
கர்நாடக வனத்துறையினரால் கொல்லப்பட்ட தமிழர்கள் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பிறகே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்கிற அதிர்ச்சியான செய்தி அவர்களின் உடற்கூறு ஆய்வு மூலம் தற்போது வெளிவந்துள்ளது. உடல் முழுவதும் கடுமையான காயங்களுடன், விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல்களை அவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹானூரில் உள்ள மரிமங்கலத்தில் ஆகஸ்ட் 15, 2026 அன்று அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், ஜெபஸ்டின் டேவிட் குமார், மரிய மகிகை தாஸ் ஆகிய நான்கு தமிழர்களும் மான் வேட்டையில் ஈடுபட்டதால் சுட்டதாக கர்நாடக வனத்துறையினர் கூறியுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்த நிலையில் மரிய மகிமை தாஸ் காயத்துடன் தப்பினார்.
இந்த சம்பவம் நடந்த ஆகஸ்ட் 15, 2026, காலையில் எந்த எச்சரிக்கையும் விடப்படாமலே துப்பாக்கி சூடு நடந்ததாகவும், அந்த சத்தம் கேட்டதும் அவர் தப்பித்து வந்ததாகவும் கூறியுள்ளார். அதற்குப் பிறகு அங்கு நடந்தவைகள் எதுவும் தெரியவில்லை என்கிறார். கர்நாடக வனத்துறை அவரைத் தேடுவதாகவும், தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரின் மூலமாகவே இந்த செய்தி குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது.

அவர்களின் குடும்பத்தினரும், காயத்துடன் தப்பிய மகிமை தாசும் மேய்ச்சலுக்குப் போன மாடுகளை தேடிச் சென்றதாகவே கூறுகின்றனர். ஆனால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களிடமிருந்து மான் இறைச்சி மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள், கத்திகள், காலணிகள் போன்றவற்றை பறிமுதல் செய்ததாக கர்நாடக வனக் காவலர்கள் கூறினர். அவர்கள் காட்டிய கத்தி புதிதாக இருந்தது. காலணிகளும் இதுவரை ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாமல், மண் கறை எதுவும் இல்லாமல், இன்னும் பயன்படுத்தப்படாத அளவிற்கு புதியதாக இருந்தது. இவையெல்லாம் பலத்த சந்தேகம் எழுப்பியிருக்கின்றன..
கர்நாடக வனத்துறையினால் கொலை செய்யப்பட்டவர்களின் பின்னணியில் இதுவரை எந்த குற்றப் பின்னணியும் இல்லை. கர்நாடக எல்லையின் மரியமங்கலம் என்னும் குக்கிராமத்தில் இருந்து கூலி வேலை பார்த்து வந்த அப்பாவித் தமிழர்கள். கர்நாடக எல்லைக்குள் சென்று மாடு தேடியதே இவர்கள் செய்த குற்றமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், நீதி கேட்டு உறவினர்கள் பலவேறு இடங்களில் மறியல் போராட்டம் செய்தனர். தமிழ்நாட்டின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். சட்டசபையில் கவன ஈர்ப்புப் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதங்கள் நடந்தன. தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் இதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் சிபிஐ விசாரணைக்கு கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் டி. சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். எந்த மாநிலமும் எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் தலையிட முடியாது எனவும், நீதி விசாரணைக்கு மாநில சிஐடி காவலர்களிடம் உத்தரவிட்டு உள்ளதாகவும், சிபிஐ விசாரணை அனுமதிக்க முடியாது, என்றும் கடுமையாகப் பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள், இதனை கண்டிப்பதாகவும், இனி இந்த தவறுகள் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மென்மையான போக்கில் அறிக்கை விட்டிருந்தார். அதற்குப் பிறகான கர்நாடகாவின் விசாரணைகள் குறித்த விவரங்கள் கேட்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன.

கன்னடக் காவல் துறையும், வனத் துறையும் இனவெறியுடன் தமிழர்களைக் கொல்வதற்கு இதற்கு முன்பான தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்களே சாட்சியமாக இருக்கின்றன.
- 1991-ல் காவிரி தீர்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் தமிழ்நாட்டுக்கு 205 டிஎம்சி நீரைத் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவினைக் கேட்டு ஆத்திரமடைந்த, கன்னட இனவாதிகள் நடத்திய வன்முறையினால் 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். தமிழ் பதிவெண்கள் இருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தாக்கப்பட்டன. தமிழர்கள் கடைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் தேடித் தேடி தாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதியாக இங்கு தப்பி ஓடி வந்தனர்.
- 1990 களில் நடந்த வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டு கொடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.
- 2023, பிப்ரவரி 14-ம் நாள், அதிகாலை, சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரைச் சேர்ந்த ராஜா என்ற மீனவர் வனப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த மற்றவர்கள் தப்பி ஓடியதால் மேலும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. அவருடன் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
- 2014, அக்டோபர் 9-ம் நாள், பழனி என்பவர் உட்பட 5 பேர் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு பழனி கொல்லப்பட்டார். இருவர் காயத்துடன் தப்பினர். மறுநாள் பழனியின் உடல் காவிரியில் அழுகிய நிலையில் கண்டறியப்பட்டது.
கர்நாடக வனத்துறை சந்தன மரம், யானை தந்தம், மான் இறைச்சி கடத்துதல் போன்றவற்றில் இருந்து வனத்தைக் காக்கவே இப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறுகிறது. ஆனால் அங்குள்ள வனத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் வழக்குகள் ஏராளமானவை பதியப்பட்டுள்ளன. சர்வதேச கடத்தல் வலைப்பின்னலிலில் வனத்துறை அதிகாரிகள் பலரும் இருப்பதை பல ஆய்வுகள் கூறுகின்றனர். மேல்மட்டத்தில் ஏற்படும் தொடர்ச்சியான நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக ஆடு, மாடு மேய்க்க வரும் அப்பாவிகளை வேட்டை கடத்தல் நடவடிக்கை என்று சுட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்ததை, 2007 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட நீதிபதி சதாசிவம் அறிக்கை, மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்றவை அம்பலப்படுத்தி இருக்கின்றன.
கர்நாடகாவில் காவிரி நீர் பிரச்சினையையும், மேகதாது அணை கட்டும் பிரச்சினையையும் மையமாக வைத்து இனவாதம் வளர்க்கப்படுகிறது. அங்குள்ள தேசியக் கட்சிகள், தேர்தல் ஆதாயம், அதிகாரப்போட்டி அரசியலுக்காக சாமானிய மக்களிடையே வெறுப்பை தூண்டி பிளவுவாத அரசியலில் ஈடுபடுகின்றன. அரசின் மீது அதிருப்தி ஏற்படும் சூழல்களில் அதை மடைமாற்ற இனவாதத்தை கையிலெடுக்கின்றனர். மக்களின் பொருளாதாரப் பிரச்சனைகள், உட்கட்சி சிக்கல்கள், தோல்விகள் போன்றவற்றை மறைக்க இந்த சூழ்ச்சியை அரங்கேற்றுகின்றன.
காவிரி நீர் உரிமையைக் கேட்ட முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உருவபொம்மையை பிண ஊர்வலமாக கொண்டு எடுத்துச் சென்று இழிவுபடுத்தினர். தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்காக, அவரது படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என்று கூறி மிரட்டல் விடுத்து போராட்டங்கள் நடத்தினர். அதே சமயம் சமஸ்கிருதத்திலிருந்து தான் கன்னடம் முதலான எல்லா மொழிகளும் வந்தன என இந்துத்துவவாதிகள் பேசும் போது வாய் மூடி மௌனம் காக்கின்றனர். இந்துத்துவவாதிகளே அங்கே இனவாதிகளாக மக்களை பிளவுபடுத்தும் அரசியலை செய்து வருகின்றனர். ஓட்டு அரசியலுக்காக இணக்கமாக வாழும் மக்களிடம் இனவாதம் வளர்க்கும் இனவாத அமைப்புகளை வளர்த்து விடும் பங்களிப்பினை இரு கட்சிகளும் செய்கின்றன.

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜகவும், அங்குள்ள இந்துத்துவ அமைப்புகளும் இனவாதத்தை திரைப் பிரபலங்கள், அதிகாரிகள், காவலர்களிடம் ஊட்டி வளர்த்ததன் வெளிப்பாடே கர்நாடக வனத்துறையினரால் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இப்படுகொலைகள்.
மரியமங்கலத்தில் நடந்தது வெறும் துப்பாக்கிச் சூடு அல்ல, அது அப்பாவித் தமிழர்கள் மீது இனவெறியுடன நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை. ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புதிய காலணிகளை காட்டி வேட்டைக்காரர்கள் என்று கதை கட்டுவதும், உடல் முழுவதும் சித்திரவதை காயங்களுடன் மிக நெருக்கத்தில் சுட்டுக் கொல்வதும், 1991 காவிரி கலவரம் தொடங்கி- வீரப்பன் தேடுதல் வேட்டை, 2014 பழனி, 2023 ராஜா வரை தொடரும் இனவாதத்தின் வெளிப்பாடே ஆகுது காவிரி, மேகதாது போன்ற பிரச்சினைகளை வைத்து தேர்தல் லாபத்திற்காக, தேசிய இனங்களின் உரிமையைக் கேட்க விடாமல் அடக்குவதற்காக இனவாத அமைப்புகளும், தேசியக் கட்சிகளும் வளர்க்கும் இந்த இனவெறியை கர்நாடக மக்கள் புரிந்து கொளிவதே தீர்வாக அமையும்.
தமிழ்நாட்டின் மாநிலக் கட்சிகள் பெரும்பாலும் இனவாதம் தலைதூக்காத கருத்தியலில் வலுவானவை. முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் இனப்பற்றுடன் செயல்படுபவை. அந்த ஒற்றுமை உணர்வில் நின்று காவிரி, மேகதாது பிரச்சனைகளுக்காக தீர்வையும், தமிழர்கள் மீது நிகழ்த்தப்படும் படுகொலையின் நீதியையும் வென்றெடுக்க வேண்டும்.