VBSA திட்டம் – கலை அறிவியல் கல்வியிலும் நுழைவுத் தேர்வைத் திணிக்கும் பாஜக அரசு

மருத்துவக் கல்விக்காக நீட் தேர்வை திணித்து, ஏழை எளிய மாணவர்களின் கனவுகளை சிதைத்த மோடி அரசு, இப்போது கலை மற்றும் அறிவியல்  பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வைக் கொண்டு வரப் பார்க்கிறது. இந்த படிப்புகளுக்கு ‘அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு (CUET)’ கட்டாயம் என்னும் ‘விக்சித் பாரத் கிஷா அதிஷ்தான் (VBSA)’ மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.

இளங்கலை (B.A., B.Sc., B.Com.,  …..), முதுகலை (MA, M.Sc. M.Com.,…) ஆய்வு படிப்புகள் (Phd) ஆகியவற்றைக் கண்காணிக்கும் ‘பல்கலைக்கழக மானியக் குழு (UGC)’, தொழில்நுட்ப படிப்புகளை கண்காணிக்கும் ‘அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE)’, ஆசிரியர் பயிற்சிக்கான படிப்புகளை கண்காணிக்கும் ‘ஆசிரியர் கல்விக் குழு (NCTE)’ மற்றும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவின் தரத்தை கண்காணிக்கும் NAAC, NBA ஆகிய ஐந்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து VBSA -ன் கீழ் கொண்டுவருவதே தற்போதைய திட்டமாகும்.

மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு (B.Com, B.Sc…) தற்போது வரை நுழைவுத் தேர்வு இல்லை. ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு மட்டுமே நுழைவுத் தேர்வான CUET-UG உள்ளது. தொழில்நுட்ப படிப்புகளுக்கு (B.E, B.Tech,..) போன்றவற்றுக்கு ஒன்றிய அரசு JEE நுழைவுத் தேர்வை நடத்துகிறது. மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வை மாநில அரசு நடத்துகிறது.. இனி இவை யாவும் கலைக்கப்பட்டு ஒரே நுழைவுத் தேர்வாக ஒன்றிய அரசு திணிக்கும் CUET-ன் மூலமே நடப்பதற்கே இத்திட்டம்.

இந்த VBSA திட்டத்தினால் இந்திய மாநிலங்களின் ஒட்டு மொத்த கல்வி அதிகாரத்தையும் 13 பேர் கொண்ட ஒரு சிறிய குழு தீர்மானிக்கும். இதில் ஒரு தலைவர் மற்றும் 12 பேர் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள் அத்தனை பேரையும் ஒன்றிய அரசே நியமிக்கும். மாநில அரசுகளுக்கோ, மாநில பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கோ இதில் இடமில்லை.

இதன் கீழ் மூன்று தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். இதுவரை UGC பார்த்துக் கொண்டிருந்த அதிகாரங்கள் அனைத்தும் இக்குழுவிடம் ஒப்படைக்கப்படும். புதிய கல்லூரி துவங்குவதற்கான அனுமதி வழங்க ‘ஒழுங்கு முறைக் குழு’, கல்வித்தரத்தை மதிப்பீடு செய்ய ‘தர மதிப்பீட்டு குழு’, பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் கல்வித்தரத்திற்கான விதிகளை உருவாக்க ‘கல்வித் தர நிர்ணய குழு’ போன்ற மூன்று குழுக்கள் செயல்படும். இதன் ஒவ்வொன்றிலும் 14 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் மாநிலங்களின் பிரதிநிதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் இது நிரந்தரமானதல்ல, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இதில் கிடைக்காது என்று மாநிலங்களும், கல்வியாளர்களும் எச்சரிக்கிறார்கள்.

ஒரு மாநில அரசு, பல்கலைக்கழகம் உருவாக்க VBSA-ன் ‘உயர்கல்வி ஒழுங்குமுறை குழு’விடம் முன் அனுமதி வாங்க வேண்டும். இதுவரை சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி புதிய மாநில பல்கலைக்கழகங்களை தன்னிச்சையாக உருவாக்கலாம். மாநில அரசின் சட்டமன்ற அதிகாரத்தைப் பறித்து, இனி ஒன்றிய அரசிடம் கல்விக்கு கையேந்தும் நிலையைக் கொண்டு வருகிறார்கள்.

மேலும் மாநில பல்கலைக்கழகங்களை தரம், உள்கட்டமைப்பு சரியில்லை என போலியான காரணங்களைக் கூறி அரசியல் உள்நோக்கத்துடன் மூடி விடவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி தருவதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் கிராமப்புற அரசு பல்கலைக்கழகங்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

அரசு பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சி அடையச் செய்யும் அதே வேளையில், பெருநிறுவனம் மற்றும் பன்னாட்டு பல்கலைக்கழகங்கள் VBSA-ன்  ‘ஒழுங்குமுறை ஆணையத்தின்’ மூலம் மிக எளிதாக இங்கு பல்கலைக்கழகம் தொடங்க அனுமதி பெற்றுவிடலாம். இவர்களுக்கு கட்டணம் வசூலிக்க எந்த நிபந்தனையும் இல்லை. இதனால் விருப்பப்படி கல்லூரிக் கட்டணத்தை உயர்த்தி, கொள்ளையடிக்கலாம்.

VBSA-ன் தர மதிப்பீட்டுக் குழு, பல்கலைக்கழகக் கட்டமைப்பு மற்றும் நிதி வலிமையின் அடிப்படையில் தரவரிசை அல்லது தரவரிசை (rank) செய்யும் முறையை நிர்ணயிக்கும். இந்த தரவரிசை வாங்கும் நிறுவனங்களுக்கு முழுமையான கல்விச் சுதந்திரம் உண்டு. அவர்கள் தாங்களாகவே பாடத்திட்டங்களை வகுத்துக் கொள்ளும் உரிமையைப் பெற்று விடலாம். பல கோடிகளை முதலீடு செய்யும் வசதி உள்ள தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தர மதிப்பீட்டை எளிதாக வாங்கிவிட முடியும். அதன் மூலமாக தாங்கள் விரும்பும் பாடத்திட்டங்களை இங்கு திணிக்கும் உரிமையும் பெற்று விடுவார்கள்.

மாநில அரசுப் பல்கலைக்கழகங்கள், நிதி கட்டமைப்பு வலுவான தனியார் பல்கலைக்கழகங்களில் போட்டியிட முடியாது. இந்தப் போட்டியில் குறைவான தரவரிசை மதிப்பெண் பெறும்  பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டு பாடத்திட்டங்கள் அகற்றப்பட்டு, VBSA-ன் தர நிர்ணயக் குழு வழங்கும் தேசிய பாடத்திட்டத்தை பின்பற்றும் நிலை ஏற்படும். நிதி மற்றும் உள்கட்டமைப்புகளில் போதிய வசதியற்ற தமிழ்நாட்டின் கிராமப்புற  பல்கலைக்கழகங்களின் பாடத்திட்ட உரிமை பறிக்கப்படும்.

இதனால் தமிழ்நாட்டின் தனித்துவத்தை பேசும் இலக்கியம், வரலாறு, சமூக நீதி, தொல்லியல், நாட்டுப்புற கலை, அரசியல் வரலாறு போன்ற பாடங்கள் ஓரத்துக்கு தள்ளப்படும். அதற்கு பதிலாக புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் போன்ற மதவாத இந்துத்துவக் கருத்துகள்  பாடத்தில் திணிக்கப்படலாம்.

ஆராய்ச்சி படிப்புகளில் ஆய்வுக்குரிய தலைப்பையும் இக்குழுவே தீர்மானிக்கும் நிலை வரும். தமிழ்நாட்டின் விழுமியங்கள் சார்ந்த எதையும் ஆய்வுப் படிப்பின் தலைப்புகளாக இடம் பெற இயலாது. ஏனென்றால் தமிழரின் பண்பாட்டுத் தொன்மையை கூறும் கீழடி ஆய்வறிக்கையை இன்னும் வெளியிட மறுப்பதே இதற்கு சான்று. “ஒரே கல்வி” என்ற பெயரில் உயர்கல்வி முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பிரச்சார கருவியாக மாற்றிவிடும் ஆபத்தே அதிகம் உள்ளது.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் 65% க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டின் அரசுப் பல்கலைக்கழகங்களில் தான் படிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் சேர்கிறார்கள்.

சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் என 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மாநில அரசால் நடத்தப்படுகின்றன.தன்னாட்சி பெற்ற கல்லூரிகளையும் சேர்த்து, 75% அளவுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன.ஆனால் இனி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் VBSA திட்டத்தின் கீழ் இவை எல்லாம் கொண்டு செல்லப்படும் ஆபத்துள்ளது.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 80-90% மாணவர்கள் மாநிலப் பல்கலைக்கழகங்களில் தான் படிக்கிறார்கள். தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள்’ என கட்டாயமாக்கப்பட்டால், நீட் தேர்வை போல ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். நீட் தேர்வைப் போல இதிலும் ஏழை எளிய மாணவர்கள் எளிதாக அப்புறப்படுத்தப்படுவார்கள். தமிழ்நாட்டின் சமூகநீதியான 69% இடஒதுக்கீடும் மறைமுகமாக சிதைக்கும் வேலையும் நடக்கும்..

ஏற்கெனவே 2018-ம் ஆண்டிலேயே மோடி அரசு பல்கலைக்கழக மானிய குழுவை(UGC) கலைத்துவிட்டு, ஒற்றை கல்வி அமைப்பாக ‘இந்திய உயர்கல்வி ஆணையம் (HECI)’ கொண்டு வருவதற்காக ஒரு வரைவு மசோதாவை தாக்கல் செய்தது. இம்மசோதா UGC-யிடம் இருந்த நிதி உள்ளிட்ட அனைத்து அதிகாரத்தையும் பறித்து, அதை ஒன்றிய அரசிடம் ஒப்படைக்க  பரிந்துரைத்தது. மாநிலங்களின் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் பின் வாங்கியது. இப்போது அதனுடைய மறு வடிவமாக VBSA திட்டத்தைக் கொண்டு வருகிறது. மேலும், திட்டங்களை எல்லாம் இந்தியில் பெயர் மாற்றும் நோக்கத்தின் வரிசையில் ‘விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் (VBSA) என்கிற பெயரும் சேர்ந்திருக்கிறது.

இந்தியா 2050-க்குள் எட்ட வேண்டும் என்கிற 50% உயர்கல்வி இலக்கை, இப்போதே எட்டிவிட்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் தனித்துவமான இந்த கல்வி வளர்ச்சியை சிதைக்கும் பேராயமே VBSA திட்டம்.

 மூன்றாம் வகுப்பிலிருந்தே பிள்ளைகளுக்கு  தேர்வு  என மனச் சோர்வையும், இந்தித் திணிப்பையும் புதிய கல்விக் கொள்கை மூலம் கொண்டு வந்து மாநிலப் பள்ளிக் கூடங்களை கையகப்படுத்தத் துடிக்கும் பாஜக அரசு, இப்போது கல்லூரிகளையும் கைவசம் எடுத்து பாஜக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை மாணவர்களின் மனதில் பதிய வைப்பதை நோக்கத VBSA -வைக் கொண்டு வருகிறது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்ளாததால் நம் வரிப்பணத்தில் நமது அரசுப் பள்ளிகளுக்கு சேர வேண்டிய சுமார் 3000 கோடிக்கும் மேலான கல்வி நிதியை கடந்த ஆட்சியில் தர மறுத்தது மோடி அரசு. இந்நிலையில் நம் கல்லூரிகளின் உரிமையும் அதன் கைவசம் சென்றால் என்னவாகும் என்பதற்கு இதுவே சான்று..

மாநில உரிமையை, ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் VBSA திட்டத்திற்கு எதிராக பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட  எதிர்ப்பு வலுவாக உள்ளது. ஆனால் இதுவரை தமிழ்நாடு அரசிடம் இருந்து எந்த எதிர்ப்பும் எழவில்லை. தமிழ்நாட்டின் கல்வியாளர்களும், கல்வி அமைப்புகளும் மட்டுமே எதிர்த்து குரலெழுப்புகின்றனர். தமிழ்நாடு அரசு நமது மாணவர்களின் நலனையும் மாநில உரிமையும் காப்பாற்ற வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்

மாநிலங்களின் கல்விச் சுதந்திரத்தைப் பறிக்கும் VBSA போன்ற மசோதாக்கள், தமிழ்நாட்டின் 50% உயர்கல்வி சாதனையைத் தக்கவைக்கத் தடையாகவும், எதிர்காலத் தலைமுறையின் உயர்கல்வி வாய்ப்பை அழிப்பதாகவும் அமையும். எனவே, கூட்டாட்சித் தத்துவத்தின்படி கல்வி அதிகாரம் மாநிலங்களிடமே நீடிப்பதே ஒரே வழியாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அதுவே  உகந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »