பழங்குடிகள் தான் புரட்சியின் மைய அச்சு – நிமிர் வெளியீட்டு விழாவில் திருமுருகன் காந்தி உரை

ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எழுத்தாளர்கள் அமரந்த்தா, எஸ்.பாலச்சந்திரன், சே.கோச்சடை ஆகியோர், லத்தீன் அமெரிக்க மார்க்சியத்தின் தந்தை மரீயாதெகீயின் 3 நூல்கள் கொடுத்துள்ளனர். நிமிர் பதிப்பகத்தின் 6 நூல்கள் வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 9 அன்று சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்; இன்கா கம்யூனிசம் குறித்தும், லத்தீன் அமெரிக்க கட்டமைப்பு வழிமுறைக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் உள்ள தொடர்பு குறித்தும், புரட்சிக்கான மைய அச்சாக பழங்குடிகள் விளங்கியது குறித்தும், கடந்த 9 ஆகத்து 2026 அன்று, நிமிர் புத்தக வெளியீட்டு நிகழ்வில்ஆற்றிய உரை:

தோழர்களுக்கு வணக்கம்!

பிடல் காஸ்ட்ரோவினுடைய நூற்றாண்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என்கின்ற பேரவையை சாத்தியப்படுத்தி இருக்கக்கூடிய தோழர்களான மரியாதைக்குரிய தோழர் அமரந்தா அவர்களுக்கும், தோழர் பாலச்சந்திரன் அவர்களுக்கும், தோழர் கோச்சடை அவர்களுக்கும் மே 17 இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

வேறு எந்த காலகட்டத்தையும் விட பிடல் காஸ்ரோ குறித்து நாம் இன்று அதிகமாக பேச வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்கள் முன்னுக்கு நகர்த்தப்படுகின்ற இந்த காலகட்டத்தில், பிடல் காஸ்ட்ரோவை இன்னும் அதிகமாக விவாதிக்க வேண்டிய தேவை நமக்கு இருப்பதாக நாம் அனைவருமே உணர்கின்றோம். அந்த வகையிலே இந்த நிகழ்வை சாத்தியப்படுத்தியதில் தோழர் அமரந்தா அவர்களுடைய தொடர் அழுத்தம்தான் முதன்மையான காரணியாக எங்களுக்கு அமைந்திருக்கிறது. அவர்தான் தொடர்ச்சியாக இது குறித்த அழுத்தத்தை எங்களுக்கு கொடுத்திருந்தார். பல்வேறு போராட்ட சூழலுக்கு நடுவிலே இந்த நிகழ்வை நடத்த முடியுமா என்கின்ற கவலை எங்களுக்கு இருந்தது. ஆனால் இதை சாத்தியப்படுத்தக்கூடிய வாய்ப்பை, அவர் எங்களுக்கு கொடுத்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றேன்.

இந்த நிகழ்விலே பெரும் ஆளுமைகள் பங்கெடுத்திருக்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு மேலாக ஒரு நீண்ட ஆய்வுரை போல ஒரு உரை, மனத்தெளிவையும் நமக்கு ஒரு நம்பிக்கையும் கொடுக்கக்கூடிய ஒரு அரங்காக இது அமைந்திருக்கிறது. அந்த வகையில் இதில் பங்கெடுத்திருக்கக்கூடிய அனைத்து ஆளுமைகளும் (ஒரு பெரும் பட்டியலே சொல்ல வேண்டியிருக்கும்) மேடையில் அமர்ந்திருக்கக்கூடியவர்கள், இங்கே பங்கெடுத்தவர்கள், பார்வையாளராக நம்மோடு அமர்ந்திருக்கக்கூடிய ஆளுமைகள் என்று பெரும் சிந்தனையாளர்கள் இங்கே ஒன்று கூடி இருக்கிறார்கள். அந்த வகையிலே இது ஒரு பெருமை மிகுந்த, மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்வாக அமைந்திருக்கிறது.

தோழர்களே, இது லத்தீன் அமெரிக்கா குறித்தான ஒரு புத்தகம் என்பதாக மேலோட்டமாக கடந்து போகக்கூடிய விடயம் அல்ல. பல்வேறு கேள்விகளுக்கு… இந்தியாவில் மார்க்சியம், கம்யூனிசம் என்பது ஏன் பின்னடைவை சந்தித்தது? சந்தித்துக் கொண்டிருக்கிறது? அல்லது முன்னேறுவதற்கான சாத்தியப்பாடுகளை அடைவதற்கான வாய்ப்புகள் என்ன? என்பது பற்றிய கேள்விகள் உங்களுக்கு இருந்தால், அதற்கான விடையை இந்த புத்தகத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

பல்வேறு ஒற்றுமைகளை இந்திய சூழலுக்கும், லத்தீன் அமெரிக்க சூழலுக்கும் நாம் பொருத்தி பார்க்கக்கூடிய வகையிலே இந்த புத்தகம் இருக்கிறது. இந்த புத்தகத்தில் ஒரே கட்டுரையை நான் இரண்டு / மூன்று தடவை படித்துவிட்டேன். அதற்கு முன்பாக லத்தீன் அமெரிக்கா என்பது எனக்கு ஒரு மிகப்பெரிய ஈர்ப்பை தந்த ஒரு அரசியல். என்னுடைய பள்ளிக்காலம் முடிந்து 18 வயதில் எனக்கு சே குவேரா அறிமுகமான அதே காலகட்டத்தில், எனக்கு அப்பொழுது ஒரு சின்ன புத்தகம் கிடைத்தது. அது ரெஜி தெப்ரே, அலண்டே-வை எடுத்த பேட்டி. அந்த சமயத்தில் அது புரிந்தும் புரியாமல் இருந்தாலும் கூட ஒரு ஆர்வத்தை கொடுத்தது. கம்யூனிஸ்ட்கள் தேர்தலின் வழியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிட முடியும், ஒரு பொதுவுடமை சமூகத்தை உருவாக்கிவிட முடியும் என்கின்ற ஒரு கிளர்ச்சியை அந்த புத்தகம் கொடுத்தது.

அதற்கு பிறகு தொடர்ச்சியாக லத்தீன் அமெரிக்கா சார்ந்த புத்தகங்களை வாசிப்பதற்கான விருப்பங்கள் வந்தன. ஏன் லத்தீன் அமெரிக்க புத்தகங்கள் மிக ஈர்ப்பாக இருந்தன? என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் மிக காலம் கழித்து பார்க்கும்பொழுது, நம்முடைய சூழலுக்கான பல விடைகள் அதிலே இருந்தன என்பதை என்னால் அறிய முடிகிறது. அந்த வகையில் பிடல் காஸ்ட்ரோவினுடைய ஜூலை 26 இயக்கம் என்கின்ற அந்த இயக்கம் ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்த இயக்கம். அதையும் நம் விடுதலைப் புலிகளையும் இணைத்தே பல்வேறு நகர்வுகளை நாம் பார்க்க முடிகிறது.

அவர்களுடைய தாக்குதல் மொன்காடா படைத்தளத்தில் ஆரம்பித்து, அதற்கு பிறகு ஒரு தரைவழி படையாக, ஒரு வழக்கமான முழு இராணுவம் (conventional army) மாதிரி அவர்கள் நடந்து கொண்ட முறை என்பதையும், நமது ஆனையிறவு தாக்குதலையும் இணைத்து நம்மால் பார்க்க முடியும். மிகச் சொற்பமான போராளிகளை வைத்துக்கொண்டு பெரும் படையை மறித்து நிற்பது, பெரும் படையை மடக்கி அதை வீழ்த்துவது என்பதில் இரண்டிற்குமான ஒப்புதல்களை நாம் தொடர்ச்சியாக பார்க்க முடியும். ஏனென்றால் சே குவேராவையும் ஃபிடலையும் வரலாறாகப் படித்தோம். இன்னொன்று எங்கள் காலகட்டத்தில் தான் அந்த நிகழ்வுகளை எல்லாம் விடுதலைப் புலிகள் சாத்தியப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். ஓயாத அலைகளிலிருந்து ஆரம்பித்து ஆனையிறவு வரை இணைத்து நாம் பார்ப்பதற்குரிய பெரும் வாய்ப்பை வரலாறு எங்களுக்கு கொடுத்தது.

அன்று நாங்கள் மே 17 இயக்கம் என்று ஆரம்பிக்க வேண்டும் என்கின்ற முயற்சியில் இல்லை. முதலில் இது குறித்தான ஆய்வுகளை வெளியிட வேண்டும் என்றுதான் விரும்பியிருந்தோம். அதற்காக முதலில் ஒரு ஆவணப்படத்தை தயாரித்திருந்தோம். அந்த ஆவணப்படத்திற்கு இயக்குநர் யார் என்று போடுவதற்கு விருப்பமில்லை. பொதுவான ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று யோசித்த பொழுது, எந்த தினத்தில் இது நடந்ததோ அதையே நாம் பெயராக வைத்துவிடலாம் என்று மே 17 என்று பெயர் வைத்தோம். அதன் பிறகு அது இயக்கமாகவே மாறிப் போனத. ஒருவேளை மே 17 என்று நாங்கள் வைப்பதற்கான காரணியாக ஜூலை 26 என்பது கூட எங்களுக்கு உலக அளவிலே தோன்றியிருக்கலாம்.

அந்த வகையில் லத்தீன் அமெரிக்கா என்பது பல்வேறு பொருத்தப்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. இதில் ஆய்வாளர் மாலதி அவர்கள், விடுதலைப் புலிகள் நடைமுறை அரசியல் (De facto state) இருந்த பொழுது அங்கே இருந்தவர். மனித உரிமை மீறல்களை குறித்து வன்னியில் இருந்து தொகுத்தவர். அவரை நான் பிரேமன் தீர்ப்பாயத்தின் பொழுது சந்தித்திருக்கின்றேன்.  அவர் லத்தீன் அமெரிக்க அனுபவங்களை குறித்து தொடர்ச்சியாக பேசி வந்தார். அவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு லத்தீன் அமெரிக்கா வரலாற்றை ஒரு புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்.

ஆய்வாளர் மாலதி அவர்கள் நியூசிலாந்தில் வசிக்கக்கூடியவர்கள். 2016 முடிந்த காலகட்டத்தில் அவர் ஈக்வடாருக்கு சென்ற பொழுது, அங்கிருந்த பழங்குடிகளிடத்திலே ஈழப்படுகொலை குறித்து பேசிய போது; அவர்கள் சொன்ன வார்த்தை: “உங்களுடைய வரலாறு எங்கள் வரலாற்றை போல இருக்கிறது” என்று மிக எளிமையாகவும், உணர்வுப்பூர்வமாக உள்வாங்கிக் கொண்டார்கள். “எனக்கு அது மிக ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு நடந்த அந்த இன அழிப்பு குறித்து, இந்தியாவில் பேசுவதோ அல்லது ஐரோப்பாவில் பேசும் பொழுதோ எதிர்கொண்ட பல்வேறு தடைகள், கேள்விகள், அதில் இருந்த ஆதிக்க போக்கு சார்ந்த நிலைப்பாடுகளை எல்லாம் நான் லத்தீன் அமெரிக்க மக்களிடத்தில் பேசும் பொழுது எதிர்கொள்ளவே இல்லை. அந்த ஈக்வடாரை சார்ந்த பூர்வகுடி அமைப்புகள் உடனடியாக அரவணைத்துக் கொண்டார்கள். ‘இது எங்களுக்கு நடந்தது, இது எங்களுக்கு நினைவை கூறுகிறது. நாங்கள் அந்த நிலத்தைப்பார்க்க விரும்புகிறோம்’ என்று சொன்னார்கள்” என்று கூறினார்.

அந்த ஈக்வடார் அமைப்பு நான் சிறையில் இருந்த பொழுது, என்னுடைய விடுதலைக்கான அறிக்கையும் வெளியிட்டார்கள். அதற்கு பிறகு அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாக ஈழப்படுகொலை சார்ந்த நினைவேந்தல் நிகழ்வை ஈக்வடார் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான ஒரு இணைப்பு என்பது ஐரோப்பாவை கடந்து இருக்கக்கூடிய உலகத்திற்கு, “மார்க்சியத்திற்கான வடிவத்தை நான் உருவாக்க விரும்புகிறேன்” என்று மரியா தெகி பேசிய அந்த வார்த்தை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். அந்த புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தபோது அந்த வாசகம் எனக்கு மிகப்பெரும் ஒரு ஈர்ப்பை கொடுத்தது.”ஐரோப்பாவை கடந்த உலகத்திற்கு நான் மார்க்சியத்தை குறித்தான ஒரு பார்வையை கொடுக்க விரும்புகிறேன்” என்று மரியா தெகி பேசியது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த புத்தகத்தில் ஒரு வாசகம் இன்னும் நினைவில் இருக்கக்கூடியது. ”இன்கா கம்யூனிசம்” என்று பேசுகிறார்.

இன்கா பழங்குடியினர், லத்தீன் அமெரிக்க பழங்குடியிலே மிகவும் நாகரிகம் அடைந்த பழங்குடிகளாக அறியப்படுகின்றவர்கள். இன்றும் அவர்களுடைய செழுமையை வெளிப்படுத்தக்கூடிய, நாகரிகத்தை வெளிப்படுத்தக்கூடிய எச்சங்கள் இருக்கின்றன. அந்த இன்கா மக்களினுடைய கம்யூனிசம் ‘இன்கா கம்யூனிசம்’ என்று கூறுவதைப் போல, தமிழ் கம்யூனிஸ்ட்கள் என்று நாம் பேசினால் சிரித்துவிடுவார்கள். நம் ஊரில் “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” சொன்னால் அதற்கு ஒரு பெரிய பஞ்சாயத்தை செய்யக்கூடியதை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இன்கா கம்யூனிசம் என்றால் அதை எப்படி புரிந்து கொள்வது?அதுதான் ராஜ சங்கீதன் பேசும்பொழுது சொன்னார் – சர்வதேச அளவில் நடக்கக்கூடிய பெரும் போராட்டங்களையும், உள்ளூர் மட்டத்தில் நடக்கக்கூடிய போராட்டங்களையும் இணைக்கக்கூடிய கண்ணிகளாக ஒன்று தேவைப்படுகிறது.

உள்ளூர் காரணிகளை மட்டுமே வைத்துக் கொண்டு விட முடியாது அல்லது சர்வதேச காரணிகளை மட்டுமே வைத்துக்கொண்டு உள்ளூர் காரணிகளை நிர்ணயித்துவிட முடியாது என்கின்ற ஒரு தெளிவான கேள்வி அது.

நமக்கு ஆரம்ப கட்டத்தில் மார்க்சியம் படிக்கும் பொழுது எழக்கூடிய கேள்வி அது. ஒரு கேள்வி எனக்கு எழுந்திருக்கிறது. நாம் வெளிநாட்டில் நடக்கக்கூடிய விடயங்களை எல்லாம், அதுபோன்ற கட்டங்கள் எல்லாம் நமக்கும் நடக்கிறது அல்லது நடந்திருக்கிறது என்று எப்படி நம்புவது? “நிலப்பிரபுத்துவ சமூகம் இருக்கிறது, அதற்கு அடுத்த சமூகம் முதலாளித்துவ கட்டம் வருகிறது” என்று ஒவ்வொரு கட்டங்களாக சொல்கின்ற படிநிலையை, அதே படிநிலையில்தான் நாம் வாழ்கிறோம் என்று உலகம் முழுக்க ஒரே சட்டையை எப்படி தைப்பது? இந்த கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் பொதுவாக படிக்கும் பொழுது நமக்கு கேள்வி எல்லாம் வரும், ஆனால் அப்படியே கடந்து அடுத்தடுத்த கட்டத்திற்கு தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள். உட்கார்ந்து நின்று யோசிப்பதற்கான நேரமோ, விவாதிப்பதற்கான வாய்ப்புகளோ இல்லாமல் நகர்த்திக் கொண்டு போய்விடுவார்கள்.

மரியாதெகி பேசும்பொழுது என்ன சொல்கிறார் – இது போன்ற படிநிலை அடுக்குகளைத்தான் உலகம் முழுவதற்கும் பொருத்தி பார்க்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை, அதற்கு படிநிலை போக்கு கிடையாது என்பதை முன் வைக்கிறார்.

ஐரோப்பாவில் இருந்த படிநிலை போக்கு ஐரோப்பாவுக்கான படிநிலை போக்கு. அது லத்தீன் அமெரிக்காவிற்கு பொருந்த வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. இந்தியாவிற்குள்ளாக மார்க்சியம் ஒரு பெரும் கோட்பாடாக அனைவரையும் ஆட்கொள்ள வேண்டிய தேவை இருந்தாலும் கூட ஏன் எழவில்லை என்றால், இது இந்த போக்குகளிலிருந்து மார்க்சியத்தை அணுகவில்லை. ஐரோப்பாவில் இருந்த பார்வையின் வழியாகவே இந்தியாவை அணுகிய போக்குதான் இன்றுவரை அதனுடைய பிரச்சனையாக இருக்கிறது.

ஏன் மார்க்சிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்களில் அடித்தட்டு மக்கள் தலைமைத்துவத்தை பெற முடியவில்லை என்றால், அவர்கள் மார்க்சியத்தை அடித்தளத்திலிருந்து பார்க்கவில்லை. மேல்மட்டத்தில் இருந்து மார்க்சியத்தை பார்த்ததனுடைய விளைவைத்தான் நாம் இன்றைக்கும் எதிர்கொண்டிருக்கிறோம். இது மரியாதெகியினுடைய கட்டுரைகளின் வாயிலாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவேளை மரியாதெகி இந்தியாவில் பிறந்திருந்து இந்த கட்டுரைகளைப் படைத்திருந்தால், இந்தியா என்பது சோசலிச நாடாகவோ, கம்யூனிஸ்ட் நாடாகவோ மலர்ந்திருக்கும்.

இன்றைக்கு வரைக்கும் நமக்கு ஒரு மரியா தெகி கிடையாது. ஆனால் ஈழத்தில் ஒரு மரியா தெகி இருந்தார். அவர் படை நகர்த்தினார். அவர் சிங்கள படைகளை வென்றார். அவர் ஒரு சோசலிச தமிழீழத்தை படைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு நடைமுறை அரசியல் (De facto state) உருவாக்கினார். அவர் தேசியத் தலைவர் பிரபாகரன்.

ஆனால் நமக்கு பிரபாகரன் அவர்களை ஒரு அறிவார்ந்தவராக (Intellectual) ஏற்றுக்கொள்வதற்கு ஒரு மனத்தடை இருக்கிறது. ஏன் என்றால், அவர் “புத்தகம் எழுதவில்லை”. இது ஒரு பெரிய பிரச்சனை. ஒரு படையை நகர்த்தி, ஏகாதிபத்திய ஆற்றல்களை எதிர்த்து நின்று ஒரு அரசை நடத்த முடியுமா? ஒரு அரசை நிர்மாணம் செய்துவிட முடியுமா? பிடல் காஸ்ட்ரோ புத்தகம் எழுதிக்கொண்டே இருந்தாரா? அல்லது பிடல் காஸ்ட்ரோவை வைத்து நாம் புத்தகத்தை எழுதிக் கொண்டோமா? பிரபாகரனை வைத்து புத்தகத்தை எழுதிக் கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

நான் ஜெர்மனி போயிருந்த பொழுது, சிங்கள மார்க்சிஸ்ட் விராஜ் மென்டிஸிடம்- இந்தியாவில் இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட்கள் பிரபாகரன் மீது வைக்கக்கூடிய விமர்சனங்களை எல்லாம், விடுதலைப் புலிகள் மீதான விமர்சனங்களை முன்வைத்து பேசிக்கொண்டே வந்தேன். ஒவ்வொன்றுக்காக பதில் சொல்லிக்கொண்டே வந்தார். அது மிக முக்கியமான விடயம். தேசிய இன விடுதலையை எடுத்துக்கொண்டு, அந்த தேசிய இன விடுதலை அடைந்த பிறகு, சமூக மாற்றங்களை குறித்தான போக்குகளுக்கெல்லாம் போவார்கள்.

பொதுவாக ஒரு விடுதலை அடைந்ததற்கு பின்தான் புரட்சி நடக்கும். சமூக மாற்றங்கள், சமூகப் புரட்சி எல்லாம் கொண்டு வருவார்கள். அதற்கான சூழல் கட்டமைக்கும், அதற்கான அதிகாரம் கிடைக்கும் என்று சொல்வோம். ஆனால் புரட்சியின் ஊடாகவே இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்பதை நடத்திக் காட்டியவர் பிரபாகரன் என்று சொன்னார்.

இதை சொன்னது தமிழ்நாட்டுக்காரனாக இருந்திருந்தால் நிராகரித்திருப்போம். சொன்னது சிங்கள மார்க்சியவாதியாக இருக்கக்கூடிய விராஜ் மென்டிஸ். அப்போது அவர் இதையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக ஒன்று சொன்னார், “பிரபாகரன் ஒரு நடைமுறை மார்க்சியவாதி (Prabhakaran is a practical Marxist), ஒரு கல்விசார் மார்க்சியவாதி (Academic Marxist). நம் ஊரில் கல்விசார் மார்க்சியவாதிதான் நாம் நிறைய பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு நடைமுறை மார்க்சியவாதி யார்? இங்கே விடுதலைப் புலிகள் இடத்தில் கூட்டுப்பண்ணை உழைப்பு எல்லாம் இருந்திருக்கிறது என்று சொல்வதற்கு ஆட்கள் இல்லை.

அங்கே இருந்த ஒரு போராளியிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொன்னார்: “நாங்கள் எல்லாம் ஊர்க்காரர்களோடு சேர்ந்து விவசாயம் செய்வோம். விவசாயத்தில் வரும் ஒரு பகுதியை எங்களுடைய படைகளுக்கான ரேசன் பொருளாக நாங்கள் எடுத்துக்கொள்வோம். மீதியை அவர்கள் தங்களுடைய பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்வார்கள். இப்படித்தான் கூட்டாக சேர்ந்து நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். அந்த நிலங்களை எல்லாம் பொது உற்பத்திகளுக்கு கொண்டு வந்திருந்தோம்” என்பதை அவர் சொன்னார். இத்தனைக்கும் அவருக்கு மார்க்சியம் தெரியாது.

இது மாதிரி நிறைய இருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் பதிவு செய்யப்படவில்லை. அந்த முயற்சிகள் எல்லாம் பதிவு செய்யப்படாமலே இருக்கிறது. அப்போது இந்த முயற்சிகள் எல்லாம் நாம் இந்த தெற்காசிய பிராந்தியத்திற்கான ஒரு மார்க்சியத்திற்கு வலு சேர்க்கக்கூடிய காரணிகளாக நாம் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை?

விடுதலைப் புலிகள் அமெரிக்காவை எதிர்த்து நின்றார்கள். ஏகாதிபத்திய படைகள் வந்து இறங்கினால் “நாங்கள் அடிப்போம்” என்று சொன்னார்கள். அவர்கள் அங்கே திரிகோணமலை பகுதியில் கனிம வளங்களை அமெரிக்கா திருடிய பொழுது அந்த கப்பலை அடித்து நொறுக்கினார்கள். அதை சிறைபிடித்தார்கள். அந்த மாலுமிகளை சிறைபிடித்தார்கள். சிஐஏ (CIA) உளவாளிகள் உள்ளே நுழைந்த பொழுது அவர்களை கைது செய்வதற்கும் அல்லது அவர்களை அப்புறப்படுத்துவதற்கும் உத்தரவிட்டார்கள். இவை அனைத்துமே விக்கிலீக்ஸில் இருக்கிறது. அமெரிக்காவினுடைய தூதரகம், அமெரிக்காவின் தலைமையகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல்களில் இருக்கக்கூடிய தகவல்கள் இவை. நானாக சொல்லவில்லை. விக்கிலீக்ஸில் வந்து அங்கே இருக்கக்கூடிய இலங்கைக்கான தூதுரகத்திலிருந்து அனுப்பப்பட்ட, கேபிளில் இவ்வளவு தகவல்கள் இருக்கின்றன.

இதில் இன்னொரு இடத்தில் பேசும்பொழுது ஒன்று சொல்கிறார்கள்: அங்கே இருக்கக்கூடிய அமெரிக்காவினுடைய மனித உரிமைகள் குறித்த உள்நாட்டு விசாரணை குழு- புலிகள் இருந்த காலத்தில் பேசிய பொழுது, அங்கே இருக்கக்கூடிய அனைத்து கொலைகளையும், பெரும்பாலான அரசியல் கொலைகளை நடத்தியது அங்கே இருக்கக்கூடிய இலங்கை ராணுவத்தினால் நடத்தப்படக்கூடிய ஆயுதக் குழுக்கள்தான் செய்தது. குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா செய்தார் என்று சாட்சியங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டன என்று ஒரு அறிக்கையை அனுப்பியிருக்கிறார்கள். இது விக்கிலீக்ஸில் இருக்கிறது.

இந்த உள் கேபிளுக்குள் (Internal cable) போனால்தான் அத்தனையுமே தெரிகிறது. இந்த கொலைகள் எல்லாம் எடுத்து பார்த்தோம் என்றால், இந்த கொலைகள் கணக்கெல்லாம் விடுதலைப் புலிகள் கணக்கில் எழுதியிருப்பார்கள். நமக்கு இந்த லத்தீன் அமெரிக்க அனுபவத்தை இங்கே பொருத்தி பார்த்து படித்துக் கொள்ள வேண்டும் என்றால், நமக்கு ஈழம் ஒரு அனுபவமாக இருக்கிறது. நான் அதனால்தான் ஈழத்தை பேசுகிறேன். ஈழத்தை பேசுவதற்கு நம் ஊரில் மேடை கிடையாது. அவதூறு பேசுவதற்கு மேடை இருக்கிறது. ஈழத்தினுடைய அந்த சோதனை (Experiment) குறித்து, அதற்கு எதிர்மறையாக, அதை கொச்சைப்படுத்துகின்ற விதமாக எழுதக்கூடிய எழுத்தாளர்களை எல்லாம் த.மு.எ.ச.க ஒவ்வொருவராக கூப்பிட்டு கொண்டாடுகிறார்கள். ஆனால் அந்த சோதனை பற்றியான விவரங்களை பற்றி பேசுவதற்கு த.மு.எ.ச.க மேடை கொடுப்பதே கிடையாது. பகிரங்கமாக எல்லா இடத்திலும் குற்றச்சாட்டை வைக்க வேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. திட்டமிட்டு ஒரு எதிர் புரட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. எதிர் புரட்சிக்காரர்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்புறம் எப்படி புரட்சி செய்ய முடியும்?

நமக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு வசதி என்னவென்றால், நீங்கள் புரட்சியாளனாகவே இல்லாமல், புரட்சிகர உணர்வு இல்லாமலே ஒரு இடதுசாரியாக இருக்க முடியும். அந்த வசதியை இங்கே இருக்கக்கூடிய இடதுசாரி கட்சிகளில் நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் புரட்சியாளனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது, இடதுசாரியாக இருந்து கொள்ளலாம். புரட்சியாளனாக இல்லாமல் எப்படி ஒரு இடதுசாரியாக இருக்க முடியும்? கட்சி உறுப்பினராக இருந்தால் போதும். அப்போது நமக்கு புரட்சிகர உணர்வு அற்ற ஒரு நிலை ஒரு பெரிய ஆபத்தாக இருக்கிறது.

அந்த புரட்சிகர அரசியலை மையமாக வைத்து மரியா தெகி அனைத்தையும் உருவாக்குகிறார், கட்டி எழுப்புகிறார். அவர் இன்கா கம்யூனிசம் என்ற ஒன்றை பேசுகிறார். என்னவென்றால், அந்த இன்கா பழங்குடி மக்களினுடைய கடந்த கால முதலாளித்துவ கட்டத்திற்கு முற்காலத்தில் அவர்களுடைய போராட்ட மரபுகள் என்ன இருந்திருக்கின்றனவோ, அது முதலாளித்துவத்திற்கு பின் அல்லது அந்த காலகட்டத்தில் எழக்கூடிய புரட்சிக்கு அடித்தளமாக அமையும் என்று சொன்னார். அதாவது அந்த பழங்குடிகளினுடைய தொன்மம் அல்லது படிமம், அவர்களுடைய போராட்ட வரலாறு ஒரு புரட்சிக்கு அடித்தளமாக அமையும். அதை நிராகரித்துவிடாதீர்கள் என்கிறார்.

நம் ஊரில் இருக்கக்கூடிய நாட்டார் தெய்வங்கள் என்று சொல்லக்கூடிய, அந்த காலத்தில் இருந்த மதுரை வீரன், சுடலைமாடன் போன்றவர்களுடைய சாதிய எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, சண்டை மரபுகள் எல்லாம் அடுத்து வரக்கூடிய சண்டைக்கு அடித்தளமாக அமையும் என்றால், இங்கே இருக்கக்கூடிய பெரியாரிஸ்ட்டுகளுக்கு கோபம் வந்துவிடும்.”அது எப்படி நாட்டார் தெய்வத்தை, சாதி இருப்பதை எப்படி கொண்டாடுகிறீர்கள்” என்று கேட்டுவிடுவார்கள். பெரிய கட்டுரை எழுதுவார்கள்.

ஆனால் அது ஒரு மரபு. அது ஒரு சண்டை நடந்ததற்கான வரலாறு இருக்கிறது. அது இந்த சாதிக்கு எதிரான ஒரு சண்டை போட்ட வரலாறு இருக்கிறது. அந்த வரலாறு இன்றைய சமூக புரட்சிக்கு ஒரு அடித்தளமாக அமையும் என்பதை மரிய தெகி சொல்கிறார். அதைத்தான் இன்கா கம்யூனிசம் என்று பேசுகிறார். அதேபோல இந்த நிலம், இந்த நிலத்திலே உளவியல் ரீதியாக தங்கள் மீதான நல்லெண்ண உணர்வையே அழித்து ஒழித்த வேலையை காலனியம் செய்தது என்று அவர் சொல்கிறார்.

உங்களை பற்றியான ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது அல்லவா, “நீங்கள் அடிமையாகத்தான் வாழ வேண்டும்” என்கின்ற உணர்வு நிலைக்குள் உங்களை அமுக்கி, அதனால் உங்களுக்கு ஒரு புரட்சிகர அரசியலுக்கு தயார்படுத்தாத நிலையை காலனியம் ’பூர்வகுடிகளுக்கு’ உருவாக்கியது என்று, பூர்வகுடி அரசியலில் இருந்து இந்த அரசியலை கட்டி எழுப்புகின்ற ஒரு பணியை, இந்த நல்லெண்ண மதிப்பு மீட்டெடுக்கப்பட்டால் தான் புரட்சி என்பது சாத்தியமாகும்” என்பதை அடுத்த கட்டமாக வைக்கிறார்.

நான் இதில் தெரிந்து கொண்ட ஒரு விடயம் என்னவென்றால், ஒரு புதிய மனிதனை எப்படி படைப்பது என்று மரிய தெகி பேசுகிறார். அதாவது பூர்வகுடிகளாக இருந்திருக்கிறார்கள், இன்கா நாகரிகம் இருந்திருக்கிறது, ஆஸ்டெக் நாகரிகம் இருந்திருக்கிறது, பல நாகரிகங்கள் அங்கே இருந்திருக்கின்றன. காலனியம் வருகிறது. பூர்வகுடிகள் எல்லாம் சோம்பேறிகள் என்றும், நீங்கள் கூலிக்காக வேலை செய்யக்கூடிய பண்ணை அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு கற்பிக்கிறது. அவர்களை பண்ணை அடிமைகளாக மாற்றுகிறது. ஒரு நாகரிகத்தின் உயரத்திலிருந்து அவர்களை பண்ணை அடிமைகளாக மாற்றுகிறது. பண்ணை அடிமைகள் உளவியலுக்குள்ளாக வாழ ஆரம்பிக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு தேசியத்தை கட்டி எழுப்புவதற்கோ, புரட்சியை கட்டி எழுப்புவதற்கோ சாத்தியமில்லை என்று அவர்களை நம்ப வைக்கிறார்கள். உளவியல் ரீதியாக சிதைக்கப்பட்டவர்களாக மாறிவிடுகிறார்கள். இப்படிப்பட்ட மனநிலையிலிருந்து அவர்களை மாற்றினால் தான் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும், சமூகத்தை கொண்டு செல்ல முடியும் என்பதுதான் மரியதெகி வைக்கக்கூடிய பல்வேறு வாதங்களில் மிக முக்கியமான ஒன்று. அதைத்தான் தந்தை பெரியார் இங்கே செய்கிறார்.

தந்தை பெரியாரினுடைய ’சுயமரியாதை அரசியல்’ என்பது அதுதான். இங்கே பார்ப்பனியம் என்பது கருத்து இல்லை. பார்ப்பனியம் என்பது நில உடைமையின் மொத்த வடிவம். அண்ணா எழுதும்பொழுது, தென்மாநிலங்களில், “இனாம் நில பட்டயங்கள் என்பது கிட்டத்தட்ட இரண்டே கால் லட்சம் பட்டயங்கள் இருக்கின்றன” என்று எழுதுகிறார். இரண்டே கால் லட்சம் பட்டயங்களிலே கிட்டத்தட்ட 10 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான பாசன நிலப்பரப்புகள் பார்ப்பனர்களிடத்தில் கோவில் நிலங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வளவு பெரிய நில உடைமையாளர்களாக யார் இருக்கிறார்கள்? பார்ப்பனியம் இருக்கிறது, பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆக, இந்த பார்ப்பன கட்டமைப்பை அடித்து நொறுக்கினால் தான் இந்த பாட்டாளிகள் அதிலிருந்து வெளியில் வருவார்கள். அவர்களுக்கு சுயமரியாதை உணர்வை கொடுத்தால் தான் புரட்சியை சாத்தியப்படுத்துவதற்கான மனநிலைக்கு அவர்கள் தயாராவார்கள்.

ஆனால் பேசும்பொழுது “கருப்புக் கொடிக்குள்ளே சிவப்பை வைத்தது” என்பது, இந்த அடிமை நிலையிலிருந்து அவன் விடுதலைப்பட்டால் இந்த கொடி முழுவதும் சிவப்பாக, ஒரு மார்க்சிய நிலமாக அந்த நிலம் மாறும். ஆகவே மார்க்சிய புரட்சி நடப்பதற்கான ஒரு முன் நிபந்தனை (Precondition) நிலைமையை சுயமரியாதை இயக்கம் உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் இந்த பெரியாரிய அரசியலை நிராகரித்து, அதை ஒரு எதிர்சக்தியாக மார்க்சியவாதிகள் படைத்துக் கொண்டதால், அவர்கள் பார்ப்பனியத்தினுடைய நிலவுடைமை கட்டமைப்பு, அதனால் ஏற்பட்ட உளவியல் மாறுதல், அதாவது ஒரு சமூக கட்டமைப்பு உளவியல் அமைப்பை அழிக்காமல் புதிய மனிதனை உருவாக்கிவிட முடியாது.

ஆப்பிரிக்காவினுடைய விடுதலை குறித்து ஃபனான் பேசும்பொழுது, ஒரு ஆப்பிரிக்கன் இடத்தில் இருக்கக்கூடிய காலனிய, அந்த வெள்ளை இன உணர்வை அங்கிருந்து அவனை வெளியே பிடுங்கி எடுத்து, அவனை தனி மனிதனாக மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

“நான் என்னை காலனியப்படுத்தக்கூடிய அந்த எதிரியை கொன்று அழிக்கும் பொழுது, எனக்குள் இருக்கக்கூடிய அந்த அடிமை உணர்வை நான் கொன்று அழிக்கிறேன்” என்று சொல்வார். அந்த வன்முறை ஏன் தேவை என்பதை ஃபனான் பேசுகிறார். அதைத்தான் மரிய தெகி வேறொரு மொழியில் பேசுகிறார்.

இது இரண்டுமே ஒரு தனி மனிதனாக எழுந்து நிற்பதற்கு எது தேவைப்படுகிறது? அவனை புரட்சிக்குரிய மனிதனாக மாற்றப்பட வேண்டும் என்பதிலே மரிய தெகியினுடைய சிந்தனை மிக மிக முக்கியமானது.

ஒரு தேசியத்தை கட்டமைப்பது என்கின்ற ஒரு கோட்பாட்டை சர்வதேசியம் முன் வைக்கிறது. சர்வதேசிய இடதுசாரி அமைப்பு, இரண்டாம் அகிலம், மூன்றாம் அகிலம் முன் வைக்கின்றன. பழங்குடிகளுக்கென்று ஒரு தேசியத்தை கட்டுங்கள் என்று பழங்குடிகளுடைய அரசியலையும், பழங்குடிகளுடைய சுதந்திரத்தையும் பேசுகின்ற மரிய தெகி, ”பழங்குடிகளுக்கான தனிநாடு” என்பதை எதிர்க்கிறார்.

ஏன் எதிர்க்கிறேன் என்று அவர் சொல்கிறார்: “நீங்கள் பழங்குடிகளை தனிமைப்படுத்திவிடாதீர்கள். சமூக வளர்ச்சி போக்கில் இருக்கக்கூடிய கட்டமைப்புகளுக்கு உள்ளாக தங்களுக்கு ஏற்படுகின்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடி, உரிமைகளை வென்றெடுத்து, அவர்கள் மைய நீரோட்டத்திற்குள் வர வேண்டும்” என்றுதான் மரிய தெகி விரும்புகிறார்.

மனித உரிமை சாசனத்தில் ”சுயநிர்ணய உரிமையும் அடிப்படை மனித உரிமை” என்று வரையறுக்கப்பட்டது. அப்போது ஐ.நா மனித உரிமை அவையில் பெண்கள் மீதான வன்முறைக்கு குறித்தான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு ஒரு நாள் கொடுப்பார்கள், அதுபோல குழந்தைகள் மீதான வன்முறை, பொதுவான பாலியல் வன்முறைகள், அகதிகள் மீதான தாக்குதல் வன்முறைகள், மனித உரிமை மீறல் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு அமர்வு இருக்கும். அது மாதிரி சுயநிர்ணய உரிமை பற்றி ஒரு நாளின் அமர்வு இருந்தது. அந்த அமர்வை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். 20 வருடத்திற்கு முன்பு சுயநிர்ணயம் என்பதில் காலனித்துவ நீக்கம் மிக மிக முக்கியமானது. இது தென் அமெரிக்காவினுடைய ஒரு கொடையாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

காலனிய நீக்கம் குறித்தான சிந்தனை மரபிலே தென் அமெரிக்கா என்பது மிக முக்கிய, காத்திரமான பங்களிப்பை செய்திருக்கிறது. “காலனியம் வந்துவிட்டது, காலனியத்திற்கு முன்பு நாம் எப்படி நன்றாக வாழ்ந்தோமோ அதே மாதிரி நாம் வாழ வேண்டும். ஆக காலனியம் கொடுத்த அத்தனை அடக்குமுறை வடிவங்களையும் தூக்கி எறிய வேண்டியிருக்கிறது”.

 ஐ.நாவினுடைய தலைமைச் செயலாளருக்கு ஒரு ஆலோசகர் இருந்தார். அதாவது உள் சுயநிர்ணய உரிமையோ அல்லது வெளியேறுவதற்கான சுயநிர்ணய உரிமையோ, இந்த உரிமை அடிப்படை மனித உரிமை என்று வரையறை செய்வதற்கான ஒரு ஆலோசகர். அவரிடம் நேராகப் போய், “நீங்கள் எல்லாவற்றையும் பேசுகிறீர்களே, ஈழத்தை பற்றி ஏன் பேசவில்லை” என்று கேட்டபோது அவர் மறுத்தார். “ஈழத்துக்கு சுய-தன்னாட்சிதான் முக்கியமானது” என்றார். அதாவது “உங்களுக்கு ஒரு கூட்டாட்சி அமைப்புக்குள்தான் பண்ண முடியும்” என்றார். அதற்கு பிறகு இரண்டு மூன்று கருத்தரங்கத்திற்கு அவரை வரச் சொன்னோம். எங்களுடைய கருத்தரங்கத்திற்கு அவரை வர வைத்து பேசும்போது, விவாதம் நடந்தது.

நான் அவரிடம் கேட்டேன், “நீங்கள் லத்தீன் அமெரிக்கா சோதனை (Experiment) என்று சொல்லாதீர்கள். லத்தீன் அமெரிக்காவின் பழங்குடிகளுக்கு ஒரு தனித்த பொருளாதார வளர்ச்சி நிலை கட்டமைப்பு என்பது வேறாக இருக்கிறது. தமிழீழத்தில் இருக்கக்கூடிய தமிழனுக்கான பொருளாதார, சமூக வளர்ச்சி கட்டமைப்பு நிலை என்பது வேறாக இருக்கிறது. இரண்டையும் பொருத்தி பார்க்காதீர்கள். உங்களுடைய அனுபவம் என்பது வேறு.

லத்தீன் அமெரிக்காவிற்குள் இருக்கக்கூடிய பழங்குடிகளுக்கு தன்னாட்சியும் இருக்கும், அங்கே இருக்கக்கூடிய சமூகங்கள் கட்டமைத்த ஒரு தேசத்திற்கு இறையாண்மையும் இருக்கும். இறையாண்மை கொண்ட ஒரு தேசமும், இறையாண்மை கொண்ட தேசத்திற்கு உள்ளாக தன்னாட்சி பிரதேசங்களும் உள்ளே இருக்கும். நம்மால் அதை யோசிக்க முடியாது.

இந்தியா ஒரு இறையாண்மை உள்ள தேசமாக இருக்கிறது என்றால், தமிழ்நாடு தன்னாட்சி பிரதேசமாக இருந்தால் என்னவாக இருக்குமோ, அந்த கட்டமைப்புதான் லத்தீன் அமெரிக்க கட்டமைப்பு வழிமுறை. அந்த வழிமுறையைத்தான் அவர் பேசுகிறார்.

அப்போது நான் சொன்னேன்: “உள்ளாட்சி சுயநிர்ணயம் (Internal self-determination) என்பது லத்தீன் அமெரிக்காவுக்கு பொருத்தமாக இருக்கும். ஆனால் ஈழத்திற்கு அதை பொருத்தி பார்க்க முடியாது” என்று கூறினேன். அவர் இரண்டு / மூன்று கருத்தரங்குகளுக்கு வந்ததற்கு பிறகு, இன்றுவரை ஈழத்தினுடைய விடுதலைக்காக தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கிறார். “தனி ஈழம் தான் ஒரே தீர்வு” என்று பேசிக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு வெனிசுலாக்காரர். எனவே மரிய தெகியினுடைய விவாதம் இந்தியாவிற்கு மிக மிக முக்கியமானது, தேவையானது, தமிழ்நாட்டிற்கு தேவையானது.

இப்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நமது இடதுசாரி அமைப்புக்குள் நிறைய சிக்கல்கள், சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளாக முரண்பட்டிருப்பதெல்லாம் நடக்கிறது. இங்கே ஒரு பரந்துபட்ட சோசலிச சிந்தனை கொண்ட மரபு இருக்கிறது. அது இந்த மண்ணுக்குரிய ஆய்வுகளை நடத்தி, அந்த ஆய்வுகள் மார்க்சியத்திற்கு பங்களிக்கக்கூடிய ஒரு பெரும் கொடையை கொடுக்கக்கூடிய வகையிலே, அந்த ஆய்வுகள் பெரியாரியமாகவோ, அம்பேத்கரியமாகவோ இங்கே இருக்கின்றன. அவற்றை எல்லாம் தொகுத்து பார்த்துதான்… ஏனென்றால் அதுதான் ஒடுக்கப்பட்ட பிரிவினரையோ அல்லது அதற்கு கீழே இருக்கக்கூடிய மக்களையோ, அந்த இடத்திலிருந்து தேசத்தை பார்ப்பது, அதிகாரத்தை பார்ப்பது, மேல்கட்டுமானத்தை பார்ப்பது அல்லது இந்த தேச கட்டுமானத்தை பார்ப்பது.

மரியதெகி சொல்லக்கூடிய இன்கா கம்யூனிசத்தை போல, இன்கா பழங்குடிகளிடமிருந்து ஒட்டுமொத்த தேசத்தை பார்ப்பது, இன்கா பழங்குடிகளிடமிருந்து சர்வதேச புரட்சியை பார்ப்பது, இன்கா பழங்குடிகளிடமிருந்து சோசலிச தேசத்தை உருவாக்குவதை பற்றி பார்ப்பது… இன்கா மக்களிடத்தில் இருந்து அதை பார்க்கும் பொழுது, உருவாகக்கூடிய இந்த இடதுசாரி அரசியல் என்பது வேறாக இருக்கிறது. அப்படியான ஒரு பார்வை இந்தியாவிற்குள் இல்லை என்று நான் கருதுகிறேன். ஒருவேளை தவறாக கூட இருக்கலாம். ஆனால் அந்த பார்வை ஒருவேளை இருந்திருக்கும் என்றால், இந்தியாவிற்குள்ளாக சிவப்பு அலை எப்பொழுதோ வந்திருக்கும்.

இன்றைக்கும் கூட பொருளாதாரவாதத்திற்குள்ளாக மாட்டிக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற கவலை இருக்கிறது. வெறும் பொருளாதார வளர்ச்சி, பொருளாதார உயர்வு என்கின்ற இடத்திலே மாட்டிக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற கவலை இருக்கிறது. இடதுசாரிகள் இடத்திலே, தொழிலாளர்கள் என்றாலே கூலி உயர்வை கடந்து வேறு எதுவுமே கிடையாது.

அரசை கைப்பற்றுவதை பற்றி தொழிலாளர்களுக்கு பயிற்சி கொடுப்பதில்லை. அரசை கைப்பற்றுவதோ, தொழிற்சாலையை கைப்பற்றுவதோ, நிலத்தை கைப்பற்றுவதோ குறித்து தொழிலாளர்களுக்கோ அல்லது கூலிகளாக, விவசாயக் கூலியாக இருப்பவர்களுக்கோ பயிற்சி அளிக்கப்படாமல், கூலி உயர்வுக்காக மட்டுமே அவர்கள் ஒரு வர்க்க சமரசத்தை நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வர்க்க இணக்கத்தை (Class compromise) நோக்கி நகர்த்தப்பட்டிருக்கிறார்கள். அது இந்தியாவிற்கு மிகப்பெரிய வீழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இங்கே வர்க்கப் போராட்டத்தை கையாளுவதற்குரிய எந்த பயிற்சியும் அற்ற ஒரு இடதுசாரி தன்மை இந்தியா முழுவதும் வியாபித்திருக்கக்கூடிய நிலையிலே, பாசிசத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாமல், பாசிசத்தை- நியோ பாசிசமாக வரையறுத்து நாம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம்.

அப்போது வர்க்க இணக்கத்தை பற்றி சார்த்தர் பேசும்பொழுது, பிரெஞ்சு இடதுசாரிகளை குறித்து 1940-கள், 50-களில் பேசும்பொழுது ஒரு வார்த்தை சொல்கிறார் – “பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் அல்லது பிரெஞ்சு இடதுசாரி கட்சி என்பது எந்த வர்க்கத்தை அமைப்பாக திரட்டியிருக்கிறதோ, அந்த அமைப்பு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அமைப்பாக இல்லாமல் வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது” என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அதுதான் இங்கே நமக்கு பிரச்சனை. இங்கே இருக்கக்கூடிய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் மீது வெறுப்பினால் நாம் பேசவில்லை. ஆனால் அவர்கள் அரசியல் அதிகாரத்தை பிடிப்பதற்கு தொழிலாளிகளுக்கு பயிற்சி அளிப்பதை விட, கட்சிக்கு கட்டணம் கட்டுவதற்காக மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டவர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள் என்கின்ற கவலை நமக்கு இருக்கிறது. எந்த இடத்திலுமே அரசோடு முரண்படுவதே கிடையாது. அரசு கொள்கைகளோடு எந்த இடத்திலும் முரண்பாடு கிடையாது. சந்தோசமாக இருக்கிறார்கள்.

விக்கிலீக்ஸில் படித்த ஒரு செய்தியை நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். சீதாராம் யெச்சூரி அவரும், பழைய தெற்காசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவினுடைய செயலாளராக இருந்த ராபர்ட் பிளேக் – (அவர்தான் ஈழப்படுகொலையின் சூத்திரதாரி), அவர் தான் தெற்காசியாவிற்கான தலைமை அதிகாரி கூட, அவருடன் நடந்த உரையாடல் விக்கிலீக்ஸில் இருக்கிறது. அதில் ஒரு இடத்தில் சொல்கிறார், “வால்மார்ட்டை (Wallmart) நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்” என்று கேட்கிறார். அதற்கு சீதாராம் யெச்சூரி சொல்கின்ற பதில், “நாங்கள் வால்மார்ட்டை மறுக்கவில்லை. வால்மார்ட் வந்தால் அங்கே தொழிற்சங்கம் வைப்பதற்கு உரிமை கொடுத்தால் போதும்” என்று சொல்கிறார். இது ராபர்ட் பிளேக்குடைய அறிக்கை. இது விக்கிலீக்ஸில் இருக்கிறது. இதுதான் அந்த கட்சியினுடைய தலைமை. இப்படித்தான் ஒரு நிலைப்பாடு. இது மாதிரி நிறைய இருக்கிறது. இது மாதிரி எந்தெந்த இடங்களில் எல்லாம் சமரசம் செய்தார்கள் என்று, நியூக்ளியர் பில் பற்றி என்ன பேசினார்கள் என்று அறிக்கையெல்லாம் இருக்கிறது. அதிர்ச்சியாக இருக்கிறது.

இவ்வளவு பெரிய ஒரு பாட்டாளி வர்க்க கட்டமைப்பை கொண்டிருக்கக்கூடிய ஒரு கட்சியினுடைய தலைமை, “வால்மார்ட் வரட்டும், வால்மார்ட் வருவதில் எனக்கு பிரச்சனை கிடையாது. ஆனால் அங்கே தொழிற்சங்கம் கட்டுவதற்கான உரிமை கொடுத்தால் போதும்” என்றால், அந்த வால்மார்ட் வந்தால் அதில் வரக்கூடிய தொழிற்சங்கம் வால்மார்ட்டை கைப்பற்றுவதற்கான தொழிற்சங்கமாக இருக்குமா அல்லது கூலி உயர்வுக்காக போராடுகின்ற தொழிற்சங்கமாக இருக்குமா?

மிகப்பெரிய ஒரு நெருக்கடியில் நாம் இருக்கிறோம். நாம் பாசிசத்தை வீழ்த்துவதற்கான வழியே இங்கே கிடையாது. ராகுல் காந்தியை வேறு கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.”பாசிஸ்ட் 1, பாசிஸ்ட் 2, இரண்டுக்குள் ஏதோ ஒரு முடிவை எடுத்துக்கொள்” என்று சொல்லிவிட்டார்கள். ராகுல் காந்தி பாசிஸ்ட்தான். அவருடைய அப்பா அப்படித்தான் இருந்திருக்கிறார். அவருடைய அம்மாவும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். இதிலிருந்து மாற்றம் வந்துவிட போவதில்லை.

இன்றைக்கு மரியா தெகியினுடைய புத்தகம், அந்த நூல் மிக மிக முக்கியமானது. ஒரு அருமையான கொடையை தோழர் அமரந்தா அவர்களும், தோழர் பாலச்சந்தர் அவர்களும் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த உழைப்பு ஒரு அடிப்படை மாற்றமாக (paradigm shift) நான் பார்க்கிறேன். ஒரு அடிப்படை மாற்றம் நமக்கு வந்ததென்றால், இதை இங்கே இருக்கக்கூடிய இடதுசாரி கட்சிகள் எடுத்து வாசிக்கிறார்கள், விவாதத்திற்கு உட்படுத்துகிறார்கள் என்றால், நிச்சயமாக தமிழ்நாட்டிலிருந்து ஒரு கருத்து மாற்றத்தை நோக்கி தள்ளக்கூடிய அளவிற்கான வலிமையை இந்த புத்தகங்கள் உள்ளே வைத்திருக்கின்றன. இது இந்திய அளவிலான ஒரு மாற்றத்தை, இடதுசாரிக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்காக அமையும்.

ஏனென்றால் மறுபடியும் பழங்குடிகள் இடத்தில் அமைப்பு கட்டுவது அல்ல, பழங்குடிகளுக்கான ஒரு அமைப்பு, தலித்துகளுக்கான அமைப்பு, பெண்களுக்கான அமைப்பு என்பது அல்ல. “பழங்குடிகள்தான் புரட்சிக்கான மைய அச்சு” என்று பார்க்கிறார் மரியா தெகி. அது தனி வகைகளாக பிரிப்பது அல்ல. அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு, அவர்களுக்கு நீதிமன்றத்துக்கு போவதற்கு, அவர்களுக்காக நடத்த தனி அமைப்பு அல்ல. ஆனால் அவர்களை போராட்டத்தினுடைய மைய அச்சாக மாற்றுகின்ற வேலையை மரியதெகி முன் வைக்கிறார். அது குறித்தான ஒரு விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.

நாங்களும் இதற்கு முன்பு, மாலதி அவர்கள் கொடுத்த ”லத்தீன் அமெரிக்கா” புத்தகத்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்னாடி கொண்டு வந்தோம். அவர் ஈழத்தில் இருந்த ஆய்வாளர், அவர்கள் ஈக்வடார் போனதற்கு பிறகு லத்தீன் அமெரிக்க சூழ்நிலையை எப்படி முக்கியமானதாக இருக்கிறது என்பதற்காக கொண்டு வந்தோம். அந்த புத்தகம் இங்கே விற்பனைக்கு இருக்கிறது. லத்தீன் அமெரிக்காவினுடைய இந்த வரலாற்று பின்புலத்தை புரிந்து கொண்டு, நீங்கள் மரிய தெகியை படித்தால் இன்னும் அற்புதமான விளக்கத்தோடு இருக்கும். இந்த புத்தகத்தை கொண்டு வரும்போது எங்களுக்கு ஒரு முடிவு இருந்தது. என்னவென்றால், இது நமக்கு தெரியாத ஒரு நிலப்பரப்பு பற்றிய புத்தகமாக இருப்பதால் நிறைய படங்கள் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதிகமான படங்களை இந்த புத்தகத்தில் கொண்டு வந்திருக்கிறோம். மேலும் எட்வார்டோ கலியானோவின் புத்தகம் மிக முக்கியமான புத்தகம். இது இரண்டையும் படித்தீர்கள் என்றால் இந்த  சூழலை புரிந்து கொள்ள முடியும்.

ஏனென்றால் இந்தியாவிலே ஆங்கிலேயர்களை எதிர்த்த போராட்டத்தை இந்த நூற்றாண்டு வரை, கடந்த நூற்றாண்டினுடைய நடுப்பகுதி வரை நடத்தியவர்கள் பழங்குடிகள். காலனியத்திற்கு எதிராக இந்தியாவிலே சமரசமற்ற போரை நடத்தியவர்கள் பழங்குடிகள்தான். இந்த விடுதலை போராட்டத்தில் இங்கே நடுத்தர வர்க்கத்திற்கோ, இங்கே படித்த வர்க்கத்திற்கோ, இங்கே இருக்கக்கூடிய பூர்வகுடி அல்லாத மக்களுக்கோ பெரிய பங்களிப்பே கிடையாது. குற்றப்பரம்பரை சட்டத்தை 1920-ல் கொண்டு வருவதுவரை பழங்குடிகளுடைய போர் என்பது நடந்து கொண்டே இருந்தது.

இந்தியாவினுடைய விடுதலை போர் என்பதே பழங்குடிகளினுடைய போர்தான்.

நீங்கள் அதை அலாய்சியஸ் உடைய “நேஷன் விதவுட் நேஷனலிசம்” (Nation Without Nationalism) புத்தகத்தில் இன்னும் தெளிவாக பார்க்க முடியும். அதையும் இதையும் நான் ஒப்பீடு செய்து பார்க்கிறேன். பழங்குடிகள் எப்படி போர் நடத்தினார்கள்? இந்தியாவினுடைய ஒரு அரசியலை கட்டமைப்பதற்கு பழங்குடிகளுக்குத்தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவர்கள் எப்படி அதை உருவாக்கினார்கள்? எப்படி கட்டமைத்தார்கள்?

அதையும் இந்த புத்தகத்தையும் படித்துவிட்டு, லத்தீன் அமெரிக்க வரலாறையும் படித்துவிட்டு, நாம் மரிய தெகியை படித்தோம் என்றால், இந்தியாவிற்கு என்ன தேவையோ அதை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அப்படியான ஒரு கட்டமைப்பை நம்மால், இந்தியாவிற்குள் இந்தியாவிற்கு தேவைப்படுகின்ற மார்க்சியத்தை கண்டறிவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒரு பெரும் வரலாறு நமக்கு தேவைப்படுகிறது.

இன்றைக்கு அரசியல், மார்க்சியம் பற்றி ஒரு அரசியல் கூட்டம் நடத்த வேண்டுமானாலே அதற்கு அரங்கிற்கு கொடுக்கக்கூடிய செலவே பெரிய செலவாக மாறிவிடுகிறது. ஏழு எட்டு வருடத்திற்கு முன்பு வரைக்கும் நிறைய அரங்க கூட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. இன்றைக்கு அரங்குகளே கிடையாது. கூட்டங்களை நடத்த முடிவதில்லை. தமிழ்நாட்டில் அரங்க கூட்டங்கள்தான் இங்கே இளைஞர்களை அரசியல்படுத்திக் கொண்டிருந்தது. இன்றைக்கு அரசியல்படுத்துகின்ற வகையில் எதுவும் இல்லை.

எனக்கு இருக்கக்கூடிய இன்னொரு பெரிய கவலை, இந்த கருத்துகள் இப்போதுதான் நமக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இது வந்து சேர்வதற்கு 100 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதை எப்படி இளம் தலைமுறைக்கு கொண்டு போகப் போகிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை. மார்க்சியம் குறித்து விவாதம் நடக்க வேண்டும். தேசிய இன விடுதலை குறித்து விவாதம் நடக்க வேண்டும். அடிக்கட்டுமானம், மேல்கட்டுமானம், பண்பாடு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த விவாதங்களை எல்லாம் நடத்தி, அதில் மூன்றாம் உலக நாடுகளில் வந்த ஃபனானையோ அல்லது ஆசியாவில் நடந்த மாற்றங்களோ, லத்தீன் அமெரிக்காவில் நடந்த மாற்றங்களோ, இதையெல்லாம் விவாதித்து வந்தால்தான் தமிழ்நாட்டினுடைய தமிழ் தேசியத்திற்கான அடித்தளத்தை நம்மால் கண்டடைய முடியும்.

இந்தியாவிற்குள்ளாக தமிழ் தேசியத்தினை எந்த இடத்தில் பொருத்தி பார்ப்பது என்பதும் அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு ஆய்வு நமக்கு தேவைப்படுகிறது. அந்த ஆய்வையும் இங்கே வந்திருக்கக்கூடிய அனைத்து ஆளுமைகளும் ஒரு கூட்டாக சேர்ந்து அதை செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நம் மே 17 இயக்கத்தையும் சேர்த்தே சொல்கிறேன். நாம் ஒரு லட்சம் பேர் கொண்ட படை எல்லாம் கிடையாது. இப்போது இதெல்லாம் சேர்ந்து ஒரு அறிவை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டு போவதற்கு நாம் ஏதாவது செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்படிப்பட்ட ஒன்றுதான் இன்றைக்கு தமிழ் சமூகத்திற்கு தேவைப்படுகிறது. நமக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருக்கலாம்.

2009 போர் நடந்த பொழுது இங்கே சில இடதுசாரி தோழர்கள் இருந்தார்கள். மாவோயிஸ்ட் அமைப்பில் இருந்து “நாங்கள் வெளியே வந்துவிட்டோம்” என்று சொல்லி பேசிக்கொண்டிருந்த தோழர்கள் இருந்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது எதார்த்தமாக சில கேள்விகளை, கம்யூனிசத்தை பற்றியான கேள்விகளை அவர்களிடம் சந்தேகத்திற்காக கேட்டதில் இருந்து என்ன தெரிந்தது என்றால், “திருமுருகன் ஒரு கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர், கம்யூனிஸ்ட் விரோதி” என்று ஒரு முத்திரை குத்தினார்கள். அப்புறம் “உளவாளி” என்று ஒரு முத்திரை குத்தினார்கள். இந்த முத்திரை குத்தக்கூடிய ஒரு வேலையை (மே 17 இயக்கம் இடதுசாரிக்கு எதிரானது என்று சொல்வது) சிலர் செய்திருக்கிறார்கள்.

மே 17 இயக்கம் ஒரு இடதுசாரி அமைப்பு. மே 17 இயக்கம் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு, லெனினியத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு. மே 17 இயக்கம் இடதுசாரி தமிழ் தேசியத்தைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது.

எங்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல் என்னவென்றால், நாம் ஒரு கருத்தை பிரச்சாரம் செய்வதற்காக வரவில்லை. இந்த மண்ணினுடைய விடுதலை தொடர்பாக போராடுவதற்காக வந்திருக்கிறோம். ஆக எந்தெந்த கருத்துகள் எல்லாம் இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கிறதோ அதையெல்லாம் இணைத்துக் கொள்வோம்.”பெரியாரியவாதியாக எங்களை ஏற்றுக்கொள்வதில்லை, திராவிட கூட்டம் சேர்த்துக்காது. ஏனென்றால் நாங்கள் தி.மு.க-வை ஆதரிப்பதில்லை. தி.மு.க-வை ஆதரிக்கவில்லை என்பதாலேயே திராவிட அமைப்புகள் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க ஏற்கவில்லை என்றால் பரவாயில்லை, திராவிட அமைப்புகள் ஏற்றுக்கொள்ளாது. அம்பேத்கரிய அமைப்புகள், அதுபோல ஒரு சில அமைப்புகள் அதில் ஒரு ரிசர்வ் வைத்துக்கொள்வார்கள். திராவிட அமைப்பா, பெரியாரிய அமைப்பா, அம்பேத்கரிய அமைப்பா, தமிழ் தேசிய அமைப்பா, மார்க்சிய அமைப்பா என்று எந்த கூட்டத்திலும் நாங்கள் கிடையாது. “ஆனால் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கிய படைப்பாளிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »