சட்டசபையில் முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் எவ்வகையானவை? – திருமுருகன் காந்தி பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் செப்டம்பர் 7, 2026 அன்று முதல்வர் விஜய் அவர்கள், திமுக தலைவர்கள் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் எவ்வகையானது குறித்து மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர். திருருமுருகன் காந்தி அவர்கள் தனது சமூகவலைதளத்தில் பதிவு செய்தது.

இதுவரை எப்படியான அரசியல் இந்தியாவில் நடந்துள்ளது என்பதை கவனித்தால் இது புரியும். இந்தியாவின் விடுதலைக்குப் பின்பான அரசியல் என்பதே தேசிய கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் நடக்கும் யுத்தம் என்பதே இந்திய தேர்தல் அரசியலின் வரலாறு.

ஒன்றிய அரசுகள் நேரு காலம் முதல் மோடி காலம் வரை மாநில அரசுகளையும், மாநில கட்சியின் தலைவர்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

ஆட்சி கலைப்பு, அடக்குமுறை சட்டங்கள், ஊழல் வழக்குகள் என அனைத்தையும் மாநில தலைவர்கள் மீது ஏவினார்கள். இதற்காகவே அமலாக்கத்துறை, சி.பி.ஐ, வருமானவரித்துறை உள்ளிட்ட துறைகளை தமது ஏவல்நாய்களாக ஏவினார்கள். கேரளாவின் நம்பூதிரிபாட், திமுகவின் கலைஞர், கர்நாடகத்தின் பொம்மை, ஆந்திராவின் என்.டி.ராமராவ், பீகாரின் லாலு என மாநில தலைவர்களின் ஆட்சிகள் கலைக்கப்பட்டது வரலாறு. இதன் தலைவர்கள் மீது ஊழல் வழக்குகள், குற்ற வழக்குகள், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஷிபுசோரன் மீதான கொலை வழக்கு, டில்லி முதல்வர் கெஜிரிவால் மீதான சாராய ஊழல் வழக்கு, தெலுங்கானாவின் முதல்வர் சந்திரசேகர் குடும்ப மீதான வழக்கு, கர்நாடக முன்னால் முதல்வர் குமாரசாமி மீதான வழக்குகள், சிவசேனை தலைவர் மீதான வழக்கு, ஜார்க்கண்ட் முதல்வர் ஜா.முக்திமோர்ச்சாவின் சிபுசோரன் மீதான கொலை வழக்கு சிறை, பீகார் முதல்சர் லாலு மீதான தீவண ஊழல் வழக்கு மற்றும் சிறை, பஞ்சாப்பின் அகாலிதள முதல்வர் பிரகாஷ் சிங்பாதல் மீதான வழக்குகள், ஒரிசாவின் ஜனதா தள முதல்வர் நவீன்பட்நாயக் மீதான நிலக்கரி ஊழல் வழக்கு, ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன், இதுபோல கலைஞர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் என எண்ணற்ற அடக்குமுறை நடவடிக்கைகளை இந்திய அரசு நடத்தியது. இதில் காங்கிரஸ்-பாஜக என எவ்வித வேறுபாடுமில்லை. ஊழல் செய்தார்களா என்றால், அதே ஊழல் வழக்குகள் ஒன்றிய காங்கிரஸ்-பாஜக முதல்வர்கள் மீது ஏன் பாய்வதில்லை எனும் கேள்விக்கு பதில் என்ன? இந்த வழக்குகள், கைதுகள் என மாநில கட்சிகளின் மீதான டில்லி பாஜக அரசின் அடக்குமுறைக்கு எதிராக மே17 இயக்கம் கடந்த ஆண்டு கண்டன போராட்டங்களை நடத்தியது.

இந்தியாவை ஆளும் ஒன்றிய கட்சிகள் பிற மாநில கட்சிகள் அதன் தலைவர்கள் மீது அமலாக்கதுறை, சிபி.ஐ கொண்டு தொடர்ந்து அடக்குமுறை ஏவுவார்கள். இதுவே இந்திய தேசிய கட்சிகளின் நடவடிக்கை. மிகக்குறிப்பாக, அடக்குமுறைக்குள்ளான இவர்களில் எவரும் உயர்சாதிகளோ, பார்ப்பனர்களோ இல்லை. இதே நிலை நாளை முதல்வர் ஜோசப் விஜய்க்கும் வரும். ஏனெனில் அவரும் பார்ப்பனரல்லாத மாநில கட்சியின் முதல்வர்.

இதே சமயம் பலவேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான காங்கிரஸின் முதல்வர்கள் மத்திய பிரதேசத்தின் கமநாத், அர்ஜூன் சிங், பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமா பாரதி கர்நாடகத்தின் பாஜக முதல்வர் எட்டியூரப்பா, காங்கிரஸ் முதல்வர்கள் சித்தராமய்யா, சிவக்குமார், குஜராத்தில் மோடி , மேற்கு வங்கத்தின் பாஜக முதல்வர் சுவெந்து அதிகாரி, கேரளத்தின் காங்கிரஸ் சதீஸன், மராத்தியத்தின் பாஜக பட்நாவிஸ் , அஸ்ஸாமின் பாஜக முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா மீதான பயங்கரவாத வழக்குகள், தெலுங்கானாவின் ரேவந்த் ரெட்டி ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் மீது எவ்வித கெடுபிடிகளும் நடப்பதில்லை.

இந்தியாவில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரதமர் ராஜீவ்காந்தி. போபர்ஸ் ஊழல் வழக்கில் ஆட்சியை இழந்தார், ஆனால் தண்டிக்கப்படவில்லை. அதன்பின் நரசிம்மராவ். அவரும் தண்டிக்கப்படவில்லை. மிகப்பெரும் ஊழல் செய்த காங்கிரஸ் ஒன்றிய அமைச்சர்கள் தண்டிக்கப்பட்டதில்லை.

இந்த அரசியல் தான் இந்தியாவின் அரசியல் அடிநாதம். ஒன்றிய அரசின் வழக்குகள் பட்டியல் என்பது அடக்குமுறைகளின் அடையாளம். மாநில கட்சிகளின் ஊழல் அரசியலில் கொள்கை அரசியல் பலியாவதற்கு இவை பயன்பட்டுள்ளன.

இதுதவிர மிசா, தடா, பொடா வழக்குகள் ஏவப்பட்டுள்ளன. இவை எவர் மீதும் நாளை ஏவப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதையே மே17 இயக்கம் கடந்த ஆட்சிகளின் காலத்தில் சொல்லி வந்துள்ளது.

ஏனெனில் இதுதான் இந்திய சனநாயகம். இவற்றை குறித்த புரிதலற்ற நிலையில் தவெக அரசின் முதல்வர் விஜய்யின் குற்றச்சாட்டுகள் அமைந்துள்ளன.

இந்தியாவின் முதல் மிகப்பெரும் ஊழலை செய்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் நேரு அமைச்சரவையில் இருந்த பார்ப்பன அமைச்சர். அவரை அம்பலப்படுத்தியவர் நேருவை எதிர்த்து அரசியல் செய்த ராஜீவ்காந்தியின் தந்தை பெரோஸ்காந்தி. பெரும் ஊழலில் திளைக்கும் அம்பானி, டாட்டா, பிர்லாவை வளர்த்துவிட்ட இந்திரா காந்தி அம்மையாரின் சர்க்காரியா கமிசன் என்பது அரசியல் கேலிக்கூத்து.

இவற்றை தமிழ்நாடு கடந்து சென்று வெகுகாலம் ஆகிறது என்பதை தவெக நினைவில் கொள்வது நல்லது. தமிழ்நாட்டிற்கான ஆபத்து டில்லியில் இருந்தே வருகிறது. மாநில கட்சிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது பாஜக-காங்கிரஸ் கட்சிகளின் அரசியல். நாளை இந்த ஆபத்து தவெகவிற்கும் நிச்சயம் வரும். அந்த ஆபத்தை எதிர்கொள்ள அணியமாவதே திராவிட-தமிழ்த்தேசிய அரசியல். இந்த கொள்கை அரசியலை கொண்டவர்களால் மட்டுமே டில்லியின் ஆதிக்கத்தை எதிர்த்து வெல்ல முடிந்திருக்கிறது. அவ்வகையிலேயே மிசாவை வென்றது. தடாவும், பொடாவும், உபாவும் மாநில உரிமை அரசியலை பேசுபவர்களுக்கு எதிராகவே ஏவப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்வீர். கொள்கை அரசியலை மேற்கொள்ளாமல் எந்த வழியில் செல்லப்போகிறது எனும் கேள்வியை சட்டமன்ற செயல்பாடுகள் தவெக நோக்கி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் அரிச்சுவடியை கைக்கொள்ளாத நிலையில் தவெக இருப்பதை இவை வெளிப்படுத்தியுள்ளது.

நாளையே புதிய-சர்க்காரிய கமிசன்கள் போன்றவை முதல்வர் விஜய் மீதும் டில்லியால் ஏவப்படும். இவை ஊழலை ஒழிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல. கட்சியை ஒழிக்கும் நோக்கம் கொண்டவை. திமுக இவற்றைக் கடந்து கரையேறியது. தவெக அந்நிலையை எதிர்கொள்ளும் போது என்ன செய்யும் என சிந்திப்பதும், தயாராவதும் அக்கட்சிக்கு நல்லது. அதைவிடுத்து சகமாநில கட்சிகளை நோக்கி திரும்புவது தனிமைப்படுத்தலுக்கே இட்டுச்செல்லும். இதைத்தான் டில்லி விரும்புகிறது.

தோழர் திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
செப்டம்பர் 08, 2026

https://www.facebook.com/share/p/18GWkjgK89

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »