எத்தனால் பெட்ரோல்: உணவா? எரிபொருளா?

எத்தனால் பெட்ரோல் மக்களின் அனுமதி இல்லாமல் எவ்வாறு அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்க வைத்துள்ளது என்பதை பகுதி 1 கட்டுரையில் கண்டோம்.

இன்று 80% மக்களுக்கு E20 என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், அனைத்து வாகனங்களிலும் அதுவே நிரப்பப்படுகிறது. எத்தனாலின் ஆரம்பக்கட்டம் 2013-2014-இல் தொடங்கியது. அப்போது பெட்ரோலில் எத்தனால் கலப்பின் அளவு வெறும் 1.5% ஆக மட்டுமே இருந்தது. 2022 ஜூன் மாதத்தில் 10% எத்தனால் கலப்பு (E10) வெற்றிகரமாக எட்டப்பட்டது. ஆரம்பத்தில் 20% எத்தனால் கலப்பை (E20) 2030-க்குள் எட்ட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், எத்தனால் உற்பத்தியை வேகப்படுத்தியதன் மூலம் 5 ஆண்டுகள் முன்னதாகவே 2025-2026 ஆம் ஆண்டிலேயே 20% இலக்கை (E20) முழுமையாக அடைந்துள்ளதைக் காணலாம்.

எத்தனால் உற்பத்தி வேகமடைந்ததற்கு முதன்மையான காரணம் மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சோளம் மற்றும் சர்க்கரை ஆகியவை அதற்குப் பயன்படுத்தப்பட்டதுதான். இந்த எத்தனால் தயாரிக்க அரிசி, சோளம் மற்றும் சர்க்கரைக் கொள்முதலில் எவ்வளவு குளறுபடிகள் நடந்துள்ளன என்பதை இங்கு விரிவாகக் காண்போம்.

நடப்பு நிதியாண்டில் (2026-27), ஜூலை 31 வரை எத்தனால் உற்பத்திக்காக இந்திய உணவுக் கழகம் (FCI) 23.42 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை விற்பனை செய்துள்ளது என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா ஆகஸ்ட் 11 அன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.

2026 ஜூலை மாதம் மத்திய பிரதேசத்தில் வெளிவந்த ஊழல், அரசின் கொள்கையின் மிகப்பெரிய ஓட்டையை காட்டியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், எத்தனால் தயாரிப்பிற்காக இந்திய உணவுக் கழகம் (FCI) வழங்கிய அரிசி முறைகேடாகத் தனியார் அரிசி ஆலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 56 அரிசி ஆலைகளும், 22 எத்தனால் ஆலைகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எத்தனால் ஆலைக்குச் செல்ல வேண்டிய அரசு அரிசி ஏற்றிய லாரி, தனியார் அரிசி ஆலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவமே இந்த விசாரணைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

விவசாயிகளின் உழைப்பால் விளைந்த தானியங்களும், மக்களின் வரிப்பணத்தில் கொள்முதல் செய்யப்பட்ட உணவுப் பொருட்களும், அவற்றின் நோக்கத்திற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அரசு திட்டங்களில் வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு மற்றும் பொறுப்புணர்வு இல்லையெனில், பொதுச் சொத்துகள் குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பானது.

இதற்கிடையில், ₹1,160 கோடி மதிப்பிலான அரிசி முறைகேடாக மாற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்று இந்திய உணவுக் கழகம் (FCI) விளக்கம் அளித்துள்ளது. அந்தத் தொகை, எத்தனால் திட்டத்தின் கீழ் சட்டப்படி வழங்கப்பட்ட அரிசியின் மொத்த மதிப்பு மட்டுமே என்றும், தற்போதைய விசாரணை சுமார் 490 அரிசி மூட்டைகள் (242.5 குவிண்டால்) தொடர்பான குற்றச்சாட்டை மையமாகக் கொண்டே நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பெட்ரோலுடன் கலக்க எத்தனால் தயாரிக்க அரசு FCI அரிசியை மானிய விலையான ₹22.50 முதல் ₹23.20/கிலோ வரை எத்தனால் ஆலைகளுக்குக் கொடுக்கிறது. ஆனால் சில ஆலைகள் இந்த அரிசியை எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தவில்லை. எடுத்துக்காட்டாக, சிந்த்வாரா எத்தனால் ஆலைக்குச் செல்ல வேண்டிய 242 குவிண்டால் அரிசி, வரசியோனி தனியார் அரிசி மில்லில் பிடிபட்டது.

விசாரணையில் தெரியவந்தது என்னவென்றால், ஆலை நிர்வாகிகள் மக்களிடம் குவிண்டால் ₹4,000-க்கு வாங்கிய மானிய அரிசியை ₹2,600 முதல் ₹3,000/குவிண்டால் விலைக்கு மில்களுக்கு விற்றுவிட்டனர். அந்த மில்கள் அதை மறுபடி பேக் செய்து “Custom Milled Rice” என்ற பெயரில் அரசு கிடங்கிற்கே திருப்பி கொடுத்துவிட்டன. இதனால் மில்கள் நெல் அரைக்காமலே லாபம் பார்த்தன. அதேநேரம் ஆலைகள் மலிவான உடைந்த அரிசியை வாங்கி எத்தனால் தயாரித்தன. இப்படி அதே அரிசி பலமுறை பல மில்களைக் கடந்து எத்தனால் தயாரிக்கும் ஆலைகளுக்கு வருவதால், அரசு ஒரே அரிசிக்கு 4 முதல் 6 முறை பணம் கொடுக்க வேண்டிய நிலை வருகிறது.

இந்த புகாரை அடுத்து FIR பதிவு செய்யப்பட்டு SIT விசாரணை நடத்தியது. 17 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 56 அரிசி மில்கள் மற்றும் 22 எத்தனால் ஆலைகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டன. இந்த ஊழலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 1.4 லட்சம் குவிண்டால் அரிசி திசைதிருப்பப்பட்டிருக்கலாம் என்று காவலத்துறை மதிப்பிடுகிறது.

அரசு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், விவசாயிகளுக்கு வருமானம் தரவும் உபரி FCI அரிசி இருப்பை எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. ஆனால் கொள்முதல் விலை ₹4,100/குவிண்டால், மானிய விலை ₹2,320/குவிண்டால் என்ற பெரிய வித்தியாசமே இந்தத் திருட்டுக்கு அடிப்படை என்று அரசு கூறுகிறது. எல் நினோ ஆண்டில் வறட்சி வரும் என்று எச்சரிக்கை இருக்கும்போது, ரேஷன் அரிசியைக் குறைத்து அதை எத்தனாலுக்குத் திருப்புவது உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குகிறது.

எத்தனால் தயாரிப்பில் சர்க்கரை ஆலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கரும்பில் இருந்து இரண்டு முக்கிய பொருட்கள் கிடைக்கின்றன:

  1. நாம் தினமும் பயன்படுத்தும் சர்க்கரை.
  2. பெட்ரோலுடன் கலக்கும் எத்தனால்.

2026-இல் E20 இலக்கை அடைய ஒன்றிய அரசு சர்க்கரை ஆலைகளிடம் “அதிக எத்தனால் தயாரியுங்கள்” என்று கேட்கிறது. அதற்காக எத்தனாலுக்கு லிட்டருக்கு ₹65 முதல் ₹70 வரை அதிக விலையும், பல்வேறு மானியங்களும் கொடுக்கப்படுகின்றன.

இதன் விளைவு என்ன? கரும்புச் சாறு அதிகமாக எத்தனாலுக்குத் திருப்பி விடப்படுகிறது. அதனால் சந்தைக்கு வரும் சர்க்கரையின் அளவு குறைகிறது. தேவை அப்படியே இருக்க, விநியோகம் குறையும்போது விலை ஏறுவது இயற்கை. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சில்லறை சர்க்கரை விலை 8% முதல் 12% வரை உயர்ந்துள்ளது.

விவசாயிகளுக்கு வருமானம் என்று சொன்னாலும், சர்க்கரையை எத்தனாலுக்குத் திருப்பிவிட்டதால் ஏறும் சர்க்கரை விலை உயர்வு நேரடியாகப் பொதுமக்களின் தலையில் விழுகிறது. ஏற்றுமதியைத் தடை செய்து, எத்தனால் ஆலைகளுக்கு மட்டும் சலுகை கொடுப்பதன் மூலம் சில ஆலைகள் இரட்டிப்பு லாபம் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

E20 திட்டம் விரிவடைய விரிவடைய, இதன் உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து முழுவதும் சில பெரும் நிறுவனங்களின் கைக்குப் போகிறது. 2019-இல் ஒன்றிய அரசு “உணவு தானியக் கிடங்கு திட்டம்” என்ற பெயரில் PPP (Public Private Partnership) முறையில் பெரிய கிடங்குகளைக் கட்ட அனுமதித்தது. அதன் நோக்கம் FCI அரிசி மற்றும் கோதுமையை நவீன முறையில் சேமிப்பது, வீணாவதைத் தடுப்பது என்பதாகும்.

இந்த டெண்டரில் மிகப்பெரிய அளவில் வென்றது அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ். இன்று பஞ்சாப், ஹரியானா, உ.பி, ம.பி, ராஜஸ்தான் என 19 மாநிலங்களில் 8 மில்லியன் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகளை அதானி குழுமம் நடத்துகிறது. அதுமட்டுமல்லாது துறைமுகங்கள், ரயில்கள், லாரிகள் மூலம் FCI தானியத்தை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்வது மற்றும் ரேஷன் கடைகளுக்குச் செல்லும் அரிசி, கோதுமை எனப் பல இடங்களில் அதானி லாஜிஸ்டிக்ஸ் மூலம்தான் போகிறது. எத்தனால் சந்தையை அதானி முழுமையாகக் கைப்பற்றும் முயற்சி நடப்பதாக விமர்சனம் உள்ளது.

தானியங்களை மூட்டைகளில் இல்லாமல் நேராக சில (சேமிப்புக் கிடங்குகள்)-வில் சேமிப்பதன் மூலம் தானியம் வீணாவது 30% குறையும் என்று அரசு கூறுகிறது. ஆனால் உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு நாட்டின் மிக முக்கியமான விஷயம். அந்த கிடங்கு மற்றும் போக்குவரத்து முழுவதும் ஒரே நிறுவனத்திடம் போனால், நாளை அவர்கள் சொல்வதுதான் கட்டணமாக இருக்கும் என்ற பயம் விவசாயிகள் மற்றும் வல்லுநர்களிடம் உள்ளது. “நாளை FCI கொள்முதலைக் குறைத்து, அதானியிடம் நேரடியாக விற்க சொல்வார்களா?” என்ற அச்சமும் நிலவுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) இல்லாமல் போனால் விவசாயி நடுத்தெருவில் நிற்க வேண்டியிருக்கும். இதை எதிர்த்தே விவசாயிகள் போராட்டமும் நடந்தது.

அதேபோல, பெட்ரோல் சில்லறை விற்பனையில் பெரிய பங்கு வகிக்கும் ரிலையன்ஸ், E20 கட்டாயமான பிறகு அதன் மூலம் நேரடி லாபம் பார்க்கிறது. எரிபொருள் கொள்கை முடிவுகளில் பெரும் நிறுவனங்களின் லாபி வேலை செய்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.

உள்நாட்டு உற்பத்தி போதவில்லை என்றால் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து சோள எத்தனாலை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும். அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எத்தனால் ஏற்றுமதியாளர். டொனால்ட் டிரம்ப் ஆட்சியின் போது விவசாயிகளுக்காக எத்தனால் ஏற்றுமதியைத் தீவிரமாக ஊக்குவித்தார். இந்தியா அமெரிக்காவிடம் இருந்து எத்தனால் வாங்கினால், அது அமெரிக்க விவசாயிகளுக்கும், அங்கு வணிகம் செய்யும் அதானி போன்ற நிறுவனங்களின் US கிளைகளுக்கும் நேரடி லாபம். “இந்திய விவசாயிகளுக்காக” என்று தொடங்கிய திட்டம், இறுதியில் அமெரிக்க சந்தைக்கும், உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கும் பயன்படும் அபாயம் உள்ளது.

எல் நினோ ஆண்டு என்பதால் வறட்சி வரும் என்று வானிலைத்துறை எச்சரிக்கும் நேரத்தில், உணவுப் பொருளான சர்க்கரையை எரிபொருளாக மாற்றுவது எவ்வளவு சரி? அரசு “FCI-யிடம் உபரி இருப்பு உள்ளது” என்று சொன்னாலும், நடைமுறையில் கடைகளில் விலை ஏறிக்கொண்டே போகிறது. ஏற்றுமதிக்குத் தடை விதித்து விலையைக் கட்டுப்படுத்த முயன்றாலும், அடிப்படைப் பிரச்சனையான “உற்பத்திக் குறைவு” தீர்க்கப்படவில்லை.

அரசு தரப்பில் எண்ணெய் இறக்குமதியில் ₹1.5 லட்சம் கோடி மிச்சம், விவசாயி வருமானம், மாசு குறைப்பு என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் நடப்பதோ ரேஷன் அரிசி திருட்டு, சர்க்கரை விலை ஏற்றம் மற்றும் பெருகும் கார்ப்பரேட் ஏகபோகம்.

உணவுக்காக இருக்க வேண்டிய அரிசியும் சர்க்கரையும் எரிபொருளாக மாறும்போது, அதில் நடக்கும் ஒவ்வொரு ரூபாய் ஊழலும் ஒரு ஏழையின் தட்டில் இருந்து எடுக்கப்படும் சோறாகும். உணவுக்காக இருக்க வேண்டிய சர்க்கரை எரிபொருளாக மாறும்போது, அதன் விலை ஏற்றம் ஒரு ஏழையின் தேநீரையும் கசக்கச் செய்கிறது.

அதனால் எந்த வளர்ச்சித் திட்டமாக இருந்தாலும் மக்களின் உணவு மற்றும் உயிர் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே அதைச் செயல்படுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் செய்யப்படும் எந்த வளர்ச்சியும் அர்த்தமற்றது.

இறுதியாக, எத்தனால் கலப்புக் கொள்கை என்பது வெறும் சுற்றுச்சூழல் அல்லது எரிபொருள் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, கூட்டாட்சி தத்துவம் மற்றும் பொருளாதாரச் சமநிலை சார்ந்த ஒரு முக்கிய அரசியல் முடிவாகும்.

அரசு தன் தவறான அணுகுமுறையை மாற்றி, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை உறுதிசெய்ய பின்வரும் அவசர அரசியலமைப்பு மற்றும் கொள்கை மாற்றங்களை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்:

  1. சுதந்திரமான தலைமைத் தணிக்கை (CAG Audit): உணவு தானியங்கள் மற்றும் சர்க்கரையை எத்தனால் தயாரிப்பிற்குத் திருப்பியதில் நடந்துள்ள முறைகேடுகள், விலை ஏற்றங்கள் மற்றும் மானியத் திசைதிருப்பல்கள் குறித்து இந்திய தலைமைத் தணிக்கையாளர் (CAG) மூலம் நாடு தழுவிய வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
  2. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாதுகாத்தல்: எந்தவொரு சூழலிலும் ரேஷன் அரிசி மற்றும் உணவு தானியங்களை எரிபொருள் தயாரிப்பிற்குப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். “மக்களின் பசி தீர்த்த பிறகே இயந்திரங்களின் பசி” என்ற கொள்கை சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.
  3. கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளி: சேமிப்புக் கிடங்குகள் (Silos) மற்றும் விநியோகச் சங்கிலி ஒரே ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் கையில் குவிவதைத் தடுக்க, பரவலான பொதுத்துறை மற்றும் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
  4. மாற்று வழிமுறைகளில் கவனம் (Second-Generation Ethanol): உணவுப் பொருட்களான அரிசி, சோளம், சர்க்கரைக்கு பதிலாக, விவசாயக் கழிவுகள் (Dry Biomass, Crop Residues) மூலமாக மட்டுமே எத்தனால் தயாரிக்கும் தொழில்நுட்பத்திற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

“ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் தட்டில் இருக்கும் சோற்றையும், அவர்களின் வாகனங்களின் இன்ஜினையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதில் இல்லை. மக்களின் பசியையும், வாழ்வாதாரத்தையும் அடகு வைத்து உருவாக்கப்படும் எந்தவொரு ‘பச்சை ஆற்றல்’ (Green Energy) புரட்சியும் உண்மையான வளர்ச்சி ஆகாது. அரசு உடனடியாக மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, E20 கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்!”

பகுதி 1-க்கான இணைப்பை கீழே பார்க்கவும்

E20 பெட்ரோல்: கேள்விக்குறியாகும் வாகனங்களின் ஆயுள் மற்றும் மக்களின் பாதுகாப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »