கலகக்காரர்களின் வசைச்சொல் அதிகாரத்தை என்ன செய்யும்?
“பேரரசன் கடந்து செல்லும்போது, சாதூர்யமான விவசாயி தாழ்ந்து வணங்கி, சத்தமில்லாமல் தன் வாயுவை வெளியேற்றுகிறான்.”
– எத்தியோப்பிய பழமொழி
ஜூலை 24, 2026 அன்று, மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் தர்மேந்திர பிரதான். பத்தாண்டுக்கும் மேலான மோடி ஆட்சிக்கு வெகுமக்கள் எழுச்சி உருவாக்கிய முதல் அரசியல் இழப்பு இது. கடந்த காலத்தில் பல இயக்கங்களை முறியடித்த இதே அரசு, இப்போது தோற்றது ஏன்? என்ற கேள்வி மிக முக்கியமானது. இக்கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி, இந்திய அரசியல் விமர்சகர்கள் பேசத் தயங்குகிற ஓர் உண்மையில் இருக்கிறது. ‘கரப்பான்பூச்சிகளின்’ வெற்றிக்கு அவர்களது மூர்க்கமான அணுகுமுறை ஒரு முக்கியக் காரணம் என்பதே அவ்வுண்மை.
ஒவ்வொரு தலைமுறையும் தனக்கான மொழியைக் கண்டறிகிறது. ‘ஜென் ஜி’ (Gen Z) தலைமுறையின் மொழியோ கெட்ட வார்த்தைகளும் எள்ளலும் நிறைந்ததாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இவ்வாறு பேச அவர்கள் யாருடைய அனுமதியையும் எதிர்பார்க்கவில்லை. வழக்கமான இந்தியப் போராட்டங்களில் பயன்படுத்தப்படும் பதாகைகள் சீரிய ஒழுக்கம் கொண்டதாயிருந்தது. ஆனால் ஜந்தர் மந்தர் சுவரொட்டிகள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள், கல்வி அமைச்சரின் வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட பேனர்கள் என எதுவுமே அதுபோலில்லை.
அவை வாட்ஸ்அப் குழு உரையாடல்களைப் (group chats) போல, வசைபாடுவதாக, ஆபாசமானதாக, விசித்திரமாக இருந்தன. மகிழ்ச்சியோடு கெட்ட வார்த்தைகளை அவை பயன்படுத்தின. யாரைக் கோபப்படுத்த வேண்டுமென அது உருவாக்கப்பட்டதோ, அவர்களைச் சரியாக அது கோபப்படுத்தியது. தங்களை ‘சங்ஸ்காரி’ (பண்பட்டவர்கள்) என அழைத்துக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரையும், தலைவரை மதிப்பதே குடிமக்களுக்கான தர்மம் எனக் கருதும் ‘பக்தர்களையும்’ அது நேரடியாக புண்படுத்தியது. இது தற்செயலாக நடந்ததல்ல. இச்செயல்களின் முதன்மை நோக்கமே புண்படுத்துவதுதான். இந்த போராட்ட இயக்கத்தின் வெற்றிக்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஏனெனில், அதிகாரத்தின் புனிதப் பிம்பத்திற்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆபாசச் சொற்களுக்கு, நீண்ட வெற்றிகரமான வரலாற்றுப் பின்னணி உண்டு. பெரும்பாலான மரியாதைக்குரிய விமர்சகர்கள் அதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். இருந்தாலும் அதுவே உண்மை.
அவச்சொல்லாக நிலைக்க மறுத்த சொல்
இவ்வியக்கத்தின் உத்தி அதன் பெயரிலேயே அடங்கியிருக்கிறது. மே 15 அன்று, போலிச் சட்டச் சான்றிதழ் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்றார். அவர்களுக்குச் “எந்த வேலையிலும் இடமில்லை” என்பதால் “எல்லோரையும் தாக்குவதற்காக” சமூக ஊடகங்களுக்கும் சமூக செயல்பாடுகளுக்கும் செல்கிறார்கள் என்றார். இது, அவர்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை என ஒதுக்கித் தள்ளச் சொல்லப்பட்ட கூற்று. அரசு அமைப்புகளின் இத்தகைய அலட்சிய பேச்சுக்களை, எந்தப் புகாருமின்றிச் சகித்துக்கொள்ளவே இந்திய மக்கள் பழகியிருக்கிறார்கள்.
அடுத்த நாள், பாஸ்டனில் இருந்த மாணவர் அபிஜீத் திப்கே “அனைத்து கரப்பான்பூச்சிகளுக்குமான” ஓர் இணையதளத்தைத் தொடங்கினார். அதில், கரப்பான்பூச்சிகளாக இருப்பதற்குத் தகுதியாக, “வேலையில்லாதவர்கள், சோம்பேறிகள், எப்போதும் இணையத்திலேயே கிடப்பவர்கள், புலம்புவதைத் தொழில்முறையாகச் செய்யத் தெரிந்தவர்கள்” எனச் சில தகுதிகள் வேடிக்கையாகப் பட்டியலிடப்பட்டிருந்தன. எழுபத்தெட்டு மணி நேரத்திற்குள் அந்தப் பக்கத்தை முப்பது லட்சம் பேர் பின்பற்றத் தொடங்கினர். ஐந்து நாட்களுக்குள் அந்த எண்ணிக்கை ஒரு கோடியை எட்டியது. இது ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தள கணக்கைத் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஒரு தலைமுறையை அடக்கி அமைதியாக்கிவிட நினைத்துச் சொல்லப்பட்ட ஒரு அவச்சொல், ஒரே வாரத்தில் யாரும் பறிக்க முடியாத பெருமைக்குரிய சின்னமாக மாறியது.
இது ‘மீள் கைப்பற்றுதல்‘ (reappropriation) எனப்படுகிற ஒரு பாரம்பரிய அரசியல் உத்தி. அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை அவமானப்படுத்தப் பயன்படுத்திய ஒரு வசவைப் பிடித்து, அதைத் தங்கள் கூட்டு அடையாளத்தின் சின்னமாக ஒரு இயக்கம் மாற்றிக் கொள்வதுதான் மீள் கைப்பற்றுதல். பிரெஞ்சுப் புரட்சியில் “சான்ஸ்-குலோட்ஸ்” (sans-culottes), பிளாக் பவர் இயக்கத்தில் “பிளாக்” (Black), LGBTQ அரசியலில் “குயர்”(queer) என்ற, மற்றும் தலித்திய இயக்கத்தில் “தலித்” போன்ற சொற்கள் மூலமாக அரசியலைக் கைப்பற்றிய இயக்கங்கள் வரலாற்றில் உண்டு.
அதுபோல, “கரப்பான்பூச்சிகள் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும்?” என்ற முழக்கம் சக்தி வாய்ந்ததாக மாறியது. அதற்குக் காரணம், அது கொச்சையான சொல் என்பதால் அல்ல. மாறாக, அவமானம் ஒரு கூட்டு அரசியல் செயல்பாடாகப் பரிணமித்ததுதான். இப்போராட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மரியாதையற்ற மொழிகள்கூட இதே தலைகீழ் அரசியல் மாற்றத்தின் ஒரு பகுதிதான். இந்த தர்க்கம் கெட்ட வார்த்தை பயன்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தச் சொல்லப்படும் எளிய காரணங்களைவிட; எதிரிகளின் ஆயுதத்தைக் கொண்டே அவர்களை வீழ்த்தும் அரசியல் காரணம் வலிமையானது என்பதை உணர்த்துவதற்காக இது முன்வைக்கப்படுகிறது. மேலும், பல நேரங்களில் மூர்க்கமான அணுகுமுறையும் செயல் தந்திர உத்தியும் ஒன்றாக இருப்பதற்கான காரணமும் இதுதான்.
போராட்டத்தில் அடுத்தடுத்து நடந்தேறியவையும் இதே உத்தியைத்தான் கொண்டிருந்தன. “வினாத்தாள் கசிவுகளை அடைக்க” கல்வி அமைச்சரின் அலுவலகத்துக்கு டயப்பர்கள் (Diapers) அனுப்பப்பட்டன. எந்த நாள் இதழாலும் முழுமையாக வெளியிட முடியாத வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. எந்தத் தயக்கமோ வெட்கமோ இல்லாமல், “சோம்பேறிகள் மற்றும் வேலையற்றோரின் குரல்” என்று அறிவித்துக்கொண்ட ஒரு முழக்கம் முன்வைக்கப்பட்டது. மூத்த அரசியல் விமர்சகர்களும் நல்லெண்ணம் கொண்ட தாராளவாதிகள் பலரும் இதையெல்லாம் கண்டு முகம் சுளித்தனர். இவை சிறுபிள்ளைத்தனமான செயல்கள் என்று கூறினர். அது முரட்டுத்தனமானவை என்பதும் பக்குவமற்றது என்பதும்தான் அவர்களது மதிப்பீடு. அதில் தவறில்லை. ஆனால், அநாகரிக அரசியல் தீவிரத்தன்மையும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று அவர்கள் நினைத்ததுதான் தவறு.
அம்பலத்துக்கு வரும் மறைபொருள்:
ஒவ்வொரு ஆதிக்க அமைப்பும் வெகுமக்கள் ஏற்கத்தக்க அரசியல் சிந்தனைகளை நிறுவுவது மட்டுமின்றி மக்களிடம் தம் அரசியலை ஏற்க வகை செய்யும் ஓர் அரசியல் மொழியையும் நிறுவுகிறது. மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் ஒழுங்குமுறையின் பகுதிகளாக கண்ணியம், நாகரிகம், மரியாதை ஆகியவற்றை அதிகாரம் மாற்றுகிறது. அநீதியை எதிர்த்துப் போராடும் போது கூட போராட்டக்காரர்கள் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வழக்கமான மொழியை உடைப்பதன் மூலமே பெரும் மாற்றங்கள் தொடங்குகின்றன என்று வரலாறு சொல்கிறது. புரட்சியின் மொழி அரிதாகவே நாடாளுமன்ற மொழியாக இருக்கிறது. அது பக்குவமாக இல்லாமல் உணர்ச்சி வயப்பட்டதாக வெளிப்படுகிறது. மரியாதையாக வெளிப்படாமல் கேலி செய்வதாகவும், வேண்டுமென்றே வரம்புகளை மீறுவதாகவும் இருக்கிறது. அதிகாரத்துக்கு ஆபாசமாகத் தெரிவதுதான் வெகுமக்களின் அவமானம் மற்றும் கோபம் ஆகியவற்றின் முதல் வெளிப்பாடாகவும் எப்போதும் இருக்கிறது.
அன்றாட ஆதிக்கம் மற்றும் போராட்டம் பற்றிய தன்னுடைய ஆய்வில் தற்போதைய போராட்டத்தில் நடந்தது என்ன? என்பதைத் தெளிவாக வேறுபடுத்திக் காட்டியிருப்பார் அரசியல் கோட்பாட்டாளரான ஜேம்ஸ் சி. ஸ்காட். [James C. Scott, Domination and the Arts of Resistance: Hidden Transcripts, Yale University Press New Haven and London,1990] அதிகாரத்திடம் கீழ்ப்படியும் குழுக்கள் பொதுவாக வெளிப்படுத்தும் தன்மைக்கும், மற்ற நேரங்களில் தனிப்பட்ட வகையில் கேலி, கிண்டல், நகைச்சுவை வழியாக அவர்கள் மறைமுகமாக வெளிப்படுத்தும் தன்மைக்கும் இடையிலான வேறுபாடுதான் அது. ஸ்காட்டை பொறுத்தவரைப் போராட்டம் என்பது அம்பலத்துக்கு வரும் மறைமுக செயல்பாடுதான். உண்மையில், சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது கரப்பான்பூச்சி இயக்கம் வெளிப்படுத்திய ஆபாசமல்ல, அரசுக்கோ செய்தியாளர்களுக்கோ கண்டறிய முடியாமல் எட்டாத வெளிக்குள் எப்போதும் மக்களிடையே இருந்து வரும் உணர்வுகள் திட்டுமென எதிர்பாராத வகையில் வெளிப்பட்டதே ஆகும்.
இந்த வெளிப்பாடு ஏன் அதிகார அமைப்பை நிலைகுலையச் செய்கிறது என்பதற்கான மற்றொரு இணைக் கோட்பாட்டை முன்வைத்தார் பண்பாட்டு அறிஞர் மிகைல் பாக்தின். [Bakhtin, Mikhail. Rabelais and His World. Translated by Hélène Iswolsky. Bloomington: Indiana University Press, 1984 (original Russian 1965)] தொடக்கக்கால நவீன ஐரோப்பாவின் கேளிக்கை கொண்டாட்ட (carnival) மரபுகளைப் பற்றி எழுதிய அவர், “கேளிக்கைக் கொண்டாட்டத்தனம்” பற்றி விவரிக்கிறார். அதாவது, அதிகார படிநிலைகளை தலைகீழாக மாற்றுவதற்காக அருவருப்பான, மலமூத்திரம் போன்ற கீழ்மையான உடல் அம்சங்களைத் திட்டமிட்டு முன்னிறுத்தும் தருணங்களை உருவாக்குவார்கள். அந்தச் சமயங்களில், மன்னர்கள் கேலிக்கூத்தாக முடிசூட்டப்படுவார்கள்; புனிதமானவை எனக் கருதப்பட்டவை புனித பீடங்களிலிருந்து கீழே வீழ்த்தப்பட்டு, உடலின் இழிவான நிலையோடு சமமாக்கப்படும்.
அந்தச் சிரிப்பு நீடிக்கும் வரை, உலகின் ஆட்சியாளர்கள் சிறுமையுடன்தான் அணுகப்படுவார்கள். பாக்தினின் கருத்தின்படி, இந்த சிரிப்பு வெறும் பொழுதுபோக்கல்ல, அதிகாரக் கட்டமைப்புக்கு மிகவும் கீழே இருப்பவர்களின் மீது கட்டமைப்பு கட்டவிழ்க்கும் உளவியல் பாதிப்பை தற்காலிகமாகவே எனும் தளர்த்தவல்ல சிரிப்பு அது. தற்காலிகமாகவேனும். தீவிரத்தன்மையுடன் கட்டி எழுப்பப்பட்ட ஆட்சிகள் மீதான விமர்சனம், கேலிச்சிரிப்பாக வெளிப்படும்போது, அவற்றைக் கையாளுவதற்கென வரலாற்றில் அத்தகைய ஆட்சிகள் நிலையான வழிகளைக் கொண்டிருந்ததில்லை.
ஃபிரஞ்சு புரட்சியில் கேலிப் பிரசுரங்களின் பங்கு:
பாஸ்டைல் கோட்டையின் முதல் செங்கல் பெயர்த்தெடுக்கப்படுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னதாகவே, 1770 வாக்கில், பிரஞ்சு முடியாட்சி தன்னால் மீட்டெடுக்க முடியாத ஒன்றை இழக்கத் தொடங்கியிருந்தது. அது புனிதத்தன்மை. தனது படை, கருவூலம், சிம்மாசனம் என எதையும் இன்னும் அது இழக்கவில்லை. மாறாக, எளிய அரசியல் அடைய முடியாத அதிகாரத்தை அடையப் பிரெஞ்சு அரசர்களுக்கு மட்டுமே இருந்த புனித மாயத்தன்மையை முடியாட்சி இழந்தது. அந்த புனிதத்தை அரித்து அழித்தது, மேட்டுக்குடியினர் இடையே உலா வந்த அறிவொளி காலத்து அரசியல் ரீதியிலான வாதப்பிரதிவாதங்கள் அல்ல என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள். பச்சையாக எழுதப்பட்டுப் பரந்துபட்ட அளவில் வாசிக்கப்பட்ட லிபெல் எனப்படும் கேலிப்பிரசுரங்கள்தான் முடியாட்சியின் மேன்மையை வீழ்த்தியது. லிபெல்ஸ் எனப்படும் கேலிப் பிரசுரங்கள் வெளிநாட்டில் அச்சிடப்பட்டுக் கடத்தி வரப்பட்டு ரகசியமாகக் கைமாற்றி விடப்பட்டு, வாசிக்கப்பட்ட ஆபாசமான, அவதூறான, சட்டவிரோத துண்டுப்பிரசுரங்கள். அவற்றின் விருப்பத்துக்குரிய இலக்காக ஃபிரெஞ்சு அரசி இருந்தார்.
ஒவ்வொரு பிரசுரத்திலும் கற்பனைக்குட்பட்ட அனைத்து வகையான சீரழிவுகளுக்கும் ஆளானவராகக் குற்றம் சாட்டப்பட்டார் மேரி அன்டோனெட் (Marie Antoinette). அரசனோ ஆண்மையில்லாதவன், பலவீனமானவன், தன்னால் சுமக்க முடியாத கனமான மகுடத்தை அணிந்திருப்பவன் எனக் கேலி செய்யப்பட்டான். இது எதுவும் முறையான வாதமும் இல்லை. பெரும்பாலும் அதில் உண்மையும் இருக்கவில்லை. ஆனால் வரலாற்று ஆசிரியர் ராபர்ட் டார்ண்டன் [Darnton, Robert. The Literary Underground of the Old Regime. Cambridge, MA: Harvard University Press, 1982.] “பழைய ஆட்சியின் இலக்கிய அடித்தளம்” (literary underground of the Old Regime) பற்றிய தனது ஆய்வுகளில் தத்துவஞானிகளின் கட்டுரைகள் தனியாகப் போராடிச் சாதிக்க முடியாத ஒன்றை இந்த ‘லிபெல்ஸ்‘ செய்தன என்கிறார். அவை முடியாட்சியைச் சாக்கடை மொழியில் பேசக்கூடிய ஒன்றாக மாற்றின.
ஒரு அரசனையும் அரசியையும் சாதாரண வாசகர்கள் கேலி செய்யவும், ஆபாசமான விவரங்களுடன் கற்பனை செய்யவும் முடிந்துவிட்ட பிறகு, ஒரு முக்கியமான விடயத்தை அவர்கள் இழந்துவிட்டிருந்தனர். இத்தகைய பேச்சுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்ற அனுமானம் பறிபோயிருந்தது.. டார்ண்டனும், அவருக்குப் பின்னர், புரட்சியின் காம இலக்கியங்கள் குறித்த தனது படைப்பில் லின் ஹன்ட்டும் [Hunt, Lynn. Politics, Culture, and Class in the French Revolution. Berkeley: University of California Press, 1984.] முடியாட்சியின் புனிதத்தன்மை இழப்பு இது என்றும் 1789-க்கு முன்பே பெருமளவில் முடியாட்சியின் புனிதத்தன்மை மறைந்துவிட்டது என்றும் விவரிக்கிறார்கள். ஒரு காலத்தில் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்கத் தகுதியாக இருந்த கிரீடம் அதற்குரிய பக்தி மாயையை அமைதியாக இழந்துவிட்டிருந்தது. எஸ்டேட்ஸ் ஜெனரல் சந்திப்பு கூட்டப்படுவதற்கு முன்பே இது முடிந்திருந்தது.
புரட்சி தொடங்கியவுடன் இந்த ஆயுதம் கைவிடப்படவில்லை; மாறாக அது தொழில்முறையாக மாற்றப்பட்டது. ஜாக் ஹெபெர்ட்டின் (Jacques Hébert) ‘லெ பெரே டுசெஸ்னே’ (Le Père Duchesne) என்ற செய்தித்தாள், புரட்சிக் காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க வெளியீடுகளில் ஒன்றாக மாறியது. ஏனெனில், அது கண்ணியமான துண்டுப்பிரசுர வெளியீட்டின் அனைத்து மரபுகளையும் நிராகரித்தது. அதில் கற்பனைக் கதை சொல்லியாக வருகிறவர் ஒரு அடுப்பு தயாரிப்பவர். அவர் பாரிசின் வெகுமக்கள் மொழியில் பழமொழிகளும் கெட்டவார்த்தைகளும் கலந்து பேசினார். வாசகர்களை வெகுமக்களாகப் பாவிக்காமல், அவர்களும் கேலியான தன்னுடைய பேச்சுவழக்கில் பங்குபெறும் பங்காளர்கள் போல அவதானித்து அணுகினார்.
பேச்சுவழக்கு பச்சையாக எந்த ஒளிவுமறைவுமின்றி இருந்தது. பழைய ஆதிக்க அமைப்பு பதில் சொல்ல வேண்டுமென்றால், தனது கண்ணியம் கெடாமல் பதில் அளிக்க முடியாத வகையில் பேச்சுவழக்கு அமைந்திருந்தது. அத்தகைய ஒரு குரலில் பேசுவதே அதன் அரசியல் செயல்பாடாக இருந்தது. மேலும் புரட்சியின் வெகுஜன அடித்தளத்தை வரையறுக்கப் பயன்படுத்தப்பட்ட அடையாளம், ‘சான்ஸ்-குலோட்ஸ்‘ (sans-culottes). அதாவது “முழங்கால் சட்டை இல்லாதவர்கள்“. உழைக்கும் ஏழை மக்களின் முரட்டுத்தனமான கால்சட்டைகளைக் கண்டு மேட்டுக்குடியினர் பயன்படுத்திய கேலிச் சொல் இது. இக்கேலிச் சொல்லிலிருந்தே புரட்சிக்கான அடையாளம் உருப்பெற்றது சரியாகச் சொன்னால் “கரப்பான்பூச்சி” என்கிற சொல் வேலையில்லா இளைஞர்களைக் கண்டு சூர்யகாந்த் செய்த கேலியிலிருந்து தொடங்கியதைப் போல, இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் கரப்பான்பூச்சிகள் செய்வதையே ஃபிரஞ்சு புரட்சி கூட்டமும் செய்தது. அவர்கள் அந்த அவச்சொல்லைக் கையில் எடுத்தார்கள். அதை ஒரு பெயராக அணிந்துகொண்டார்கள், மேலும் அச்சொல்லை உருவாக்கியவர்கள் மீதே அந்த கேலியைத் திருப்பினார்கள்.
டயப்பரை அஞ்சல் அனுப்பியவர்கள் மட்டுமே ஒரு இந்தியக் கல்வி அமைச்சரை வீழ்த்தினார்கள் என்று சொல்ல முடியாது. அதைப் போலவே, ஆபாசச் பிரசுரங்கள் தான் பிரெஞ்சுப் புரட்சிக்குக் காரணம் என்று உரிமை கோரவில்லை. ரொட்டி விலைகள், போர்க் கடன் மற்றும் முடங்கிப்போன அரசியல் அமைப்பு ஆகியவையே இரண்டு நிகழ்வுகளிலும் வலுவான காரணிகளாக இயங்கின. ஆனால் ஆபாசப் பேச்சும் அரசியல் பேச்சும் எப்படி ஒரே ஆயுதமாக இருக்க முடியும் என்பதை ‘லிபெல்‘ விளக்குகிறது. ஆழமாக வேரூன்றிய அதிகாரம் நம்பியிருக்கும் மரியாதையை அது உரித்தெடுக்கிறது.
நமக்கு நெருக்கமான மரபு
இந்தியாவிலும் இதே போன்றொரு வரலாறு இருக்கிறது. அது 1970-களின் தொடக்கத்திற்கு நடந்தது. நாம்தேவ் தசாலின் கவிதைகள் அதன் கெட்ட வார்த்தைப் பயன்பாட்டினாலும், அதன் அப்பட்டமான தன்மையினாலும் இலக்கிய வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ஆனால் ‘கோல்பிதா‘ (Golpitha) கவிதைத் தொகுப்பை நடுத்தர வர்க்கத்தினரின் சுத்திகரிக்கப்பட்ட மராத்தியில் ஒருபோதும் எழுதியிருக்க முடியாது. அதன் மொழி அது பிரதிநிதித்துவப்படுத்திய கொடூரமான சமூக யதார்த்தத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. கறுப்பின போராட்ட இலக்கியங்கள், பங்க் இசை (punk music), ராப் (rap), பெண்ணிய முழக்கங்கள் மற்றும் எண்ணற்ற உழைக்கும் வர்க்க இயக்கங்களிலும் இதைப் பொருத்திப் பார்க்கலாம். ஒடுக்கப்பட்டவர்களின் மொழி, அவர்களை ஆதிக்கம் செலுத்துபவர்களின் தரநிலைகளுக்கு அரிதாகவே இணங்கி வெளிப்பட்டிருக்கிறது.
வசைபாடுதலை ஆதரிப்பதல்ல இக்கட்டுரையின் நோக்கம். பெண்கள், சிறுபான்மையினர் அல்லது பிற பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பார்த்துக் கீழ்நோக்கிச் செலுத்தப்படும் வசைகள், ஆதிக்க அமைப்புகளை மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, அதிகாரத்தில் வேரூன்றிய அமைப்புகளை நோக்கிச் செலுத்தப்படுகிறது. தாராளவாத விமர்சகர்கள் என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் கரப்பான்பூச்சி இயக்கத்தின் மொழி நடையென்பது, சந்தேகத்திற்கு இடமின்றி அதிகார அமைப்புகளை நோக்கியே செலுத்தப்பட்டது. தலைமை நீதிபதியின் அமர்வு, அமைச்சரின் அலுவலகம், கட்சி கட்டமைப்பு மற்றும் இவ்வமைப்பில் இருப்பவர்கள் தண்டனையின்றி தப்பித்துக் கொள்ளல் ஆகியவற்றைக் குறிவைத்தே அது இருந்தது.
மேல்நோக்கிச் செலுத்தப்படும்போது, எல்லையை மீறும் மொழி என்பது ஒரு குறியீட்டு ரீதியான கீழ்ப்படியாமைச் செயலாக மாறுகிறது. அது அதிகார வலிமை நம்பியிருக்கும் மரியாதையை உடைக்கிறது. இந்த அடிப்படையில் பார்க்கும்போது, இந்த கிளர்ச்சியின் ஜென் ஜி (Gen Z) மொழி நடை என்பது வெறும் இளைஞர்களின் மரியாதையற்ற தன்மையை மட்டும் காட்டவில்லை. வேலையின்மை மற்றும் தேர்வுத்தாள் மோசடிகளால் ஒரு தலைமுறையினரிடம் திரண்ட விரக்தியையே வெளிப்படுத்துகிறது.கோரிக்கைகளைப் போலவே உணர்வுகளையும் இம்முறை வெளிப்படுத்துகிறது. மேலும் ஒரு இயக்கம் தனது சமூக அடித்தளத்துடன் கொண்டிருக்கும் இடைவெளியையும் இம்முறை குறைக்கிறது. இதை மரியாதையான நாகரிக மொழியால் அரிதாகவே செய்ய முடியும்.
பிரதானின் பதவியை விட, மோடியின் பிம்பத்திற்கு இது ஏன் முக்கியமானது?
வலியோரை எளியோர் வீழ்த்த ஓர் போர்த்தந்திரம் இருக்கிறது. எதிரியின் கற்பனைக்கெட்டாத வழியில் அவன் பயிற்சி பெறாத களத்தில் நின்று போரிடுவதன் மூலம் நீங்கள் வெற்றி அடையலாம். மோடியின் ஆட்சி கொள்கையைச் செயல்படுத்தி ஆதிக்கத்தைக் கட்டமைத்ததை விட, கவனமாகக் கட்டியெழுப்பப்பட்ட பிம்பத்தைக் கொண்டுதான் ஆட்சியைக் கட்டமைத்தது. அதாவது ஒழுக்கமான, கண்ணியமான ஒரு துறவி போன்றவராகவும், விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் அப்பாற்பட்ட ஒரு தலைவராகவும் மோடி சித்தரிக்கப்பட்டிருக்கிறார். சொந்த களத்தில் போட்டியில்லாத சமூக ஊடகப் படை, திட்டமிடப்பட்ட பேரணி, ஆதரவான தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் துணை கொண்டு கடந்த பத்தாண்டுகளில் இந்த பிம்பம் தாங்கி பிடிக்கப்பட்டது.
அந்த பிம்பத்தை 1770களில் பதினாறாம் லூயியை சுற்றி இருந்த புனித மாய பிம்பத்துடன் ஒப்பிடலாம். அதனளவுக்கான தெய்வீகத் தன்மை இல்லை என்றாலும் நலிந்த, நவீன, மதச்சார்பற்ற வடிவம் எனச் சொல்லலாம். தொடமுடியாதவர் என்கிற ரீதியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பிம்பம் அது.
முழக்கங்கள், மனுக்கள், கருத்துரைகள் இவையே இந்திய எதிர்ப்பரசியலின் வழக்கமான வழிமுறைகளாய் இருந்தன. அதிகார பலத்தாலும், பணபலத்தாலும் இவற்றை ஒடுக்கவும், அவை தானாகவே அடங்கும் வரை காத்திருக்கவும் கடந்த பத்தாண்டுகளில் அரசு பழகிக்கொண்டது. ஆனால், எள்ளலையும் கேலியையும் சமாளிக்க வேண்டியிருக்கும் என ஒருபோதும் அரசு எதிர்பார்த்திருக்கவில்லை. கெட்ட வார்த்தையும் கேலியும் மரியாதையை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, அதிகாரம் எதிர்பார்க்கும் கண்ணியத்தை அவை தர மறுக்கிறது. தான் தீவிரமாக மதிக்கப்பட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தனது அதிகாரத்தைக் கட்டமைத்து இயங்கும் ஓர் அரசு, கேலி செய்யப்படுகையில் நிராயுதபாணியாக மட்டுமே நிற்க முடியும்.
பிரம்மாண்ட செலவில் கட்டியெழுப்பப்பட்ட மோடி பிம்பத்துக்கு ஒரு மாத காலமாக அதுதான் நடந்தது. இத்தகைய பிம்ப தகர்ப்பை எதிர்க்கட்சி அரசியல்வாதியின் பேச்சு ஒன்றும் செய்துவிடவில்லை. மாறாக சமூகவலைத்தளத்தில் மீம் கணக்கு வைத்துள்ள பதின்ம வயதினர் செய்தனர். 250 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு சிம்மாசனத்தின் தெய்வத்தன்மையை காலி செய்யப் பயன்படுத்தப்பட்ட அதே உத்தியால் மோடியின் பிம்பமும் துளையிடப்பட்டிருக்கிறது.
அதனால்தான் ராஜினாமாவை விட அதைச் சாத்தியமாக்கிய விடயம் மிக முக்கியமானதாகிறது. இந்த ஆட்சியை அசைக்க முடியாது; பாராளுமன்றம் கடினமான கேள்விகளைக் கேட்காது; நீதிமன்றம் துரிதமாகச் செயல்படாது; போராட்டங்கள் எதையும் மாற்றாது; அதிகாரத்திற்கு முன்பு செய்யக் கூடிய ஒரே விவேகமான காரியம் பொறுமை காப்பது. இந்த அனுமானங்களின் அடிப்படையில்தான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலான ஆட்சியில் இந்தியர்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்து கொண்டனர்.
ஆனால் கரப்பான்பூச்சி இயக்கத்தினர் இந்த மாயையை உடைத்தனர். மரபான இயக்கம் எதைக் கீழானதெனச் சொன்னதோ அதே ஆயுதத்தைப் பயன்படுத்தி அந்த மாயை கரப்பான்பூச்சிகள் உடைத்துக் காட்டியிருக்கின்றன. மக்கள் மனதில் மீண்டும் துளிர்க்கும் நம்பிக்கை என்பது சாதாரணமான விடயமல்ல. அடுத்து நடக்கவிருக்கும் மாற்றங்கள் அனைத்திற்கும் அதுவே முதல் விதை. ஒரு அரசனை எள்ளி நகையாட முடியுமென்றால், அவனை எதிர்த்து நிற்கவும் முடியும் என்பதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உணர்ந்து திரண்ட கூட்டத்திற்கு ஒரு நம்பிக்கைதான் தொடக்கமாக இருந்தது. அதே போன்ற நம்பிக்கைதான் இதுவும்.
பழைய பழக்கம் மீண்டும் திரும்புகிறது!
இதனைத் தொடர்ந்து ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடக்க வேண்டும். ஏனெனில், உடனடியாக தான் செய்த உடன்பாட்டுக்கு எதிராகச் செயல்பட அரசு தயங்கவில்லை. கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், அரசு தரப்பிலிருந்து பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் தொடராது எனப் பகிரங்கமாக உறுதிப்படுத்தினர். அதனால் புரிதலின் அடிப்படையில் நல்லெண்ணத்துடன் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. சில நாட்களிலேயே, சிஜேபி (CJP) அமைப்பின் செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, மத்திய அமைச்சர்களான ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங்கிற்கு அனுப்பிய செய்தியை வெளியிட்டார். அதில் ‘பீகார் மற்றும் வங்காளத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’, டெல்லியில் மேலும் நூற்றுக்கணக்கானோர் ‘கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள்’, மற்றும் அமைப்பிற்குத் தன்னார்வ பணி மட்டுமே செய்தவர்கள் கூட சத்தமில்லாமல் கைது செய்யப்படுகிறார்கள் என்றார்.
இயக்கத்தின் கணக்குப்படி, போராட்டம் முடிந்து 48 மணி நேரத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தன் பங்கிற்கு, சுமார் மூவாயிரம் “தொடர் குற்றவாளிகள்” இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடுருவியதாக ஒரு அறிக்கையைப் பரப்பியது டெல்லி காவல்துறை. ஊடகம் வெளியேறியவுடன் வெகுமக்கள் இயக்கத்தைச் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்றுவதற்கு அரசு செய்யும் வழக்கமான, முதற்கட்ட நடவடிக்கை இது. பதினெட்டாம் நூற்றாண்டு முடியாட்சியும் கூட தன்னால் வாதாடி வெல்ல முடியாத கேள்விகளுக்கு இதே போன்றுதான் பதிலளித்தது. எள்ளலையும் கேலியையும் இனி சமாளிக்க முடியாது என்றானதும் விசாரணையின்றி லெட்டர் டி கேஷே (lettre de cachet) எனப்படும் ரகசியக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. கேலிச்சித்திர பிரசுரங்கள் எழுதியவர்களை பாஸ்டைல் சிறைக்குள் மறைந்துபோகச் செய்தனர்.
இந்த அரசு எவ்வாறு எதிர்ப்புகளைக் கையாளும் என்பதைப் பார்த்த எவருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்காது. போராடியவர்களுக்கு ஒரு சலுகையை வழங்கி விட்டதாலேயே, அவர்களைத் தண்டிக்க வேண்டுமென்கிற உள்ளுணர்வை அரசு கைவிடுவதில்லை. குறிப்பாக ஊடகம் வெளியேறியவுடன், ஒடுக்குமுறையைச் சத்தமின்றி கட்டவிழ்க்கும்”கரப்பான்பூச்சிகள்” இந்த ஆபத்தைத் தொடக்கத்திலிருந்தே புரிந்து வைத்திருந்தார்களா என்பது இப்போது முக்கியமல்ல. முதல் சண்டையில் வெற்றியடைய உதவிய அதே மரியாதையற்ற தன்மையிலேயே இதையும் அணுகுவார்களா என்பதுதான் முக்கியமானது.
சிரிப்பின் ஆற்றலைக் கண்டுவிட்டு பின்னர் அம்முறை சரியல்ல எனக் கருதும் இயக்கங்கள், ஆபாச மொழி வழக்கைத் தவிர்க்கத் தொடங்குவார்கள். விமர்சகர்கள் எப்போதும் கோரிவந்த நாகரிக மொழியைப் பயன்படுத்தத் துவங்கும் போது அதுவரை அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்த ஒரு ஆயுதத்தை இழந்தவர்களாகி விடுகிறார்கள். இதுவும் 18 ஆம் நூற்றாண்டு வழங்கும் ஒரு பாடமாகும். ஹெபர்ட் உட்பட்ட புரட்சியின் மூர்க்கமான குரல்கள் உள்ளிருந்தே அமைதியாக்கப்பட்ட போதுதான் அவர்களுக்கு வெகுமக்களிடமிருந்த தொடர்பு தளரத் தொடங்கியது.
படிநிலை கொண்ட ஒரு அமைப்போ, தலைமையகமோ, அல்லது அழைத்துப் பேசி சமரசம் செய்ய ஒற்றைத் தலைவரோ இல்லாத ஒரு இயக்கம், வெற்றியின் உற்சாகம் குறைந்ததும் சோர்வடைந்துவிடும் என்று அரசாங்கம் நம்புகிறது. இந்தத் தலைமுறையைப் பற்றி அது ஏற்கனவே தவறான நம்பிக்கையையே கொண்டிருந்தது. பீகாரிலும் வங்காளத்திலும் கைதுகளைக் கணக்கெடுக்கும் அதிகார வர்க்கத்திற்குச் சொந்தமல்ல இந்நாடு. அது குறைந்தபட்சம் ஒரு மாதகாலம் வரை கரப்பான்பூச்சிகளுக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் அமைதியாகவும், நாகரிகமானவர்களாகவும், மறதி கொண்டோராகவும் மாற மறுக்கும் காலம் வரை இந்த நாடு அவர்களுக்கே சொந்தமாக இருக்கும். ஊடகங்கள் தற்போது வேறு விடயங்களில் கவனம் செலுத்துவதும் அவர்களை மாற்றிவிட முடியாது. 1770-களின் ‘லிபெல்ஸ்’ பிரசுரங்கள் முதல் ஜந்தர் மந்தர் சுவரொட்டிகள் வரையிலான வரலாறு என்பது என்றென்றைக்குமான ஒரு பாடத்தை நமக்கு வழங்குகிறது. தங்களைத் தீவிரமாகப் பொருட்படுத்த வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் அதிகாரம், தங்களைப் பார்த்துக் கேலி செய்யப்படுவதிலிருந்து நீண்ட காலம் தப்பிப்பிழைப்பதில்லை; ஆனால், ‘சிரிப்பெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது’ என அதன் எதிராளிகள் கை கழுவும் கணத்திலேயே, அந்த அதிகாரம் மிகச் சுலபமாகத் தப்பிப் பிழைத்துக் கொள்கிறது.
கரப்பான்பூச்சிகள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவோமாக!
“In Defence of the Profanity of Protesters” எனும் தலைப்பில் The Wire இதழில் வெளியான அறிஞர் ஆனந்த் டெல்டும்டே அவர்களின் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.