“டோரதி” – தமிழ் சமூகம் கடக்க வேண்டிய நெடும் பயணம்!

இந்திய நிலப்பரப்பு முழுவதும் புராதனச் சிந்தனை மரபுகள் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மட்டும் தனது முற்போக்குச் சிந்தனை மரபை வரலாறு நெடுகிலும் போராடிப் பாதுகாத்து வருகிறது. அப்படிப்பட்ட தமிழ்ச் சமூகத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘டோரதி’ திரைப்படத்தின் மூலம் ஒரு தேர்வை வைத்திருக்கிறார். இந்தத் தேர்வில், தங்களை முற்போக்காளர்கள் என்று கருதிக்கொள்பவர்களே ‘ஜஸ்ட் பாஸ்’ தான் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி!

நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழ்ச் சமூகத்தில் ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது ‘டோரதி’. ஒருபுறம் சாதியவாதிகளும் மதவாதிகளும் படத்தை விமர்சிக்கிறார்கள். மறுபுறம், “திருநங்கைகள் சமூகத்தில் இருக்கிறார்கள்… இருக்கட்டும். ஆனால், அந்தக் கடைசி முத்தக் காட்சியை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்று சாமானியத் தமிழ் சிவில் சமூகம் திணறுகிறது.

திருநங்கைகள் நம்முடன் இருப்பதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் சமூகம், அவர்கள் காதலிப்பதையும், அவர்களுக்கான உறவுகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறதா? இந்தக் கேள்விதான் ‘டோரதி’ நம்முன் வைக்கும் மிக முக்கியமான கேள்வி.

‘டோரதி’ படத்தின் கதை 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் நடக்கிறது. அதில் வரும் திருநங்கை ஒருவர், “இன்னும் 10 ஆண்டுகளில் நீங்கள் எங்களை ஏற்றுக்கொள்வீர்கள்” என்று கூறுகிறார். அந்த வசனம் சாதாரணமானதாகக் கடந்து போகக்கூடியதல்ல. 1995-ல் இருந்து இன்றுவரை நம்முடைய சமூகத்தில் உண்மையில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது?

திருநங்கைகளைப் பற்றி பேசுவதற்கு நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்காக அரசுத் திட்டங்கள் இருக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகள் இருக்கின்றன. சட்டங்களும் இருக்கின்றன. ஆனால், அவர்களை முழுமையான மனிதர்களாக ஏற்றுக்கொள்வதில் நம்முடைய சமூகம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது? இதுதான் ‘டோரதி’ நமக்கு வைத்திருக்கும் தேர்வு.

முற்போக்குச் சிந்தனையில் மொழிக்கு எப்போதும் முக்கியமான இடம் உண்டு. ஒரு சமூகத்தை நாம் எந்தப் பெயரில் அழைக்கிறோம் என்பது வெறும் மொழிப் பிரச்னை அல்ல. அது அந்தச் சமூகத்தைப் பற்றிய நமது அரசியல் பார்வையையும் வெளிப்படுத்துகிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அடையாளச் சொல், அவர்களுடைய சுயமரியாதையைப் பாதுகாக்க வேண்டும். அவர்களுடைய வாழ்வை உயர்த்த வேண்டும். அவர்கள் மீது திணிக்கப்படாமல், அவர்களுடைய குரலில் இருந்து உருவாக வேண்டும்.

தமிழ்நாடு இந்த விடயத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தை முன்னெடுத்த மாநிலம். 2008-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரவாணிகள் நல வாரியத்தை உருவாக்கியது. பின்னர் ‘அரவாணிகள்’ என்ற சொல்லுக்குப் பதிலாக ‘திருநங்கைகள்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இது வெறும் பெயர் மாற்றம் அல்ல. திருநங்கைகள் என்ற சொல் அந்த சமூக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. “அரவாணிகள்” என்ற இந்துத்துவ புராதன சிந்தனை சொல்லுக்கு மாற்று, தமிழ் முற்போக்கு சிந்தனை சொல்லான “திருநங்கைகள்” தான். 

ஒரு சமூகத்தை பழமையான புராதன அடையாளத்துக்குள் மட்டும் அடைத்துவைப்பதற்குப் பதிலாக, அவர்களின் சுயமரியாதையையும் சமகால அடையாளத்தையும் முன்னிறுத்தும் மாற்றமாக அது அமைந்தது. ‘திருநங்கைகள்’ என்ற சொல்லை அந்தச் சமூகத்தின் பெரும்பகுதியினர் வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக “திருநர்”(Trans gender), “திருநம்பி”(Trans men) போன்ற தங்களுக்கான சொற்களை உருவாக்கம் செய்துள்ளார்கள். தமிழின் சொல்வளம் இதற்கும் ஒரு கருவியாக அமைந்தது. இந்திய மொழிகளில் பலவற்றில் இல்லாத வகையில், மொழியே ஒரு சமூகநீதிக் கருவியாக மாறுகிறது.

திருநங்கைகள் உரிமைகள் தொடர்பான முக்கியமான வழக்குகளில் ஒன்று NALSA எதிர் இந்திய ஒன்றியம் வழக்கு. 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, திருநர் சமூகத்தின் உரிமைகள் தொடர்பாக மிக முக்கியமான சட்ட முன்னுதாரணமாக அமைந்தது. ஒருவர் தன்னுடைய பாலின அடையாளத்தைத் தானே தீர்மானிக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அதே தீர்ப்பில் போகிற போக்கில் அவர்களை இனி மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அழைக்க வேண்டும் என்று உத்தரவிடபட்டுள்ளது. ஒருவரை ‘மூன்றாம்’ என்று அழைக்கும்போதே, அவரை ஏற்கெனவே உருவாக்கப்பட்ட ஒரு வரிசையின் மூன்றாவது இடத்தில் நிறுத்திவிடுகிறோம். வரலாறு முழுவதும் சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டவர்களை மீண்டும் ஒரு ‘மூன்றாம்’ இடத்தில் நிறுத்துவது, எந்த வகையில் நியாயம்?

இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் இந்த தீர்ப்பின் படி தமிழ்நாடு அரசு ’திருநங்கைகள்’ என்ற சொல் ஆணாக பிறந்து இருந்து பெண்ணாக மாறியவர்களை மட்டுமே குறிக்கிறது. மேலும் அவர்களில் வேறு சில பாலுணர்வு கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பதால் அரவாணிகள் என்பதை மாற்றி ‘மூன்றாம் பாலினத்தவர்கள் வாரியம்’ என பெயர் மாற்றம் செய்து 2017ல் அரசானை வெளியிட்டது.

ஒன்றிய பாஜக அரசோ, தான் கொண்டு வந்த திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் – 2019ல் அவர்களை  ‘அரவாணிகள்’ என்று இந்துமத புராதன சிந்தனையோடே குறிப்பிட்டது. தற்போது அதைவிட அநீதியாக திருநங்கையர் (உரிமைகள் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2026 அவர்கள் இனி அரசின் திட்டங்களை அனுபவிக்க தாங்கள் எந்த பாலினத்தவர் என்கிற பாலின அடையாள பரிசோதனை மருத்துவச் சான்றினை காட்ட வேண்டும் என்ற சரத்தும் சேர்க்கப்பட்டு உள்ளது. இது “தான் ஒரு ஆண், பெண் அல்லது திருநர் (Transgender) என்று சுயமாக தீர்மாணிக்கும் உரிமை (Self-determination Right) அனைவருக்கும் உண்டு” என  உச்சநீதிமன்றம் அளித்த NALSA (2014) தீர்ப்பிற்கு எதிராக உள்ளது என்று திருநங்கைகளும் (மாற்று பாலினத்தவர்களும்) அரசியல் செயல்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது தான் இந்தியாவில் திருநர் சமூகத்தினரின் எண்ணிக்கையைத் தனியாகப் பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பின்படி, இந்தியா முழுவதும் சுமார் 4.88 லட்சம் பேர் திருநர் பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தமிழ்நாட்டில் 22,364 பேர் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த எண்ணிக்கைகள் அந்தச் சமூகத்தின் உண்மையான எண்ணிக்கையை முழுமையாகப் பிரதிபலிக்கின்றனவா? என்பது தனி கேள்வி.

சமூகப் புறக்கணிப்பு, குடும்ப நிராகரிப்பு, கல்வியிலிருந்து விலகுதல், வேலைவாய்ப்பு மறுப்பு எனப் பல காரணங்களால் பலர் தங்களுடைய அடையாளத்தைப் பதிவு செய்யாமல் இருக்கக்கூடும். 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தமிழ்நாட்டில் சுமார் 7,563 திருநர் சமூகத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

2026-ம் ஆண்டு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு முன்பு 9,464 பேர் திருநர் அடையாளத்தில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அந்த எண்ணிக்கை 7,617 ஆகக் குறைந்ததாகக் தேர்தல் ஆணையத் தகவல் கூறுகிறது.

அரசின் கணக்கில்கூட முழுமையாகத் தெரியாத ஒரு சமூகத்துக்கு எப்படி முழுமையான சமூகநீதியை வழங்கப் போகிறோம்? திருநர் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் புறக்கணிக்கப்படுகிறார்கள். NALSA வழக்கில், அவர்கள் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டு, அவர்களுக்குத் தேவையான இடஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதன் அடிப்படையில் சமூக நீதி பற்றி துளியும் புரிதல் இல்லாத பாஜக அரசு மாற்று பாலினத்தவர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (OBC) சேர்ப்பதற்கான அபத்தமான முயற்சிகளை செய்து வருகிறது.

ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல தமிழ் நாடு அரசு கடந்த அ.தி.மு.க ஆட்சியில் திருநங்கைகளை வன்னியர்களுக்கான 10 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள 22 பிரிவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

பொதுவாக இந்தியாவில் இடஒதுக்கீடு சாதி அடிப்படையிலான சமூக ஒடுக்குமுறையை கவனத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. ஆனால், திருநர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை சாதியோடு மட்டும் தொடர்புடையதல்ல. அவர்கள் தங்களுடைய பாலின அடையாளத்தின் காரணமாகவும் ஒடுக்கப்படுகிறார்கள். பல நேரங்களில், அவர்கள் பிறந்த சாதியைச் சேர்ந்த சமூகத்தினரால்கூட புறக்கணிக்கப்படுகிறார்கள். எனவே, சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்குள் மட்டும் அவர்களின் பிரச்னையை அடக்கிவிட முடியாது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் திருநர் சமூகத்தினருக்குத் தனித்துவமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது குறித்து தமிழ்நாடு அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.

ஒரு திருநர் சமூகத்தைப் பற்றிய பார்வையை மாற்றுவதற்கு அரசு சட்டங்களையும் திட்டங்களையும் உருவாக்குவது மட்டும் போதாது. அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையே மாற்ற வேண்டும்.

பொது சமூகம் மரியாதையோடு உச்சரித்து வருகிற “திருநங்கை” என்ற சொல்லையும், அவர்கள் தங்களை அழைக்க கோரும் “திருநர்”, “திருநம்பி” என்ற சுயமரியாதை மிக்க சொற்களையும் சட்டப்பூர்வமாக்குவது. ‘திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் நல வாரியம்’ அல்லது ‘திருநர்கள் நல வாரியம்’ போன்ற பெயர்களில், அந்தச் சமூகத்தினருடன் கலந்தாலோசித்து வாரியத்தின் பெயரை மாற்றலாம். கல்வி நிறுவனங்களிலும் அரசு வேலைவாய்ப்புகளிலும் திருநர் சமூகத்தினருக்கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் திருநர் சமூகத்தினருக்கான பிரத்யேக நிதி மற்றும் நல உதவி மையங்களை உருவாக்கலாம். அந்த மையங்களில் கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கே வேலைவாய்ப்பும் வழங்கலாம். நகரங்களின் மையப் பகுதிகளில் பாதுகாப்பான தொகுப்பு வீடுகளை உருவாக்கி, திருநர் சமூகத்தினருக்கு வழங்க வேண்டும்.

இப்படி, வீடு, கல்வி, வேலை, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் உறுதி செய்யப்பட்டால்தான் உண்மையான மாற்றம் ஏற்படும்.

‘டோரதி’ ஒரு திரைப்படம் மட்டுமல்ல. அது நம்முடைய முற்போக்குச் சிந்தனையைச் சோதிக்கும் ஒரு கண்ணாடி. “திருநங்கைகள் இருக்கிறார்கள்; அவர்களை மதிக்கிறோம்” என்று சொல்வது எளிது. ஆனால், அவர்கள் காதலிப்பதை ஏற்றுக்கொள்வோமா? அவர்களுடைய உறவுகளை ஏற்றுக்கொள்வோமா? அவர்கள் தங்களுக்கான அடையாளத்தைத் தாங்களே தீர்மானிப்பதை ஏற்றுக்கொள்வோமா? அவர்கள் பயன்படுத்த விரும்பும் சொற்களை நாமும் பயன்படுத்துவோமா? அவர்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சம வாய்ப்பை வழங்குவோமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் நம்முடைய முற்போக்குத்தனம் இருக்கிறது.

தமிழ்நாடு தனது சமூகநீதிப் பாரம்பரியத்தைப் பற்றி பெருமை பேசுகிறது. ஆனால், ஒரு சமூகத்தைப் பற்றி பேசுவது வேறு; அந்தச் சமூகத்துடன் சமமாக வாழ்வது வேறு. ‘டோரதி’ அந்த இடைவெளியை நமக்குக் காட்டுகிறது.

முற்போக்கைப் பேசும் தமிழ்ச் சமூகமே…. நீ இன்னும் கடக்க வேண்டிய கடும் நெடும் பயணம் இருக்கிறது என்பதை போட்டு உடைத்ருக்கிறாள் டோரதி.

அந்தப் பயணம் சட்டத்தில் மட்டும் கடப்பது அல்ல. மொழியில் மாற்றம், சிந்தனையில் மாற்றம், குடும்பத்தில் மாற்றம், சமூக உறவுகளில் மாற்றம், அரசின் கொள்கைகளிலும் மாற்றம் என்று கடக்க வேண்டிய பயணம்.‘டோரதி’ நமக்கு வைத்திருப்பது நம்முடைய முற்போக்குச் சிந்தனைக்கான தேர்வு! இதை உள்வாங்கி கொண்டு அசைபோட்டு மாற்றத்திற்கு தயார்படுத்திக்கொள்வது தமிழ் சிவில் சமூகத்தின் பொறுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »