கியுள்ள பிரதமர் மோடியின் அரசு அந்த பணத்தை என்ன தான் செய்யப்போகிறது?

தொடர்ந்து இந்திய ஒன்றிய மக்களுக்கும் அவர்களின் இறையாண்மைக்கும் எதிரான அனைத்து கயமை தனத்தையும் செய்து வரும் தேச விரோதிகளான ஆர்எஸ்எஸ் பாஜக இந்துத்துவவாதிகள் தான் தேசபக்தியை மூச்சுக் காற்றாக சுவாசிப்பதாக நம்ப சொல்கிறார்கள்!

Translate »