ஆனந்தபுரச் சமர்’ – ITJP வெளியிட்ட இனப்படுகொலையின் புதிய சாட்சியங்கள்

இலங்கை அரசு செப்டம்பர் 2008-ல் சர்வதேச உதவி பணியாளர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டதிலிருந்து, 2009 ல் சாட்சிகளற்றப் போராக நடத்தி தமிழர்களை இனப்படுகொலை செய்தது வரை உள்ள நிகழ்வுகளை, ஆனந்தபுரம் போரில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் சாட்சியங்களை அறிக்கையாக ITJP வெளியிட்டுள்ளது. 

வரலாற்றில் மிக மோசமான மனிதப் பேரவலமாக நடந்திருக்கிறது ஆனந்தபுரச் சமர். இந்த இறுதிப் போரில் எத்தனை ஆயிரம் பேர் உயிரிழந்தார்கள் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. அங்கு நடந்த கொடூரங்களுக்கு இதுவரை யாரும் விசாரணைக்குட்படவும் இல்லை, தண்டிக்கப்படவுமில்லை.

இந்த அறிக்கை, அந்த போரில் இருந்து உயிர் தப்பியவர்களின் நேரடி சாட்சியங்கள் மற்றும் அங்கு நடந்த சர்வதேச மனித உரிமை மீறல்கள் குறித்த சட்ட ரீதியான ஆய்வு என இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. பல ஆண்டு கால விசாரணைக்குப் பின், மௌனம் கலைத்து வெளிவரும் உண்மைகளின் தொகுப்பே இந்த அறிக்கை.

ஆனந்தபுரம் சமர் என்பது முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில், இலங்கை இனவெறி இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மிக உக்கிரமான இறுதிப் போராகும். ஆனந்தபுரத்தை ஒரு ‘பாதுகாப்புப் பெட்டி’யாக மாற்றுவதற்காக புலிகள் அனைத்துப் பாதுகாப்பு அரண்களையும் அமைத்திருந்தனர். ஆனால், சிங்களப் படையின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் அந்த எல்லைகள் நாளுக்கு நாள் சுருங்கத் தொடங்கின.

அந்தக் களத்தில் நின்று போராடி, மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் சொல்லும் அந்த நாளின் உண்மைக் கதைகள் தான் இவை.

சாட்சி 1 -இவர் புலிகளின் ஆயுத இருப்பை நிர்வகித்தவர். 2009, ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகு, புலிகளின் முக்கிய ஆயுதக் கிடங்காக விசுவமடு இருந்தது. அது சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து புலிகள் பின்வாங்கும் போது, ஆட்டிலறி போன்ற கனரக ஆயுதங்களைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 30 பக்கங்களாக இருந்த அவர்களது ஆயுத இருப்புகள் 5 பக்கங்களாகக் குறைந்தன. புலிகள் இப்போரில் பின்னோக்கி நகர்ந்ததற்கு அங்கு மக்கள் அதிகமாக இருப்பதும் ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார்.

சாட்சி 2 – இவர் விசுவமடுவின் பாதுகாப்பாளராகப் பணியாற்றியவர். சிங்கள இராணுவத்தின் பலத்த எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி 1000 பேரை இழந்ததையும், இறந்த சடலங்களை நாய்கள் தின்பதைப் பார்த்து கலக்கத்துடன் கடந்ததாகவும் அவர் பதிவு செய்கிறார். புலிகள் தங்களது இராணுவ மைய நடவடிக்கைக்கு ஆனந்தபுரத்தைத் தேர்வு செய்து அங்கு நகர்வதே பிரபாகரன் அவர்களின் கட்டளையாக இருந்திருக்கிறது. அங்கிருந்த மக்கள் அரசின் பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்பட்ட பகுதிக்குச் செல்ல, இதர பிரதேசங்களை நிர்வகிக்க ஆனந்தபுரம் பகுதி மையமாகி இருக்கிறது.

ஆயுத பலமும் ஆட்பலமும் இல்லாத சமச்சீரற்ற சண்டையாக ஆனந்தபுரம் சமர் தொடர்ந்திருக்கிறது. இஸ்ரேல் தயாரிப்பு கிபிர் விமானங்கள், இலங்கை விமானப்படை சண்டை விமானங்கள் மற்றும் ஆளில்லாத வேவு விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன், ஒவ்வொரு நாளும் கொத்துக் குண்டுகள் மற்றும் வெள்ளைப் பாஸ்பரஸ் உட்பட ஏராளமான குண்டுகள் ஆனந்தபுரம் பகுதி மீது வீசப்பட்டதை அவர் கூறுகிறார்.

சாட்சி 3 -இவர் ஆனந்தபுரப் பகுதியின் தெற்கே உள்ள கேப்பாபுலவு பிரதேசத்தின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர். இவர்கள் குழு மூன்றாகத் தனித்துப் போரிட்டும் மிகப்பெரிய எதிர் தாக்குதலை மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு தாக்குதலில் தொடையில் ஏற்பட்ட குண்டடியால் அவர் அப்புறப்படுத்தப்படுகிறார்.

சாட்சி 4 -நிலக்கண்ணி வெடிகளில் காயம்பட்ட போராளிகளை மருத்துவ நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி இவருடையது. ஆனால், தேவையான உணவுப் பொருட்கள் இல்லாமல், உயிரச்சத்தையும் கடந்து உணவு தேடி போர் வலயத்திற்குள் வந்தவர்கள் காயம்பட நேர்ந்தாலும், அவர்களையும் மருத்துவசாலைகளுக்கு அழைத்துச் சென்றது இவரின் குழு.

சாட்சி 5 -புதுக்குடியிருப்பு பகுதியில் இவருடைய வேலை, காயம்பட்ட போராளிகளைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்வது தான். புலிகள் அங்கு பூமிக்கு அடியில் கொள்கலன்களை வைத்து தற்காலிக மருத்துவமனை போல அமைத்திருந்தார்கள். அதில்தான் காயம்பட்டவர்களை வைத்திருந்தார்கள். அங்கிருந்து அருகில் உள்ள பாதுகாப்பான பகுதிக்கு எடுத்துச் செல்வது இவர் பணி.

இவர், தான் பார்த்த காயங்களில் மூன்றில் ஒரு பங்கு வெள்ளை பாஸ்பரஸ் குண்டால் ஏற்பட்ட காயங்கள் போல இருந்ததாக சொல்கிறார். அந்த காயம்பட்டவர்களுக்கு உடம்பெல்லாம் கடுமையாக எரிவதையும், தோல் எல்லாம் கறுப்பாக மாறிவிட்டதையும் பதிவு செய்கிறார்.  தசையே அழுகிய இறைச்சி போல ஆகிவிட்டதாக அவர் விவரிக்கிறார்..

மார்ச் இறுதிப் பகுதியில் குண்டு சிதறலால் அவரும் தாக்கப்பட்டுள்ளார். ஆரம்பப் பாடசாலை தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கே 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததைப் பற்றி விளக்குகிறார். உயிர் பிழைத்துக் கொண்டாலும், மயக்க மருந்துகள் மட்டும் அன்றி போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் அவரைச் சுற்றியிருந்த பலரும் தேவையில்லாமல் இறந்ததை தன்னால் பார்க்க மட்டுமே முடிந்தது எனக் குறிப்பிடுகிறார்.

மக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதே எறிகணைகளை ஏவிய சிங்களப் படைகளால் பெருமளவிலான மருத்துவமனைகள் கைவிடப்பட்டன.

சாட்சி 6: இவர் நீதி நிர்வாகத்தை கவனித்து வந்தவர். தனது மனைவியின் பிரசவத்திற்கு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது அது சிங்களப் படையின் தாக்குதலால் சேதமடைந்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். அங்கு அனுமதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான மருந்துகள் தட்டுப்பாடு ஆன போது விடுதலைப் புலிகள் போராளிகளுக்கு உரிய  தங்கள் மருந்துகளையும் கொடுத்ததாகக் குறிப்பிடுகிறார் மேலும் சீருடை அணிந்த, ஆயுதம் தரித்த எந்த விடுதலைப் புலிகளும் மக்களுக்கான மருத்துவமனைக்குள் எக்காரணத்தினாலும் நுழைந்ததில்லை எனவும் பதிவு செய்கிறார்.

இதையே புதுமாத்தளன் பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரியும் குறிப்பிடுகிறார். இவர் 15, பிப்ரவரி 2009-ல் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில் இருந்த 2 இலட்சம் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க சிங்கள அரசின் அனுமதியுடன் முன்வந்தவர். ஆனால் காயமடைந்தவர்களுக்கு தேவையான நீர், உணவு, சுகாதார வசதிகள் அடிப்படையான மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான மயக்க மருந்துகள் என எதுவும் இல்லை என கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சருக்கு எழுதியிருக்கிறார். ஆனால் போர் வளையத்தில் இருப்பவர்கள் எதுவும் பெற்றுக் கொள்ள தகுதியற்றவர்கள் என்று அனைத்தையும் சுகாதார அமைச்சர் மறுத்த நிலையில், விடுதலைப் புலிகளே காயம்பட்ட தங்களின் போராளிகளுக்கென இருந்த மருத்துவப் பொருட்களை மக்களுக்காக தந்ததாகவும், போராளிகளுக்கான மருத்துவர்கள் பொதுமக்கள் மருத்துவர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டதையும் அந்த மருத்துவர் விவரிக்கிறார்.

ஆனந்தபுரம் போரின் இறுதி கட்டப் போரை விளக்கும் பகுதியில் பிரபாகரன் அவர்கள் உயிருடன் வெளியேற்றப்பட்டார் என்ற செய்தியும் உள்ளது.

மார்ச் 26, 2009-ல் உயர் மட்ட போராளிகளின் நிபந்தனையால் சிறப்புப் பயிற்சி பெற்ற போராளிகள் அவரை ரகசியமாக வெளியேற்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் உயர்மட்ட தளபதிகளும், போர் அனுபவம் பெற்ற போராளிகள் பலரும் அங்கேயே இருந்துள்ளனர். மூத்த தளபதி பானு, கேணல் தீபன், தளபதிகள் கேணல் கீர்த்தி, கடாபி, மணிவண்ணன், விதுசா, துர்கா ஆகியோரும் அங்கிருந்தவர்களில் அடங்குவர்.

சாட்சி 7: இவர் ஒரு மருத்துவப் பணியாளர். ஆனந்தபுரத்திற்கு அனுப்பப்பட்ட 8 பேர்களில் அவரும் ஒருவர். எறிகணை, கொத்துக் குண்டுகளை சிங்களப் படைகள் மழை போல பொழிந்ததைப் பதிவு செய்கிறார். அவர் சிகிச்சை அளித்தவர்கள் உடலில் பாஸ்பரஸ் அல்லாத வேறு தெரிய வராத குண்டுகள் மூலமாக வழமைக்கு மாறான பாதிப்புகள் இருந்ததை குறிப்பிடுகிறார். ஒரு வகையான குண்டு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, அந்த பிரதேசத்தையே கருப்பாக மாற்றி இருக்கிறது. பலரின் பார்வை மங்கலாகி மயங்கி விழுந்துள்ளனர். தொலைவில் இருந்து பார்த்த அவருக்கும் அந்த தாக்கம் இருந்ததாக கூறுகிறார். வித்தியாசமாக புகைகளை வெளியிட்ட எறிகணை வித்தியாசமான எரிகாயங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கிறார்.

சாட்சி 6-ம், சாட்சி 5ம்  இதையே பதிவு செய்கிறார்கள். தோலில் பலூன் போல வீங்கி கொப்பளம் ஏற்படுத்தும் குண்டுகள் வீசப்பட்டதாகவும், 50 மீட்டர் சுற்றளவு உள்ள ஆக்சிஜன் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து விடும் குண்டுகளால் பல போராளிகள் காயங்கள் எதுவும் இல்லாமல் உயிரிழந்ததாகவும் சாட்சி 6 குறிப்பிடுகிறார்.

ஆனந்தபுரம் சமர் 30, மார்ச் ஆரம்பித்து 2009 ஏப்ரல் முதல் வாரம் வரை நடந்தது. ஆனந்தபுரத்தில் 800 போராளிகள் சிங்கள ராணுவத்தால் சிறு பெட்டிக்குள் சுற்றி வளைக்கப்பட்டனர். சிங்களப் படை இப்பகுதியில் மட்டும் சுமார் 30000 எறிகணைகளை வீசியது. மார்ச் 30 – ஏப்ரல் 2க்குள் துர்க்கா, விதுஷா, தீபன், பானு, கடாபி போன்ற தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் 3 இரவு ஆயுதம், மருந்து இல்லாமல் 350 பேர் சிக்கினர். காயம்பட்ட நிலையில் தப்பிச் சென்ற 150 பேரில் சாட்சிகளும் இருந்தனர். மீதி 300-650 காயம்பட்ட, நடக்க முடியாத போராளிகளை மருத்துவர் சத்தியாவிடம் விட்டுவிட்டு வந்தனர். ஆனால் ராணுவம் ஏப்ரல் 5-7ல் 625 உடல்கள் மீட்கப்பட்டதாக சொன்னது. மருத்துவரும் காணாமலாக்கப்பட்டார். தப்பியவர்கள், விட்டு வந்தவர் ஒருவரும் திரும்பவில்லை என்பதால், ராணுவம் உள்ளே நுழைந்து காயம்பட்டவர்களை படுகொலை செய்ததாக ITJP குற்றம் சாட்டுகிறது. இங்கு போராளிகள் தங்களது 90% ஆயுதத்தையும், முக்கிய தளபதிகளையும் இழந்தது தான் போரின் மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது.

காயத்துடன் தப்பிய சாட்சி 1, ‘நாங்கள் வெளியேறிய போது காயமடைந்தவர்கள் உயிருடன் இருந்தார்கள். அவர்களிடம் துப்பாக்கி கிலோ வெடி மருந்துகளோ, சைனைட் குப்பிகளோ இல்லை’ என்று கூறியுள்ளார். சாட்சி 4, ‘அத்தனை பேரையும் அவர்கள் கொன்று விடுவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை’ என்று ITJP யிடம்  பதிவு செய்துள்ளனர். கணினி மையம் இருந்த கட்டடத்திற்குள் விட்டு வந்த காயம்பட்ட போராளிகளை மொத்தமாக சிங்களப் படை கண்மூடித்தனமான தாக்குதலால் கொன்றிருக்கிறது என்பதே இந்த சாட்சிகளின் மூலம் தெரிய வருகிறது.

ஆனந்தபுரம் தோல்விக்கு சிங்களப் படைகளின் தாக்குதல் 6 வாரம் தொடர்ந்தது. ராணுவம், பாதுகாப்பு வளையம், மருத்துவமனைகள் மீது சரமாரியாக  குண்டுகளைப் பொழிந்தது. அந்தப் பகுதியை விட்டு வெளியேற முடியாமல் பட்டினியால் வாடிக்கிடந்த மக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்திக் கொன்றது. பொதுமக்களுடன் கலந்த போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். சித்திரவதை, பாலியல் வன்முறை செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் வழக்கு இல்லாமல் பல வருடம் சிறையில் வைக்கப்பட்டனர். இப்படி எந்தவித சாட்சிகளும் அற்ற போராக அன்று நடத்தப்பட்ட ஆனந்தபுரம் சமர், இன்று ஏழு சாட்சிகள் மூலமாக, ITJP வெளிக் கொண்டு வந்திருக்கிறது.

இந்த அறிக்கையின் இரண்டாம் பகுதி சட்ட விதிமுறைகளைப் பற்றிப் பேசுகிறது. அதில், சட்டத்திற்கு புறம்பான கண்மூடித்தனமான போர் முறை, தடை செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்துதல், போரில் ஈடுபடாத அப்பாவி மக்கள், மருத்துவர்கள் மருத்துவமனை, பள்ளிக்கூடம் போன்ற பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீதான தாக்குதல், மருந்து, உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை மறுத்தல் மற்றும் காயமடைந்தவர்களை மற்றும் ‘போரில் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளவர்களைப்’ படுகொலை செய்தல் போன்றவற்றை நடத்திய இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்துகின்றது.

இந்த குற்றச்சாட்டுகள் ஐ.நா-வின் விதிப்படி போர்க்குற்றம், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகும். சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கடுமையான மீறல்கள் நடந்திருக்கலாம் என்பதை நம்பும் படியான இராணுவ அறிக்கைகள், ஐ.நா ஆவணங்கள், மற்ற தகவல்கள் இருப்பதாக ITJP சுட்டிக் காட்டுகிறது.

ITJP-ன் இந்த அறிக்கை ‘ஆனந்தபுரச் சமர்’ இதுவரை சொல்லப்படாத உண்மைகளை சுமந்து நிற்கின்றது. எழுவரது சாட்சியங்கள், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்ட விதத்தையும், பாதுகாக்கப்பட வேண்டிய உயிர்கள் குறிவைக்கப்பட்டதையும், சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட கொடுமையையும் ஆணித்தரமாகப் பதிவு செய்கின்றன.

சிங்கள இனவெறிப் படை தமிழர்கள் மீது நிகழ்த்திய இனப்படுகொலைப் போரின் பல சாட்சியங்களை அம்பலப்படுத்திய ITJP-ன் மற்றுமொரு சாட்சியமாக ‘ஆனந்தபுரச் சமர்’  அறிக்கை வெளிவந்திருக்கிறது. இனப்படுகொலை நீதிக்காகக் காத்திருக்கும் தமிழீழ இனத்திற்கு மேலும் ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடியது இந்த அறிக்கை.

In April 2009, Ananthapuram became the site of the last major battle between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan military. This map from ITJP’s latest report reconstructs the battlefield, the Sri Lankan military’s advance, and the escape routes taken by survivors.— ITJP (@itjpsl) November 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »